Aravandhan 450புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அழகிய பெரிய வீடு. வாசல் அருகே தலையில் தொப்பி, தடித்த பேண்ட் சட்டையுடன் ஓர் உருவம் நின்று கொண்டு இருந்தது. கடந்து சென்ற கிராமத்து இளைஞனின் மனம் வாட்சுமேனாக அர்த்தப்படுத்திக் கொண்டது. அடுத்தநாள் அதே உருவம் வகுப்பறையில் நுழைகின்றது. சிறு கடிகாரத்தை அருகில் உள்ள நாற்காலியில் வைத்து, கரகரத்த குரலில் பேசுகிறது 'நீங்க தமிழ்ல பேசுங்க இல்ல ஆங்கிலத்ல பேசுங்க இரண்டையும் கலந்து பேசாதிங்க’ என்ற அறிவுறுத்தலின் ஊடே டார்வின் என்றது. மனிதக் குரங்கு, நியாண்டர்தல், அமிபா, ஒரு செல் உயிர், நாம் வந்தவழி என விளக்கங்களுடன் அன்றைய வகுப்பு நிறைவு பெற்றது. மனித இனங்கள் என்ற புத்தகம் அளிக்கப்பெற்றது. ஒன்றும் புரியவில்லை. இவர் யார்? எதற்கு வகுப்பிற்கு வந்தார்? என்ன பேசுகிறார்? எதற்காகப் பேசுகிறார்? என்ற வினாக்கள் அடுக்கடுக்காக எழுந்தன அந்த இளைஞனுக்குள்.

எனினும், பேச்சில் ஒரு தெளிவு உள்ளதே, என்ன செய்வது என்று அவன் மனம் அலசிற்று. அடுத்த நாள் தெரிந்தது அவர் எடுத்த பாடம் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்று. இப்பாடத்தை இரண்டாகப் பகுத்துக்கொண்டார். ஒரு செல் உயிரின் தோற்றம் முதல் மனித இன வகைப்பாடு வரை உள்ள வரலாற்றை அவரே நடத்தினார். கே.கே.பிள்ளையின் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்ற நூலைப் படித்துத் தேர்வு எழுதுமாறு பணித்தார். ஆம், புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்களுக்குச் செவ்வாய், வியாழன் தோறும் முதல்

ஒரு மணி நேரம் தேர்வு நிகழும். மாத இறுதியில் மூன்றுமணி நேரத் தேர்வு ஒருவாரம் தொடர்ந்து நிகழும். ஆசிரியர்கள் விடைத் தாள்களை எழுத்தெண்ணித் திருத்துவர். மதிப்பீடு செய்வதைத் தவிர்ப்பர். மதிப்பெண்கள் தகவல் பலகையில் ஒருவாரகாலத்திற்குள் காட்சி பெறும்; உயர் மதிப்பெண்கள் ரோஜா நிற மையால் வட்டமிடப்பெற்றுப் பெருமிதம் பேசும். ஆம், தகவல் பலகையை அவர் அறிவிப்புப் பலகையாக மட்டுமின்றி ஊக்க மொழிபேசும் மௌன மனிதனாக மாற்றி இருந்தார்.

வகுப்புகளைத் தொடர்ந்து புதன் கிழமை மாலை எல்லோரும் மாடி கீற்றுக் கொட்டகையில் கூடினர். மாணாக்கம் என்றனர். ஆய்வாளர் ஒருவர் தலைமை தாங்கினார். ஆய்வாளர், எம்.பில் ஆய்வாளர் என இருவர் கட்டுரை வாசித்தனர். பார்வையாளர் பகுதியில் 30,40 பேர். வினாக்கள் கடுமையாக இருந்தன. விடைகளும் அளிக்கப் பெற்றன. அடுத்த நாள் வியாழக்கிழமை மாலையும் அதேபோல் கூடினர். இக்கூட்டத்தை அறிவரங்கம் என்றனர். இதில் ஆசிரியர் தலைமை தாங்கினார். ஆய்வாளரும் ஆசிரியரும் கட்டுரை வாசித்தனர். மாணாக்கம், அறிவரங்கம் இரண்டிலும் வரவேற்புரை, நன்றியுரை எனும் சம்பிர்தாயங்கள் இருந்தன. இதே போன்ற மாலை நேரத்தில் திங்கள்கிழமை என்றால் ஆங்கிலம் கற்பித்தல். அடுத்தடுத்த நாள்களில் நற்றமிழ் நடைப் பயிற்சி என்று ஒரு புதிய வாரக் கூட்டம் முளைத்தது. நற்றமிழ் அளிப்பில் அவரே பயிற்றுநராக இருந்தார். ஆனால் ஒரு வேறுபாடு. வகுப்பறை அறிவு அளிக்கும் அறிவுறுத்தலாக அமைய, நற்றமிழ்ப் பயிற்சி கண் திறக்கும் தாய்மைத்துவமாக அமைந்தது. எப்படி ஒருவரே இப்படி என்று மீண்டும் குழம்பிப்

