கீற்றில் தேட...

இலா. வின்சென்ட் அவர்கள் தமிழாசிரியர் பணி நிறைவு பெற்றவர்; பன்முக ஆற்றல் வாய்ந்தவர்.

"தமிழ் மீதான ஆதிக்கம்" என்ற அருமையான ஆய்வுநூலைக் கொண்டுவந்திருக்கிறார்.ஆய்வுப் புலத்தில் ஆழங்கால்பட்ட தமிழறிஞர், பேராசிரியர், வீ.அரசு அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது இந்த நூல். இலா. வின்சென்ட் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட 'தமிழ் நிலம் மீதான ஆதிக்கம்' என்கிற இந்நூல் நான்கு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதற்கு முனைவர் கு.கணேசன் அழகிய மதிப்புரை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

thamizh meethana aathikkam‘முதல்கட்டுரை தமிழர் கடையரோ'?

பழந்தமிழ் இலக்கியங்கள் பாலும் குறிப்பிடும் வள்ளல்கள் எழுவர்.பாரி,ஓரி,காரி,எழினி (அதியமான்), பேகன், ஆய், நள்ளி ஆகியோர், பெரும் கடையேழு வள்ளல்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். அப்படியானால், முதல் ஏழு, இடையேழு வள்ளல்கள் யாவர்? என்ற வினாவுக்கு விடைகாண முயல்கிறார், ஆசிரியர் வின்சென்ட். அந்த வள்ளல்களைப் பற்றி அறிய முற்படும் போதுதான் அதிர்ச்சி உண்டாகிறது.அந்த முதல், இடைவள்ளல்கள் என்போர் யாருமே தமிழுக்கோ, தமிழ் மண்ணுக்கோ தொடர்பே இல்லாதவர்கள். அவர்களின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ்ப் பெயர் இல்லை.

வீரமாமுனிவர் தொகுத்த சதுர் அகராதியில் தொகையகராதி என்ற பகுதியில் முதல், இடை, கடை வள்ளல்களின் பெயர்கள் உள்ளதைக் கண்டறிந்து பட்டியல் இடுகிறார்.

முதலேழு வள்ளல்கள் 1.குமணன், 2.சகரன், 3.சாகரன், 4.செம்பியன், 5.துந்துமார், 6.நளன், 7.நிருதி ஆவர். இடையேழு வள்ளல்கள் 1.அக்கிரன், 2.அந்திமான், 3.அரிச்சந்திரன், 4.கர்ணன், 5.சக்திமான், 6.சிசுபாலன் 7. தந்த விக்கிரன் ஆகியோர். கடையேழு வள்ளல்கள் 1.எழினி(அதியமான்), 2.ஓரி, 3.காரி, 4.நள்ளி, 5.பாரி, 6.பேகன், 7.மலையன் முதல் ஏழு வள்ளல்கள் என்போர். இவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றிலோ, தமிழக மக்கள் வரலாற்றிலோ, மன்னர் பரம்பரையிலோ இடம்பெறவில்லை. ஏனெனில், சதுர் அகராதி (கி.பி.1732), இதற்கு முந்தையபிங்கல நிகண்டு(10ஆம்.நூ.ஆ), சூடாமணி நிகண்டு ஆசிரிய நிகண்டு முதலியவற்றிலும், இதற்குப் பிந்தைய அபிதான சிந்தாமணி (1900) யிலும் இந்த முதல், இடை வள்ளல்களை முன்வைத்து இவர்கள் முற்பட்டவர்கள் என்றும், பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் பச்சைத்தமிழ் வள்ளல்களைப் பின்னால் வைத்து கடையேழு வள்ளல்கள் என்றும் குறிப்பிடும் போக்கைக் கண்டறிந்து முன்வைக்கிறது முதல் கட்டுரை. இதிலிருந்து பல்வேறு சான்றுகள் மூலம் வடமொழி தமிழ் மீது ஆதிக்கம் செய்வதை அம்பலப்படுத்துகிறது முதல் கட்டுரை.

இந்த முதல், இடை வள்ளல்கள் எனப்படுவோர் வடமொழி சார்ந்த புராண, இதிகாசங்கள் அவற்றைப் பின்பற்றிய வழி நூல்கள் குறிப்பிடுவதைச் சான்றுகளோடு நிறுவி வடமொழி இலக்கியங்கள் குறிப்பிடும் வள்ளல்களை முன்னவர்கள், பிந்தியவர்கள், கடையர்கள் என்பதை நிறுவும் அரசியலை இனங்கண்டு வெளிப்படுத்தும் இலா.வின்சென்ட் அவர்களின் ஆய்வுப்பாங்கும் நேர்மையும் உண்மையும் மனங்கொள்ளத் தக்கவை; பாராட்டுதலுக் குரியவை.

