‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது.

சாவர்க்கர் 1924-க்கு முன்பு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதுதானே, நாம் அறிந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார் சாவர்க்கர். 1911-லேயே அவர் ஒரு கடிதம் எழுதினார்.

அது இப்போது கிடைப்பதில்லை. ஆனால், 1913 அவர் அனுப்பிய மற்றொரு கடிதத்தில் அந்த முந்தைய கடிதத்தைக் குறிப்பிடுகிறார். கடிதத்தில்,  `அடிபணிதல்’ வாசகங்கள் பளிச்சென்று இருக்கின்றன.

‘To : The home member of the government of India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ‘சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடிய வில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள்.

அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்கு சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்...’ என்று சொல்கிறார் சாவர்க்கர்.

சாவர்க்கரைப் போலவே, பகத்சிங்கும் ஒரு கடிதத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எழுதினார். லாகூர் சிறையில் இருந்து 1931ஆம் ஆண்டு அவர் அனுப்பிய கடிதம் அது. அதில், ‘உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்களை போர்க்கைதிகளாக வகைப்படுத்துகிறது.

ஆம், நாங்கள் போர்க் கைதிகள் தான். ஆகவே, எங்களை நீங்கள் தூக்கிலிடக்கூடாது. மாறாக, துப்பாக்கித் தோட்டாக்களால் சுட வேண்டும்’ என்று அறிவித்தான் அந்த 23 வயது இளைஞன்.

அடுத்து, ‘இந்தப் போர் தொடரும்’ என்று அறிவித்துவிட்டு, ‘எங்களைக் கொல்லப்போகும் ராணுவ அதிகாரிகளை எப்போது அனுப்புகிறீர்கள்’ என்ற கேள்வியோடு அந்தக் கடிதத்தை முடிக்கிறார் அவர்.

கடிதத்தில் ஓர் இடத்தில், குறித்துக் கொள்ளுங்கள். முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நாள்கள் எண்ணப்படுகின்றன. ஒருநாள் இங்கு, சோசியலிஸ சமுதாயம் மலரும்’ என்று கர்ஜிக்கிறான், அந்த மாவீரன்.

கடிதம் முழுவதுமே, அப்படித்தான். அதிகமும் தேசத்தைப் பற்றித்தான் பேசுகிறார் பகத் சிங். இதற்கு லாகூர் சிறையும் ஒன்றும் சொகுசு சிறையல்ல. ஆனாலும், பகத்சிங் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை.

உதிரம் முழுவதும் விடுதலை வேட்கை ஓடும் ஒருவனின் வார்த்தைகள் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கின்றன பகத் சிங்கின் வார்த்தைகள்.

உறைவிட்டெழும் வாளென, நாண் தொட்டு புறப்படும் அம்பென பாய்கின்றன, அவன் சொற்கள்!

அப்படியே சாவர்க்கரின் வார்த்தைகளையும் பார்க்கவும். `நான் இப்படியெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறேன்... கருணை காட்டுங்கள்... நல்ல படியாக நடந்துகொள்வேன்’ என்றெல்லாம் அந்நியனிடம் பணிகிறார் சாவர்க்கர்.

இவர் எப்படி பாரதத்தின் ரத்தினம் ஆவார்? `நீங்கள் என்னை விடுவித்தால், இந்தியாவில் உங்கள் புகழ் பெருகும்’ என்றெல்லாம்கூட ஆங்கிலேயர் களிடம் உருகியிருக்கிறார் சாவர்க்கர்.

1924-ல் அவரது விடுதலைக்குக் காரணமான மன்னிப்புக் கடிதம், இன்னும் உக்கிரமானது. `என்னை விடுவித்தால் நான் உங்களுக்கு நல்ல சேவகனாக இருப்பேன்’ என்று அதில் பட்டயமே எழுதித் தருகிறார் சாவர்க்கர்.

`நான் எவ்வளவு நன்றாக நடந்து கொள்ள முடியுமோ, அவ்வளவு நன்றாக நடந்து கொள் கிறேன்...’ என்றும்கூட வாக்குறுதி அளிக்கிறார். வெளிவந்த பின், அவர் அதைத்தான் செய்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் ‘Hindutva : Who is a Hindu’ புத்தகத்தையே எழுதினார்.

அது, இந்தியாவை பிரித்தாளத் துடித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷாருக்கு ஒரு கையேடாகவே உதவியது.

ஜின்னாவுக்கும் அது ரெஃப்ரன்ஸாக மாறியது.

1926இல் சாவர்க்கரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் அது. பெயர், `டுகைந டிக க்ஷயசசளைவநச ளுயஎயசமயச'. அதை எழுதியவரின் பெயர் சித்திரகுப்தன். விநோதம் என்னவென்றால், அந்த சித்திரகுப்தனே சாவர்க்கர் தான். ஏனென்றால், அந்தச் சித்திரகுப்தன் அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி எந்தப் புத்தகமுமே எழுதவில்லை.

