davidhardiman 450"ஆங்கிலக் காலனியத்திற்கு எதிராக நிகழ்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தை, (அ) நிலப்பிரபுக்கள், குறுநில மன்னர்கள், பெரும் நிலப்பகுதியை ஆண்ட மன்னர்கள் நிகழ்த்திய போராட்டங்கள், (ஆ) சுதேசி இயக்கம், (இ) பயங்கரவாதப் புரட்சி இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள் எனப் பகுப்பது ஒரு பொதுவான மரபு.

இவற்றில் இருந்து வேறுபட்ட மக்கள் இயக்கமாக 1920இல் தொடங்கி 1947-இல் இந்திய விடுதலை வரை நிகழ்ந்த இந்திய விடுதலை இயக்கமாக காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி நடத்திய இயக்கத்தை நம் கல்விப்புல வரலாற்றுப்பாடம் கற்றுக் கொடுத்து வருகிறது. இவ்வியக்கத்தின் சிறப்புத் தன்மையாக வன்முறை அற்ற அறப்போராட்டம் சுட்டிக்காட்டப்படுகிறது. அஹிம்சை (Non-Violence) என்ற சொல் வரலாற்றுக் கலைச்சொல்லாக இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. வன்முறையற்ற அறப்போராட்டத்திற்கும் இந்திய விடுதலை இயக்கத்திற்குமான உறவு 1905-1919 காலகட்டத்தில் எவ்வாறு இருந்தது என்பதை இங்கு அறிமுகம் செய்யும் நூல் எடுத்தியம்புகிறது."

நூலாசிரியர்

நவீன கால இந்திய வரலாற்றாசிரியர்களில் புறக்கணிக்க இயலாத ஒருவர் டேவிட் ஹார்டிமேன். ‘கீழ் இருந்து வரலாறு’ (History from Below) என்ற கருத்தை முன் வைக்கும் அடித்தள மக்கள் வரலாறு (Subaltern Studies) என்ற வரலாற்றுக் கருத்துப்பள்ளியை உருவாக்கியோரில் இவரும் ஒருவர். இராவல்பிண்டியில் 1949ஆவது ஆண்டு அக்டோபரில் பிறந்த இவர் இங்கிலாந்தில் உள்ள இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்று பட்டம் பெற்றவர். சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய வரலாற்றில் டி.பில். ஆய்வுப்பட்டம் பெற்றவர்.

1830-1940 காலத்தில் இங்கிலாந்தில் நிகழ்ந்த சாசன இயக்கத்தை (Chartist Movement) சிறப்புப் பாடமாகப் பயின்றவர். இங்கிலாந்திலும், உலக அரங்கிலும் புகழ் பெற்ற எரிக்ஹாப்ஸ்பாம், இ.பி. தாம்சன், கிரிஸ்டோபர்ஹில், ரோட்னி ஹில்டன் ஆகிய சமூக வரலாற்றாய்வாளர்களின் நூல்களைப் பழுதறப் பயின்றவர். இந்திய தேசிய இயக்கம், இந்திய சமூக வரலாறு, காந்தி என இந்திய வரலாறு குறித்த இவரது நூல்கள் பரந்துபட்ட களத்தை மையமாகக் கொண்டவை, விரிவானவை. தற்போது வார்விக் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராக (Emeritus Professor) பணியாற்றி வருகிறார்.

நூலின் செய்தி

காந்தியின் தலைமை இந்திய தேசியக் காங்கிரஸால் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன்  இந்திய விடுதலை இயக்கத்தில் நீக்கமுடியாத பெயராக அவரது பெயர் நிலைத்துவிட்டது. இவரையும் இவர் நடத்திய இயக்கங்கள் அல்லது போராட்டங்களையும் மையமாகக் கொண்டே இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு எழுதப்படலாயிற்று. மற்றொரு பக்கம் இத்தகைய வரலாற்று வரைவுகள் குறித்த எதிர்மறையான கருத்துக்களும் உருவாகியுள்ளன.

இந்திய மேட்டிமையோரை மையமாகக் கொண்டே இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு எழுதப்பட்டதாக ரணஜித்குகா என்ற வரலாற்றறிஞர் கருதுகிறார். அடித்தள மக்கள் வரலாறு என்ற கருத்துப்பள்ளியை உருவாக்கி இந்திய வரலாற்றில் அடித்தள மக்கள் பங்களிப்பை சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில் இவர் வெளிக்கொணர்ந்தார்.

