1905, ஜனவரி 9 ஞாயிறு அன்று கப்போன் என்னும் பாதிரியாரின் வழிகாட்டுதலின் படி, ஜார் மன்னரிடம் விண்ணப்பம் கொடுப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு மாரிக்கால அரண்மனையை நோக்கிச் சென்றனர். ஆயுதம் ஏதுமின்றி, அமைதியாகச் சென்ற இந்தப் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர்கள் மீது ஜார் மன்னனின் ஆணையின்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதுதான் இரத்த ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஈவிரக்கமற்ற படுகொலையைக் கண்டித்து ரஷ்யா முழுவதிலும் 'எதேச்சதிகார முறை ஒழிக!' என்னும் அனல் பறக்கும் முழக்கத்துடன் திரள்திரளான மக்களின் அரசியல் வேலை நிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடங்கின. ஜனவரி 9ஆம் நாள் நிகழ்ச்சி 1905-1907 புரட்சியின் தொடக்கமாகும்.

lenin book 321ஆம், இந்தக் கொடூர நிகழ்வு தொழிலாளர்களிடையே மட்டுமின்றி, ரஷ்யப் பொது மக்கள் மத்தியிலும் பேரதிர்வை ஏற்படுத்தியது. மாஸ்கோ, ரீகா, லோட்ஸ், வார்சா, ஹெல்சிங் ஃபோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பாட்டாளிகளின் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. பாக்கூ, ஒதேஸ்ஸா, கீவ், கார்கவ், கோவ்னோ, வில்னோ ஆகிய நகரங்களில் தொழிலாளர்களிடையே கிளர்ச்சி நிலை தீவிரமடைகிறது.

செவஸ்தோப்பல் நகரில் கடற்படையில் சாமான் கிடங்குகளும் ஆயுதச் சாலைகளும் தீயிடப்பட்டு எரிகின்றன.

முற்றிலும் நிலை குலைந்து நிற்கும் இந்தச் சூழலில்தான் ஜார் மன்னனுக்கு எதிரான புரட்சியில் தொழிலாளர்களுடன் விவசாயிகளும் இணைய வேண்டியது இன்றியமையாதது என்று ரஷ்யப் புரட்சிகர இயக்கம் முடிவெடுக்கிறது.

போல்ஷ்விக்குகளின் புரட்சிச் செயல்திட்டம், மென்ஷ்விக்குகளுடன் கொண்ட கொள்கை மோதல், தோல்விக்குப் பின் எப்படி புரட்சிகர நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும், தேசிய இனப் பிரச்சினை உள்ளிட்ட மிக முதன்மையான கூறுகளைப் பற்றி புரட்சியாளர் லெனின் தேர்வு நூல்கள் தொகுதி –மூன்றில் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம் .

“1905ஆம் ஆண்டு நடந்த ஜனநாயகப் புரட்சி தொடர்பான ஆக்கங்கள் ரஷ்யாவில் புரட்சியின் தொடக்கம், ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகத்தின் இரண்டு செயலுத்திகள், மாஸ்கோ புரட்சி எழுச்சியின் படிப்பினைகள் முதலியன. இவற்றில் இரண்டு செயலுத்திகள் என்னும் நூலுக்கான முகவுரையில், புரட்சியாளர் லெனின், புராட்சியானது, அரசியல் வளர்ச்சி அமைதியாக நடந்து வரும் காலப் பகுதிகளில் நம்ப முடியாததாகத் தோன்றும் அளவுக்கு, விரைவாகவும் முழு நிறைவாகவும் கற்பிக்கிறது என்பதில் அய்யமில்லை. மேலும், புரட்சி என்பது தலைவர்களூக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் கற்பிக்கிறது என்பது குறிப்பாக முக்கியமானது" என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் "புரட்சிக்கு நாம் எதையாவது கற்றுக்கொடுக்க முடியுமா?" என்றொரு வினாவை எழுப்பி, அதற்கு விடையளிக்கிறார்.

புரட்சி மீது பாட்டாளி வர்க்க முத்திரை இடுவதற்கும், சொல்லளவில் அல்லாமல் செயலில் புரட்சியை ஓர் உண்மையான, தீர்மானமான வெற்றிக்கு இட்டுச் செல்வதற்கும் அவர் வழிகாட்டுகிறார்.

ஜனநாயகப் போக்குள்ள முதலாளி வர்க்கத்துக்கு நிலைத்த தன்மை என்பது கிடையாது; அது, அரைமனத் தன்மையை உடையது; அது துரோகத்தையும் செய்யும். முதலாளி வர்க்கத்தின் இந்த மூன்று கூறுகளையும் செயலிழக்கச் செய்ய வேண்டும். அதைச் செய்வதற்கு, நம் சமூக-ஜன நாயக முனைவின் துல்லியத் தன்மையையும், முற்றிலும் புரட்சிகரமான ஒரே வர்க்கமாகத் திகழும் பாட்டாளி வர்க்கத்துடன் நமக்குள்ள பிணைப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கியே நம் முயற்சிகள் அனைத்தையும் நெறிப்படுத்த வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார்.

