கருங்கல்லின் மீது வரையப்பட்ட பழங்குடி மக்களின் ஓவியங்களைப் போல, காலத்தால் அழிக்க முடியாத வகையில் தலித் எழுத்துகளை மாற்றுவது – அவ்விலக்கியங்களின் மீது நடத்தப்படும் ஆய்வுக் கூறுகளே. ஆய்வுகள், இலக்கியத்தை அழியாமல் காக்கின்றன என்ற நிலையிலிருந்து உயர்ந்து, அவற்றைச் செழுமைப்படுத்தவும் பயன்படுகின்றன. அது மட்டுமல்ல, இலக்கியங்களைப் பாடத்திட்டமாக மாற்றும் வல்லமை ஆய்வுகளுக்கே உண்டு. அத்தகைய ஆய்வுகளை ஊக்கப்படுத்தி, தலித் எழுத்துகளின் மீது நடத்தப்படுவதற்கும், தானே ஆய்வாளராக இருந்து வரலாறுகளை எடுத்துத் தருவதற்கும் – தன் நேரம் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் பேராசிரியர் க. ஜெயபாலன்.

Jeyabaalan_221சென்னை நந்தனம் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியாற்றும் ஜெயபாலன், நுண்ணிய ஆய்வுகளை அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர் போன்ற ஆளுமைகளைக் கடந்தும் நடத்திக் கொண்டிருப்பவர். புகழின் வெளிச்சத்திற்கு வராத முக்கிய தலித் எழுத்தாளர்களைப் பற்றி ஆய்வு செய்து, அவர்களின் எழுத்துகளை வெளியிட்டுக் கொண்டிருப்பவர் ஜெயபாலன். அண்மையில் பூங்குயில் வெளியீடாக வெளிவந்திருக்கும் "மாமதுர கவிஞர் வீ.வே. முருகேச பாகவதர் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களும் கவிதைகளும்' நூலை அவ்வாறான தொகுப்பாக நாம் கருதலாம்.

முருகேச பாகவதரின் இலக்கியப் பங்களிப்பு, அவர் தலித் என்பதால், கடந்த நூற்றாண்டில் கண்டு கொள்ளப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் பொறுப்பை நிறைவேற்றியிருப்பவர் ஜெயபாலன்.

பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டிய காலப்பழமையும், கவிதை வளமும் வாய்ந்த வர் முருகேச பாகவதர். அடித்தள மக்களின் உணர்வுகளைத் தம்முடைய பாடல்களில் கொண்டு வந்தவர் அவர். "செட்யூல்டு காஸ்ட் பெடரேஷனில்' பணியாற்றியவர். அவரின் "தமிழமுதம்' என்ற நூல் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இப்படி முருகேச பாகவதரின் ஆளுமையை இக்காலகட்டத்தில் தந்தது, ஜெயபாலனின் அதி யுழைப்பும் அறிவுத் தேடலும்தான்!

தன் நேரத்தையும் திறனையும் சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக எப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் க. ஜெயபாலன், விழுப்புரம் மாவட்டம் ஆத்திப்பட்டில் பிறந்தவர். மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரியில் பி.லிட். பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழும் படித்தவர். இத்தகைய கல்விப் பின்புலம்தான் அவரை ஆய்வாளர்களை உருவாக்கும் ஆய்வாளராக மாற்றியிருக்கிறது.

சென்னை திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான பட்டயப் படிப்பையும் முடித்திருக்கிறார் ஜெயபாலன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அவரின் "மண்வாசனையும் திரைக்கலையும்' என்னும் முதல் நூல் வெளிவந்திருக்கிறது. இவர் இயக்கிய குறும்படம் "தண்ணீர் தேசம்'. தண்ணீர் குடிப்பதற்கு மறுக்கப்பட்ட ஒரு பெண் அந்தத் தண்ணீரிலேயே விழுந்து செத்துவிடுவது அப்படத்தின் கரு. தன்னுடைய மரணத்திற்குப் பிறகாவது மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என அப்பெண், நீர் உரிமைக்காகப் போராடிய எத்தனையோ தலித்துகளின் பிரதிநிதியாக உருவாக்கப்பட்டவர்.

