மழை ஒய்ந்துவிட்டது. ஆனாலும் மீட்டெடுக்க முடியாத வலியாலும், துயரத்தாலும் துவண்டு போன நீலகிரி மக்களை எத்தகைய ஆறுதல்சொல்லி ஆற்றுப்படுத்துவது..? வாழ்வாதாரங்களை இழந்து நிவாரண‌ முகாம்களில் நிர்க்கதியாய் நிற்கும் மக்களின் முகங்களில் படிந்துள்ள மிரட்சியை மீட்புப்பணிகளால் துடைத்தெறிய முடியுமா..? ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பரில் பெய்யும் வடகிழக்குப் பருவமழையில் நீலகிரியில் மரம் சாய்வதும், நிலம் சரிவதும் வாடிக்கையாகி விட்டது. 1865 தொடங்கி 2009 வரையிலும் நூற்றுக்கணக்கான உயிர்பலிகளும் பொருள் நாசமும் நிகழ்ந்துள்ளன. வனவிலங்குகளின் உயிர்ப்பலி குறித்த கணக்கும், கவலையும் யாருக்கும் இருந்ததில்லை.

உலக வெப்பமயத்தால் பருவகாலங்கள் திசைமாற பெரும் மழை, கடும்வறட்சி என உயிர்களின் வாழ்வை உலுக்கத்தொடங்கி விட்டது இயற்கை. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களில் பெய்துவிட்டது. மூன்று நாட்களில் 630 மி.மீ மழையால் 2000 வீடுகள் சேதமடைந்தும் 60 வீடுகள் முற்றிலும் மண்ணில் புதையுண்டும் போயின. வாழ்விடமிழந்த 1100 மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். நீலகிரியில் 105 கி.மீ. மாநிலச்சாலைகள் பாளம் பாளமாய் வெடித்து 543 இடங்களில் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளன. 145 சிறு பாலங்களும் தடுப்புச்சுவர்களும் இருந்த இடத்தை விட்டு ஆயிரம் அடிகள் தூக்கிவீசப்பட்டுள்ளன.

மலைக்கும், மழைக்கும் ஏன் இவ்வளவு கோபம்..?

1815-யிலிருந்து 1830 வரையிலும் கோவை கலெக்டராகயிருந்த ‘ஜான் சல்லிவன்’ நீலகிரிகாடுகளில் பதித்த முதல் காலடிச்சுவடுகளே அந்த காடுகளின் கேடு. சேர அரசர்களும், திப்புசுல்தானும் நீலகிரிவனப்பகுதியை தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக அறிவித்துக் கொண்டிருந்த காலத்தில்… ஆதிக்குடிகளான தோடர், கோத்தர், பனியர், சோளகர், இரும்பர், படகா பழங்குடிகள் வாழ்ந்து வந்தார்கள். இந்த ஆதிக்குடிகளின் நிலங்களை அபகரித்து சில நூறுபேரை கொன்றழித்து அவர்களின் குருதியின் ஈரத்தில் தான் நீலகிரியில் முதல் கட்டிடம் எழுந்தது. ஆங்கிலேயர்கள் தொடங்கிய பணியை நமது ஆட்சியாளர்கள் வேறு வேறு வகையில் தொடர்கிறார்கள்.

உலகின் வளமை மிக்க புல்வெளிப்பரப்பை கொண்ட நீலகிரி வனப்பகுதியை “யுனெஸ்கோ” இந்தியாவின் முதல் பல்லூயிர்க்கோவை (பயோஸ்பியர்) என அறிவித்தது. உலகில் உள்ள புற்களில் 1220 வகைபுற்கள் நீலகிரியில் பல்வேறு வனப்பகுதிகளில் உள்ளன. இந்த புற்கள் தான் மழைநீரை சேமித்து ஊற்றுக்களாய், ஓடைகளாய் சிற்றாறுகளால், நதியாய் பெருக்கெடுத்து ஆண்டு முழுவதும் தென்னக மாவட்டங்களில் உள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் வேளாண்நிலங்களுக்கு உயிர்தருகிறது. நூற்றாண்டுகளுக்கு மேலாய் தொடரும் காடழிப்பில் 30 விழுக்காடு புல்வெளிப்பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டன.

நீலகிரியின் தனித்துவமே நதிகளின் கருவறையாகத் திகழும் சோலைக்காடுகளும் புல்வெளிகளும் தான். ஆங்கிலேயர்கள் தங்களது சுயநலனுக்காக அழித்த நமது காடுகளை சுதந்திரத்திற்குப் பிறகு பேணிப்பாதுகாப்பதற்கு மாறாக மேலும், மேலும் அழித்தோம். பெரும் செல்வந்தர்கள் அங்கு குடியேறினார்கள். அவர்களுக்கு ஊழியம் செய்ய கூடவே அடிமைகளையும் அழைத்துப் போனார்கள். சாலைகளும், குடியிருப்புகளும் பெருகின. பல ஆயிரம் ஏக்கர் பரப்பு தேயிலைத்தோட்டங்கள் பத்துப் பதினைந்து பணக்காரர்களின் கையில் உள்ளன. உலகின் பல்வேறு பகுதி மக்களின் சுற்றலாத்தளமாக நீலகிரி உருவான பின்பு வந்து போகும் மக்களின் வசதிகளுக்கேற்ப நவீன குடியிருப்புகளும், உணவுவிடுதிகளும், உல்லாச விடுதிகளும் அமைக்க கானகத்தின் பெரும்பகுதியை சூறையாடி எழுந்த கான்கிரிட் கட்டிடங்களின் வளர்ச்சியில் தான் நீலகிரியின் இயற்கை வீழ்ச்சியடைந்தது.

