சமூகப்போக்குகளே (social trends) வரலாற்றுச் சம்பவங்கள் (historical events) எனலாம்.1 இவை பல்வகைச் சான்றுகளில் பதிந்துள்ளன.  அவை அந்தந்த காலகட்டத்தின் போக்குகளுக்கு ஏற்ப வேறு வேறு ஊடகங்களில் பொதிந்துள்ளன. அதற்கு அந்தந்த காலத்தின் தொழில்நுட்பமும் மனிதச் சமூகத்தின் உளவியலும் காரணமாகும்.  எனவே, அச்சான்றுகளை  பகுத்தாய்ந்து ஒரு நிலவட்டத்தின் (territory) வரலாற்றினை எழுத வேண்டுமாயின் பிறதுறை அறிவும் (knowledge on ancillary and auxiliary disciplines) வரலாற்றியலுக்குத் தேவை.  பிறதுறை அறிவோடு சான்றுகளை அணுகி அவற்றிலுள்ள தரவுகளைச்  சரியாகப் புரிந்து கொண்டால் வரலாற்றாய்வு முழுமையடைய வாய்ப்பு உண்டு. பிற துறைகளான தொல்லியல், மொழியியல், கல்வெட்டியல், கணினியியல், மானிடவியல் போன்ற துறைகளில் ஓரளவு பயிற்சி பெற்று சமூகப்போக்குகளை அணுகலாம். இக்கட்டுரையில் சில துறைகளின் முக்கியத் துவம் மட்டுமே சில உதாரணங்களுடன் உணர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழில்நுட்பம்
 
இரும்பு 
 
பொதுவாக, வரலாற்றுக்காலம் எழுத்துப் பயன் பாட்டுடன் தொடங்கியது என்பர்.  ஆனால், தமிழக வரலாறு பொறுத்து, தொல்லியல் சான்றுகளான பானையோடுகளில் குறிகளும்,வாசகங்களும் பொறிக்கப்படுவதற்கும்,அதேகாலத்திய பாறைக்கல்வெட்டுகளைப் பொறிப்பதற்கும் நடுகல் போன்றவற்றில் எழுத்துகளைப் பொறித்தற்கும் ஒரு தொழில்நுட்பம் தேவைப்பட்டது.  அது, இரும்புத்தொழில்நுட்பம்.2  கல்வெட்டுகளில் உள்ள சில தமிழ்ப் பெயர்ச்சொற்கள் அக்காலத்திய இலக்கியங்களிலும் உள்ளன.  அவ்விலக்கியங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்படுவதற்கும் இரும்புத் தொழில் நுட்பம் தேவைப்பட்டிருக்கும்.  இவ்வத்தனை சான்றுகளும் உருவாக்கப்படுவதற்கான காலகட்டம் ஓரிரு நூற்றாண்டுகள் என வரையறுக்கலாம்.  இவ்வனைத்து  வகைச்சான்றுகளையும் உருவாக்குதற்கு இரும்புத் தொழில்நுட்பம் பிரதானமானது என்பதால் இதனை தொழில்நுட்பம் பொறுத்து இரும்புக்காலம் எனலாம்.   எனவே, இக்காலகட்டத்தின் வரலாற்றினைப் படித்தறிய தொல்லியல், கல்வெட்டியல், உலோகவியல் இவற்றுடன் இலக்கியப் புலமை போன்ற துறைகளில் பயிற்சி தேவை. இவ்வனைத்துச் சான்றுகளும் அரசு உருவாக்கம் என்ற கருத்தியல் பின்புலத்தில் உருவாக்கப் பட்டதால் அரசியல் பற்றிய அறிவும் வரலாற்றாய்விற்குத் தேவை.  மேற்சொன்ன காலகட்டத்தின் சமயம் பற்றிய கருத்துகளைத் தொல்லியல் சான்றுகள் மறைமுகமாகவும், இலக்கியச்சான்றுகள் நேரடியாகவும் பதிக்கின்றன.
 
நெருப்பு 
 
இரும்புக்காலத்தின் பிறிதொரு தொழில்நுட்பம் நெருப்பின் பயன்பாடாகும்.   இந்நெருப்பு சங்க காலத்தின் எரிபுனச்சாகுபடிக்கு / காட்டெரிப்பு வேளாண்மைக்குப் பெரிதும் பயன்பட்டதனை அறியலாம்.பழந்தமிழகத்தின் குறிஞ்சித்திணை மக்கள் இம்முறைச்சாகுபடியினைப் பின்பற்றியிருந்ததனைச் செம்மொழிப்பாக்கள் பதித் துள்ளன.  பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழகத்தின் மலைக்குடி மக்கள் இம்முறையினை மேற்கொண் டிருந்ததனைத் தம் களஆய்வில் எட்கர் தர்ஸ்டன் கண்டறிந்துள்ளார். அண்மைக்காலம் வரையில் நீலகிரியின் இருளரும், தென்மாவட்டத்தின் காணிக் காரரும் காட்டெரிப்பு  வேளாண்மையினைப் பயன் படுத்தியதனையும், அதற்காக அவர்கள் நெருப்பினை உருவாக்கியதனையும் புகைப்படங்களின் மூலம் விளக்கியுள்ளார்.   மத்திய இந்தியாவின் திராவிடமொழி பேசும் கோண்ட் இனத்து மக்கள் இவ்வேளாண் முறையினை மேற்கொண்டிருந்ததனை விளக்கியுள்ளார்.  இப்படி திராவிட மொழி பேசும் மக்கள் நெருப் பினையும், இரும்பினையும் கொண்டு வேளாண்தொழில் செய்துவந்ததனை ஓர் உடற்கூறு மானிடவியல் அறிஞர் என்ற நிலையில் இவர் ஆய்ந்துள்ளார்.   பக்தவத்சலபாரதி ஒரு பண்பாட்டு மானிடவியலாளர் என்ற நிலையில் தமிழகப் பழங்குடிமக்களின் காட்டெரிப்பு வேளாண்மை யினை ஆய்ந்துள்ளார்.   வீ.மாணிக்கம் இதே கருத்தினை வரலாறாய்வு என்ற நிலையில் ஆய்ந்துள்ளார்.3 சங்க இலக்கியத்தில் நெருப்பு என்ற சொல் 16 முறையும் தீ என்ற சொல் 81 முறையும் பதியப்பட்டுள்ளது.   கற்பாறைப் பரப்பின் மேல் தீ மூட்டிக் கற்பலகைகளை வெட்டியெடுக்கவும் தீயும் இரும்பு என்ற உலோகமும் பெரிதும் பயன்பட்டிருக்கும். இப்படி வெட்டி யெடுக்கப்பட்ட கற்பலகைகளே சித்தன்னவாசல் போன்ற இடங்களில் தரைக்கீழ்ப் புதைகுழிகளுக்குப் பயன்பட்டிருக்கும்.  
 
