சுதந்திரப் போராட்டத்தில் திருப்புமுனையாக விளங்கிய ஜாலியன் வாலாபாக் நிகழ்வு நடந்து நூறு ஆண்டுகள் ஆகிய நிலையில், அந்த நிகழ்வைப் பற்றி ஒரு புதிய புரிதலை சூழலுக்குத் தக்க வகையில் ஏற்படுத்திக் கொள்வது, நம் எதிர்கால அரசியல் செயல்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என எண்ணி ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்துவது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனென்றால் இன்றைய மக்களின் மன ஓட்டம் என்பது மிக நுண்ணிய நுகர்வுக் கலாச்சாரத்திலும் இனம் புரியாத தேசப்பற்றிலும் இணைக்கப்பட்டு எதார்த்த வாழ்வியல் சூழல் மறைக்கப்பட்டு வாழும் நிலையில், எதார்த்தங்களை மக்களிடம் எடுத்துச் சென்று வழிகாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இடதுசாரிகளும், புது மத்தியதரவர்க்கமும், கருத்தாளர்களும், காந்தியச் சிந்தனையாளர்களும் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல்பாடுகள் இன்று இந்திய சமுதாயத்திற்கு அதிகமாக தேவைப்படுகின்றன.
ஏனென்றால், கடந்த 30 ஆண்டு காலமாக புதிய பொருளாதாரச் சூழல் என்பது மக்களை ஒரு மோக, போகச் சந்தைக்குள் கொண்டு செலுத்திவிட்டது. தேனில் விழுந்த கொசுபோல் எழுந்து வெளியில் வர முடியாமல் நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்குண்டு தவிக்கின்ற மக்களை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்பு சமுதாயம் சார்ந்து சிந்திக்கும் அனைவருக்கும் உள்ளது.
உண்மைக்கு எதிராக எந்த மாயத்தோற்றமும் எவ்வளவு யுத்திகளுடன் உருவாக்கினாலும், வென்றிட முடியாது என்பதுதான் வரலாறு போதித்த பாடம். பிரெஞ்சுப் புரட்சியை ஒடுக்கிட எத்தனையோ யுத்திகளை பதிநான்காம் லூயி பயன்படுத்தினான். புரட்சிக்கு வித்திட்ட மாண்டெஸ்க்பூ, ரூசோ, வால்டயர் அனைவரும் எழுதிக் குவித்துவிட்டு மாண்டு விட்டனர். அவர்கள் அனைவரும் பிரஞ்ச்சுப் புரட்சியைப் பார்க்கவில்லை. இவர்கள் ஏற்றி வைத்த கருத்துத்தீயை அணைத்து விடாமல் தொடர்ந்து மக்கள் மனதில் சிந்தனைத் தீயை, தூண்டும் வகையில் நூறு அறிஞர்கள் விடாது, தொடர்ந்து புரட்சி பற்றி எழுதி வந்தனர்.
புரட்சித் தீ அணைந்து விடாது தங்களுக்கு வந்த சவால்களை எல்லாம் சமாளித்து பாதுகாத்து எழுதி வந்தனர். அவர்களும் ஒருவர் பின் ஒருவராக மாண்டுவிட்டனர். புரட்சியை அவர்களும் பார்க்க முடியவில்லை. இருந்தும், புரட்சி பிரான்ஸ் தேசத்தில் ஒருநாள் வெடித்தது. எனவே சூழல் வருகின்ற வரை மாற்றங்களுக்காகவும், ஏழைகளின் ஏற்றங்களுக்காகவும் பாடுபடும் வர்க்கம் தங்கள் பணியைத் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்திடல் வேண்டும். இந்தப் பணி என்பது எளிதானதல்ல; இது எதிர்நீச்சல் போடுவதுபோல்.
