மார்க்சிய நெறியினரான கைலாசபதி அவர்கள், அந்நெறிக்கு இயைந்த சமூக அறிவியல் புலமான சமூகவியலைத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கு மிகவும் பொருந்தக் கூடிய முறையியலை வகுத்துக் கொண்டு, செயல்பட ஏதுவானது என்று கருதினார். அதற்குச் சாதகமாக, அன்றைய சமூக, அரசியல் சூழல் நிலவியது. அதற்கு ஏற்ப, "இந்த முழுமையான தத்துவத்தின் (மார்க்சீயம்) ஒரு வெளிப்பாடாகவே சமூகவியல் உருவாகியது. மார்சீய அறிஞர்கள் சமூகவியலைக் கலை இலக்கிய ஆய்விற்கு வழித்துணையாகக் கொண்டு வந்துள்ளனர்" (ப.6) என்ற அவர்தம் கருத்து சான்று கூறுகிறது. அதே சமயத்தில், சர்வதேச அரசியல் சூழலில் கடந்த காலத்தில் அது வகித்த பங்கின் எதிர்மறைத் தன்மை காரணமாக சமூகவியலை மட்டுமல்லாது மானிடவியலையும் விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே அணுகினார். ஏறக்குறைய 1980 களில் மானிடவியலர்கள் இலக்கிய ஆய்வுக்கு எனத் தனியே இலக்கிய மானிடவியல் என்னும் முறையியலை உருவாக்கினர். ஆனால், அதற்கு முன்னதாகவே சமூகவியலில் இலக்கியச் சமூகவியல் உருவாக்கப்பட்டது. அம்முறையியலைப் பேராசிரியர் முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியதோடு, அன்றைய தமிழ் இலக்கியச் சூழலோடு பொருத்தி ஆராய்ந்து, வழிகாட்டிய முன்னோடியாகவும் திகழ்கிறார்.
இலக்கியமும் சமூகவியலும்
ஒரு கலைப்பனுவல் என்ற வகையில் இலக்கியத்திற்கும் சமூக அறிவியல் புலங்களுக்கும் இடையே எப்போதும் வேறுபாடு உண்டு. ஆனால், சமூகத்தைத் தனது படைப்புக்கான ஆதாரமாகக் கொண்டிருக்கும் இலக்கியத்திற்கும், அச்சமூகத்தையே முதன்மையானதாக எடுத்துக் கொண்டு ஆராயும் சமூகவியலுக்கும் இடையே நிலவும் நெருங்கிய தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார், கைலாசபதி.” சமூக விஞ்ஞானத் துறைகள் பலவற்றுள்ளும் இலக்கியத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையது சமூகவியலாகும். ஏனெனில், சமூகவியல் மனித ஒழுகலாறு சம்பந்தமானது. தனிமனிதனையும் மனித சமுதாயத்தையும் ஆராய்வதையே சமூகவியல் முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எனினும், அவ்வக்கறையைப் பற்றிச் சமூகவியல் தனியுரிமை கொண்டாட இயலாது. மனிதனது நீண்ட வரலாற்றிலே, நாகரிக நிலை ஆரம்பித்த காலமுதல் மனித ஒழுகலாற்றைப் பற்றிச் சமயவாதிகளும் இலக்கியவாதிகளும் ஆழ்ந்த சிரத்தை காட்டி வந்துள்ளனர். குறிப்பாக, மனித ஒழுகலாற்றின் ஒரு பகுதியான “ ஆண்- பெண்” உறவு வேத விவிலிய காலங்களிலேயே இலக்கியக் கர்த்தாக்களது கவனத்தை ஈர்த்து வந்திருக்கிறது. தமிழிலும் இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழமையான பாடல்களில் அகத்திணைப் பாடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளவை, ஆண்- பெண் உறவின் பல்வேறு நிலைகளைச் சித்திரிப்பனவே. இயற்கைப் புணர்ச்சியிலிருந்து, கற்புநெறி வாழ்க்கை வரை பல சந்தர்ப்பங்களைச் சான்றோர் செய்யுள்கள் எமக்குணர்த்துகின்றன. குறிப்பாக, மனித சுபாவம் அல்லது மனித இயற்கை என்னும் பொருளைத் தத்துவவாதிகள் மட்டுமன்றி, இலக்கிய ஆசிரியர்களும் தொன்று தொட்டே எண்ணிப் பார்த்து வந்துள்ளனர்”
(க.கைலாசபதி,2002: 9).
சமூகவியல் முதலிய புலங்களுக்கும் இலக்கியத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்கும் பேராசிரியர், கல்விப் புலங்களுக்கு இடையே, சிந்தனைகள், கருத்தியல்கள், கோட்பாடுகளைப் பரிமாறிக் கொள்ள ஏதுவாக அமையும் துறையிடை ஆய்வு முறையியலை (interdisciplinary) வலியுறுத்துவதைக் காண்கிறோம்.” மனிதப் பண்பியல் துறைகளான வரலாற்றியல், தொல்பொருளியல், மெய்யியல், அழகியல், மொழியியல் முதலிவற்றுடன், சமூக விஞ்ஞானத் துறைகளான மானிடவியல், சமூகவியல், அரசியல், பொருளியல், மக்கள் பண்பாட்டியல் என்பனவும் இன்று இன்றியமையாதன. தனித்தும், சார்ந்தும் இயங்கும் இப்பண்பே நவீன இலக்கியத் திறனாய்வை முற்கால இலக்கிய ஆய்வுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது” (ப.6).
கலைச் சொற்றொடர், பொருள் ஆகியவற்றுடன் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவான ஈரிடைப்புல நோக்கு, பன்மைத்துவப் புலநோக்கு, துறையிடை ஆய்வு என்பன, ஆய்வு முறையியல்களைக் குறிப்பனவாகும். வெவ்வேறு கலை, சமூக அறிவியல் புலங்கள் தத்தம் இறுக்கமான எல்லை வரையறைகளைத் தளர்த்தி, அல்லது அவற்றைக் கடந்து ஒன்றை ஒன்று நெருங்குவதன் வாயிலாகத் தொடர்புடைய ஆய்வுகளில் சிந்தனைகள், கோட்பாடுகளைப் பரிமாறிக் கொள்கின்றன. அத்தகைய ஆய்வுப் படிமுறையை சுட்டிக் காட்டுபவையே ஈரிடைப்புல நோக்கு முதலிய கலைச் சொற்றொடர்கள் ஆகும். இத்தகைய கலைச்சொற்றொடர்கள் பிரதிபலிக்கும் அணுகுமுறையை மானிடவியல் துறையில் கையாண்டனர். இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதயில் ஈரிடைப்புல அணுகுமுறையை வலியுறுத்திய நிலையில், “ஈரிடைப்புல நோக்கு சார்ந்த பரஸ்பரச் சார்புநிலை என்பது சமகாலத்திய கல்வியுலக வாழ்வின் அடையாள முத்திரையாகும். அது அறிவுப் புலங்களுக்கு இடையே சிந்தனைகளையும் முறையியல்களையும் பெற்றுக் கொள்கிறது” என்று கீர்ட்ஸ் (Geertz, 1980) கூறினார்.