உலோகம்
 
சங்க இலக்கியத்தில் பணத்தினைச் சுட்டுதற்கு பொன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.   காசு, கழஞ்சு, அச்சு போன்ற சொற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவற்றுள் பொன் என்ற சொல் உலோகத்தினைக் குறிக்கும்.   அச்சுக் காசு punch marked coins குறிக்கும்.  உலோகத்தால் ஆன இக்காசுகளை அச்சடிக்க உலோகத்தினை உருக்குதற்கும் நெருப்பின் தேவை வேண்டும்.  இதற்கு உலோகக்கலவை அறிவு வேண்டும்.   இந்நுட்பத்தினை அறிந்த தொழில் வினைஞர்களே வில்லேருழவர்க்குக் கொழுவினையும் சொல்லேருழ வர்க்கு எழுத்தாணியினையும் வடித்துத் தந்திருப்பர். இவர்களே மூவேந்தர்களுக்கான காசுகளை இலச்சினை யுடன் அச்சடித்துத் தந்திருப்பர். சிறு அளவிலான இவ்வுலோக அறிவே பின் நாட்களில் உலோகப் படிமங்களை உருவாக்குதற்கு முன்னோட்டமாக அமைந்திருக்கும்.
 
ஒப்பாய்வு
 
இலக்கியச் சான்றுகள் வரலாற்றுச்சான்றுகளாக பல சந்தர்ப்பங்களில் அமைந்துள்ளன.  திராவிட, ஆரிய மொழிக்குடும்பங்களின் இலக்கியங்களில் போதியஅறிவு தமிழகத்தின் வரலாறு பொறுத்து மேலதிகப் புரிதலைத் தரும்.  வடமொழிகளில் சொல்லப்பட்டுள்ள சமயக் கூறுகள் தமிழ்ச் செம்மொழிப் பாக்களில் பதிக்கப் பட்டுள்ளன.  குறிப்பாக, சம்ஸ்க்ருத இலக்கியத்தின் புராண, இதிகாசப் பாத்திரங்களின் ஆளுமையும், புனைவுகளும் செம்மொழிப்பாக்களில் பதிக்கப் பட்டுள்ளன.4  இப்பதிவுகள், இந்தியமயமாதல் என்ற பின்னணியில் நிகழ்ந்தன என்று கருதவேண்டியுள்ளது.  ஓர் அடிப்படைக் கருத்தினைமையமாக வைத்துப் பல மொழிகளில் இராமாயணம் என்ற இதிகாசம் எழுதப் பட்டதனைத் தென்னகமயமாதலை விளக்குவதாகக் கருதலாம்.  இதற்குப் பலமொழிகளிலுள்ள இலக்கியத் தரவுகளை ஒப்பாய்வு செய்வதன் மூலம் அறியலாம்.  இந்தியமயமாதல், தென்கிழக்காசியமயமாதல் என்ற அப்போக்குகளைச் சமயம் சார்ந்த ஒரு மேட்டுக்குடிச் சமூகமே செயற்படுத்தியுள்ளது என்றும் கருதலாம்.  
 
இலக்கியக் கதாபாத்திரங்களை  ஆய்வதன் மூலம் இந்திய மக்களின் மனோவியலைப் புரிந்துகொள்ளலாம்.இந்த இந்திய மனோவியல் அய்ரோப்பிய இலக்கியங்கள் வழியே க.கைலாசபதி, போன்றோரால் கண்டறியப்பட்டது.5  காலகட்டங்கள் வேறு வேறாக இருந்தாலும் வீரயுகங்களின் பண்புக்கூறுகள் ஒத்த தன்மையன என்று அறியப்பட்டது.  வீரயுகக்காலத்தின் சான்றாண்மையும், வீரமும், புகழும் என்றும் ஒன்றெனப் பார்க்கப்பட்டன.  ட்ராய் போர் பிறனில் விழை வினாலேயே நிகழ்த்தப்பட்டதனை கிரேக்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.  பிறனில் விழைவினா லேயே, பாரிஸ் மாண்டான், இராவணன் மாண்டான், வாலியும் மாண்டான். துரியோதனன் மனைவியின் மேகலையினைப் பற்றி இழுத்த ஊழ்வினையினாலேயே கர்ணனனும் மாண்டான் என்று ஏன் சொல்லக்கூடாது. 
 
அகல்யா விரும்பியே இந்திரனுடன் இருந்தாள் என்ற பெண்ணின் மனோபாவத்தினையும் அறிய இலக்கியம் உதவும்.   கவ்தமரின் மனைவியை இந்திரன் கெடுத்தான்; இந்திரன் மனைவியை இராவணன் கெடுத்தான் என்பது இலக்கியக் குறிப்பு.  இப்படி மாறி மாறி பெண்களைத் தென்கிழக்காசியாவின் ஆண்கள் கெடுத்துள்ளனர்.இதில் ஆரிய இந்திரனும், திராவிட இராவணனும் ஒத்தவர். இவைதாம் ஆரியமாயையும் திராவிட மாயையும்.    இப்படிக் காலம் முழுதும் மனிதனின் மனோபாவத்தினை அறிய இவ்வொப்பாய்வு உதவும். இராமாயணக் காட்சிகள் தென்னிந்தியக் கோயில்களிலும், தென் கிழக்காசியக்கோயில்களிலும் புடைப்புச்  சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.6
 
