தான் கட்டமைக்கும் சமூக வெளியிலிருந்து சிலரை வெளியேற்றும் பணியினை அதிகார அமைப்புகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன. தன்னிலிருந்து வேறுபட்ட கருப்பொருட்களைப் புழங்குகின்ற சமூக மக்களை அதிகாரம் ஒதுக்குகிறது. அவை தெய்வங்கள், இசைகள், உணவுகள், உடைகள், விலங்குகள், தொழில்கள் அடிப்படையில் அமைகின்றன. சமத்துவமற்ற சமூகக் கட்டமைப்பில் ஓர் உடலானது தனது இடத்தை நிர்ணயித்துக் கொள்வதன் மூலமே சமூக மதிப்பு என்கிற அளவையே பெறுகிறது. “மக்கள் புழங்குகின்ற பொருட்களில் உயர்வு தாழ்வு கற்பித்தும், தனக்கு உவப்பற்ற புழங்கு பொருட்களைத் தன்னுடைய புழங்கு வெளிக்குள் சில விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதித்தும் சில விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படாமலே ஒதுக்குதலினூடாகவுமே இந்திய சமூகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் பயன்படுத்துகின்ற புழங்கு பொருட்கள் இயற்கையானவை அல்ல, அவை திட்டமிட்டு செயற்கையாக சாதியப் பண்பாடுகளால் கட்டமைக்கப்பட்டவை” (2024: ப.175). வர்ணாசிரமத்திற்குள் உள்ளடங்கிய இச்சாதியப் பண்பாடுகள்தான் வைதீகம் என்ற கருத்தாக்கத்தை உற்பத்தி செய்து, சமயம் என்ற நிறுவனப்படுத்தப்பட்ட பெருவெளியை உருவாக்குகின்றன. இவ்வைதீக சமயப் பெருவெளியானது குறிப்பிட்ட பால், சாதியில் பிறந்த உடல்களை ஒதுக்குதல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெருந்தெய்வத்தை முதன்மையாகக் கொண்ட ஊரமைப்பில் பிராமணர்கள் மையமாகவும், பிற சூத்திரர்கள் மையத்திற்கு அடுத்த வெளியேயும், ஒடுக்கப்பட்டோர் ஊருக்கு ஒதுக்குப்புறமான வெளியிலும் தள்ளப்படுகின்ற ஊரின் அமைப்பைக் காண முடிகின்றது.
இந்நிலையில் தான், அறிவொளி மு. முருகேசன் எழுதிய தோலீஸ்வரர் எனும் குறுநாவலானது இறந்த தனிநபர் உடல் எவ்வாறு நாட்டார் தெய்வ வழிபாடாக மாற்றப்படுகிறது, பின் அதனைப் பார்ப்பனியம் எப்படி மேல்நிலையாக்கம் செய்து பெருந்தெய்வ வழிபாடாக மாற்றம் செய்கிறது என்பதனை விவரிக்கிறது. இந்நாவலில் பயணப்படும் கதாபாத்திரங்கள் வழியாக, இந்நாவலில் கட்டமைந்துள்ள சமூகக் கட்டமைப்பை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
தனி நபர் உடலை வழிபாட்டு உடலாக மாற்றுதல்
தமிழ்ச்சமூக மரபானது இறந்த தனிநபர் உடலை வழிபாட்டு உடலாக மாற்றும் செயலென்பது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதைத் தொல் இலக்கியங்கள், மற்றும் தொல்லியல் தரவுகளின் அடிப்படையில் அவதானிக்கலாம். சமூக அமைப்பிற்குள் ஓர் உடல் தனக்கான இடத்தையோ, அடையாளத்தையோ ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக் கொள்ளுதலினூடாக இறந்த உடலானது தெய்வ நிலைக்குத் தன்னை மறு உற்பத்தி செய்து கொள்கின்றது.
தோலீஸ்வரர் நாவலிலும் வேட்டைமுனி குடும்பம் பின் மருவி வெட்டுமுனி குடும்பம் என பெயர்பெற்றது. தொடக்கத்தில் புயல்மாரி என்ற காரணப்பெயர் பொசமாரி என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் அதுவும் மறைந்து அவர் செய்கின்ற தோலினை வாங்கி விற்கும் தொழிலின் அடிப்படையில் தோல் கிழவன் என்றும் அவருக்குப் பெயராக அமைந்துள்ளது.