பேராசிரியர் ஜெயபாலன் இதுவரை பத்து நூல்களை எழுதியுள்ளார். இலக்கியம், ஊடகம், சமூகம் ஆகிய துறைகளில் தம்முடைய ஆய்வுகளைச் செய்து வரும் இவர், தன்னிடம் ஆய்வுக்காக வரும் மாணாக்கர்களுக்கு தலித் எழுத்துகளைப் பரிந்துரை செய்கிறார். அது மட்டுமல்ல, ஆய்வு மாணவர்கள் கேட்டிராத எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் நூல்களையும் அளித்து தலித் எழுத்துகளின் மீது ஆய்வுகள் நடத்தப்படுவதற்கு – மிகவும் உந்துதலாக இருந்துவரும் பேராசிரியர் இவர்.

"பாபாசாகேப் அம்பேத்கர் காட்டும் பவுத்தம்' என்ற அவருடைய நூல் அளவில் சிறியதாக இருந்தாலும் குறிப்பிடத்தகுந்தது. பவுத்தம் குறித்த சரியான புரிதல் இன்றைக்கு தலித்துகளுக்கு இல்லாத சூழலில், இச்சிறு நூல் புரிதலை ஏற்படுத்துகிறது. போதிசத்துவர் அம்பேத்கர் பவுத்த சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரையின் நூல் வடிவமே இது.

தமிழகத்தில் சிலர் சைவமே தமிழர் நெறி என்றும், சிலர் வைணவமே தமிழர் நெறி என்றும், சிலர் தொன்மைக்கால நெறிகளே தமிழர் நெறி என்றும் பேசக் காண்கிறோம். ஆனால், அயோத்திதாசரோ பவுத்த நெறியே தமிழர் நெறி என்று காணுகிறார். அம்பேத்கரும் அதையே கூறுகிறார். இக் கருத்தியலுக்கு தமிழின் தொன்மையான இலக்கியங்களிலிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் நிறைய தரவுகளை அவர் தரும் பாங்கு சிறப்பானது.

அடித்தள மக்களின் பங்களிப்பை அறிவுத்தளத்தில் முன்னெடுத்துவரும் பயணத்தில், இப் படிப்பட்ட பணிகள் மிகவும் அவசியமாகின்றன. தமிழகத்தில் அத்தகைய அரும் பணிகளையாற்றி பவுத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பண்டிதர் பெரியசாமிப் புலவர், அப்பாதுரையார், அய்யாக்கண்ணு புலவர், பேராசிரியர் எஸ். பெருமாள் ஆகியோரின் பணி களும் வரலாறுகளும் எழுதப்பட வேண்டும் என்கிறார் ஜெயபாலன்.

அப்படி அவை பதிவாகும்போது, அவை சமூக வரலாறுகளாக மாறும். அது மட்டுமல்ல, தமிழகத்தில் பவுத்தப் பணியாற்றிய கர்னல் ஆல்காட், லட்சுமி நரசு உள்ளிட்டோரின் ஆக்கங்களும், செயல்பாடுகளும் விரிவான பதிவுகளாக்கப்பட வேண்டும். அதற்காக நாம் அயராது உழைக்க வேண்டும் என்று கூறும் க. ஜெயபாலனின் அக எழுச்சி, சமூக விடுதலையை எப்போதும் தாங்கி நிற்கக் கூடியது.

இவர்கள் மீதான ஆய்வுகளால் என்ன பயன் கிடைக்கும் என்று அவரிடம் கேட்டதற்கு, அறிவுத்தளத்தில் நாம் செய்யும் இப்பணிகள் – சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். மேலும், ஒட்டுமொத்த சமூகத்திற்கு அது புத்துணர்ச்சியை கொண்டு வரும் என்று நம்பிக்கை தெறிக்க பேசினார்.

