(லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் - தொகுதி 1 மார்க்சியம்,  கட்சி – அரசியல் கோட்பாடு, விலை ரூ.490, வெளியீடு: என்.சி.பி.எச்., சென்னை)

மார்க்சியம் ஒரு சமூக அறிவியல். நடைமுறை நிலைமைகளை நடைமுறை சார்ந்து ஆய்வு செய்வது என்பது அதன் முறையியல். மார்க்சும், எங்கல்சும் தொடங்கி வைத்த மார்க்சியத்தைப் புரட்சியாளர் லெனின் ரஷ்ய நடைமுறைக்குப் பொருத்தி வெற்றி கண்டார். லெனின் எழுதிய மார்க்சியச் செல்வத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் 12 தொகுதிகளாகத் தமிழில் வெளியிடப்பட்டது.lenin noolgal 640லெனின் தேர்வு நூல்களில் தொகுதி 1இல்…

கார்ல் மார்க்ஸ் என்னும் இயலில், 19ஆம் நூற்றாண்டில் முதன்மையான கருத்தியல் போக்குகளாக இருந்த செவ்வியல் ஜெர்மன் தத்துவவியல், செவ்வியல் ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சுப் புரட்சிகரக் கருத்துகளுடன் இணைந்த பிரெஞ்சு சோசலிசம் ஆகிய மூன்று கருத்தியல் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து அவற்றுக்கு முழு நிறைவு கொடுத்தார், மார்க்ஸ் என்று லெனின் விளக்குகிறார்.

பிறநாடுகளின் வர்க்கப் போராட்ட முறைகளை அப்படியே நகலெடுத்து, நம் மண்ணில் பயன்படுத்த முடியாது. அதே வேளையில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளின் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மார்க்சியம் ரஷ்யப் புரட்சிக்கு எவ்வாறு பயன்பட்டதோ, அவ்வாறே, ரஷ்யாவில் செறிவூட்டப்பட்ட மார்க்சியம், எந்த மண்ணிலும் தகவமைத்துக் கொள்ளப்படக் கூடிய செழிப்பு கொண்டது. அதனை எவ்வாறு தகவமைப்பது என்பதை லெனினின் எழுத்துகளில் இருந்து கற்கலாம்.

பண்ணையடிமை முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டாலும் விவசாயிகள் மீதான சுரண்டல் தொடர்ந்து வந்த, ஜார் எதேச்சாதிகார ஆட்சி நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் ஆதரவாக சமூகத்தின் பல்வேறு பிரிவினரை ஒடுக்கி வந்த, முதலாளித்துவம் வேகமாக வளர்ந்து வந்த ரசியாவில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ரசியாவுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு மார்க்சியத்தை ரசியாவின் நிலைமைகளுக்குக் குறிப்பாகப் பொருத்தினார்.

நாம் கைவிடும் மரபு என்ற கட்டுரையில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பண்ணையடிமை முறை சட்டப்படி ஒழிக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஸ்கால்தின் என்ற முதலாளித்துவ அறிவாளி பண்ணை அடிமை முறை மீதும் அதன் எல்லா பொருளாதார, சமூக, சட்ட விளைவுகள் மீதும் வன்மையான பகைமையினைத் தம் அகத்தே கொண்டிருந்தார். கல்வி, சுயாட்சி, விடுதலை, ஐரோப்பிய வாழ்க்கை வடிவங்கள், ரசியாவைப் பொதுவாக அனைத்து வகையிலும் ஐரோப்பியமயமாக்குதல் ஆகியவற்றை ஆர்வத்துடன் ஆதரித்தார். வெகுமக்களின், முதன்மையாக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதும் பண்ணை அடிமை முறையும் அதன் மீத மிச்சங்களும் ஒழிக்கப்படுவதைத் தொடர்ந்து சகலருக்கும் நல்வாழ்வு கிட்டும் என்று மனப்பூர்வமாக நம்பினார், இதைச் செயலாக்க உளமார விரும்பினார். ரசிய மார்க்சிஸ்டுகள் எப்போதுமே ஸ்கால்தினது பரிந்துரைகளை ஆதரிப்பதைக் காணலாம் என்கிறார், லெனின். (பக்கம் 115-116)

லெனின் கூறும் திருத்தல்வாதம் என்பது கவனிக்கத் தக்கது.

