அளவிட முடியாத அளவுக்கு சாதி, மத, இன, நிற, கலாச்சார, பண்பாட்டு மாறுபாடுகளையும் வேறு மாறுபாடுகளையும் உள்ளடக்கிய மிகப் பெரிய மக்கள் சமுதாயம் ஒன்றுகலந்து தொடர்ந்து இயங்கிவரும் நாடு இந்தியா. இதுவே இந்தியாவின் வியக்கத் தகுந்த தனித்தன்மை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நின்று நிலவி இயங்கி இடைவிடாமல் மாறிக்கொண்டும், வளர்ந்துகொண்டும் தனது தனித்தன்மை வாய்ந்த வரலாற்றைத் தொடர்ந்து நிறுவி வருகிறது.

இருந்த போதும், இந்திய விடுதலைக்கு முன்பு நீண்ட காலமாக நிலை நின்று வந்த சாதிய அடுக்குகளுக்கு இடையில் இருந்து வந்த வேறுபாடுகளும் மாறுபாடுகளும் இன்று வரை இருந்து வருகின்றன. பொருளியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் வர்த்தகத்தால் புறக்கணிக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படும் மக்கள் தலித்துக்கள் என்ற முத்திரையுடன் நாடெங்கும் வாழ்ந்து வருகிறார்கள். உணவு, உடை, உறைவிடம் இன்றி அன்றாடம் உழைப்புக்காக அலைகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்து மற்ற மேல் சாதியினருக்குச் சமமாக வாழ்வதற்குரிய வகையை அமைத்துக் கொள்ள வாய்ப்பளிக்கும் மக்களாட்சி முறையில் கூட அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கப்படுகிறார்கள். அனைவருக்கும் சமமான வாய்ப்பை அளிக்கும் தன்மையுடைய மக்களாட்சி முறையைக் களங்கப்படுத்தும் நிலைமையே தொடர்ந்து இருந்து வருகிறது.

mariyal markuதமிழகத்தில் நடைபெற்ற ஓர் ஊராட்சித் தேர்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் குறித்து தன்னுடைய மதிப்பீடுகளை முன்வைத¢து இந்த நாவல் வடிவமைத்த சூழலை மாற்கு மனம் திறந்து விளக்குகிறார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நான் தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதி பிறந்த ஊருக்கு அருகில் பணி புரிந்தேன். அருகில் உள்ள கிராமம் பொதுத் தொகுதி. அங்கு வழக்கமாக ஆதிக்க சாதியைச் சார்ந்த சிலர் தங்களது மேட்டிமையை நிரூபிக்கப் போட்டியிட்டனர். ஆனால், அவ்வாண்டு நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில் தலித்துகள் தங்களிடமுள்ள மொழி, மதம், உட்சாதிப் பிளவுகளைக் கடந்து தலித் என்ற அடையாளத்தோடு ஒருவரை வேட்பாளராக நிறுத்திப் போட்டியிட்டனர். இந்த ஒரே காரணத்திற்காக ஆதிக்கச் சாதியினால் தங்களது வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு ஒரு வேட்பாளரை முன்னிறுத்தினர். இருப்ப¤னும் தாங்கள் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தலித்துகள் மீது சட்டத்திற்குப் புறம்பான எண்ணற்ற வன்கொடுமைகளை அரங்கேற்றினர். தேர்தல் முடிவை அறிந்த பின்பும் அவர்களது சினம் அடங்கவில்லை. காவலர்கள் துணையுடன் தலித்துகளை மிகக் கொடுமையாக நடத்தினார்கள்.

