YuvaBhaaratham 400தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன்னையே முழுமையாக இழந்த மாமனிதர் லாலா லஜபதிராய். அர்ப்பணிப்பு உணர்வும், அளவற்ற துணிச்சலும் இயல்பாகப் பெற்ற அவரைப் ‘பாஞ்சால சிங்கம்’ என்று வரலாற்றாசிரியர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுவது வழக்கம்.

கடந்த நூற்றாண்டில் 1929-ஆம் ஆண்டில், லாகூரில், பிரிட்டிஷ் எதிர்ப்புப் பேரணிக்குத் தலைமை தாங்கிச் சென்ற போது பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி அவரைக் குறிவைத்துத் தடியால் அடித்து மண்டையை உடைத்தான்.

அதன் விளைவாக, அவர் சில நாட்களில் உயிர் நீத்தார். அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில் இளம் புரட்சியாளர்கள் அடங்கிய பகத்சிங்கின் படை அந்தப் போலீஸ் அதிகாரியான சான்டர்ஸைச் சுட்டுக் கொன்றது.

நாட்டுப் பற்றும், தியாக உணர்வும், செயல் திறனும் இயல்பிலேயே வாய்க்கப் பெற்றிருந்த லாலா லஜபதிராய் எழுதிய பல நூல்களில் ஒன்று ‘யுவ பாரதம்.’ இதையே பின்னாளில் மகாத்மா காந்தி தன்னுடைய பத்திரிக்கைக்குப் பெயர் வைக்கும்போது ‘யங் இந்தியா’ என்று மாற்றிக் கொண்டார்.

கடந்த, “1915-ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் அவ்வாண்டு மே மாதம் வரை அமெரிக்க ஐக்கிய நாட்டில் நான் பயணம் செய்து கொண் டிருந்த போது இதை எழுதினேன்!” என்று லாலாஜி குறிப்பிடுகிறார். ஆகவே, இந்த நூலுக்கு இப்போது நூறு வயதாகிறது. இது, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய மண்ணில் ஊன்றப்பட்ட விடுதலையுணர்வு முளைவிட்டு அரும்பி, வளர்ந்து பக்குவப்பட்ட நிலையை உள்ளடக்கிய பல வரலாற்று உண்மைகளின் செறி வான தொகுப்பாக அமைந்துள்ளது.

இந்த நூல், “முழுவதிலும் ‘காங்கிரஸ்’ என்பது ஒத்துழையாமை இயக்கத்திற்கு முற்பட்ட காங்கிரஸையே குறிக்கும் என்பதை வாசகர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்” என்பதையும் லாலாஜி குறிப்பிடுகிறார்.

அவரே மேலும் தொடர்ந்து சில தெளிவு களையும், வரையறைகளையும் முன்வைக்கிறார். “பல வகையான தேசியவாதிகளைப் பற்றி இந் நூலில் கூறியிருக்கிறேன். அவர்கள் 1915-ஆம் ஆண்டிலிருந்த வகையினராவர். அவர்களைப் பற்றி விவரிப்பதில் அப்போதிருந்த இந்திய அபிப்பிராயத்தை எடுத்துக்காட்டவே முயன்றிருக்கிறேன். தேசத்தின் தற்போதைய நிலையில் எவ்வகை பலாத்கார முறையும் கூடாதென்பதே என்னுடைய சொந்தக் கருத்தாகும்.”

இங்கிலாந்தில் வெளியான இந்நூலின் பதிப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ததுடன் பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் இந்நூல் வரக்கூடாதென்று தடையுத்தரவு விதித்தார்கள். பெரும் கிளர்ச்சிக்குப் பின்னர் 1926-ஆம் ஆண்டில் தான் இத்தடையுத்தரவு நீக்கப்பட்டது.

வெளிநாட்டவர்கள் இந்தியாவைப் பற்றி தவறான மதிப்பீடுகளையே கொண்டிருந்ததை நேரில் கண்ட லாலாஜி அவற்றைக் குறித்து மிகவும் வருந்தியதாகக் குறிப்பிடுகிறார். இந்தியாவிற்கு வந்து திரும்பிய பாதிரிமார்கள், ரட்யர்ட் கிப்ஸங், ஸர் வாலன்டைன் சிரால் போன்ற ஆங்கில நூலாசிரியர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகள் மாக்ஸ் முல்லர், மிஸ் நோபிள் (சகோதரி நிவேதிதை) போன்றவர்களின் கருத்துக்களைக் கொண்டே அவர்கள் இந்தியாவைப் பற்றித் தெரிந்து வைத் திருந்தார்கள்.