தொழிலாளி வர்க்கத்துக்குக் கற்பித்து ஒழுங்கமைப்பதற்கு நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறும் லெனின், “ தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்துக்குத் துணை போகும் படை என்கிற பாத்திரத்தை வகிக்குமா (இந்தத் துணை போகும் படை எதேச்சதிகார முறையை எதிர்த்துத் தாக்குவதில் வலிமை மிக்க சக்தியாக இருந்தாலும் கூட, அரசியல் ரீதியிலே சக்தியற்றது), அல்லது, அது மக்கள் புரட்சியில் தலைவன் என்கிற பாத்திரத்தை வகிக்குமா என்பதைப் பொருத்துத்தான் புரட்சியின் விளைவு இருக்கிறது. அரசியல் உணர்வுள்ள முதலாளி வர்க்கப் பிரதிநிதிகள் இதை நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள்" என்று எச்சரிக்கிறார்.

1907 புரட்சியின் தோல்விக்குப் பிறகு- அதாவது, புரட்சி ஒடுக்கப்பட்ட பிறகு, ஜார் மிருகத்தனமான அடக்குமுறையை ஏவி விடுகிறான். கட்சி எதற்கும் கலங்காமல் எப்படி தன்னைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று லெனின் அறிவுறுத்துகிறார். அதாவது, வெறுமனே காலத்தைக் கடத்துவது அன்று; புரட்சிகர நம்பிக்கையை இழக்காமல் எப்போதும் அதே உயிரோட்டத்துடன் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கற்பிக்கிறார். (கட்சிப் பாதை)

மார்க்சியக் கோட்பாட்டில் சுய நிர்ணய உரிமையைப் பற்றிய கேள்வி என்பது எவ்விதச் சிக்கலையும் தரவில்லை. அதைப் பற்றி இந்த நூலில் லெனின் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். (தேசங்களின் சுயநிர்ணய உரிமை)

"ரஷ்யாவில் ஒடுக்கும் தேசங்கள், ஒடுக்கப்படும் தேசங்கள் ஆகிய இரு தரப்புகளையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் அக்கம்பக்கமாகச் சேர்ந்து போராடி வருகின்றது; அவ்வறு போராட வேண்டும் என்ற நிலைமையால்தான் ஓரளவுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. சோசலிசத்துக்கன் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்ட ஐக்கியத்தைப் பேணிக் காப்பதும், முதலாளித்துவ தேசியவாதத்தின் செல்வாக்கையும் கருப்பு நூற்றுவர் தேசியவாதத்தின் செல்வாக்கையும் எதிர்ப்பதும் அவற்றின் கடமையாகும். ஒடுக்கப்பட்ட தேசங்களில் பாட்டாளிகள் ஒரு சுயேச்சையான கட்சி என்ற முறையில் தனி நிறுவனமாக அமைவதால், சில சமயங்களில் உள்ளூர்த் தேசியவாதத்தையும் எதிர்த்துக் கடும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இதனால், நோக்கு நிலை புரட்டப்படுகிறது. ஒடுக்கும் தேசத்தின் தேசியவாதம் என்பது கண்ணுக்குப் புலப்படாமல் போகிறது. ஆனால், நோக்கு நிலையின் புரட்டல் நெடுங்காலம் நீடிக்க முடியாது. பல்வேறு தேசங்களின் பாட்டாளி மக்கள் நடத்தியுள்ள கூட்டுப் போராட்டங்களின் அனுபவத்தைக் கொண்டு, நாம் அரசியல் சிக்கல்களை அகில ரஷ்யக் கருத்து நிலையில் இருந்து வரையறுக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

ஜார் ஆட்சியின் கீழ் ரஷ்யா பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருந்த நிலையில் தொழிலாளர் இயக்கத்திற்கு தேசியச் சிக்கல் என்பது மிக முக்கியமானது என்ற லெனினின் இந்தக் கூற்று கவனத்துக்குரியது.   லெனினின் இந்த நூலில் நாம் பின்வரும் செய்திகளை அறிந்து கொள்ள முடியும்:

  • கட்சியின் ஒற்றுமை என்ற பெயரில் கட்சி ஒற்றுமை குலைக்கப்பட்டதைக் கண்டறிந்து, அதை மிகக் கறாராக எதிர்த்தமை,
  • புரட்சி ஒடுக்கப்பட்டாலும், கட்சியின் இருப்பை, அதன் உயிரோட்டத்தை தொடர்ந்து பேணிக் காத்து வருவதற்கு செய்யப்பட வேண்டிய ஆக்கபூர்வமான செயல்கள் ,
  • தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றிணைப்புக்கும், தேசிய சுய நிர்ணய உரிமைக்கும் இடையே சமநிலை ஏற்படுத்த கோட்பாட்டு அளவிலும் செயல்பாட்டு அளவிலும் லெனின் மேற்கொண்ட நடவடிக்கைகள்,
  • ஆட்சியதிகாரத்தில் பாட்டாளிகளின் மற்றும் சோவியத்துகளின் பங்களிப்பைப் பற்றிய கொள்கை வரையறை

தற்கால அரசியலில் லெனினின் கோட்பாட்டைத் தகவமைத்துக் கொண்டு, நமக்கேற்ப புதிய கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ளவும், நடைமுறையில் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிற கோட்பாட்டை மீளாய்வு செய்து கொள்ளவும் லெனின் தேர்வு நூல் தொகுப்பின் 3-ஆம் தொகுதி நூல் உதவி புரியும்.

(லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் - தொகுதி 3: ஜனநாயகப் புரட்சி - கோட்பாடு, கட்சி ஐக்கியம், தேசியம். விலை: ரூ.390/- | வெளியீடு: என்சிபிஎச், சென்னை.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.