“சூழலும் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத தொடர்புடைய நாணயத்தின் இருபகுதிகள் மட்டு மீறிய நுகர்வுப்போக்கு வாழ்க்கை முறையாக பரிணமித்துவிட்டதும், இயற்கைவளங்களை வரம்பின்றி சூறையாடும் அபத்தமும் தான் சுற்றுச்சூழலின் முதன்மையான எதிரிகளாக விளங்குகின்றன” என்று கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ ரியோ பூமி மாநாட்டு அரங்கில் நிகழ்த்திய உரையில் வளர்ச்சிக்கும் நிரந்தர வளர்ச்சிக்குமான வேறுபாடு மிகத்துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளதை நீலகிரி உயிர்ச்சூழலுக்கும் காடழிப்பிற்க்கும் பொருத்திக்கொள்ளலாம். மரபுசார்ந்த புற்களையும், சோலைக்காடுகளையும் இழந்துவிட்ட நீலகிரி கொஞ்சம் கொஞ்சமாய் மண்ணின் மீதான பிடிமானத்தையும் இழந்துவிட்டது. மந்தாடா, மரப்பாலம், வேலிவியூ போன்ற பகுதிகள் மழைக்காலங்களில் சரியும் ஆபத்தில் இருப்பதை புவியியல் ஆராய்ச்சித்துறை ஆய்வு செய்து அறிவித்ததை ஆட்சியாளர்கள் உயர்ந்து கொண்டதாய்த் தெரியவில்லை. அண்மையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவசப்பட்டாக்களையும் வீடுகட்ட 80ஆயிரம் நிதிஉதவியும் செய்திருக்கிறது. அரசு அப்பாவி மக்களை வெறும் ஓட்டு வங்கிகளாகப் பாவிக்கும் போக்கை வெளிப்படுத்துகிறது இத்தகைய செயல்பாடுகள்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஒன்பது இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இதில் ஒரு இலட்சத்து இருபத்தொன்பதாயிரம் பேர் ஊட்டி நகரில் வாழ்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் 23 இலட்சம் பேர் சுற்றுலாவிற்கு இந்த மாவட்டத்திற்கு வந்து செல்கிறார்கள். நீலகிரியின் மொத்த விவசாயப்பரப்பில் 80 விழுக்காடு தேயிலைத் தோட்டங்கள் தான். உலகமயமாக்கல் சூழ்ச்சியில் தேயிலையின் விலை வீழ்ச்சிகண்டதும் பலர் மலர்விவசாயத்திற்கு தாவி விட்டார்கள்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாய் நீலகிரியில் இயற்கைப் பேரிடர் நிகழும் போதெல்லாம் மீட்பு பணிசெய்து சிதைந்த சாலைகளை செப்பனிட்டு பலகோடிகளை செலவழித்துள்ளது அரசு. ஆனால் இந்த ஆண்டு பல கோடி செலவில் கட்டப்படும் தடுப்புச்சுவர், தடுப்பணை, சிறுபாலங்கள், சாலைகள் யாவும் அடுத்த ஆண்டு மழைக்காலத்தில் காணாமல் போகிற தரத்தோடுதான் கட்டப்படுகிறது என்கிற உண்மையோடு சேர்ந்து நீலகிரியில் மேற்கொள்ளும் காடழிப்பும், நகர் மயமாக்கும் வளர்ச்சிப்பணிகளும், சாலைப்பெருக்கங்களும் தான் நிலச்சரிவிற்கும், நிலவெடிப்பிக்கும் முதன்மை காரணங்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வடிகால்கள் மறிக்கப்பட்டு கட்டிடங்கள் அமைந்துள்ளன. நீலகிரியில் பலபகுதிகளில் யானைகளின் வழித்தடங்களையும் வனவாழ் உயிரினங்களின் வாழ்விடங்களையும் பறித்துக்கொண்ட கட்டிடங்கள் ஏராளம். இந்தக் கட்டிடங்கள் யாவையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும்.