அச்சமின்றி, மனம் தளராமல் செய்துகொண்டே இருக்க வேண்டும். நாம் எதிர்பார்க்கும் திருப்பம், மாற்றம் நம் காலத்தில் வரலாம், வராமலும் போகலாம். நாம் அதைப்பற்றி கவலை இன்றி நம் பணியை தொய்வில்லாமல் செய்திட வேண்டும். அந்த வகையில் இப்படிப்பட்ட கருத்தரங்கங்கள் நம் சுதந்திரம் சும்மா கிடைத்ததல்ல, போராடி, தியாகம் செய்து, உயிர் நீத்துப் பெற்ற ஒன்று என்பதை இளைய தலைமுறைக்கு ஞாபகப்படுத்த உதவிடும் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்காது.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை நாம் முழுமையாக முழுப் புரிதலுடன் நம் இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். உலகம் வியந்து பார்த்த போராட்டத்தை மக்கள் முன் நின்று நடத்தி வெற்றி பெற்று மக்களாட்சியை நிறுவிய நாடு, பல அடிப்படையான பிரச்சினைகளையே சரிசெய்ய முடியாத நிலையில் இன்று தத்தளித்துக் கொண்டிருப்பது எதனால் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இப்படிப்பட்ட நிகழ்வு உதவிகரமாக இருக்கும்.
பெற்ற சுதந்திரமும், உரிமைகளும் பேணிக் காக்கப்படவில்லை என்று சொன்னால் அடிமைத்தனம் மக்களைக் குடிகொண்டுவிடும் என்று தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா கூறுவார். மீண்டும் மீண்டும் மக்களின் தியாகத்தால் உருவானது இந்த சுதந்திரம் என்பதை மக்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களுக்கு உரிமையுடன் சமத்துவத்துடன் வாழ என்னென்ன வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, அவைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் மக்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என வேண்டினார். இதைச் செய்யத் தவறினால் அடிமை வாழ்வையே சுகமாக்கிக் கொண்டு வாழ மக்கள் பழகிக்கொள்வார்கள் என்று அறிவுறுத்தினார்.
நாட்டின் விடுதலைக்குப் போராடியதைவிட ஒரு படி மேலே சென்று தான் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராட வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார். எனவே பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒரு காவலாளி, மக்களாட்சிக்கு ஒரு காவலாளி என்ற மனோபாவத்தை நாம் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டு களத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்று வேண்டினார். காரணம் பல நாடுகள் இரண்டாம் உலகப் போருக்குப்பின் போராடி சுதந்திரம் பெற்று மக்களாட்சிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தன. பொதுமக்களை புதிய சூழலுக்குத் தயார் செய்யாமல் இருந்ததன் விளைவு, குறுகிய காலத்திலேயே பல நாடுகள் சர்வாதிகாரத்திற்குள் புக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதால் சுதந்திரம் மற்றும் மக்களாட்சி பற்றிய பொதுப் புரிதலுக்கான விழிப்புணர்வைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார் நெல்சன் மண்டேலா. அது மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவில் அதைச் செய்தும் காட்டினார்.
தென்னாப்பிரிக்காவின் அரசியல் சாசனச் சட்டத்தை மக்கள் மொழியில் தயாரித்து வீதிதோறும் விளக்கம் சொல்லி மக்களிடம் சுதந்திர வாழ்வு வாழ வழிவகை உள்ளது என்பதைத் தெரிய வைத்துவிட்டார். பொதுவாக மக்களை எந்த மன ஓட்டத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றோமோ அதற்குத் தகுந்தாற்போல்தான் சமூக மாற்றங்கள் நிகழும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். மனு கொடுக்கும் சங்கமாக இருந்த இந்திய தேசிய காங்கிரசை மகாத்மா காந்தி ஏழைகளைத் திரட்டி மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டினார். எனவே சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூர்வது என்பது மீண்டும் மீண்டும் மக்களை பெருமாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க தயார் செய்வதாகும்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வின் வாயிலாக நாம் கற்றுக்கொள்ளும் செய்தி என்ன? ஆதிக்கமும் ஆட்சியும் எல்லாக்காலத்திலும் எப்படி நடைபெறும் என்பதைப் புரிந்து கொண்டால், அரசாங்கத்தை நம் கைக்குள் கொண்டு வரமுடியும். இல்லையென்றால் அரசாங்கத்தின் கைக்குள் அகப்பட்டு மக்களாகிய நாம் நசுங்கிப் போவோம் என்பதனை உணர்த்துவதுதான் இந்த நிகழ்வு. அரசு என்பது சமூகத்தை ஆள்வதற்கு சமூகம் உருவாக்கிக் கொண்டதுதான். தன்னைப் பாதுகாப்பதற்கு நெறிப்படுத்துவதற்கு உருவாக்கிக் கொண்டதுதான் அரசு.
