சென்னையைவிட்டு வெளியேறுவது என்பதே எப்போதும் பெரும்பாடாகிவிடுகிறது, எப்போதாவது வெளியூருக்கு வாகனத்தில் புறப்படுவதாக இருந்தால். `இந்த நேரத்திலிருந்து இந்த நேரத்துக்குள் புறப்பட்டால், இவ்வளவு நேரத்தில் நகரைவிட்டு வெளியேறிவிடலாம், இல்லாவிட்டால், அவ்வளவுதான், சிக்கிக்கொண்டு விடுவீர்கள்’ என எப்போதுமே எச்சரிக்கைக் குரல்கள். ஒருவேளை கோயம்பேட்டுக்குச் சென்று பேருந்தைப் பிடிப்பதாக இருந்தால் அது அதைவிடவும் கொடுமை. 

அப்படி இப்படியென ஒரு நல்ல தருணத்தில் புறப்பட்டதாலும் ஏற்கெனவே மாநகருக்குச் சற்று ஒதுங்கி அலுவலகம் அமைந்திருப்பதால் காலையிலேயே பாதி நெரிசலைக் கடந்துவிட்டதாலும் இந்த முறை சென்னையை விட்டு, ஸ்ரீபெரும்புதூரையும் சேர்த்துதான், எளிதாகவே வெளியேறிவிட முடிந்தது. வெளியேறியபின்னர்தான் நன்றாக மூச்சுவிட முடிந்ததுபோல ஓர் உணர்வு.

அது ஒரு ஏசி கார். ஒருகாலத்தில் ஏசி கார் என்றாலே வியந்து பார்ப்பார்கள். அவ்வளவு அபூர்வம். ஏசி என்று பின்புறம் எழுதியிருக்கும், `நோ ஹேண்ட் சிக்னல்’ என்றும் குறிப்பிட்டிருக்கும். எரிபொருள் கூடுதலாகச் செலவாகும் என்பதால் பெரும் பணக்காரர் களைத் தவிர யாரும் அப்போது ஏசி கார்களை வாங்கு வதில்லை. கண்ணாடிகளை இறக்கிவிட்டுத் தலைமுடி கலையப் பயணம் முடித்துத் திரும்புவதே ஒரு சுகம். ஆனால், இப்போது ஏசி இல்லாமல் ஒரு காரை நினைத்தும் பார்க்க முடியாது. சென்னையில் ஏசி இல்லாத ஒரு காரில் கண்ணாடிகளை இறக்கிவிட்டு ஒரு சுற்றுவந்தால் அடையாளம் தெரியாமல் போய் விடுவீர்கள், அவ்வளவு புகை, தூசு. 

வண்டியை ஸ்டார்ட் செய்ததுமே அல்லது ஸ்டார்ட் செய்யுமுன்னரே ஏசியைப் போட்டுவிட்டால் அவ்வளவுதான், எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் என்றாலும் சரி, திரும்பிவந்து இறங்கும்போது தான் ஏசி நிறுத்தப்படுகிறது. எந்த இடத்திலும் அந்தந்த ஊர்க் காற்றைச் சுவாசிக்க முடிவதில்லை. எல்லாமே ஏசியின் குளிர்ந்த காற்றுதான். (எப்போதாவது எக்குத்தப் பாக கால் டாக்சியில் செல்ல நேரிடும்போது, உடன் வரும் நண்பர்கள், `அய்யய்யோ, ஏசி இல்லையா, செத்தம்டா சாமி’, என்று கூறக் கேட்டிருக்கிறேன். இவர்களுக்கு எல்லாம் ஏசி கண்ணாடிக் கூண்டு செய்து (சவப்பெட்டி மாதிரி?) நிரந்தரமாகவே மாட்டிவிட்டு விட வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.)

இந்தப் பயணத்தில் என்னாலும் ஏசியை ஒரே யடியாகப் புறக்கணித்துவிட முடியவில்லை. எனக்கு வேண்டுமானால் தேவைப்படாமல் இருக்கலாம். உடனிருந்த நண்பர்களுக்கு? 