மொழியியல்
 
ஒப்பாய்வும், மொழியியலும் வரலாற்றாய்வினை வலுப்படுத்தும்.  இந்தோ -ஆரிய மொழிகள் பிறப்பதற்கு மூலம் இலக்கிய சமஸ்கிருதம் அன்று; வழக்கு மொழி நிலையில் நிற்கும் சமஸ்கிருதம்தான் அதன் தாய் என்று அறியப்பட்டுள்ளது என்றும் தமிழ் இலக்கிய உத்திகள் வியாசர் பாரதத்தில் பதிந்துள்ளன என்றும் பேரா.வ.அய். சுப்பிரமணியம் கண்டாய்ந்துள்ளார்.7 மொழியியல் புலமையோடு கல்வெட்டுச் சான்றுகளை ஆய்ந்த ஆ.வேலுப்பிள்ளை சங்ககாலத்திலேயே பிராமணர்கள் தமிழகத்தில் வாழ்ந்திருந்தாலும், அச்சமூகத்தின் பேச்சு மொழி கி.பி. 800-900 காலகட்டத்திலேயே கல்வெட்டுகளில் பதிந்துள்ளது என்று நிறுவுகிறார்.8 ஒரு தனிமனிதன் தனித்துவிடப்பட்ட ஓர் ஆட்டுக் குட்டியினைப் போல் ஓர் இனக்குழுவினின்றும், மக்கள் திரளினின்றும் தனித்து இயங்க முடியாது; பிற இனங் களோடு இயைந்தே இயங்க முடியும்.  இவர்களை இணைப்பது சமயமும், வணிகமும். இதற்கான ஊடகம் மொழி.  இவ்வூடகத்தின் வழியே வட இந்திய, தென் இந்திய பிணைப்பினைக் கண்டறிய கல்வெட்டுகளும் செம்மொழி இலக்கியங்களும் அமைந்தன.  இந்தியாவில் உருவான அனைத்துவகைக் கல்வெட்டுகளும் ஒரு பொது வகை எழுத்துமுறையில் இருந்து தோன்றியிருக்க வேண்டும்.  அதனாலேயே வடக்கு, தெற்கு வரி வடிவங்களில் ஒத்த சாயல் அமைந்திருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.  அதீதமான பேச்சும், மொழியும் வணிகத்திற்கும் சமயத்திற்கும் தேவை.  இவையே, இங்கு எழுத்தினைக் கொணர்ந்தன எனலாம்.  நடுகற்கள் பெருமை பேசப் பயன்பட்டன; பாறைச் சாசனங்கள் அரசு வளர்ச்சிக்கும், வணிகத்திற்கும் பயன்பட்டன.   பிரா கிருதம் பேசிய வணிகர்களே பிராமி எழுத்துமுறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியிருக்கலாம்  என்று பேரா.எ.சுப்பராயலு கருதுவது கவனிக்கத் தக்கது.9 
 
மானிடவியல்
 
மனித வரலாற்றில் சமயச் சடங்குகளையும், வழி பாடுகளையும் புரிந்துகொள்ள மானிடவியல் பெரிதும் துணை நிற்பன.  காட்டாக, பன்றியினை இஸ்லாமி யர்கள் வெறுப்பதாகச் சொல்வர்.  யூதர்களும் அப்படியே.  இதற்கான காரணத்தினை ஒரு வரலாற்றா சிரியரால் கண்டறிய இயலாது. ஆனால், ஒரு மானிடவியலார் பதிலிறுத்துள்ளார்.10 அண்மைக்காலமாகத் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி பகுதிகளில் ஆடுகள் மந்தை மந்தைகளாக இறக்கின்றன.11 இவை பெரும்பாலும் செம்மறி ஆடுகள், சில வேளைகளில் குறும்பாடுகள்.  பாலக்காட்டுக் கணவாய் வழியே வீசியடிக்கும் கூதக்காற்றே இதற்குக் காரணம்.  இக்கருத்துப் பின்னணியில் பின்வரும் செய்திகளைக் கருத்திற் கொள்ளவேண்டும்.விலங்குப்பலியினைப் புரிந்துகொள்ள மானிடவியலே உதவும்.  அண்மையில் காவிரியின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் (நவம்பர்-டிசம்பர், 2013) பல மாடுகள் கோமாரி நோயினால் மடிந்தன.   இச்சூழலில் நாகப்பட்டினம் அருகே அம்பரகத்தூர் என்ற ஊரிலுள்ள ஒரு பெண் கடவுளின் கோயிலில் இதே பருவ காலத்தில் ஆண்டுதோறும் கால்நடைகள் பலியிடப்பட்டன என்பதனைக் கவனிக்க வேண்டும். பலியிடப்பட்ட மாடுகளின் காற்குளம்புகள் துண்டிக்கப்பட்டு, கிண்ணம்போல் கவிழ்க்கப்பட்டு, தீபங்களாக எரியூட்டப்படுவதனை மாடுகளின் குளம்புகளில் நோய்களைப் பெருக்கும் கிருமிகள் ஒழிக்கப்படுவதாகக் கருதலாம்.   இப்படி ஒரு சமயச் சடங்கு மருத்துவச் சடங்காக மாறுகிறது.  
 
மனிதச் சமூக வரலாற்றில் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.  இதனைப் புரிந்துகொள்ள அவற்றின் குணவியல்புகளைக் கண்டறிய வேண்டும்.  இந்திய மனிதன் வளர்ப்பு விலங்குகளாக உருவாக்கமுடியாத சிங்கம், புலி, பாம்பு போன்ற அச்சந்தருவனவற்றை (predators) சமய வலயத்திற்குள் இழுத்துக் கடவுளர்களுக்கு வாகனமாக்குகிறான்.   ஆந்தை, கழுகு, மீன்கொத்தி போன்ற வேட்டைப் பறவைகளை வளர்ப்புப் பறவைகளாக்க இயல்வதில்லை.கோண்ட் இனத்தினர் காக்கையினைக் கொல்வதில்லை.  ஆனால், புனிதமாகக் கருதப்படும் கருடனைக் கொல்லத் தயங்குவதில்லை.பக்தியின் விளைச்சலான தேவாரத்தில் ஆந்தை குறிக்கப்பட்டுள்ளது. இப்பறவை உழவனுக்கு உதவும் எலிகொல்லி.   கதிர்களைச் சேதப்படுத்தும் காகம் இழிவாகக்கருதப்படும், சனீஸ்வரனுக்கு வாகனமாக்கப் பட்டது; அதே வேலையினைச்செய்யும் கிளி அழகு காரணமாக அம்பிகையின் தோளில் இடம் பிடித்தது.   ஆனால், அக்கிளி ஆணா? பெண்ணா? நாம் அறியாதது.  
 
பொதுவாக இந்தியக் கடவுளர்களின் வாகனங்கள் ஆண்பால் (முருகன் : ஆண்மயில்; காளி : ஆண் சிங்கம்; அய்யப்பன் : ஆண்புலி; சிவன் : ஆண்மாடு).சிவ பெருமானின் இடை வார் ஆண்பாம்பு; சில சந்தர்ப்பங் களில் வாசுகியும். ஆனால் பிச்சாடனாருடன் வருவது ஆண்நாயே. காளியன் என்ற ஆண் பாம்பின் மீதே கண்ணன் நடமிடுகிறான்.12 தமிழக வரலாற்றின் அரசுருவாக்கத்தில் குதிரை ஒரு வேகமான பங்கினை வகித்துள்ளது.  சோழர் ஆட்சியில் குதிரைச்செட்டிகள் என்றொரு வணிகக்குழு உருவாகு மளவிற்கு இவ்விலங்கின் தேவை இருந்துள்ளது.13   பல நூற்றாண்டுகளாக அரசியலில், ஆட்சியில், போரில் வேகமாகப் பங்காற்றிய குதிரைகள் காலனிய காலத்தில் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் வந்திறங்கியவுடன்  வேடிக்கை காட்டும் பொய்க்கால் குதிரைகளாயின. 
 
