தொன்னூறுகளின் துவக்கத்தில் இறையன்பு அவர்களை நேரில் அறியாமலேயே அவரது முதல் கவிதைத் தொகுதி மூலம் நான் அவரை அறிந்திருந்தேன். அப்போது நான் கும்பகோணத்தில் இருந்தேன்.  அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு கடிதத்தோடு என் முதல் கவிதைப் புத்தகத்தை அவருக்கு அனுப்பினேன். பதிலாக அவர் Ôபூபாளத்துக்கொரு புல்லாங்குழல்Õ என்ற அவரது கவிதைத் தொகுதியை எனக்கு அனுப்பி வைத்தார். அப்போது துவங்கிய நட்பு, அதன் பின் அவர் சென்னைக்கு பணிக்கு வந்தபோது அவரை நேரில் சந்தித்தேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலான இழை அறாத நட்பு.

பல பதவிகளைப் பல பெருமைகளை அடைந் திருக்கும் இறையன்பு அவர்கள் ஒரு அப்பழுக்கற்ற நேர்மையான அரசு அதிகாரி. என் வாழ்வில் எத்தனையோ உயர் அதிகாரிகளிடம் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய இவரைப் போன்ற சிலரை வெகு அபூர்வமாகத்தான் கண்டிருக்கிறேன். பொதுவாக நான் யாரையும் அதீதமாகப் புகழ்வதில்லை. ஆனாலும் இவர் விஷயத்தில் உண்மையைச் சொல்லும்போது உங்களுக்கு அப்படி தோன்றலாம்.

இவரைச் சந்திக்கும் போதெல்லாம் நான் வியப்பது அவரது படிப்பு. இவ்வளவு வேலைப் பளுவுடன் இருக்கும் இவர் எந்த நேரத்தில் இவ்வளவு படிக்கிறார் என்ற கேள்வி எனக்குள் எழும். ஒவ்வொரு முறையும் அவரைச் சந்தித்து திரும்பும்போதும் ஒரு நூலகம் சென்று சில நூல்களை படித்த உணர்வு எனக்கு ஏற்படுவதுண்டு. உலகளாவிய அளவில் வந்துள்ள சிறந்த புத்தகங்களை எல்லாம் இவர் தேடித்தேடி வாங்கி வாசித்தபடி இருப்பார். அந்த அளவு படித்ததையும்  நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார். அதே சமயம் படித்ததை எல்லாம் கொட்டாமல் வந்திருப்பவரின் விருப்பமும் தேவையும் அறிந்து அவற்றைப் பகிர்ந்துகொள்வார். அதுதான் அதில் சிறப்பு. வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் இடைவெளி இல்லாத மனிதர்களில் இறையன்புவும் ஒருவர். தன் எழுத்துக்களில் அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் வாழ்கிறார். என்ன வாழ்கிறாரோ அதைத்தான் தன் எழுத்துக்களில் சொல்கிறார்.

Òமேன்மையான மனிதர்களையும், கம்பீரமான சூழலையும் சுயநலமற்ற கடும் உழைப்பாளிகளையும் படைத்துக் காட்டுவதும்; அவற்றை வாசிப்பவர்கள் மனதில் தாங்களும் அதைப்போல் ஓரளவேனும் மாற வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்துவதும்;  சமூகத்தில் இன்னும் கறைபடாமல் இயங்கிக் கொண் டிருக்கின்ற மகத்துவம் பெற்ற கண்ணியவான்களைக் குறியீடுகளாக்கி, அவற்றின் மூலம் வாழ்வில் நம்பிக்கை ஏற்படச் செய்வதும்; ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் இருக்கின்ற அழுக்குகளை அகற்றிவிட்டு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு தீவிரமாக நடைபோட வைப்பதும்;  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீக உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்வதும்தான் என்னுடைய இலக்கியப் பயணத்தின் நோக்கம்.” என்று தன் எழுத்தின் நோக்கம் பற்றி பிரகடனம் செய்துள்ள அவர் அதற்குத் தக்கவே வாழ்கிறார் என்பதைக்  கண்கூடாகக் காண் கிறேன். ஆனால் எழுத்தாளர்கள் இப்படி பிரகடனம் செய்து விட்டு எழுதிவிட முடியுமா என்றொரு கேள்வியும் எனக்கு உண்டு. அப்படி எழுதும் எழுத்துக்கள் போதனைத் தன்மை மிகுந்ததாயும் பிரச்சார நெடி உள்ளதாகவும் அமைய வாய்ப்புக்கள் அதிகம். படைப்பிலக்கியத்துக்கு அது பொருந்துமா என்ற சந்தேகம் எனக்குண்டு. எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் பேசும்போது ”நீங்கள் எழுதியுள்ளதில் சில பிரச்சாரத்தன்மை உடையதாகவும் மேடைப்பேச்சின் தொனியுள்ளதாகவும் உள்ளதே” என்று கேட்டேன். அதற்கு அவர் இப்படி பதில் சொன்னார்.

