இயற்கை நமக்குக் கொடுத்துள்ள மிகப்பெரிய செல்வம் சுற்றுச்சூழல். பழங்காலத்தில் நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய மண்டலங்கள் தூய்மையாக இருந்தன. அதனால் மனிதனுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் நீர், காற்று அவசியம் தேவைப்படுகிறது. இன்றைய சூழலில் பலவிதமான மாசுக்களினால் நிலம், நீர், காற்று, ஆகாயம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் என்றைக்கு நெருப்பைப் பயன்படுத்தத் தொடங்கினானோ அன்றைக்கே காற்றையும், ஆகாயத்தையும் மாசுபடுத்தத் தொடங்கி விட்டான். இத்தகைய சுற்றுச்சூழல் மாசின் அவல நிலையினை மாற்றி மீட்டெடுப்பதில் சமூகத்தின் பங்களிப்பினை வெளிப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிலம் மாசடைதல்

மனிதனின் தலையாய கடமைகளுள் ஒன்று நிலத்தை நல்ல முறையில் பாதுகாத்துப் பராமரித்தல் ஆகும். முன்னோர்கள் நிலத்தைப் பராமரித்ததால் தான் பருவம் பொய்க்காமல் மழை பெய்தது. நிலத்தின் இயல்பை அந்நிலத்தில் பெய்யும் மழையின் அளவைக் கொண்டு அறியலாம். இதனை, நான்மணிக்கடிகையில்,

“நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணி என்ப தாமரை”  (நான்மணிக்கடிகை-9)

நிலத்தில் நீர் இல்லையெனில் நிலம் பாலைவனமாகிவிடும். மேலும்,

“நீரான் வீறு எய்தும் விளைநிலம்”   (நான்மணிக்கடிகை-83)

நீருள்ள நிலமே சிறப்புடையது, பெருமையுடையது என்று கூறுவதால் இயற்கைச் சூழலை முன்னோர்கள் பாதுகாத்து இருந்திருக்கிறார்கள்.

இன்று அழியாத குப்பைகளை நிலத்தில் போட்டு நிலத்தை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். நிலம் பொறுமை உடையது; நாம் எதைச் செய்தாலும் பொறுத்துக் கொண்டிருக்கிறது. அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நிலவளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டியது நமது கடமை. நிலச்சரிவு, பனிச்சரிவு, மண் அரித்தல் போன்றவற்றை சரியான முறையில் தடுக்க வேண்டும். கனிமங்களை வெட்டி எடுத்த பின்பு நிலத்தை சரியான முறையில் பாதுகாத்துப் பராமரித்தலை ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்.

இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தொழிலகம் கழிவுப் பொருட்களை நிலப்பகுதியில் விடுவதால் அந்நிலம் மாசுபாடு அடைகின்றது. இயற்கைத் தன்மைக்கு ஏற்றவாறு பூமியைச் சுழலச் செய்வது நம் கடமையாகக் கொள்ள வேண்டும்.

நீர் மாசடைதல்

பழந்தமிழர்கள் நீர்நிலைகளை மிகவும் நேர்த்தியாகப் பராமரித்தார்கள். அதற்கு அகழி, அருவி, ஆறு, ஏரி, கடல் என பல்வேறு வகையாகப் பெயரிட்டனர். மழைநீரை சேமித்து வறண்ட காலங்களிலும் பயன்படுத்தினார்கள். புறநானூற்றுப் பாடல் ஒன்று நீரைச் சேமிக்கக் கூடிய வழிமுறைகளைக் கூறுகிறது.

“அறையும் பொறையும் மணந்த தலைய

எண் நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்

தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ

கூர்வேல் குவைஇய மொய்ம்பின்

தேர்வண் பாரி தன் பறம்பு நாடே” (புறம் 118)

பாறைகளையும், சிறுமலைகளையும் இடை இடையே இணைத்து, பிறை வடிவில் ஏரிகளுக்குக் கரையமைக்கும் முறை பண்டுதொட்டே இருந்து வருகிறது. சிறுகுளங்களில் நீர் மிகுதியாக நிரம்பும் காலத்து அதன் கரை உடையாதவாறு காவலர் இருந்து பாதுகாக்கும் மரபு இருந்ததை அறிய முடிகின்றது. 

இப்போது இருக்கின்ற ஆறுகளிலும், ஏரிகளிலும் நீர் இல்லை. அதற்குப் பதில் குப்பைகளைக் கொட்டும் இடமாகவும் மாறி நீர் சேமிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகள், ஏரிகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு மழை நீரை ஆறுகளிலும், ஏரிகளிலும், குளங்களிலும் சேமித்து வைக்க முடியும். விவசாயம் நன்றாக இருக்கும். நிலத்தடியின் நீர் மட்டம் குறையாது. ஆகையால் ஒவ்வொருவரும் நீரைச் சேமிப்பது என்று கடமையாகக் கொள்ள வேண்டும்.

