maxim karki 400சுமார் 70 பக்கங்கள் கொண்ட இந்த நீண்ட கட்டுரை மாக்சிம் கார்க்கியால் 1909 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இக்கட்டுரையில் கார்க்கி சில அடிப்படையான விஷயங்கள் பற்றிப் பேசுகிறார். கார்க்கி முன்வைக்கும் இக்கருத்துக்கள் இன்றைய பின் நவீனத்துவச் சிந்தனையாளர்களுக்கு பிடிக் காமல் இருக்கலாம். இவை மொத்தத்தில் சர்வாதி காரம் என்று அவர்கள் கூறலாம். ஆனால் மொத்தம் என்பது பல தனியன்களின் கூட்டுப் படைப்பு என்பதை நாம் மறந்துவிடல் ஆகாது. கார்க்கி பேசுவது கலை இலக்கியத்திற்குரிய அடிப்படை யான விஷயம் ஆகும். அவரது கருத்துக்கள் இன்றைய முதலாளித்துவப் பண்பாட்டிற்குப் பொருத்தமாக இருப்பதைக் காண முடியும்.

கார்க்கி முன்வைக்கும் கருத்துக்கள் மூன்று தளங்களில் இயங்குகின்றன. ஒன்று, மக்கள் தாம் உலகின் அனைத்துக் கலைச் செல்வங்களையும் படைப்பவர்கள். இரண்டு, கூட்டுத் தன்மையி லிருந்து தான் படைப்புகள் உருவாகின்றன. மூன்று, ஆதிகாலத்தில் கூட்டாக இருந்த மனிதன், சமுதாய வளர்ச்சிப் போக்கில் தனிமனிதனாகி, தடம் புரண்டு கிடக்கிறார். இவற்றின் அழகியல் பண்பாட்டுத் தாக்கம் என்ன என்பதை கார்க்கி இக்கட்டுரையில் ஆராய்கிறார். இக்கட்டுரையில் அவர் ஏராளமான ரஷ்ய உதாரணங்களையும், சில இடங்களில் ஐரோப்பிய உதாரணங்களையும் தருகிறார். இந்த உதாரணங்கள் நமக்குப் பழக்க மில்லாதவை. எனவே இவற்றைத் தவிர்த்துவிட்டு, கட்டுரையின் அடிப்படையான அம்சங்களைக் காண முயல்வோம்.

கட்டுரையின் ஆரம்பத்திலேயே கார்க்கி, மக்கள் சக்தியின் வலிமை பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

“பொருளியல் மதிப்புகள் அனைத்தையும் மட்டுமே படைக்கும் சக்தியாக மக்கள் இருக்க வில்லை. அவர்கள் மட்டும் தான் அள்ள அள்ளக் குறையாத ஆன்மீக மதிப்புக்களுக்கும் ஆதாரம் ஆவர். உலகின் எல்லா சோக இலக்கியங்கள், (இவற்றில் முக்கியமான சோகமான உலக கலாச் சாரம் என்ற சோக இலக்கியம்) இன்று உள்ள மிகப் பெரிய கவிதைகள், ஆகியவற்றைப் படைத்தவர்கள் அவர்கள். எல்லாக் காலத்திலும், அழகிலும், மேதமையிலும், அவர்கள் தாம் முதலாவதும், முதன்மையானதும் ஆன கவிஞர்களும், தத்துவ வாதிகளும் ஆவர்.” (71)

மக்கள் சக்தியின் பங்கு, வர்க்க சமுதாயத்தில் அதன் சோகமயமான தன்மை ஆகியவற்றை சுட்டிக்காட்டிய கார்க்கி, அடுத்தபடியாக கலைப் படைப்பு மட்டுமல்லாமல், சமுதாய வரலாற்றின் ஒரு பகுதியான உளவியல் வளர்ச்சி பற்றி ஆராயத் தொடங்குகிறார்.