எழுதிய ஒரே புத்தகம் சாவர்க்கருடைய வரலாறு மட்டும்தான். சுய வரலாறு எல்லோரும் எழுதுவது தான். ஆனால், அதை அவர்களின் பெயரில் எழுதுவது அல்லவா உலக வழக்கம்! தனது படத்தை தானே வணங்கிய நித்யானந்தாவைப்போல, தன்னைப் பற்றி தானே புகழ்ந்து எழுதியவர் சாவர்க்கர்.

இதுதான் அவரது நேர்மை!

‘அவர் ஏன் மன்னிப்புக் கேட்டார் தெரியுமா? தேசப் பணிக்காகவே அதைச் செய்தார்’ என்கிறார்கள் சிலர். அப்படி மன்னிப்புக் கேட்டு வெளியே வந்து சாவர்க்கர் செய்த மாற்றங்கள் என்று எதுவுமில்லை. ஆங்கிலேயனை எதிர்க்கும் எந்தச் செயல்களையுமே அவர் முழு வீச்சில் செய்யவும் இல்லை.

மழைக்கு பயந்து எலி வளைக்குள் ஒடுங்கிக் கொள்வதைப்போல, ஒடுங்கிக் கொண்டார்.

ஆங்கிலேயன் இந்தியாவைவிட்டு விலகும் வரை, அவருக்கு மழைக்காலம் போகவே இல்லை. காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தபோது, அதிலிருந்து விவரமாக விலகி நின்றவர் சாவர்க்கர். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

‘காந்தி 4 வருடங்கள்தான் சிறையில் இருந்தார். ஆனால், சாவர்க்கர் 14 வருடங்கள் சிறையில் இருந்தார். அப்படியென்றால், யார் பெரிய தேசபக்தர்’ என்றும் கேட்கிறார்கள். இதில் இருக்கும் தகவல் சரி, ஆனால், பார்வை தவறு.

காந்தி ஒரே முறையாக 4 வருடங்கள் சிறையில் இருக்கவில்லை. மொத்தம் பதினொரு முறை அவர் சிறைக்குச் சென்று திரும்பினார்.

தென்னாப்பிரிக்கச் சிறைகளும் அதில் அடக்கம். ஒன்றை நோக்கவும். ஒவ்வொரு முறையும் ஒரு போராட்டம், அதில் விசாரணை, அதற்குப் பிறகு தண்டனை என்று சிறை சென்றவர் அவர்.

அவர் சிறை சென்றபோதெல்லாம், மக்கள் கொதித் தெழுந்தார்கள். காந்தியை விடுவிக்கக்கோரி போராடினார்கள். அவரும் தன்பங்குக்கு சிறை சீர்திருத்தம் என்று களமிறங்கினார்.

ஆக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கண்முன்னால் இருந்த ஒரே வழி, காந்தியை விடுவிப்பது மட்டும்தான். ஒரு தடவை, நான்கு நாள்களுக்குள் மூன்றுமுறை காந்தி கைது செய்யப்பட்டு திரும்பத் திரும்ப விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அந்தளவுக்கு ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி களை உருவாக்குபவராக இருந்திருக்கிறார் காந்தி!

தென்னாப்பிரிக்காவில் காந்தி சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்தபோது, காந்தியை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் வாசலில் திரண்டு நின்றார்கள் என்பது வரலாறு. அவர் பின்னால் எப்போதுமே மக்கள் இருந்தார்கள். ஏனென்றால், அவர், அவர்களின் மனங்களில் இருந்தார்.

75 வயதிலும்கூட சிறைக்குச் செல்லும் துணிவை, அவருக்கு அளித்தது அந்த மக்களின் அன்புதான்!

ஆனால், சாவர்க்கர் விவகாரம் அப்படியல்ல. அவருக்காக யாரும் இங்கே கொதித்தெழவில்லை.

சாவர்க்கரை விடுவிக்கக் கோரி ஒரு போராட்டம் கூட இங்கே நடக்கவில்லை. ஏன், அவரது தரப்பினரே கூட அவரை மறந்துவிட்டிருந்தார்கள்.

சாவர்க்கருக்கும் மக்கள் செல்வாக்குக்கும் காத தூரம். சாவர்க்கர் என்றொருவர் இருக்கிறார் என்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. அறியும் அளவுக்கு சாவர்க்கரும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர் பேசியதெல்லாம் வன்முறை, வெறுப்பு, பிரிவினை மட்டும்தான். சிறைக்குள்ளேயும் அவர் அதைத்தான் செய்தார்.

