எழுத்தாளர் உஷாதீபன் அவர்களை வாசகர் உலகம் நன்கு அறியும். தொடர்ந்து சிறுகதைகளை, குறுநாவல்களை, நாவல்களை, கட்டுரைகளை என்று எழுதும் பன்முகம் கொண்ட திறமையாளர். நான் உணர்ந்த அளவுக்கு இவரது எழுத்துக்கள் ஜாலிக்கானதோ, பொழுதைக் கொல்லுவதற்கானதோ அல்ல. சிந்திக்க வைக்கும் தரமுள்ளது. இது இவருடைய பத்தாவது சிறுகதைத் தொகுப்பு என்றறிய அ.ப்.ப்.ப்.பா.. எனக்கு மூச்சு முட்டுகிறது. ஆமாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறாராம்? ஒரு சின்ன கரு போதும் அவருக்கு, அந்த சின்ன புள்ளியை வைத்தே வாசல் முழுக்க வியாபித்து விடும் பிரமாண்டமான அழகிய கோலமாக்கிவிடுவார் நேர்த்தியாக. இத்தொகுப்பில் இவருடைய எழுத்தில் பரவலாகத் தெரியும் தனித்தன்மைபற்றி நான் சொல்லியாக வேண்டும்.

“நியாயம் என்றால் எது நியாயம்? உங்களுக்கு நியாய மானது மற்றவங்களுக்கும் நியாயமாக தோணனும்னு அவசியமா? கட்டாயமா? மனுஷாளுக்கு மனுஷாள் மாறுபடாதா? குணநலன்களை வச்சிதானே மனநிலை?...” --------இப்படி ஒரு பத்தி பூராவும், ஒரு பக்கம் பூராவும், ஏன் கதை முழுக்கவும் கேள்விகளாகவே, அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் பதில் என்று இவரால் எப்படி எழுத முடிகிறது? என்று வியப்பாக இருக்கிறது. கேள்வி களிலேயே சுவாரஸ்யமான ஒரு கதையும் வந்து விடுகிறது, அதில் ஒரு ஆழமும் கிடைத்துவிடுகிறது. அப்படிப் பட்ட திரு உஷாதீபன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றை NCBH வெளியிட்டிருக்கிறது.

“தவிக்கும் இடைவெளிகள்” ---இது மேற்படி சிறுகதைத் தொகுப்பின் பெயர். 19 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. படிக்கும்போதே தெரிகிறது ஒரு சிறுகதை எழுதுவதற்கான தந்திரங்கள் அத்தனையும் இவருக்குப் பிடிபட்டுள்ளன. முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிற வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தை, காலத்தைத் துண்டாக நறுக்கித் தருவதுதான் சிறுகதை என்கிற சிறுகதைகளுக்கான இலக்கணத்தில் உஷா தீபனின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒட்டிக் கொள்ளு கின்றன. அவற்றில் உயிர்த்துடிப்பும்,மனங்களின் சுழற்சியும், விசாலமும், கண்ணீர்த் தெறிப்பும், சிரிப்பு களும், உறைந்திருக்கின்றன. இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும், இது என் கதைதான், என் வீட்டில் இப்படித்தான் நடக்கின்றன, என்று நமக்குத் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அத்தனையும் நடுத்தர வர்க்க மனிதர்களின் வாழ்க்கைகளே.

ஐம்பது காசை ஏமாந்து விடுவோமோ என்ற தவிப்பு, சொல்லவும் முடியாத கூச்சம், அப்படியே நடுத்தர வர்க்க மனிதர்களின் இயல்பை `மனக்கணக்கு’ கதையில் வடித்து விடுகிறார்,

`சுப்புண்ணா’ கதையில் மனம் பேதலித்த மகனைப் பராமரிக்கும் ஒரு குடும்பம். அவர்கள் படும் வலிகள், ஊடே அவன் முரட்டுத்தனமாய் எதையும் செய்வானோ என்கிற அச்சம். முடிவு அதிர்கிறது. செட்டான விவரிப்பு.