கார்க்கி இங்கு பேசுவது சமூக உளவியல் ஆகும் (Social Psychology). அதாவது இனக்குழு சமுதாய அமைப்பில் வாழ்ந்த மனிதன், வர்க்க சமுதாய அமைப்பிற்கு மாறும் பொழுது அவனது உளவியல் பாங்கு எவ்வாறு மாறுகிறது என்பது பற்றி கார்க்கி கூறுகிறார். இன்னும் தெளிவாகக் கூறினால் ஆதிகாலத்தில் ‘நாம் நாங்கள்’என்று இருந்தவர்கள், பின் காலத்தில் ‘நீ நீங்கள்’என்று மாறி, அதற்கும் பின்னர் ‘நான்’என்று மாறியதை கார்க்கி கூறுகிறார். இதனால் ஏற்பட்ட கலாச்சார மாறுதலையும் கார்க்கி விளக்குகிறார்.

மனித குலத்தின் ஆரம்ப காலத்தில் வெறும் கரங்களுடன் மனிதன் இயற்கையோடு போராடினான். இயற்கை சக்திகளைக் கண்டு அச்சமுற்றான்; இயற் கையை வியப்புடன் பார்த்தான்; அதனை ரசித் தான். அதன் விளைவாக மதத்தினைப் படைத் தான். இது இன்றைய மதம் அல்ல. இது அபினியாக மாறாத மதம். இந்த புராதன மதம்தான் மனிதனது கவிதையாக இருந்தது. அது மட்டுமல்ல இயற்கை சக்திகள் பற்றிய மொத்த அறிவாகவும் அது இருந்தது. மனிதன் முதன்முதலாக இயற்கை யுடன் போராடி பெற்ற வெற்றிகள் அவனுக்கு வீர யுகக் கதைகளைப் படைக்கும் வாய்ப்பினைக் கொடுத்தன. இதன் பின்னர் தொல் கதைகள் உருவாயின. இத்தொல் கதைகளும் வீரயுகக் கதைகளும் இணைந்தன. இவற்றில் இதிகாசத் தன்மையுள்ள பெரு வீரர்கள் உருவாயினர். இவர்களிடம் இருந்தது கூட்டு மனப்பாங்கு ஆகும்.

இந்தக் கூட்டுமனம்தான் வீரயுகக் கதை களிலும், தொன்மங்களிலும் இடம் பெறுகிறது. அவற்றில் தனிநபர் மனம் இல்லை. மொழி கூட, கூட்டு மனதின் விளைவு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று கார்க்கி கூறுகிறார். இந்தக் கூட்டு மனத்தின் மூலம்தான், மக்கள் அனைவரும் ஒரே மனதாகச் சிந்தித்ததன் மூலம் தான், மனிதன் புரோமித்யூஸ், சாத்தான், ஹெர்குலிஸ், போன்ற பாத்திரங்களைப் படைக்க முடிந்தது1 இந்தப் பாத்திரங்கள், மக்களது அனுபவங்களைப் பொதுமையாக்கி உருவாக்கப்பட்டவை. இந்த இடத்தில் கார்க்கி ஒன்றைக் கூறுகிறார். “தனிநபர் படைப்பானது பல நூற்றாண்டுகள் ஆகியும் இலியத் அல்லது கலேவலா (Kalevala) போன்றவற்றை உருவாக்க முடியவில்லை. கூட்டு மனதின் சக்தி மட்டும் தான் அவற்றை உருவாக்க முடிந்தது.”(73)

கூட்டு அமைப்பானது ஒரு பெருவீரனை உருவாக்கிய முறை பற்றிய போதுமான விவரங்கள் நம்மிடம் இல்லை. ஆனால், இது பற்றிய ஒரு பொதுவான சித்திரத்தினை நாம் தர இயலும்.

