தனிப்பாடல் என்பது பொது சொல்லாயினும், தமிழ் இலக்கியத்தைப் பொருத்தமட்டில் சிறப்புச் சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது. இலக்கிய வெள்ளோட்டத்தில், செய்யுள் வடிவம், தனிப் பாடல்களாகத் தோன்றி, தொடர் பாடல்களாக வளர்ச்சி பெற்றதைக் காட்டுகிறது. தனிப்பாடல்களாகவே படைக்கபெற்றும், சில வரையறைகளின் கீழ் தொகுக்கப்பெற்றும் சங்க இலக்கியம் எனப் பெயர் பெற்றபின்பு, தனிப்பாடல்கள் என்ற உண்மை தன்மை மறைந்து ஒருங்கமைத்த சங்கப் பாடல்களாகவே காட்சி அளிக்கின்றன.

கருதப்பட்டும் வருகின்றன. ஆனால், பக்தி காலத்தைத் தொடர்ந்து அகம், புறம், அறம், பக்தி ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பாடல்கள் எழுதப்பட்டன. இவை 10-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரையிலான கால அளவை உள்ளடக்கியது.

இவை தனிப்பாடல்கள், தனிப்பாசுரத் தொகை, தனிப்பாமாலை, தனிச்செய்யுள் சிந்தாமணி என்ற பெயர்களில் தொகுக்கப்பெற்றும் அப்பொதுப் பெயரைத் தாண்டி எந்தச் சிறப்புப் பெயரையும் பெறாதும் வழங்கப்படுகின்றன.

இலக்கிய வரலாற்றைப் பரந்து நோக்கு கையில், படைப்புகளுக்கு அப்படைப்பாளி இட்ட பெயரினைக் காட்டிலும், மக்கள் பயன்பாட்டில் இயல்பாக அழைக்கும் பெயரே நிலைபெற்று விடுகிறது கண்கூடு. முப்பால் - திருக்குறள், இராம காதை - கம்பராமாயணம்.

இங்ஙனம் இருக்க, தனிப்பாடல்கள், தமிழ் அறிஞர்கள் மத்தியில் மட்டும் பேசப்படுகின்ற, எழுதப்படுகின்ற பாடல்களாக மட்டுமே இருக்கின்றன. இலக்கிய வரலாறு எழுதுபவர்கள் தனிப்பாடல்களுக்காக எந்த முறை யிலும், காலமுறையிலும், கருத்து முறையிலும் கூட இடம் ஒதுக்காமல் தவிர்த்து வருகின்றனர். இதற்கான காரணகாரியங்களைக் காணுவது அவசியமாகிறது.

தனிப்பாடல் திரட்டு உருவாவதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர்களான, பொன்னுசாமி தேவர், தில்லையூர் சந்திரசேகரக் கவிராயர் தொட்டு கழகப் பதிப்புடன் பல்வேறு பதிப்புகள் வெளி வந்துள்ளன. மற்ற செவ்விலக்கியங்களுக்கு எழுதப் படுகின்ற பதிப்பு இலக்கிய வரலாறு போன்று. தனிப்பாடல் பதிப்புகளுக்கும் பதிப்பு இலக்கிய வரலாறு எழுதப்படலாம். அந்தளவிற்கு பதிப்பு களைக் கண்டுள்ளன.

1939-ல் சென்னை பி. இரத்தின நாயக்கர் சன்ஸ் பதிப்பகத்தார் கா.சுப்பிரமணியப் பிள்ளையின் உரையுடன் இரண்டு பாகங்களாக தனிப்பாடல்களை வெளியிட்டன. இதில் முதல் பாகத்தில் 41 புலவர்களின் பாடல்களும், இரண்டாம் பாகத்தில் 56 புலவர்களின் பாடல்களும் (புலவர்களின் பெயரில் பட்டியலாக அமைந்தவை. குறிப்பாக ஒட்டக்கூத்தரின் பாடல்கள் பிரிவிலேயே புகழேந்தி பாடல்களும், கம்பரின் பிரிவிலேயே அம்பிகா பதியின் பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளது) என 97 புலவர்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 97 புலவர்களிலேயே தனிப்பாடல்கள் என்ற உடன் மிகுந்து கூறப்படுபவர்கள், காளமேகப் புலவர், ஒளவையார் ஆகிய இருவரே. இருவரிலும், ஒளவையார் குறித்த தெளிந்த காலவரலாறு வரை யறை செய்யப்படாமலே பயின்றுவரப்படுவதால் தனிப்பாடல்கள் எனில் காளமேகப்புலவரே எண்ணத்தில் எழுதுகிறவர்.