இங்கு ஓர் உடலை வழிபாட்டு உடலாக மாற்றுவதற்கு நடுகல் வழிபாடு என்பது பின்பற்றப்படுகிறது. போரில் வீரமரணம் அடைந்தவருக்கு, ஊர் காத்து இறந்தவருக்கு, பிறருக்காக உயிர் நீத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இறந்த தனிநபருக்கு நடுகல் நட்டு வழிபடும் செய்திகளைப் பழந்தமிழ் இலக்கியங்களின் வழியாகக் காண முடிகின்றது. அதன் தொடர்ச்சியாகக் காலனிய காலக்கட்டத்தில், சுதந்திர போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்திய நபர்கள் மரணம் அடைந்தால் அவர்களை உருவ வழிபாடாகவும், சாதி மறுத்து காதல் செய்த காதலர்களை ஆணவக் கொலை செய்து அவர்களைத் தெய்வமாகவும் மாற்றி வழிபடும் மரபு என்பது இறந்த தனிநபரை இச்சமூகத்திற்கான தெய்வ உடலாக மாற்றி வழிபடும் மரபினை நாட்டார் தெய்வ வழிபாடுகளினூடாகக் காண முடிகின்றது.
இந்நாவலிலும் நூற்றிப்பதினேழு வயதைக் கொண்ட தோல் கிழவன் தோல் சார்ந்த தொழில் செய்பவராக இருக்கிறார். ஊரின் கால்வாசி நிலம் அவருடைய கடின உழைப்பால் வந்தது. அதுமட்டுமின்றி, எட்டு ஆண் பிள்ளைகள், நான்கு பெண் பிள்ளைகள் என மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்று அவர்களது குடும்ப வாழ்வியல், பொருளாதார நிலையில் பெரும் பங்களிப்பு செய்திருப்பதால் தோல் கிழவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தோல் கிழவன் இறந்தவுடன் அவரை தெய்வ நிலைக்கு மாற்றும் சூழலை உருவாக்கி இருப்பதைப் பிரதியில் காண முடிகிறது.
இங்கு மனித உடலானது குடும்பம், பொருளாதாரம், தியாகம், சமூகம் சார்ந்த விடயங்களில் பங்களிப்பு செய்திருந்தால் மட்டுமே தெய்வ நிலைக்கு மாற்றப்பட்டு சமயவெளிக்குள் இயங்கக் கூடிய உடலாக இச்சமூகம் மாற்றும் என்பதைத் தோல் கிழவன் கதாபாத்திரத்தின் வாயிலாக அவதானிக்க முடிகின்றது. தனிநபர் உடலானது சமூக உடலாகவும், பண்பாட்டு உடலாகவும் கட்டமைக்கப்படுவதோடன்றி இறந்த உடலைத் தெய்வ உடலாக மாற்றும் சமூகப் போக்கையும் காண முடிகிறது.