தமிழ் இலக்கிய ஆய்வுச் சூழலில் நிலவிய தேக்க நிலையைப் பார்த்துச் சற்று மனம் நொந்தவராக, கீர்ட்ஸ் எதை வலியுறுத்தினாரோ ஏறக்குறைய அதற்கு இணையான கருத்தையே அவருக்கு முன்னர் 1960 ஆம் ஆண்டுகளிலேயே கைலாசபதி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.” மற்றெல்லாத் துறைகளைப் போலவே எமது இலக்கிய உலகிலும் மூட நம்பிக்கைகள் நிறையவுள்ளன. விஞ்ஞான நோக்குடனும் துணிவுடனும் பிரச்சினைகளை அணுகினாலன்றி, நாம் முன்னேறப் போவதில்லை. சமூகவியல், மனிதவியல், அகழாராய்ச்சி, வரலாறு போன்ற பிற அறிவியற்றுறைகளின் துணைக் கொண்டு எமது இலக்கியத்தை ஆய்வது, இன்றைய நிலையில் மிகவும் பயனுள்ள செயல் என்பது எனது கருத்தும் நம்பிக்கையும்.” (க.கைலாசபதி, 1966: முதற்பதிப்பு முன்னுரை, ப.v).
தமிழ் இலக்கிய ஆய்வு வரலாற்றில் மேற்குறித்த தகவல் சமூக அறிவியல் சிந்தனைகள் தாக்கம் செலுத்திய ஈரிடைப்புல நோக்கிலான ஆய்வு முறையியல் தோன்றிய பின்புலத்தை அறிய உதவக் கூடியது. கைலாசபதி மட்டுமல்லாமல், ஏனைய சில இடதுசாரி அரசியல் சார்புடைய அறிஞர்களான நா.வானமாமலை, கா. சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன் உள்ளிட்டோரும் இவ்வகை ஆய்வு முறையியலில் பெரிதும் ஆர்வம் காட்டியுள்ளனர் என்பதை அவ்வறிஞர்களுடைய எழுத்துகள் சான்று காட்டுகின்றன. எனவே, சமூக அறிவியல் சிந்தனைகள் ஊடுருவிய ஆய்வியல் போக்கு என்பது அவ்வறிஞர்களால் தோற்றுவிக்கப்பட்டதெனக் கூறலாம்.
ஏகாதிபத்திய அரசியலில் சமூகவியலும் மானிடவியலும்
தம்முடைய இலக்கிய ஆய்வுகளின் முறையியல்களில் கைலாசபதி சமூகவியல், மானிடவியல் ஆகியவற்றின் கருத்துகளையும் கோட்பாடுகளையும் எடுத்தாண்டிருந்தாலும், அவருக்கு அவ்விரு புலங்களைப் பற்றிய விமர்சனப் பார்வை இருந்தது. சமூகவியலும் அதனுடன் நெருங்கிய தொடர்புடைய மானிடவியலும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றில், துரித வளர்ச்சியடைந்த காலமானது, உலக அரங்கில் ஏகாதிபத்தியம் வலுவுடன் விளங்கிய யுகமாகும். ஆசியா, ஆஃப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா முதலிய கண்டங்கள் எங்கும் குடியேற்ற நாடுகள்( காலனிகள்) இருந்தன. பல்வேறு இனமக்கள் பல தரப்பட்ட நாகரிக நிலைகளில் இந்நாடுகளில் வாழ்ந்து வந்தார்கள்; வருகிறார்கள். இவர்களை எல்லாம் அடக்கி ஆளவும் அதற்குச் சாதகமாக அவர்களது சமூக அமைப்பு, கலை, கலாச்சாரம், மொழி முதலியவற்றை விளங்கிக் கொள்ளவும் தேவையிருந்தது. இத்தகைய சூழலிலேயே மேலைத் தேயங்களில் சமூகவியலும் மானிடவியலும் செழித்து வளர்ந்தன என்று காலனி நாடுகளில் நிலவிய ஏகாதிபத்திய அரசியலின் பின்புலத்தில் அவ்விரு புலங்கள் ஆற்றிய பணியை காத்தலின் காவ் (Kathleen Gough) எழுதிய மானிடவியல்: ஏகாதிபத்தியத்தின் குழந்தை என்ற கட்டுரையை மேற்கோள் காட்டிக் கூறுகிறார்.
உலக நாடுகளில் ஏகாதிபத்தியம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியில் அவ்விரு புலங்களும் எவ்வாறு செயல்பட்டன என்பதையும் விவரிக்கிறார்: “கைத்தொழில் மயமான ஏகாதிபத்திய நாடுகளில் வாழ்ந்த பெரும்பாலான ஆய்வறிவாளரும் ஏகாதிபத்தியச் சிந்தனை வட்டத்துக்குள்ளேயே இயங்கினர். இதன் விளைவுகள் பல. பெரும்பாலான காலனிகளில் வாழ்ந்த மக்கள் பின்தங்கிய புராதனப் பண்பாட்டை உடையவர்கள் என்றும், அவற்றை ஆராய்வதே மானிடவியலின் பிரதான நோக்கம் என்றும் சமூகவியல் வாதிகள் கருதலானார்கள். அதன் உடனிகழ்ச்சியாக மனித இனப்பிரிவுகள் சார்ந்த வகையில், மானிடவியலும் சமூகவியலும் வளரலாயின. காலனிகளில் வாழ்ந்த மக்களிடையே இனவாதம், வகுப்புவாதம், மதப்பூசல்கள் முதலியவை வளர்வதற்கு, இத்தகைய கருத்துப்பரவல்கள் ஓரளவு காரணிகளாக அமைந்தன. நுணுக்கமாகப் பார்த்தால், இந்தியாவிலேயே கடந்த ஒரு நூற்றாண்டிற்கு மேலாகக் கற்றோரையும் மற்றோரையும் பிடித்தாட்டி வரும் ஆரிய - திராவிடப் பிரச்சினை கூட, மேலைத்தேய மானிடவியலரது ‘இனப்பிரிவு சார்ந்த ‘ கலாசார ஆய்வுகளின் தருக்க ரீதியிலான விளைவு எனக் கருதுவதில் தவறிருக்காது. ஏகாதிபத்தியவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியும் இதில் ஓர் அம்சமாய் இருந்தது” (2002: 23- 24)
இருவகை சமூகவியல்கள்
உலக அளவில் மானிடவியல், சமூகவியல் ஆகிய இரண்டின் எதிர்மறையான செயல்பாடுகள் கருதி, அவற்றைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும் பேராசிரியர் கைலாசபதி, சமூகவியலில் காணப்பட்ட சோசலிச எதிர்ப்புவாத அணுகுமுறைகளை அடியொற்றி, அதனில் இரண்டு வகைகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார். அதாவது, சோஷலிசக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்ட சமூகவியலும், அதற்கு விரோதமான நெறியில் வளர்ந்த மற்றொன்றுமாக இருவகை சமூகவியல்கள் இன்று உலகில் உள்ளன என்கிறார்(ப. 24).