காளமேகப்புலவரின் பாடல்களைத் தொகுப்பதற்காகவே தனிப்பாடல் திரட்டு வரலாறு தொடங்கி இருக்குமோ என்று எண்ணும் அளவிற்குப் பதிப்புகள் இடம் கொடுக்கின்றன.

ஆரம்ப காலப் பதிப்புகளில் காளமேகப் புலவரின் பாடல்களை முதலாகக் கொண்டே வெளியிடப்பட்ட துடன், காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள் என தனிப்பதிப்புகளும் பல வெளிவந்துள்ளன.

தமிழ் அறிஞர்கள் மட்டும் பயிலுகின்றனவாக தனிப் பாடல்கள் உள்ளன என்று முன்னர் கூறியது இவருடைய விஷயத்தில் ஏற்புடையதன்று. படித்த வர்கள் மத்தியில் மட்டுமின்றி பாமரர் மத்தியிலும், பேசப்பட்டவர் என அவரது பாடல் வழி உணர்ந்து கொள்ள முடிகிறது. கல்விக் கூடங்களிலும், பேச்சு மேடைகளிலும் பயின்றுவந்த இலக்கியத்தை அன்றாட வாழ்க்கையில் உரையாடல்களில் இவர் பாடல்கள் கொண்டு சேர்த்தன என்ற ஈரோடு தமிழன்பனின் கூற்று மிகவும் ஏற்புடையதே.

“தனிப் பாடல்களில் சிறந்த இலக்கியச் சுவைகண்டு மகிழும் நிலையைத் தமிழ் வரலாற்றில் தோற்றுவித்தவை, சென்ற நூற்றாண்டில் இருந்த இரட்டையர் தனி பாடல்களும், இவர் காளமேகப் புலவர் செய்த தனிப்பாடல்களுமே. இப்பாடல்களின் பெருஞ் சிறப்பு இவை கல்விப்பயிற்சி குறைந்தோர் நாவிலும் பயின்றன என்பதாகும்” என்ற மு. அருணாசலத்தின் கூற்று மேற்செய்திகளை வலிதாக்கும்.

இத்தகைய சிறப்புடைய புலவரைப் பெற்றிருந்த போதிலும், தனிப்பாடல்களுக்கெனத் தனித்த இட மின்மைக்கான காரணத்தை இவரது கருத்துக்கள் வழியே தெளிவுபடுத்தப்படுகிறது. காளமேகப் புலவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை திரட்டுக்குத் திரட்டு அல்லது பதிப்புக்குப் பதிப்பு வேறுபாட்டைக் காணமுடிகிறது. கா.சு.பிள்ளையின் உரைபதிப்பின் படி 187 பாடல்கள் பாடியதாக உள்ளன.

 பாடல் களை ஒருங்கிணைத்துப் பார்க்கையில் காள மேகத்தின் கருத்தியல் இவை என தீர்மானிக்கலாம். இதனை அகம் - 5, புறம் - 41, அறம் - 4, சமயம் - 100, பொதுவியல் - 37 எனப்பாடல்கள் பொருள் அடிப் படையில் பிரிந்திருந்தாலும், கருத்தியல் அடிப் படையில் சிலேடை / வசை, பக்தி, சமயப்பூசல், புலமை வாதம் / புலமைச் செருக்கு என அமைந் திருப்பதைக் காண முடிகிறது.

