சுவாமி விவேகானந்தர் பிறந்து 150-ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  இந்த வேளையில் அவரை நம் இளைஞர்களுக்கு சரியான முறையில் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை நம் முன் எழுந் துள்ளது.  விவேகானந்தரின் காவி வேறு இன்றைய காவி வேறு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டுக் கிடந்த 19ஆம் நூற்றாண்டில் இந்து மத சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் ஆகியவை தோன்றின.  விவேகானந்தர், 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.  இவரது தந்தை விசுவநாத தத்தர்.  தாயார் புவனேசுவரி தேவி.  விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன்.  கல்லூரியில் பி.ஏ. வரை படித்தார்.  இளமையிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு வந்தார்.  தத்துவ நூல்களை ஆழ்ந்து படித்து வந்தார்.

விவேகானந்தர் தொடக்கத்தில் பிரம்ம சமா ஜத்தில் சேர்ந்து சமூக சீர்திருத்த எண்ணங்களை வளர்த்து வந்தார்.  கல்லூரியில் ஒரு நாள் ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்ஒர்த்தின் (Wordsworth) கவிதையில் வரும் “பரவச நிலை” (Ecstsy) என்ற வார்த்தைக்கு விளக்கமளித்து வந்த பேராசிரியர், பகவான்

ராமகிருஷ்ணரைப் பற்றி குறிப்பிட்டார்.  ராம கிருஷ்ணரைக் கண்டால் பரவசநிலை என்றால் என்ன என்பது விளங்கும் என்றும் கூறினார்.  அதுமுதல் விவேகானந்தருக்கு ராமகிருஷ்ணரை சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் வளர்ந்து வந்தது.  1881ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விவேகானந்தர் ராமகிருஷ்ணரை முதன்முதலில் சந்தித்தார்.  தனது வாழ்க்கையின் போக்கே மாறப்போகிறது என்பதை அப்போது விவேகானந்தர் உணரவில்லை.  அந்த சந்திப்பின் பிறகு மெல்லமெல்ல ராமகிருஷ்ணரின் சீடரானார்.  விவேகானந்தரை ராமகிருஷ்ணர் சப்தரிஷிகளில் ஒருவராகவே கருதினார்.  1886இல் ராமகிருஷ்ணர் இறந்த பின்னர் விவேகானந்தர் துறவி வாழ்க்கை மேற்கொண்டு பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து ராமகிருஷ்ணரின் கருத்துக் களைப் பரப்பி வந்தார்.  துறவி வாழ்க்கை தொடங்கிய வுடன் தனது இயற்பெயரை துறந்து முதலில் “விவிதிசானந்தர்” என்ற பெயரையும் பின்னர் “சச்சிதானந்தர்” என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார்.  இறுதியில் அவர் அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு தான் விவேகானந்தர் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.

1888ஆம் ஆண்டு முதல் நாடு சுற்றத் தொடங்கினார்.  கன்னியாகுமரியில் சிலகாலம் தங்கியிருக்கையில் தியானம் செய்வதற்காக கடலில் உள்ள ஒரு பாறைக்கு நீந்திச் சென்று வருவது வழக்கம்.  அந்தப் பாறையில் இன்று விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு அதில் அவருக்கு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.  விவேகானந்தர் அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் சொற்

பொழிவு ஆற்றும் காலம் வரை அவரை அறிந் தோர் மிகச் சிலரே.  அமெரிக்கா செல்வதற்கு பலரிடம் பொருளுதவி பெற்று மிகவும் சிரமப் பட்டு சென்றார்.  அமெரிக்காவில் தங்குவதற்குக் கூட வசதியின்றி எங்கெங்கோ சுற்றி அலைந்து, கூட்ஸ் வண்டியில் இரவிலே தூங்கி, உலக மதங்களின் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றார்.  இவருக்கு, மாநாட்டில் கலந்து கொள்ள முதலில் அனுமதி மறுத்துவிட்டனர்.  பின்னர் ஒரு அமெரிக்க பேராசிரியரின் உதவியால் மாநாட்டில் பேசும் வாய்ப்பைப் பெற்றார்.