கண்ணாடிகளை இறக்கிவிடுங்கள் என்ற போதெல்லாம் `சார், வேண்டாம், இந்த வேகத்தில் (140 கி.மீ.) காற்று பயங்கரமாக வீசும், உள்ளே படபடக்கும், காரின் வேகமும் மட்டுப்படும்’ என்று கூறிக்கொண்டே வந்தார் ஓட்டுநர் காசி. `பரவாயில்லை, சற்று மெதுவாகவே செல்லலாம், அத்தனை வேகம் சென்று ஆகப் போவ தொன்றுமில்லை’ என்று கூறியே பயணம் முழுவதும் பல இடங்களில், வெளியே வேடிக்கை பார்க்கவும் அந்தந்தப் பகுதியின் அற்புதமான காற்றை அப்படியே சுவாசிக்கவும் கண்ணாடிகளைக் கீழிறக்கச் செய்து விட்டேன். நண்பர்கள் என்ன நினைத்தார்களோ? 

ஆனால், காற்றுக்கும் ஒரு மணம் உண்டு. இப்போதும் கூட கண்டுபிடிக்க முடியும், கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டுப் பயணம் செய்தால். கூமாபட்டி, பாபநாசம், குற்றாலம், கூட்டாத்து அய்யம்பாளையம், குடியாத்தம்... எங்கே சென்றாலும் கண்ணைக் கட்டி இறக்கிவிட்டாலும் கண்டுபிடித்துவிட முடியும் எந்த ஊர் என்று, எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும். மதுரையி லிருந்து சென்றால் ஈரோட்டுக்குள் நுழையும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாசி எரியத் தொடங்கிவிடும். சென்னையிலேயே தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை மின்சார ரயிலில் செல்லும்போது கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் எந்தெந்த இடத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம் என எளிதாகக் கூறிவிட முடியும். எல்லாம் மணம். நல்லதோ, நாற்றமோ, காற்றின் மணம்! 

காஞ்சிபுரம் செல்ல ஏதோவோரிடத்தில் இடது புறம் பிரிய வேண்டும். இரு கூறாக நீண்டுகிடந்த சாலையில் ஒருவேளை சரியான இடத்தில் பிரியத் தவறினால் மூன்று, நான்கு கிலோ மீட்டர் சென்ற பிறகுதான் `யு டர்ன்’ அடித்துத் திரும்பிச் சுற்றிவர வேண்டும். எச்சரிக்கையாகக் கவனித்துக்கொண்டே சென்றதால் தப்பிவிட்டோம். நல்லவேளை. 

காஞ்சிபுரத்துக்குள் நுழைந்தபோது எனக்குதான் ஆறாம் நூற்றாண்டு காலப் பல்லவர் பெருமைகளும் சாதனைகளும் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. சில வாரங்களுக்கு முன்னர்தான் அறிஞர் இராசமாணிக் கனாரின் தமிழக வரலாற்றை மீண்டும் வாசித்திருந்தேன். ஊருக்குள் யாருக்கும் அவற்றைப் பற்றியெல்லாம் அக்கறையோ பெருமிதமோ இருப்பதாகத் தோன்ற வில்லை. ஏழாம் அறிவைப் பார்த்திருப்பவர்கள் ஒரு வேளை நினைத்துக் கொள்வார்களோ என்னவோ? 

ஒரு சங்கிலித் தொடர் ஹோட்டலுக்குள் சாப்பிட நுழைந்தபோது சென்னையில் அவர்கள் ஹோட்டலில் எப்படி ஒவ்வொன்றும் சுவைக்குமோ அப்படித்தான் அத்தனையும் சுவைத்தன. வித்தியாசமாக எதுவும் தெரிய வில்லை. முன்பெல்லாம் உணவு வகைகளில் ஊருக்கு ஒரு சுவை இருக்கும். காஞ்சிபுரத்துக்கென ஒரு தனிச்சுவை இருக்கத்தானே வேண்டும்? சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நண்பர் சோமுவின் திருமணத்துக்காகக் காஞ்சிபுரம் வந்திருந்தபோது ஏதோ ஹோட்டலில் சாப்பிட்ட நினைவு, சுவையும் வேறு ஏதோதான். ஒருவேளை மாவட்டத் திற்குள் நகரத்தின் வாசனையை இன்னமும் உள்வாங்கிக் கொள்ளாத ஏதேனும் ஒரு கிராமத்தில் அப்படியரு சுவை இருக்கலாம். இப்போதெல்லாம் எல்லா நகர்களுமே இப்படித்தான் ஆகிவிட்டன. ஒரே மாதிரி குழம்பு, ஒரே மாதிரி பொரியல், கூட்டு, ஒரே மாதிரி சிற்றுண்டிகள். எல்லாம் உலகமயம்! 