அடுத்த இரண்டாவது கட்டுரை நூலின் தலைப்பான 'தமிழ் மீதான ஆதிக்கம்' என்ற கட்டுரை. இந்நூலில் உள்ள சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

சங்க இலக்கியங்களான பழந்தமிழ் இலக்கியங்கள் வெளிவராது மறைக்கப்பட்ட இடைக்காலத்தில், தமிழ் மிகவும் அவல நிலையை அடைந்திருந்தது. "தமிழுக்குத் தனித்த அடையாளம் எதுவுமில்லை. அது வடமொழியான சமஸ்கிருத செல்வாக்கு பெற்றதே சமஸ்கிருதமே முதன்மைச் சிறப்புடைய மொழி. எல்லா மொழிகளுக்கும் அதுவே தாய்மொழி. தமிழ்மொழி, சமஸ்கிருதத் தொடர்பினாலாயே சிறப்பு பெற்றது" என்ற கருத்து ஆரியர்களான பிராமணர்களால் முன்வைக்கப்பட்டது.சைவமும் வைணவமும் எழுச்சிபெற்றபோது தமிழை முதன்மைப்படுத்தி திவ்வியப்பிரபந்தம் முதலிய பக்திப் பாசுரங்கள் இயற்றப்பட்டாலும் அப்பாடல்களிலும் தமிழ் பாராட்டப்பட்டதோடு அதற்கு நிகராகச் சமஸ்கிருதமும் சேர்த்தே புகழ்ந்து பாடப்பட்டது.

அக்காலப் பகுதியில் தோன்றிய 96 வகைப் பிரபந்தங்கள் என்கிற சிற்றிலக்கியங்கள் வடமொழி மரபையொட்டியே இயற்றப்பட்டன. வருணப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் புனையப்பட்டன.

எடுத்துக்காட்டாக, வெண்பாப்பாட்டியல் ஒரு நூலின் முதல்சீர் அமைவதற்கான விதிகளைக் கூறும்போது நூலின் தலைவனுடைய சாதி, நட்சத்திரம் முதலியவற்றைக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல் முதல் சீரை அமைக்க வேண்டும் என்கிறது.

முத்து வீரியம் என்னும் பாட்டியல் நூலோ கலம்பக இலக்கணம் கூறுங்கால் இந்தச் சாதிக்கு இத்தனைப் பாக்கள் என்று வரையறுக்கிறது.

"தேவர்க்கு நூறு, அந்தணர்க்கு ஐந்தொழித்தல் அரசர்க்குத் தொண்ணூறு ஐம்பது வைசியர்க்கு ஆறைந்து எம்மனார் கற்று உணர்ந்தாரே”.

கலம்பகம் தேவர் (வானவர்) மீது பாடினால் 100 பாடல்கள்; அந்தணராயின் 95 பாடல்கள்; அரசராயின் 90 பாடல்கள்; வைசியராயின் 50 பாடல்கள்; சூத்திரராயின் 30 பாடல்கள் என வருணப் படிநிலைக்கேற்ப படிப்படியாகப் பாடல்கள் குறைந்துகொண்டே வருவதைப் பார்க்கலாம்.இதையே தொன்னூல் விளக்கம் போன்ற பிற பாட்டியல் நூல்களும் கூறுகின்றன. மேலும் பிங்கல நிகண்டு போன்ற இலக்கணநூல்களும் தமிழைக் காட்டிலும் சமஸ்கிருதத்தையே முதன்மைப்படுத்துகின்றன. இக்கட்டுரை முன் வைக்கும் ஒரு பட்டியலைப் பார்ப்போம். சங்க காலத்தில் 500 தமிழ்ச் சொற்களிடையே இரண்டு வட சொற்கள் கலந்திருந்தன. கி.பி.1000த்தில் 100 தமிழ்ச் சொற்களிடையே 30 வட சொற்கள் கலந்திருந்தன.கி.பி.1700 இல் 100 தமிழ்ச் சொற்களிடையே 50 வட சொற்கள் கலந்திருந்தன. கி.பி 1900 ஆண்டுகளில் 100 தமிழ்ச் சொற்களிடையே 60 வட சொற்களுக்கு மேல் கலந்திருந்தன. தமிழ் அழிந்து போகும் நிலைக்கு எழுத்திலும் பேச்சிலும் சமஸ்கிருத ஆதிக்கம் வளர்ந்தது. இச்சூழலில்தான் இதனை எதிர்த்து தமிழ்மீது பற்று கொண்டு தனித்தமிழ்இயக்கம் தோன்றுகின்ற வரலாற்றுத் தேவை ஏற்பட்டது என்பதனைக் கட்டுரை ஆசிரியர் காத்திரத்துடன் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. ஓலையில் செய்யுள் எழுதும் போது கூட பிராமணருக்கு 24 விரல் அளவு, அரசருக்கு 20 விரல் அளவு, வணிகருக்கு 16 விரல் அளவு, சூத்திரருக்கு ஒரு சான் அளவு என்று நவநீதப் பாட்டியல் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டி தமிழ்மீதான வட மொழியின் ஆதிக்கத்தை ஆசிரியர் வின்சென்ட் அம்பலப்படுத்துகிறார். 19ஆவது நூற்றாண்டிலும் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் இலங்கை வை.தாமோதரனார் போன்றோர் பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டெடுத்த பின் தான் தமிழ் வரலாற்றுச் சிறப்பு புலப்பட்டது தமிழ்மீதான சமஸ்கிருத ஆதிக்கம் அழுத்திக் கொண்டிருந்ததைச் சிறப்பாக முன்வைக்கிறார், இலா.வின்சென்ட். அடுத்து மூன்றாவது கட்டுரை தொல்காப்பியரும் நான்கு வருணங்களும்' என்ற கட்டுரை. இது பற்றி அணிந்துரையில் பேரா.வீ.அரசு அவர்களின் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