1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி விவேகானந்தரை உலகம் அறிந்து கொண்டது.  மாநாட்டில் எல்லோரும் சீமான்களே! சீமாட்டி களே! (Ladies and Gentlemen) என்று அழைத்துப் பேசியபொழுது, விவேகானந்தர், சகோதரர்களே சகோதரிகளே (Brothers and Sisters) என்று அழைத்து தனது பேச்சைத் தொடங்கினார்.  இந்த வார்த்தை களைக் கேட்டவுடன் கூட்டத்தினர் பெருமகிழ்ச்சி காட்டி ஆரவாரம் பொங்க கை தட்டி வரவேற்றனர்.  தொடர்ந்து விவேகானந்தர் “உலகத்திலேயே மிக தொன்மை வாய்ந்த சந்நியாசிகளின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன், மதங்களுக்கு எல்லாம் தாயான மதத்தின் சார்பில் நன்றி தெரி விக்கிறேன்; எல்லா வகுப்புகளையும் பிரிவுகளையும் சேர்ந்த கோடானு கோடி இந்துக்களின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியது அவரை ஒரே நொடியில் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.  இந்து, பௌத்த, சமண மதங்களின் சிறப்புகளை தொடர்ந்து எடுத்துக் கூறினார்.  மேலும் முக்கியமான ஒரு கருத்தையும் முன் வைத்தார்.  “இந்திய மக்களுக்கு இன்றைய தேவை மதங்கள் அல்ல, உணவு வேண்டும் அவர்களுக்கு, நல்ல வாழ்வு வேண்டும்.”  அவரை புதிய நோக்கில் புரிந்துகொள்ள இது வழி வகுத்தது.  மாநாடு முடியும் வரை அனைவரும் விரும்பிக் கேட்கும் பேச்சாளராக விவேகானந்தர் விளங்கினார்.  அமெரிக்கர்கள் அவரை போட்டி போட்டுக் கொண்டு தமது வீடுகளுக்கு அழைத்து விருந்தளித்து சிறப்புச் செய்தனர்.

அமெரிக்காவில் புகழ்மிக்க பல்கலைக் கழகமாக விளங்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் உரை நிகழ்த்தினார்.  இவரது சிறப்பறிந்து இந்தப் பல்கலைக்கழகம் இவருக்கு கீழைநாட்டு தத்துவப் பேராசிரியர் பதவி வழங்க முன்வந்தது.  கொலம்பியா பல்கலைக்கழகம் இவருக்கு சமஸ்கிருத மொழிப்பேராசிரியர் பதவி வழங்க முன் வந்தது.  பல அமெரிக்கர்கள் இவரது பக்தர்களானார்கள்.  ஆனால் அமெரிக்காவிலேயே இவர் புகழ் மீது பொறாமை கொண்ட பிரம்ம சமாஜத்தினரும், தியோசிபிகல் சொசைட்டியை சேர்ந்தவர்களும் அங்குள்ள கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து கொண்டு விவேகானந்தரை போலி சந்நியாசி என்று அவதூறு செய்தனர் என்பது விவேகானந்தர் சென்னை நண்பர்களுக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிய வருகிறது.  இத்தகைய எதிர்ப்புகள் சூரியனைக் கண்ட பனி போல விலகி யோடியது.  விவேகானந்தரை அமெரிக்க மக்கள் சரியாகப் புரிந்து கொண்டனர்.

அமெரிக்கா சென்று வெற்றி வீரராக இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தரை வரவேற்க கொழும்பு துறைமுகத்திற்கே சென்றுவிட்டனர்.  இலங்கையில் அவரை மிகச்சிறப்பாக, உற்சாகம் பொங்க வரவேற்றனர்.  1897ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி ராமேசுவரம் வந்து மதுரை, திருச்சி, கும்பகோணம் வழியாக சென்னை வந்தடைந்தார்.  அவர் சென்னையில் ஆறு உரைகள் நிகழ்த்தினார்.  சென்னையில் அவர் தங்கியிருந்த மாளிகை இன்று அவரது நினைவாக மெரீனா கடற்கரையில் “விவேகானந்தர் இல்லம்” என்ற பெயரில் விளங்கிவருகிறது.  அவர் இந்திய மக்களுக்கு புதிய சிந்தனையை ஊட்டக்கூடிய கருத்துக்களை இந்து தத்துவத்தோடு கலந்து வழங்கினார்.