Òபிரச்சாரம் இல்லாத இலக்கியமே கிடையாது. பிரச்சாரங்களும் இலக்கியமாவதுண்டு. இலக்கியங்களும் பிரச்சாரமாவதுண்டு. முன்னது சிறப்பு பின்னது வீழ்ச்சி. ஏசுநாதரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் உபநிஷத்துக் கதையைச் சொன்னவர்களும் தங்கள் பிரச்சாரத்தையே இலக்கியமாக்கியத்தை நம்மால் பார்க்கமுடிகிறது. ஆழ்ந்த ஞானம் என்பது இலக்கியத்துக்கு புறம்பான தல்ல. இசை மேதை பீதோவானும் தியாகய்யரும்கூட பிரச்சாரம் செய்தார்கள் என்பது அடைப்படை உண்மை தான். எனினும் அந்த அடிப்படையை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் எழுப்பிய கலைமாளிகைகள் மகத்தானவை.

ஆனால் இந்தக் கேள்வி ஏன் வருகிறது. கலைஞன் அல்லாதவன் பிரச்சாரம் செய்வதனால் வருகிறது. அந்தப் பிரச்சாரத்தையே அவர்கள் கலை என்று வற்புறுத்துவதால் வருகிறது” என்றார். Òநீங்கள் சொல்வது ஒரு பகுதி சரி. ஆனால் இதை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே ஜே.கே.” என்றேன். Òஎல்லாரும் எல்லாத்தையும் ஏத்துக்கணும்ன்னு அவசியம் ஏதுமில்லை” என்றார்.

எவ்வளவோ சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் இவரது அடக்கம் வியக்கத்தக்கது. நாம் பின்பற்ற வேண்டியது. அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கவிஞர் முத்துலிங்கத்தின் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள இவர் வருகிறார். மண மக்களைக் காண எல்லோரும் வரிசையில் காத்திருக் கிறோம். சிலர் குறுக்கு வழியாக வந்து வேகமாக மணமக்களைப் பார்த்துச் செல்கின்றனர். தான் ஒரு ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்ற தன்முனைப்பு சிறிதும் இன்றி இவர் நீண்ட வரிசையில் கடைசி நபராக காத்திருக் கிறார். இவர் நிற்பதைக் கண்டு சிலர் வழி விடுகின்றனர். அவரோ வேண்டாம் என்று கையசைத்து அப்படியே வரிசையில் நின்று வருகிறார். இலக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ள வரும்போதுகூட கடைசியில் ஓரமாய் தனியாளாய் நின்றுகொண்டு கூட்டத்தை கவனிப்பார். எங்கும் எதிலும் தன்னை துருத்திக்கொண்டு முன் நிறுத்திக்கொள்ளும் பழக்கத்தை நான் இவரிடம் கண்டதில்லை.

