களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதைகள் மென்மையான அணுகுமுறையுடன் வலுவான உணர்த்துதலைக் கொண்டவை.  ஆர்ப்பாட்டம், பெருங்கூச்சல் கொள்ளாமல் சலசலத்து ஓடும் ஓடை நீரினைப் போன்று அடக்கத்துடன் செல்லும் நடையைக் கொண்டவை.  ஓடையிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுமல்லவா? அப்படியும் நிகழ்ந்து விடுகின்றன சிலவற்றில்.

வாழ்வுதான் எத்தனை சுகமானது; சோகமானது சிக்கல் நிறைந்தது எதிர்பாராத திருப்பங்களை, சுழிவுகளை ஆச்சர்யங்களைக் கொண்டது என்பதை ஒவ்வொரு கதையும் விதவிதமாகப் புலப்படுத்து கின்றன.  கதைமாந்தர்கள் தினசரி நம்மோடு தொடர்புடையவர்கள்.  நம்மோடு பேசுபவர்கள், பேசாமல் கடந்து செல்பவர்கள், முகம் மலர்ந்து சிரிப்பவர்கள், உம்மென்று தூக்கி வைத்துக் கொள்பவர்கள், உள்ளதை உள்ளபடி போட்டு உடைப்பவர்கள், ஒளித்து மறைத்து உலவுபவர்கள், கள்ளமனத்தர், வெள்ளைமனத்தர், சமூக விதிகளின் வலிமையான இறுக்கத்தால் தளர்வுறும் வாழ்க் கையினர் மீறத்துடிக்கும் முயற்சியினர் என வித விதமான மனிதர்கள் முகங்காட்டுகிறார்கள்; முறு வலிக்கிறார்கள்.  முறைப்பவர்களாகவும் தென்படு கிறார்கள்.  நமது வீடுகளில், தெருக்களில் கடை வீதியில், பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம் என்று எங்கும் இவர்களைக் காண முடியும்.  ஏன் அவர்களோடு நம்மையும் கூட அடையாளப்படுத்த முடியும்.

இந்த மனிதர்கள் மக்கள் தொகுதியாக மாறுகிற போது, அவர்கள் அடங்கிய சமூகம் என்றாகிற போது அந்தச் சமூகத்திற்குத் தான் எத்தனை வலிமை? அந்தச் சமூகம், வழக்கம் என்றும், பழக்கம் என்றும் முன்னோர் கடைப்பிடித்தவை என்றும் வரையறைகள் வகுத்துக் கொண்டு - புதிய போக்கை, புதிய பார்வை புதிய நடைமுறையை நசுக்க முனையும் போக்கைக் கதைகள் இனங்காட்டி விடுகின்றன.

சமயத்தில் சாதியால் பிளவுண்ட சமூகத்தில் அதன் தாக்கங்கள், வாழ்வின் உடல் முழுதும் செயல்படுவதைத் தவிர்க்க முடியாது.

களந்தையின் கதைகளில் களம் பெரும்பாலும் இஸ்லாமிய வாழ்வியலே.  இஸ்லாம் என்பதை விட முசுலீம் என்பதே நெருக்கமாகப்படுகிறது தென் தமிழகத்து முஸ்லிம் மக்களின் வாழ்க்கையைச் சொல்லுகிற கதைகள்தான் அதிகம் எனலாம்.

நமது நாட்டில் நாம் வாழுகிற தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் சாதிகள் இருக்கின்றன அவை நம் வாழ்வில் அன்றாடம் ஊடாட்டம் செய்கின்றன.  அவற்றின் பாதிப்பால் அடங்கிப் போய்விடுவதும், தொந்தரவு தாளாமல் திமிர முற்படுவதும் பின் தொய்ந்து போவதும், மீண்டும் எழுந்து மோதுவதும் இத்தொடர் நிகழ்வினால் சிற்சில மாற்றங்கள் வழமையாவதும் இயல்பே.  ஆயினும் வாழ்க்கைச் சூழலில் இதனால் சிக்கித் தவிக்கும் எளிய மக்களின் அவலநிலையைக் கண்டு சும்மாவே இருக்க முடியுமா? அப்படி இருக்க முடியாததன் விளைவுதான் களந் தையின் படைப்பு முயற்சிகள், இலக்கிய வெளிப்பாடுகள்.

கதைப் போக்கில் பிரச்சாரம் என்பது துளியும் தென்படாது வாழ்வின் முகவிலாசத்தைப் பளிச்சென வெளிப்படுத்தி விடுகின்றன ஒவ்வொரு கதையும்.

