இருபதாம் நூற்றாண்டில் சமூக மாற்றம் குறித்த எல்லாக் கேள்விகளும் குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில் வந்து மையம் கொள்வதாகத் தோன்றுகிறது. பன்மீயக் கட்டமைப்புகளை மார்க்சியம் எவ்வாறு எதிர் கொள்ளுகிறது? என்பது அப்பிரச்சினையாகும். பொருளாதாரம், வர்க்கம் என்ற அளவைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கு ஐரோப்பியச் சூழல்களில் உருவான மார்க்சியக் கோட்பாடு ஐரோப்பாவிலும், அதைத் தாண்டி, மூன்றாம் உலக நாடுகளிலும் நிறவெறி, ஆணாதிக்கம், சாதி அமைப்பு, பழங்குடிச் சமூகங்கள், தேசிய இன அடையாளங்கள் போன்ற சூழல்களை எதிர்கொள்ளும் போது என்ன விதமான நிலைப்பாடுகளை முன்வைக்கிறது? என்று அப்பிரச்சினையை நாம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். எல்லாச் சமூக முரண்பாடுகளையும் பொருளாதாரம், வர்க்கம் என்ற அளவைகளை நோக்கிச் சுருக்கிக் காட்டுவது நியாயமா? என்பது அப்பிரச்சினையின்

ஒரு மறுபக்கக் கேள்வியாகும். ஒவ்வொரு முரண் பாட்டையும் அதனதன் தனித்தன்மைகளுடன் அங்கீகரிக்க வேண்டியது அவசியமல்லவா? என்றும் அப்பிரச்சினை விரிவடையுமாக இருக்கலாம். அமைப் பியல் என்ற ஒரு சிந்தனைப் போக்கு முன்னுக்கு வந்த நாட்களிலிருந்து, மேற்குறித்த பிரச்சினை, பன்மீயக் கட்டமைப்புகளை மார்க்சியம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? என்ற வடிவத்தைப் பெறுகிறது. இப் பிரச்சினையை இக்கட்டுரையில் பேசி விவாதிக்க முனைவோம்.

மார்க்சியக் கோட்பாட்டில் அதன் பொருளாதார அளவையியல் வலுவானது என்பதை முதலில் தெரி வித்தாக வேண்டும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்து, மார்க்சின் மூலதனம் நூலின் தருக்கவியல் சாதித்த அரசியல் எழுச்சி சமீப கால வரலாற்றில் மிக முக்கியமானதாகும். உலக வரலாற்றில் இதற்கு முன் எழுந்த சமூக எழுச்சிகளோடு ஒப்பிடும்போது அது மிக அடிப்படையாக, கோட்பாட்டு வலுவோடு, அடித் தளத்திலிருந்து மக்களைத் திரட்டும் ஒரு பெரும் பணியை அரசியல் தளத்திற்குக் கொண்டுவந்தது.

பொருளாதாரச் சுரண்டல் என்ற ஓர் அளவையை அது உருவாக்கியிரா விட்டால் இத்தனை உறுதிப்பாட்டோடு, தொடர்ச்சி யோடு ஒரு சமூக அரசியல் இயக்கத்தைக் கட்டியமைத் திருக்க முடியுமா? என்பது சந்தேகத்திற்குரியது. எனவே பொருளாதாரக் கட்டமைப்பை ஒற்றைப்படையாக நிராகரிப்பதில் மட்டும் அக்கறை காட்டுவோரை

நாம் இங்கு பொருட்படுத்தப் போவதில்லை. எனவே இக்கட்டுரையில் நாம் பேசி விவாதிக்க முனையும் பிரச்சினை, பொருளாதாரத்தை ஏன் நிராகரிக்க வேண்டும்? என்பது குறித்ததல்ல; மாறாக மூன்றாம் உலகச் சூழல்களில் நம் முன் வந்து நிற்கும் பிற கட்டமைப்புகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது? என்பது குறித்ததேயாகும்.