சிலேடை / வசை

‘கல்லாடம் கற்றவரோடு சொல்லாடாதே’ என்பர். அதுபோன்று சிலேடைப் புலவரிடம் சொற்வாசம் செய்யாதே என்பதும் உண்மை. சிலெடைப் புலவர்கள் சொற்களை வைத்து விளை யாடுவது போன்றே சொற்றொடர்களையும் வைத்து சொற்சிலம்பம் ஆடுவர். நேரிடையாக

ஒரு பொருளைத் தரும் சொல் / சொற்றொடர், விரித்தோ / சேர்த்தோ பார்க்கையில் பிரிதொரு பொருளைத் (முரன்பட்ட பொருளை) தருவது சிலேடை. காளமேகப் புலவர் 24 பாடல்கள் சிலேடையில் அமைந்துள்ளார். அவை அஃறிணை X அஃறிணை, அஃறிணை X உயர்திணை, இறைவன் X இறைவன், கடவுள் X அஃறிணை எனப் பிரிந்து அமைந்திருக்கும். இவை பொருந்தமில்லாத இரண்டினைப் பொருத்தமுள்ள ஒன்றாக காட்டும்.

வெற்றுப்பாடல்களாக அமைந்த இவை காளமேகப் புலவரின் வாழ்க்கையோடு பொருத்திக் காணுகையில் ஏதோ ஒன்றை உணர்த்துவதற்காக பாடப்பட்டதே.

இதனாலேயே மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்ற உலகியல் வழக்கு உருவாகி இருத்தல் வேண்டும்.

காளமேகப்புலவரை ஆதரித்த மன்னன் திரு மலைராயன் என சுட்டப்படுகிறது. ஆனால் அதி மதுரகவிராயரையே திருமலைராயன் அவைக் களப் புலவராய் ஆதரிக்க, காளமேகப் புலவர் அவரோடு செய்த புலமைவாதத்தை விரும்பாத தையே பாடல்கள் காட்டுகின்றன.

அதனால் திருமலைராயன் வரையில் மண்மாரி பொழி யட்டும் என வசைபாடுகிறார். அதிமதுர கவி ராயரிடம் கொண்டுள்ள புலமைவாதம் காட்டப் படுவதால் அதிமதுர கவிராயரிடம் கொண்டிருந்த கோபம், திருமலைராயனையும் பற்றி இருக்க வேண்டும்.

இதனால் திருமலைராயனை வசை பாடுவதற்காக, அவன் முன் பொருத்தமில்லாத பொருட்களைப் பொருத்தமானதாக இருப்பதாக சிலேடைப்பாடல்கள் மூலம் அமைத்துக்காட்டு கிறார்.

மற்றவர்களை வசைபாடுவதில் வல்லவர். பொதுவாக மனிதனுக்கு கோபம் வருவது இயல்பு. அது புலவர்களுக்கும் இயல்பு என்றாலும் புலவர் களின் கோப வாரத்தைப் பலிக்குமோ என்ற அச்சம் பொதுவாய் மக்களிடையே இருப்பதைக் காண முடிகிறது.

புலவர்களின் வளர்சிதை மாற்றம் பெற்ற ஆசிரியர்கள் மீது இன்னும் பயம்கலந்த மரியாதை இருப்பதில் இருந்து உணர்ந்து கொள்ள லாம். காளமேகப் புலவரைப் பொருத்தமட்டில் வசைபாடுவதையே தனது கருத்தியல் தளமாக பரிணாமித்துக் காட்டுகிறார்.

இதனால் மனிதர் களை மட்டுமல்லால் கடவுள்களைப் பற்றி பாடு கையிலும், நிந்தாஸ் துதி என்ற பெயரில் பாடு வதின் மூலம் தனது ஆழ்மன ஆசையை நிறை வேற்றிக் கொள்கிறார். இது இவரை மற்ற பக்தி புலவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டு கிறது.