தண்ணீர்க் கதையும்கூட இதேமாதிரிதான் ஆகி விட்டது. அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. அப்போது வடார்க்காடு மாவட்டத்திலுள்ள குடியாத்தம் ரயில் நிலையத்தில் அப்பா வேலை பார்த்துக்கொண்டிருந்தார். விடுமுறை விடும்போதெல்லாம் மதுரைக்குச் செல் வோம், எல்லாம் ரயிலில்தான். பயணத்தில் எப்போதும் தண்ணீர் கொண்டு செல்ல கூஜாக்கள்தான். தொடக்கத்தில் பித்தளையாக இருந்த அவை, பின்னர் எவர்சில்வராக மாறின. எந்த ரயில் நிலையத்தில் அதிக நேரம் நிற்குமோ, பல நேரங்களில் எதிரே வரும் ரயிலுக்கு வழி விடு வதற்காகவும் நிற்கும், அந்த நிலையத்தில் இறங்கிச் சென்று கூஜாக்களில் தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும்.

அப்போதெல்லாம் பாட்டில்கள் எல்லாம் கூடக் கிடையாது, பிறகுதான் கண்ணாடி பாட்டில்கள் வந்தன, பெரும்பாலும் காலி மது பாட்டில்கள், அதுவும் எல்லாருக்கும் கிடைக்காது. பிளாஸ்டிக் பாட்டில்கள். பின்னர்தான் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்க வேண்டி வந்துவிட்டது. ஆனால், அன்றைக்கு பாட்டில் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டோம். இப்போது நினைத்தும் பார்க்காத என்னென்னவெல்லாம் எதிர் காலத்தில் நடக்கப் போகிறதோ தெரியவில்லை. 

ரயில் நிலையங்களில் பிடிக்கும் தண்ணீரிலேயே சுவை வித்தியாசம் தெரியும். பாலாற்றுத் தண்ணீர் ஒரு சுவையாக இருக்கும். திருவண்ணாமலையில் ஒரு சுவை. விழுப்புரத்தில் ஒரு சுவை. திருச்சிப் பக்கம் காவிரித் தண்ணீருக்கெனத் தனியரு சுவை. மதுரையில் வைகைத் தண்ணீர் சுவை. திருநெல்வேலிக்குச் சென்றால் ஒரு சுவை, பாபநாசத்தில், நாகர்கோவிலில், திருச் செந்தூரில், திருவனந்தபுரத்தில்... ஊருக்கு ஒரு சுவை. ஆனால், இப்போது தண்ணீரெல்லாம் ஒரே சுவை, எங்கே போய்க் குடித்தாலும். ஏனென்றால் எல்லா இடத்திலும் கேன் தண்ணீர்தான், அல்லது அடைக்கப் பட்ட பிராண்டட் பாட்டில் தண்ணீர். என்ன சுவை யென்றே எவராலும் கூறிவிட முடியாது. 

கிருஷ்ணகிரியில் ஹோட்டல் அறைக்குச் சென்றதும் குடிக்கத் தண்ணீர் கேட்டபோது, நண்பர் ஒரு பாட்டிலைத்தான் வாங்கிக் கொண்டுவந்தார். `ஏங்க, நான் கிருஷ்ணகிரித் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்றேன். `சார், அதெல்லாம் கஷ்டம் சார், நல்லா இருக்காது, வேண்டாம்’ என்றார். `இங்கே மக்கள் எந்தத் தண்ணீரைக் குடிக்கிறார்கள்’ என்றபோது பெரும்பாலும் கேன் வாட்டர் என்பதுதான் பதிலாக இருந்தது. நான் கட்டாயப்படுத்தி வாங்கி கிருஷ்ணகிரித் தண்ணீரைக் குடித்துப் பார்த்துவிட்டேன். ஏதாவது சாப்பாட்டுக் கடைக்குச் சென்றால் உள்ளூர்த் தண்ணீரைக் குடித்துப் பார்க்கலாம். ஆனால், அந்தத் தண்ணீரை அவர்கள் பிடித்து வருவதையும் கையாளும் விதத்தையும் நினைத்தால் முடிவதில்லை. காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக நாங்கள் இரண்டு பெரிய தண்ணீர் கேன்களைத் தூக்கி காரில் போட்டுவைத்திருந்தோம். ஊரெல்லாம் சுற்றிவந்தபோதும் சென்னைத் தண்ணீர்தான். 