இவர் அலுவலகத்துக்கு யார் போனாலும் எப்படி முதலில் தேநீரோ, காப்பியோ கொடுத்து உபசரிக் கிறாரோ அப்படி அவர்கள் விடைபெறும்போது இன் முகத்தோடு கைகுலுக்கி வாசல்கதவுவரை வந்து நின்று வழி அனுப்புவார். இந்தப் பழக்கத்தை நான் எழுத்தாளர் எம்.வி.வி. அவர்களிடம் கண்டிருக்கிறேன். அவர் வாசல் வரை வந்து நின்று வழியனுப்புவதோடு தெருவோரம் அவர்கள் உருவம் மறையும்வரை நின்று பார்த்துக் கொண்டேயிருப்பார். சில சமயம் ஒரே நாளில் இரண்டு மூன்று முறை நான் அவர் வீட்டுக்கு செல்ல நேர்ந்த துண்டு. ஒவ்வொரு முறையும் சலிக்காமல் அதைச் செய்வார். அத்தகைய பண்பை நான் அவருக்குப் பிறகு இறையன்பு அவர்களிடம்தான் கண்டேன்.  கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தேனுகா, தஞ்சை பிரகாஷ், கவிஞர் மீரா, வண்ணதாசன், வண்ணநிலவன், கலா ப்ரியா, சுந்தர ராமசாமி போன்ற பல எழுத்தாளர்களிடம் நான் கண்டது பழகுதலில் எளிமை. இவர்கள் யாரும் ஒரு உயரத்தில் அமர்ந்துகொண்டு கீழ் நோக்கிப் பார்த்துப் பிறரிடம் பேசியதில்லை. அத்தகு எளிமையும் இனிமையும் இறையன்புவோடு பழகும்போதும் எனக்கு ஏற்பட்டதுண்டு.

இவர் படைப்புகளில் என்னை வெகுவாக கவர்ந்தது இவர் எழுதிய Òஆத்தங்கரையோரம்”  என்ற நாவல்தான். நர்மதை ஆற்றின் கரையோர மக்களை 1988ல் இவர் சந்திக்கிறார். ஓர் ஆய்வுக்காக அங்கு சென்ற இவர் நர்மதை ஆற்றங்கரையில் வாழ்ந்த பழங்குடி இனமக்கள் நர்மதை அணை கட்டுவதன் பொருட்டு அப்புறப்படுத்தப்பட்ட காட்சிகளை நேரில் கண்டு மனம் வெதும்பி கண்கலங்குகிறார். அக்ரானி, அக்கல்குவா, செந்தூர் ஆகிய கிராம மக்களோடு தங்கி அவர்கள் தரும் உணவையும் உண்கிறார். அந்தப் பகுதி மக்களோடு பழகி அவர்கள் துயரங்களைக் கண்ட இவர் அதை அருமையான நாவலாக எழுதியுள்ளார்.

அந்தக் காலத்தில் கோயில் கட்டுவதற்குக்கூடக் கர்ப்பிணிப் பெண்களையே பலியிட்டதாக வரலாறு கூறுகிறது. அணை கட்டுவதற்கும் அதே மனித பலி நிகழ்கிறது. மனிதர்கள் மனிதன்மை உடையவர்களாக இல்லை. அரசு அதிகாரிகள் பலர்  இரக்கமற்றவர்களாக இருக்கிறார்கள் என்றெல்லாம் நாவல் பல செய்திகளை இலக்கிய நறுமணத்தோடும் சக மனிதர்கள் மேல் கொண்ட அன்போடும் விவரிக்கிறது. அந்த நாவலை இதுவரை நீங்கள் படிக்காமல் இருந்தால் ஒரு முறை வாசிக்க வேண்டும். அணை கட்ட ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே பல கிராமங்கள் நீரில் மூழ்குகின்றன.

அந்தக் கிராம மக்களுக்கு ஆதரவாக அரசாங்கத்தின் பரிவோ, எதிர்க்கட்சிகளின் அனுதாபமோ எதுவும் நிகழவில்லை. அரசு அதிகாரியாக இவர் இருந்தும் துணிச்சலாகப் பலவற்றை  அதில் எழுதிக்காட்டியுள்ளார். இந்த நாவலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்பான தொரு அணிந்துரை எழுதியுள்ளார். இதைவிட வேறென்ன வேண்டும் அந்த நாவலின் சிறப்பைச் சொல்வதற்கு. அந்த நாவலின் பாத்திரங்களின் மேன்மைகளைப்  பற்றி அதில் ஜெயகாந்தன் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