“சுருக்க விழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்

பொருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்

கோட்டானே நாயே, குரங்கே யுனையொருத்தி

போட்டாளே வேலையற்றுப்போய்”

(காளமேகப்புலவர் - 63)

என்று சமாராதனையில் எதிர் அமர்ந்து உண்ட சோழிய பிராமணனை வசைபாடுகிறார். வைணவ குலத்தில் இருந்து சைவகுலத்திற்கு மாறிய காள மேகப்புலவர் சோழிய பிராமணனை வசைபாடு வதை எதார்த்த நிகழ்வின் பின்னணியில் எழுந்த வசையாகப் பார்க்க இயலாது.

சமுதாய மன நிலையின் பதிவாகவே பார்க்கப்பட வேண்டும். கம்பர், ஒட்டக்கூத்தர், ஒளவையார் பாடல்களில் சாதிய சார்புத்தன்மை வெளிப்படையாக தெரிய இவரது பாடலில் வெளிப்படையாக காட்டப்பட வில்லை என்பதை இவ்வசைப் பாடல் வெளிப் படுத்துகிறது.

பக்திப் பாடல்கள்

காளமேகப் புலவரின் பாடல்களில் பெரும் பங்கு பக்திப் பாடல்களே. பக்திப் பாடல்கள் பெரிதும் பாடப்பட்டு இருப்பினும் பக்தியின் உணர்ச்சிக்கான உருக்கம் சிறிதும் இல்லை. இருப் பினும் சில, கருத்தியல் தளங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. இவரது பக்திப் பாடல்கள் சுகுண பிரம்மத்தைக் காட்சிப்படுத்தும் வகையின. அல்லது உலக வெளகீக வாழ்க்கையின் படிவான குடும்ப உறவுகளை இறைவர்களுக்கு இடையில் பொருத்திக்காட்டுவனவாக உள்ளன. இது பக்தி இலக்கியத்தின் எச்சமாகும்.

மது, மாது கடியப் படாது களிப்புடன் வாழ்ந்து சலித்த நிலையில் சமண, பௌத்த சமயங்கள் துறவறத்தைத் தூக்கிப் பிடித்து மக்களைத் திசை திருப்பி.

தமிழக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது. இதனால் சில நூற்றாண்டுகளில் சைவமும், வைணவமும் பக்தி இயக்கத்தை 5-ம் நூற்றாண்டில் தொடங்கினாலும். அதனை ‘இல்லற ஒழுக்கத்தை’ முன்னிறுத்தியே வென்றெடுத்தது.

குடும்ப உறவுகளுக்கிடையிலான நிகழ்வுகளை மையமிட்டுப் புராண கதைகள் புனையப்பட்டும், பரப்பப்பட்டும் வந்தன. மக்கள் சடங்குகளைப் போலவே இறைவர்களுக்கும் சடங்குகளைச் செய்து திருவிழா முறைகளை ஏற்படுத்தினர்.

இதுவே பக்தி இயக்க வளர்ச்சிக்குத் தூண்டுகோலாய் அமைந்தது. இச்சமயப் போராட்டம் முற்றிலும் ஓய்ந்து போன நிலையில் காளமேகப்புலவர் பக்திப் பாடல்களைப் பாடியதால் குடும்ப உறவு அமைப் பிலான, பாடல்களாக அமைந்து விடுகின்றன.

காளமேகப்புலவர், கடவுளுக்கிடையே

உள்ள வெளகீக விசயங்களைப் பற்றி பாடுவதால் புராணச் செய்திகளைத் தவிர்க்க முடியவில்லை. இவரது பக்திப்பாடல்களைப் படிக்கும்போது புராணங்களின் பின்புலம் இல்லாமல் புரிந்து கொள்வது என்பது இயலாது.

சிவன் மாரனை எரித்தது, ஆலாலம் உண்டது, கண்ணப்பர் கண் அப்பியது, சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி படைத்தது போன்ற புராணசெய்திகள் திரும்பத் திரும்ப பாடல்களில் பயின்று வருகின்றன. இங்ஙனம் இவரது பாடல்கள் அமைந்துள்ளதால் பக்திப் பாடல்கள் என அழைப்பது பொருந்துமா?