கருத்தியல்
 
தமிழகத்தின் வரலாற்றில் சங்க காலத்தினைத் தொழில்நுட்பரீதியாக இரும்புக்காலம் என்றும், கருத்தியல் ரீதியாக வீரயுகக்காலம் என்றும், வரை யறுக்கலாம்.  இதன் விளைச்சலே செம்மொழிப்பாக்களும், தொல்லியல் சான்றுகளும்.  அதனையட்டிய காலத்தி லேயே அரசுருவாகும் முயற்சிகள் எழுந்தன.  இதன் விளைச்சலே பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளும், பல்லவர் செப்பேடுகளும்.  தொடர்ந்துவந்த பக்தி இலக்கியத்தின் பிரதிகளில் தமிழ்ச் சமூகத்தின் கலாபூர்வமான நுண்ணிய விவரங்கள் உள்ளன.  தேவாரம், திருவாசகம் பாடல்களில் மொழி, இசை, பாடல், கீதம், ஓதல், நடனம், நாட்டியம், ஆடல், கூத்து, நிருத்தம் போன்ற சொற்கள் நுண்ணிய கலைக்கல்வியினை வெளிப்படுத்துகின்றன.14 இவற்றின் முப்பரிமாண வெளிப்பாடுகளே பல்லவர், பாண்டியர், சோழர் காலத்துக் கோவில்களில் நிலைத்து நிற்கும் கற்சிலைகளும், பொற்சிலைகளும்.  இக்காலகட்டத்தின் கருத்தியல் இறைவனை முன்வைத்து உருவாக்கப் பட்டுள்ளது. அவை :
 
(1) மேற்சொன்ன கலைவளர்ச்சி
(2) இதற்குப் பின்னணியான வேளாண் வளர்ச்சி.  
 
இவையிரண்டுமே அக்கால கட்டத்தின் சமூக வளர்ச்சி எனலாம்.  பொருளியல் பெருக்கம் கலைப் பெருக்கமாக உருவெடுத்தது. இதனை ஒரே வரியில் சொல்வதானால் குமிழ்சிரிப்புடன் நாட்டரசர் நடராஜர் தோன்றுவார்; ஆனால் அவரின் தாளடி மிதியில் முயலகன் தப்ப முடியாமல் நெளிவார்.  சில இடத்தில் முதுகில் மிதிப்பார்; சில இடத்தில் தலையிலேயே மிதிப்பார் (தொ.பரமசிவன்,நாள் மலர்கள், 2010.ப.62).  இதுதான் அன்றைய உழுகுடியின் நிலையாகும்.
 
இசையுடன் கூடிய ஆடல், பாடல், போன்ற வையும் தொழில்நுட்பமே.  இந்நுட்பத்தினையே நாயகன் நாயகி பாவத்துடன் பக்தி இயக்கம் என்ற கருத்தியல் பயன்படுத்தியுள்ளது.  இக்காலத்திய சிற்பத்தொகுதிகளிலும், படிமங்களிலும் படிந்துள்ள நுணுக்கமான நடன அசைவுகளுக்கும், முகபாவங்களுக்குமான பாவங்களை நடனம், நாட்டியம், நிருத்தம் போன்றவற்றின் மூலம்  சிற்பிகளின் முன்னே மாதிரிகளாக நின்று வெளிப்படுத்தி யோர் (models) அக்கலைகளில் நன்கு பயிற்சி பெற்றோ ராகவே இருந்திருப்பர்.  இவ்வுணர்வுகளை இசையின் மூலமும், பாடல் அசைவுகளின் மூலமும் வெளிப்படுத்தியிருப்பர்.  
 
இதற்கான பயிலரங்குகளே பொன்னம்பலங்களும், வெள்ளியம்பலங்களுமாகும். இவ்வனைத்துக் கூறு களையும் தேவாரமும், திருவாசகமும் பதித்துள்ளன.   பாடல் பெற்ற தலங்களில் உள்ள நடனச் சிற்பங்களின் முகச்சாயல்கள் ஒரே மாதிரியாக இல்லை.   அவற்றுக்கான (models) வேறுவேறானவர்கள் என்பதனையே இது உணர்த்தும்.  தஞ்சாவூர் பெரியகோயிலின் விமானத் தளத்தின் உட்கூட்டுச் சுற்றாலையிலுள்ள நடன முத்திரையினை வெளிப்படுத்தும் கல்லுருவங்களின் சாயல்கள் ஒரே மாதிரியானவை அன்று.  “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் குமிழ்சிரிப்பும் பனித்தசடையும் பவளம் மேல் மேனியும்” என்ற அடி களாரின் வருணனை சிவபெருமானைக் கண்ணுற்றதன் வெளிப்பாடு என்று கருதவியலாது.  உள்ளக்கிடக் கையில் புகைந்திருந்த கலாரசனையின் வெளிப்பாடு என்று கருதலாம்.
 
குறிப்புகள்
 
1.இவ்வரலாற்றுப் போக்குகளுக்கு மனிதச் சமூகம் மட்டும் காரணமன்று; இயற்கையுமாகும்.  இயற்கையுடன் இயைந்து வாழும் தாவரங்களும், விலங்கினங்களும் (பறவையுட்பட) பூமிக்குள் கிடைக்கும் கரிமப்பொருள்களும், கனிமப் பொருள்களும் காரணங்களாகும்.  இம்மதிப்புமிகு பொருள்கள் மீதான உரிமைகளைக் கொண் டாடவே மனிதக்குழுக்கள், மொழி, இனம், சாதி என்ற கருத்துகளை முன்வைத்துத் தமக்குள் போட்டியிடுகின்றன. இவையே வரலாறாக அறியப்படுகிறது.  பிறிதொரு நிலையில், இயற்கை உணவினையும், உணவினை உற்பத்திசெய்யும் உற்பத்தி மூலங்களான நிலம், நீர், கால்நடைகள் போன்றவற்றையும் தக்கவைத்துக்கொள்வதற்காக மனிதக்குழுக்களிடையே நிகழும் சண்டைகளே வரலாறு எனலாம்.  மண்ணின் மேல் விளைந்த மணப்பொருள் வணிகத்திற்கே ஐரோப்பியர் கீழை நாடுகளுக்குப் பயணித்தனர்.   இது உலக வரலாற்றில் காலனியத்தினை உருவாக்கியது.  அபின் என்ற போதைப் பொருளினை முன் வைத்தே சீனாவிற்கும், பிரிட்டிஷாருக்கும் சண்டைகள் எழுந்தன.  அவை அபினிச் சண்டைகள் என்று அறியப்பட்டன (1839-1842).   பருத்தி விளைச்சலுக்கான நிலங்கள் அபினுக் காகவும், தேயிலைக்காகவும் மாற்றப்பட்டன.  காலனியத்தின் கூறாகத் தமிழகத்தில் சமய மாற்றங்கள் நிகழ்ந்தன. இதன் விளைவாக அடித்தளமக்கள் ஓரளவிற்கு சமூக உரிமைகளைப் பெற்றனர்.   ஆனால், தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற பணப் பயிர்களின் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதால் மண்ணின் மைந்தர்கள் ஐரோப்பியர்களின் தோட்டங்களில் அடிமைகளாயினர்.  அவர் களுக்கு மதம் கிடைத்தது; மீட்பர் கிடைக்க வில்லை.   ஆனால், ஆங்கிலோ-இந்தியன் என்ற கலப்பினம் பிறிதொரு வகையில் உருவாக வழி விட்டது. இது பணப்பயிர்களினால் உண்டான சமூகப்போக்காகும். பிஜி, தென் அமெரிக்கா, கிழக்கிந்தியத் தீவுகள் போன்ற நிலப்பிரதேசங் களின் பணப்பயிர்த் தோட்டங்களில் அடிமை களாக உழைப்பதற்கு ஐரோப்பியர் தமிழர்களை இழுத்துச் சென்றனர்.  வெற்றிலை என்ற பணப் பயிரினால் கொடிக்கால் பிள்ளமார் என்ற ஒரு சாதி தமிழகத்தில் உருவாயுள்ளது (எட்கர் தர்ஸ்டன், தொகுதி,3.பக்.386-387).
 