மரணம்...? ஒருவருடைய மரணத்தில் அவரோடு வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களை, சுவாரஸ்யங்களை அசைபோட்டு, சொல்லிச் சொல்லி அழுவது இயல்பு. அவற்றை நோகநோகச் சொல்கிறார். `செத்தும் கொடுத்தார் சித்தப்பா” கதையில்,

`சபாஷ் கணேசா’ நாம் அங்கங்கே பார்க்கக்கூடிய ஒரு மனிதர். ஏன் அது நாமாகக் கூட இருக்கலாம். க்ஷிமீரீணீ தீஷீஸீபீ. ஒரு வேலை செய்யாமல் கெத்தாக திரியும் மனுஷன். சரி இவரிடம் என்ன கதை இருக்கிறது? இருக்கிறதே. கடைசியில் ஒரு உன்னதமான காரியம் செய்து பிறருக்காக வாழ்வதில்தான் வாழ்வின் அர்த்தமே இருக்கிறது என்பதில் நமக்கு ச்சே! என்று மனங்குளிர்ந்து போகிறது.

‘நாக்கு’ என்றொரு கதை என்னை நெகிழ வைத்து விட்டது. பொதுவாகவே வயசான தாத்தா பாட்டிகள் பேரனுக்குத் தின்பண்டங்களை ஊட்டும்போது தானும் ஒரு வாய் போட்டுக்கிறதுதான். நாலு பிஸ்கட் பையனுக் கென்றால் ஒண்ணு பாட்டிக்கு. அதற்குக் காரணம் அவர்கள் தன் வாழ்நாள் முழுக்க தன் பிள்ளைகள் சாப்பிடணும்னு தன் வேட்கையை அடக்கிக் கொண்டவர்கள். இப்போது வில்பவர் போன பின்னால் ஆசையை அடக்க முடிவதில்லை. அப்படித்தான்

காலம் முழுக்க தான் வாழ்க்கைப்பட்ட தன் பெரிய குடும்பத்திற்கு விதவிதமாகச் செய்து போட்டு, தானும் சாப்பிட்டு மகிழ்ந்த மரகதம் பாட்டிக்கு நாக்கு நீளம் என்று மருமகள் திட்டுகிறாள். தன் கணவரின் வருடாந்தர திதிக்காக தன் எதிரில் மருமகள் சுட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் வடையும், மொறுமொறு அதிரசமும் அவளுக்கு வாயில் நீர் சுரக்க வைக்கிறது. சாப்பிடு என்று கணவனே சொன்னதைப் போல் மானசீகமாய் உணர்ந்து, ஒரு அதிரசத்தை எடுத்துக் கடிக்க பேரன் போட்டுக் கொடுத்து விடுகிறான். அதைத் தொடர்ந்து நடக்கும் ஏச்சுக்கள். நம் கண்கள் கலங்கிவிடுகின்றன. சம்பவங் களும் சொன்ன நேர்த்தியும் மனசைப் பிழிகிறது.

இன்னொரு கதை `சுயம்’-கொஞ்சம் விவகாரமான விஷயம். கறவல் மாடுகளை வைத்துக் கொண்டு அவை களே தன் உலகம் என்று வாழ்ந்து வரும் பரமேஸ்வரன், மின்சாரத் துறையிலிருந்து ஓய்வு பெற்றவர். பாட்டு டீச்சரான அவர் மனைவி கொஞ்சகாலம் யாருடனோ வாழ்ந்து விட்டுத் திரும்பி வந்தவள் என்கிற விஷயம் மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகிறது. இந்தாளுக்கு புத்தியில்லே என்றெல்லாம் விமர்சனங்கள். ஆனால் முடிவில் அதிலிருந்து விலகி, அதிலுள்ள இன்னொரு கோணத்தைக் காட்டும் கொச்சையில்லாத செக்ஸ் கதை.

