நிலப்பரப்பில் மனிதர்கள் எங்கே வாழ்ந்தாலும் கூட்டு வாழ்க்கையைப் பின்பற்றுவது என்பது தவிர்க்க முடியாது காரணம். தனியொரு மனிதன் தனக்குத் தேவையானவைகளையெல்லாம் தனிப்பட்ட நிலைமையில் உருவாக்கிக் கொள்ள முடியாது. அதற்கு முறையான உற்பத்திமுறை திட்டமிடப்பட்டு கூட்டு முயற்சியில் தேவைப்பட்ட ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனாலேயே, மனிதர்கள் ஒன்று கூடி வாழவேண்டிய நிலைமை உருவாகிச் சமுதாயம் என்ற கட்டமைப்பிற்குள் வாழவேண்டிய கட்டாயத் தேவை உருவாகிறது. அதன் விளைவாக மனிதர்கள் ஒவ்வொருவரும் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற கருத்தின் அடிப்படையில் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறார்கள். தொடர்ந்து, அந்த வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளக்கூடி வாழ்கிறார்கள்.
காலப்போக்கில் மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்ள தங்களுக்குள் மாறுபட்ட பிரிவுகளையும், பகுப்புகளையும் வகுத்துக் கொள்கிறார்கள். அதன் விளைவாகவே வாழ்க்கை பன்முகப்பாகுபாடுகளையும், தோற்றங்களையும் உடைய ஒன்றாக வடிவம் பெறுகிறது.
சமுதாயமாக வாழும் மனிதர்கள் தங்களுக்குரிய இயல்பாகக் காணப்படும் மாறுபாடுகளையும், வேறுபாடுகளையும் ஒருங்கிணைக்க சமுதாயத்திற்குப் பொதுவான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் வடிவமைத்துக் கொள்கிறார்கள். அதன் விளைவாகவே ஆன்மீகம், அரசியல், பொருளாதாரம், கலை இலக்கியப் பண்பாடு போன்றவை தோன்றி தொடர்ந்து மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கின்றன.
அந்த வகையில், பரந்து விரிந்த இந்தியா அதன் இயல்பான மண்வளத்துக்கு ஏற்றவகையில் வாழத் தொடங்கி அதன் அடிப்படையிலேயே தங்களுடைய ஆன்மீக வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒருங்கிணைந்து வாழ்கிறார்கள். கணக்கற்ற சாதிகள், நிறங்கள், மொழிகள், மொழி இனங்கள், மரபுகள் கொண்ட விரிவான இந்தியா உடன்பட்டும், முரண்பட்டும் அமைதியாகத் தொடர்ந்து வாழ்ந்து வளர்கிறது. குறிப்பாக ஒற்றுமை நோக்கத்தின் அடிப்படையில் ஆன்மீக வாழ்க்கை வளப்படுத்தப்படுகிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக ‘அழகர் கோயில்’ தனித் தன்மைகளோடு வரலாற்றில் இயங்கி வருகிறது.
மக்களின் ஆன்மிகத் தளமாக விளங்கி வரும் ‘அழகர் கோயில்’ என்ற அரிய ஆய்வு நூலை, தமிழின் மிகச் சிறந்த பண்பாட்டு ஆய்வாளரான தொ.பரமசிவன் அவர்கள் கள ஆய்வு அடிப்படையில் தொகுத்து வெளியிட்ட முதலாவது நூல் இது.
பௌத்தமும், சமணமும், சைவமும், வைணவமும் தோன்றி வளர்ந்த நிலையில் எத்தனையோ ஆன்மிகத் தலங்கள் இந்த மண்ணில் தோன்றி வளர்ந்தன. அதைப்போலவே, ஆரியம், வேதம், கிறித்துவம், இசுலாமியம் போன்ற வெளிநாட்டுச் சமயங்களும் இந்தியாவில் வளர்ந்து கணக்கற்ற கோயில்கள் தோன்றி மக்களை ஒருங்கிணைத்து வளமடையச் செய்தன.
அவைகளில் குறிப்பிடத்தக்க ஒரு தனித்துவக் கோயில்தான் அழகர்கோயில். அதன் தோற்றம் பற்றி ஆய்வாளர் குறிப்பிடுகிறார்: தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் அழகர்கோயில் பழமை சான்ற ஒன்றாகும் சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் பெயர்சுட்டிச் செல்லப்பெறும் திருமால் திருப்பதி இதுவாகும். முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான பூதத்தாழ்வாரும் இக்கோயிலைப் பாடியுள்ளார். இக்கோயிலின் தோற்றம் இங்கு ஆராயப்படுகிறது.