சமூகவியலின் பண்பும் பணியும்
சமூக விஞ்ஞானங்களில் ஒன்றாகப் பரிணமித்த காலமுதல் சமூகவியல் ஏனைய துறைகளைப் பாதித்து வந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். சமூக ஆய்வில் அப்புலத்தின் பங்கைப் பற்றிக் கூறுகையி்ல் "விஞ்ஞானபூர்வமாகவும் புறநிலையாகவும் மனிதனையும் சமுதாயத்தையும் ஆய்வதே சமூகவியலின் சாராம்சமாகும். அதற்கு ஏதுவாக சமூக நிறுவனங்களும் நடைமுறைகளும் நம்பிக்கைகளும் வழக்காறுகளும் ஆராயப்படுகின்றன. சமூக நிறுவனங்கள், சமயம், பொருளாதாரம், அரசியல், குடும்பம் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை. இவை யாவற்றினுடைய இயக்கத்தையும் இயக்க ஆற்றலையும் ஆராய்வதே சமூகவியலின் தலையான பண்பும், பணியுமாகும்" (ப.24).
சமூகவியலும் இலக்கியச் சமூகவியலும்
சமூக ஒழுங்கமைப்பைப் பற்றி ஆராயும் சமூகவியல் என்பது, கடந்த காலம் முதற் கொண்டே பல்வேறு அறிவுத் துறைகளைச் சமூகவியல் அடிப்படையில் நோக்குவதும் அணுகுவதும் பெருகிவருவதை அறிந்த நிலையில் கைலாசபதி அவர்கள், தமக்கு முக்கியமானதாகத் தோன்றிய இலக்கியச் சமூகவியலை எடுத்துக் கொண்டு அறிமுகப்படுத்துகிறார். அறிமுக அளவில் மட்டுமல்லாது, இலக்கியச் சமூகவியலின் இரண்டு முதன்மையான அணுகுமுறைகளைத் தமிழ் எழுத்தாளர்கள், மற்றும் அவர்களுடைய படைப்புகள், வாசகர்கள், புத்தக வெளியீடுகள், பதிப்பகத்தார், மற்றும் விற்பனையாளர்கள் ஆகியாரால் உருவாக்கப்பட்ட அன்றைய தமிழ் இலக்கியச் சூழலோடு பொருத்தி ஆராய்ந்துள்ளார்.
இலக்கியச் சமுகவியல்: நிகழ்காலத்திய பொருத்தப்பாடு
பேராசிரியர் கைலாசபதி அறிமுகப் படுத்திய இலக்கியச் சமூகவியல், எத்துணை அளவுக்குத் தமிழ் இலக்கிய ஆய்வுலகில் தாக்கம் செலுத்தியது என்பதை அறிய முடியவில்லை. ஆனால், இலக்கியத்தைப் பற்றிய சமூகவியல் ரீதியிலான அணுகுமுறை என்பது, இன்றைய ஆய்வுச் சூழலில் தவிர்க்கவியலாத ஒன்றாகவே கருதத் தூண்டுகிறது.
கடந்த நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தமிழகக் கல்வி நிறுவனங்களின் ஆய்வுப்பட்டத்திற்காக நாவல் முதலிய சமகாலத்திய இலக்கியப் படைப்புகளைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வேடுகள் பலவற்றின் தலைப்புகளில் கணிசமான எண்ணிக்கையில் சமூகவியல் பார்வை என்னும் சொற்றொடர் தாங்கியவையாக அமைந்தன. ஆனால், பின்னர் அதன் கருத்தியல் தொடர்ச்சி கல்வி நிறுவனத் தமிழ் இலக்கிய ஆய்வு வரலாற்றில் நீட்சிப் பெறாமல் அறுந்து போய்விட்டது. ஆயினும், பின்னர் அந்த இடத்தை, ஏறக்குறைய மானிடவியலும் அதன் ஆய்வு முறையியலான இனவரைவியலும் எடுத்துக் கொண்டுவிட்டன என்றே கூறலாம்.
“இலக்கியம், சமூகவியல் ஆகிய இரண்டு கல்விப்புலங்களும் முற்றிலும் தனித்தனிப் புலங்களாக விளங்கியவை எனக் கூறமுடியவில்லை. ஆனால், மற்றொருபுறம், சமூகம் பற்றிய நமது புரிதலின் அடிப்படையில், வரலாற்று ரீதியில் அவை இரண்டும் தனித்தனியே இருந்தாலும் ஒன்றுக்கொன்று கொண்டு- கொடுத்து உதவிக் கொண்டவையாகவே விளங்கி வந்துள்ளன”. என்று இலக்கியம், சமூகவியல் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட தொடர்புப் பற்றிக் குறிப்பிடுவர்.(Alan Swingewood,1971:.13).
தொடக்கக் காலச் சமூகவியலர்களான ஆகஸ்ட் கோம்த் ஸ்பென்சர் போன்றோரும், இருபதாம் நூற்றாண்டின் எமில் தர்க்கைம், மேக்ஸ் வீபர் போன்றோரும் கற்பனாவாத இலக்கியங்களைப் பற்றி அவ்வப்போது குறிப்பிட்டிருப்பினும், ஒட்டுமொத்தமாக, சமூக ஒழுங்கமைப்பைப் பற்றிய பகுப்பாய்வுக்குத் துணையாக அமையக் கூடியவை என்றே அணுகினர். (ப.13)
இலக்கியச் சமூகவியலைப் பற்றிக் கூறும் நிலையில், சமய சமூகவியல், கல்வியியல் சமூகவியல், அரசியல் சமூகவியல், சமூக மாற்றம் பற்றிய சமூகவியல் என்பன போன்ற செறிவுப்படுத்தப்பட்ட பொருட்பரப்புகள் இருப்பினும், அவற்றுக்கு நிகரான, துல்லியத் தன்மையிலான இலக்கியச் சமூகவியல் என்று கூறத்தக்க வகையில் நன்கு வளர்த்தெடுக்கப்பட்ட அறிவுத் தொகுப்பு என இல்லை என்றே கூறலாம் என்பர். ஏனெனில், இலக்கியம் பற்றிய சமூகவியல் ஆய்வு என்பது சமூகவியல் அறிவுப்புலத்தில் மிகவும் பிந்தையக் காலத்து வரவாகும்.