புழங்கு பொருட்களுக்கான வெளி
பண்பாட்டினைப் பொருள்சார் பண்பாடு (Material Culture), பொருள்சாராப் பண்பாடு (Non-Material Culture) என மானுடவியலாளர்கள் வகைப்படுத்துவர். மக்கள், தங்கள் தேவைகளுக்காக உருவாக்கும் அனைத்துப் பொருட்களும் பொருள்சார் பண்பாட்டினுள் அடங்கும். பொருள் வடிவம் பெறாத அனைத்துக் கூறுகளும் பொருள்சாராப் பண்பாட்டில் இடம்பெறுகின்றன. இவற்றில், ‘புழங்குபொருட்கள் அனைத்தும் அடையாளப்படுத்துவனாக விளங்குகின்றன. புழங்கு என்பது பயன்படுத்துதல்; மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிற பொருட்கள் புழங்குபொருள்கள் ஆகின்றன. மக்கள் புழங்குகின்ற பொருட்களின் தன்மைகளைக் கொண்டு ஒரு சமூகத்தின் வளமையையும், உற்பத்தித் திறனையும் அடையாளம் கொள்ள முடியும். புழங்கு பொருட்கள் என்பது உணவு, வேளாண், கைவினை, தொழில் என பல புழங்கு பொருட்கள் சார்ந்த வகைகள் இருப்பினும். இந்நாவலில் தொழில் சார்ந்த புழங்கு பொருள்கள் மற்றும் வைதீகம் × அவைதீகம் சார்ந்த புழங்கு பொருட்களைக் காணலாம். இங்கு தோல் கிழவனின் தொழில் என்பது தினமும் கிடைக்கின்ற ஆட்டுத்தோல், மாட்டுத்தோல்களை வாங்கி அதை முறையாக, சாம்பல் வைத்துத் தேய்த்துப் பதப்படுத்தி சந்தையில் விற்கும் தொழிலைச் செய்வது. இங்கு தோல் கிழவன் தன் தொழிலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் புழங்கு பொருட்களாக ஆட்டுத்தோல், மாட்டுத்தோல் தோல் முதன்மையான புழங்கு பொருட்களாகவும், உப்பு, சாம்பல் என்பவை துணைமைப் புழங்கு பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு வைதீகம் × அவைதீகம் சார்ந்த புழங்கு பொருட்கள் என்பது முன்னோர் வழிபாடு × வைதீக வழிபாடு என்ற இணைமுரண்களில் காண முடிகின்றது. இங்கு தோல் கிழவன் இறந்தவுடன் அவரை முன்னோர் வழிபாட்டில் வைத்து வழிபடும் போது “அவருக்குப் பிடித்தமான சைவ உணவுகளாகக் காய், பழங்கள், தயிர், பால் போன்ற பொருட்களும், நண்டு, நத்தை, அயிரை மீன், கருவாடு போன்ற அசைவப் பொருட்களும், மேலும் அவருக்குப் பிடித்த மற்றும் தினமும் பயன்படுத்திய சுருட்டு, செப்புகாப்பு, காலணிகள், கைத்தடி, வெற்றிலைப்பாக்கு போன்ற பொருட்களையும் அவர் சமாதியில் படையலாக வைத்து வழிபாடு செய்யப்பட்டது(12). ஆனால் வைதீக வெளியில் அவருக்கு முன்னோர் வழிபாட்டில் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் அனைத்தும் ஆகம விதிகளின் அடிப்படையில் மறுக்கப்படுகின்றன. இதில் முன்னோர் வழிபாட்டுக்கான புழங்கு பொருட்கள் வெளி என்பது பொருள்சார் வழிபாடாகவும் (material), வைதீக வழிபாட்டுக்கான புழங்கு பொருட்கள் வெளி என்பது பொருள்சாரா வழிபாடாகவும் (Non- Material) இருப்பதை இப்பிரதியில் காண முடிகின்றது. முன்னோர் வழிபாட்டு வெளி என்பது பொருளை மையமிட்டதாகவும், வைதீக வழிபாட்டு வெளி என்பது ஆகம விதிகள் எனும் கருத்தை மையமிட்டதாகவும் இருக்கின்றது; பொருள் முதல்வாதம் × கருத்து முதல்வாதம் எனும் இணை முரண்களில் இயங்குவதாக அமைந்துள்ளது.
வைதீக வெளி × அவைதீக வெளி
இங்கு ஒடுக்குதல், ஒதுக்குதல் என்பவை இந்திய சமூகத்தைப் பிடித்திருக்கும் ஒரு சமூக உளவியல் நோயாகும். இவை குறிப்பிட்ட பால், சாதியில் பிறந்த உடல்களைத் தீட்டு எனக் கருதி ஒடுக்குகிறது. இங்கு வர்ணாசிரமக் கட்டமைப்பினூடாக பெருந்தெய்வ வைதீக நெறி செயல்படுகின்றது. நாட்டார் தெய்வ வழிபாடு என்பது எந்த வேத ஆகம விதிக்கும் உட்படாமல் முன்னோர்கள் சொன்ன வழியில் நடக்கின்ற வழிபாட்டு முறையாகும். வைதீகக் கடவுளர்க்கு எதிர் நிலையில் நாட்டார் தெய்வங்கள் அமைகின்றன. நாட்டார் தெய்வங்களின் கோயிலமைப்பு, வழிபாட்டு முறை வைதிக முறைகளிலிருந்து வேறுபட்டு அமைவன. “நாட்டார் தெய்வ வழிபாடு பல நிலைகளைக் கொண்டதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவை நடுகல் தெய்வம், ஊர் தெய்வம், குல தெய்வம், இனத் தெய்வம், சமாதி தெய்வமாகும்” (2014.ப.18).