சுவாமி விவேகானந்தரை பெரும்பாலோர் ஓர் இந்து மதத்துறவி என்றே அறிந்துள்ளனர்.  ஆனால் அவர் அடிப்படையில் ஒரு தேசியவாதி.  அதற்கு மேலும் அவர் தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று அழைத்துக்கொண்டார்.  சாதி ஏற்றத்தாழ்வு நீங்கவும், பெண்கள் சம உரிமை பெற்று வாழவும் பாடுபட்ட ஒரு சமுதாயத்துறவி அவர்.

உழைப்பவர்களை மிக உயர்வாக மதித்தவர் விவேகானந்தர்.  நாட்டின் செல்வத்தை உருவாக்கு பவர்கள் அவர்களே.  “நமது தேசம் குடிசையில் இருக்கிறது, குடிசைகளில் வாழும் மக்களே நமது நாட்டின் உண்மையான மக்களாவார்கள்” என்று கூறினார்.  மேலும் அவர் உழைப்பாளி மக்களை நோக்கி “இந்தியாவின் உழைப்பாளி மக்களே! எல்லாக் காலத்திலும் பிறர் காலடியில் மிதியுண்டு அவதிப்படும் உங்களை நான் வணங்குகிறேன்” என்று ஆழ்ந்த தன் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தினார்.  இந்தியாவில் எப்படிப்பட்ட சமுதாயம் அமைய வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையை “எவருக்கும் தனி உரிமையில்லை, எல்லா மக்களும் வாழ்க்கையில் முன்னேற ஒரே விதமான வாய்ப்பு இப்படிப்பட்ட சமுதாயம் தான் நமக்கு வேண்டும்” என்று சுருக்கமாக ஆனால் ஆழமான பொருள் கொண்ட வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.

இந்தியாவில் அமையப்போகும் ஆட்சி முறை பற்றி, அவர் “மக்களால் நடத்தப்படும் புதிய ஆட்சி முறை ஒன்று இந்தியாவில் வரப்போகிறது என்பதற்கு அறிகுறிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.  அந்தக் குடியரசு ஆட்சி முறையை சோசலிசம் என்ற அரசியல் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையில் அமைந்த மக்களாட்சி என்றோ நீங்கள் எந்தப் பெயரால் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்” என்று தீர்க்க தரிசனத் துடன் குறிப்பிட்டுள்ளார்.  இத்தகைய புதிய ஆட்சி எப்படி ஏற்படப்போகிறது.  யார் இதை செய்யப் போகிறார்கள் என்பதையும் விவேகானந்தர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.  “தங்கள் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டுமென்று மக்கள் கேட்கப்போவது நிச்சயம்.  வேலைப்பளு குறைய வேண்டுமென்றும், கொடுமையும் யுத்தமும் ஒழிய வேண்டுமென்றும் மக்கள் வலியுறுத்து வார்கள்.” மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைக்க அவர்கள் கல்வியறிவும் சமுதாய விழிப்பு உணர்ச்சியும் பெறவேண்டும் என்பதை “முதலில் பொதுமக்களுக்கு கல்வியைக் கொடுங்கள், இருக் கின்ற நிலைமை என்ன என்பதைப் பொது மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளும்படி செய்யுங்கள்” என்று செய்யவேண்டிய முதற்கடமை என்ன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

சாதி இந்தியச் சமுதாயத்தின் கொடிய அம்சங்களில் ஒன்று என்பதை விவேகானந்தர் நன்கு உணர்ந்து, சாதி ஏற்றத்தாழ்வு ஒழிய வேண்டு மென்று வலியுறுத்தி வந்தார்.  “நமது பெரிய ஆச்சாரியார்கள் எல்லோரும் சாதி பேதத்தை ஒழிக்க எவ்வளவோ முயன்றிருக்கிறார்கள்.  புத்த மதம் முதற்கொண்டு, அதற்குப் பின் தோன்றிய மதப்பிரிவினரும் சாதி வேற்றுமையை எதிர்த்தே பிரசாரம் செய்து வந்திருக்கின்றனர்.  ஆனால் இந்த முயற்சி ஒவ்வொரு தடவையும் சாதியை உறுதிப்படுத்தியதே தவிர வேறு பயனில்லை.” இந்தியாவின் அரசியல் ஸ்தாபனங்களிலிருந்து வளர்ச்சி பெற்றதே சாதியாகும் என்று அவர், சாதி ஒழிப்பு முயற்சி, அதன் தோல்வி, சாதிகள் தொடர் வதற்கான காரணம் ஆகியவற்றைத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

தாழ்ந்த சாதியினரை உயர்சாதியினர் மிக மோசமாக நடத்தியதால் தான் அவர்கள் மதம் மாறினார்கள் என்ற உண்மையை சுவாமி விவேகானந்தர் தெளிவாக்கியுள்ளார்.