காஞ்சிபுரத்தில் வேலை முடிந்ததும் வேலூரை நோக்கி வெளியேறும் வழியில் ஒரு பெரிய தெப்பக் குளம். `இது எந்தக் கோவில் குளம்?’ என்று கேட்ட போது, `இல்லை, இது வெறும் குளம் மட்டும்தான்’ என்றார் நண்பர். `கோவில் இல்லாமல் குளமா?’ என்று வியப்பைக் கேள்வியாக்கியபோது, `இல்லை, அருகே ஒரு மயானம் இருக்கிறது, மரணம் தொடர்பான சாத்திரம் சம்பிரதாயங்களை இங்கே செய்வார்கள்’ என்றார்.

அங்கே ஏதேனும் கோவில் இருக்கிறதா என்றதும் மிகுந்த யோசனைக்குப் பிறகு, `மயானத்துக்குள் சின்னதாக அரிச்சந்திரன் கோவிலொன்று இருக்கிறது’ என்றார் நண்பர். நல்ல இடம், நல்ல கோவில். இதற்குப் பின்னால் உறுதியாக ஏதேனுமொரு கதை அல்லது வரலாறு இருக்கும், அவசரமில்லாமல் வரும்போது விசாரித்துப் பார்க்க வேண்டும். ஆனால், இன்னோர் அரிச்சந்திரனின் கதை நினைவுக்கு வந்தது. புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினிகாந்தும் சிவகுமாரும் ரெடிமேட் துணிகளை விற்பார்கள். நியாயமான லாபம் வைத்து உண்மையான விலை சொல்லும் ரஜினியின் துணிகள் விற்பதில்லை. 

பொய்களைப் பிரமாதப்படுத்தி சிவகுமார் மட்டும் நல்ல லாபத்துக்கு துணிகளை விற்றுவிடுவார். இதுபற்றிப் பின்னர் இருவரும் பேசிக்கொள்ளும்போது, ரஜினியிடம் சிவகுமார் கூறுவார்: `முதலில் ஒன்றைத் தெரிந்துகொள். அரிச்சந்திரன் கதையை நமக்கெல்லாம் எதற்காகப் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள் என நன்றாகப் புரிந்து கொள். அரிச்சந்திரனைப் போல முட்டாள்தனமாக எப்போதும் உண்மையையே பேசிக்கொண்டிருந்தால் முன்னேற முடியாது, அவனைப் போலவே மனைவி, குடும்பத்தையெல்லாம் இழந்து மயானத்தில் வெட்டி யான் வேலைக்குத்தான் போக வேண்டும் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான். எப்போதோ பார்த்த கறுப்பு வெள்ளைப் படம். ஆனால், இந்த வசனம் மட்டும் இப்போதும்கூட பல தருணங்களில் மனதுக்குள் மறு ஒலிபரப்பாகிச் சிரித்துக் கொண்டிருக்கும். 

வேலூரை நோக்கி. சாலை பெரிதாகி, வகிடெடுத் தாற்போலப் பிரிந்திருக்கிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். இங்கே யாருடைய கொண்டாட்டத்துக்காகவோ இரண்டு பட்டுக் கிடக்கிறது. நான்கு வழிச்சாலை, தேசியமோ, மாநிலமோ, தெரியவில்லை, நாடு போக்குவரத்தில் முன்னேறி விட்டதாகப் பறையறிவித்துக் கொண்டிருக்கிறது.

ஒருகாலத்தில் ரோட்டு மேல வீடு என்று பெருமை யாகப் பேசுவார்கள். ஆனால், பாவம், இப்போது அவர்கள் எல்லாம் அகலமான சாலைகளுக்காக வீடுகளைக் காலிசெய்துவிட்டு, கொடுத்த காசை வாங்கிக் கொண்டு ஊர்களுக்கு ஒதுக்குப்புறமாகச் சென்று விட்டார்கள். அரசாங்கம் கொடுக்கிற இழப்பீட்டில் அடுத்த தெருவிலா வீடு வாங்க முடியும்? 