அவர்களுடைய மதிப்பீட்டின்படி இந்தியா மிகவும் பின் தங்கிய நாகரிகமுடைய நாடு என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள். அந்தப் போக்கு களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் வரலாற்றுப் பெருமைமிக்க இந்தியாவை வெளிநாட்டவர் களுக்குத் தகுந்த சான்றுகளுடன் லாலாஜி அடை யாளப்படுத்துகிறார்: ‘நூன்முகம்’ என்ற பகுதியில் இந்தியாவின் தொன்மையான வரலாற்றுச் சிறப்புக் களைப் பகுப்பாய்வு முறையில் விவரிக்கிறார். இதுவரை பலராலும் அறியப்படாத செய்திகளை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார். கிரேக்க, ரோமானிய நாகரிகங்களை விடவும் சிறப்பு மிகுந்தது இந்திய நாகரிகம் என்பதை

அதன் அரசியல், பொருளாதார அறிவியல் கலை, கலாச்சாரப் பண்பாட்டு வாழ்க்கை வளர்ச்சி நிலைமைகளிலிருந்து சரியான தரவுகளுடன் லாலாஜி விளக்குவது அவரது ஆழ்ந்த ஈடு பாட்டைப் புலப்படுத்துகிறது. கிழக்கையும், மேற்கையும் அவைகளின் அடிப்படையிலேயே ஆய்வு செய்து மதிப்பீடுகளை நிறுவுகிறார்.

அவற்றில் தொன்மையான இந்தியாவின் வளமும், ஆற்றலும் புலருகின்றன. வாசிப்புக்கு உகந்த வகையில் தகுந்த ஆவணங்களுடன் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தகவுகள் ஒருங்கிணைக்கப் பட்டிருப்பது லாலாஜியின் தெளிவான கண் ணோட்டத்தை உணர்த்துகிறது.

அதே சமயத்தில் வீழ்ந்துபட்ட இந்தியாவின் பரிதாப நிலைமைகளையும் விருப்பு வெறுப்புக்கு உள்ளாகாமல் தெளிவாக விளக்குகிறார். சமகால நிகழ்வுகளைக் குறித்து ஆழ்ந்த ஈடுபாட்டின் தகவு களைச் சேகரித்து இந்திய வரலாற்றின் மாற்றங் களை முன்வைக்கிறார். அறிவியலில் முன்னணியில் நிற்கும் நாடுகளுக்கும், வளமான இந்தியாவிற்கும் இடையிலான மாறுபாடுகளையும், வேறுபாடு களையும் கூர்மையாகக் கவனித்துப் புதிய மதிப்பீடு களை லாலாஜி முன்வைக்கிறார்.

வெளிநாட்டவர் களின் தொடர்புகளால் ஏற்படும் தாக்கங்களையும், அவற்றிற்கான எதிர்வினைகளையும் அவர் குறிப் பிடுவதில் அவருடைய நேர்மையான மனத்திறனை இனம் கண்டுகொள்ள முடிகிறது. ஆக்கரீதியான திறனாய்வுக் கண்ணோட்டத்தை வாசகர்கள் பெறும் வகையில் லாலாஜி தன்னுடைய கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்கிறார்.

வரலாற்றின் மாறுதல்களையும், வளர்ச்சிகளையும் இயங்கியல் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்வது முறை யான மதிப்பீட்டுக்கு இட்டுச் செல்கிறது.

பழமையான, நில உற்பத்தி சார்ந்த இந்தி யாவை வணிக நோக்கத்துடன் வந்த வெள்ளையர் களைப் படிப்படியாகக் கவர்ந்து, நவீனத்தொழில் உற்பத்தி முறைகளுக்கு இட்டுச் சென்ற போக்கு களை விவரிக்கிறார். காலனியாதிக்கம் வலிமை பெற்ற விதத்தையும் அவர் சித்திரிக்கத் தவற வில்லை. சாதி, மத, இன வேறுபாடுகளை மறந்து இணக்கமாக வாழ்ந்த மக்கள் சமுதாயம் எப்படி யெல்லாம் பிளவுபடுத்தப்பட்டன என்பதையும் வரலாற்று நோக்கில் அவர் மதிப்பிடுகிறார்.