2. தமிழகத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அகழாய்வு இடங்களில் இரும்பினாலான பல கருவிகள் `கிடைத்துள்ளன.  இவை பெரும்பாலும் தெற்கு, மேற்கு வடமேற்கு நிலப்பிரதேசங்களில் கிடைத்தன. ஆதிச்சநல்லூர், சித்தன்னவாசல், கொடுமணல், கிருஷ்ணகிரி போன்ற இடங்கள் பிரதானமானவை.  இக்கருத்தினை விளங்கிக் கொள்ள கா.இராஜன் முதலியோர் வெளியிட்ட இரட்டை நூல் பயனுள்ளத (K.Rajan, (et al),2009). பாறைக்கல்வெட்டுகள், பானையோடுகள், செம்மொழிப்பாக்கள் மூன்றிலும் ஒரே மாதிரியாக பதிக்கப்பட்ட பெயர்ச்சொற்கள்பற்றிப் பிறிதொரு கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது (பார்க்க: கி.இரா.சங்கரன், 2013).
 
3. எட்கர், தர்ஸ்டன், தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி. 2. ப. 488. தொகுதி.3. ப.473, 240. பக்தவத்சல பாரதி, தமிழகப் பழங்குடிமக்கள், ப.112; வீ.மாணிக்கம், தமிழர் வாழ்வியல் (கி.பி.300வரை) ப.426.
 
4.பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை முதலில் மேற் கொண்டிருந்தாலும், பேரா.பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி தமிழ்ச்செம்மொழி இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ள வட இந்திய புராணக்கடவுள் பெயர்களை சம்ஸ்க்ருத இலக்கியச் சான்று களுடன் பொருத்தி ஆய்ந்துள்ளார்.  புராணக் கடவுளரின் பெயர்கள் தெள்ளிதாகத் தமிழாக்கப் பட்டுள்ளதனைச் செம்மொழிப்பாக்கள் உணர்த்து கின்றன. இதனைத் தமிழர்கள் வடக்கினைத் தமிழ்ப்படுத்தி உள்வாங்கினர் எனலாம். அவற்றைத் தம் நூலில் சம்ஸ்க்ருத ஸ்லோகங் களுடன் ஒப்பிட்டுள்ளார். பிராமி கல்வெட்டகளில் கூட பிராகிருதச் சொற்கள் தமிழ்ப்படுத்தப் பட்டுப் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், சம்ஸ்க்ருத சொற்கள் பொருள் பிறழாமல் தமிழாக்கப்பட்டுள்ளன.  அவை கீழே தரப்பட்டுள்ளன.
 
பிரும்மா
 
தொடங்கற்கட்டோன்றிய முதல்வன் (கலி:2), மலர்மிசை முதல்வன் (பரி:8,3), நான்முக வொருவன் (முருகு:164), முக நான்குடையான் (இனி:1).
 
திருமால்
 
அஞ்சன உருவன் (புறம்:174), திருமரு மார்பன் (கலி:104), மாயவன் (கலி:145), மாயோன் (தொல்:அகம்,5), தாமரை புரையுங் கண்ணன் (பரி :14, 49), புண்மிசைக் கொடியோன் (பரி:62).
 
சிவபிரான்
 
ஈர்ஞ்சடையந்தணன் (கலி:38), பிறங்கு நீர் சடைக்கரந்தான் (கலி:159,9), பிறை நுதற் பொலிந்த சென்னி (புறம்:91,5), முக்கட்செல்வர் (புறம்:6.18), முக்கண்ணன் (கலி:2,4), கண் மூன்றுடையான் (இனி:1), 
 
மழுவானெடியோன் (அகம்:220), மணிமிடற்றோன் (புறம்:56,2), புங்கவமூர்வோன் (பரி:8,2), நீலமணிமிடற்றோன் (புறம்:91,6), மணிமிடற்றண்ணல் (பரி:8,127,9,7), காரியுண்டிக்கடவுள் (மலை:83), காய்கடவுள் (பரி:5,13), 
 
கொலைவன் (கலி:103,15). (இச்சான்றுகளை எடுத்தாள்வதற்கு பேரா.பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரிக்கு பெரிதும் இக்கட்டுரையாளர் கடமைப்பட்டுள்ளார்).
 