இங்கு தோல் கிழவனுக்கு சமாதி கட்டப்பட்டு, இச்சமாதியைத் தோல் கிழவனின் வாரிசுகள் வணங்கும் குடும்ப தெய்வமாக மட்டும் வழிபட்டு வந்தனர். பின்னர் தோல் கிழவனின் ஆறாவது மகள் ஆராயியிக்குப் பல வருடங்கள் குழந்தைப்பேறு இன்மையால் இச்சமூகத்தின் புறக்கணிப்பு, மலடி என்கிற வசைச்சொல் போன்றவற்றால் வருத்தம் அடைந்திருந்தவள் இறந்து அப்பாவான தோல் சாமியை வணங்கி குழந்தை வரம் பெற்றதால், ஊர் மக்கள் மத்தியில் தோல் கிழவன் குடும்ப தெய்வத்திலிருந்து ஊர் தெய்வ வழிபாட்டுக்கு ஊர் மக்களால் மாற்றம் பெறுகின்றது.
நாட்டார் தெய்வ வழிபாட்டில் பறை, தவில், பம்பை, உறுமி போன்ற இசைக் கருவிகளை இசைத்தவுடன் தெய்வத்தின் ஆற்றல் என்பது சாதாரண மனித உடலுக்குள் உறைந்து அம்மனிதர் துடிப்புடன் கையில் ஆயுதங்களை ஏந்தி ஆடுவர். விலங்குகளை இரத்தப் பலியிடுதல் என்பது நாட்டார் தெய்வ வழிபாடுகளில் முதன்மையான நிகழ்வாகக் கருதப்படுகின்றது. இந்நாவலிலும் தெய்வமாக இருக்கின்ற தோல் சாமியின் ஆற்றல் தனது மூத்த மகனான அய்யனாரின் மேல் உறைந்து சாமியாடி ஊர் மக்கள் அனைவருக்கும் குறி சொல்லும் விதமாகவும், வரம் கேட்பவர்களுக்கு வரம் கொடுக்கும் விதமாகவும் அமைகிறது. அய்யனார் சாமியாடி பல ஆடுகளைத் தோல் சாமிக்குப் பலியிடுதல் என்பது முப்பது வருடங்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்வாகும்.
குருக்கள் என்பவரின் கனவில் தோல்சாமி, தோல் சித்தர் வந்ததாகவும் எனக்கு பெரிய கோயில் கட்ட வேண்டுமென தோல்சாமி சொன்னதாக ஊர் மக்கள் கூட்டத்தில் சொல்கின்றார். அக்கருத்திற்கு ஊர் மக்கள் மற்றும் தோல் கிழவனின் குடும்பமும் சம்மதம் தெரிவிக்கின்றனர். கோயில் கட்ட தோல் கிழவன் உழைத்து வாங்கிய நிலம் பறிக்கப்பட்டு, ஆகம விதிகளுக்கு உட்பட்டு கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நவ கிரகங்கள், சூரிய கடவுள், பல தெய்வ சிலைகள் என புதிய சாமிகள் நிறுவப்படுகின்றன. பழைய வழிபாட்டில் தோல் சாமியின் காலணிகள் அகற்றப்பட்டு கல்லில் செதுக்கப்பட்ட இரு பாத அணிகள் புதிதாக வைக்கப்பட்டன. குழந்தைப் பெற்றமைக்கு ஆராயி அடித்துத் தந்த வெட்டரிவாளும் குருக்கள், அம்பலக்காரரால் திட்டமிட்டு அகற்றப்பட்டன.