மோகினி கதையைச் சிறுவன் ஒருவன் தன் அனுபவத்தை வைத்துச் சொல்லிக் கொண்டு வருகிறான்.  கதையாடல் அவனிடமிருந்து நழுவி தாட்டிகமான ஆளிடம், ஆட்களிடம் சென்று சேர்வதை, தான் கதையிலிருந்து அப்புறப்படுத்தப் படுவதை ஏக்கமும் இயலாமையும் கலந்த தொனியுடன் கதை முடிவு பெறுகிறது.

தன் தெரு ஆட்களோடு மாலை நேரங்களில் வழக்கமாக உரையாடி விட்டுச் செல்லுகிற பள்ளி வாசல் இமாம் சிராஜூதின் லெப்பை, பிடரியில் கண் பெற்றவர் போலப் பின்பக்கமாகவே வேகமாய் நடந்து வருவதை, ஒன்றுக்கு இருக்கச் சென்ற சிறுவன் ஒருவன் பார்த்துவிட்டு மூர்ச்சையாகிறான்.  அவனது சின்னாப்பா தண்ணீர் தெளித்து, குடிப்பாட்டித் தெளிவிக்கிறார்.  நடந்ததை தெளிவற்ற உளறலோடு ஒருவாறு தெரிவிக்கிறான். 

பின்னர் வேர்க்க விறு விறுக்க வந்து சேர்ந்த இமாம் நிலையைக் கண்டு அவரையும் படுக்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து கொஞ்சம் குடிக்க வைத்து ஆசுவாசப் படுத்திய பின், தான் மோகினியைப் பார்த்துப் பிரமித்ததைக் கூறவும், அவரை அத்தெருக்காரர்கள் அவரது வீடு வரை சென்று விட்டுவர அழைத்துச் செல்கின்றனர்.  இந்தச் சிறுவனும் அந்தக் கும்பலோடு செல்கிறான்.

விட்டுவிட்டு வரும் வழியில் அவர் பார்த்ததாகக் குறிப்பிட்ட பாலத்தின் பக்கம், கும்பலை விட்டுச் சிறிது விலகித் தனியே நின்று பார்க்கிறான்.  ஒரு வெள்ளை உருவம் தெரிய அதற்குள் அவனை இழுத்துச் சென்றுவிடுகின்றனர்.  தான் பார்த்தது மோகினிதான் என்று நம்பி இக்கதையை அடுத்த நாள் நண்பர்களுக்குச் சொல்லத் தொடங்கும் போது தான் - இவன் அக்கதையிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டு இவனைவிட பெரியவனான மீரா சாவும், அவனது சின்னாப்பாவும் கதையின் நாயகர்களாக மாறிவிட்டதை அறிய முடிகின்றது.  நேரடியாகச் சம்பந்தப்பட்ட இவன் அக்கதையின் எவ்விடத்திலும் இல்லை.

வரலாறு என்பது மக்களால் படைக்கப்படுகிறது.  ஆனால் கட்டமைக்கப்படும் வரலாற்றில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு மன்னர், நிலக் கிழார், தளபதி என மேல்நிலை மாந்தர்களால் கட்டமைக்கப்படுவதைப் போல இந்தச் சிறுவன் கதையிலிருந்து பிடுங்கி எறியப்படுகிறான்.  இது தான் இன்றைய சமூக நிலை என்பதை நம்பமுடியாத ஆனால் நம்பும்படியான இத்தகைய ஒரு கதையின் மூலம் புரிய வைக்கப்படுகிறது.

எந்த மதத்தைச் சார்ந்தாலும் மனிதன் மனிதன் தானே! பேய் பிசாசு மோகினி போன்றவற்றைச் சாதாரண மக்கள் நம்புவது எங்கேயும் உள்ளது தானே! என்றாலும் இந்தக் கதை முன்வைப்பது அந்த நம்பிக்கைகளைப் பற்றியல்ல.  அப்படிப்பட்ட கதையின் மூலம் வலுவான சக்திகள் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்கிற வரலாற்று உண்மையை வெகுலாவகமாக உணர்த்தி விடுகிறது கதையின் முடிவு.  அதுதான் இங்கு கவனத்திற்குரியது.