"தொல்காப்பியம் எனும் பிரதி பொ.ஆ.மு.100 முதல் பொ.ஆ.600 வரையிலான தொடர்ச்சியான தமிழ்ப் புலமை மரபின் தொகுப்பு ஆகும்.ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகளின் தொடர் உரையாடலான அது பொ.ஆ.600 இல் நிலைபேறு கொண்டது. அதற்கு ஓர் ஆசிரியர் என்று அணுகும் பார்வை சரி அன்று; அது ஒரு மரபு சார்ந்த உருவாக்கம். இக்கருத்துக்குச் சான்றாக பேரா.வீ.அரசு அவர்கள் பேரா.தெ.பொ.மீ., பேரா.கா.சிவத்தம்பி, பேரா.கமில்சுவலபில் ஆகியோரது கருத்துகளும் ஒத்துப் போவதாகச் சான்று காட்டி நிறுவுகிறார். இது நிற்க, நமது ஆசிரியர் தொல்காப்பியத்தின் ஆசிரியர் ஒருவரே என்ற கருத்தில் தொல்காப்பியத்தை முழுமையாக ஆய்வு செய்து தொல்காப்பியர் கூறும் அந்தணர் அரசர், வணிகர் வேளாளர் என்ற நான்கு வருணங்களாகக் கொண்டு, அந்தணர், அரசர், முதலியோர் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடும் விவரணைகளை அடிப்படையாக வைத்து வருணக் கோட்பாட்டைத் தொல்காப்பியர் தனது நூலில் முன்வைக்கிறார் என்ற பார்வையோடு அணுகுகிறார்.

இவருடைய ஆய்வு முறை இந்த நூலை (தொல்காப்பியத்தை) முழுப்பிரதியாகக் கொண்டு, தொல்காப்பியர் ஒருவரே இதன் ஆசிரியர் என்ற கருத்து நிலையிலிருந்து பார்க்கும் போது சரியாகவே படுகிறது. திறமையாக தர்க்கரீதியாக நால்வருணைக் கோட்பாட்டை நிறுவுகிறார்.

தொல்காப்பியர் கூறும் நான்கு படிநிலைகள் வைதீக மரபு முன்வைக்கும் வருணக் கோட்பாடுதானா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியலில் மரம், செடி, கொடி, விலங்குகள் பற்றிக் கூறி வரும்போது தொடர்பேயில்லாமல் அந்தணர், அரசர், வணிகர் (வைசியர்), வேளாளர் பற்றிய விவரம் கூறப்படுகிறது. (எ-டு) அந்தணர் பற்றி சூத்திரம் 621 கூறுகிறது.

நூலே கரகம், முக்கோல், மணையே ஆயும் காலை அந்தணர்க்குரிய அந்தணர்க்குரியன மார்பில் அணியும் முப்புரிநூலும், கையில் கொள்ளும் கமண்டலமும் தண்டு எனப்படும் முக்கோலும் ஆகும் என்கிறது.

இவ்வாறே சூத்திரம் 621 முதல் 635 வரை அரசர், வணிகர் (வைசிகன்), வேளாளர் பற்றிக் கூறிவிட்டு 636ஆவது சூத்திரம் மீண்டும் 'புல்' பற்றிப் பேசுகிறது. பேரா.கா.சிவத்தம்பி அவர்கள் 621 முதல் 635 வரையிலான சூத்திரங்கள் இடைச் செருகல் என்கிறார். எனினும், இக்கருத்துகள் தொல்காப்பிய நூலில் வருவதால் இதை வைத்து இலா.வின்சென்ட் திறமையாக ஆய்வு செய்திருக்கிறார்.

அடுத்து நான்காவது கட்டுரை "எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியமா?" என்ற கட்டுரை. இது மிகவும் பாராட்டத்தக்க சிறப்பான கட்டுரை என்றே சொல்ல வேண்டும்.