இதற்கான சான்றுகளைப் பன்முகத் தன்மையுடன் விரிவாக எடுத்துக்கூறி இவர் விளக்குகிறார். மதுரை மாவட்டத்தில் இது மேலூர் வட்டத்தைச் சேர்ந்ததாகும். மதுரையிலிருந்து வடக்கு, வடகிழக்கு திசையில் பனிரண்டு கல் தொலைவில் அமைந்துள்ளது. அதன் அமைப்பைத் தெளிவாக இனம் காண்கிறார். கிழக்குத் திசையினை நோக்கியதாக அழகர்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு மேற்கிலும், வடக்கிலும் மலைப்பகுதிகள் உள்ளன. கோயில் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டுள்ளது. கோயில் அமைந¢துள்ள உட்கோட்டை இரணியன் கோட்டை எனவும் வழங்கப்படுகின்றன. அவைகளைப் பற்றிய விவரங்களைத் தெளிவாக விளக்குகிறார் ஆய்வாளர்.
தனது மதிப்பீடுகளுக்கு ஆதரவாக தாம்சன், டெனிஸ், போன்ற வெளிநாட்டு ஆய்வாளர்களையும் தமிழ்நாட்டு மயிலை.சீனி வேங்கடசாமி, கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீதரமேனன் போன்ற ஆய்வாளர்களின் குறிப்புகளையும் எடுத்துக் காட்டாகக் கூறுகிறார். கோயிலின் தலவிருட்சம், நரசிம்ம வழிபாடு, புற மதத்தவர் சுக்கரத்தாழ்வார் இலக்கியச் செய்திகள், கருவறை தலைமழிக்கும் வழக்கம் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கிறார் ஆய்வாளர். அதற்குரிய அடிப்படை ஆதாரங்களைக் குறிப்பிடுகிறார்.
‘இத்தலத்தைப் பாடிய ஆழ்வார்’ பாசுரங்களும் அவற்றிற்கான உரைகளும் தமிழ்நாட்டில் சமண, பௌத்த எதிப்புணர்ச்சி நிறைந்திருந்த காலத்தையும் சமண பௌத்த எதிர்ப்பில் இக்கோயில் பெற்றிருந்த பங்கிணையும் காட்டுகின்றன. தலவிருட்சம் விமானத்தின் பெயர் முதலியவை பிற்காலத்திலெழுந்தவை என்பதைச் சிற்றிலக்கியங்களே அவற்றை முதலிற் குறிப்பிடுவதாலறிகிறோம் என்ற தனது மதிப்பீட்டை இவர் முன்வைக்கிறார்.
இவர் தனது ‘அழகர் கோயில்’ ஆய்வு நூலின் உள்ளடக்கத்தை பதினொரு இயல்களாகப் பிரித்து தனது ஆய்வு விவரங்களை விரிவாக விளக்குகிறார். அதில், இக்கோயிலின் இருப்பிடமும், கோயிலின் அமைப்பும் விளக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது இயலில் ‘அழகர் கோயில் பௌத்தக் கோயிலாக இருந்தது என்று கூறும் மயிலை சீனி.வேங்கடசாமி கூறும் கருத்தின் ஏற்புடைமை ஆராயப்பட்டுள்ளது.
மூன்றும் இயலில் ஆழ்வார்களின் பாசுரங்களில் பொதிந்து கிடக்கும் பிறமத எதிர்ப்புணர்ச்சிகளை வெளிப்பட எடுத்து விளக்கியுள்ளன. பிறமத எதிர்ப்புணர்ச்சி சங்க இலக்கியங்களிலே அரும்பி விட்ட செய்தி விளக்கப்பட்டுள்ளது.
நான்காவது இயல்பில், சமய அறிவும் தத்துவ குணமும் உடைய உயர்ந்தோர், பக்தி உணர்ச்சியை மட்டுமே கொண்ட நாட்டுப்புற மக்களைத் தங்கள் அணியில் இணைத்துக் கொள்வதற்கு ஆண்டார். மயத்தார் அமைப்பு முறையை உருவாக்கி, பணியாற்றியது குறித்து விளக்கப்படுகிறது.