5. உலகம் முழுதும் நிலவிய வீரயுக இலக்கியங்களின் பொதுக்கூறுகளைத் தமிழ்ச்செம்மொழி இலக்கியக் கூறுகளோடு பொருத்திப் பார்த்து உலக இலக்கியத் தளத்தில் தமிழ் இலக்கியத்தின் இடத்தினை அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.  க.கைலாசபதி செம்மொழிப்பாக்களில் உள்ள வீரயுகக் காலத்தின் இலக்கியக் கூறுகளை கிரேக்க இலக்கியக் கூறுகளுடன் பொருத்தி ஆய்ந்து தமிழ் இலக்கியக் கூறுகள் உலகத்தரத்திற்கு இணையாக உள்ளன என்பதனையும், வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கொள்கைக்கு ஒவ்வி இவ்விலக்கியங்கள் எழுந் துள்ளன என்றும் நிறுவியுள்ளார். வேல்ஷ், டியூடானிக், கிரேக்க இலக்கியங்களில் மன்னர்-கவிகள், கவி-இளவரசர்கள் (poet-kings, poetprinces) பாக்கள் இயற்றியுள்ளனர் என்று அறிய முடிகிறது. (க.கைலாசபதி, ப.56).  இதற்கு இணையான மன்னர்-கவிகளாக, ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன், கோப்பெருஞ்சோழன், சேரமான் கணைக்கால் இரும்பொறை, பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன், பாண்டியன் தலையாலங்கானத்துப் பாண்டிய நெடுஞ்செழியன், பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ போன்றவர்களைச் சொல்லலாம்.  கெல்டிக் மொழியின் இலக்கிய மரபில் ஆற்றுப்படுத்திய வரின் இறப்பினைத் தாளாது மரணித்துக்கொண்ட புலவரின் இயல்பினைக் கோப்பெருஞ்சிங்கன் - பிசிராந்தையார் உறவோடு க.கைலாசபதி ஒப்பிடுகிறார் (க.கைலாசபதி,ப.59).  தமிழக வரலாற்றில் தந்தைக்கும்-மகனுக்குமான சண்டை மரபினை ஜெர்மன் மொழியின் இலக்கியத்திலுள்ள Hilderbrand, Halderbrand என்ற கதாபாத்திரங்களோடு ஒப்பிடலாம் (C.M.Bowra,1964, p.3).Sigurth என்ற  வாள் Gram என்று சுட்டப்பட்டதனை இராமன் ஒடித்த சிவதனுசு என்ற பெயருடன் ஒப்பிடலாம்.
 
6. பல்கண்ணன் (நற்றி:200,380) ஐயிறு நூற்று மெய்ந்நயனத்தவன் (பரி:9,8; முருகு:155) என்று செம்மொழிப்பாக்களில் பதியப்பட்டுள்ள சொற்கள் இந்தியப் புராண வரலாற்றில் இந்திரனின் நடத்தையினையும், பிந்நாட்களில் வள்ளுவர் வலியுறுத்தும் பிறனில் விழையாமை என்ற கருத்தினையும் இந்திய மனோபாவமாக வெளிப்படுத்துகின்றன.  பிறனில் விழையாமை என்ற இக்கருத்தின் மூலம் வள்ளுவர் ஒரு மாதிரிச்  சமூகத்தினை உருவாக்க முயன்றார் எனலாம்.   இந்திய இலக்கியங்களில் தொடர்ந்து பிறனில் விழையாமை என்ற கருத்து வலியுறுத்தப் பட்டும் இலங்கை அரசனின் அரசியினைத் தமிழகத்து வேந்தன் இழுத்துவந்தான் என்று ஏன் உரைக்கப்படுகிறது.  முதல் ராஜாதிராஜன் (1018-1054) ஆட்சிக்காலத்தில் இலங்கையரசன் விக்ரம பாண்டியன் என்பவனை வென்ற ஜகதீபாலன் என்பவனை கி.பி.1047-இல் கொன்று அவன் மனைவியினையும், மகனையும், பிற செல்வங் களையும் சோழநாட்டுக்குக் கொண்டுவந்தான் என்று மகாவம்சம் கூறுகிறது என்றும் அதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது (தி.வை.சதாசிவ பண்டாரத் தார், பிற்காலச் சோழர்வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974,ப.203).
 
இந்திய இலக்கியத்தில் சீதை மட்டுமே திருமணத்திற்குப் பின் கடத்தப்பட்டவர் 1990 களில் இந்தியாவில் ஒரு அமைச்சரின் மகள் கடத்தப்பட்டார். இப்படி, வடக்கும் தெற்கும் மாறி மாறிப் பெண்களைக் கடத்தி யுள்ளது. தென் கிழக்காசியாவின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட ராமாயணக் கதாபாத்திரங் களின் கூறுகளை ஒப்பாய்வு செய்து அவற்றுக் கிடையேயான பொதுக்கூறுகளைத் தம் ஆய்வில் அ.அ.மணவாளன் வெளிக்கொணர்ந்தார்.  வால்மீகியின் பாலகண்டம் அகல்யா இந்திரனை வரவேற்றாள் என்று கூறுகிறது என்கிறார் (ப.147).  அவள் குற்றமற்றவள் என்று வங்காளி ராமாயணம் கூறுவதாக உரைக்கிறார் (ப.147).  கம்பர் அவளை கவ்தமன் குரலில் விலைமகள் அனைய நீ என்று குற்றம் சாட்டுகிறார்; ராமனின் வாயால் அன்னை என்கிறார் (149-150).  லாவோசிய ராமாயணத்தின் படி இந்திரன் வடிவம் தாங்கிய ராவணன் இந்திரன் மனைவியைக் கற்பழித்தான்.கம்போடிய ராமாயணமும் இக்கதையினையே கூறுகிறது (ப.170). ராவணனின் மாண்பு இப்படிச் சீரழிந்துள்ளது.
 
7. ஒரு திராவிட மொழியியல் அறிஞரான பேரா. வ.அய்.சுப்பிரமணியம் இலக்கியச் சான்றுகளுடன் கல்வெட்டுச்சான்றுகளையும் கலந்தாய்ந்து கல்லணை கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று முடிவு காண்பார் (வ.அய்.சுப்பிரமணியம், காவிரியாறு-தமிழிலக்கி யத்திலும் கல்வெட்டுகளிலும் வீஸீ வ.அய்.சுப்பிர மணியம் கட்டுரைகள் (ப-ர்:ஜெயா அரிகரன்), 2007.பக்.150-170.
 
8.A.Veluppillai, Study of the Dialects in Inscriptional Tamil, DLA, University of Kerala, 1979 pp.1097-1098.
 
9. எ.சுப்பராயலு, மண்கலத் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள், ஆவணம், இதழ்:19,2008. பக்.189-221.
 
10.ஆசியக் கண்டத்தின் மத்திய கிழக்குப் பகுதியில் பன்றிகள் தங்களுக்குத் தேவையான கொட்டைகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை மிகையாக உண்பதால் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதனுக்குப் போட்டியாக அமைந்தன.  இதுவே யூதர்களும், முஸ்லிம்களும் பன்றிகளை வெறுப் பதற்குக் காரணமாக இருக்கலாம் என்று  ஹாரிஸ் மார்வின் வாதிடுகிறார் ( Harris Marwin, Collection of Essays on various Topics, I edition, translated into Tamil by Thukkaram Gopalrao, Any Indian Pathippagam, 2005,p.64.ff ).
 