கேள்வியும் நானே பதிலும் நானே என்ற இவரது புத்தகத்தில் “எது நல்ல படைப்பு” என்ற கேள்விக்கு இவர் ஒரு பதில் அளித்துள்ளார். “வாசித்து முடித்ததும் இதயத்தைவிட்டு நீங்காமலிருப்பது. நம் வாழ்வில் மேன்மையைச் சேர்ப்பது. நம்மிடம் இருக்கும் கருணை, அன்பு, கம்பீரம், நேர்மை, பெருந்தன்மை, உற்சாகம், உழைப்பு போன்றவற்றை ஒரு அங்குலமாவது உயர்த்து வதே நல்ல படைப்பு.” இந்தப் பதிலை நான் இவரது ஆத்தங்கரையோரம் நாவலோடு பொருத்திப் பார்த்துக் கொள்கிறேன். இவரின் இந்த கூற்றே அந்த நாவலுக்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. இதயம் பேசுகிறது இதழில் தொடராக வந்து அதன் பின் நாவலாக உருப் பெற்ற இந்த நாவல் இப்போது நாம் அதிகம் பேசுகிற சுற்றுச்சூழல் பற்றிய கருத்தாக்கங்களை அப்போதே முன் வைத்துள்ளது. பழங்குடியினரின் வாழ்க்கை முறைகளை விவரிக்கும் இந்த நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஒரு நாவலுக்காகவே இறையன்பு அவர்களுக்கு சாகித்ய அகாடமி பரிசு தரப்பட்டிருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.  

தகுதி வாய்ந்த பல மனிதர்களுக்கு இவர் உதவி செய்ததை நான் நேரிடையாக அறிவேன். என் வழி யாகவும் சிலருக்குச் சில உதவிகள் கிடைத்திருக்கின்றன. எழுத்தாளர்கள் பலருக்கும் நேரிடையாகவும் மறைமுக மாகவும் அவர் உதவி செய்துவந்துள்ளார். இன்றும் செய்து கொண்டுமிருக்கிறார். ஆனால் உதவி பெற்ற பிறகு அவர்கள் நடந்துகொள்ளும்விதம் வினோத மாகவும் சில சமயம் வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இவர் அதையெல்லாம் ஒரு போதும் பொருட் படுத்தியதில்லை. உதவி செய்த பின் அதை மறந்துவிட வேண்டும் என்பதுதான் அவரின் மேன்மையான கொள்கை. மனம் பொறுக்காமல் ஒரு முறை நான் இவரிடம் இது பற்றிக் கேட்டேன். Ôஎன்ன சார் இப்படி நடந்து கொள்கிறார்களேÕ என்று. Ôவிடுங்க பாஸ் என்ன தான் படைப்பாளியாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே சாதாரண மனிதர்களுக்கு உரிய குணம் அவர்களிடமும் இருக்கும் தானே அதை விடுங்கள். வேற பேசலாம்Õ என்று பெருந்தன்மையாக உரையாடலை வேறுபக்கம் திருப்பிவிடுவார்.

“நிர்வாகத்திற்கும் இலக்கியத்திற்கும் பொதுவாகத் தேவைப்படுவது ஈர இதயம்” என்று சொல்லும் இவரிடம் நான் பார்ப்பது. கனிவு. பிறரின் குரலுக்கு பொறுமை யாய் செவி சாய்க்கும் தன்மை. இது இலக்கியங்கள் அவருக்கு கொடுத்த கொடை என்றே எண்ணுகிறேன். இந்தக் கனிவோடுதான் இவர் ஏராளமான கட்டுரை களையும் எழுதிவருகிறார். இவரது கட்டுரைகள் மாணவ சமுதாயத்துக்கு இளம் தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளி விளக்குகள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த கட்டுரைகளில் எளிமை, நேர்மை, நேரில் பேசுவது போன்ற தன்மை, உண்மை போன்றவை துலங்கி நிற்கும். பாசம் மிகுந்த தம்பியின் உயர்வில் மகிழும் கரிசனம் நிறைந்த அண்ணனின் குரலோடு அந்தக் கட்டுரைகளில் சில இருப்பதை நான் வாசித்திருக்கிறேன்.