நாட்டார் வழிபாட்டு மரபில் தோல் கிழவன் தோல்சாமி, புயல்மாரி சாமி, மாரியாயி உடனுறை தெய்வம் எனப் பெயர் சூட்டி அழைக்கப்பட்டது. ஆனால் ‘பெருந்தெய்வ வெளியில் தோல் சாமியின் பெயர் ‘ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை, ஸ்ரீ தோலீஸ்வர சுவாமி திருக்கோயில்” என சமஸ்கிருத அடைமொழியுடன் வைதீகக் கடவுளான ஈஸ்வரன் பெயரும் வைதீக முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது’ (44). தோல் சாமியின் அரிவாள் கோயில் குருக்கள் மற்றும் அம்பலக்காரரின் திட்டமிட்ட சதியால் கருவறையிலிருந்து அகற்றப்பட்டது. “கோயில் குடமுழுக்கன்று குருக்கள் அம்பலக்காரருக்குத் தெரியாமலே ஒரு சிறிய அண்டாவைக் குப்புறக் கவித்து அதில் கரி பூசி மூன்று பட்டைகளை அடித்தார். அதில் ஒரு மாலையைப் போட்டார்”(45). இதன்மூலம் நாட்டார் வழிபாட்டின் கடைசி எச்சமாக இருந்த அரிவாளும் கருவறையில் இருந்து பிராமணியத்தால் வெளியேற்றப்பட்டதைக் காண முடிகின்றது.
மேற்காண் கூற்றுகளை நோக்குகையில், நாட்டார் வழிபாட்டு வெளியில் பின்பற்றப்பட்ட பறை, உறுமி இசைப்பது, ஆயுதம் ஏந்தி ஆடுவது, பலியிடுதல், குறிகேட்டல், வரம் கொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் மற்றும் புழங்கு பொருட்கள் அனைத்தும் ஆகம விதிகளின்படி புறக்கணிக்கப்பட்டு புதிய வழிபாட்டு வெளியாக வைதீக வெளி கட்டமைக்கப்படுகிறது.
இங்கு கோவில் என்பது அதிகார வர்க்கம் மற்றும் வர்த்தகத்தின் மையமாக இருப்பதால், சமூக மற்றும் பொருளாதார அதிகாரம் கொண்ட ஆதிக்க சக்திகள் கோவிலைக் கைப்பற்றுகின்றன. அதற்குக் குடும்பத்தின் உட்பூசலை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள், பின்னர் வருவாய் பெருகுவதைக் கண்டு பிராமணியம் முன்னோர் வழிபாட்டு வெளியை அழித்து வைதீக வழிபாட்டு வெளியாக எவ்வாறு மேல்நிலையாக்கம் செய்து அதை எவ்வாறு தனதாக்கிக் கொள்கிறது என்பதை நாவலில் இயங்குகின்ற கதாபாத்திரங்கள் மற்றும் சமூக இயக்கங்களினூடாக அவதானிக்க முடிகின்றது. வைதீக வெளி × அவைதீக வெளி எனும் இணை முரண்களில் வழிபாட்டு வெளி இயங்குவதைக் காணலாம். வைதீக வெளியில் சாதியமும் வர்ண அமைப்பும் தன்னை ஏதோ ஒரு வகையில் மறு உற்பத்தி செய்யக்கூடிய களமாக அமைத்துக் கொள்கிறது.