ஐந்தாவது இயலில் அழகர் கோயில் சமூகத்தோடு கொண்டிருந்த உறவு கள்ளர், இடையர், அரிசனர், வலையர் ஆகிய காதியாரை முன்னிறுத்தி ஆராயப்பட்டுள்ளது.
ஆறாவது இயலில் அழகர்கோயில் திருவிழாக்கள் ஆராயப்பட்டுள்ளன. தேரோட்டத் திருவிழாவும் வேறுபறித்திருவிழாவும் கள்ளர் காரியாரோடு இக்கோயில் கொண்டுள்ள உறவினை விளக்கத்தோடு அவ்வுறவினைக் காப்பதாகவும் அமைந்துள்ளது.
ஏழாவது இயலில் சித்திரைத் திருவிழாவும், அத்திருவிழாவில் கூறப்படும் பழ மரபுக் கதையும் ஆராயப்பட்டுள்ளன.
எட்டாவது இயலில் வர்ணிப்பிப் பாடல்கள் ஆராயப்பட்டுள்ளன. வர்ணிப்புப் பாடல்களின் தோற்றமும், அவற்றின் வளர்ச்சியில் பாகவத அம்மானை பெறும் இடமும் விளக்கப்பட்டுள்ளன.
ஒன்பதாவது இயலில், சித்திரைத் திருவிழாவில் வெளிப்படும் நாட்டுப்புறக் கூறுகள் ஆராயப்படுகின்றன. கால்நடை வளர்ப்போர், உழு தொழில் செய்வோர் ஆகியோரின் தெய்வமாக அழகர் கோயில் இறைவன் விளங்கும் செய்தி விளக்கப்பட்டுள்ளது.
பத்தாவது இயலில், கோயில் பணியாளர்களுக்கும் இக்கோயிலுக்குள்ளே உறவு ஆவணங்களாலும், நடைமுறைகளாலும், நம்பிக்கைகளாலும் விளக்கப்பட்டு உள்ளது.
பதினேழாவது இயலில், அழகர் கோயிலுள்ள பதினெட்டாம் பதக் கருப்பு சாமியைப் பற்றிய செய்திகள் ஆராயப்பட்டுள்ளன. வழக்கு மரபிலுள்ள நம்பிக்கைகள், கதைப்பாடல், நடைமுறைகள் ஆகியவை வழி இச்சிறு தெய்வத்தின் வாயிலாக, இச்சிறு தெய்வத்தின் வைணவச் சார்புடைய தோற்றமும் விளக்கப்பட்டுள்ளன.
இத்துடன் பல வகையான திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. அவை பெரும்பாலும் பழங்கதைகளை உள்ளடக்கியவையாக இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது அவைகளில் முக்கியமான ஒன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.
“அழகர் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்கு சீர்வரிசையுடன் புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். அவர் வருவதற்கு முன்னரே, அவரில்லாமலே மீனாட்சியின் திருமணம் நடந்து விடுகிறது. வைகையாற்றிலிறங்கிய அழகர், தானில்லாமல் தங்கையின் திருமணம் நடந்துவிட்ட செய்தியினையறிந்து, கோபத்துடன் கிழக்கே வண்டியூர் நோக்கித் திரும்பி விடுகிறார். அங்கு தன் காதலியான துலுக்க நாச்சியார் வீட்டில் அன்று இரவு தங்கிவிட்டு மலைக்குத் திரும்பி விடுகிறார். இதுவே அழகர் மதுரைக்கு வருவது குறித்து மக்களிடம் பரவலாக வழங்கிவரும் கதையாகும்.
இதுவே, அழகர் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மிகப்பெரிய திருவிழாவாகும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறைப் பதினொன்றாம் நாளில் (சுக்கிரபட்ச ஏகாதசியில்) தொடங்கி ஒன்பது நாள் நடைபெறும் திருவிழாவாகும் இது. ஐந்தாம் திருநாள் சித்திரை நிறைமதி (பௌர்ணமி) நாளாகும்.”