பன்மீயக் கட்டமைப்புகள் என்ற பிரச்சினை வெவ்வேறு வடிவில் இருபதாம் நூற்றாண்டு முழுவதுமே மார்க்சியரின் முன் எழுந்த காலங்களிலேயே அவற்றைப் பொருட்படுத்தி பலவகையான விவாதங்கள் நடந்து வந்துள்ளன என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். மார்க்சியர்கள் அப்பிரச்சினையை  எப்போதுமே நிராகரித்து வந்தார்கள், பிற போராளிகள்தாம் அப்பிரச்சினையை முன்னுக்குக் கொண்டு வந்தார்கள் என கற்பனை செய்து கொள்ளுவது சரியாக இருக்காது. பலவகைப்பட்ட சமூக முரண்கள் உள்ளன என்பதை மார்க்சியர்கள் ஏற்றுக் கொண்டுதான் தொழில்பட்டுள்ளனர். பலவகைச் சமூக முரண்களை எதிர்கொண்டாகவேண்டும் என்பதிலும் அவர்கள் பின்னடையவில்லை.

ஆயின் அவர்களில் பலர் அச்சமூக முரண்களை பொருளாதார அளவையினைக் கொண்டே மதிப்பிட்டனர் என்பது உண்மையாக இருக்கலாம். இதே காலக்கட்டத்தில் நிறவெறி, ஆணாதிக்கம், சாதியம், தேசிய இனப் பிரச்சினை ஆகியவற்றைத் தனித் தனியான அமைப்புகளாகக் கையாண்டு சுயநிலையிலான கோட்பாட்டுத் தளங்களை உருவாக்கிய சிந்தனையாளர் களும் உண்டு. அதுபோன்ற சுயநிலைக் கோட்பாடுகள் மார்க்சியரிடமிருந்து அங்கீகாரத்தைக் கோரியபடி அல்லது மார்க்சியருக்கு கோட்பாட்டு அழுத்தங்களை வழங்கியபடி இருந்தன என்பது உண்மை.

ஒருசிலர் மார்க்சியத்தை அடியோடு நிராகரித்துச் செல்ல வேண்டும் எனும் வேலைத்திட்டத்தை முன்வைத்தனர் என்பது மற்றொரு உண்மை. ஆயின் அவர்களால் வெகுதூரம் செல்லமுடியவில்லை. மேற்கத்திய பூர்ஷ்வா தாராளவாத எல்லைகளுக்குள் அவர்கள் சில ஆதாயங் களை ஈட்டியிருக்கலாம். எனவே மார்க்சியத்திற்கு கோட்பாட்டு அழுத்தங்களை வழங்கிய சிந்தனையாளர் களுக்கும் இயக்கங்களுக்கும் உரிய மரியாதையை வழங்கியே இவ்விவாதத்தை நாம் முன்வைக்கிறோம். தாராளவாதச் சறுக்கல்களுக்குள் சென்று சிக்கிக் கொண்டோரைப் பற்றி இங்கு நாம் அதிகம் கவலைப்படப் போவதில்லை.

ஜியார்ஜ் லுக்காச்சின் முழுமை என்ற கருத்தாக்கம்

இருபதாம் நூற்றாண்டின் முகப்பிலேயே மார்க் சியத்தை அதன் ஹெகலிய வேர்களுக்கு மீட்டுக் கொண்டு செல்லவேண்டும் என்ற வேலைத்திட்டத் தோடு ஜியார்ஜ் லுக்காச் முயன்றார். அவரது முக்கிய மான கருத்தாக்கம் முழுமை (Totality)) எனப்பட்டது. ஒரு சமூகப் புரட்சி பொருளாதார முரண்பாடுகளால் மட்டும் நிர்ணயமாகிவிடாது, அது மொத்த சமூக அமைப்பையும் தமுவியதாக அமைய வேண்டும் என அவர் கூறினார். சமூகப் புரட்சி பொருளாதார எல்லை களைத் தாண்டி, வர்க்க உணர்வு, சமூக உணர்வு என்ற எல்லைகளை எட்டும்போதே முழுமை நிலையை அடைகிறது என்பது லுக்காச்சின் நிலைப்பாடு. தொழிலாளர் வர்க்க நலன் என்ற உடனடி, நேர்க்காட்சி (சுயப்பிரயோசன) நிலையைத் தாண்டி சமூகம் முழுவதையும் பற்றிப் பீடிக்க வேண்டும் என்பதாக லுக்காச்சின் வாதம் அமைந்தது.