"ஜனநாயக" முதலாளித்துவ சுதந்திரத்தில் பொருளாதாரப் பாகுபாடுகள் மேலும் தீவிரமாகிக் கடுமையாகின்றனவே ஒழிய குறைந்துவிடவில்லை. மிக ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசுகளிலுங்கூட இக்குடியரசுகளும் வர்க்க ஒடுக்குமுறை அமைப்புகளே என்ற அவற்றின் உள்ளியல்பான தன்மையை நாடாளுமன்ற முறை வெளிப்படையாகத் தெரியப்படுத்துகிறதேயன்றி, அவற்றின் வர்க்க ஒடுக்குமுறையை அகற்றிவிடவில்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் முன்பு தீவிரமாகப் பங்கேற்ற பகுதிகளைக் காட்டிலும் அளவிட முடியாத விரிவான மக்கள் பகுதியினருக்கு அறிவொளியூட்டி அவர்களை ஒழுங்கமைத்திடத் துணைபுரிவதன் மூலம் நாடாளுமன்ற முறை நெருக்கடிகளையும் அரசியல் புரட்சிகளையும் அகற்றிவிடவில்லை, இப்புரட்சிகளின்போது உள்நாட்டுப் போர் அதிகஅளவு கடுமையாகும்படியே செய்கிறது. (பக்கம் 94)

முதலாளித்துவ தாராளவாதிகளுடன் செய்துகொண்ட கூட்டணிகள், ஒப்பந்தங்கள், இணைப்புகள் இவற்றின் அனுபவமானது, வெகுமக்களுடைய உணர்வை மழுங்கடிக்கவே இந்த ஒப்பந்தங்கள் உதவுகின்றன; அவை போராடும் வீரர்களைச் சிறிதும் போராடும் ஆற்றலற்ற, மிகுந்த ஊசலாட்டமும் இரண்டகத் தன்மையும் கொண்டவர்களுடன் இணையச் செய்து, வெகுமக்களுடைய போராட்டத்தின் மெய்யான முக்கியத்துவத்தைப் பலவீனப்படுத்துகின்றனவே அன்றி அதனை உயர்த்தவில்லை என்பதை ஐயந்திரிபற நிரூபித்துக் காட்டியுள்ளது. (பக்கம் 95)

 1902இல் எழுதிய ‘லெனின் என்ன செய்ய வேண்டும்?’ என்ற நூலில்

1.      தொழிலாளர்கள் தங்கள் நேரம், ஊதியம் ஆகியவற்றுக்காக – அதாவது, அன்றாடப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதற்கான பொருளாதாரம் போராட்டங்கள் மட்டுமே அவர்களுக்குப் போதாது. அது அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை நிரந்தரமாகத் தர முடியாது. எனவே, அவர்களுக்கு அரசியல் ரீதியான முன்னேற்றம் என்பது மிகவும் இன்றியமையாதது. அந்த முன்னேற்றத்துக்கான பாதையை அவர்களால் தாங்களாகவே அமைத்துக் கொள்ள முடியாது. அவர்களிடம் இருப்பது தொழிற்சங்க உணர்வு மட்டுமே.

2.      சரி, அதற்கு என்ன செய்ய வேண்டும்? மார்க்சியம் கற்ற அறிவாளிகள் மார்க்சிய அரசியல் உணர்வை தொழிலாளர்களால் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு எளிமையாக விளக்கி, அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். அதுதான் மார்க்சியர்களின் கடமை.