அரசு என்பது சமூகத்திற்கு ஒரு கேடு என்று சொல்வார் தாமஸ் பெயின் என்ற அறிஞன். நமக்குக் கேடுவராமல் பாதுகாத்துக் கொள்ள அரசை நாம் கண்காணித்துக் கொள்ள வேண்டும். அரசு எஜமானனுக்குச் செயல்படும் ஓர் கருவி. எஜமானனாக யார் இருக்கிறார் என்பதுதான் கேள்வி. டயர் என்ற அதிகாரி ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூடியிருந்த மக்களைக் கொன்று குவித்து ஒரு செய்தியை அவன் அறிவித்தான். வெள்ளைய அரசு யாராலும் எதிர்க்க இயலாத உறுதியோடு இயங்கும் அரசு, அதை எதிர்த்தால் மரணத்தைச் சந்திக்க வேண்டிவரும் என்கின்ற செய்தியை இந்த நிகழ்வு மூலம் அவன் பதிவு செய்தான். அந்த நிகழ்வை ஏன் அவன் நிகழ்த்தினான் என்றால் இந்திய மக்களுக்கு குறிப்பாக பாமர மக்களுக்கு வெள்ளைய அரசுமீது ஒரு பயம் வரவேண்டும் என்பதற்காக.
மாறாக இந்திய மக்கள் ரௌத்திரம் கொண்டு விட்டார்கள். அதனைத் தொடர்ந்து காந்தி மகான் இந்தியாவில் ஏழைகளைத் திரட்டி சுதந்திரப் போருக்கு ஒரு தயாரிப்பைச் செய்து விட்டார். அதுதான் ஒத்துழையாமை இயக்கம். இந்தப் படுகொலைதான் இந்திய மக்களின் சிந்தனைப் போக்கில் ஒரு எழுச்சியைக் கொண்டு வந்தது. வெள்ளையர்களை வெளியேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்ற உணர்வினை இந்தியர்களுக்கு உருவாக்கியது. இதற்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தை உத்வேகப்படுத்தியது. இந்த நிகழ்வுதான் காந்தியின் சிந்தனைப்போக்கில் சுதந்திரப் போராட்டத்தை மேலே எடுத்துச் செல்ல மாற்றம் கொண்டு வந்தது. காந்தியினுடைய ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தூபமிட்ட நிகழ்வு என்றே இதனைக் கூறலாம்.
இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் அல்ல, உலகம் முழுவதும் ஒரு அலையை அதிர்வாக உருவாக்கியது. இந்திய மக்களின் கோபத்திற்கு ஜெனரல் டயர் மட்டும் ஆளாகவில்லை, ஒட்டுமொத்த ஆங்கிலேய நிர்வாகமும் ஆடியது, கடைசியில் நாட்டை விடுவித்துவிட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டது. அந்த நிலையை உருவாக்கிய நிகழ்வுதான் இந்த ஜாலியன் வாலாபாக் நிகழ்வு.