இந்த நான்குவழிச் சாலை கொஞ்சம் பழையது. ஊர்களுக்கு நடுவே சாலை செல்லும். இந்தப் பக்க மிருந்து அந்தப் பக்கம் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், ஊர் மக்கள் அடிக்கடி சாலையைக் கடந்து வாகனங்களின் வேகத்தை மட்டுப்படுத்தி விடுகிறார்கள் என்கிற கரிசனத்தில் இப்போது இப்படியாகப்பட்ட இடங்களில் எல்லாம் சாலையை மேலுயர்த்திப் பாலங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் புதிதாக அமைக்கப் பட்ட சாலைகளில் எல்லாம் ஊருக்குள் போகும்போது சாலை உயரே போய்விடும், ஊருக்கு நடுவே மட்டும் ஊர்க்கார வாகனங்களும் மக்களும் கடந்துசெல்ல ஒரு கீழ்ப்பாலம். பாலத்தின் இருபுறமும் சீன மதிலைப் போல சுவர்கள். அது வடக்கு ஊர், இது தெற்கு ஊர். இனி நெடுஞ்சாலைகளிலுள்ள பல ஊர்கள், வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு என்றாகிவிடும்.

கிருஷ்ணகிரியில் நகரின் முக்கியமான பகுதியில் வானத்தில் செல்வதைப் போலப் பாலச் சாலை. அவர்கள் எல்லாரும் பெங்களூரு செல்பவர்களாம். வேகம் குறையக் கூடாது, கிருஷ்ணகிரி மக்களின் முகத்திலும் விழிக்கக் கூடாது, நல்ல யோசனை!

இவையெல்லாம் புறவழிச் சாலை அமைக்க முடியாத இடங்களில். இல்லாவிட்டால் ஊரின் முகத்திலேயே விழிக்காமலேயே சென்றுவிடலாம். ஊருக்கு வேண்டியவர்கள் மட்டும், தேவைப்பட்டால் சில கிலோ மீட்டர் கடந்து ஊருக்குள் செல்லலாம். ம். ஊருக்கு ஒரு தின்பண்டம் இருக்கும். சாத்தூரில் இனிப்புச் சேவு, கோவில்பட்டியில் காராச்சேவு, மணப் பாறையில் முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, பண்ருட்டியில் பலாப்பழம், ஆம்பூரில் பிரியாணி... இப்போதெல்லாம் இந்தப் புற(க்கணிப்புச்)வழிச் சாலை செல்வோர் யாரும் இவற்றின் சுவையை ஒருபோதும் அறியப் போவதில்லை.

ஆம்பூர் பிரியாணி. எல்லாருக்கும் மறக்க முடியாதது ஆம்பூர் பிரியாணி என்றால் எனக்குத் தயிர்ச் சோறு. ஒரு முறை இதே தடத்தில் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்காகக் காரில் சென்றுகொண்டிருந்தோம். மதியச் சாப்பாட்டுக்கு வேலூர் போய்விடலாம் எனத் திட்டம். ஆனால், தாமத மாகிக் கொண்டிருந்தது. பகல் 2 மணிக்கு மேலிருக்கும். நண்பர் ஒருவரைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்ட போது, நகருக்குள் நுழைவதற்கு முன்னரே இடதுபுறத்தில் ஒரு நல்ல ஹோட்டல் இருப்பதாகச் சொன்னார். நாங்களும் பசியோடு திரும்பினால், அது ஏதோ ஸ்டார் ரேஞ்சிலுள்ள ஹோட்டல் போல. எனக்கும் ஸ்டார் ஹோட்டல்களுக்கும் ஏழாம் பொருத்தம். `ஏங்க, சாப்பிடாத சாப்பாட்டுக்கு எதற்காகக் காசை அழ வேண்டும், வேண்டாம், திரும்புங்கள் வேறு ஹோட்டலுக்குச் சென்றுவிடலாம்’ என்று கூறிவிட்டேன். உடன் வந்த சபாவும் சரவணனும்கூட `அதுவும் நல்லதுதான், இன்னும் ஒரு மணிநேரம்கூட ஆகாது, ஆம்பூர் போய் விடலாம், பிரியாணி சாப்பிடலாம்’ என்று கூறினார்கள்.