இலக்கியச் சமூகவியல்: அணுகுமுறைகள்
அன்றைய சூழலில் நிலவிய இலக்கியச் சமூகவியலில் காணப்பட்டவையாக, இரண்டு வகைப்பட்ட அகண்ட அணுகுமுறைகளைக் குறிப்பிடுவர். மிகவும் புகழ்பெற்ற ஆய்வுக் கண்ணோட்டம் என்பது, இலக்கியத்தின் ஆவணப்படுத்தும் இயல்பினைத் (documentary aspect) தகவமைத்துக் கொண்ட ஒன்றாகும். அது, காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதாகும்.. இன்னும் சற்றுத் தெளிவாகச் சொல்வோமெனில்,”இலக்கியம் என்பது காலக் கண்ணாடியாகும்” (க.கைலாசபதி, 2002:25) இலக்கியம் பற்றிய. இக்கண்ணாடி பிம்ப அணுகுமுறையானது, மிகவும் நீண்ட காலத்தியதும், தனித்துவத் தன்மை உடையதுமான வரலாற்றைக் கொண்டது. ஃப்ரெஞ்சுத் தத்துவவாதியான லூயி டி பொனால்ட் (Louis de Bonald 1754- 1890) என்பவர் இக்கோட்பாட்டை முன்வைத்தார். இலக்கியம் என்பது, தனிமனிதர் சிலரால் படைக்கப்பட்டாலும், படைக்கப்பட்ட பின்னர், அது தனிமனிதனுக்குச் சொந்தமானது அன்று எனக் கூறியவர். “ எந்த ஒரு நாட்டின் இலக்கியமாயினும், அதனைக் கூர்ந்து வாசிக்கும் ஒருவனால், அதன் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்லமுடியும்” என்று கூறினார். ஸ்டென்தால் (Stendhal) என்னும் உளவியல் எழுத்தாளர் Le Rouge et le Noir) சிவப்பும் கருப்பும் The Red and Black) என்ற நாவலை எழுதியவர். அவர் நாவலைப் பற்றி எழுதும் போது,” அகண்ட நெடுஞ்சாலைப் பயணத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி “ என்றார். அத்துடன்,” சில நேரங்களில், மங்கலான நீலவண்ணத்தைப் பிரதிபலிக்கும், சில நேரங்களில் குட்டையில் கிடக்கும் சேற்றுச் சகதி நீராகப் பிரதிபலிக்கும்” என்றார். இத்தகைய நோக்கின் அடிப்படையில், இலக்கியம் என்பது, சமூகக் கட்டமைப்பின் குடும்ப உறவுகள், வர்க்க முரண்பாடு, பலவகையான சமூகப் போக்குகள், மக்கள் தொகை என்பன போன்றவற்றின் பல்வேறுபட்ட கோணங்களை நேரடியாகப் பிரதிபலிக்கக் கூடியது என்று கருதப்பட்டது.1971:13)
இலக்கியச் சமூகவியல் பற்றிய தனித் தன்மையான ஆய்வாளர்களில் ஒருவர் கூறிய கருத்து இங்கு நினைவுகூரத் தக்கது: எழுத்தாளரின் கற்பனைக் கதாபாத்திரங்களின் அனுபவத்தையும் சூழல்களையும், அவை எந்த வரலாற்றுப் பின்புலத்திலிருந்து தருவிக்கப்பட்டனவோ அத்தகைய பின்புலத்தோடு இணைத்து நோக்குவதுதான் இலக்கியச் சமூகவிலரின் கடமையாகும். (14).
மற்றொரு கருத்தும் இங்குக் குறிப்பிடத் தக்கது. அதாவது, இலக்கியத்தின் அந்தரங்க உலகினைக் குறிப்பிடத் தக்க சமூகப் பொருண்மைகளை நோக்கிப் படிநிலை மாற்றம் செய்வது என்பது, எப்போதும் கடுமையான விமர்சனத்திற்கு ஆட்பட்டது. இந்த அணுகுமுறையானது, இலக்கியத்தை ஒட்டுமொத்தமாகச் சமூகவியல் ரீதியில் சூறையாடுவதோடு, அதனைத் தகவல் சுரங்கமாகப் பயன்படுத்துகிறது என்ற விமரிசனமும் இருந்து வருகிறது. இலக்கியத்தைப் புரிந்துக் கொள்ளவும் மதிப்பீடு செய்வதற்கும் உரிய சரியான திறனாய்வுக் கருவி ஏதும் இல்லாதவர்களால், இலக்கியப் படைப்பானது, வெளிப்புறத்திலிருந்து புரட்டிப் போடப்படுகிறது. இம்முறையில் மறைந்திருக்கும் அயாயம் என்பது, இலக்கியச் சமூகவியலர் குறிப்பிட்ட காலம் பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் தோண்டித் துருவி எடுப்பதற்குப் போதுமான திறமை எதையும் பெற்றிருக்கமாட்டார் என்பதே யாகும். இலக்கியச் சான்றாவணமானது, தான் எந்த ஓர் உலகத்தைப் பிரதிபலிக்கிறது என்று அனுமானிக்கப்படுகிறதோ, அந்த உலகத்தை அடிப்படையாகக் கொண்டே அது பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். அப்போதுதான், எவர் ஒருவர் முற்றிலும் இலக்கியம் அல்லாத வேறு ஆதாரங்களிலிருந்துச் சமூக அமைப்புப் பற்றிய அறிவினைத் தெரிந்துக் கொண்டிருக்கிறாரோ அவரால் மட்டுமே, குறிப்பிடத் தக்க சமூக வகைமைகள், அவற்றினுடைய நடத்தை முறைகள் என்பன ஒரு குறிப்பிட்ட நாவலில் எத்துணை அள்ளவுக்குப் பொருத்தமான முறையிலோ அறைகுறையாகவோ மறு படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய முடியும். அத்துடன், இவ்விடத்தில் வேறொரு பிரச்சினையும் உள்ளது என்று சுட்டிக் காட்டுவர்.