இவரது கருத்துப்படி இந்திய தேசியமானது ஆங்கில ஆட்சியாளர்கள் அல்லது மத்தியதர வர்க்கம் சார்ந்த தேசியவாதிகள் என்போரை முன்னிலைப்படுத்தியது. பெரும்பாலான மக்கள் திரளின் அரசியல் உணர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேட்டிமையோரின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோராகவே வெகுதிரளான மக்களைக் கருதினர்.

ஆனால் குடியானவர்களும் உழைப்பாளிகளும் தங்கள் பார்வையில் ஓர் அரசியலைக் கொண்டிருந்தனர் என்பது குகாவின் கருத்தாகும். இதை ‘மக்களின் அரசியல்’ என்று அவர் அழைத்தார். மக்களின் அரசியலானது மேட்டிமையோரின் அரசியலில் இருந்து மாறுபட்டது; எதிர்ப்பையும் கலகத்தையும் உள்ளடக்கியது.

அடித்தள மக்களுக்கு அதிகாரம் வழங்குவதில் அல்லது அதிகாரத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மேட்டிமையோர் ஆர்வம் காட்டவில்லை. நிலக்கிழார்களாகவும், வணிகர்களாகவும், தொழில்முனைவோராகவும் விளங்கிய மேட்டிமையோர்களுக்கு, தனித்த அரசியல் நோக்கம் இருந்தது. இதனால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிகழும் சமூக மாற்றங்களையே அவர்கள் விரும்பினர். இதனால் அடித்தள மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவு செய்யாத நிலையில் போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. இதன் வளர்ச்சி நிலையாக அறப்போராட்டத்தை மேட்டிமையோர் வலியுறுத்தினர். இதன் தாக்கமே ‘சத்யாகிரஹம் சத்தியாகிரஹி’ கலைச்சொற்களை இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்று வரைவுகள் அறிமுகம் செய்தன.

அடித்தள மக்களைக் குறிப்பிடும்போது ‘கும்பல்’ என்ற பொருள் தரும் Mob என்ற ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்பட்டது. அடித்தள மக்கள் பிரிவின் எழுச்சியைக் குறிக்க ‘கும்பல் ஆட்சி’ அல்லது கும்பலுணர்வு என்ற பொருளைத் தரும் Mobocracy என்ற ஆங்கிலச் சொல்லையே காந்தி பயன்படுத்தினார். மற்றொரு பக்கம் அவரது போராட்டம் சத்தியாகிரஹம் என்றழைக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் ‘சத்தியாகிரஹி’ என்றழைக்கப்பட்டனர். (சான்றாக உப்பு சத்தியாகிரஹம், உப்பு சத்தியாகிரஹி)

அதே நேரத்தில் அடித்தள மக்களின் போராட்டங்கள் அரசியல் முதிர்ச்சி அடையாதோரின் போராட்டங்களாகவே பார்க்கப்பட்டன. அரசியல் அமைப்பு நிலையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் தன்மையில்லாத போராட்டங்களாகவே இவற்றை நோக்கினர். இவ்வேறுபாடுகள் இருப்பினும், மேட்டிமையோரின் அரசியலும் அடித்தள மக்களின் அரசியலும் இணைந்து செயல்பட்டுள்ளன. என்றாலும் பொதுமக்களின் எழுச்சியானது பெரும்பாலும் வன்முறையாக வெளிப்பட்டது.

நிலவுடைமை ஒடுக்குமுறைக்கு எதிரான குடியானவரின் எழுச்சி வன்முறை சார்ந்தே வெளிப்பட்டது. இது காந்தியின் அணுகுமுறைக்கு எதிரானது. அவுரி பயிரிடுதலுக்கு எதிரான சம்பரான குடியானவர்கள் போராட்டம் (1917), வைக்கம் போராட்டம் (1924-25), சிவில் சட்ட மறுப்பு இயக்கம் (1930-31) டெல்லி நகரில் 1948 சனவரியில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் என்பன காந்தியின் அஹிம்சை முறைப் போராட்டத்தை வெளிப்படுத்தும் தன்மையன.

இப்போராட்டங்கள் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கில அரசுக்கு எதிராக மட்டுமின்றி ஆங்கிலப் பெருவணிகர்கள், தேயிலை, அவுரி தோட்ட உரிமையாளர்கள் என்போருக்கு எதிரான போராட்டங்களாகவும் அமைந்தன. அத்துடன் ஆங்கில அரசின் நேரடி ஆட்சி நிலவிய பகுதிகளிலும் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் இயங்கிய மன்னராட்சிப் பகுதிகளிலும் செயல்பட்ட, வரிவாங்கும் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், மதுபான உரிமை வழங்கும் அதிகாரிகள், பெருநிலக்கிழார்கள், வட்டித்தொழில்புரிவோர், மதத்தலைவர்கள் ஆகியோருக்கு எதிரான போராட்டங்களாகவும் அமைந்தன.