கைதிகளை இஸ்லாமியர், இந்துக்கள் என்று பிரித்துப் பார்த்து வேலையைக் காட்டினார். இது, அவர் எழுதிய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்திலேயே பதிவாகியிருக்கிறது. ‘இஸ்லாமியர் களின் தொழுகை நேரத்தில், சங்கநாதம் எழுப்புங்கள் என்று இந்துக்களை அவர் தூண்டினார்’ என்று, அவரது ஆதரவாளர்களே பதிவு செய்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலே, ‘நான் நெருப்புடன் விளையாடுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் தொடர்ந்து செய்வேன்’ என்று, ஆங்கிலேயனின் நீதிமன்றத்தில் நெஞ்சம் நிமிர்த்தி அறிவித்தவர் காந்தி!

ஜின்னாவுக்கு முன்பே, இரண்டு தேசங்கள் கோட்பாட்டை முன்மொழிந்தவர் சாவர்க்கர்தான். நன்றாகக் கவனிக்கவும். ஜின்னாவை வழிமொழிய வில்லை சாவர்க்கர். அவர்தான் முன்மொழியவே செய்கிறார்.

உண்மையில் 1940ஆம் ஆண்டு லாகூர் மாநாட்டில் தான், ‘இரண்டு தேசங்கள் (கூறடி சூயவiடிளே)’ எனும் தீர்மானத்தையே போடுகிறது, முஸ்லிம் லீக். ஆனால், 1937ஆம் ஆண்டே, ‘இரண்டு தேசங்கள்’ தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டது, இந்து மகா சபா. சாவர்க்கர் அப்போது அதன் தலைவர்.

1937ஆம் ஆண்டின் முற்பகுதியில், அகமதாபாத் தில் நடந்த இந்து மகாசபா கூட்டத்தில் பேசிய சாவர்க்கர், ‘இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று இந்துக்களுடையது, இன்னொன்று முஸ்லிம் களுடையது’ என்று பிரகடனம் செய்தார். அந்தப் பிரகடனமே பின்னர் தீர்மானமானது.

அடுத்து காட்சிக்கு வருகிறார், மாதவ சதாசிவ கோல்வால்கர். சாவர்க்கரின் சிஷ்யப்பிள்ளை இவர். கோல்வால்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?

‘இந்துப் பெரும்பான்மை அடையாள அரசியலே உண்மையான தேசியவாதம். அது அல்லாத எந்த அரசியலும் இந்தியாவுக்கு விரோதமானது’ என்று இன்னொரு குண்டைத் தூக்கி வீசுகிறார்.

இவர்களின் இதுபோன்ற கூற்றுகளுக்குப் பிறகுதான், ஜின்னா அதிக நம்பிக்கை கொள்கிறார். ‘அவர்களே சொல்லிவிட்டார்கள். அப்புறம் என்ன?’ என்று பிரிவினைக்கத்தியை இன்னும் ஆழமாக இந்தியாவின் நெஞ்சில் ஜின்னா இறக்க ஆரம்பித்தது 1940-களுக்குப் பிறகே!

இன்னொரு  தகவல். 1945ஆம் ஆண்டு இன்னும் எல்லையைக் கடக்கிறார் சாவர்க்கர். `ஜின்னாவின் இரண்டு தேசங்கள் எனும் கருத்தாக்கத்தில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. நாம் இந்துக்கள் ஒரு தேசம், முஸ்லிம்கள் இன்னொரு தேசம்’ என்கிறார்.

இங்கே நாம் இன்னொன்றை பார்க்க வேண்டும். இன்றுவரை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏன் பாரத ரத்னா மறுக்கப்படுகிறது?

எம்.ஜி.ஆரால் அடைய முடிந்த அந்த விருதை அவரின் ஆசான்களான அவர்களால் ஏன் அடைய முடியவில்லை?

இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது ஒரே ஒரு விஷயம்தான். அதாவது, ‘அவர்கள் பிரிவினை பேசினார்கள்’ என்பது. பெரியாரும் அண்ணாவும் பேசியது பிரிவினை என்றால், சாவர்க்கர் பேசியதற்கு பெயர் என்ன? பெரியார், அண்ணாவுக்கு ஒரு நியாயம், சாவர்க்கருக்கு ஒரு நியாயமா? ‘அதெப்படி ஒரே விஷயத்தில் இரண்டு நியாயங்கள் இருக்க முடியும்’ என்பதே நாம் எழுப்பும் கேள்வி!

கடைசியாக, காந்தி கொலை! காந்தி கொலையில் சிக்கியவர்கள், மொத்தம் 9 பேர். நாதுராம் கோட்சே, அவரின் சகோதரர் கோபால் கோட்சே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கர்கரே, மதன்லால் பஹ்வா, ஷங்கர் கிஸ்தயா, தத்தாத்ரேயா பர்சுரே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இன்னொருவர் இருக்கிறார். அவர் திகம்பர் பாட்ஜே.

இந்த பாட்ஜே மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், இவரது வாக்குமூலம்தான் கோட்சே வுக்கும் சாவர்க்கருக்கும் இருந்த தொடர்பை, தெள்ளத் தெளிவாகக் காட்டியது.

 (தொடரும்)

- திராவிடர் விடுதலைக் கழகம் 

Pin It