அக்கானி என்பது சுண்ணாம்பு தடவிய கலயத்தில் வடியும் கள் பனையேறிகள் தொழில்படுவதால் அது சுவைமிக்க பானமாக நமக்குக் கிடைக்கிறது. அக்கானியைக் காய்ச்சி, கருப்பட்டியாக்கிக் கடைகளிலும் சந்தையிலும் விற்பார்கள். இந்த வரும்படியை வைத்தே துன்ப துயரங்களோடு அவர்கள் வாழ்வு நகர்கிறது. இவர்களோடு நெசவு, காய்கறி பயிரிடுதல், மரச்சீனிக் கிழங்கு சாகுபடி செய்வோரும் அவ்வூரில் உண்டு

akkani l vincentகத்தோலிக்கக் கிறித்தவப் பின்புலமே முதன்மையாக இருப்பினும், அய்யா வைகுண்டர்சாமி பக்தர்கள் இந்து நிலவுடைமை நாயர்கள், ஆசாரி ஒடுக்கப்பட்டோர். நாவிதர், வண்ணார் என இந்திய கிராமத்தின் பன்மைத்துவத்தைப் பாத்திரப் படைப்பில் காணமுடிகிறது. இத்தகு உற்பத்தி முறைக்கும். சமூக முரண்பாடுகளுக்கும் இடையே இயங்கும் ஊர்தான் பூட்டேற்றி. அது குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது. அவ்வூரே அக்கானி நாவலின் கதைக்களம். 50 ஆண்டுகளுக்கு முந்தைய பூட்டேற்றி மக்களின் வாழ்வியலை மண் வாசனை கமழ ஒரு வரலாறுபோல் படைத்து, படிப்போரைப் பிரமிக்க வைக்கிறார் இலா வின்சென்ட்.

அங்கு வாழும் மக்கள் சரளமாகப் பயன்படுத்தும் கொப்பன், கொம்மை, மோள குட்டியே மூம்பிலு, செல்லிச்சினம், வந்தினம், போச்சினம், எம்பிடு விளிச்சி, மிருக்குத்தடி திளாப்பு, அருவாத்தி, பயினி பத்தை, தட்டு, வெறுங்கறி, அரச்சியது, சக்கை, வௌ. கண்டம் குண்டு, படுவால், கையாலை, சிம்மாடு போன்ற ஏராளமான சொற்கள் இடம்பெற்றுள்ளன. நாயர் மாந்தர்கள் மலையாள மொழியில் பேசுகின்றனர். இம்மொழிநடைகள் மூலம் இருமொழி பேசும் பகுதி பூட்டேற்றி என்பதை அடையாளப்படுத்துகிறார் நாவலாசிரியர். கூடுதலாக அங்கு புழுங்கும் சொலவடைகள். ‘பனையேறப் போனவனும் கடல்ல மீனுபிடிக்கப் போனவனும் திரும்பி உயிரோட வந்தாத்தான் உண்டு’. ‘கல்லிடெ கெழங்கும் எல்லிடெ எறச்சியும் ருசியானது, நாங் எல்லுமுறிய வேலசெய்யணம் நீ பல்லுமுறிய தின்னணம்' போன்றவை நாவலில் விரவிக்கிடக்கின்றன

குரல்வளை நெரிக்கப்படும் நெருக்கடியிலும் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோர் விடாப்பிடியாக இருக்கிறார்கள். எதிர்வினை புரிவதன் மூலமே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இந்த நகர்வுகளினூடே விடுதலை இறையியலும், இடதுசாரி கொள்கைகளும் இளைஞர்களை ஈர்க்கின்றன. அதன் விளைவுகளை மிக இயல்பாக நாவலில் படிக்க முடிகிறது. இனி கதைக்குள் செல்வோமா?