அதாவது, உண்மையான பிரச்சினை என்பது, எப்போது தோன்றுகிறது என்றால், இலக்கியம், உண்மையில் எதனைப் பிரதிபலிக்கிறது என்பது பற்றிய கேள்வியை அடியொற்றியே தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, நாவல் என்னும் இலக்கியம் காலக் கண்ணாடியாகத் திகழக் கூடியது என்றால், அதுவும் கூட, ஒரு பிரச்சினையை எழுப்புகிறது. அதாவது, இலக்கிய உத்திக் கூறுகள் என்பன, அப்படைப்பின் வருணனையை முற்றிலும் திசை திருப்பக் கூடியவையாக உள்ளனவா, இல்லையா? கடந்த காலத்தில் எப்போதும், கலைத்துவ நம்பகத்தன்மை என்பது, வரலாறு மற்றும் சமூக உண்மைக்கு உரியதாக அனுமானிக்கப்படுகிறது.
இலக்கியம் என்பது காலக் கண்ணாடியாகும் என்னும் கருத்தாக்கத்தில் உள்ள எதிர்மறை அம்சத்தையும் சுட்டிக் காட்டுவர். இலக்கியம் பற்றிய சமூகவியல் பகுப்பாய்வில் அக்கருத்தாக்கத்தைக் கையாளும் போது மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்பர். அனைத்திற்கும் மேலாக, அவ்வணுகுமுறை இலக்கியத்தைப் படைத்த எழுத்தாளனையே புறக்கணிக்கிறது. அவனுடைய உணர்வுநிலையையும் நோக்கத்தையும் புறம் தள்ளுகிறது. மாபெரும் எழுத்தாளர்கள், மேலோட்டமாகச் சமூக உலகை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக வருணனை உத்திகளைக் கையாளுவதில்லை. ஓர் எழுத்தாளன் என்ற தகுதியின் அடிப்படையில், அவனுக்கென மிகவும் காத்திரமான கடமை இருக்கிறது, சமூக மாந்தர்களான பாத்திரங்களை, செயற்கையாக உருவாக்கிய சூழல்களில் அவர்கள் தங்கள் சொந்தத் தலைவிதியைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் வகையில், அச் சமூக உலகில் விழுமியங்களையும் அர்த்தங்களையும் தாமே சுயமாகக் கண்டறிந்து உயிரோட்டத்துடன் இயங்கவைக்கும் பொறுப்பும் எழுத்தாளனுக்கு உரியதாகும்.
சமூகம் என்பது, சமூகக் கட்டமைப்பை உருவாக்கக் கூடிய சமூக நிறுவனங்களின் குழுமம் என்பதனினும் மேலானது. அது நடத்தை முறைகளைப் பற்றிய ஒழுகுமுறை விதிகளையும் தகுதி நிர்ணயங்களையும் கொண்டது. அவற்றை அடியொற்றியே தனிமனிதர்கள் சரியான ஒழுகலாறுகள் பற்றி அறிந்து கொள்வதோடு, அவற்றை மதிப்பீடு செய்து கொள்வார்கள். அவ்வாறே, விழுமியங்கள் என்பவற்றை மக்கள் உணர்வு ரீதியாக உருவாக்கிக் கொண்டு அவற்றைச் சமூக அடிப்படையில், நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்துக் கொள்வார்கள். உழைக்கும் மக்கள், மத்தியதர வகுப்பினர் ஆகியோரின் விதிமுறைகள், பால் பற்றிய கண்ணோட்டங்கள் போன்றவற்றை இலக்கியம் தெளிவாகப் பிரதிபலிக்கக் கூடியது. எழுத்தாளருடைய சொந்த நோக்கத்திற்கு ஏற்றவாறு அது விழுமியங்களையும் கூட பிரதிபலிக்கும். விழுமியங்களின் தன்மையின் அடிப்படையில், இலக்கியம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்றால், அவ்விழுமியங்களை வலியுறுத்தவும், அவை பற்றிய விழிப்புணர்வூட்டவும் செய்யக்கூடிய சமூகவியல் தரவுகளாகக் கருதப்படுகின்றன. இலக்கியத்தில் அதுவே முகாமையான பொருளாக அமைந்துவிடுகிறது என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது.
இலக்கியச் சமூகவியல்: இரண்டாம் அணுகுமுறை
இலக்கியச் சமூகவியல் பற்றிய இரண்டாவது அணுகுமுறையானது, இலக்கியப் படைப்புக்கு முன்னுரிமையோ அழுத்தமோ கொடுப்பதிலிருந்து விலகிச் செல்லக் கூடியதாகும். அதாவது, இவ்வணுகுமுறையானது, இலக்கியம் உற்பத்தி செய்வது குறித்துத் தன் கவனத்தைச் செலுத்துகிறது. அதிலும் குறிப்பாக, இலக்கியத்தைப் படைக்கும் எழுத்தாளரின் சமூக நிறுவனத்தின் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. ஃப்ரெஞ்சு சமூகவியலரான இராபர்ட் எஸ்கார்ப்பிட் (Robert Escarpit) என்பவர் இவ்வணுகுமுறையை வலியுறுத்தியவர். இலக்கிய உற்பத்தி மற்றும் அதற்கான செலவுக்கு ஆதாரமாக அமையும் புரவலர் ஆதரவு என்பது, இலக்கியப் பனுவலானது, விவாதத்தின் மையப் பொருளாக ஆவதிலிருந்து, அதனை அப்புறப்படுத்துகிறது. இவ்வாறு, எழுத்தாளர் தன்னுடைய புரவலரோடு கொண்ட உறவு பெரும்பாலும் சார்புத் தன்மைஉடையது; வேண்டாத ஒன்று. இப்புரவலர் ஆதரவு என்பது, இடைக்காலத்திய அரசவை முதல், பதினெட்டாம் நூற்றாண்டின் உயர்குடி ஆட்சிமுறையினது வரையில் வரலாற்று ரீதியில் விரிவாகத் தேடத்தக்க ஒன்றாகக் கூறுவர். மலிவு விலைப் புத்தக வெளியீடுகள், வெகுதிரள் சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் மூலம், புரவலர் ஆதரவு முறை என்பது, நூல்வெளியீட்டாளர்களுக்கும் பத்தக விற்பனையாளர்களுக்கும் எதேச்சதிகாரத்தை, வழங்குகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், முக்கியமாக, மத்தியதர வர்க்க பார்வையாளர்களின் (வாசகர்கள்) பெருக்கமானது, எழுத்தாளர்களுடைய சார்புத் தன்மை என்னும் நிலையிலிருந்து, தொழில் என்ற நிலைமைக்கு மாறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனைக் குறித்து ஜெர்மனியின் சமூகவியலரான கார்ல் மான்ஹீம் (/Karl Mannheim) என்பவர், கூறுகையில், ‘ இது ஓர் சீரான பண்பாட்டு சனநாயகமாதல் ‘ என்றார். இது, நாவலை மத்தியதர வர்க்க இலக்கிய வடிவமாக உயர்வதற்கு வித்திட்ட வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.. அதனை நவீன அறிவு வுளிப்பாடு அல்லது நவீன உளவியல் என்று கூறினர். மேலும், மத்தியதர வர்க்கத்தினரின் இப்பண்பட்டு வெற்றியானது, வெகுமக்கள் பண்பாடு மற்றும் இலக்கியத்தை வணிகமயப்படுத்தலின் முன்னறிவிப்பு என்று நோக்கப்படும் என்று கூறினர்.