இதனை நாம் கணங்களிலிருந்து (Clan) தொடங்குவோம். இது ஒரு சிறிய சூழு. இதனைச் சுற்றி கடினமான இயற்கை உள்ளது. இந்த இயற் கையை எதிர்த்துப் போராடித்தான் இக்குழு வாழ்க்கையை நடத்த வேண்டும். இதில் ஏற்படும் அனுபவங்களை இதன் உறுப்பினர்கள் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்துகொண்டனர். எல்லாமே பொதுவில் பேசப்பட்டன; விவாதிக்கப்பட்டன. குழு மொத்தமாகவே சிந்தித்தது. இங்கு தனிநபர் சிந்தனை என்பது இல்லை. பொதுச் சிந்தனை என்பது மட்டுமே இருந்தது. “தனிநபர் அனுபவம் கணத்தின் அனுபவத்துடன் ஒன்று கலந்தது. கணமானது பெற்ற அனுபவம் முழுவதும் அதன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொந்தமாக இருந்தது.”(73) ஒரு தனிநபர் கணத்தின் ஒரு அங்கமாகவே கருதப்பட்டார். ஒரு தனிநபர் இறந்தாலும் கணம் இருந்தது. கணத்தின் ஒரு உறுப்பினர் மறைவதை கணம் பார்த்தது! அதன் பௌதீக சக்தியின் ஒரு பகுதி மறைந்ததாகக் கணம் கருதியது. இந்த மறைந்த நபருக்கு அது மரியாதை செலுத்தியது. அவனுக்கு கணத்தின் பண்புகள் அனைத்தும் இருப்பதாக அது கருதியது. இந்தத் தனிநபர் ஒரு வீரன் ஆகிறான். இவன் கணத்தின் சக்திகள் அனைத்தின் உறைவிடமாகக் கருதப் பட்டான். கணத்தின் மொத்த எண்ணம் இந்த வீரன் மீது குவிந்தது. அவன் கணத்துடன் இருப்ப தாகவே கண உறுப்பினர்கள் எண்ணினர்.2 இப் பொழுது “அவள்”என்ற கருத்து தோன்றுகிறது. இது “நாங்கள்”என்பதிலிருந்து ஒருவரை வேறு படுத்திக் காணும் போக்கு ஆகும்.

கணங்கள் இணைந்து கணக்கூட்டங்களாக அல்லது இனக்குழு அமைப்புகளாக மாறின. இந்தக் கட்டத்தில் கணங்களின் வீரர்கள் இணைக்கப் பட்டு இனக்குழு வீரர்களாக மாற்றம் பெற்றனர். ஹெர்குலீஸ் அத்தகையவன். இந்த வீரர்களின் செயல்கள் பாராட்டிப் பேசப்பட்டன. இத்தகைய வீரர்கள் உருவாக்கப்பட்ட பின்னர், இவர்களில் ஒருவரை கடவுளாக்கும் முயற்சி இடம் பெற்றது.3 இப்பொழுது இயற்கைக்கும், மனிதனுக்குமான போராட்டம் கடவுளுக்கும், மனிதனுக்குமான போராட்டமாக மாறியது. மனித சக்தியின் உருவமாக புரோமீத்யூஸ் என்ற வீரன் படைக்கப் பட்டான். இவன் கடவுளர்களை எதிர்த்தவன்.

மக்கள் தொகை பெருகிய பொழுது கணங் களுக்குள்ளே போராட்டம் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் ‘நான்’என்ற கருத்தாக்கம் தோன்றியது. இதற்குக் காரணம், இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் இப்பொழுது தனித் தனிக் குழுவாகப் பிரிந்து போராட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. ஒவ்வொன்றும் ஒரு துறையைப் பின்பற்றியது. இப்பொழுது இதிகாச நாயகர்கள் தோன்றினர். கூட்டு அனுபவம் பலரிடம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனால் கணத்தின் வலு பிரிவடைந்தது. இதன் பின்னர் ஆளுமைகள் தோன்றின. முதலில் தோன்றிய வீரர்கள் கூட்டு உணர்வின் பின்புலத்திலேயே செயல்பட்டனர். பின்னர் அவர்களின் திறமையை அவர்களுடையதாக்கிக் கொண்டு கூட்டு அமைப் பிற்கு மேலாக நின்றனர். நாம் என்பது இப் பொழுது ‘நான்’ (ஐ) என்று மாறியது. கார்க்கியின் கருத்துப்படி இது “தனிநபர்மயமாதல் நாடகத்தின் ஆரம்பம்”ஆகும்.

முதலில் இந்த ‘நான்’அல்லது தனிநபர் கூட்டு அமைப்புடன் ஆன தொடர்பினை விட்டு விட வில்லை. ஆனால் தனது சக்திகளை உணர்ந்த பின்னர் அவன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டான். இதன் காரணமாக இனக்குழு அமைப்பின் செயல்களைக் கட்டுப்படுத்தி, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.