ஞானமுத்து தெரசம்மாள் தம்பதிக்கு. ரபேக்கா, மைக்கேல் உட்பட நான்கு குழந்தைகள். பனையேறும் ஞானமுத்து உச்சியிலிருந்து விழுந்து இறந்துவிடுகிறார். குடும்பம் நிலைகுலைகிறது. ரபேக்கா படிப்பை நிறுத்திவிட்டு அண்டி ஆபீஸ் செல்கிறாள். மைக்கேலும் பள்ளி செல்ல முடியாத சூழல். அவனுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் ஆசிரியர் ஜோசப்.

தங்கையன் நேசம்மாள் தம்பதிக்குக் கிளாரா, அமலா என இரண்டு பெண்கள். அக்கானி காய்ச்சுவதால் அடுப்பின் புகையும், நெருப்பின் அனலும் நேசம்மாளை ஆஸ்துமா நோயாளியாக்குகின்றன. கிளாரா பள்ளியை மறந்து தாய்க்கு உதவுகிறாள். அமலா தொடர்ந்து படிக்கிறாள்.

சசிகலா ஆதிக்கச் சாதியான நாயர் குடும்பத்துப் பெண். அவளது தாய்மாமன் வாசுதேவன். அவர் வீடு திருவனந்தபுரம். அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியில் இவர் பிரபலமானவர். இவர் மூலம்தான் அம்பேத்கர் மார்க்ஸ் நூல்களைப் படிக்கும் ஆர்வம் மைக்கேலுக்கு ஏற்படுகிறது. சசிகலா மைக்கேலைக் காதலிக்கிறார் இவர்களின் காதல் தென்றலாய் வீசி வாசக உணர்வை மென்மையாக்குகிறது. இந்தக் குடும்பங்களுக்கிடையே நிலவும் அன்பு மகிழ்ச்சி துயரம், கோவம். எதிர்வினைகள் ஆகியவற்றைப் பின்னிப் பிணைத்துச் செல்கிறது நாவல்.

அமலா மைக்கேல், சசிகலா மூவரும் பள்ளிக்குச் செல்லும் நெடுவழி வருணனைகள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன நாம் அறிந்திராத செடிகள் கொடிகளில் பூத்துக் குலுங்கும் பூக்களின் வாசனையை நுகரும் அனுபவம் வாசிப்பில் கிடைக்கிறது. வாய்க்கால், குளம், பறவைகள், மீன்கள் பற்றிய சித்தரிப்பில் அழகியல் மிளிர்கிறது. மழை வெள்ளம் பெருக்கெடுக்கும்போது மாணவர்கள் கரையைக் கடக்க முடியாது தவிக்கின்றனர். வெள்ள ஓட்டத்தின் நடுவே நின்றுகொண்டு, மாணவர்களை ஒவ்வொருவராகத் தோளில் சுமந்து செல்கிறார்கள் ஒடுக்கப்பட்ட உழுகூலிகள். அவர்களின் தீண்டலை ஏற்காத குழந்தைகள் இல்லை.

நாவலில் ஆளுமை செலுத்தும் மாந்தர் கிளாரா. காவல்துறையின் முறையற்ற கைது நடவடிக்கைக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடி பனைத் தொழிலாளர்களை மீட்கிறாள். தங்கை வயதுக்கு வந்தும் தான் வயதுக்கு வராது, நாட்களை நகர்த்தும் கிளாராவின் மனஉளைச்சல் வாசகர் மனதை உருக்கிவிடுகிறது முகம் தெரியாத ஒருவனால் கருவுற்றுத் தன்மானம் கேள்விக்குறியாகும்போது, பாதிரியாரிடம், "கருவுல கலஞ்சுபோன சிசுக்களும், அப்பன் அம்மா பேரு தெரியாத அனாத பிள்ளெயளும் மனித சமூகத்துக்கு ஆண்கள் செய்த துரோகத்தின் அடையாளங்க" என்று வாதிடுகிறாள். தனித்து வாழ்ந்து. குழந்தை பெற்று, தலைநிமிர்ந்து நடக்கும் அவளது துணிச்சல் அசாத்தியமானது. பனைத்தொழிலாளர்கள் போராட்டத்தில், குழந்தையை முதுகில் சுமந்தபடி முழக்கமிடும் கிளாராவின் ஆவேசம் இன்றைய பெண்களின் குருதியில் கொப்பளிக்க வேண்டிய ஒன்று.