“இந்தியாவிலேயே புரோகிதருடைய ஆதிக்கத் திற்கு மிகவும் உட்பட்டு இருக்கும் பகுதி திருவாங்கூர் தான், நிலத்தின் ஒவ்வொரு சிறிய பகுதியும் கூடப் பிராமணர்களுக்கே சொந்தமாக இருக்கிறது.  இந்தத் திருவாங்கூரில் வாழும் மக்களில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர்.  இந்துக்கள் அனுதாபத்துடன் நடக்காததன் விளைவாகத் தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான பறை யர்கள் கிறிஸ்தவர்களாக மாறிவருகிறார்கள்.  இந்த நிலை பசிக் கொடுமையினால் மட்டும் ஏற்பட்டு விடவில்லை.  இந்துக்களாகிய நம்மிட மிருந்து எந்தவிதத்திலும் அவர்களுக்கு அனுதாபம் கிடைக்காமலே போனதனால்தான் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறது. 

“இந்தியாவின் ஏழை மக்களிடையே இந்த அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் முஸ்லீம்கள் இருப்பதற்கு என்ன காரணம்?  கத்தி முனையில் பயமுறுத்தப்பட்டு அவர்கள் மதமாற்றம் செய்யப் பட்டார்கள் என்று சொல்வது தவறாகும்.  ஜமீன் தாரர்களிடமிருந்தும், புரோகிதர்களிடமிருந்தும் விடுதலை பெற்றுச் சுதந்திரமாக வாழ்வதற்காகத் தான் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறினார்கள்.”  இக்கூற்று இன்றைய காலத்திலும் எவ்வளவு பொறுத்த மாக உள்ளது என்பதை அறியமுடிகிறது.

சமுதாயத்தில் பெண்கள் மிக மோசமாக நடத்தப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலைமை மாறவேண்டும் என்று பாடுபட்டவர் சுவாமி விவேகானந்தர்.  அவர் கூறுகிறார் “எல்லா நாடு களுக்குள்ளும் நமது நாடு பலவீனமாகவும் பின் தங்கியும் இருப்பதற்கு என்ன காரணம்?  பெண்ணினம் நம் நாட்டில் அவமானம் செய்யப்படுவதுதான் அதற்குக் காரணம்.  கடினமான விதிகளினால் பெண் களைக் கட்டுப்படுத்துவதற்கு ஸ்மிருதி முதலிய நீதி நூல்களை எழுதி ஆடவர், பெண்களை இயந்திரங்களாக ஆக்கிவிட்டார்கள்.  நமது நாட்டுப் பெண் களைப் பாருங்கள், பத்து வயதிலேயே குழந்தைப் பெற்றுத் தாய்மார் ஆகிவிடுகிறார்கள்.  ஐயோ கடவுளே! இப்போது இவற்றை எல்லாம் நான் உணர்கிறேன்! நாமே பெரும் பாவிகள், நரகத்தின் வாயில்கள் என்றெல்லாம் அழைத்ததுதான், நம் நாடு தாழ்ந்து அதோ கதியை அடைந்திருப்பதற்குக் காரணம்” என்று சுவாமிகள் கூறி நூறு ஆண்டு களுக்குப் பிறகும் நாம் அப்படியேதான் இருந்து வருகிறோம்.

சுவாமி விவேகானந்தர் வெறும் பிரசாரம் மட்டும் செய்து வந்தவரல்ல, செயல்வீரர்.  1897ஆம் ஆண்டு பஞ்சம் ஏற்பட்ட போது முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பஞ்ச நிவாரணப் பணிகளை மேற் கொண்டார்.  கல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய போது அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டார்.  கல்விக்கண் திறக்க நாடெங்கும் பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்கினார்.  அவர் கூறுகிறார், “நாம் கிளிப்பிள்ளைகளைப் போல் பேசுபவர் களாகி விட்டோம்.  பேசுவதும் பேசியபடி செயலில் ஒன்றும் நடத்தாமல் இருப்பதுமே நமது வழக்க மாய் போய்விட்டது” சிந்தனையும் செயலும் ஒன்றுபடவேண்டும் என்பதை இன்று கூட நாம் கடைபிடிக்கிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

