lenin 3501917 அக்டோபர் 25. தனக்குள் நடத்தப்பட்ட புரட்சி வெற்றியடைந்ததை ரஷ்யா உலகிற்கு அறிவித்துக் கொண்ட நாள். உலகின் முதல் சோசலிச நாடாக வரலாற்றில் அந்நாடு இடம் பெற்ற நாளும் இதுதான். அன்று ஜார் மன்னனின் அரசாங்க மையமாக இருந்த இடமான குளிர்கால அரண்மனையினில் நாடெங்கிலும் இருந்து வந்திருந்த, புரட்சியைத் திட்டமிட்ட கட்சியின் பிரதிநிதிகள், புரட்சியை ஒழுங்கமைத்த மக்கள் ராணுவப் படைகளின் பொறுப் பாளர்கள், மற்றும் புரட்சியை நடத்திய ரசிய மக்கள் கூடியிருந்தனர். ரஷ்யக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியால் புரட்சியின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டிருந்தார் விளாதிமீர் இலியீச் லெனின்.

கடந்த சில தினங்களாக மாறு வேடத்தில் உலவிக் கொண்டிருந்த அவர் அன்று காலையில்தான் தன்னுடைய வேடத்தைக் கலைத் திருந்தார், உலகின் திசையைத் திருப்பிவிட்ட அந்த அறிவிப்பினை அக்கூட்டத்தில் அவர்தான் வெளியிட்டார். அதன் மூலம் வரலாறு தமக்கிட்ட கட்டளையை நிறைவேற்றினார்.

இடி முழக்கத்தை விடவும் பெரும் சூறாவளியை விடவும் மிகப் பெரிய மக்கள் முழக்கம் அந்த அறிவிப்பினை ஆமோதிக்கிறது. நண்பகல் தாண்டிய பிறகு அந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. லெனின் தனது இயல்பான மூச்சினை அப்போதுதான் வெளியிடத் தொடங்கினார். வந்த இரவு மெதுவாகக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

லெனினுக்கு மெய்க்காப்பாளராக நியமிக்கப் பட்டிருந்த தோழரின் பெயர் போன்ச் - ப்ருயேவிச். இவர் தொடக்க காலங்களிலிருந்தே கட்சியின் உறுப்பினராக இருந்து வருபவர். லெனினுடன் நெருங்கிப் பழகியவர். கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். உலகைக் குலுக்கிய பத்து நாட்களிலும் லெனினுடனேயே இருந்தவர். எழுத்தாளர், ஆய்வாளர், பின்னாளில் பதிப்பாளர். அவரும் லெனினும் இரவு சிற்றுண்டியை முடிக்கின்றனர். லெனின் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார். ஆனாலும் அதைவிட மிகவும் கடுமையான சோர்வு அவரைப் பாதித்திருந்தது. இருவரும் உறங்குவதற்காக ப்ருயேவிச்சின் இருப்பிடம் வருகின்றனர். லெனினை உறங்க வைப்பதற்கான முயற்சிகளை ப்ருயேவிச் தொடங்குகிறார். ஆனால், அம்முயற்சிகள் பலிக்கவில்லை. லெனின் படுக்கையில் படுப்பதற்கு மறுக்கிறார். அந்த அறையிலிருந்த எழுது மேஜை, காகிதங்கள், மை, புத்தக அலமாரி ஆகியவை லெனினின் மறுப்பிற்கு பக்க பலமாகவும் ஆதரவாகவும் இருப்பதை ப்ருயேவிச் புரிந்துகொண்டார். லெனின் மாபெரும் எழுத்தாளரல்லவா! உலகில் இவரைப்போல் எழுதிக் குவித்த அரசியல் தலைவர் யாராவது உண்டா?.

அந்த வீட்டின் கதவை ஏற்கனவே பின்பக்கமாகப் பூட்டியிருந்த ப்ருயேவிச் இப்போது கதவுகளின் பின்புறமிருந்த சங்கிலிக்கொண்டியை மாட்டினார். தாழ்ப்பாள்களைப் போட்டார். படுப்பதற்காக அடுத்த அறையிலிருந்த சோபாவில் வந்து அமர்ந்த ப்ருயேவிச் தனது துப்பாக்கியை எடுத்து அது சுடுவதற்குத் தயாரான நிலையில் இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்திக் கொண்டார். அனைத்து நண்பர்களின் தொலைபேசி எண்களையும் ஒரு தாளில் குறித்து வைத்திருந்ததை பத்திரப்படுத்திக் கொண்டார். லெனின் உறங்கும் வரையிலும் தானும் உறங்கிவிடக் கூடாது என உறுதி எடுத்துக்கொண்டார். லெனின் இருந்த அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. எழுந்துபோய் சாத்தப்பட்டிருந்த கதவினில் காதுகளை வைத்துக் கேட்டார். உள்ளே ஒரு சத்தமுமில்லை. ப்ருயேவிச் தூங்க ஆரம்பித்தார்.