11.இச்சூழலில் காலங்காலமாகத் தென்மாவட்டத்தி லிருந்து வடமாவட்டங்களுக்குப் புலம் பெயரும் கால்நடைக்குடிகளின் நிலையினை அறிய வேண்டும். காலங்காலமாக இக்கால்நடைக் குடிகள் புரட்டாசி முதல் தைமாதம் வரையிலான பருவத்தில் (மாரிக்காலம், பனிக்காலம்) புலம் பெயர்ந்து புதுக்கோட்டை வட்டாரத்தில் கிடை போடுவர்.  தென்மேற்குப் பருவக்காற்று புதுக்கோட்டை வட்டாரம் வரை வீசியடிக்க வாய்ப்பில்லை.  இவ்வட்டாரத்தில் ஆடுகள் மந்தைகளாக நோயுற்று இறந்ததாகப் பதிவுகள் இல்லை. எனவே, இதனின்றும் தப்பவே கால் நடைக்குடிகள் வடக்கு நோக்கிப் புலம் பெயர்ந் தனரோ என்று கருதவேண்டியுள்ளது. இக்கால் நடைக்குடிகள் மாரிக்காலங்களில் அடுத்து காவிரிபாயும் டெல்டா மாவட்டங்களுக்குப் புலம் பெயர்வர்.  இதற்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். டெல்டா மாவட்டங்களில் இச் செம்மறியாடுகள் உண்ணப்படுவதில்லை.அதனால்,ஆடுகள் திருடுபோக வாய்ப்பில்லை.புதுக்கோட்டை வட்டாரத்தில் ஓரிருமுறை ஆட்டுத்திருட்டினால் கிடைபோடும் கீதாரிகளுக்கும், பிறசமூகத்தினருக்கும் 1970 களில் வெட்டு, குத்து சண்டைகள் நிகழ்ந்தது உண்டு.   (இச்செய்திகள் கள ஆய்வில் திரட்டப்பட்டன).
 
12.சிவபெருமானைச் சுற்றித்தழுவும் பாம்பு வெவ்வேறு வகையில் தேவாரத்தில் சுட்டப்பட்டுள்ளது.  நாக மரைக்கசைத்த (அப்பர், புக்கதிருத்தாண்டகம். பாடல்.2), ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா அசைத்தானை (அப்பர், 6-ஆம் திருமுறை, திருத்தாண்டகம் பாடல்.6, திருப்பூந்துருத்தி).  இங்குக் கவனிக்க வேண்டியது முதற்குறிப்பு நாகப் பாம்பினைச் சுட்டுகிறது.  இது ஆணா? பெண்ணா? இரண்டாம் குறிப்பில் பெண்பாம்பான வாசுகி சுட்டப்பட்டுள்ளது.  பிறிதொரு பாடலில் மூக்கம் பாம்பொன்றார்த்தவனை (திருகற்குடி: பாடல்.1) என்று சுந்தரர் சுட்டுகிறார்.  அப்பரோ மூவாத மூக்கம்பாம்பரையிற் சாத்தி என்று சிவன் தோற்றத்தினை வரைகிறார் (திருவலம்பரம்: 6-ஆம் திருமுறை, பாடல்.4).  7-ஆம் திருமுறையில் சுந்தரர் மூக்கம்பாம்பைக் கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர் என்று சிவனை வருணிக்கிறார் (சுந்தர, திருப்பரங்குன்றம்,பாடல்.12). எனவே, மூன்று வெவ்வேறு வகையான (species) பாம்பு களைச் சிவன் அணிந்துள்ளதாக நாயன்மார்கள் வருணித்துள்ளனர் எனலாம். திருப்பழனம் என்ற தலத்தின் பாடற்குறிப்பில் பாக்கம்பாம்பினைப் பற்றும் பழனத்தான் என்று (பாடல்.4) சிவன் வருணிக்கப்படுகிறான்.   சில பாடல்களில் கதிர்ப் பொறி அரவம் என்றும் (அப்பர், 4-ஆம் திருமுறை, பாடல்.1), கிளர்பெரியரவம் பைம்பூண் தோளலால் துணையுமில்லை என்றும் திருவை யாற்றில் உறையும் சிவனையும் அப்பர் போற்றுகிறார்.  திருநாரையூரில் புள்ளிகொண்ட புலியுரி யாடை அணிந்தவன் என்று வருணிக்கிறார்.   
 
புள்ளி கொண்ட புலி என்பது இங்குச் சிறுத்தைப் புலியினையோ சிவிங்கிப்புலியினையோ குறிப்பதாகக்கொள்ளலாம்.  புள்ளிமான் பெரி அரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப் பள்ளியான் என்று பிறிதோரிடத்தில் அப்பரால் சிவன் வருணிக்கப்படுகிறார் (அப்பர். திருப்பழம், பாடல்.6).  இங்குச் சுட்டப்பட்டுள்ள மிகு நஞ்சுள்ள பாம்புகளும், சிறுத்தையும் வேட்டை விலங்குகளே.அடக்கமுடியாத பாம்பினை அரவணைத்துச் சூடிக்கொள்கிறார்; அடங்கிப்போன காளையினை அடிமையாக்கி சவாரி செய்கிறார்.   படுத்துப்பணிந்த முயலகனை மிதித்தே நிற்கிறார்.   காளியனுச்சியில்  நட்டம் பாய்ந்து (621) காளியந் தலை மிதித்தது (716) என்று மாயோன் வணங்கப் படுகிறான் (நாலாயிரதிவ்வியப் பிரபந்தம், 1993,பாகம் 1.)
 
13.தென்னிந்தியாவினுடனான அரபியர்களின் குதிரை வணிகமே சோழர் அரசு விரிவிற்குக் காரணம் என்றும், இக்குதிரைச்செட்டிகள் மலைநாடு (இன்றைய கேரளா) பகுதியில் இருந்து வந்தோர் என்பது பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் கருத்து.  கடம்பர்கள், பல்லவர்கள் காலத்திலேயே குதிரை இறக்குமதி செய்யப் பட்டதென்றும் கல்வெட்டுச்சான்றுகளுடன் விளக்குகிறார் (K.A.Nilakanta Satri, The Colas,1984,p.612.fn.no.73).
 
14.பக்தி இலக்கியத்தின் வாயிலாகத் தமிழகத்தில் இடைக்காலத்திய கோயில்கள் சமய நிறுவனமாக மட்டுமின்றிக் கலைக்கல்விக் கூடங்களாக இயங்கி யுள்ளன.  இவையனைத்தும் இறைவனின் பெயரால் நிகழ்ந்துள்ளன.  இறைவனே கலையின் தலைவனாகவும், கற்பிப்பவனாகவும் காட்டப் படுகிறான்.  இறைவன் ஓதியும், பாடியும், இசைத்தும், நடந்தும், ஆடியும் கற்பித்ததாக அடியார்கள் உணர்த்தியுள்ளனர்.
 