இந்த தனிநபர் அவனது அதிகாரத்தினை நிலைநாட்டிய பின்னர், நிரந்தரமான கடவுளைப் படைத்தான். வெகு ஜனங்களை இக்கடவுளுக்குக் கீழ்படியச் செய்தான். நமது தற்கால சமுதாயத்தில் கடவுளைப் புதுப்பிக்க பல்வேறு வழிகள் கையாளப் படுகின்றன. இதற்குக் காரணம் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட கடவுளின் சக்தி தனிநபர் மயமாகும்பொழுது பலனற்றதாகி விடுகிறது.

இனக்குழு மக்கள் இந்தக் கட்டத்தில் தனி நபரைக் கண்டு அஞ்சினர். எனவே ஒரு கட்டத்தில் அதிக பலமுள்ள தனிநபர்களை கடவுளின் மனிதர்கள் என்று கூறிக் கொன்றனர். ஆனால் சமுதாய வளர்ச்சி தனிநபர் ஆதிக்கத்திற்குச் சாதகமாக இருந்தது. அது சொத்துடைமையின் தோற்றம் ஆகும்.

நாட்டார்கதைகளில் மனிதன் மனிதனுடன் போராடும் பொழுது அவன் வலுவிழக்கிறான் என்ற நம்பிக்கை உள்ளது. அக்கதைகளில் தனிநபர் களது நிர்கதியான நிலை, நம்பிக்கையின்மை, அதிகார வெறி ஆகியன கேலி செய்யப்படுகின்றன. தனிநபர்களுக்கு இடையே போராட்டம் அதிக மாக, அதிகமாக, உளவியல் ரீதியான ஒற்றுமை குறைகிறது. இப்பொழுது தனிநபர், அவனது அதி காரத்தினைக் காப்பாற்ற இனக்குழுவை எதிர்த்து நிற்கிறான். இதன் விளைவு அவன் இனக்குழுவின் கூட்டு உணர்விலிருந்து விடுபடுகிறான். இப் பொழுது அவன் ஒரு வெற்றிடத்தில் இருக்கிறான். இப்பொழுது கட்டுப்பாடற்ற, அராஜகமான ஒரு போராட்டம் இடம் பெறுகிறது. அது தனி நபருக்கும், இனக்குழுவிற்குமான போராட்டம் ஆகும். தனிச் சொத்து வளரும்பொழுது, இது அதிகரித்தது. இதன் விளைவாக, தன்னலம் அதிகரிக்கிறது. இனக்குழுவிலிருந்து தனிநபர் பிரிகிறான். மக்கள் மந்தைகளாக மாற்றப்படு கின்றனர். கூட்டு உணர்வு மறையத் தொடங்கு கிறது. பழைய சக்தியை அவர்களால் பெற முடிய வில்லை. ஆனால் அவர்களது கற்பனையில் பல கதைகளை உருவாக்குகின்றனர். இதில் ஒன்று பாஸ்ட் கதை. இவன் கடவுளையே எதிர்த்தவன்.4 பாஸ்ட் கதை மூலம் மனிதனது ஆன்மீக வறுமையை மக்கள் எடுத்துக்காட்டினர். உலக இன்பங்களையே பெரிதாகக் கருதியவன். அவன் ஒரு மந்திரவாதி.

உலக இலக்கியங்களில் இடம்பெற்ற சிறந்த கதாபாத்திரங்களைப் படைத்தவர்கள் கூட்டு உணர்வுள்ள மக்களே ஆவர். ஷேக்ஸ்பியரது ஒதெல்லோ, ஹாம்லத், பைரனின் டான் ஜீவான் ஆகிய பாத்திரங்களைப் படைத்தவர்கள் மக்களே ஆவர்.5 கலைப் படைப்பானது தனிநபர் செயலாக உள்ளது. ஆனால் படைப்புத் திறன் கூட்டு உணர்வில் தான் உள்ளது. இந்த உணர்வினை அறுத்துக் கொள்ளும் பொழுது தனிநபர் மந்தபுத்தியுள்ள வனாக, பிற்போக்காளனாகவும், வாழ்க்கைக்கு எதிரானவனாகவும் மாறுகிறான்.