லுக்காச் இங்கு பொருளாதார நிர்ணயவாதத்தை மிக மென்மையாக விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டும். சமூக உணர்வு, சமூகப் பிரக்ஞை (Social Consciousness) என்ற வட்டாரத்தை நோக்கி அவர் நகருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஒரு முக்கியமான அசைவு. பொருளாதார முரண்கள் தாமாகவே சமூக மாற்றத்தை நிர்ணயிக்கும் என்பது ஒரு பொருள்முதல்வாத முடிவாக இருக்கலாம். ஆயின் அது சமூகத்தினுள் தொழில்படும் இயங்கியல் குறித்ததாக இல்லை. அந்த இயங்கியலை மீட்கும் போதே லுக்காச் ஒரு ஹெகலியராகத் தென்படுகிறார். பொருளாதார முரண்பாட்டை சமூகப் பிரக்ஞை யாக்குவது ஓர் அரசியல் செயல்பாடு.

ஆக பொருளா தாரம், பிரக்ஞை, அரசியல் என்ற மூன்று வட்டாரங் களின் கூட்டுச் செயல்பாட்டை லுக்காச் முழுமை என்ற சொல்லாக்கத்தால் குறிப்பிடுகிறார். சமூகப் பிரக்ஞை என்பதும் அரசியல் என்பதும் பொருளாதாரத்தின் பிரதிபலிப்புகளே என்ற நிலையைத் தாண்டி அவை அவ்வவற்றின் தளத்தில் படைப்புத்தன்மை கொண்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவை ஒன்றிலிருந்து ஒன்றாகவும், சுயமாகவும், பரஸ்பரமாகவும், இணைந்தும் தொழில்படும்போதே ஒரு சமூகப் புரட்சி நிகழமுடியும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். நாம் நினைப்பது போல் மார்க்சியம் ஒற்றைப் பிடிவாதமான கோட்பாடு அல்ல என்பதை இங்கு பதிவு செய்யலாம்.

கறுப்பின மார்க்சியர்

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மார்க்சிய ரோடு பொருதி அதனைச் செழுமைப்படுத்தியோரில் கறுப்பினப் புரட்சியாளர்களைச் சொல்லவேண்டும். பிரான்ஸ் பனோன், சி.எல்.ஆர்.ஜேம்ஸ், இன்னும் பல ஆப்பிரிக்கச் சிந்தனையாளர்கள் இங்கு குறிக்கத் தக்கவர்கள். பொருளாதாரச் சுரண்டல் என்ற அம்சத் தோடு, அதிலிருந்து சுதந்திரமாக, நிறவெறி ஒடுக்குமுறை என்ற அம்சத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர். ஐரோப்பிய மார்க்சியம் 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே பகுத்தறிவு மரபின் தொடர்ச்சியாக அமைந்து போனதைச் சுட்டிக்காட்டிய இவர்கள் உணர்ச்சிமயமான நிறவெறிக் காலனியாதிக்கத்தை அது உள்வாங்கவில்லை எனக் குற்றம் சாட்டினர்.

கருத்துக்களின் முரண் தருக்கவியலில் மார்க்சியம் அக்கறை காட்டுகிறது, எனவே உணர்ச்சிகளின் இயங்கியல் அதன் போதாமை யாக இருக்கிறது என்பது அவர்களின் வாதம். உணர்ச்சி களின் இயங்கியல் பற்றிப் பேசுவதற்கு இருத்தலியம் அவர்களுக்கு உதவியது. வெள்ளை நிறவெறி அமைப்பி லேயே ஐரோப்பிய முதலாளியம் வேர்கொண்டுள்ளது என அவர்கள் வாதிட்டனர்.

காலனியமும் நிறவெறியும் உலக ஏகாதிபத்தியத்தின் தூண்கள் என்பதனை இவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆப்பிரிக்காவை முன்நிறுத்தாமல் ஐரோப்பிய வரலாற்றை எழுதமுடியாது என இவர்கள் கூறினர். பொருளாதாரம் என்பதே ஐரோப்பாவின் சொந்த அளவை, பிற அளவைகளை மறைப்பதற்கு அது பொருளாதாரத்தையும் தொழில் நுட்ப வளர்ச்சியையும் முன்நிறுத்துகிறது என அவர்கள் வாதிட்டனர்.