காற்று மாசடைதல்

வளிமண்டலத்தில் உள்ள காற்றானது போக்குவரத்து, தொழிற்சாலைகளில் ஏற்படும் புகை, மின்உற்பத்தி, விண்வெளி ஆய்வு போன்றவற்றால் மாசுபடுகிறது.

நம் முன்னோர்கள் சோலைகளை அமைத்து இயற்கையைப் பராமரித்து வந்தார்கள். தூய்மையான காற்று, நிழல் போன்றவை கிடைத்தன. இதனை திணைமாலை நூற்றைம்பது என்ற நூலில்,

“தாழை மா ஞாழல் ததைந்து உயர்ந்த தாழ்பொழில்

ஏழைமான் நோக்கி இடம்”   (தி.நூ.44)

அதாவது தாழை மரங்களும், கோங்கு மரங்களும் நெருங்கி வான்வரை வளர்ந்து பூஞ்சோலையில் பலரும் வந்து தங்குவதற்குரிய இடமாக இருந்ததை அறியமுடிகின்றது.

அக்கால மக்கள் மரத்தை வெட்டுவது பாவம் என எண்ணினார்கள். காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாறுவதை,

“மேகம் தோய் சாந்தம் விசை திமிசு காழ் அகில்

நாகம் தோய் நாகம் என இவற்றைப் போக 

எறிந்து உழுவார்” (தி.நூ.28)

என்ற பாடலின் மூலம் அறிய முடிகின்றது.

இன்றைக்குத் தூய்மையான காற்றைச் சுவாசிக்கக் கடற்கரைக்குச் செல்கின்றனர். அக்கடற்கரை கூட தற்போது உள்ள சூழலில் மாசடைந்து உள்ளதை அறிய முடிகிறது. நடைப்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்று சொல்கின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசலால் நச்சுப் புகையைச் சுவாசிக்க நேருகிறது. இதனால் மனிதனின் ஆரோக்கியம் சிதைகிறது.

காற்றின் தூய்மையைக் காக்க நாம் செய்ய வேண்டிய செயல்கள் என்னவென்றால் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்றவற்றை எரிப்பதைக் கைவிட வேண்டும். நம்மால் காற்று மாசுபடுவதைத் தடுக்கவும் குறைக்கவும் முடியும். இதனால் நோயற்ற வாழ்வை நாம் பெறலாம்.

நிலம், நீர், தீ, காற்று உருவாவதற்குக் காரணியாக அமைவது வான் எனலாம். இதனை,

“நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்”  (தொல்-1589)

என்று தொல்காப்பியர் ஐம்பெரும் பூதங்களால் இவ்வுலகம் அமைந்துள்ளதைக் குறிப்பிடுகின்றார். ஐம்பூதங்களையும் பாதுகாப்பது நம் கடமையாகக் கொண்டால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

“ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து

அளியதாமே - கொடுஞ்சிறைப் பறவை”     (குறுந்-92)

என்பதால் இம்மண்ணுலகில் உள்ள ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரை அனைத்தும் ஆகாயத்தினால் பயனடைகின்றன.

வளிமண்டலத்தில் ஓசோன் வாயு ஒரு பாதுகாப்பு அடுக்காக அமைந்துள்ளது. ஓசோன் வாயுவின் அளவு குறைந்து வருவதையும் ஓசோன் பாதுகாப்பு அடுக்கில் பெரிய ஓட்டை இருப்பதையும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆகையால் ஓசோன் மண்டலத்தைப் பாதுகாப்பது பற்றிய சிந்தனை விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் சமுதாயம் மாசில்லாத தூய்மையான சமுதாயமாக மலர வேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இன்றைய சூழலில் மனிதனின் தலையாய பிரச்சனைகளில் ஒன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு. நிலத்தைப் பாதுகாக்கப் பசுமைக்காடுகளை வளர்க்க வேண்டும். எந்திரக் கழிவுகளால் விளைநிலம் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாத்தல், காடுகளை வளர்த்தல் ஆகியவற்றால் மட்டுமே உலகை சூழல் மாசுபாட்டிலிருந்து காக்க முடியும். பாலித்தீன் தொடர்புடைய பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்”    (திருக்-435)

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க இயற்கையோடு இணைந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் காக்காமல் விட்டுவிட்டோம் என்றால், இனிவரும் காலங்களில் வளமான வாழ்க்கை அமையாது. ஆகையால் எதிர்காலத் தலைமுறைகளுக்காகச் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாயக் கடமையாகும்.

பார்வை நூல்கள்

1) நான்மணிக்கடிகை
2) புறநானூறு
3) திணைமாலை நூற்றைம்பது
4) தொல்காப்பியம்
5) குறுந்தொகை
6) திருக்குறள்

Pin It