இன்றைய சூழலுக்கு இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று பார்க்க வேண்டும். அரசு என்பது தாமஸ் பெயின் கூறுவது போல, எஜமானனுக்குப் பணி செய்யும் ஏவலாள். பொதுவாக, மக்களாட்சியில் எஜமானர்கள் மக்களே. ஆனால் அப்படி அரசு நடந்து கொள்வது கிடையாது. அரசாங்கத்தை, அதன் செயல்பாடுகளைத் தீர்மானம் செய்வது சந்தையும் அதன் தொடர்புடைய நிறுவனங்களும்தான் என்ற சூழலில், பொதுமக்கள் என்பவர்கள் சந்தையில் வாங்கப்படும் பொருள்களாக மாற்றப்பட்டு விட்டனர்.
எனவே ஓர் அரசாங்கம் மக்கள் பெயரில் மக்களாட்சியில் இயங்கினாலும், அதன் மூலகர்த்தாவாக இருக்கும் சந்தைக்குத்தான் அடிபணிந்து செயல்படும். இந்த நிலை துரதிஷ்டவசமானது. இந்த நிலை தொடர முடியாது. எனவே மக்கள் தங்களின் தொடர் பங்களிப்பால் தாங்கள்தான் எஜமானர்கள் என்று மக்களாட்சியில் மக்கள் பல தளங்களில் இயங்கி அரசாங்கத்தை மக்களுக்குக் கட்டுப்பட்டதாக இயங்க வைக்க வேண்டும். பொதுவாக, மக்களாட்சியில் அரசாங்கம் என்பது மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். அது எப்போது முறையாக சேவையை மக்களுக்குச் செய்யும் என்றால், அரசாங்கத்தை மக்கள் எந்த அளவுக்கு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்களோ, அந்த அளவுக்கு அது சேவை செய்யும். எனவே மக்கள் தேர்தலில் வாக்களிப்பதுடன் நின்று விடாமல் அரசாங்கத்தைக் கண்காணித்துச் செயல்பட ஆரம்பித்தால் அரசு மக்களை நோக்கியதாக இருக்கும்.
அப்படி செயல்படவில்லை என்றால் அரசை யார் கண்காணித்து வேலை வாங்குகின்றார்களோ, அவர்களுக்குச் சேவை செய்ய ஆரம்பித்துவிடும். இன்று அதுதான் நடைபெற்றுக் கொண்டுள்ளது. சந்தைதான் நம் அரசாங்கத்தை வேலை வாங்குகின்றது. வளர்ச்சி என்ற பெயரில் சந்தைக்கான அத்தனைப் பணிகளும் துரிதமாக செயல்படுத்தப்படும். அதே வேகத்தில் சமூகத்திற்கான பணி நடைபெறுவது கிடையாது. ஏனென்றால் சமூகம் வாக்களிப்பதைத் தவிர, அரசைக் கண்காணிக்கும் எந்தப் பணியையும் செய்யவில்லை என்ற காரணத்தால் மக்களாட்சியில் மக்களுக்காக அரசாங்கத்தைச் செயல்பட வைக்க முதலில் தயார் செய்யப்பட வேண்டியவர்கள் பொதுமக்கள்தான்.
மக்களாட்சியில் மக்களைத் தயார் செய்வதைத் தவிர வேறு குறுக்கு வழியில்லை. மக்களாட்சியை மக்களுக்காகப் பணிசெய்ய வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதனைப் புரிந்துகொண்டு குடிமக்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். ஓட்டுப்போடுவது ஒன்றே என் பணி என்று கூறும் வாக்காளராக இல்லாமல் அரசைக் கண்காணிப்பதும், அரசைக் கேள்வி கேட்பதும், மக்கள் பிரதிநிதிகளைக் கேள்வி கேட்பதும் போன்ற பல்வேறு குடிமைப் பணிகளைச் செய்து குடிஉயர்த்தி, அவர்கள் மூலமாக அரசுக்குத் தாங்கள்தான் எஜமானர்கள் என்பதனைத் தெளிவுபடுத்த வேண்டும். அதுதான் இன்றைய தேவை.
- க.பழனித்துரை