நான் இறைச்சி உண்பதில்லை என்றாலும் அவர் களேனும் நல்ல சாப்பாடு சாப்பிடலாமே என்று புறப்பட்டோம். ஆம்பூருக்குச் சென்றபோது 3.30 மணிக்கு மேலிருக்கும். இவர்கள் தேடிச் சென்ற பிரபல கடையில் மட்டுமல்ல, சாதாரண பிரியாணிக் கடைகளில் கூட வட்டத்தைக் கழுவிக் கவிழ்த்துவிட்டார்கள். நண்பர்கள் எல்லாம் ஒரு பாடாவதி ஹோட்டலில் பாடாவதியான (4 மணிக்கு எப்படி இருக்கும்?) சைவச் சாப்பாட்டைச் சாப்பிட்டு, (காலில் சிக்கல் என்பதால் நடக்க முடியாமல் காரிலேயே இருந்த) எனக்காகத் தயிர்ச் சோற்றுப் பொட்டலமும் அதிகாலையில் தயார் செய்யப்பட்டிருந்த உளுந்து வடையும் வாங்கி வந்தார்கள். வேறு வழி? ஏதோவொரு காலகட்டத்தில் தொடர்ச்சியாக இதே தயிர்ச் சோறு - உளுந்துவடை சாப்பிட்ட நினைவு இருக்கிறது, ஆனால், எப்போது என்று எவ்வளவோ யோசித்தும் நினைவுக்கு வரவில்லை.

கிருஷ்ணகிரிக்குள் நுழையும்போது பகல் மயங்கும் வேளை. பார்க்கும் இடமெல்லாம் பெருங்குன்றுகளும் மலைகளும் பச்சைத் தாவரங்களும், ஏதோ திரைச் சீலைகளில் ஓவியங்களைத் தீட்டிச் சுற்றிச் சுற்றித் தொங்க விட்டிருப்பதைப் போல. காரை நிறுத்தி ரசிக்க முடியவில்லை. முன்னும் பின்னும் அத்தனை வேகத்தில் வாகனங்கள், எங்கே செல்கிறார்களோ, எதற்காகச் செல்கிறார்களோ? 

மறுநாள் தர்மபுரி, சேலம் வழி நாமக்கல். வழியில் ராசிபுரத்தில் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தில் சுவாமி குருப்பிரகாசானந்த மகராஜ் அவர்களைச் சென்று சந்திக்க வேண்டும் என ஆவல். கடந்த ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அவர்களுடைய விற்பனை அரங்கில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சை பெற்றுத் தேறிவருவதாகத் தெரிவித்தார்கள்.

இறை நம்பிக்கையே இல்லாதிருந்த கால கட்டத்தில் சுவாமி சிதானந்தரின் `ஆன்மிக வாழ்க் கையில் புதிய தொடக்கம்’ என்ற நூலை நீங்கள்தான் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்று என்னிடம் நம்பித் தந்து ஊக்கு வித்தவர் சுவாமிகள். இமயமலை அடிவாரத்திலுள்ள சிவானந்த நகரில், தெய்வநெறிக் கழகத்தின் தலைமைச் செயலகத்தில் தங்கியுள்ள அன்பர்களுக்காக 30 நாள்கள் தொடர்ச்சியாக சுவாமி சிதானந்தர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு அது. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று கூறி, மொழிபெயர்க்க நான் தவிர்த்தபோது, `உங்களால் முடியும்’ என்று கூறி, கடுமையான ஒரு வெய்யில் காலத்தின் மதிய வேளையில், மதுரையில் விவேகாநந்தா அச்சகத்தில் என்னிடம் அந்த ஆங்கில நூலையும் குருப்பிரசாதம் என்று குறிப்பிட்டு உறையிலிட்ட நூறு ரூபாய் பணத்தையும் தந்தார். இன்னமும் பத்திரமாக என்னிடமிருக்கிறது அந்தப் பணம்.

மதுரையில் நண்பர்கள் குமரன், அசோக், சுந்தர் வைத்திருந்த பிரின்ட் ஷாப்பில்தான் ராசிபுரம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் வெளியிட்டுவந்த நூல்கள் அனைத்தும் அப்போது டைப்செட் செய்யப்படும். அலுவலக நேரம் தவிர்த்த பிற நேரங்களில் எல்லாம் அங்கேதான் இருப்பேன். எனவே, எல்லா நூல்களையும் பிழை திருத்தி ஒழுங்கு படுத்தும் வேலையை நான் செய்து தந்துவிடுவேன். எல்லாம் நட்புக்காகத்தான். சுவாமிகளிடம் நல்ல அறிமுகம். குறிப்பிட்ட ஆண்டில் வெளியிடத் திட்ட மிடப்பட்டிருந்த இந்த நூலை மொழிபெயர்ப்பதில் சற்றுச் சுணக்கம். அதை மொழிபெயர்த்துத் தருவதாக ஏற்றுக்கொண்டிருந்த நெல்லையைச் சேர்ந்த பேரா சிரியர் எல்.ஜானகிராமன் உடல் நலக் குறைவு காரண மாகச் சில நாள் உரைகளை மட்டும் மொழிபெயர்த்த நிலையில் அத்தனையையும் திருப்பி அனுப்பிவிட்டார். திட்டமிட்டபடி நூலை வெளியிட வேண்டிய நிலையில் தான் இந்த நூலை என்னிடம் தந்தார் சுவாமிகள், `இது இவ்வாறுதான் விதித்திருக்கிறது, எல்லாம் குருவின் அருள்’ என்று குறிப்பிட்டு.