முகம்மதிய ஆட்சியை நீக்கிப் படிப்படியாக இந்தியாவைக் கைப்பற்றி அதைக் காலனி நாடாக மாற்றிய வெள்ளை ஏகாதிபத்தியத்தின் முக்கிய மான பொருளாதார நடவடிக்கையைக் குறிப்பிடு கிறார் லாலா லஜபதிராய்: “வியாபாரத்திலும் கைத் தொழிலிலும் நாம் இதைவிடச் சிறந்த நிலைமை யிலில்லை.

நமது பழைய கைத் தொழில்கள் எல்லாம் அந்நிய நாட்டுப் போட்டியினால் நாசமாயின. புதிய கைத் தொழில் முயற்சிகளுக்கோ, பிற நாட்டு ஜனங்களின் நன்மையை முன்னிட்டு இடையூறுகள் செய்யப்படுகின்றன. இதற்கு உதாரணமாக பருத்தித் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள எதர் வரியைக் குறிப்பிடுவதே சாலும். இவ்வரியானது மான் செஸ்டர், லங்காஷயர்வாசிகளின் நன்மைக் காகவே விதிக்கப்படுகிறது.”

மக்களின் மீது கடுமையான வரிகளையும், அவர்களுக்கு எதிரான சட்டங்களையும் ஆங்கில அரசு பிறப்பித்ததன் விளைவாக மக்களுக்கிடையில் இருந்து வந்த பாகுபாடுகள் தகர்ந்து படிப்படியாக ஒற்றுமை உணர்வு வளர்ந்ததைக் குறிப்பிடும் லாலாஜி மாற்றத்தின் அறிகுறிகளைப் புலப்படுத்து கிறார்: “இந்தியாவில் புதியயுகம் பிறந்து விட்ட தென்பதை பிரிட்டிஷார் உணரவேண்டும்.

அவர்கள் பிரித்தாளும் முறையில் தேர்ந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்தியர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். எனவே, அவர்களுடைய முறை சென்றகாலத்தில் பயனளித்த அளவு வருங் காலத்தில் அளித்தல் நிச்சயமில்லை.”

இதைத் தொடர்ந்து லாலாஜி ‘யுவ பாரதம்’ குறித்து விரிவாக ஆய்வு செய்து மதிப்பீடுகளை முன்வைத்து வளர்ச்சிப் போக்கை அடையாளம் காட்டுகிறார்.

உலக வரலாற்றில் கி.மு. 32ஆம் ஆண்டில் நிகழ்ந்த மகா அலெக்சாண்டரின் இந்தியாவின் மீதான படையெடுப்புச் சூழலை விரிவாக ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து, அவ்வப்போது நிகழ்ந்த இந்தியாவின் மீதான படையெடுப்பு களையும் அவற்றின் விளைவுகளையும் முறையாக வரிசைப்படுத்தி அவற்றுக்கு வரலாற்று வடிவத்தை அளிக்கிறார்.

முகம்மதியர் ஆட்சியின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் குறித்த காரண காரியங்களை அவர் குறிப்பிடுகிறார் அதைத் தொடர்ந்து வந்த பிரிட்டிஷ் ஆட்சியின் படிப்படியான வளர்ச்சியையும், இந்தியாவின் தொடர்ச்சியான வீழ்ச்சியையும் லாலாஜி சித்திரிக்கிறார். ஆளும் வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையிலான மோதல்களையும், விரிசல்களையும், தகர்வுகளையும் வரலாற்று மாற்றங்களினூடாக அவர் விளக்கிக் காட்டுகிறார். “பிரிட்டிஷாரின் கை திட்டமாக ஓங்கும்படி செய்த முதலாவது வெற்றி அவர்களுக்கு 1757-ஆம் ஆண்டில் பிளாஸிக் சண்டையில் கிடைத்தது.

“இவ்வெற்றி இந்தியாவில் ஆங்கில அதி காரத்துக்கு அடிப்படை அமைத்துவிட்டதென்று கூறலாம். 1757 முதல் 1857 வரை ஒரு நூற்றாண்டுக் காலம் இராணுவச் சண்டைகளும், இராஜ தந்திரப் போராட்டமும் இடைவிடாது நிகழ்ந்த கால மாகும். சாம்ராஜ்ய ஸ்தாபனம், பொருளீட்டம் என்னும் இருவகை நோக்கத்தை இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறக்கவேயில்லை.”