ஆனால், சற்று நேரத்தில் லெனினது அறையில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. விழித்துக்கொண்ட ப்ருயேவிச் கண்களைத் திறக்காமல், அசையாமல் படுத்திருந்தார். ஓசையின்றிக் கதவுகள் மெதுவாகத் திறந்தன. லெனின் மெதுவாக எட்டிப் பார்க்கிறார். ப்ருயேவிச் தூங்குவதாக எண்ணிய அவர், மெல்ல மெல்ல நடந்து வந்து எழுதுமேஜையின் அருகில் அமர்கிறார். காகிதங்களைப் பரப்பி வைத்துக் கொள் கிறார். தலையின் இருபுறமும் கைகளை வைத்துத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார். எழுதுகிறார். எழுதி யதை அடிக்கிறார். மீண்டும் எழுதுகிறார். திருத்துகிறார். புத்தகங்களைப் புரட்டிக் குறிப்புகளை எடுக்கிறார். தொடர்ந்து நடைபெறும் இந்த வேலைகள் இரவு நேரத்தைக் கரைக்கின்றன. பொழுது விடிவதற்கான சற்றுநேரத்திற்கு முன்பாக படுக்கும் அறைக்குச் செல்கிறார். விளக்குகள் அணைக்கப்படுகின்றன. விடிகிறது. புரட்சியின் முதல் நாள் இரவிலும் லெனின் உறங்கவில்லை.

பொழுது விடிந்த சற்று நேரத்தில் வீட்டிலிருந்த மற்றவர்கள் வருகின்றனர். சிறிது நேரம் ஆகட்டும், இரவு முழுவதும் அவர் உறங்கவில்லை என ப்ருயேவிச் சொல்கிறார். அனைவரும் அதை ஆமோதிக்கின்றனர். ஆனால், அப்போது கதவுகள் திறக்கின்றன. புதிய ஆடையணிந்து புத்துணர்ச்சியோடு லெனின் வெளியே வருகிறார். ‘சோசலிசப் புரட்சியின் முதல் நாள் வாழ்த்துக்கள்’ என அனைவரைப் பார்த்தும் கூறுகிறார். காலை உணவிற்காக அனைவரும் மேசையில் அமர்கின்றனர். அப்போது தோழர் நதேழ்தா கான்ஸ்தாந்தீனாவா (லெனினது மனைவி) வருகிறார். லெனின் தனது கோட்டுப் பையிலிருந்து சில காகிதங் களை எடுக்கிறார். வாசிக்கத் தொடங்குகிறார். வாசித்து முடித்ததும் சொல்கிறார்.

“இதை மட்டும் நாம் பிரகடனம் செய்து, பிரசுரித்து, விரிவாகப் பரப்ப முடியுமானால், அப்புறம் இந்தப் பிரகடனத்தைத் திரும்பப்பெற, யார் முயன் றாலும் முடியவே முடியாது. இந்த ஆணையை மாற்ற, வேறு எந்த ஆட்சியாலும் முடியாது. இதுதான் நாம் நடத்திய அக்டோபர் புரட்சியின் மிக முக்கியமான வெற்றி”. லெனினின் முகத்தில் புன்னகை கலந்த உறுதி தெரிந்தது.

அன்று மாலையில் பிரகடனம் செய்யப்பட விருக்கும் அந்த ஆணையானது, அப்போதே தட்டச்சு செய்யப்பட்டது. மறுநாள் வெளியாகும் அனைத்து செய்தித்தாள்களிலும் பிரசுரம் செய்யப்படுவதற்காக அவ்வாணையின் நகல்கள் வழங்கப்பட்டன. அரசாங்கத்தின் அனைத்து ஆணைகளையும் நாட்டிலுள்ள அனைத்து செய்தித்தாள்களும் கட்டாயமாகப் பிரசுரிக்க வேண்டும் எனும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்கின்ற யோசனை அப்போதுதான் லெனினுக்குத் தோன்றியது. சுமார் ஐம்பதினாயிரம் வெளியீடுகள் அச்சடிக்கப் படுகின்றன. புரட்சிக்காக நகரங்களுக்காக வந்துவிட்டு தற்போது தங்களது கிராமங்களுக்குச் செல்லவிருக்கும் படைவீரர்களிடம் இவ்வெளியீடுகள் முதலில் வினி யோகம் செய்யப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்படுகின்றது. தொடர்ந்த சில நாட்களில் இவைகளெல்லாம் நடந்தன.

அந்த ஆணைதான், லெனினது எழுத்துக்களில் புகழ்பெற்ற ஒன்றான, “நிலம் குறித்த ஆணை”. ரசிய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு தீர்வினை லெனின் அதில் எழுதியிருந்தார்.