இன்றைக்கு சங்க இலக்கியம் என்று சொல்லப்படுவது பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் ஆகும். உண்மையில், சங்கம் என்ற ஒன்று இருந்ததா? முதல், இடை, கடை என முச்சங்கங்கள் இருந்தன எனவும், முதல் இடைச் சங்ககால நூல்கள் இயற்கைப் பேரிடரால் கடல்கோளால் அழிந்துவிட்டன எனவும், நமக்குக் கிடைத்துள்ள பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் கடைச் சங்க கால நூல்களாகும் என்றும் வரலாறு கட்டமைக்கப்படுகிறது. புலவர்கள் அரசவையிலும் பல மன்றங்களிலும் கூடி விவாதிப்பார்கள்; நூல்களை அரங்கேற்றம் செய்வார்கள். அவை குழு, கூட்டு, அவையம் என்றே சுட்டப்பட்டுள்ளன. சங்கம் என்ற சொல் மேல்கணக்கு நூல்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லை. கி.பி. 470 இல் வச்சிரநந்தி என்பார் மதுரையில் 'திரிமிளச் சங்கம்' நிறுவினார். இதுவே சங்கம் என்ற பெயரிலான முதல் அமைப்பு. கி.பி.8ஆம் நூற்றாண்டில் இறையனார் களவியல் உரை தான் பயன்படுத்தியது. இது புலவர், அறிஞர், மக்கள் மத்தியில் புழக்கத்தில் வந்து விட்டதேயன்றி உண்மையில் சங்கம் என்றும் சங்க காலம் என்றும் எதுவும் இல்லை என்பதை இலா.வின்சென்ட் அவர்கள் தனது இந்த ஆய்வுக்கட்டுரை மூலம் நிறுவுகிறார்.

இதன் தர்க்கபூர்வமான முன்வைப்பை யாரும் நிராகரிக்க இயலாது. அதற்கான வலுவான, சான்றுகளை முன்வைத்து நிறுவுகிறார். இது முற்றிலும் உயர்வு நவிற்சியாகப் புனைந்துரைக்கப்பட்டது என்பதற்கு அவர் விரிவாக வைத்த சங்க நூற்பட்டியலிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு முதற்சங்கம் நிறுவப்பட்ட இடம் மதுரை (கடல்கொண்டது) நிறுவிய மன்னன் சாய்சிவைழுதி சங்கம் புரந்தோர் கடுங்கோன் ஈறாக 89 பேர். சங்க முதன்மைப்புலவர் அகத்தியர்,திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள் (சிவபெருமான்) குன்றெறிந்த முருகவேள்,முரஞ்சியூர் முடிநாகராயர்,குபேரன் உட்பட்ட 4449 ஆண்டுகள். இத்தனை ஆண்டுகள் ஒருவர் உயிர் வாழ முடியுமா? இது ஒன்றே போதும் - இது ஒரு புனைவு என்பதற்கு.

இக்கட்டுரை இறையனார் களவியல் நூல் பற்றி விரிவாக ஆய்வு செய்து பழந்தமிழ் இலக்கியம் தோன்றி வெகு காலத்திற்குப் பின் தோன்றிய இந்நூல் ஆரியசெல்வாக்குக்குட்பட்டு இருந்ததையும், அக்காலத்தில் வைதீக மரபின் ஆதிக்கம் எவ்வாறு இருந்தது என்பதையும் விரிவாக ஆய்வு செய்து தமிழ் நிலத்தில் தமிழர்களே, தமிழ்ப்புலவர்களே எவ்வாறு வடமொழி மோகத்திற்காட்பட்டு வீறிழந்து போயினர் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவி தமிழ் மீதான ஆதிக்கம் இன்றும் தொடர்வதைச் சுட்டிக்காட்டி, இவ் வாதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதையும், அதற்கான பல்வேறு ஆகழாய்வு முடிவுகள் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்றவற்றின் ஆய்வுகள் வெளிப்பட வேண்டும் எனவும் அப்போது வடமொழி ஆதிக்கம் இல்லாமல் போவதோடு வடமொழித் தொடர்பின்றியே தமிழ் இலக்கியம் இயங்கியது, இயங்கிவருகிறது என்பதையும் ஆய்வுலகில் நிலைநிறுத்த முடியும் என்று வலுவான ஆதாரங்களுடன் நிறுவுகிறது. நான்கு கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல், தமிழ்ச்சமூக வரலாற்றில் ஆதிக்கசக்தியாக செயல்பட்டு வந்த வைதீகம் எனப்படும் பார்ப்பனிய மதத்தின் பண்பாட்டு நடவடிக்கையைப் புரிந்துகொள்வதற்கு உதவும் அரிய ஆவணமாக அமைகிறது.

- இரவீந்திரபாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.