காந்தியின் அஹிம்சை

காந்தியின் அஹிம்சையானது உடல்மீதான வன்முறையைத் தவிர்ப்பது என்ற நிலையில் மட்டும் செயல்படவில்லை என்பது நூலாசிரியரின் கருத்தாகும். அஹிம்சை தொடர்பான சமண சமய சிந்தனையின் தாக்கத்திற்கு காந்தி ஆட்பட்டிருந்தார் என்பது அவரது கருத்தாக உள்ளது. சமண சமய நோக்கில், சிந்தனை வாய்மொழி, உடல் என்ற மூன்று நிலையிலும் வன்முறையைத் தவிர்ப்பதே அஹிம்சையாகும். இத்தகைய அஹிம்சையையே காந்தி வலியுறுத்தி வந்தார். தென்ஆப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டம் அஹிம்சை நெறி சார்ந்ததே.

தென்ஆப்பிரிக்காவில் (1906-1914)

1893ஆவது ஆண்டில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காக தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு காந்தி வந்தார். சமூகத்தின் மூன்றுவிதமான படிநிலைகளில் இருந்தோர் அவரை நாடி வந்தனர். அவர்கள் முறையே, வாணிபம் செய்வோர், படித்த மத்தியதர வர்க்கத்தினர் கரும்புத்தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் ஏழைகள் என மூன்று பிரிவினர்களாக  இருந்தனர்.

வழக்கறிஞர் தொழிலுடன், அங்கு குடியேறி வாணிபம் செய்து வந்த அய்ரோப்பிய வணிகர்களால் பாதிக்கப்படும் இந்திய வணிகர்களின்  நலன் காக்கும் பணியையும் மேற்கொண்டார். அங்குள்ள டிரான்ஸ்வால் நகரில் வாழும்  இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருந்தது. சொத்துக்கள் வைத்திருக்கவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இலண்டனில் நடந்த பேச்சுவார்த்தையில் காந்தியும், இஸ்லாமியத் தலைவர்களும் கலந்து கொண்டனர் எனினும் உரிய பயன் கிட்டவில்லை.

1907-இல் தென்ஆப்பிரிக்காவில் வாழும்  ஆசிய நாட்டவர் அனைவரும் தம் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதி விதிக்கப்பட்டது. இதன்படி தம் பெயர்களைப் பதிவு செய்ய ஆசிய நாட்டினர் மறுத்தனர். பெரும்பாலோர் பதிவு செய்வதைத் தவிர்த்தனர். இச்செயலே ஓர் அறப்போராட்டமாக மாறியது. பெயரைப் பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் டிரான்ஸ்வாலைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டனர். ஏறத்தாழ, 2000 பேர்வரை கைதாயினர்.

முதல்  தடவையாக, வளமான ஆசிய நாட்டு வணிகர்களுக்காக மட்டுமின்றி, சிறு வணிகர்களாகவும், தெருக்களில் கூவி விற்பனை செய்பவர்களாகவும், வாழ்ந்த இந்தியர்களுக்காகவும், சீனர்களுக்காகவும் காந்தி குரல் எழுப்பினார். இம்மக்கள் பிரிவினர் அதிக எண்ணிக்கையில் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இச்சட்டமானது ஆசிய நாட்டவரது மனித மாண்புகளைச் சிதைப்பதாக தமது ‘இந்தியன் ஒப்பினியன்’ பத்திரிகையில் காந்தி எழுதினார். அவரது வேண்டுகோளின்படி இச்சட்டத்திற்கு எதிராக, பள்ளிவாசல்களிலும் வழிபாடுகள் நிகழ்ந்தன. ஆசாரக்கார பிராமணப் பூசாரிகள் இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.