இந்தக் கண்ணோட்டத்தில் உலக கலாச்சார வரலாற்றைக் காணும் பொழுது, தேக்க நிலையிலும், மாறுதல் காலகட்டத்திலும் கலையின் தன்மையில் பெரிய வேறுபாடு உள்ளது. தேக்க நிலையில் கலைப் படைப்பு பிற்போக்காகவும், இருண்மை யாகவும், சமரசம் பேசுவதாகவும், தனிநபர் வாதத்தின் பல்வேறு வடிவங்களைக் கொண்ட தாகவும் விளங்குகிறது.6 இக்காலகட்ட இலக்கியம் அதர்க்கமாக உள்ளது. மாறுதல் கால கட்டத்தில் தனிநபரது ஆன்மீக பலம் சீறிக் கிளம்பு கிறது. ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகள் அவன் மூலமாக வெளிப்படுகிறது. இந்தக் கால கட்டங்களில் தனிநபர்கள் படைக்கும் பாத்திரங் களுக்குப் பின்னால் பிரம்மாண்டமான கூட்டு உணர்வு உள்ளது.

ஆனால் தனிச் சொத்துள்ள சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் உள்ள போட்டி காரணமாக கலாச்சார வறுமை ஏற்படுகிறது. தனிநபர் தனது சிதைந்த ஆளுமையையே வெளிப்படுத்துகிறான். தனிமை, மரணபயம், வாழ்க்கைத் துன்பங்கள் ஆகின அவனை ஆட்டிப் படைக்கின்றன. வாழ்க் கையை மொத்தமாகப் பார்ப்பதற்குப் பதிலாக அவர்கள் தனித்தனியாகப் பார்க்கின்றனர். இதன் விளைவு பழைய பிரம்மாண்டமான படைப்புகள் தோன்றுவதில் பல குரலில் பேசும் கதை மாந்தர்கள் உருவாகின்றனர். “இந்தத் தனிநபர் தனது மரணத் தினை இசைக்கிறான்”இப்பொழுது தனிமை, ‘தான்’என்பன கலையின் கருப்பொருளாக மாறுகின்றன.7

இத்தகைய முறையில் தனிநபர்வாதம், மரணப் படுக்கையில் இருக்கும் பொழுது பாட்டாளி வர்க்கம் ஒற்றுமையின் வலுவைக் காட்டுவதாகத் தோன்றுகிறது. இது முதலாளித்துவ சமுதாயத்தில் இடம்பெறுகிறது. ஆனால் தனிநபர்வாதிகள் இதனை ஒரு “இருண்ட புயல் சின்னமாகக்”கருது கின்றனர். இதனை வெறுப்புடன் காண்கின்றனர்.

“ஆன்மீக வறுமையில் சிக்கி முரண்பாடு களில் அகப்பட்டுக் கொண்டு தனக்கு ஒரு வசதி யான பாதுகாப்பினைத் தேடும் தனிநபர்வாதி சிதை கிறான்; கீழ்த்தனமாக நடந்து கொள்கிறான்... இதனால்... புதிர்வாதத்திலும், குற்றங்களிலும் ஈடுபடுகிறான். கடவுளைத் தேடிக்கொண்டே சாத்தானையும் நம்புகிறான்.”(85)

“இன்றைய தனிநபர்வாதி வெறுப்பின் பிடியில் இருக்கிறான். அவன் பழைய நெல்லின் வெறும் உமி மட்டும்தான். அவன் சில நேரங்களில் சோஷலிசத்துடன் விளையாடுகிறான். சில நேரங் களில் முதலாளித்துவத்துடன் விளையாடுகிறான். அவனிடம் அடியாட்கள் மனோபாவம் தோன்று கிறது. கொள்கைகள் காற்றில் பறக்க விடப்படு கின்றன. பழைமைவாதம் பேசுகிறான். தடையற்ற பால் உறவு பற்றிப் பேசுகிறான். பிறரைத் துன்பப் படுத்தி இன்பம் காண்கிறான். அழுகுண்ணிச் சித்தராக மாறுகிறான். அவனது ஆளுமை சிதைந்து நொறுங்கியது மட்டுமல்லாமல், மிக மோசமாகப் பிளவுண்டு உள்ளது.”(87) இந்தப் பிளவுண்ட மனிதனின் அடிமனதில் புதைந்து கிடப்பது வக்கிரமான பால் உணர்வு, மக்கள் விரோதப் போக்கு, நபும்சகத்தனமான எதிர்ப்பு, அழுகுண்ணிதனமும் ஆகும்.