மைக்கேலின் சமூக அக்கறையும், மார்க்சிய வாசிப்பும் இடதுசாரி அமைப்பை நோக்கி அவனைத் திருப்புகிறது. வேனிற்காலத்தில் குடிநீர் தேடியலையும் நாடார் மக்களுக்கு நீர்தர மறுக்கும் நாயர்களின் கிணற்று மதில்களை நண்பர்களோடு சென்று தகர்க்கிறான். பனைத்தொழிலாளர் போராட்டத்தை நடத்துவதிலும், பஞ்சாயத்துத் தேர்தலில் கிளாராவை வெற்றி பெற வைப்பதிலும் மைக்கேல் புரட்சிகர உணர்வோடு செயல்படுகிறான்.

ஆசிரியர் ஜோசப்பின் மரணம் மைக்கேலை தடுமாற வைக்கிறது. அவரது குடும்பத்தையும் தன் தோள் மீது சுமக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. சசிகலாவின் வற்புறுத்தலால் அவன் வங்கித் தேர்வு எழுதி வெற்றி பெறுகிறான். வங்கிப் பணியில் சேர வேண்டிய அதே நாளில் மறியல் போராட்டம் ஒன்றுக்குத் தலைமையேற்கும் கட்டாயம். எதைத் தேர்ந்தெடுப்பான்? பணியில் சேர்வானா, போராட்டத்துக்குத் தலைமை ஏற்பானா?

பூட்டேற்றி கட்சிக்கிளை பொறுப்பாளர் சேவியர், "ஏழைங்க மேலயும், பாட்டாளிங்க மேலயும் அன்பும் அக்கறையும் வச்சிருக்கிய ஒருத்தரு மார்க்சியத்தையும் லெனினியத்தையும் படிச்சாத் தீப்பிழம்பாயிடுவாரு. அதெக் கூடப்பிறப்புகளின் கரைச்சலோ, காதலியின் கண்ணீரோ தணிக்க முடியாது. ஒரு புரட்சியில் முங்கி எழும்பினாத்தான் தீரும் பாத்துக்களுங்க" என்கிறார். 1970களின் அக்னி முட்டையை நம் நெஞ்சக் கூட்டில் அடைகாக்க வைக்கிறார் இலா வின்சென்ட். அதுவே நாவலின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கவும் வைக்கிறது.

சார்லஸ் எழுதிய 'தோழர் இயேசு நாடகம் கிறித்தவத்தில் ஊடுருவியுள்ள சாதியத்தைத் தோலுரிக்கிறது. "யூதர்கள் இயேசுவெ சிலுவெயில அறஞ்சி கொன்னுனம் இந்திய கிறித்தவங்க அவரெ சாதியில அறஞ்சி கொல்லினம்" என்பதே அதன் கரு.

இவர்களோடு, சாதிமறுப்புத் திருமணம் செய்யும் வில்சன் பிலோமினா முதிர்கன்னிகள் கமலம், ரஞ்சிதம், வர்ம வைத்தியர் மனுவேல் ஆசான் தன்னலவாதியான அமலா பஞ்சாயத்து மெம்பர் போன்றோர் ஊரின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைப் பிரதிபலிக்கின்றனர்.

பனைத்தொழிலாளர்களின் அன்றாட பாடுகளையும் காலமாற்றத்தால் விளையும் பண்பாட்டு அசைவுகளையும் இந்நாவலில் மிக அருமையாகப் பதிவு செய்துள்ளார் இலா வின்சென்ட். அவரது அக்கானி நாவலைச் சமுதாய மாற்றத்துக்கான நாவல் என அடையாளப்படுத்துகிறேன்.

அக்கானி | ஆசிரியர்: இலா வின்சென்ட் | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | விலை: ரூ. 330/-

- இரவீந்திரபாரதி