“மனித நேயமுள்ள சிலர் அவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இச்சூழலில் அமைதியாக இருப்பது அநீதிக்குத் துணை போவதாகவே கருதப்படும் என உணர்ந்தோம். அந்தச் சிந்தனையுள்ள பலர் கூட்டமைப்பாக இணைந்து துணிவுடனும் சரியான திட்டங்களுடனும் செயல்பட்டு நீதியை நிலைநாட்டப் போராட்டங்களும் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டால் எவ்விதக் கூட்டமைப்பாக இணைந்து போராடுவது என்ற அணுகுமுறையை வகுக்க முடிந்தது. இருப்பினும் இறுதி முடிவை கூட்டமைப்பை விட பாதிக்கப்பட்டோர்தான் எடுக்க வேண்டும் என்ற அற்புதமான புத்தொளி இப்போராட்டத்தில் வெளிப்பட்டது. அதோடு சமயப் பணியாளர்கள் தங்களை முன்னிறுத்தவதைத் தவிர்க்க வேண்டும் என்ற படிப்பினையும் கிடைத்தது. இவற்றைத்தான் ‘மறியல்’ நாவல் வெளிபடுத்துகிறது.

தன்னுடைய இலக்கிய முயற்சியின் நோக்கம் குறித்து தனது மதிப்பீடுகளையும், கடமைகளையும் வெளிப்படையாகக் கூறுகிறார்: நான் பெரும்பாலும் என் அனுபவங்களைத்தான் இலக்கியங்களாகப் படைக்கிறேன். நான் அடிப்படையில் சமூகச் செயல்பாட்டாளன். எனவே, சமூகத்தில் விளிம்புக்குள் தள்ளப்பட்ட ஏழைகள் மற்றும் தலித்துகளின் பிரச்சனைகளில் அவர்கள் சார்பாக நிலைப்பாடு எடுத்துச் செயல்படுகிறேன். அதில் பல அனுபவங்கள் கிடைக்கின்றன. அவற்றை அப்படியே எழுதினால் அது உண்மையைக் கண்டறியும் குழுவின் அறிக்கை போல இருக்கும். மக்களிடம் சென்று சேரும் என்பதால் என் அனுபவங்களோடு கற்பனையையும் சிறிது கலந்து இலக்கியமாய்ப் படைக்கிறேன். இவை உண்மைக்கு நெருக்கமானவை. பாத்திரங்களும், நிகழ்வுகளும் உண்மையானவை. பெயர்களில் சிறிய மாற்றங்கள் செய்திருப்பேன் அவ்வளவே.

ஆதிக்க சக்திகளின் ஆளுமையின் கீழ் தலித்துகள் அனுபவித்த துன்ப துயரங்களையும் நாவலில் அங்கங்கே சித்தரிக்கிறார் மாற்கு. காட்டாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்: “மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். தலித்துகளைக் கொடுமையாக அடித்து உடலில் காயங்களை ஏற்படுத்திய காவலர்கள் மிகக் கேவலமாக பாலியல் வசவுகளால் தலித்துகளின் மனத்திலும் மிகக் கடுமையான காயங்களை ஏற்படுத்தினர். பொது விசாரணையில் காவலர்களின் பாலியல் வசவுகளை தலித்துகள் அப்படியே அனைவருக்கும் முன்பாகக் கூறினர். அவற்றைப் பதிவு செய்தோம். காவலர்களின் கொடுமையை எழுதியபோது பாலியல் வசவுகளையும் குறிப்பிடவேண்டுமா என்ற கேள்வி எழுந்ததால் எழுதத் தயங்கினேன். நாகரிகம், மரபு, இலக்கியத் தரம் கருதி இவற்றை எழுதுவது நல்லதல்ல என்றனர் சிலர். நாங்கள் எப்படி பாதிக்கப்பட்டோம் என்பதைக் கூட ஆதிக்கவர்க்கம் தீர்மானிக்கும் மொழியில்தான் தலித்துகள் வெளிப்படுத்த வேண்டும் என்பதும் அநீதி என்ற உண்மை என் மனதில் ஓங்கி ஒலித்தது. எனவே, பதிவு செய்த பாலியல் வசவுகளை எழுதினேன். இவை அனைத்தும் காவலர்கள் பிரயோகித்தவையே!”

தொடர்ந்து இன்னொரு உண்மையையும் மாற்கு குறிப்பிட்டுள்ளார்.