தெருக்களில் கூவி நின்று பொருட்களை விற்கும் பெரும்பான்மைத் தமிழர்களுக்காக அவர் இதுவரை குரல் கொடுத்தவரில்லை. ஆனால் இப்போராட்டம் ஒரு மக்கள் இயக்கத்தின் தலைவராக அவரை மாற்றிவிட்டது. கடை அடைப்பு, வேலை நிறுத்தம், ஊர்வலம்,  பொதுக்கூட்டம், மறியல் எனப் போராட்டம் பல்வேறு வடிவங்களை எடுத்தது. இப்போராட்டம் தொடர்பாக மக்கள் எழுப்பிய வினாக்களுக்கு தமது ‘இந்தியன் ஒப்பினியன்’ வார இதழின் வாயிலாக, காந்தி விடையளித்தார். போராட்டத்தை ஊக்குவிக்கும் தன்மையிலான கவிதைகளும், பாடல்களும் இப்பத்திரிகையில் இடம் பெற்றன. அத்துடன் இந்தியர்களிடம் மத நல்லிணக்கத்தை உருவாக்கும் பணியையும் இவை மேற்கொண்டன.

சிறைத்தண்டனை வாயிலாக இப்போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது என்பதையும் சிறையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதையும், 1908 சனவரியில் தென்ஆப்பிரிக்க அரசு உணரத் தொடங்கியது. போராடும் இந்தியர்களுடன் உடன்பாட்டிற்கு வரும்படி தென்ஆப்பிரிக்க அரசுக்கு நிர்பந்தங்கள் வரலாயின.

1908 சனவரி 30ஆவது நாளன்று காந்தியை சிறையில் இருந்து அழைத்துச் சென்று தென் ஆப்பிரிக்க அரசின் உயர் வெள்ளை அதிகாரிகளைச் சந்திக்கும்படிச் செய்தனர். இதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி தன்னிச்சையாக இந்தியர்கள் தம் பெயரைப் பதிவு செய்த பின்னர் சிறையில் இருந்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆயினும் குற்றவாளிகள் போன்று கைரேகையைப் பதிவு செய்வதைச் சிலர் விரும்பவில்லை. அனைவரையும் ஒன்று திரட்டி கூட்டம் நடத்திக் கருத்துக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக, காந்தியின் மீது குற்றம் சாட்டப்பட்டது. சில முடிவுகளை எடுக்க தலைவர்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்று காந்தி விடையளித்தார். இருப்பினும் அவர் மீதுள்ள கோபத்தால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார். இத்தாக்குதலில் இருந்து அவர் குணப்பட சில வாரங்கள் ஆயிற்று.

எதிர்காலத்தில் தென்ஆப்பிரிக்காவாழ் ஆசியர்களிடம் தலைமை உருவாவதைத் தடுக்கும் வகையில் டிரான்ஸ்வால் நகருக்குள் படித்த இந்தியர்கள் வருவதை தென் ஆப்பிரிக்க அரசு தடை செய்தது. மே 1908-இல் தென் ஆப்பிரிக்க உயர் அதிகாரியுடன் காந்தி நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. 24 ஜுன் 1908இல் இந்தியர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்று ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்தது. தங்கள் பெயர்களைப் பதிவு செய்ததைத் திரும்பப் பெற்றதுடன் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்தனர். பதிவு செய்தல் தொடர்பான ஆவணங்களை வெளிப்படையாக எரிக்கத் தொடங்கினர்.

MKgandhiattorney 350இச்சூழலில் சத்தியாகிரகம் என்ற சொல்லை காந்தி அறிமுகப்படுத்தினார். இதை மேற்கொள்பவனை சத்தியாகிரஹி என்று குறிப்பிட்ட காந்தி சத்தியாகிரஹி என்பவன்  அச்சத்தில் இருந்து விடுபட்டவனாகவும் மற்றவர்களுக்கு அடிமையாக இருக்க விரும்பாதவனாகவும் இருப்பான் என்று விளக்கமளித்தார்.

அனுமதிச்சீட்டுக்களை எரித்த பின்னர், தேவையான உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்வதை இந்தியர்கள் மேற்கொண்டனர். டிரான்ஸ்வால் இந்தியர்களுக்கு ஆதரவாக நேட்டாவில் இருந்து இந்தியர்கள் வந்தனர். போதிய ஆவணங்கள் இன்றி வந்தமை அல்லது சட்டவிரோதமான வாணிபம் செய்தமை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்  இவர்கள் கைதாயினர். இவ்வாறு கைதானவர்களில் காந்தியின் மகன் ஹரிலாலும் ஒருவர். ஆசியர்களின் பெயர்களைப் பதிவு செய்யும் அலுவலகங்களின் முன்பாக மறியலும் நிகழ்ந்தது.