கறுப்பினப் புரட்சியாளர்களின் வாதங்களில் கொஞ்சமாகவோ அதிகமாகவோ நியாயம் இருந்தது. மார்க்சியரின் பொருளாதாரச் சுரண்டல் என்ற கருத் தாக்கம் எப்போதுமே ஒடுக்குமுறை என்ற விடயத்தைப் புறக்கணித்ததில்லை. மார்க்ஸ் அவரது பொருளாதார ஆய்வுகளுக்கு வந்துசேருவதற்கு வெகுமுன்னதாகவே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராளியாகத்தான் இருந்தார். ஒடுக்குமுறைகளின் காரணிகளைத் தேடிச் சென்றபோதே அவர் பொருளாதார ஆய்வுகளுக்குள் நுழைந்தார்.

இது லெனின், மாவோ, ஹோசிமின், சேகுவாரா, காஸ்ட்ரோ போன்ற எல்லாப் புரட்சி யாளர்களுக்கும் பொருந்தும். விவசாய சங்கங்களிலும் தொழிற்சங்கங்களிலும் வேலை செய்யும் கம்யூனிஸ்டு களிடம் கேட்டுப்பாருங்கள்; நீங்கள் எப்படி கம்யூனிஸ்ட் ஆனீர்கள் என்று. ஆங்காங்கே வாழ்வியல் தளத்தில் சந்தித்த அடக்குமுறைகளிலிருந்தே கம்யூனிஸ்ட் ஆகி யிருப்பார்கள். பொருளாதாரக் கல்வி பெற்று, சுரண்டலின் ரகசியத்தைப் புரிந்துகொண்டு கட்சி களுக்குள் வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சரி, மார்க்ஸ் எங்கேயாவது பொருளாதாரம் எனத் தனியாகப் பேசினாரா? பூர்ஷ்வா பொருளாதார அறிஞர்கள் அப்படிப் பேசியிருக்கலாம். மார்க்ஸ் எப்போதுமே ‘அரசியல்’ பொருளாதாரம் என்றே பேசுவார். பொருளாதாரச் சுரண்டலை அரசியலாக்கி விடுவது ஆளும் வர்க்கத்தின் தந்திரம். பொருளாதாரச் சுரண்டல் முறைகள் சட்டமாக்கப்படுகின்றன, பொருளாதாரமல்லாத முறைமைகளின் மூலமாக நியதிகளாக்கப்படுகின்றன, அது பொருளாதாரச் சுரண்டல் அல்ல, அது ஒரு புனித நியதி, அது ஓர் அறம், அது ஒரு சமூக நிர்வாகமுறை என்றெல்லாம் ஆக்கப்படுவதன் மூலமாகவே ஆளும் வர்க்கம் வெற்றிபெறுகிறது.

பொருளாதாரத்திற்கும் அரசி யலுக்கும், பொருளாதாரத்திற்கும் கலாச்சார வடிவங் களுக்கும், பொருளாதாரத்திற்கும் அறத்துக்கும் மதத் திற்கும் இடையிலான உறவுகள் மிகச் சிக்கலானவை, தந்திரமானவை. அவை தனித்தனியாக அலைவது கிடையாது. எல்லாவற்றையும் விட அப்பட்டமானது, நேரடியானது, கட்டாயமானது பொருளாதாரச் சுரண்டல் என்பதே மார்க்சியத்தின் அறிவிப்பு. எனவேதான் அதனைப் பொருள்வகைச் (Material) சுரண்டல் என்றார் மார்க்ஸ். அரசியல் அதிகாரம் அல்லது சமய அதிகாரம் நிறுவனப்படும்போது அதுவும் பொருள்வகை உறவமைப்புதான்.