சுரண்டல் அமைப்பின் மீதான விமர்சனத்தைத் தாக்குதலை ஆசிரியர் தன்கூற்றில் பிரச்சாரமாக் காமல் தொழிலாளிகளின் மனவோட்டத்தோடேயே வெளிப்படுத்துவதில் கலையாகிவிடுகிறது.  உலக மயமாக்கலில் இளநீர் வியாபாரியைப் பார்த்து பிஸ்லேரி தண்ணீர் பாட்டில் சிரிப்பது வெகு யதார்த்தமான பதிவு.  இளநீர்க்காரரிடம் பேரம் பேசுகிறவன் பிஸ்லேரி தண்ணீருக்குக் கேட்ட காசைக் கொடுப்பது கௌரவமாகப்படுகிறது.  போலிக் கவுரவத்தைப் புரட்டிப் போடுகிறது கௌரவம் கதை.  சிறு வியாபாரத்தை உலகமய கார்ப்பரேட் வணிகம் அழிப்பதன் குறியீடு இளநீர் வியாபாரியின் விரல் சிந்தும் இரத்தம்.

உறவுகள் அருகிவரும் காலமிது; ஒரு மணப் பந்தலில் சந்தித்துக் கொள்ளும் உறவினர்களுக்குள் நடைபெறும் உரையாடல் முன்வைக்கும் நுட்ப மான மனவுணர்வுகள் உறவின் நெருக்கத்தை வருடி விடுகின்றன.  பரபரப்பான நெருக்கடி மிகுந்த வாழ்க்கைச் சூழலில் நின்று நிதானித்து உறவைக் கொண்டாடிப் பகிர முடிகிறதா? முக்கியமான இத்தகைய நிகழ்வுகளுக்கேகூட மின்னல் போலத் தான் சென்றுவிட்டு வரமுடிகிறது.  இந்த நிலையில் உறவின் நேயத்தைப் பராமரிப்பது எப்படி? எல்லோரும் பறவைகள் போலக் கலைந்து சென்றாலும் தன்னால் அப்படி முடியவில்லை என்று அவன் உள்மனம் உறவின் வருடலை விழைகின்றது.

மனிதர்களிடையே அன்பும் உறவும் நேசிப்பும் ஒரேயடியாக வற்றிவிட வில்லை; வற்றிவிடாது, வற்றிவிடக்கூடாது என்பதைத் தான் அபுல்ஹாசன் மூலம் ஆசிரியர் உணர்த்துகிறாரோ? இந்த உறவின் நேய ஊற்றுக்களைத் தானறிந்த இசுலாமிய சமூகக் கலாச்சாரப் பின்னணியில் முன்வைப்பது கவனத்துக்குரியது.  தொகுப்பின் தலைப்புக் கதையான பிறைக்கூத்து முக்கியமான கதை.  முஸ்லிம் சமூகத்துக்குள் ஏற்பட்டு வரும் சமயம் சார்ந்த சிற்சில மாறுதல்கள் அச்சமூகத்தை எப்படிப் பாதிக்கின்றன என்பதைப் பிறை பார்த்து ரமலான் நோன்பை உறுதி செய்வதன் வாயிலாக விளக்குகிறது கதை.

காலத்துக்கேற்றவாறு நெகிழ்வாக மாறுவதற்குப் பதில் மேலும் இறுக்கமான மதப்பிடிப்புகளை உருவாக்க முனைகின்றன.  சமய நிறுவனங்கள் இயல்பாக தர்காக்களுக்குப் பெண்களும், முஸ்லிம் அல்லாத மக்களும் சென்று வருவதை எல்லாப் பகுதிகளிலும் பார்க்க முடியும்.  மாலை நேரங்களில் பள்ளிவாசல்களின் முன்பு இஸ்லாமியரல்லாத இந்துப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் நோய் நீங்க பாடம் போட்டுக்கொள்ளக் காத்திருக்கும் காட்சிகளை எல்லா ஊர்களிலும் இன்றைக்கும் காணமுடியும்.  இதுதான் தமிழ்நாடு, இதுதான் இந்தியா.  இந்த சமய நல்லிணக்கம் நமது வாழ்வி லிருந்து களையப்படும் அபாயம் தொடர்வது ஆபத்துக்குரியது.

வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்று வரும் இஸ்லாமியர் பொருளாதார நெருக்கடிக் குள்ளானதையும் பார்க்கிறோம்.  இத்தகைய தொடர்புகளால் இந்திய இஸ்லாமிய வாழ்வில் பல புதிய போக்குகள் வரத்தொடங்கியுள்ளன.  சமயம் இஸ்லாம் என்றாலும் அது இருக்கக்கூடிய நாட்டின் பண்பாட்டு வரலாற்றுச் சூழலோடு சில தனித்தன்மைகளைப் பெற்றிருக்கும்.  அவை அப்புறப்படுத்தப்பட்டு ஒற்றைப் பார்வையோடு அணுகுகிற போக்கு வரத் தொடங்கியதும் அதனால் ஏற்படுகிற பண்பாட்டுப் போராட்டங்கள் பாதிக்கப்படும் சாதாரண மக்களின் வாழ்வு.  இந்தப் பிரச்சினைகளை வைத்து எழுதப்பட்ட கதைதான் பிறைக்கூத்து.  காலக் கணக்கு என்பது நிலவியல் அமைப்பின்படி நாட்டுக்கு நாடு வேறுபடும் சில பல மணி நேரம், ஒரு நாளேகூட மாறுபடுவது உண்டு. 

நம்மூரில் பிறை தெரிவதை வைத்து நோன்பை முடிவு செய்யும் வழக்கத்தை மாற்றி மெக்கா அல்லது மெதினாவில் தெரியும் நாளைவைத்தே இங்கு முடிவு செய்வது பொருந்துமா? என்கிற விவாதமே கதையின் கருவாக அமைந்து புதியதை ஏற்பவர்களுக்கும், பழைய முறையை ஏற்பவர் களுக்கும் இடையே வாய்ப் பேச்சில் தொடங்கிய விவாதம் கருத்து வேறுபாடு கலவரமாய் மாறுவதில் போய் முடிவதைப் பொறுப்போடும் அக்கறை யோடும் அணுகுகிறது கதை.  ஒரே ஊர், ஒரே நாடு, ஒரே சமயம், உறவு சொந்தபந்தம் இருப்பினும் சமயத்தை ஒற்றைப் பார்வையில் அணுகுவதும் திணிப்பதும் என்பது எவ்வளவு கொடுமையானது. 

பாதிப்பது உற்றார் உறவினராக மாமன் மைத்துனனாக, அண்ணன் தம்பியாக வாழுகிற மக்கள் என்பது வேதனையல்லவா? மக்களுக்கு மதமா! மதத்துக்காக மக்களா? சிந்தனையின் மீது விழுகிற இந்த விவாதத்துக்கு என்ன பதில்? மக்களா? மதமா? ஆழமான சிந்தனையைக் கிளப்பும் கதை.  சொந்த மதத்துக்குள்ளேயே இந்த நிலை என்றால் வேறு வேறான மதச்சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கட்டத் துக்கும் நகர்த்துவதாகவும் அமைகிறது இக்கதையின் தாக்கம்.

இவருடைய கதைகள் ஒவ்வொன்றும் அன்பை, உறவை, நட்பை, அதன் மீதான அக்கறையை மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்க்கை நெருக்கடியில் பரா மரிக்க முடியாத தருணங்களை, வஞ்சமும் ஏமாற்றும் தருகின்ற வலிகளை, அவற்றிலிருந்து மீளத் துடிக்கும் அசைவுகளை, கானல் வெப்பத்திலும் சுனை நீராய்ச் சுரக்கும் சிற்சில திறப்புகளை அடையாளப்படுத்தி நம் மனத்தை வருடி விடுகின்றன.

ஒரு குழந்தையின் இனிய உரையாடல் போல கதை சொல்லிச் செல்லும் எளிய நடை.  ஆனால் வலுவான முத்திரைகளைப் பதிக்கும் வலிமையும் ஒரு சேரப் பெற்றிருப்பதே இக்கதைகளின் தனிச் சிறப்பாகும்.

இசுலாமிய சமூக தளத்தை முன்வைத்து வெளிப்படும் இப்படைப்புகளில் இரு அம்சங்கள் கவனத்திற்குரியவை.  ஒன்று முஸ்லிம்களின் வாழ்வுச் சூழல்.  இன்னொன்று மனித மனத்தின் அன்பிற்கான ஏக்கமும் வாழ்வுக்கான துடிப்பும்.

இஸ்லாமிய சமூகத்துக்கானது மட்டுமல்ல அனைத்துச் சமூக மக்களின் மீதும் கவியும் அணுகு முறையாகவும் பரிணமிக்க இடமிருக்கிறது.  ஒரு வளவுக்குள் முளைத்த மரம் கொப்பும் கிளையு மாகப் பல்கிப் பரவி அடுத்த வளவுக்கும் நிழல் தருவதில்லையா?

Pin It