அதை எப்படிச் செய்ய வேண்டும்? ரசியாவில் அன்று நிலவிய அரசியல், சமூகக் கொடுங்கோன்மைகள் ஒவ்வொன்றையும் எதிர்ப்பதற்கான உணர்வையும் அதற்கான பயிற்சியையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

“கிராம மேலாணையாளர்கள் விவசாயிகளைச் சவுக்கால் அடித்தல், அதிகாரிகளின் இலஞ்ச ஊழல்கள், பெருநகரங்களில் "பொது மக்களை" போலீஸ் நடத்தும் முறை, பஞ்சத்தால் பீடிக்கப்பட்டவர்களைத் தாக்குவது, கல்வியும் அறிவொளியும் பெற மக்கள் எடுக்கும் முயற்சியை நசுக்குவது, வரி போட்டுப் பணம் பிடுங்குவது, மதப் பிரிவினரை அடக்கித் துன்புறுத்துவது, படையாட்களை மானக்குறைவாக நடத்துவது, மாணவர்களையும் தாராளவாத அறிவுத்துறையினரையும் இராணுவப் பாசறை வழிமுறைகளில் நடத்துவது இவையும் இவை போன்ற எத்தனையோ கொடுங்கோல் செயல்களும் அரசியல் கிளர்ச்சிக்கும் மக்களை அரசியல் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கும் செயல்திறமுள்ள சாதனங்களாக உள்ளன. (பக்கம் 224)

“சமூக-ஜனநாயகவாதியாக ஆவதற்கு, நிலப்பிரபு, புரோகிதன், உயர்நிலை அரசு அதிகாரி, விவசாயி, மாணவன், நாடோடி, ஆகியோரின் பொருளாதார இயல்பு பற்றியும் சமூக, அரசியல் பண்புக் கூறுகள் பற்றியும் தொழிலாளி தன் மனத்தில் ஒரு தெளிவான சித்திரத்தைப் பெற்றிருக்க வேண்டும்; அவர்களது வலுவான அம்சங்களையும் பலவீனத்துக்குரிய அம்சங்களையும் அவர் அறிந்திருக்க வேண்டும்” (பக்கம் 238-239)

3.      அதற்கு ஒழுக்கமான, அர்ப்பணிப்புணர்வு கொண்ட தொழில்முறைப் புரட்சியாளர்களின் கட்சி இன்றியமையாதது. இந்தக் கட்சிக்கும் தொழிலாளர் அமைப்புக்கும் இடையேயான உறவு குறிப்பிட்ட நாட்டின் நிலைமைகளுக்கேற்ப வேறுபடுவதை லெனின் விளக்குகிறார்.

அரசியல் சுதந்திரம் உள்ள நாடுகளில், தொழிற்சங்கங்களுக்கும் சமூக-ஜனநாயகத்துக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாக இருப்பதுபோல ஒரு தொழிற்சங்க அமைப்புக்கும் ஓர் அரசியல் அமைப்புக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாகவே உள்ளது. ஒவ்வொரு நாட்டின் வரலாற்று நிலைமைகள், சட்டத்துறை நிலைமைகள், இன்னோரன்ன பிற நிலைமைகளுக்கேற்ப முந்தையதோடு பிந்தையதற்குள்ள உறவுகள் இயல்பாகவே வேறுபட்டிருக்கும்; அவை கூடுதலாகவோ, குறைவாகவோ நெருக்கமாக, சிக்கலானவையாக, இருக்கக்கூடும்; எனினும், சுதந்திரமுள்ள நாடுகளில் தொழிற்சங்கங்களின் அமைப்பு சமூக-ஜனநாயகக் கட்சியின் அமைப்புடன் ஒன்றுகூடிவிடும் சிக்கலே இருக்க முடியாது. ஆனால், ரசியாவில் எல்லா தொழிலாளர் சங்கங்களும் எல்லா படிப்பு வட்டங்களும் தடைசெய்யப்பட்டிருப்பதாலும் தொழிலாளிகளின் பொருளாதாரப் போராட்டத்தின் முதன்மையான வெளிப்பாடாகவும் ஆயுதமாகவும் விளங்கும் வேலைநிறுத்தம் குற்றவியல் குற்றமாக (சில நேரங்களில் ஓர் அரசியல் குற்றமாகக்கூட!) கருதப்படுவதாலும் எதேச்சாதிகார முறையின் நுகத்தடியானது சமூக-ஜனநாயக அமைப்புக்கும் தொழிலாளர்களின் சங்கங்களுக்கும் இடையேயான எல்லா வேறுபாடுகளையும் ஒழித்துவிடுவதாக முதற்பார்வையில் தோன்றுகிறது. (பக்கம் 291-292)

4.      பொருளாதாரப் போராட்டம், அரசியல் போராட்டம் எந்த அளவுக்கு முதன்மையானவையோ அதே அளவுக்கு கோட்பாட்டுப் போராட்டமும் முதன்மையானது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நாட்டில் முன்னிலைக்கு வரும்.