இயல்புவெளி × மீவியல்பு வெளி
தீண்டாமையை உறுதிப்படுத்துவதில் ‘வெளி’ என்ற கருத்தாக்கம் முதன்மையாக அமைகிறது. இந்திய சமூகங்களைப் பொருத்தவரை, தீண்டப்படாதவர் பிரச்சினை என்பது நிலம், வீடு இல்லாமல் இருப்பவரின் நிலையோடு நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. இந்நாவலிலும் தோல் கிழவன் இருக்கின்ற ஊர் அவருடைய பூர்வீக ஊரில்லை, பூர்வீக ஊரான மங்கரப்பட்டியில் இருந்த வீடு புயல் மழையால் சிதைந்து போனதால், அங்கிருந்து புலம்பெயர்ந்து கோட்டை மேட்டிற்கு வந்தனர். இங்கு தோல் கிழவன் தனது கடின உழைப்பால் வீடு, நிலம் வாங்கி இருந்தாலும், அவரது தலைமுறையினருக்குத் தொடர்ச்சியாக ஓர் இயல்பு (நிலையான) வெளியாக இல்லாமல் போகின்றது. வைதீக சமய வெளியானது, குறிப்பிட்ட சாதியைத் தீட்டாகக் கருதுவதால் அச்சாதியை மட்டும் தன் புழங்குகின்ற புலத்திலிருந்து வெளியேற்றுகிறது. நாட்டார் வழிபாட்டு வெளியில் தோல் கிழவனின் குடும்பம் ஊருக்குள் வீடு மற்றும் நிலவுடைமையுடன் தீண்டாமையற்று ஓர் இயல்பு வெளிக்குள் இருந்தது. ஆனால் வைதீக வெளி வந்தவுடன் ஊருக்குள் இருந்த அவர்களின் நிலம் கோயில் கட்டுவதற்காகப் பறிக்கப்பட்டு ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டு மீவியல்பு (நிலையில்லா) வெளியாக மாற்றப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
இங்கு தோல் கிழவனை நாட்டார் தெய்வமாக உருவாக்கி பெரிய கோயில் கட்டுவதற்கு நிலம் கொடுத்த தோல் கிழவனின் குடும்பங்கள் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்படுவது என்பது கவனிக்கத்தக்கது. இது தீண்டப்படாதவர் பலர் வீடு, நிலமில்லாமல் இருக்கிறார்கள் என்பதால் மட்டுமல்ல, அடிப்படையில் தீட்டான உடலை நிராகரிப்பதாக இருப்பதால்தான் இந்தியாவைப் பொருத்தவரை வீடில்லாமல் இருப்பது உங்களை ஊருக்குள் அழைத்துக் கொள்ள ஆதிக்க சாதிய மற்றும் சனாதன மனநிலை கொண்ட சமூகங்கள் தயாராக இல்லை என்பதோடன்றி, உங்களுடன் இணைந்து வாழ்வதற்கு யாரும் தயாராக இல்லை என்பதன் வெளிப்பாடாகும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயல்பு வெளி இல்லாமல் இருப்பதற்கு சாதியம், மதம், அரசதிகாரம் போன்றவை காரணிகளாக அமைகின்றன. ஒரு வேளை இறந்த தோல் கிழவன் உடல் வழிபாட்டு உடலாக மாற்றப்படாமல் இருந்திருந்தால் என்னவோ வீடு, நிலமும் தோல் கிழவனின் வாரிசுகளுக்கு இயல்பான வெளிக்குள் வாழ்வதற்கு வாய்ப்பு இருந்திருக்கும் என்பதையும் அவதானிக்கலாம்.
அதிகாரம் × அதிகாரமின்மை
சமூக ஒழுங்குகளை உடைபடாமல் காப்பதிலும், ஏற்றத் தாழ்வுகளை உறுதி செய்வதிலும் இறுக்கமான அமைப்பாக அதிகார அமைப்பு செயல்படுகின்றது. இங்கு அதிகாரம் என்பது சாதியத்தோடும், மதத்தோடும், நிர்வாகத்தோடும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நாவலிலும் வீடு மற்றும் ஊரில் கால்பகுதி நிலம் தோல் கிழவனிடம் இருந்தாலும், அதிகாரம் என்பது ஊர் மணியக்காரர், அம்பலக்காரர், குருக்களிடம் இருக்கின்றது. தோல் கிழவனின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகாரம் இன்மையால் தங்களுக்குச் சொந்தமான தந்தை வழிபாடு, வீடு, நிலங்களை இழக்க நேரிட்டது. இங்கு தோல் சாமிக்குப் பல ஆடுகள் பலியிடப்பட்டு இறந்த ஆடுகளின் தலையினைப் பங்கீடு செய்வதிலும் கூட “மணியக்காரர் × அம்பலக்காரர் × தலையாரி× காவலர் × முடிதிருத்துபவர் × சலவைத் தொழிலாளர்× அய்யனார்" எனும் சாதிய படிநிலைகளில் பங்கிடு செய்யப்படுவதைக் காணலாம்” (30).