போராட்டக்காரர்களைக் கைது செய்தல், அவர்களின் கடைகளை மூடுதல், பொருட்களைப் பறிமுதல் செய்தல் என அரசு எதிர்வினையாற்றியது. அதே நேரத்தில்  காவல்துறையினர் அதிகளவிலான வன்முறையைப் போராட்டக்காரர்கள் மீது நிகழ்த்தவில்லை. இப்போராட்டத்தில் இரண்டுமாத சிறைத்தண்டனையை 1908 அக்டோபரில் காந்தி பெற்றார். பிப்ரவரி 1909 இல் மீண்டும் கைதாகி மே இறுதியில் விடுதலையானார். மோசமான உணவு, கடினமான வேலை என்பனவற்றை சிறையில் அனுபவித்த போதிலும் அவர்கள் மன உறுதியுடன் விளங்கினார்கள்.

ஜுன் 1909 இல் தென்ஆப்பிரிக்க வாழ் இந்தியர்கள் அடங்கிய தூதுக்குழு ஒன்றுக்குத் தலைமையேற்று இங்கிலாந்துக்குச் சென்றார். அவர் இலண்டன் நகரை அடைந்த நாளில்தான் மதன்லால் திங்கரா என்ற இந்திய மாணவன் கர்சான் வாவி என்ற ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்றான். கரசான் வாவி இந்தியாவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியாவார். இளம் இந்தியர்களிடம் உரையாற்ற அவரை அழைத்திருந்தனர். அழைப்பை ஏற்று அவர் உரையாற்ற வந்தபோதே இது நிகழ்ந்தது.

இந்நிகழ்வு இந்தியர்கள் மீதான ஆதரவு நிலையெடுப்பதில் இருந்து ஆங்கில அரசைத் தடுத்தது. காந்தி மேற்கொண்ட தூதுமுயற்சி வெற்றிபெறாத நிலையை உருவாக்கியது. வன்முறையின் வாயிலாகவே இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை விரட்டமுடியும் என்ற கருத்துடைய இந்திய இளைஞர்களை இலண்டனில் அவர் சந்திக்க நேர்ந்தது. என்றாலும் அவரது சத்தியாகிரகப் போராட்ட நிலையிலேயே அவர் உறுதியாக நின்றார்.

***

1910, 1911ஆவது ஆண்டுகளில் டிரான்ஸ்வால் இந்தியர்களின் போராட்டம் தொடர்ந்தது. மூவாயிரம் இந்தியர்கள் (மொத்த இந்தியர்களில் 35%) கைதானார்கள் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு வெளியில், கைது உத்திரவுக்குப் பதில் தண்டம் விதிக்கப்பட்டது. தண்டத் தொகையைக் கட்டாவிடில் அவர்களது உடைமைகள் கைப்பற்றப்பட்டு ஏலமிடப்பட்டன. சிறு வியாபாரிகளுக்கு இது பலத்த அடியாக இருந்தது.

அவர்களிடம் அனுதாபம் கொண்ட வெள்ளையர்களிடம் உரிய விலைக்கு தம் கடைகளை விற்றுவிட்டு சாலையோர வியாபாரிகளாக மாறும்படி காந்தி அவர்களுக்குக் கூறினார். வணிகர்களும், மத்தியதரவர்க்கம் சேர்ந்த அலுவலர்களும், தெருவில் விற்பனை செய்வோரும் தொழிலாளர்களும் இப்போராட்டத்தில் தம் வாழ்க்கையையே ஈடாக வைத்தனர். இந்நிகழ்வின்போது பேச்சு வார்த்தைகளும் நிகழலாயின. ஏப்ரல் 1911இல் நிகழும் பாராளுமன்றக் கூட்டத்தில், பெயர்களைப் பதிவு செய்யும் சட்டத்தை மாற்றுவுது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆசிய நாட்டினருக்கு எதிரான இச்சட்டத்தை திரும்பப் பெறுவதில் வெள்ளை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தேக்க நிலை ஏற்பட்டு 1912 வரை நீடித்தது.

1914 ஜுனில் தென்ஆப்பிரிக்கா வாழ் இந்தியர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சட்டம் நிறைவேறியது. இதன்படி இந்தியர்கள் மீது விதிக்கப்பட்ட மூன்று பவுண்ட் வரி நீக்கப்பட்டது. இந்தியர் ஒருவர் தம் மனைவி ஒருத்தியுடன் தென்ஆப்பிரிக்காவில் வாழ அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தென்ஆப்பிரிக்காவில் பிறந்த இந்தியர்கள் சுயேச்சையாக இடம் பெயர அனுமதி வழங்கப்படவில்லை.

தொடரும்

Pin It