அவருடைய முனைவர் பட்ட ஆய்வுப் பொருளான கதைப்பாடல்கள் திரைப்படங்கள் என்ற தலைப்பில் – மதுரைவீரன், காத்தவராயன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜா தேசிங்கு போன்ற திரைப்படங்களையும், அதன் மூலம் சமூகத்தின் அடித்தள மக்கள் எவ்வாறு ஆதிக்க வம்சத்தை எதிர்த்துப் போரிட்டார்கள் என்பதையும் குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.

சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு, சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்ட மாந்தர்கள் குறித்த கதைப் பாடல்களும் அவருடைய ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்கின்றன. இதைப் பார்க்கும்போது, ஜெயபாலன் போன்ற சமூக அக்கறையுள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வியல் சார்ந்த அணுகுமுறைகளிலும் சமூகத்தை முன்வைத்தே இயங்குகின்றனர் என்பது மிகவும் தெளிவாகப் புலப்படுகிறது.

பண்டிதர் அயோத்தி தாசர் குறித்த ஆய்வுகளை மாணவர்களிடம் வலியுறுத்தி செய்யத் தூண்டுவது, ஜெயபாலன் அவர்களின் செயல்பாடாக இருக்கிறது. கர்னல் ஆல்காட் அவர்கள் எழுதிய "பவுத்த வினா விடை' என்னும் நூல், 1881 முதல் 1906 வரை முப்பது பதிப்புகளைக் கண்டிருக்கிறது. அதை மீண்டும் பதிப்பிக்க வேண்டும் என்பது, அவருடைய நெடுநாள் ஆவல். தற்பொழுது இயங்கி வரும் நவீன இலக்கியவாதிகளில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்களும் பவுத்தம் குறித்து பேசுவதும் எழுதுவதுமாக இருக்கிறார்கள். இச்சூழலில் பவுத்த மறுமலர்ச்சிக்கான நூல்களை வெளியிடுவதும், அவற்றைப் பரப்புவதும் தலித் அறிவுலகத்தின் தலையாயப் பணி.

"ஜனநாயகம் என்றால் என்ன?' என்ற தலைப்பில் புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய எட்டு உரைகளை யும் தொகுத்து நூலாக்குவதும், அயோத்திதாசரின் "சுதேச சீர்திருத்தம்' என்ற கட்டுரையை –குறுநூலாகக் கொண்டு வருவதும் அவருடைய அடுத்த கட்டப் பணிகள்.

தலித் இலக்கியம் நவீன சூழலில் எழுதப்பட வேண்டும் என்பதும், இன்னும் அதிகமான இலக்கிய ஆளுமைகள் உருவாக வேண்டும் என்பதும் அவருடைய எண்ணம். தலித் அரசியல் பகட்டு அரசியலாக இல்லாமல், அது அம்பேத்கரை உள்வாங்கியதாக இருக்க வேண்டும். அதற்காக புலே, அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார் ஆகியோரை ஆழமாக வாசிக்க வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம்.

சாதிய மோதல்கள் மத ரீதியான மோதல்கள் அழிய வேண்டும் என்றால் அல்லது ஏற்றத்தாழ்வுகளற்ற இந்தியச் சமூகம் அமைய வேண்டும் என்றால், இந்தியாவின் மார்க்சியமாக அம்பேத்கரியலை அறிவிக்க வேண்டும் என்பது பேராசிரியர் க. ஜெயபாலன் அவர்களின் உறுதியான கருத்து.

பல்வேறு இதழ்களில் இடையறாமல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் ஜெயபாலன் சிறந்த உரையாளர். அம்பேத்கரியலையும், பவுத்தத்தையும் ஓயாமல் பரப்பும் ஆற்றலாளர். தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கும் அவர் – ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியின் தன்மையுடையவர்.

– யாழன்ஆதி

க. ஜெயபாலனை தொடர்பு கொள்ள : 90030 56091

Pin It