சமயப் பூசல்

சமயப் பூசல் என்பது இங்கு சைவ வைணவ சமயங்களுக்கு இடையிலானது. ஞானசம்பந்தர் பதிகங்களிலேயே திருமால், பிரம்மனைக் காட்டிலும் சிவன் உயர்வு எனக் குறிப்பிடப்படும். காளமேகப் புலவரின் பாடல்களில் சமயப் பூசல் கருத்தியல் பதிந்துக் காணப்படுகிறது.

வைணவத்தை நேரிடை யாக அவதூறாக தாக்காமல் வைணவத்தைக் காட்டிலும் சைவம் மேலானது என்றே குறிப்பிடு கிறார். இதனால் வைணவத்தை அவதூறு செய்வது நோக்கமல்ல, சைவத்தை உயர்த்துவதே நோக்கம்.

திருமால் உலகையுண்ட பொழுது சிவன் யானையை அடக்கியாளும் பாகன் என்பதும், திருமால் பிறந் திறக்கும் இயல்புடையவன், சிவனோ பிறவாத் தன்மையுடையன் என்பதும், சிவனுக்கு திருமால் திரிபுரம் எரிக்க அம்பாக, எருதாக உதவி புரிந்தான் என்பதும் சைவத்தை உயர்த்திப் பிடிப்பதற் காகவே.

புலமை வாதம் / புலமைச் செருக்கு

காளமேகப்புலவரின் ஒட்டுமொத்தப் பாடல் களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கையில் பல கருத்துக்களில் நிறமாலையாக பிரிந்து அமைந் தாலும் அனைத்தும் புலமைத்திறம் என்ற ஒரு தளத்தில் ஒருங்குவதைக் காணலாம்.

மேற்குறிப்பிட்ட கருத்தியலில் இயங்கினாலும், அடிப்படையில் வாதத்தினாலும், எதிர்மறையான விதத்தினாலும் தன் புலமையை நிலைநிறுத்திக் காட்டுகிறார். தன் புலமையை நிலைநிறுத்த அதிமதுர கவிராயரிடம் எமகண்டம் பாடியதாக விநோத ரச மஞ்சரி விளக்கும்.

 மூச்சு விடும் முன்னே முந்நூறும், நானூறும் பாடும் தன்மையுடையவர் காளமேகப்புலவர் என்பதை அதிமதுரகவிராயரே தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

இத்தகைய கேட்பவரின் மனதைப் புண் படுத்துகிற மாதிரி வசைபாடும், புலமை செருக் குடன் கூடிய புலவர் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தது எங்ஙனம்?

புலவர்களின் வார்த்தையில் மந்திரத் தன்மை யுள்ளதாக மக்களும் மன்னரும் நம்பியதே இதற்கு காரணம். திருமலைராயன் பட்டிணத்தில் மண் மாரி பெய்யும்படி பாடியது குறிப்பிடத்தக்கது.

 புலமைச்செருக்கோடு சபித்தலாக பாடும்பொழுது மக்கள் அதனை மாற்றிப்பாடும் படி வேண்டுவதாக வினோத ரச மஞ்சரி கூறுகிறது. இதனால் இவருக்கு இருந்த செல்வாக்கு உறுதியாகிறது.

இத்தகைய கருத்தியல் செறிவோடு பாடி, செல்வாக்குடனும், திகழ்ந்த காளமேகப்புலவர் போன்றோர் பாடல்களைக் கொண்டு தொகுக்கப் பட்ட தனிப்பாடல் திரட்டு இலக்கிய வெள் ளோட்டத்தில் சங்க இலக்கியம் போன்று நிலை பாட்டைப் பெறாமைக்குக் காரணம் என்ன?

1.    சங்க தனிச் செய்யுள்கள் இலக்கண வரை யறையின் கீழ் எழுதப்பட்டவை. தனிப்பாடல்கள் வடிவத்திற்கான இலக்கண வரையறைகளை மட்டும் கொண்டு உள்ளடக்கத்திற்கு எந்தவித ஒழுங்கு முறையும் இல்லாமல் கேட்போரின் மனக்கிளர்ச்சி யையே கருத்தில் கொண்டு படைக்கப்பட்டன.