விசாலமான மிகப் பெரிய ஒரு நாட்டை ஆங்கிலேயர்கள் தந்திரமாகக் கைப்பற்றி ஆட்சிக்கு உட்படுத்திக் கொண்டனர் என்ற உண்மையை மிகத் தெளிவாக அவர் உறுதிப்படுத்துகிறார். “இராணுவ பலங்கொண்டு போராடி பிரிட்டி ஷார் இந்தியாவை வெற்றி கொண்டதாக எவ் விதத்திலும் சொல்ல முடியாது.

இந்தியர்களில் சிலருக்கு அச்சமூட்டியும், சிலருக்கு ஆசை காட்டியும், மற்றவர்களின் உதவியையும், செல் வாக்கையும் தேடி அடைந்தும் அவர்கள் இந்தி யாவை ஜெயித்தார்களேயன்றி, வேறு வழியில் வெற்றியடைந்திருக்க இயலாது. இந்திய சரித் திரத்தில் இந்தப் பகுதி பழி மிகுந்ததாகும்.” தொடர்ந்து, 1857-ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்க் கலகம் பற்றிய பின்னணியையும், அதை எதிர்கொண்டு முழுமையாக அடக்கி ஒடுக்கிய முறைகளையும் ஆய்வு செய்து அதைப் பற்றிய முடிவு களையும் மதிப்பீடுகளையும் முன்வைக்கிறார்.

அதற்குப் பின், இந்தியர்களிடையே ஆங்கிலக் கல்வி மற்றும் கலாச்சார பண்பாட்டு மோகம் தீவிரமாக வளர்ந்தது. வங்காளம், பம்பாய், சென்னை போன்ற மாகாணங்கள்தான் நவீன முறையில் கல்விப்பயிற்சி பெற்றிருந்தன.

ஆங்கிலம் படித்தவர்களுக்கு முன்னுக்கு வர வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. வங்காளிகள் இதில் முன்னணியில் இருந்தார்கள். இங்கிலாந்தில் படிக்கவும், ஐ.சி.எஸ், ஐ.எம்.எஸ். பரீட்சைகளில் போட்டியிடவும் முதன் முதலில் தங்கள் புதல்வர்களை அனுப்பி வைத்த வர்கள் வங்காளிகளே. பலர் கிறித்தவர்களாக மாறத் தொடங்கினார்கள்.

அந்த மாறுதலைக் கண்டு பயந்த ராஜாராம் மோகன்ராய் போன்ற சிலர் மேனாட்டு நாகரிகத்தைக் கட்டுப்படுத்து வதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள். அவர் பிரம்ம சமாஜத்தை நிறுவி இந்தியாவில் தேச நிர்மாணத் தொண்டு செய்தவர்களில் முதன்மையானவர். கிழக்கும் மேற்கும் ஒன்று கலந்த நிலைமை களால் நெடுங்காலமாக நிலவிவந்த பல பிற் போக்குத்தனங்களும், மூடநம்பிக்கைகளும் தகர்ந்தன.

வங்காளத்தில் இராம்மோகன்ராய், தேவேந்திரநாத தாகூர், இராஜேந்திரலால் மித்ரா ஆகியவர்களும், மகாராஷ்டிரத்தில் ரானடே, விஷ்ணுபண்டிதர் முதலியோரும், வட இந்தி யாவில் சுவாமி தயானந்தரும், ஸர்சையத் ஆமத்கானும், சென்னையில் மாடம் பிளாவட்ஸ்கி முதலான பிரம்ம ஞான சங்கத்தவர்களும் எழுதிய நூல்களில் புதிய ஊக்கம் பிறந்தது.

பின்னாளில், ஸ்ரீமதி அன்னிபெசண்டும், சுவாமி விவேகானந்தரும் எழுதியவற்றாலும், அவர்கள் புரிந்த உபந்நியாசங்களாலும் அவ் வூக்கம் வளர்ச்சியடைந்தது. முக்கியமாக சமய, சமுகத் துறைகளில் இவ்வூக்கம் எழுந்ததென் றாலும் அதனால் தேசியத் துறையிலும் பெரும் பயன் விளைந்தது என்பது வெளிப்படையான ஓர் உண்மை. பெண் விடுதலையை வலியுறுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் பக்கிம் சந்தர் ஆழ்ந்த ஈடுபாடு காட்டினார்.