ஒரு வெகுமக்கள் சமூகத்தில், எழுத்தாளனின் நிலை என்பது, முந்தைய சமூகத் தருணத்தில் இருந்ததை விட, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே வேளையில், அலனுடைய படைப்பாற்றல் திறனையும், பலவகைகளில் பாதிக்கவும் கூடும் கன்பது தெளிவு. அவனுடைய இந்த வரலாற்றுப் பின்புலத்திற்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் இடைப்பட்ட தொடர்புக்கண்ணி என்பது, எவ்வகை இலக்கியச் சமூகவியலிலும் ஒரு முக்கியமான திறவுகோல் பொருள்பரப்பைக் கட்டமைக்கிறது. இது ஒரு பெரும் பிரச்சினையை உருவாக்குகிறது. அதாவது, பனுவலுக்கும் அதனுடைய பின்னணிக்கும் இடையே ஒரு நுண்ணிய தொடர்பினை ஏற்படுத்துகிறது. எவ்வாறு இலக்கிய உருவாக்கம், வாசிப்பு என்பன குறிப்பிட்ட இலக்கிய வடிவங்களையும் உள்ளடக்கத்தையும் பாதிக்கின்றன? எந்த ஓர் இலக்கியத்தையும் மிகவும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு இவ்வணுகுமுறை இன்றியமையாதது என்றாலும், பனுவல் பகுப்பாய்வுக்கு மிகவும் இன்றியமையாதது. இதில் கவனிக்கத் தக்க ஒன்றும் உண்டு. அதனில் உள்ளார்ந்ததாக இருக்கக் கூடிய மிகவும் கரடுமுரடான குறைப்பு வாத வடிவங்களைத் (crude forms reductionism) தவிர்ப்பதற்காக, தீவிரமான அக்கறை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதே அதுவாகும். இலக்கியப் படைப்பு என்பது, அதனுடைய சூழ்ந்திருக்கும் சுற்றுச் சூழலின் சாதாரணமான உடனியைந்த நிகழ்வினமாக (epiphenomenon) ஒருபோதும் ஆகிவிடக் கூடாது. (Alan Swingewood, 1971: 11- 18).
இந்தச் சமூகவியல் அணுகுமுறையில் நீடித்திருக்கும் ஒரு கருப்பொருள் என்பது, தன்னுடைய சமூகத்திலிருந்து, எழுத்தாளனுடைய அதிகரிக்கும் அந்நியமாதல் என்பதாகும். இந்த அந்நியமாதல் என்பது, இலக்கிய நடை, உள்ளடக்கம் ஆகியவற்றின்பால் எத்தகைய உடனியைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிச் சமூகவியல் அணுகுமுறை அழுத்தம் கொடுக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த புரவலர் ஆதரவு வீழ்ச்சி மற்றும் கட்டுப்பாடற்ற அறிவுவாணர்களின் அசைவியக்கத்தின் உறுப்பினராக எழுத்தாளர்கள் ஏற்றம் பெற்றமை ஆகியவற்றுக்கான காரணத்தைச் சமூகக் கூறுபாட்டை அடியொற்றித் தேடப்பட்டது. தொழிற்சாலை உற்பத்தி முறைக்கு முந்தைய சமுதாயத்தில், எழுத்தாளர், பார்வையாளருக்கு இடையில் நல்லுறவு நிலவியது. என்பது பற்றிய விவாதம் முன்வைக்கப்பட்டது. பெரசிலியன் ஏதென்சில், ஏசிலஸ், சோஃபாக்கிளிஸ், யூரிப்பிடஸ் ஆகியோர், ஏறக்குறைய சமூகத்தில் ஒருங்கிணைந்தவர்களாகவே விளங்கினர். அவர்கள் தனித்த வர்க்கத்தின் அங்கத்தினராகக் கருதப்படவில்லை. ஆனால், அசஸ்டன் ரோமில் முன்னதற்கு மாறுபாடாக, ஹோரேஸ் விர்ஜில் காலத்தில் புகழ்பாடிக் கொண்டாடும் மரபு காணப்பட்டது. அதற்குக் காரணம், புரவலர் ஆதரவு என்பது ஓர் ஒழுங்கமைப்பாக நிலவியதே ஆகும். ரோம், ஏதென்ஸ் வீழ்ச்சியை அடுத்து, அரசவைப் புரவலர் ஆதரவு என்பது, எழுத்தாளர்களுடைய முதன்மையான ஆதரவாக மாறியது. இதற்கு. உதாரணமாக, மறுமலர்ச்சி கண்ட இத்தாலி, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் ஃப்ரானஸ் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதனை அடுத்து அரசவைப் புரவலர் ஆதரவு என்பது செல்வந்தர்களுடைய கைக்கு மாறியது. உணவு, பணம் ஆகியவற்றின் தேவையை ஒட்டிப் படைப்பாளிகள், அச்செல்வந்தர்களின் புரவலர் ஆதரவைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இவ்வாறு, இலக்கியச் சமூகவியல் என்பது தனது முதன்மையான அணுகுமுறைகளின் அடிப்படையில் நீண்ட விவாதங்களையும் கருத்துருவங்களையும் கொண்டது. பேராசிரியர் கைலாசபதி அவர்கள், இலக்கியச் சமூகவிலின் இருவேறு அணுகுமுறைகளையும் மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிமுகப்படுத்தி, அவற்றைத் தமிழ் இலக்கியச் சூழலில் பொருத்தி ஆராய்ந்துள்ளார்.