“எல்லாக் கோட்பாட்டுச் சிக்கல்களிலும் மேலும் தெளிவான உட்பார்வை பெறுவதும், பழைய உலகக் கண்ணோட்டத்திலிருந்து வழி வழியாகப் பெற்ற மரபுச் சொற்றொடர்களின் செல்வாக்கிலிருந்து மேன்மேலும் விடுவித்துக் கொள்வதும், சோசலிசம் ஒரு அறிவியலாக ஆகிவிட்டதால் அதை ஒரு அறிவியலாகப் பின்பற்றுவது - அதாவது, அதைப் பயில்வது அவசியம் என்பதை இடையறாது நினைவில் கொள்வதும், தலைவர்களின் கடமையாக இருக்கும். இவ்வாறு பெற்று மேன்மேலும் தெளிவாக்கிக்கொண்ட அறிவைத் தொழிலாளர் திரள்களிடையே அதிகரித்த ஆர்வத்துடன் பரப்புவதும், கட்சியமைப்பையும் தொழிற்சங்கங்களின் அமைப்பையும் ஒருங்கே மேன்மேலும் உறுதியாக இணைத்துப் பிணைத்துவருவதும், அவர்களது கடமையாக இருக்கும்.” (பக்கம் 185)

5.      இறுதியாக, பாட்டாளி வர்க்கம் அரசியல் தெளிவு பெற்று, முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல் களம் காண வேண்டும்.

“எழுச்சி கொண்ட மாணவர்கள், அதிருப்தியுற்றிருக்கும் மக்கள், ஆத்திரங் கொண்டுள்ள மதப் பிரிவினர், மனம் நொந்திருக்கும் தொடக்கப் பள்ளியாசிரியர்கள், இதுபோன்ற பிற பகுதிகளுக்குச் சரியான நேரத்தில் "ஒரு நேரடி செயல் வேலைத்திட்டத்தைக் கொடுக்கும்" திறமையும் உள்ள அரசியல் தலைவர்களாக ஆவதற்கு நம் சமூக-ஜனநாயக ஊழியர்களுக்கு நாம் பயிற்சி அளிக்க வேண்டும்.” (பக்கம் 258-259)

என்று அழுந்த வலியுறுத்துகிறார் லெனின். அதே நூலில் ‘விமர்சன சுதந்திரம்’ என்பதன் பொருள் ஜெர்மனியிலும் ரஷ்யாவிலும் நேர் எதிரெதிரான பொருள் கொண்டிருப்பதைக் காட்டுகிறார்.

-       ஜெர்மனியில் புரட்சிகர சமூக-ஜனநாயகவாதிகள் உள்ளதைக் காத்துப் பேணுவதை, அதாவது, பழைய வேலைத் திட்டத்தையும் செயலுத்திகளையும் காத்துப் பேணுவதை ஆதரிக்கிறார்கள். ஆனால், ரசியாவில் விமர்சகர்களும் உள்ளதைக் காத்துப் பேணுவதை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். (பக்கம் 177-178)

இந்த 2026இல் தமிழ்ச் சமூகம் இந்த நூலை வாசித்து, மார்க்சியத்தின் புரட்சிகரக் கருத்தியலை லெனின் ரசியாவுக்குப் பொருத்திய முறையைக் கற்றுக் கொண்டு நம் நாட்டு நிலைமைகளுக்குப் பொருத்தும் பணியை ஆற்ற வேண்டும் என்பது இன்றியமையாதது!

- இந்திரா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.