ஆங்கிலேயர்களான ரிப்பன் பிரபு, லார்டு டபரின், மிஸ்டர் ஹியூம் போன்றவர்கள் ஆங்கிலே யருக்கும் இந்தியர்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தி அமைதியான ஆட்சியை இந்தியாவில் நிறுவுவதற்கு முயன்றனர். மக்களிடையே தன்னம் பிக்கையையும் விடுதலை உணர்வையும் படிப்படி யாக வளர்த்தனர். இந்தியர்கள் தங்களுடைய விருப்பங்களையும், தேவைகளையும் அரசுக்குத் தெரிவிக்கும் நோக்கத்தில் மிஸ்டர் ஹியூம் 1885ல் காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்த வரலாற்றுத் திருப்புமுனை பற்றிய சூழலையும் தகுந்த ஆதாரங் களோடு லாலாஜி விரிவாகவும், தெளிவாகவும் நிறுவுகிறார்.

அதைத் தொடர்ந்து, இந்தியர்களிடையே வளர்ந்த புதிய கண்ணோட்டம், புதிய சிந்தனை களும், புதிய நடைமுறைகளும் இந்திய மக்களிடையே பல வகையான மாற்றங்களைத் தோற்றுவித்தன. தொடர்ந்து வளர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியில் இருவேறு போக்குகள் தோன்றின. ஒன்று ஆங்கில அரசைச் சார்ந்தும், இன்னொன்று அதற்கு முரண்பட்டும் வளர்ந்தன. அதுவே, பின்னாளில் தனிப்பட்ட தேசிய காங்கிரஸ் கட்சி யாக உருவெடுக்க அடிப்படையாக அமைந்தது.

இந்தியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் கூர்மையடைந்ததால் ஆங்கில அரசு கடுமையான சட்டங்களின் வாயி லாகவும், கடுமையான அடக்குமுறை நடவடிக்கை களாலும் மக்களை அடக்கி ஒடுக்க முனைந்தது. அதன் விளைவாக, ஆங்கில ஆட்சி எதிர்ப்புணர்வு பல வகைகளிலும் தனித்தனியாக வெளிப்பட்டது. வங்காளப் பிரிவினை ஆங்கிலேயர்களுக்கு ஒரு சவாலாக அமைந்தது. அளவில்லாத வகையில் மக்கள் தொல்லை, துன்ப, துயரங்களுக்கு உள்ளானார்கள்.

அவைகளின் விளைவாக, நாட்டில் புது வகையான பிரச்சினைகள் தோன்றின. முதலாவது உலகப்போர் தொடங்குவதற்கான சூழல்கள் உருவாகின. மக்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகளால் சமுதாய விழிப்புணர்வு கூர்மை யடைந்தது. அரசியல் போராட்டங்கள் பல வகையான முறைகளில் நடைபெற்றன. இவற்றை யெல்லாம் ‘யுவ பாரதம்’ ஆழமாகவும், தெளி வாகவும், துல்லியமாகவும் வெளிப்படுத்துகிறது.

முதலாவது பதிப்பாக 1937ல் இந்த நூலை வெளியிட்ட இராஜபாளையம் பூ.ச. குமாரசாமி ராஜா அவர்கள் இதன் முக்கியத்துவத்தைப்பற்றி இப்படிக் கூறுகிறார்: “இவ்வரிய புத்தகம் தமிழர்களுக்கும் பயன்பட வேண்டுமென்ற கருத்தினால், லாலாஜி தமிழ்நாட்டுக்கு வந்திருந்த போது அவரையே நேரில் கேட்டு, இதைத் தமிழில் வெளியிடுவதற்கு அனுமதி பெற்றோம்.

தமிழ்ப் பதிப்பு வெளியாவதற்கு முன்னர் நமது ஆசிரியர் வீர மரணம் எய்தி வீரசுவர்க்கம் அடைந்தார்.”

“சத்திய சோதனை” என்னும் மகாத்மா காந்தியின் சுய சரிதத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவரும், தமிழ்நாட்டில் நடைச்சுவை கண்ட ஆசிரியர்களில் பெயர் பெற்றவருமான ஸ்ரீமான் இரா.கிருஷ்ணமூர்த்தி இப்புத்தகத்தின் மொழி பெயர்ப்பாசிரியர்.

வாசிப்புக்கு உகந்த வகையில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நூல், இந்திய வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றை விறுவிறுப்பான ஓர் ஆவணமாக அமைத்துள்ளது. வாசிப்பில் விருப்பமும், அரசியலில் ஈடுபாடும், வரலாற்று உணர்வும், ஆய்வு ஈடுபாடும் உடை யவர்கள் கண்டிப்பாகப் படித்து உணர வேண்டிய அருமையான நூல் இது.

யுவபாரதம்

ஆசிரியர்: லாலா லஜபதிராய்

தமிழில்: இரா.கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ.150/-

Pin It