முற்காலப் புலவர்கள் கருத்து நுட்பத்தையும், பிற் காலப் புலவர்கள் சொல்நுட்பத்தையும் கொண்டனர் என கா.சு. பிள்ளை இரண்டாம் பதிப்பின் முன்னு ரையில் குறிப்பிடுவது நினைக்கத்தக்கது.

2.காளமேகப்புலவரின் பாடல்களுக்கென்றே தனிப்பாடல் திரட்டு தொகுப்பட்டதோ என்று மு.அருணாசலம் தனது இலக்கிய வரலாற்றில் குறிப்பிடுவார். காளமேகப் புலவரின் தொகுப்பு முறையில் காட்டப்பட்ட கவனம் கூட பிற புலவர்களின் பாடல் திரட்டில் காட்டப்படவில்லை. கம்பர், ஒளவையார், ஒட்டக்கூத்தர் போன்ற பாடல் களைப் பார்க்கையில் கிடைத்தவை எல்லாம் எண்ணிக்கை அடிப்படையில் சேர்க்கப்பட்டதே. பகுப்பு, வகைப்பு ஏதும் இல்லாமல் நடை பெற்றுள்ளது புரிகிறது.

3.    சங்க அகப்பாடல்கள் தனிச்செய்யுளாக இருந்த பொழுதும் தனித்தனி நிகழ்ச்சிகளைத் தனித்தனி சூழலில் பாடப்பட்டிருந்த பொழுதிலும் அவற்றை ஒருங்கிணைத்து ஒரு கோர்வை படுத்திப் பார்க்க இயலும். காரணம் அக வாழ்வில் பொதுமை நிலையில் நிகழக்கூடிய அனைத்துக் கூறுகளைப் பற்றியும் பாடியுள்ளன. ஆனால் தனிப்பாடல்களில் வெறிவிலக்கல், வரைவு கடாவுதல் போன்ற ஒரு சில துறைகளுக்கான பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

4.    தனிப்பாடல்கள் இலக்கியப் படைப்பு களாக இல்லாமல் வெறும் நிகழ்ச்சிகளின் பதிவாக அமைந்துள்ளன. பாக்குவெட்டி காணாமல் போனதற்கும், சலவை செய்து தந்தவரைப் பாராட்டுவதற்கும் பாடிய பாடல்கள் காலம் கடந்து நிற்குமா? என்பது கேள்விக்குறியே.

5.    மேலைநாட்டு இலக்கிய வரலாறு புலவர் களின் வரிசையிலேயே அமைக்கப்பட்டு இருக்கும். அங்ஙனம், தனிப்பாடல்களும், புலவர்களால் திரட்டப் பட்டு இருக்கும். தமிழ் இலக்கிய வரிசையில் பாடல்கள், வரலாறுகளை நோக்கையில், சங்கம், அறம், பக்தி, காப்பியம் என்ற அடிப்படையில் அமைந்து பின்னர் 20ஆம் நூற்றாண்டு இலக்கி யங்கள் பாரதியார், பாரதிதாசன் எனப் படைப் பாளிகளின் வரிசையிலேயே தொடர்வதைக் காணலாம். இது தெளிவான வரலாற்றுப் பின் புலம் உள்ள படைப்புகளுக்குப் பொருந்தும், வரலாற்றுப்பின்புலம் வெறும் கதைபுனைவுகளாக உள்ள புலவர்களின் படைப்பான தனிப்பாடல் களுக்குப் பொருந்தாது.

தனிப்பாடல் திரட்டு மேற்கண்டன இல்லாமல் இலக்கிய நயம் மிக்க, கட்டமைப்புடைய, கருத்தை முன்நிறுத்திய, சொல்லும் முறையுடன் பாடல்கள் இல்லாமல் இல்லை.

சக்தி முத்த புலவரின், நாராய், நாராய் போன்ற இலக்கிய நயமிக்க பாடல்கள் பல புதைந்துகிடக்கின்றன. அவற்றையெல்லாம் கருத்தின் வரையறைகளுடன் ஒருங்கமைத்து தொகுப்படுமேயானால் இலக்கிய பாதையில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும்.

Pin It