கைலாசபதியின் இலக்கியச் சமூகவியல் பார்வை
இலக்கியத்தின் ஆவணப்படுத்தும் இயல்பை அடியொற்றிய (1) "இலக்கியம் காலக்கண்ணாடியாகும்” என்ற கருத்தும், (2) "இலக்கியப் படைப்புக்கு முக்கியத்துவம் என்பதைக் கடந்து, அதன் உற்பத்திக்கும் எழுத்தாளனின் சமூச்சூழலுக்கும் அழுத்தம் கொடுப்பது” என்ற நோக்கமும் இலக்கியச் சமூகவியலின் இரண்டு முதன்மையான அணுகுமுறைகளாகும். இவ்விரு அணுகுமுறைகளை அடியொற்றிக், கடந்த தலைமுறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களையும், அவர்களுடைய கொள்கையைப் பற்றிய நிலைப்பாடுகளையும், சூழல்களையும் கைலாசபதி அவர்கள் ஆராய்கிறார்.
(1) இலக்கியப் படைப்பாளியின் சூழலுக்கு முதன்மை இடம் கொடுப்பது என்பது, இலக்கியப் படைப்பின் நயங்களை மட்டும் விவரிக்கும் நடைமுறைத் திறனாய்வுக்கு மாற்று மருந்தாக அமையக்கூடியது. எழுத்தாளனுடைய வாசகர் தொகை, நூல்உற்பத்திச் செலவு, நூற்சந்தையின் தன்மை, மத்தியதர வர்க்க வாசகர்களின் இயல்பு, எழுத்தாளனின் வர்க்கச் சார்பு போன்றவை, ஒரு படைப்பின் உள்ளடக்கம், உருவம் ஆகியவற்றைப் பெரிதும் பாதிக்கின்றன. முன்னர் இவை தனி எழுத்தாளனுடைய ஆற்றலை அடியொற்றி ஆராயப்பட்டன. சமூகவியலின் வருகைக்குப் பின்னர், இவை கண்ணுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும் உள்ள சமூகச் சக்திகளின் செயற்பாட்டினால் தெளிவாகியுள்ளது, இலக்கியச் சமூகவியலின் இருவகை அணுகுமுறைகளும் ஒன்றுக்கொன்று உறுதுணையானவை.(ப.26)
(2) தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள், இதுகாலம் வரை ,இலக்கியக் கர்த்தாக்களை மையமாக வைத்தே நூலின் பொருள், வடிவம், சிறப்பியல்பு ஆகிவற்றைச் சிலாகித்துப் பேசி வந்துள்ளனர், ஒவ்வொரு நூலும் தோன்றிய காலப்பகுதியில் அதற்கு இருக்கும் audience- கேட்குநர் வாசகர், கலைஞர் ஆகியோர் ஏற்படைமை நிலையிலிருந்து, நூலின் பண்புகளை விமர்சனம் செய்யவில்லை. இலக்கியம் காலம் கடந்தது என்று தத்துவம் பேசுவதில் பயனெதுவுமில்லை.(பக்.26- 27)
(3) பூர்ஷ்வா சமூகவியல் வாதிகளைப் போலவே, நமது பெரும்பான்மையான எழுத்தாளரும் ஒருங்கிணைக்கப்பட்ட தத்துவார்த்த நோக்கின்றி, சின்னஞ்சிறு உலகங்களைப் பற்றி எழுதி வருகிறார்கள் பூர்ஷ்வா சமூகவியல்வாதிகள் மனித சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிப் போக்கு, வர்க்க வேறுபாடுகள், உற்பத்தி உறவுகள் முதலிய அடிப்படைகளை மனங்கொள்ளமல், வர்க்க வித்தியாசங்களைக் கடந்தவராகக் கருதப்படும் மாணவர்கள், இளைய தலைமுறையினர், கார்ச் சாரதிகள், பாலியல் தொழிலாளர்கள், நாடோடிகள், புலம்பெயர்வோர்கள் முதலிய சிறுசிறு குழுக்களைப் பற்றிச் சமூகவியல் ஆய்வுகள் நடத்தி வந்துள்ளனரோ, அவ்வாறே, நமது எழுத்தாளரும் வர்க்கங்களை மறந்து, தனிமனிதர்கள், சிறுசிறு குழுக்களைப் பற்றியும் எழுதி வருகின்றனர். பூர்ஷ்வா சமூகவியலர், பூர்விகக் குடிகள், புராதன மக்கள் கூட்டம் பற்றிச் சுவையான மானிடவியல் ஆய்வுகள் நடத்திவந்துள்ளனர். அவர்களைப் போலவே நமது எழுத்தாளர்களும் பழங்காலத்து ராஜா, ராணிக் கதைகளையும், பழங்குடி மக்கள் வாழ்க்கையையும் பற்றி சுவாரஸ்யமான சிறுகதைகளாகவும், நெடுங்கதைகளாகவும் எழுதிவந்துள்ளனர் என,று எழுத்தாளர்களையும், சமூகவியலர்களையும் ஒப்பிட்டுப் பேசும் கைலாசபதி, அவர்களுடைய ஆய்வு மற்றும் படைப்புச் செயல்பாடுகளை, முன்னிறுத்தி வர்க்க உணர்வில்லாதவர்களாகவும் பூர்ஷ்வா சமூகவியலர்களாகவும் எழுத்தாளர்களாகவும் விமர்சிக்கிறார்.(ப.27)
(4) கைலாசபதியின் இவ்விமர்சனம் நியாயமானதா என்ற கேள்வியை எழுப்புகிறது. மானிடவியலரான எஸ்.சி. துபே, பொருளியல் மற்றும் சமூக அடிப்படையில் புறக்கணிக்கப்பட்ட இவ்விளிம்புநிலை மக்கள் பற்றிய அக்கறையை வலியுறுத்துகிறார். “இந்தியாவின் பலவண்ணப் பண்பாட்டுத் தொகுதிக்குள் கழைக்கூத்தாடிகள், கதைப்பாடகர்கள், இரவலர்கள், பாலியல் தொழில் தரகர்கள், பாலியல் பணியாளர்கள், நிகழ்த்துக் கலைஞர்கள், வேடிக்கைக் காட்டுவோர், ஆட்டம் மற்றும் பாட்டுக் கலைஞர்கள், பாம்பாட்டிகள், விலங்குகளைப் பழக்கி வித்தை காட்டுவோர், கதை சொல்லிகள், சோதிடர்கள், நாடோடிகள் போன்றோர் அடங்குகின்றனர். நாட்டார் மற்றும் வெகுமக்கள் பண்பாட்டின் பன்முகத் தன்மைக்கும், உயிர்ப்புத் தன்மைக்கும் இந்தக் குழுக்கள் மிகப்பெரும் அளவில் பங்களிப்பு செய்துள்ளன. ஆனால், நாட்டின் ஒட்டுமொத்தப் பண்பாட்டுத் தொகுதிக்குள் இந்தக் குழுக்கள் தனித்து இடம்பெறவில்லை. இந்தக் குழுக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். செய்து முடிக்கப்படாத பண்பாடு பற்றிய ஆய்வுகளின் திட்ட நிரல்களில் இக்குழுக்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்” (மேற்கோள்: ஆ.தனஞ்செயன், 2024: 171- 172). எனவே, இனக்குழுக்கள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் குறித்து இலக்கியப் படைப்புகளை எழுதிய எழுத்தாளர்கள், ஆய்வு மேற்கொண்ட சமூகவியலர்கள் ஆகியோரை வர்க்க உணர்வற்றவர்கள், பூர்ஷ்வா சிந்தனையாளர்கள் என்ற பேராசிரியரின் விமர்சனம் பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது.