தமிழ்நாட்டில் பெருந்தெய்வக் கோயில்களில் அழகர் கோயில் சில தனித்த நடைமுறைகளையுடையது. அவற்றுள் மூன்று இக்கோயிலின் தலைவாசல் (ராஜகோபுர) வாசல். எப்பொழுதும் அடைக்கப்பட்டிருக்கும் சிறு தெய்வங்களின் ஒன்றான பதினெட்டாம் பதக் கருப்பசாமி என்ற தெய்வம் இக்கோபுரவாசலில் உறைகின்றது. எனவே, இங்கேயும் வாசல் ‘பதினெட்டாம்படி வாசல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம் படிக் கதவுகளுக்குச் சந்தனம், குங்குமம், கற்பூரம் முதலியவை பூசி, மாலை, புஷ்பம் முதலியவற்றால் அலங்கரித்துப் பூஜை செய்வார்கள். இப்பதினெட்டாம்படிக் கதவு பிரமோத்சவக் காலத்தில் (ஆடிமாதம்) சங்கரத்தாழ்வார் வருவதற்காக மட்டும் வருடம் ஒருமுறை திறக்கப்படும் சமயங்களில், ஏதாவது பிரமாணம் செய்ய விரும்புபவர்களுக்கு அது திறக்கப்படும். ஆகையால் அழகர்கோயில் பிரதான வாசலாகிய இப்பதினெட்டாம்படி வாசல் சாதாரணமாக மூடப்பட்டே இருக்கும். இதற்கு வடக்கே உள்ள வண்டி வாசல்தான் கோயிலுக்குள் போகும் வழி என்று ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு கூறுகிறது என்று இவர் விளக்குகிறார்.
தொடர்ந்து இவரே சொல்கிறார்: சந்தனம் சாத்தப்பெறும் கதவில் உறைகின்ற தெய்வமே பதினெட்டாம்படிக் கருப்பசாமியாகும். “இவருக்கு இங்கே உருவம் இல்லை. இங்கும் பதினெட்டாம் படிக் கோபுர வாசல்களையே இத்தெய்வமாக எண்ணிப் பூஜைகள் நடக்கும். மற்ற இடங்களில் இவர் கையில் ஒரு கொக்கியும், அரிவாளும், கதாயிதமும், ஈட்டி முதலியவையும் இருக்கும். காலில் செருப்பு அணிந்திருப்பார் இவரது தரிசனம் பயங்கரமாகவும், யுத்த பாவனையிலம் இருக்கும் என்று கோயில் வரலாறு கூறுகிறது.
‘அழகர் கோயில்’ பன்முகத் தன்மை கொண்ட அம்சங்களை உள்ளடக்கி ஒன்று சேர்ந்த ஒருமுகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. தன்னுள் அது உடன்பாடும், முரண்பாடும் இணைந்தும், வரலாற்றில் தொடர்ந்து, நிலைபெற்று இயங்கி வருகிறது. பல இலட்சக் கணக்கான மக்களை, ஆண்டுதோறும் நிகழும் சித்திரைத் திருவிழாவின்போது ஒருங்கிணைத்து மகிழ்ச்சியடையச் செய்கிறது.
மேலும், இதன் தனித்தன்மையை விளக்கும் விதத்தில் ஏராளமான பிற்சேர்க்கைகளை இணைத்து தெளிவாகவும், ஆழமாகவும் புரிந்து கொள்ள வழிவகைகளை இவர் இந்த ஆய்வின் வாயிலாக உணர்த்துகிறார்.
இலக்கியம், வழிபாடு, கல்வெட்டுக் குறிப்புகளை அழகர் அகவல், அழகம் பெருமாள் வண்ணம், அழகர் வர்ணிப்பு, வலையன்கதை வர்ணிப்பு, பதினெட்டாம் படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு, கருப்பன் பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு, ராக்காயி வர்ணிப்பு, கருப்பசாமி சந்தனம் சாத்தும் வர்ணிப்பு, வெள்ளியக் குன்றம் பட்டயம், தொழில் அட்டவணை ஆட்ட விசேஷம்-கோடைத் திருநாள் சித்திரைப் பெருந்திருவிழா, வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலை, வேடமிட்டு வழிபடும் அடியவர்கள், சித்திரைத் திருவிழாவிற்கு மாட்டு வண்டி கட்டி வந்த அடியவர்களின் ஊர்கள்-ஒரு மாதிரி ஆய்வு போன்ற ஆதாரங்களையும், ஆவணங்களையும் செய்திகளையும் கலி ஆய்வுடன் கலந்து கடுமையான உழைப்புடனும், முயற்சியுடனும் இவர் ‘அழகர் கோயில்’ என்ற ஆய்வு நூலை அளித்துள்ளார்.
அழகர் கோயில் | தொ.பரமசிவன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
விலை: ரூ.400
- சி.ஆர்.ரவீந்திரன்