`இனம்’ என்றொரு கதை. குட்டித் துணி தலை யணையைத் தோளில் இருத்தி அதன் மேல் தையல் மிஷினை ஏற்றி,தெருத்தெருவாய் சுற்றி தைக்கும் தொழிலாளி ஆறுமுகம் வேலையில் சுத்தம், நேர்மை போன்ற அவன் பண்புகளால் அந்தக் குடும்பத் தலைவனை ரொம்பவே பாதித்தான். அவன் மீது இரக்கம் கொள்ளும் கணவன் அவனுக்கு பேங்க் லோனுக்கு ஏற்பாடு செய்ய லாமா? என்று யோசிக்கிறான். மனைவி உபத்திரவம் வேண்டாம் என்று தடுத்து விடுகிறாள். கையறு நிலை. அவன் வாழ்வு மேம்படாதா? என்று நினைக்கிறார். ஒரு நாள் ஆறுமுகம் வந்து நன்றி சொல்லுகிறார். உங்களால் தான் கஷ்டமில்லாமல் நாலு ஊர்களுக்குப் போய் சம்பாதிக்க முடிகிறது என்கிறான். பார்த்தால் தான் ஸ்கூட்டர் வாங்கியபின் உபயோகமில்லாமல் கிடந்த தன்னுடைய பழைய சைக்கிளை மனைவி தூக்கி அவனுக்கு இனாமாகக் கொடுத்து விட்டிருக்கிறாள். அவளுடைய மனவிசாலத்தைக் கண்டு அவருக்கு குபீரென்று பூரிப்பு. கூடவே லேசாய் ஒரு உறுத்தல் தனக்கு அந்த யோசனை வரவில்லையே என்று. கதையின் கட்டுக்கோப்பும், நடையும்... நான் ரசித்துப் படித்தேன்.

வயதான தாயைப் பராமரிக்கும்போது நுணுக்கி நுணுக்கி எத்தனை விஷயங்களைப் பார்க்கவேண்டி யிருக்கிறது. படித்து முடிக்கும்போது வாழ்ந்து முடித்த நிறைவு ஏற்படுகிறது. உணர்வுகள் கதையில்.

பையனைப் பொறுப்புடனும், தன் பணியில் ஒரு ஈடுபாட்டோடு செய்ய வேண்டுமே என்ற கவலை யோடு, மகனுக்குக் கற்றுத்தரும் (திட்டி) தந்தையும், அவனை ஏன் சும்மா திட்றீங்க என்று மகனுக்காக மல்லுகட்டும் மனைவியும் அச்சு அசலாய் என் வீட்டில் நடக்கிறது. ஏன் எல்லாருடைய வீடுகளிலும் தான்.இது `கேள்விகள்’ கதை.

‘விட்டதடி ஆசை’ என்ற கதையில் கல்யாணமாகி புதுக்குடித்தனம் போக வாடகைக்கு வீடு பார்க்கப் போகும் போது, அங்கே எதிர் போர்ஷன் பெண் பலவீனப்பட்டு சிருங்கார சமிக்ஞை காட்டுவதும், அதைப் பிடிக்காத அந்த ஆண் ஒதுங்கிவிட்டு வெளியே வந்து விடுதலும் சற்று வலிந்த கற்பனையாய்ப் பட்டது. முதல் பார்வை யிலேயே ஒரு பெண் அந்தஅளவுக்கு இறங்கி வருதலும், இளைஞனான அவன் கொஞ்சமும் சலனப் படவே யில்லை என்பதில் சற்று மிகை தெரிந்தது.     

தவிக்கும் இடைவெளிகள் என்ற கதை அருமை அருமை, மனம் லயித்தது. சாஃப்ட்வேர் அடிமைகளாக சேர்ந்து, கைநிறைய சம்பாதித்து, கெத்தாக திரியும் மகன் களைக் கொண்ட தகப்பன்களுக்கெல்லாம் ஏற்படும் அனுபவம். அட்வைஸ் தருவதால் மகன்களிடம் செல்லாக் காசாகிவிடும் தகப்பன்கள். ஆனால் எந்த மனைவியும் அட்வைஸ் தருவதில்லை. பச்சோந்திகளாய் கட்சி மாறி அவனுடன் அரட்டையடிக்கப் போய் பிள்ளைகளுக்குப் பிடித்த அம்மாவாக இருக்கிறார்கள். தலைமுறை இடைவெளி.

இப்படி இவருடைய கதைகளில் மத்தியமர்கள் தான் உலாவருகிறார்கள். கேள்விகளின் மூலம் சுவாரஸ்யமாய் போதிக்கிறார்கள். வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தருகிறார்கள். படிக்கும்போதே வாழ்ந்த நிறைவு. தமிழ்ச் சிறுகதைகளுக்கு இத்தொகுப்பு ஒரு ப்ளஸ். இன்னொரு ப்ளஸ் அதன் இலக்கியத்தரம். வாசகர்களுக்கு என் அப்பீல், இதை வாங்கிப் படியுங்கள், அப்போது தெரியும் நான் சொல்லாமல் விட்ட பல ப்ளஸ்கள் அநேகம் உண்டு என்று.

Pin It