குறிப்பாகச் சொன்னால், ஆள்வோருக்கான வெளியில் அம்பலக்காரர், மணியக்காரர், குருக்கள் போன்ற பாத்திரங்களும், ஆளப்படுவோருக்கான வெளியில் அய்யனார், கருப்பையா பாத்திரங்களும் அமைகின்றன. சாதியம், மதம் எனும் இரு நிறுவனப்படுத்தப்பட்ட மையங்கள் உடைபடாமலும், அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டும் மீண்டும் அதிகார மறு உற்பத்தி செய்வதோடன்றி, அதிகார மையம் வெளிகளைத் தனித்தனியாகப் பிரித்தும், தடுத்தும் செயல்படுகின்றது.
முடிவுரை
தோலீஸ்வரர் பிரதியில் வெளிப்படும் கதாபாத்திரங்கள் வழியாகவும் மற்றும் இந்நாவலில் பயணப்படும் சமூக இயக்கங்களினூடாகவும் நோக்குகையில் சாதியம், அதிகாரப் படிநிலைகள் இந்நாவல் முழுவதும் இயங்குவதைக் காண முடிகின்றது.
இறந்த தனிநபர் உடலானது பொருளாதாரம், குடும்ப வளர்ச்சியில் பங்களிப்பு செய்திருந்தால் மட்டும், சமூக மற்றும் பண்பாட்டு உடலாக மாற்றப்பட்டு சமய வெளிக்குள் இயங்கக்கூடிய தெய்வ உடலாக மாற்றப்படும் என்பதைத் தோல் கிழவன் கதாபாத்திரத்தின் வழியாக அறிய முடிகின்றது.
தோல் கிழவன் நாட்டார் தெய்வ வழிபாட்டில் அவருக்குப் படைக்கப்பட்ட பொருள்சார் பண்பாட்டுப் பொருள்கள் யாவும் வைதீகப் வழிபாட்டில் பொருள்சாராப் பண்பாடாகப் கட்டமைக்கப்படுவதைக் காணலாம்.
நாட்டார் வழிபாட்டு மரபில் தோல்கிழவன், தோல்சாமி, புயல்மாரி எனப் பெயர் சூட்டி அழைக்கப்பட்டது. ஆனால் பெருந்தெய்வ வைதீக வெளியில் தோல்சாமியின் பெயர் ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீதோலீஸ்வரர் திருக்கோயில் என சமஸ்கிருத அடைமொழியுடன் வைதீக முறைப்படி பெயர் மாற்றம் செய்திருப்பதைக் காணலாம்.
தோல் கிழவனுக்கு வீடு, ஊரின் கால்பகுதி நிலம் இருந்தாலும், சமூக அங்கீகாரம், அதிகாரம் இன்மையால் அவரது குடும்ப உறுப்பினர்கள் வீடு, நிலம் இழந்து ஊருக்கு வெளியே மீவியல்பு வெளிக்குள் தள்ளப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
இங்கு தோல் கிழவன் வீடு, நிலவுடைமை பெற்று பொருளாதாரத்தில் மேம்பட்டு இருந்தாலும், சாதியமும், அதிகாரமும் நினைத்தால் வீடு, நிலம் அனைத்தையும் கைப்பற்றி தன்னை மையத்திலிருந்து விளிம்பு வெளிக்குள் ஒடுக்கி ஒதுக்கும் என்பதற்கு இந்நாவலின் கதையாடலை மிக முக்கியமானதாகப் பார்க்கலாம்.
துணை நூற்பட்டியல்
- காமராசு, இரா. (2023).விளிம்புநிலை வாழ்வியல். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
- குமார், வேலு.(2015). புனைவு வெளியும் பெண் உடலும். சென்னை: காவ்யா வெளியீடு.
- மாரியப்பன், க. (2024). கள் மணக்கும் பக்கங்கள்- தமிழ்ச் சிந்தனை மரபில் வெளியும் காலமும். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
- முத்தையா, இ. (2014). பழந்தமிழர் பண்பாட்டு வெளிகளின் அரசியல். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
- முருகேசன், மு. (2023). தோலீஸ்வரர். சென்னை: கருப்புப் பிரதிகள்.
- முருகேசப்பாண்டியன், ந. (2022). பழந்தமிழ் இலக்கியங்களில் விளிம்புநிலையினர். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
- ஜமாலன், (2020). உடலரசியல். சென்னை: காலக்குறி வெளியீடு
- வசந்த்குமார்.ஜீ