ஒரு இளைஞன் தன் பாதையைச் சரியாக அமைத்துக்கொள்ள உத்வேகப் படுத்தும் கட்டுரைகள் அவை. அதில் வரலாறு இருக்கும், வாழ்க்கை சம்பவங்கள் இருக்கும், மேற்கோள்கள் இருக்கும், படிப்பினை இருக்கும், படிப்பவன் தன்னை நோக்கியே சில கேள்விகளை எழுப்பித் தன்னை பரிசோதித்துக்கொள்ள வைக்கும் உத்தி இருக்கும், இப்படி அவர் கட்டுரைகளின் மேன்மைகளைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். ஆனால் அந்த கட்டுரைகளை எழுத அவர் படும் பாடு சொல்லி மாளாது. ஐந்து நிமிடப் பேச்சாக இருந்தாலும் சரி இரண்டு பக்கக் கட்டுரையாக இருந்தாலும் சரி அதற்காக அவர் எடுக்கும் குறிப்புகள், படிக்கும் புத்தகங்கள், கிடைத்த தகவலின் உண்மைத் தன்மையை சரிபார்க்க அவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தை இவை எல்லாம் என்னை வியக்க வைத்துள்ளன. ஏனோ தானோ என்று அவர் எதையும் செய்துவிடமாட்டார்.

அரசு வேலையாக இருந்தாலும் சரி இலக்கியப் பணியாக இருந்தாலும் சரி எதைச் செய்தாலும் அதை அலட்சியமாக   செய்ய மாட்டார். நூறு விழுக்காடு கவனக்குவிப்புடன் செய்வார். அதில் ஒரு அக்கடமிக் டிசிப்ளின் துலங்கு வதை நான் கண்டிருக்கிறேன். அதனால் தான் அவரது கட்டுரை நூல்கள் இன்றும் மாணவர்களால் விரும்பி வாசிக்கப்படுகின்றன. இவரது சில கட்டுரை நூல்களை மாணவர்கள் பைபிள் போல தங்கள் கையில் வைத்திருப் பதைப் பார்த்திருக்கிறேன்.

இவரது கேள்வி பதில் புத்தகத்தை படித்தபோது அதில் இவரது அக உலகம் புலப்பட்டது. ஆன்மிகம் தத்துவம், அறிவியல், இலக்கியம் எனப் பல துறைகளில் விரிந்து பரந்திருக்கும் அவரது ஞானம் அதில் தெரிந்தது. என்னைக் கவர்ந்த சில கேள்வி பதில்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். Òகடவுளைக் கும்பிட கோவிலுக்குத்தான் செல்ல வேண்டுமா?” என்றொரு கேள்வி. Òநெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீர்” என்று தாயுமானவர் பாடவில்லையா” என்று பதில் கேள்வி கேட்கிறார். எவ்வளவு அர்த்த புஷ்டியான பதில்.

Òஎல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒரு பொருள் இருக்க வேண்டும், உங்கள் வாழ்க்கையின் நோக்கம்” என்றொரு கேள்வி. “இந்தியாவின் இளைஞர்களை இணையற்றவர்களாக மாற்றிக்காட்டும் நம்பிக்கைப் பாலத்தில் ஒரு சின்ன கல்லையாவது என் பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் எண்ணத்தாலும் எடுத்து வைக்க வேண்டுமென்பதே என் வாழக்கையின் நோக்கம்” என்கிறார். இந்த நோக்கத்தை இவர் ஏற்கனவே அடைந்துவிட்டார் என்பதற்கு இவரால் உத்வேகம் பெற்று இன்று நல்ல பதவிகளிலிருக்கும் பல இளைஞர் களே சான்று.

Òமனிதன் எப்போது ஞானம் அடைகிறான்” என்றொரு கேள்வி. “தான் ஒன்றுமில்லை என்று உணர்கிறபோது” என்கிறார். அப்படி ஒவ்வொருவனும் உணர்ந்துவிட்டால் மனித வாழ்வில் ஒரு பிரச்சனையும் இல்லையே. அந்த தன்முனைப்பை உணராததாலே தானே நமக்கு இவ்வளவு சங்கடங்கள். இந்தப் பதிலை ஒட்டியே இன்னொரு கேள்வி. “ஒருவரின் அடையாளம் என்பது என்ன?Ó

Òஅடையாளம் அற்றுப்போவதே சரியான அடையாளம். அவர்களையே உலகம் நினைவில் வைத்துப் போற்றுகிறது. புத்தர் கபீர் போன்றவர்கள் அப்படிப்பட்டவர்களே என்கிறார்.