···

இந்திய விவசாயிகளின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதை நாமறிவோம். விவசாயியைச் சாகவிடும் நாடு உருப்படாது என்பதையும் நாமறிவோம். விவசாயிகளுக்கு என்னதான் பிரச்சினை? விவசாயம் செய்ய முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. விதை, உரம், களைக்கொல்லி ஆகியவைகள் விலை உயர்ந்து விட்டன. உழுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்ய ஆட்களில்லை. கூலியும் உயர்ந்துவிட்டது. விவசாயத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளில் ஆகப்பெரும் பான்மையினருக்கு ஒரு துண்டு நிலமில்லை, நிலமிருப் பவர்களுக்கு நீர் ஆதாரமில்லை. நிலமும் நீரும் இருப்பவர்களுக்கோ விளைபொருட்களுக்கு உரிய விலையில்லை. இடைத்தரகர்கள் விளைபொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். இதனால், நன்றாக விளைந்தாலும்கூட நட்டமே ஏற்படுகின்றது. மொத்தத்தில் விவசாயம் அழிகிறது. என்ன செய்வது? இதை விளக்குவதற்கு பெரிய ஆய்வுகளேதும் நடத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு விவசாயியைக் கேட்டாலே விரிவாகச் சொல்வார்.

பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டி விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். ஒன்றல்ல, பத்தல்ல, நூறாண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அரசைத் தவிர வேறு யாராலும் விவசாயத்தைக் காப்பாற்ற முடியாது என்பதால்தான் விவசாயிகள் அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்றித் தரக்கோரிப் போராடுகிறார்கள்.

விளைச்சலை கட்டுப்படுத்தும் இயற்கைக்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்கள். ஆனால், விவசாயத்தைக் கட்டுப்படுத்தும் வியாபாரிகளுக்கு எதிராக இதுவரையிலும் விவசாயிகள் போராடியதேயில்லை. அரசும் ஏதேதோ செய்து பார்க்கிறது. ஆனால், அரசாலும் விவசாயத்தைக் காப்பாற்ற முடியவில்லை. விவசாயத்தைக் காப்பற்ற வக்கத்து போனதால் ஒரு கட்டத்தில் போராடுகின்ற விவசாயிகளைப் போலீஸ் கொண்டு தாக்குகிறது. பல சமயங்களில் சுட்டுக் கொல்கிறது. ஏன்? இந்த அரசால் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. காரணம், இந்த அரசுகளுக்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அதனால் தீர்க்க முடியாது. காரணம் பிரச்சினைகளை உருவாக்குவதே அரசுதான். அரசின் இயல்புதான்.

இப்படிப்பட்ட நிலையில், எந்த அரசால் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்? அவர்கள் எப்படித் தீர்ப்பார்கள்? இந்தியா மட்டுமல்ல, இந்தியாவைப் போன்ற பல விவசாய நாடுகளில் நிலவும் விவசாயிகளின் அடிப்படையான பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியைத்தான் ரஷ்யாவில் புரட்சி நடந்த முதல்நாளின் இரவில், உலகின் முதல் சோசலிச அரசின் சார்பாக, தூங்காமல் விழித்திருந்து லெனின் எழுதினார். சோசலிச அரசின் முதல் ஆணையே விவசாயிகள் குறித்ததுதான். உலக கம்யூனிஸ்டுகளின் சின்னத்தில் சுத்தியல் மட்டுமல்ல, கதிரறிவாளும் உள்ளது என்பதை யார் மறந்தாலும் விவசாயிகள் மறந்துவிடக்கூடாது. ஆனால், இதை இந்திய விவசாயிகள் மறந்துதான் போனார்கள். சரி, லெனின் எழுதிய ஆணை விவசாயி களுக்கு கூறியது என்ன

···

விவசாயத்தைக் காப்பாற்ற அரசால்தான் முடியும் என்பது எவ்வளவுக்கு உண்மையோ அவ்வளவுக்கு விவசாயத்தை நடத்தவும் அரசால்தான் முடியும் என்பதும் உண்மையே. ஆம் இனி, இந்தியாவில் அரசுதான் விவசாயத்தை நடத்த முடியும். அதன்மூலமே விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். ரசியாவில் விவசாயத்தை அரசு ஏற்று நடத்தியதின் மூலமே விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன. விவசாயத்தை அரசு நடத்துவதற்கான ஆணையைத்தான் லெனின் பிறப்பித்தார். இந்தச் செய்தியானது நம்மிடம் பல கேள்விகளை எழுப்பும். எழுப்ப வேண்டும். அதற்கான பதில்கள் லெனினது ஆணையிலேயே உள்ளது. இருப்பினும் இவைகளெல்லாம் இந்தியாவிற்குச் சாத்தியப்படுமா எனும் கேள்வியும் அதில் முதலா வதானதாக இருக்கும். ஆனால், அந்த அரசாணையைப் படித்த பிறகும் இக்கேள்வியை யாராவது எழுப்பினால் அவர்கள் நிச்சயம் விவசாயம் செய்யாதவர்களாகவே இருப்பார்கள் என்பதை நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