“அவ்வூரில் மறைக்கப்பட்ட மற்றொரு உண்மை இது. அங்கு ஆதிக்கச் சாதியினர் தங்கள் தெரு வழியாக தலித்துகள் செல்லக்கூடாது என்பதற்காக மிகப் பெரிய தீண்டாமை கோட்டைச் சுவரை எழுப்பியிருந்தனர். தலித்துகள் தங்கள் பகுதிக்குச் செல்ல ஊரைச் சுற்றித்தான் செல்ல வேண்டும். இன்னும் அந்தத் தீண்டாமைக் கோட்டைச் சுவர் அங்குதான் இருக்கிறது. பல இடங்களிலுள்ள தீண்டாமைக் கோட்டைச் சுவர்கள் பற்றிய செய்திகள் வெளிவர அவற்றை அகற்ற பல போராட்டங்கள் நடைபெற்ற சூழலில் இன்றும் தீண்டாமைக் கோட்டைச் சுவர் அவ்வூரில் இருப்பது மிகப்பெரிய வன்கொடுமை. மண் சுவர் தற்போது ஒன்பது அடி உயரத்திற்கு கல் கோட்டைச் சுவராக எழும்பியுள்ளது தான் தற்போதைய வளர்ச்சி.”

மக்களாட்சி முறையில் “ஆட்சி அதிகாரப் பகிர்வை தலித்துகள் கோருவதை தேர்தல் ஜனநாயக நடைமுறைகளில் அவர்கள் ஈடுபடுவதை ஆதிக்கச் சக்திகள் விரும்புவதில்லை. மாறாக வெறுக்கின்றனர். எனவேதான் மேலவளவு, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காய்ச்சிவேந்தல், நாட்டார் மங்கலம் உள்ளிட்ட சாதி ஆதிக்கம் நிரம்பிய கிராமங்களில் தலித் மக்களால் தேர்தலில் நிற்க முடியவில்லை. வென்றவர்கள் ஆளமுடியவேயில்லை. வேட்பாளர்கள் என்ற நிலையிலும் வெற்றியாளர்களான பின்பும் கூட மேலவளவு முருகேசன் உள்ளிட்ட தலித்துகளில் பலர் படுகொலை செய்யப்பட்டனர்” என்று தலித் மக்களின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடுகிறார் முனைவர்.ஜா.அமிர்தலெனின்.

தொடர்ந்து அவர் முக்கியமான ஒன்றைக் குறிப்பிடுகிறார். தொண்டு நிறுவனங்கள், துறவறப் பணியாளர்களின் சமூகத் தொண்டு என்னும் பணி மகத்தானது. எனினும் அவர்கள் காயத்திற்கு மருந்திட முடியுமே தவிர காயம் ஏற்படுவதற்கான சமூகக் காரணிகளை ஒழிக்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. அவர்களின் பணிகள் அனைத்தும் தற்காலிக நிவாரணங்களே என்பது தொடர்ந்து வரும் நிதர்சனமாகும். புதினத்தின் முடிவு முன்வைக்கும் செய்தியும் இதுதான்.

ஒப்பாரிகளோடும், ஓலங்களுடனும் அழுது கொண்டிருக்கும் விளிம்பு நிலை மக்களின் கண்ணீரைத் துடைத்து அரசியல் சமூக விழிப்பு கொள்ளச் செய்ய விடுதலை வேங்கைகள் போன்ற அரசியல் அமைப்புகளே தேவை. அவர்கள் காட்டும் சரியான அரசியல் பாதையே விடுதலைக்கான வழி என்பதை எடுத்துக் காட்டுவதாக மறியல் புதினம் அமைந்துள்ளது.

எண்ணங்களின் கற்பனையில் பிறக்கும் எழுத்துக்களை மட்டுமே கதைகளாக்கும் வித்தைகளற்ற நிதர்சனங்களை நேருக்கு நேர் நிறுத்திப் பேச வைக்கும் வித்தை அறிந்தவர் எழுத்தாளர் மாற்கு அடிகளார். களங்களின் உண்மையை கனத்த உண்மைகளுடன் எழுதும் அவரின் எழுத்துப் பணி இளைஞர்கள் பின்பற்றத் தக்கவையாகும்.

“எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்” என்ற சேகுவேராவின் வரிகளை மெய்ப்பிக்கும் வாழ்க்கை முறையின் சொந்தக்காரர் மாற்கு. களங்களின் அனுபவங்களைக் கதைகளாக்கும் சூட்சமம் கற்றவர். கற்பனைக் குதிரைகளை தூங்க வைத்துவிட்டு உண்மைகளுக்கு உயிரூட்டி எலும்பும், சதையுமான பாத்திரங்களாய் உலவ வைக்கும் புதுயுகப் படைப்பாளர்.

“புரட்சியாளர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் உரையாற்றும்பொழுது நாம் அரசியல் சமத்துவத்தை அடைந்துவிட்டோம். இன்னும் சமூக சமத்துவத்தை அடையாமல் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளதை மறியல் நினைவூட்டுகிறது.

தொடர்ந்து முனைவர் ஜா.அமிர்தலெனின் இது குறித்து தெளிவாகவும், உறுதியாகவும் தனது கருத்தை முன்வைப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. “ஒடுக்கப்பட்டு அதிகாரம் மறுக்கப்படும் எளிய மக்களுக்காக ஒலித்து வரும் சிறுத்தைகளின் முழக்கம் எளிய மக்களுக்கும் அதிகாரம்! கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் என்பதாகும். கொள்கை உறுதியுடன் தலித் அரசியலை முன்னெடுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின் பணிகளும், சிறுத்தைகளின் போராட்ட வாழ்க்கையும் இப்புதினத்தில் நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதாகும். விடுதலைச் சிறுத்தைகள் போன்ற இயக்கங்கள் தான் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான பாதுகாப்பு அரண் என்னும் உண்மையை இப்புதினத்தின் வாசிப்பில் உணரலாம்.”

மனம் கொதிக்கும் அருட்பணியாளர் பால்ராஜ் அவர்களின் தவிப்பும் தகிப்பும்தான் உண்மை துறவறத்தின் மனசாட்சி என்பதற்கு இப்புதினம் நமக்குச் சான்று பகிர்கிறது. தற்காலிக காவல் நிலையம் என் சாதி இந்துக்களின் வெற்றியே அவர்களுக்கு சாபமாகிப் போனதாய் கதை முடிகிறது. நனவோடை உத்தி முறையில் எழுதப்பட்டுள்ள இப்புதினத்தின் ஆசிரியர் பாத்திரங்களின் வழியே எழுப்பும் கேள்வித் தொகுப்புகள் வாசகர்களின் ஆழ்மனதில் பேரலையை எழுப்பி நியாயத்தின் பக்கமே வாசகரைக் கொண்டு போய் நிறுத்துகிறது.

இந்தப் புதினத்தின் பல இடங்களில் இப்படியான பல கேள்விகள் எழுப்பி சமூகத்தின் உள்மன ஓட்டங்களை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

கைது நடவடிக்கைகள் மட்டுமின்றி உடலளவிலும் மனதளவிலும் பெரும் காயங்களையும், உளவியல் சிக்கல்களை உருவாக்கும் காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை மீறல்களையும், காவல்துறை அரங்கேற்றிய கொடூரங்களையும் வாசிக்கும் போதே நெஞ்சம் கோபத்தால் வெடிக்கிறது. இது போன்ற அத்துமீறல்கள் அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை எண்ணத்தையும் ஒடுக்கும் அதன் இரத்த வெறி பிடித்த தன்மையையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

“மாற்கு எழுதும் புதினங்கள் சமகால சமூகத்தின் மனசாட்சியை உசுப்பும் திறன் உடையதாக உள்ளது. எண்ணங்களை எழுத்தாக்கி புதினங்களால் பிரசவிக்கும் அருட்பணியாளரின் பணிகள் தமிழ் கூறும் நல்லுலகம் தம் தலை மேல் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவையாகும். எளிய மனிதனின் எழுத்துக்களில் இவ்வளவு பிரளயங்களா? என இவரின் எழுத்துப் பணி வியக்க வைக்கிறது!” என்று பெருமிதம் கொள்கிறார் முனைவர் ஜா.அமிர்தலெனின்.

மறியல் | மாற்கு | வெளியீடு என்சிபிஎச்,

சென்னை | விலை: ரூ. 630

- சி.ஆர்.ரவீந்திரன்