சதா நாம் எதனுடனோ முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம். எதில் மோதுகிறோம். யாரோடு மோதுகிறோம். ஏன் மோதுகிறோம் என்ற பிரக்ஞை சிறிதும் இல்லாமல் எதனோடோ மோதிக்கொண்டே இருக்கிறோம். அதையே ஒரு கேள்வியாக கேட்கிறார். “மோதுவது தவறா” மோதுவது தவறில்லை. எதனுடன் என்பதுதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு வசன கவிதை மாதிரி இரண்டு வரிகள் சொல்கிறார். “கல் கல்லோடு மோதினால் ரத்தம், உளியோடு மோதினால் சிற்பம்”

இதிகாசங்கள் புராணங்கள் பற்றிய கேள்விகளும் இதில் எழுப்பப்பட்டுள்ளன. அதில் ஒரு கேள்வி. “இதிகாசங்கள் உணர்த்தும் செய்தி” பதில். “மகிழ்ச்சியாக இருக்கும்போது வாக்கு தராதீர்கள். கோபமாக இருக்கும்போது சாபம் தராதீர்கள்.” இதிகாசங்கள் உணர்த்தும் செய்திகளை அப்படியே சாரமாக இரண்டு வரிகளில் தந்துள்ளார். நாம் எல்லோரும் ஆசையை அடக்கப் படாதபாடு படுகிறோம். சில சாமியார்களோ அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள். அவர்களும் ஆசைப்பட்டு அல்லலுக்கும் ஆளாகிறார்கள். அதையே ஒரு கேள்வியாக்குகிறார் இறையன்பு. “ஆசையை அடக்க முடியுமா” Òஅடக்க முயல்வதைவிட கடக்க முயல்வது நன்று. அடக்கினால் அது மிருகம் போல் மீண்டும் மீண்டும் துள்ளிக்கொண்டு துரத்தும். கடந்துவிட்டால் தொட முடியாத எல்லைக்குள் இருக்கும்.” பரிட்சித்துப் பார்க்கலாம் என்றுதான் தோணுகிறது.

நமக்குப் பல பேர் மீது கோபம் வருகிறது. சிலரை அதனால் பகைத்தும் கொள்கிறோம். அப்படி யாரையும் பகைத்துக்கொள்ளாமல் இருக்கமுடியுமா என்றொரு கேள்வி. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பகைத்துக்கொண்டால் அவர்களை வெறுப்பதற்காக நம் சக்தியை நாம் விரயம் செய்ய வேண்டிவரும் என்கிறார். மனோதத்துவ ரீதியில் அணுகப்பட்ட ஒரு நுட்பமான பதில். எதிரிகளையும் படபடப்பைத் தரும் வேண்டாத விஷயங்களையும் சதா நினைத்துக்கொண்டிருப்பதை முதலில் கைவிடுங்கள் பாதி மன அழுத்தம் குறையும் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

சர்வரோக நிவாரணி போல பல துறைகள் சார்ந்து பல திசைகள் சார்ந்து கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு பதில் சொல்கிறார். இந்த மனிதருக்குள் இவ்வளவு விஷயங்களா என்று நம்மைத் திகைக்க வைக்கிறார். இவர் பெற்ற இந்த ஞானம் இன்று நேற்று வந்ததல்ல. இவரின் பால்யத்திலிருந்தே இவரது தேடல் தொடர்ந்து வந்திருக்கிறது. இந்த புத்தகத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார். இவருடன் பத்தாம் வகுப்பு வரை படித்த சித்ரா ராய் என்கிற பெண்மணி கனடாவில் தற்போது வசித்து வருகிறார். அவருக்கு பள்ளிப் பருவத்தில் இறையன்பு எழுதிய ஆட்டோ கிராஃப் வாசகங்கள் இவை:

தமிழ் என்னும் தரமிகு மொழியை

தாயகத்து வீதிகளில் பரப்பிடவே முயல்வாய்.