லெனினின் ஆணை என்ன சொன்னது? ரசியாவில் அது எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டது? எப்படி விவசாயிகளின் பிரச்சினை தீர்க்கப்பட்டது? என்பதை யெல்லாம் இங்கு விளக்கப்போவதில்லை. அதற்கான நூல்களும் வெளியீடுகளும் தமிழிலேயே ஏராளமாக உள்ளன. அவைகளைப் படிக்கலாம். ஏற்கனவே படித்தவர்கள் அதை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லலாம். அந்த ஆணையானது விவசாயிகளுக்கு உத்தரவுகளை இடவில்லை. மாறாக, விவசாயிகள் தங்களது பிரச்சினைகளைத் தங்களது அனுபவங்களின் மூலமாக, தங்களது விருப்பப்படி, தாங்களே தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.

லெனின் கூறுகிறார், “அனுபவம் சிறந்த ஆசான். அது யார் சரி என்பதைக் காட்டிவிடும். விவசாயிகள் இப்பிரச்சினைகளுக்கு ஒரு முனையில் இருந்து தீர்வு காணட்டும். நாம் இன்னொரு முனையிலிருந்து தீர்வு காண்போம். புரட்சிகரப் படைப்பாற்றல் கொண்ட வேலைகளின் பொதுவான செயல்பாடுகளிலும் புதிய அரசினுடைய வடிவங்களை மக்களுக்கு விளக்குவதிலும் அனுபவமானது நம்மையும் விவசாயிகளையும் ஒன்று சேரும்படிக் கட்டாயப்படுத்தும். நாம் அனுபவத்தால் வழி நடத்தப்பட வேண்டும். மக்கள் திரளின் படைப் பாற்றல் திறமைகளுக்கு முழுமையான சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும்...  நாம் செய்வதைவிடவும் சிறப்பாகவும் சரியாகவும் விவசாயிகள், தாங்களே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம். விவசாயிகள் இதை நம்முடைய உணர்வின் அடிப்படையில் செய்கிறார்களா அல்லது சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தினுடைய உணர்வின் அடிப்படையில் செய்கிறார்களா என்பது இங்கு முக்கியமல்ல...”

அரசாணையின் இறுதிப் பகுதியிலுள்ள இச்செய்தி யானது விவசாயிகளின் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக்கொள்வதற்கான வழிகளைத் திறந்துவிடுகிறது. இப்படி ஒரு ஆணையை இந்திய அரசு வெளியிடுமா? வெளியிடும் என்பதற்கான நம்பிக்கை நமக்கு வரவில்லை. வெளியிடாது என்றே நம்புகிறோம். நம்புவோம். ஆக, அப்படியரு ஆணையை வெளியிடுகின்ற அரசைக் கொண்டுவருவதற்கு விவசாயிகள் முயல்வதுதான் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி. முதல் வழி. அப்படியரு ஆணையினை வெளியிடும் அரசை எப்படிக் கொண்டுவருவது? அதை லெனினிடமே கேட்கலாம். நிலமற்ற மற்றும் நிலமுள்ள இந்திய விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல லெனினும் எப்போதும் தயாராகத்தான் இருக்கிறார். இனி, நமது விவசாயிகள்தான் தயாராக வேண்டும்.

விவசாயிகள் தீர்க்கவேண்டிய பிரச்சினை எது? அது, அரசும் அரசாங்கமும் பல ஆண்டுகளாகக் கூறிவருகின்ற விவசாய உற்பத்தியைப் பற்றிய பிரச்சினையல்ல. மாறாக, அது விவசாய உற்பத்தி முறையைப் பற்றிய பிரச்சினை. இனி உற்பத்திமுறை பற்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான் விவசாயிகள் தயாராக வேண்டும். லெனின் கூறுவது அதைத்தான்.

விவசாயிகள் செத்து விழுந்து கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில், அதைப்பற்றிய சொரணையேயில்லாமல் வெந்ததைத் தின்போம்; விதி வந்தால் சாவோம் என விவசாயத்தில் ஈடுபடாதவர்கள் வாழ்ந்து கொண்டிருக் கின்ற நாட்டில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானத் தையும் வரலாற்று இழிவையும் போக்கிக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் விவசாய உற்பத்திமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் விவசாயிகளை ஆதரித்தே தீர வேண்டும். அதுதான் ஒரேவழி.

Pin It