கருத்துக்கள் பல கோடி மக்களைப் பற்றிப் பிடிக்கும்போது அது பொருட்சக்தியாக மாறுகிறது என்று மார்க்ஸ் சொல்லுவாரே! அரசியலும் மதமும் பொருட்சக்தியாக முடியாது என்று மார்க்ஸ் எங்காவது சொல்லுகிறாரா, என்ன? அணு எப்படி ஒரு சடப்பொருளோ அது போலவே அந்த அணுவை உடைக்கும்போது தோன்றும் ஆற்றலும் பொருட்சக்திதான். நிறுவனப்பட்ட அதிகாரம் ஒரு பொருளாற்றல் என்பதை மார்க்சியம் மறுக்காது.     

அந்தோனியோ கிராம்சியும் லூயி அல்த்தூசரும்

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பன்மீய அமைப்புகள் என்ற எதார்த்தத்தை ஏதோ ஒரு வகையில் சந்தித்து அதனை எதிர்கொண்டவர்களாக கிராம்சி

யையும் அல்த்தூசரையும் சொல்ல வேண்டும். கிராம்சி பண்பாட்டு அரசியல், குடிமைச் சமூகம் போன்ற கருத்தாக்கங்களைச் சென்று சேர்ந்தார்.  அல்த்தூசர் ஒற்றை நிர்ணயம் என்பதை மறுத்து மிகைநிர்ணயம் அல்லது குவி நிர்ணயம் என்ற முடிவுக்குச் சென்றார். பொருளாதாரம் கடைசி கடைசியாக நிர்ணயிக்குமாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு வரலாற்றுச் சந்தர்ப் பத்திலும் பொருளாதாரமே ஆளுமை செய்யும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றார்.

எது நிர்ணயிக்கிறது? என்பது ஒரு பகுப்பாய்வுக் கேள்வி. குறிப்பிட்ட வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் எது ஆளுமை செய்யும்? என்பது நடைமுறைக் கேள்வி என்று அல்த்தூசர் விளக்கமளித்தார். Determinant, Dominant என்ற இரண்டு கருத்தாக்கங்களை அல்த்தூசர் பயன் படுத்தினார். ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி போன்றவை அப்படி ஒற்றையாகவெல்லாம் நிர்ணயமாகவில்லை என்றார் அல்த்தூசர். எந்தப் புரட்சியுமே அப்படி ஒற்றையாக நிகழாது என்பதுதான் அல்த்தூசரின் நிலைப்பாடு.

அந்தோனியோ கிராம்சியின்  Hegemony  என்ற கருத்தாக்கம் தமிழில் மேலாண்மை என்று மொழி பெயர்க்கப்படுகிறது. அக்கருத்தாக்கம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொழிலாளர் வர்க்க மேலாண்மை என்ற பொருளில் ஒலித்தது உண்மை தான்.

ஆயின் அதனை கிராம்சி பயன்படுத்திய போது, கிராம்சிக்குப் பிறகு எடுத்தாளப்படும்போது, அதற்கு மேலாண்மை என்ற பொருள் அவ்வளவு சரியானதாக அமைவதில்லை. பலவகைச் சமூக முரண்களை ஒன்றுபடுத்தும் அரசியலை அது முன்வைக்கிறது.

ஏதாவது ஒரு வகை சமூக முரணை முந்தியதாகக் காட்டாமல், முரண்களை ஒருங்கிணைக்கும் அரசியலை அது முன்மொழிகிறது. பலவகை முரண்களை ஒருங்கிணைப்பதற்கு ஆதாரமாக ஒரு சமநிலைத்தன்மை ((Equivalence) அமையும், அவை ஒரு பொது எதிரியை அடையாளப்படுத்தும் நிலை ஏற்படும், அதனை ஆதாரமாகக் கொண்டு ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும் என எனஸ்டோ லக்லவ் எனும் அறிஞர் வாதிடுகிறார். இது ஓர் அரசியல் பணி (Return of the Political) என்கிறார் சன்தால் மோஃபே என்ற அறிஞர்.

பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆட்படும் வர்க்கங்கள் கூட ‘இயல்பான நிலையில்’ ஒன்று பட்டதாக இருக்காது, அப்படி இருப்பதாகக் கருதுவது ஒரு கற்பனை என்கிறார் சன்தால் மோஃபே. துண்டு பட்ட சமூகப் பிரிவினரை, தனித்தனியாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் தனிமனிதர்களை ஒன்றுபடுத்துதல் என்பதே ஓர் அரசியல் வேலைதான் என்கிறார் அவர். சமூகக் குழுக்களோ, தனிமனிதரோ தம்மைத் தனித்த வராகக் கருதிக் கொள்ளுதல் ஒரு நேர்க்காட்சி நிலை.

தன்னிச்சையான நிலை. அயோத்திதாச பண்டிதர் அதனை சுயப்பிரயோசன நிலை என்றார். இது வழக்கிலுள்ள உடமைச் சமூக அமைப்பால் உருவாக்கப் படும் கருத்தியல் நிலை. இது உடமைச் சமூகம் உருவாக்கித்தரும் ஒரு பொய்யுணர்வு. இதைத் தாண்டிச் சென்று, அவற்றின் ஊடாகச் சென்று சமநிலைப் பண்பு களைக் கண்டறிந்து, எடுத்துரைத்து, ஒன்றிணைப்பது அரசியல். தனித்தனியாக ஒவ்வொரு சமூகப் பிரிவும் தமது உரிமைகள், நலன்கள் அடிப்படையில் தன்னுணர்வு பெறுதல் ஓர் ஆரம்ப நிலை; தன்னுணர்வு பெறுதல் என்ற நிகழ்வுப் போக்கின் முதல் நிலை.

இது தேவைதான்; இது தவிர்க்கமுடியாததுதான். ஆயின் இதுவே எல்லாமாக ஆகிவிடாது. தன்னுணர்வையும் சுயப்பிரயோசனத்தையும் பூர்ஷ்வா சனநாயகமே, பூர்ஷ்வா தாராளவாதமே அனுமதிக்கும். அவை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகராமல் தாராளவாத எல்லைகளுக்குள்ளேயே தொழில்படவேண்டும் என்பதே ஆளும்வர்க்கங்களுக்கு ஆதாயமான நிலை. ஆயின் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கு அது போதாது. போதவே போதாது. அது அடுத்தகட்டத்தை நோக்கி நகரவேண்டும். தன்னுணர்வையும் சுயப் பிரயோசனத்தையும் விடுதலை அரசியலாகக் கருதுவது அப்படிக் கருதும் சக்திகள் இன்னும் தாராளவாதத்தின் எல்லைகளைத் தாண்டவில்லை என்பதைக் காட்டும்.  

பொருள் எனும் கருத்தாக்கம் குறித்து

பொருளாதார உறவுகளை மார்க்சியம் பொருள் வகை (Material) உறவுகள் எனக் கண்டறிந்தது. இது உலகத் தத்துவ வரலாற்றில் ஒரு புதுநிலை. பஞ்ச பூதங்களையும் அணுக்களையும் மனித தேகத்தையும் புலனுணர்வுகளையும் மூளை மற்றும் நரம்பு மண்டலத் தையும் மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதிகள் ‘பொருள்’ (Matter) என வரையறுத்திருக்கின்றனர். மார்க்ஸ் சமூகவாழ்வினுள் ‘பொருளை’த் தேடினார்.

அது அவருக்குக் கிடைத்தது. மனித வாழ்வினுள் ‘பொருள்’ எனப்படுவது உழைப்பு, நடைமுறை, பொருளாதார உறவுகள், ஒடுக்கும் அதிகார அமைப்புகள், வர்க்கப் போராட்டம் என்றெல்லாம் மார்க்ஸ் புதுத்தத்துவம் பேசினார். இதுவே மார்க்சியத்தின் சாதனை.

பொருளாதார உறவுகள் அல்லது உழைப்பு என்பது பஞ்சபூதங்கள் அல்லது அணுக்கள் போன்றவையா? இவை ஒருவகைப்பட்டவையா? பஞ்சபூதங்கள், அணுக்கள், மனித தேகம் போன்றவை பௌதீகத் தன்மை கொண்டவை. பொருளாதார உறவுகளை மார்க்ஸ் ‘பொருள்’ என்ற கருத்தாக்கத்தினுள் கொண்டு வரும் போது எந்த வகையில் அவற்றைப் ‘பொருள்’ எனக் கருதினார்? என்ற கேள்வி முக்கியமானது. எது மனித வாழ்வை மிக அடிப்படையாகத் தீர்மானிக் கிறதோ, அது சமூக அசைவுகளைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவோ அவற்றை மார்க்ஸ் ‘பொருட்தன்மை’ கொண்டவை என்கிறார்.

