1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பம்பாய் நகரத்திலுள்ள கோவாலியா டாங்க்’ மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுக்குழுக் கூட்டம் கூடியது .ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்று முடிந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களுக்கு, உலகெங்கிலுமிருந்து வந்திருந்த வரவேற்பு மற்றும் விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பம்பாய் போதுக்குழுக் கூட்டத்தில் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்பட்டது.

இந்தத் தீமானத்தை ஜவஹர்லால் நெரு முன்மொழிந்து பேசினார். இந்த தீர்மானத்தின் மீது முக்கிய தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வத்து உரை நிகழ்த்தினர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்” என்பதுதான் இந்தத் தீர்மானத்தின் சாரமாகும்.

தீர்மானங்களின் வாசகங்காள் வெவ்வேறு விளக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘வெள்ளையனே வெளியேறு’ (quit India), ‘செய் அல்லது செத்துமடி’ (Do or Die) ஆகிய இரண்டு முழக்கங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.

அன்றைய கூட்டத்தின் தீர்மானங்களை வலியுறுத்திப் பேசிய காந்தியடிகளின் உரை வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டிருந்ததை அனைவரும் உணர்ந்தனர்.

“ஆகவேதான் உடனடியாக சுதந்திரம் வெண்டும் என்கிறேன். முடிந்தால் இன்றைய இரவே - விடிவதற்கு முன்னதாகவே வேண்டும் காங்கிரஸ் நாட்டின் சுதந்திரத்தைப் பெற வேண்டும். இல்லையெனில் அந்த முயற்சியில் முழுமையாக அழிக்கப்பட வேண்டும்.

“பரிபூரண சுதந்தித்தைத் தவிர, வேறு எதிலும் நான் திருப்தியடைய மாட்டேன் . ஒருவேளை வைஸ்ராய் உப்பு வரியை ரத்து செய்கிறேன் என்று சொல்லலாம். அல்லது மதுவிலக்கை அமல்படுத்த இசையலாம். ஆனால் ,நான் சுதந்திரத்தைத் தவிர வேறு ஒன்றும் தேவையில்லையென்று சொல்லுவேன்.

“இந்த நிமிடம் முதல் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இனிமேல் உணவு ஆட்கொள்வதும், உயிரோடு இருப்பதும் நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காகத்தான் என்பதை நன்றாக நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் தேவைப்பட்டால் உயிரை விடுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். கடவுள் பெயரால் இப்படியொரு சபதத்தையெடுத்துக் கொள்ளுங்கள்.”

இந்த எழுச்சிமிகு கருத்துகளை அன்றைய உரையில் உதிர்த்தவர் உத்தமர் காந்தியடிகள். கட்டமும் காரசாரமும் நிறந்த கம்பீரச்சொற்களடங்கிய இந்த உரையை இரவு நெடுநேரமாகியும் அனைவரும் கண்விழித்துக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

உணர்ச்சி பொங்க உரையாற்றிய காந்தியடிகள்,” நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தைச் சொல்கிறேன். அது மிகவும் சுருக்கமானதுதான். நீங்கள் அதை உங்கள் இதயத்தில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். உங்களுடைய ஒவ்வொரு மூச்சும் இதை உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ‘செய் அல்லது செத்துமடி’ என்பதுதான் அந்தமந்திரம். நாம் இந்தியாவின் சுதந்திரத்தைப் பெறுவோம். இல்லையெனில் அந்தப் பணியில் உயிரை விடுவோம்” என்று கூறியபோது கூடியிருந்தோர் பரவசமடைந்தனர்.

உரையை நிறைவு செய்யும் போது, உரையை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அன்றைய உரை வித்தியாசமாக அமைந்ததற்கான காரணத்தையும் சேர்த்தே விளக்கினார் காந்தியடிகள்.

“நான் கடந்த 22 ஆண்டுகளாக எனது பேச்சிலும் எழுத்திலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வந்திருக்கிறேன். ஆனால் என்னால் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஆகவே, நான் என் மனதைத் திறந்து எல்லாவற்றையும் கொட்டி விட்டேன், உங்கள் பொறுமையைச் சோதிப்பதாகக் கூட இருக்கலாம் இருந்தாலும் நான் அதற்காக வருத்தப்பட மாட்டேன், நான் எனது செய்தியை உங்களுக்குச் சொல்லி விட்டேன். உங்கள் மூலமாக இந்திய நாடு முழுமைக்கும் அறிவித்து விட்டேன்” என்று கூறி தனது உரைக்கு முத்தாய்ப்பு வைத்தார் காந்தியடிகள்.

‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேறியவுடன், ஆங்கிலேய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும், சுதேச சமஸ்தானங்களுக்கும் ரகசியத் தந்தி மூலம் அவசர அவசரமாக இந்தச் செய்தியை அனுப்பியது. ஆங்காங்குள்ள காங்கிரஸ் கமிட்டிகளை ‘சட்டவிரோத அமைப்பு’ என்று அறிவிப்பதற்கான கட்டளைகள் பறந்தன.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு காந்தியடிகள், கஸ்தூரிபா, சரோஜினி நாயுடு, காந்தியடிகளின் செயலாளர் மகாதேவ் தேசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பூனாவிலுள்ள ஆகாகான் அரண்மனையில் காவலில் வைக்கப்பட்டனர்.

ஜவஹர்லால் நேரு, பட்டேல், மௌலானா ஆசாத் மற்றும் தலைவர்கள் கைதாகி ஆமது நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். நாடு முழுவதிலுமுள்ள முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.

‘ஆகஸ்ட் 9 ஆம் தேதி பம்பாய் கோவாலியா டாங்க்’ மைதானத்தில் காந்தியடிகள், கொடியேற்றி வைத்து போராட்டத் திட்டங்களை அறிவிப்பார்’ என்று ஏற்கனவே விளம்பரப் படுத்தப்பட்டிருந்ததையொட்டி மக்கள் வெள்ளம் காலையில் திரண்டது.

அதிகாலையிலேயே காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு விட்ட செய்தி அங்கு வந்த பிறகுதான் மக்களுக்குத் தெரிந்தது. அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் உருவானது. ‘வெள்ளையனே வெளியேறு’, ‘மகாத்மா காந்திக்கு ஜே’, ‘வந்தேமாதரம்’, ‘பாரத்மாதாவுக்கு ஜே’ என்ற முழக்கங்கள் விண்ணதிரக் கிளம்பின.

கூட்டத்தைச் சுற்றி வளைத்த இராணுவம் அமைதியாகக் கலைந்து போகக் கட்டளையிட்டது . மக்கள் கூட்டத்தைக் கண்ணீர் பூகைக் குண்டுகள் மூலம் கலைக்க முயற்சித்தது. எதற்கு மக்கள் அசைந்து கொடுக்கவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. பலர் அந்த மைதானத்திலேயே குண்டடிப்பட்டு பரிதாபமாகச் செத்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அங்கு பற்றிய போராட்டத் தீ நாடு பூராவிலும் பற்றிப் பரவி மக்களே போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தும் அளவிற்கு விரிந்தது.

‘ஆகஸ்ட் புரட்சி’ என்று அழைக்கபடும் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ இந்த மைதானத்திலிருந்து துவக்கியதால் கோவாலியா டாங்க் மைதானம் இன்று ‘புரட்சி மைதானம்’ என்று அழைக்கப்படுகிறது.

(நன்றி : வரலாற்றுப் பாதையில்... : த.ஸ்டாலின் குணசேகரன்)

Pin It