வேதம் வெவ் வேறு வகையில் கற்பிக்கப்பட்டது என்பதனை ஓதினார் வேதம் வாயில் என்றும், ஓதியே உணர வைத்தார் என்றும், நான்மறைகள் பாடினார் என்றும், சாமவேதங் கூத்தொடும் பாடவைத்தார் என்றும், வேதங்களோதியோர் வீணையேந்தி என்றும், நான்மறைகள் பாடினான் என்றும் அமைந்த பாடல் வரிகள் விளக்குவன. இறைவன் கூத்தன்,கூத்தாடுவான், கூத்துடையான், அம்பலக் கூத்தன் என்றும் தில்லைவாழ் கூத்தன் என்றும் நிருத்தன் என்றும் மாணிக்கக்கூத்தன் என்றும் மணிவாசகரால் வருணிக்கப்படுகிறான்.  அப்பரோ இறைவனை நட்டமாடுவார், நிருத்தனார் என்றும் கூத்தாடுங்குணமுடையான் என்றும் வருணிக்கிறார்.பிறிதோரிடத்தில் கூத்தொடும் பாடவைத்தார் என்கிறார்.இங்கும் கூத்தும் பாடலும் இணைவதைக் கவனிக்க வேண்டும்.நேரபாடல், சீர்பாடல், சிலம்பாடல், கீதங்கள் பாடுதல், மணிவார்த்தை, திருவார்த்தை போன்ற சொற்களை மாணிக்கவாசகர் பயன்படுத்தி யுள்ளமை பாடலில் பல உத்திகள் இருந்துள்ள தனை விளக்குவன எனலாம்.
 
இன்னிசைவீணை, இடங்கைவீணையேந்தி, வேதங்களோதியோர்வீணையேந்தி, பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவன், பண்ணார்ந்த வீணை பயின்றவன், வீணையோடிசைத்தமிருபாடல், வேதத்தின் பொருள்கொள் வீணை, கைகிளரும் வீணைவலவன் போன்ற விவரணைகள் வீணை பயிற்சியினையும், வீணை கற்பிப்பதனையும் உணர்த்துவன என்றே கொள்ளலாம்.  
 
மதுரவாய் மொழி, பாலொத்த மென்மொழி, பாலையமொழி, பண்ணின் இன்மொழி, வாயாரப்பாடி, தமிழோடிசைப்பாடல் போன்ற சொற்கள் பேச்சின் உத்திகளை விளக்குவன எனலாம். கீதங்கள் பாடவைத்தார், பண்ணினைப் பாட வைத்தார், பத்தர்கள் பயிலவைத்தார், ஓதியே உணர வைத்தார், என்றும் பாணில் வீணைப் பயின்றவன் என்றும் இறைவன் கற்றும் கற்றுக் கொடுத்தான் என்றும் தேவாரம் விளக்குகிறது. இப்படி இறைவன் பெயரால் இடைக்காலத்தியக் கோயில்கள் கூத்தும் கொண்டாட்டமாயும் இயங்கியுள்ளன (மேலே தரப்பட்டுள்ள குறிப்பு களை இங்குச் சுட்டிக்காட்டுதற்கு அடியார்களுக்குக் கடப்பாடுடையோம்).
 
நூற்பட்டியல்
 
முதன்மைச் சான்றுகள்
 
திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம் (தலமுறை) திருமுறை: நான்கு முதல் ஆறுவரை, திருப்பனந்தாள், 1995.
 
நாலாயிரதிவ்யப் பிரபந்தம், பாகம்-1, தி லிட்டில் பிளவர் கம்பெனி (மறுஅச்சு), சென்னை,1993.
 
மாணிக்கவாசகர், திருவாசகம், தருமபுரம்,1949.
 
சுட்டு நூல்கள்
 
சங்கரன்,கி.இரா. இரும்புக்காலமும் சங்க இலக்கியமும், உங்கள் நூலகம்,2013, சுப்பராயலு,எ. மண்கலத் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள், ஆவணம்,இதழ்:19.2008.பக்.189-221.
 
சுப்பிரமணியம், வ.அய். தமிழும் சமஸ்கிருதமும் வீஸீ வ.அய்.சுப்பிரமணியம் கட்டுரைகள்:மொழியும் பண்பாடும் (பர்:ஜெயா அரிகரன்), அடையாளம், 2007, பக்.13-18.
 
... வியாசர் பாரத ஏடுகளில் தமிழ் இலக்கியத் தாக்கத்தைக் காண இயலுமா?  வீஸீ  வ.அய்.சுப்பிர மணியம் கட்டுரைகள்:மொழியும் பண்பாடும் (பர்:ஜெயாஅரிகரன்), அடையாளம்,2007,பக்.19-26.
 
சாஸ்திரி, சுப்பிரமணிய, றி.ஷி. சங்க நூல்களும் வைதீகமார்க்கமும், திருச்சினாப்பள்ளி,1961.
 
பாரதி, பக்தவத்சல, தமிழகப்பழங்குடிகள், அடை யாளம், புத்தாநத்தம்,2008.
 
பண்டாரத்தார், சதாசிவ, தி.வை. பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1974.
 
பரமசிவன், தொ. நாள் மலர்கள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை,2010.
 
மணவாளன், அ.அ.இராமகாதையும் இராமா யணங்களும் முதல் தொகுதி (இரண்டாம் பதிப்பு), தென்னக ஆய்வு மையம், சென்னை, 2012.
 
மாதையன், பெ. சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 2007.
 
மாணிக்கம், வீ. தமிழர் வாழ்வியல் (கி.பி.300 வரை), Clio Publications, Madurai, 2010
 
மார்வின், ஹாரிஸ், பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சார புதிர்கள் (தமிழ் மொழிபெயர்ப்பு : துகாராம் கோபால்ராவ்), பாகம்,1, எனி இந்தியன் பதிப்பகம், சென்னை, 2005
வையாபுரிப்பிள்ளை, எஸ். தமிழும் வைதிக வார்த்தைகளும் வீஸீ வையாபுரிப்பிள்ளை நூற் களஞ்சியம், இரண்டாம் தொகுதி வையாபுரிப் பிள்ளை நினைவு மன்றம், சென்னை, 1989.பக்.227-248.
 
Bowra, C.M.Heroic Poetry, MacMillan & Co Ltd.London,1964.
 
Kailasapathy, K. Tamil Heroic Poetry, Oxford University Press, London,1968.
 
Rajan, K (et al), Catalogue of Archaeological Sites in Tamilnadu, Vols, Thanjavur, 2009.
 
Velupillai, A. A Study of the Dialects in Inscriptional Tamil, DLA, University of Kerala, Kerala, 1979.
 
Sastri, Nilakanta,K.A. The Colas, (reprinted),University of Madras, 1984.
Pin It