அவற்றை மார்க்ஸ் ‘பொருள் வகைப்பட்டவை’ என்கிறார். எனவே வெறும் சடப்பொருட்களை, பௌதீகப் பொருட்களை மார்க்ஸ் மானிட வாழ்வினுள் தேடிக் கொண்டிருக்கவில்லை. புற உலகில் பௌதீக சக்திகள் போல் சமூக வாழ்வில் செல்வாக்கு செலுத்து பவற்றை அவர் தேடினார்.

சமூக வாழ்வில் பௌதீக சக்திகள் போல் இறுகிக் கிடக்கும் அத்தகைய பொருள் வகைப்பட்ட உறவுகளை அதேபோல பொருள் வகைப்பட்ட செயல்பாடுகளாலேயே உடைத்து நொறுக்கமுடியும் என்பது மார்க்சின் முடிபு. அதாவது உடமை உறவுகள் சமூகத்தினுள் பொருள்வகை உறவுகள்.

அவற்றை வர்க்கப்போராட்டங்கள் என்ற பொருள்வகைப்பட்ட செயல்பாடுகளாலேயே உடைக்க முடியும். கருத்தளவிலான ஆசைகளாலோ லட்சியங் களாலோ உபதேசங்களாலோ உடைக்க முடியாது என்பது மார்க்சியம். எனவே மார்க்ஸ் பயன்படுத்தும் ‘பொருள்’ என்ற கருத்தாக்கத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அது பௌதீகப் பொருளல்ல.

 சடப் பொருளல்ல. பௌதீகம் போல், சடப்பொருள் போல் சமூகத்தினுள் தொழில்படும் பொருள்வகைப்பட்ட  சமூக உறவுகள், அவற்றை உடைக்க முயலும் சமூகச் செயல்பாடுகள்.

தோற்றம் பெறும் போது கருத்தியல் உறவுகளாக அமைவதுகூட சமூகச் சூழல்களால் இறுக்கமடைந்து கெட்டிய நிலையை எட்டும்போது அவை பொருள்வகை உறவுகளாக மரிவிடுகின்றன.

ஒவ்வொரு நிலையிலும் நாம் இயங்கியலை மறந்து விடாமல் சேர்த்துச் சிந்திக்க வேண்டும். மார்க்சின் பொருள் என்னும் கருத்தாக்கத்தை நாம் இயக்க நிலையில், நிலையற்ற உறவமைப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  

இந்த விடயத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், பன்மீக அமைப்புகளை மார்க்சியம் எதிர்கொள்ளும் பிரச்சினையையும் எளிதில் கையாள முடியும். சமூகப் பரப்பினுள் எவையெல்லாம் பௌதீகத் தன்மையுடன், சடப்பொருள்போல், இறுகிக்கிடந்து மனிதக் கூட்டங்களை அமுக்கி வருகின்றனவோ அவையெல்லாமே பொருள்வகை அமைப்புகள் தாம். அவற்றை, அதேபோல பொருள்வகைப் பண்பு கொண்ட செயல்பாடுகள் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்பதே மார்க்சியம். பொருளாதார உறவுகள் மட்டுமே நம்மை அமுக்குகின்றன என்பதில்லை.

சாதி, ஆணாதிக்கம், நிறவெறி எனப்பல வடிவங்கள் நம்மை அமுக்கி அழிக்குமாக இருக்கலாம். அவை அனைத்துக்கும் எதிராக தீவிர விமர்சனச் செயல் பாடுகளைச் செலுத்தவேண்டும் என்பதே மார்க்சியம். பலவேளைகளில் கோட்பாட்டு விவாதங்களே இது குறித்த அவசியமில்லாதவை. நடைமுறைரீதியாகவே இப்பிரச்சினைகளைக் கையாளவேண்டும்.

Pin It