இந்தக் கட்டத்தில் கார்க்கி தொழில்நுட்பம், விஞ்ஞானம் ஆகியன பற்றிக் கூறுகிறார். அவரது கருத்துப்படி, இவையாவும் கூட்டு உழைப்பின் விளைவாகும். எண்ணற்ற உழைப்பாளிகள் வெளிப் படுத்தும் கூட்டு உழைப்பை விளக்குவது விஞ்ஞானியின் வேலை. கண்டுபிடிப்புகளின் பின்னணி இதுதான். ஆனால் பூர்ஷ்வா சமுதாயம் இந்த அறிவைத் தனதாக்கி, தனிநபர் மயமாக்கி விடுகிறது. இந்தச் சூழ்நிலை இலக்கியத்திலும் உள்ளது. இதனை கார்க்கி சர்வதேச இலக்கியங் களில் இருந்து பல உதாரணங்கள் கொடுத்து விளக்குகிறார். இந்தச் சூழ்நிலையானது கலைப் படைப்புகளை, படைப்பாளியைப் பாதிக்கும் முறையையும் விளக்குகிறார். அதனைக் காண் போம்.

ஒவ்வொருவனும் அடுத்தவனை அழிக்க வேண்டும் என்ற வெறி இன்று மேலோங்கி யுள்ளது. தான் என்பது (நபடி) பற்றிய அதிகமான உணர்வு வெறித்தனமாக மாறுகிறது. இது ஹிஸ்டிரியா நிலையைத் தோற்றுவிக்கிறது. ஒருவர் மீது மற்றொருவரின் நம்பிக்கையின்மை, சந்தேகம், பொறாமை, இரட்டை வேடம் ஆகியன எங்கும் காணப்படுகின்றன.

“மனிதர்கள் நரம்பு நோயாளிகளாக மாறு கின்றனர். நமது அறிவாளிகளின் தனிநபர்வாதம் இந்நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது. இன்றைய தனிநபர்வாதத்தின் சித்தாந்தவாதிகளிடையே இந்தக் கோளாறுகளைக் காணலாம். இவர்கள் கிருத்துவர்கள், புதிர்வாதிகள், அராஜகவாதிகள் என்று எவராக இருந்தாலும் இவர்களிடையே அதிகமான மனக்கிளர்ச்சி உள்ளதைக் காண முடியும். இவர்களது மனநிலை விரைவாக மாறு கிறது. சிந்தனை அதர்க்கமாக உள்ளது. இவர் களிடம் சமூக எதிர்ப்பு உள்ளது.”8

  1. இங்கு பீமன், அர்ச்சுனன் போன்ற பெருவீரர்களை நினைவில் கொள்ள வேண்டும். நமது இதிகாசங்களின் நாயகர்கள் கூட்டு மனத்தினர்.
  2. இன்றும் உள்ள நீத்தார் நினைவு இதன் எச்சமாகும் (எஸ்.டி).
  3. மகாபாரதத்தில் 101 கணக் கூட்டம் கௌரவ இனக்குழுவாகவும், ஐந்து கணக் கூட்டம் பாண்டவ இனக்குழுவாகவும் இருந்திருக்கலாம் (எஸ்.டி).
  4. பாஸ்ட் கதை ((Faust Legend) இதனை ஜெர்மன் கவிஞர் கதே அற்புதமான காவியமாக எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் கிருஸ்டொபர் மார்லோ என்பவர் கவிதைத் தன்மையுள்ள நாடகமாக எழுதியுள்ளார்.
  5. ஷேக்ஸ்பியர் பைரன், ஷெல்லி, மில்டன் போன்றவர்கள் மக்களால் உருவாக்கப்பட்ட கதைகளையே தங்கள் படைப்புகளுக்குப் பயன்படுத்தியுள்ளவர் (எஸ்.டி) (கம்பன், இளங்கோ).
  6. பாரதி, பாரதிதாசன் கவிதைக்கும், புதுக்கவிதைக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க (எஸ்.டி.).
  7. பெரும்பாலான புனைவியல் இயக்கக் கவிஞர்கள் இத்தகையவர் (எஸ்.டி).
  8. இதனை பேரா. நா.வானமாமலை பிராய்டிசத்திற்கான அடித்தளம் என்று கூறுவார்.
Pin It