தன்னலம் என்னும் தீ குணத்தை அகற்றி

தரணியெல்லாம் நலம் வாழ உழைப்பாய்

விளையும் பயிர் முளையிலே என்பது போல பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தன் சக மாணவிக்கு இப்படியரு வாசகத்தை எழுதித் தந்துள்ளார். மொழியின் மீதும் சமூகத்தின் மீதும் பதின்பருவத்திலேயே இவர் கொண்டிருந்த நேசம் புலப்படுகிறது.

இப்படி எத்தனையோ கேள்விகளைத் தானே எழுப்பி அவற்றிற்குத் தானே பதில்களையும் சொல்லி விட்டு இந்தப் பதில்கள் எல்லாம் சாத்தியமான பதில் களைத் தேடும் முயற்சிதான். முடிவான பதில்கள் இல்லை, பதில்களை நோக்கிய பயணம் மட்டுமே என்கிறார் அடக்கமாக.

இவ்வளவு எழுதுவதால் படிப்பதால் பணியில் சுணக்கமோ தாமதமோ இவருக்கு ஒரு நாளும் ஏற்பட்டதில்லை. முதலில் தான் செய்ய வேண்டிய அலுவலகப் பணிகளுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார். அதை முடித்த பின்புதான் எழுத்து வேலை களுக்குள் செல்வார். அவர் மேசையில் கோப்புகள் தேங்கிய புகார்களே இல்லை என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் தன் பணியை பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை யெல்லாம் செய்து வருபவர் இறையன்பு. காஞ்சிபுரத்தில் அவர் உருவாக்கிய நிலவொளிப் பள்ளிகளையும் மதுரையில் உருவாக்கிய வாசகர் வட்டத்தையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோன்ற அவரது செயல்களை அவ்வப்போது ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளன.

பணி வழியாக மட்டுமல்ல தனிப்பட்ட வகையில் அவர் எழுத்துப் பணிகளின் மூலம் பெற்ற பணத்தை அவர் சமூக நன்மைக்கே பயன்படுத்தி உள்ளார். அண்மையில் நடைபெற்ற தினத்தந்தி பவள விழாவில் இவர் எழுதிய Òஇலக்கியத்தில் மேலாண்மைÓ என்ற புத்தகத்துக்காக சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதைப் பிரதமர் கையால் இவர் பெற்றார். அந்த  இரண்டு லட்சம் பரிசுத் தொகையை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர் விடுதிக்கு தந்துவிட்டார். எனக்குத் தெரிந்து தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் தனக்கு பேச்சின் மூலம் கிடைக்கும் பணத்தை எல்லாம் இப்படி அறப் பணிகளுக்காகக் கடைசிவரை செலவிட்டு வந்தார் என்பதை நான் அறிவேன். Òஅடுத்தவர் நலனுக்காக செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான். ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்புடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்” என்ற வரிகளை எழுதிக் காட்டிய இவர் தான் எழுதிய வார்த்தைகளுக்குத் தக வாழ்ந்துகாட்டிய சம்பவங்களில் ஒன்று இது.

அரசாங்கம் எவ்வளவோ அரசு அதிகாரிகளைக் காண்கிறது. ஆனால், தன் செயல்பாடுகளால் பண்பால் மேன்மை மிகுந்த அதிகாரிகளை அரசு எந்திரம் எப்போதாவது அபூர்வமாகத்தான் காண்கிறது. இவர் வகிக்கும் பதவிக்கு வேலைகளைப் பார்த்தோம் சம்பளம் வாங்கினோம் நிம்மதியாக இருந்தோம் என்று இருக்காமல், சமூகத்துக்கு தன்னாலானவற்றை தன் எழுத்தின் பேச்சின் செயல்களின் மூலம் செய்து தன் வாழ்வை அர்த்தம் துலங்க வாழ்ந்து வருபவர் இறையன்பு. அவருக்காக நடக்கும் இந்த விழாவில் அவரைப் பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

(வதனம் அமைப்பும் என்.சி.பி.எச். நிறுவனமும் இணைந்து 16.12.2017 அன்று, மதுரை,  இந்திய மருத்துவக்கழகம் அரங்கில் நடத்திய “வெ. இறையன்புவுடன் ஒரு இனிய மாலை”  கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Pin It