விவேகானந்தர் வேதாந்தத்தில் அத்வைத தத்துவத்தை தனது கண்ணோட்டமாகக் கொண் டிருந்தார்.  எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான்.  கடவுளை தனியே பிரித்தறிய முடியாது என்பதே அத்வைத தத்துவம்.  ஆதி சங்கரர் உருவாக்கிய தத்துவம் இது.  விவேகானந்தர் எல்லா உயிர் களிடமும் அன்புகொண்டார், எனினும் மனிதனையே உயர்வாகக் கருதினார்.  “உலகத்திலிருக்கும் செல்வங் களிலெல்லாம் மிகவும் உயர்ந்த செல்வம் மனிதன் தான்” என்றார் அவர்.  மற்ற மதங்களை அவர் மிகவும் மதித்தவர்.  அவர் ஒரு முஸ்லீம் நண்பருக்கு 1898 ஜூன் 10ஆம் தேதி எழுதிய கடிதத்தில், “நம்முடைய தாய்நாட்டிற்கு இந்து, இஸ்லாம் என்ற இருபெரும் தத்துவங்களின் சேர்க்கைதான் ஒரே ஒரு நம்பிக்கையாகும்.  வேதாந்தம் மூளை, இஸ்லாம் உடல்” என்ற அவர் மிகத்தெளிவாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

விவேகானந்தர், தனது கண்ணோட்டத்தில் சர்வதேசவாதியாக விளங்கினார்.  மேற்குநாட்டு பயணங்களில் பாதிப்புகளைப் பெற்றார், இந்தியாவின் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கினார், வாழ்க்கைப் பிரச்சினைகளை அணுகுவதில் நவீன சிந்தனையாளராக விளங்கினார் என்று அவரைப் பற்றிய தனது மதிப்பீடுகளை பதிவு செய்துள்ளார் ஜவஹர்லால் நேரு அவர்கள்.  விவேகானந்தரின் சீடர் களில் மிக முக்கியமானவர் சகோதரி நிவேதிதை.  இவரது இயற்பெயர் மார்க்கரெட் நோபிள்.  இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.  நமது மகாகவி பாரதியார் நிவேதிதையை மிகவும் மதித்துப் போற்றியவர்.  பாரதியார் விவேகானந்தரைப்பற்றி தனது ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.  “சுவாமி விவேகானந்தர் முதன் முதல் வேதாந்தத்தை அன்னிய தேசத்தில் பரப்ப முயற்சி கொண்டு உலகம் முழுவதும் உபந்நியாசம் செய்து வந்ததையும் யாவரும் அறிவர்.  இவர் தெய்வத்தன்மை வாய்ந்தவரெனச் சொல்லலாம்.  தனது ஒளியைக் காட்டி விட்டு பால்யத்திலேயே வீடடைந்தார்.”  1902ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் தேதி தனது 39ஆம் வயதில் விவேகானந்தர், காலமானார். பாரதியார் இறக்கும் போது அவருக்கும் வயது 39. என்ன ஒற்றுமை! விவேகானந்தரின் பணி தமிழ்நாட்டிலே மிக அதிகமாகவே இருந்துள்ளது.  இது பற்றி பெ.சு. மணி அவர்கள் தனது ‘இராமகிருஷ்ணர் இயக்கமும், தமிழ்நாடும்’ என்ற நூலில் விரிவாக எழுதி உள்ளார்.  விவேகானந்தரின் செயல்பாடுகளில் கல்கத்தாவிற்கு அடுத்து சென்னையே முக்கியமாக விளங்கியுள்ளது.

விவேகானந்தர் மக்களுக்கு வழங்கிய செய்தி:  “எழுந்து நில்; தைரியமாக இரு; வலிமையுடன் இரு; பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்; உன் விதியைப் படைப்பவன் நீயே என்பதை அறிந்துகொள்; எனது வீர இளைஞர் களே; உத்தம குணம் வாய்ந்த நல்லோர்களே; செயல், செயல்புரியத் தொடங்குங்கள்.  தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தை கிளப்பு வதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்”  இந்தச் செய்தி நம் ஒவ்வொருவருடைய செவிகளில் எப் பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

Pin It