பின்னர், நூலை அச்சுக்காக இறுதி செய்யும்போது, `என்னுடைய பெயர் வேண்டாம், திரு. ஜானகிராமன் பெயரிலேயே இருக்கட்டும்’ என்று கூறிவிட்டு நான் அலுவலகம் சென்றுவிட்டேன். அவருக்குத் தெரியாது. ஆனால், `ஜானகிராமன் பெயரும் வேண்டுமானால் இருக்கட்டும், ஆனால் பாண்டியராஜன் பெயர் அவசியம்’ என்று குறிப்பிட்டு நூலில் இடம் பெறச் செய்தவர் சுவாமி குருப்பிரகாசானந்த மகராஜ். இப்போதும் மொழிபெயர்ப்புப் பற்றிப் பேசும் ஒவ்வொரு நாளும் என்னுடைய ஸிணிஷிஹிவிணி-ஐ மேம் படுத்தும் தருணங்களிலும் சுவாமிகளை நினைக்காமல் இருந்ததில்லை.

சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில்தான் ராசிபுரம். சேலத்திலும் உறுதிப்படுத்திக்கொண்டேன். ஆனால், ராசிபுரத்தைக் காணாமலேயே நாமக்கல்லை நெருங்கிவிட்டாற்போலத் தோன்றியதும் நாமக்கல்லிலிருந்த நண்பர் சித்திக் அவர்களிடம், தொலைபேசியில் நாங்கள் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டுக் கேட்டபோது அதிர்ச்சி. நான்குவழிச் சாலைக்கு நானும் பலியாகிவிட்டிருந்தேன். வரும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடதுபுறம் திரும்பி உள்ளே சிறிதுதொலைவு சென்றிருக்கவேண்டு மாம். ம். இன்னொரு முறை எப்போது ராசிபுரம் செல்ல முடியுமோ? சுவாமிகளைச் சந்திக்கப் போகிறேனோ?

பிற்பகல். நாமக்கல்லில் நகருக்கேயுரிய வெக்கை. வேலை முடிந்ததும் திருச்செங்கோடு வழி ஈரோட்டுக்கு. நாமக்கல் என்றால் பலருக்கும் ஆஞ்சனேயர் நினைவுக்கு வருவார். எனக்குக் கூடவே பாடகர் யேசுதாஸம். அப் போது ஈரோட்டில் செய்தியாளர். நாமக்கல் ஆஞ்சனேயர் கோவில் குடமுழுக்காக இருக்கலாம். ஒரு நாள் இரவு பாடகர் யேசுதாஸின் கச்சேரி. ஈரோட்டிலிருந்து இரு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு பேருந்தில் நாமக்கல் வந்தேன், கச்சேரி கேட்க. கச்சேரி தொடங்கி விடப் போகிறதோ என்ற அவசரத்தில் பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வளாகத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்ற பதற்றத்தை இப்போதும் உணர முடிகிறது. கூட்டத்தில் சிலர், திரைப்படப் பாடல்கள் பாடுமாறு கேட்க, கறாராக மறுத்துவிட்ட துடன், மிகவும் கட்டாயப்படுத்தினால் கச்சேரியையே இத்துடன் முடித்துக்கொண்டுவிடுவேன் என்றும் எச்சரித்தார் யேசுதாஸ். அவருடைய சமரசமற்ற அணுகு முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிகாலையில் ஈரோடு திரும்பினோம். 

ஈரோடு வழியிலேயே திருச்செங்கோடு. மலை யுச்சிக்குச் செல்ல சாலை இருப்பதாகவும் காரிலேயே சென்றுவிட முடியும் என்றும் வழியில் ஒருவர் சொன்னார். அந்தக் காலத்தில் எத்தனையோ முறை இந்த ஊரைக் கடந்து சென்றிருந்தபோதும் கோவிலுக்குச் செல்ல முடியும் என்று தோன்றியதில்லை, செல்லவும் நினைத்த தில்லை. `காசி, காரில் மலையேறி விட முடியுமா?’ என்றபோது, `சார், நான் உதகை, கொடைக்கானல் எல்லாம் ஏறியிறங்கியிருக்கிறேன், அவசியம் சென்று வரலாம்’ என்று காரை மலையேற்றினார். காசியின் பக்தி வித்தியாசமானது. உடன் சென்ற எல்லாரும் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த பிறகும், தனியாக நின்று சாமியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் தான் வருவார் காசி. இத்தனைக்கும் மணமாகாத இளைஞர் இவர்.