நீலகிரியி 30 டிகிரி சாய்வான இடத்தில் கட்டிடம் கட்ட நீதிமன்றத் தடையுள்ள நிலையில் ஊட்டி நகரெங்கும் 70, 80 டிகிரி சாய்வான இடத்தில் சீட்டுக்கட்டுகளைப்போல் கட்டிடங்கள் அடுக்கப்பட்டுள்ளன. 7 மீட்டர் உயரத்தை தாண்டக் கூடாது என்கிற சட்டவிதி இருந்தும் 87 வணிக வளாகங்களும் 15 மதக்கூடங்களும் 20 கல்வி நிறுவனங்களுமென 1337 கட்டிடங்கள் அனைத்து சட்டவிதிகளையும் மீறிக் கட்டப்பட்டதற்கு ஆட்சியாளர்களின் கடைகண் பார்வையும், அதிகாரிகளின் கையூட்டுமே காரணம்.

முந்தைய நீலகிரி மரபு சார்ந்த தாவரங்களின் கூட்டு வளர்ச்சியாலும் மரங்களின் வேர் பின்னலாலும் நிலைத்திருந்தன. அவைகள் தகர்ந்து பெரும் முதலாளிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆக்கிரமித்த பகுதிகளில் நீலகிரி மலை மண்ணுக்கு எந்தப்பலனையும் தராத தேயிலை, காய்கறி, பழத்தோட்டம் என்று பணப்பயிர் விளைநிலமாய் மாற்றி கெட்டி தட்டிய மண்ணை நெகிழச்செய்து விட்டார்கள்.

தனி மனிதர்களின் சுயநல வேட்டைக்கு ஏதுமறியாத மக்களின் உயிர்களை பலி கொடுக்கும் அடாதசெயல்களுக்கு அரசுத்துறைகளே பின்புலமாய் இருப்பதை அறியும் பொழுது அதிர்ச்சியாகயிருக்கிறது. இயற்கையின் பொதுச்சொத்தான மலையின் பாறைகளைப் பெயர்த்து விற்று காசுபார்க்கும் 120-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருவதும் பெரும் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது மலையே அதிர்வதும், அதன் பொருட்டு பாறைக்கும் மண்ணுக்குமுள்ள நுட்பமான உறவுமுறிந்து மழைக்காலங்களில் மலையே சரிந்து விழுகிறது. நீலகிரிமலைக்குன்றுகள் 70-விழுக்காடு மண்ணாலும் 30-விழுக்காடு பாறைபடிவங்களாலும் உருவானவை.

அச்சனக்கல் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராகப் பணியாற்றும் லூயில் என்பவரின் கான்கிரிட் கட்டிடம் மீது இரண்டு மூன்று பாறைத்துண்டுகள் சரிய அந்த வீடே மண்ணோடு மண்ணாய் சிதைந்து ஏழு மனித உயிர்களை நொடியில் விழுங்கி விட்ட சம்பவத்தை அப்பகுதி மக்களிடம் நேரில் அறிகையில் நமக்கு நெஞ்சம் பதறுகிறது.

1889-யில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட மலைத்தொடர் வண்டியின் பாதைகள் வெகுபலகீனமாய் உள்ளது. பல் சக்கரம் பொருத்தி ஓடும் அந்த “அப்ட்” வகை தொடர்வண்டியின் இயக்கத்தை நிறுத்தினால் எதிர்காலத்தில் நேரும் சில இழப்புகளை தவிர்க்கலாம். மலைத்தொடர்வண்டி வரலாற்றுப்பெருமிதம் அல்ல; வனஅழிப்பிற்கு துணையோன அவமானச்சின்னம். சுற்றுலா சந்தையாக நீலகிரி மாறிவருவதும் அதன் எதிர்கால ஆபத்துதான். வனம் வெகு மக்களின் பயன்பாட்டிற்கில்லை என்பதையே இந்த நிலச்சரிவு உணர்த்தியுள்ளது.

நிலச்சரிவும், நிலவெடிப்பும் மலையில் உற்பத்தியாகும் சிற்றோடைகளை மூழ்கடித்தும், திசைதிருப்பியும் விடுமேயானால், சமவெளியில் பாயும் அனைத்து நதிகளும் சுருங்கிப்போகும். நீலகிரி மாவட்டம் நிலநடுக்கப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருப்பதால் நடுவண் அரசின் 900-கோடி செலவில் சிங்காரா வனப்பகுதியில் அமைக்கும் நீயூட்ரினோ ஆய்வுக்கூடத்திற்க்கு மாநில அரசு அனுமதி தரக்கூடாது. மலைகளில் நடைபெறும் அனைத்து மேம்பாட்டுத்திட்டங்களும் இயற்கைக்கும், சூழலுக்கும் எதிரான செயல்தான் என்பதை அறிவியல் பூர்வமாய் அரசு உணரவேண்டும்.

“போலியான வளர்ச்சி மீது கொண்ட மோகம் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரும்பினால் ஏழைகளின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த முடியுமென” கென்யாவின் பசுமைப்போராளி 'வங்காரி மாத்தாயி' அவர்களின் பட்டறிவை உள்வாங்கி நேரம் கடத்தாமல் ஆக்கபூர்மான செயல்களில் அரசு இறங்கவேண்டும் என்பதையே சமூக அக்கறையுள்ள மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

- கோவை சதாசிவம், சூழலியல் எழுத்தாளர்

Pin It