(5) சமூகங்களையும் அவற்றின் நடத்தை முறைகளையும் அணுக்கமாக உற்று நோக்கித் தம்முடைய ஆய்வில் ‘உள்ளதை உள்ளவாறே நுட்பமாக விவரிக்கும்’ சமூகவியலர்களையும், அவ்வாறே,’ இயற்பண்பு வாதிகளாகத் தத்ரூபமாக யாவற்றையும் வருணிக்கும் கைங்கரியத்தை மேற்கொண்டு வந்துள்ள’ தமிழ் எழுத்தாளர்களையும் கைலாசபதி விமர்சன அடிப்படையிலேயே நோக்குகிறார். அதாவது, முறையே இவ்விருவகை சமூகவியலர்களும், எழுத்தாளர்களும் சமுதாயத்தை மாறும் பொருளாக்க் கொள்ளாமல், அதனை மாற்றும் பணியிலும் நாட்டமின்றி, உள்ளது உள்ளவாறே நுட்பமாக விவரித்து வந்துள்ளனர் (27- 28).
(6) சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கி நணுக்கமாக விவரிப்பது, நடப்பியலைக் கண்டு மனமுடைவது, அதனைக் கிண்டல் செய்வது, சிறுமையைக் கண்டு சீறுவது, சில சமயம் உலகினையே சபிப்பது என்பன போன்ற மனப்போக்குகள் தமக்கியைந்த உத்திகளோடு நவீன இலக்கியத்தில் வெளிப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் நிதானமாக நோக்கி மதிப்பிடும் கைலாசபதி, ‘ இப்போக்குகள் அனைத்தும் பூர்ஷ்வா உலகநோக்கின் விகற்பங்கள் “ என்கிறார். முத்தாய்ப்பாகச் சொல்லும்போது, அவ்வெழுத்தாளர்கள்,” நேரடியாகவே பூர்ஷ்வா வர்க்கத்தின் நலன்களைப் பிரக்ஞைப் பூர்வமாகக் கட்டிக் காக்க முனைபவர்கள் என்றோ, ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகள் என்றோ நாம் விவரிக்க வேண்டியதில்லை. உண்மையில், முதலாளித்துவச் சமுதாயத்தின் பௌதிக நிலைமைகளின் வரம்புக்குள் நின்றுகொண்டு உலகை நோக்குவதல், அதனால் கட்டுப்படுத்தப்பட்டு விடுகிறார்கள்” என்கிறார்.(பக்.28- 29)
(7) சமுதாயத்தில் ஓர் அங்கத்தினனாக வாழும் எழுத்தாளர் தான் வாழும் சூழலில் முரண்பாடுகளும் போராட்டங்களும் இயக்கங்களும் இடைவிடாது நடைபெறுகின்றன. வர்க்க வேறுபாட்டினால் நிகழும் அத்தகைய சூழலில் வாழும் எழுத்தாளர்களிடையே மூன்று வகை நிலைப்பாடுகள் காணப்படுவதை உற்றுநோக்கி வெளிப்படுத்துகிறார்: (1) பிரச்சினைகள், முரண்பாடுகள், துன்ப துயரங்கள் போன்றவற்றை எதிர்நோக்காதவராக, அவற்றுடன் சம்பந்தப்படாமல், “ எனது குறிக்கோள் மக்களை மகிழ்விப்பது ஒன்றே என்னும் நிலைப்பாட்டினராக்க் கற்பனைச் சம்பவங்களையும், கதைகளையும், உணர்ச்சிகளையும் இலக்கியமாக்குபவர். (2) சமூகப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்காமல், மானசீக உலகில் இருந்துகொண்டு, எழுதுவோர் மற்றொரு பிரிவினர். (3) சமுதாயத்தை நுணுக்கமாகப் பிரதிபலிப்பது மட்டுமன்றி, அதனை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபடுவதுடன், அது வெற்றி பெறுவதற்குரிய மாற்றங்களை இலக்கியப் பொருளாக ஏற்றுக் கொண்டு எழுதுவோர்.ஒரு பிரிவினர் ஆவர். இக்கொள்கைக்கு இணக்கமானவர்களாக ஒருசில எழுத்தாளர்கள், கவிஞர்களை நோக்கும் கைலாசபதி, அவர்தம் நாவல்கள், புதுக்கவிதைப் படைப்புகள் என்பன சாதகமாக விளங்குமாற்றை அனுமானிக்கிறார்.
ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியச் சூழலையும் அதன் பின்புலமாக இருந்த எழுத்தாளர்கள், வாசகர்கள், வெளியீட்டாளர்கள், நாவல் முதலிய படைப்புகள் ஆகியவற்றையும் அடியொற்றி, இலக்கியச் சமூகவியலின் அணுகுமுறைகளைக் கையாண்டு,பேராசிரியர் கைலாசபதி மேற்கொண்ட ஆய்வானது, தமிழ் ஆய்வுலகில் தனித்துவம் மிக்கதாகத் தோன்றுகிறது. இன்றைய தமிழ்ச் சமூக, பண்பாட்டுச் சூழலின் பின்புலத்தில் இலக்கியப் படைப்புகளையும் அவற்றை வாசிக்கும் வாசகர் எதிர்வினைகளையும் புரவலர் ஆதரவையும் ஒருங்கிணைத்து ஆராய்வதற்கு, தனது சமகாலத்திய வளர்ச்சிப் போக்கோடு கூடிய இலக்கியச் சமூகவியல் மிகவும் இன்றியமையாதது.
ஆதாரங்கள்
கைலாசபதி,க. 2002: சமூகவியலும் இலக்கியமும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்
கைலாசபதி,க. 1999: பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்
தனஞ்செயன்,ஆ. 2024: விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் இனவரைவியல் ஆய்வு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்
Diana Laurenson and Alan Swingewood, 1971: The Sociology of Literature New York : Schocken Books
Kathleen Gough,1967: “ Anthropology and Imperialism”,The Economic and Political Weekly, Bombay
Kotak, 1991: Cultural Anthropology, New York: McGRaW- HILL,INC
- முனைவர் ஆ.தனஞ்செயன்