திருச்செங்கோட்டு மலையின் மீது உயர உயரச் செல்லும்போது, ஏதோ எல்லாவற்றையும் விட்டு விலகி வெளியேறிச் செல்வதைப் போன்ற மனநிலை. மலையுச்சியி லிருந்து பார்த்தபோது வீடுகளெல்லாம் தீப்பெட்டி களாகவும் மனிதர்கள் எல்லாம் கண்ணுக்குக் கூட புலப்படாத அற்பப் பூச்சிகளாகவும் தென்பட்டார்கள். உயரும்போது எல்லாமே சாதாரணமாகி விடுகிறது.

ஈரோட்டில் நிறைய நண்பர்கள் காத்திருந்தனர். ஈரோடு, எனக்கு இன்னொரு சொந்த ஊர். மறுநாள் கோவை செல்லும் வழியில் பெருந்துறையில் முனீசுவரன் கோவிலிலுள்ள சிலைகளைப் படமடுக்க வாய்த்தது. 

‘90-களில் தினமணியில் பெரியார் மாவட்டச் சிறப்பிதழ் வெளியிட்டபோது, முதல் பக்கப் படம் இதுதான், தினமணிக்காக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த ஈரோடு நண்பர் ஆர். ரவிச்சந்திரன் எடுத்தது. பின்னாளில் அப்படியரு படத்தை எடுக்க முடியவில்லை. நிறைய வேல்களை வைத்துச் சிலைகளையே மறைத்து விட்டார்கள். இப்போது வேல்களை எடுத்துவிட்டு, ஒழுங்கமைத்திருக்கிறார்கள். நல்ல படங்கள். 

அடுத்தடுத்து கோவை, கரூர், திருச்சி, விழுப்புரம் வழி சென்னை. இந்த ஊர்களுக்கெல்லாம் ஏசி பேருந்திலேயே ஒருவர் சென்றிருந்தால்கூட இவ்வளவு பணம், டிக்கெட்டுக்காகச் செலவாகியிருக்காது, அவ்வளவு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்துக்கொண்டே வந்தோம், சுங்கச் சாவடிகளில். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படிப் பணம் கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறோம்? எப்போது இந்தக் கடன்கள் எல்லாம் கொடுத்து முடியப் போகிறது? ஒரு நாளில் தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் எவ்வளவு வசூலாகிறது? இவ்வளவு பணமும் யாரிடம் சென்று சேருகிறது? ஒவ்வோரிடத்திலும் நண்பர் ராம் குமார் பணத்தை அழும்போதும் இந்தக் கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன. கடைசியாகச் சென்னைக்குள் நுழைந்த பிறகும் ஓரிடத்தில் சுங்கக் கட்டணம் வசூலித்தார்கள், புறவழிச் சாலையாம்.

ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவு, ஐந்து நாள்கள் சென்றுவந்தபோதிலும் இரவுகளில் தங்கிய ஊர்களைத் தவிர வேறு எந்த ஊருடனும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நண்பர் ராஜேந்திரனைச் சந்தித்த போது மட்டும் வேலூரில் ஊருக்குள் இறங்கி நின்று தேநீர் அருந்தினோம். அவ்வளவுதான். மற்றபடி பல தருணங்களில் எந்த ஊரைக் கடக்கிறோம் என்பதைக் கூடத் தெரிந்துகொள்ள முடியவில்லை, எல்லாமே ராசியில்லாபுரங்களாகக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துபோய்விட்டன, எனக்கு அறிமுகமான பல ஊர்கள் உள்பட.

நெடுஞ்சாலைப் பயணத்தின் முடிவில் தோன்றியது - உண்மையில் நாம் முன்னேறித்தான் இருக்கிறோமா? இதுதான் முன்னேற்றம் என்பதா? முன்னேற்றத்துக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு? இந்த முன்னேற்றத்தால் பயன் பெறுவது யார் யாரெல்லாம்? புரியவில்லை.

Pin It