போனான் அந்த கிராமத்து இளைஞன். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பாடம் நடத்துவதை விட்டு விட்டுக் காலையில் தேர்வு, மாலையில் கூட்டம் இது என்ன வினோதம் என்று குழம்பினான். கல்வி என்பது நான் உணர்வைத் தவிர்த்து, நாம் உணர்வை அளிக்க வேண்டும்; பரந்துபட்ட புரிதலை வழங்க வேண்டும். பாடத்திட்ட அரங்கேற்றம் மட்டுமன்று கல்வி என்ற தெளிவுபெறச் சில மாதங்கள் ஆகிற்று அந்த இளைஞனுக்கு.

ஒருவார காலத்தில் 'இந்த வகுப்பறைச் சாவிய நீங்க வச்சுக்கலாம், எப்ப வேணாலும் வரலாம், படிக்கலாம், நீங்க ஒரு தகரப் பெட்டியில பாடத் திட்டம் தொடர்பான புத்தகங்கள நூலகத்ல இருந்து எடுத்து வச்சுக்குங்க, நீங்களே சுழற்சி முறையில படிக்கப் பயன்படுத்துங்க’ என்று அவர் பேசிக் கொண்டே சென்றார். மீண்டும் குழம்பினான் இளைஞன். இது வீடா? துறையா? ஆம்,போதிய இருக்கை, மின்சார வசதி இல்லாச் சூழலில் வாழும் மாணவர்க்குப் பயிலும் நிறுவனங்கள்தாம் வீடு, தெரு விளக்கு.

சமுகவியல், மானுடவியல், உளவியல், இலக்கியம் கற்பிக்கும் நெறிமுறைகள், கணினியியல், தமிழ்ச் சுருக்கெழுத்து எனப் பல்துறை அறிவுடன் இலக்கிய இலக்கணங்களைக் கற்பதற்கு ஏற்ற பாடத்திட்டம் வகுக்கப்பெற்று இருந்தது. ஒவ்வொரு பருவ இறுதியிலும் மாணவரிடம் பெறப்பட்ட மந்தன அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டம் உடனடியாக மாற்றி அமைக்கப்பெற்றது. பிற மொழி இலக்கிய வரலாறு எனும் தாள் 30  மொழிகள், 15 மொழிகள், 7 மொழிகள் என இளைத்து வந்ததற்கு மாணாக்கரின் கருத்தே அடிப்படை. ஒரு கட்டத்தில் கணினியியல் கைவிடப் பெற்றுப் பொருளதிகாரம் வழக்குப் பெற்றது. எனினும் வழக்கமான கற்றல் கற்பித்தல் முறையிலிருந்து மாறுபட்ட அணுகுமுறைகள் தொடர்ந்தன. திரைப்படத் திறனாய்வும், இதழ்த் திறனாய்வும் சிறப்பு அறிஞர்கள் வழிக் கற்பிக்கப் பெற்றன. ஆளுமை மேம்பாட்டிற்காக எண்ணற்ற வாழ்க்கை வரலாறுகள் அறிமுகம் செய்யப்பெற்றன. எம்.எஸ். உதயமூர்த்தி முதலானவர் நூல்கள் படிக்க வைக்கப்பெற்றன. முதுகலை மாணவர்களுக்கான வகுப்புக் கருத்தரங்கமும், திட்டக்கட்டுரை அளிப்பும் மிகுந்த கவனத்துடன் நடைமுறைப்படுத்தப் பெற்றன.

ஆர்வத்தோடு பயிலும் மாணவர் தனி அடை யாளம் காணப்பெற்றனர். தேடல், முடியும் என ஆய்வாளர் எழுத்துரைகள் நூல் வடிவம் பெறு கையில், ஆசிரியர் மாணவர் எனும் கூட்டு முயற்சியும், கூட்டு அங்கீகாரமும் வழக்குப்படுத்தப் பெற்றன. இதனால் நூலாக்கம் எனும் விதை ஆய்வாளர் மனத்துள் வேர்விட்டது; கணினி அச்சு வழக்குப் பெறா அந்தக் காலத்திலேயே ஆய்வாளர்கள் எல்லாம் நூலாசிரியர் ஆயினர்.

வாசிப்பது, எழுதுவது, நூலாக்குவது எனும் நேர்கோட்டுச் செயல் திட்டம், பாடத்திட்டம் இல்லாப் பாடமாக்கப் பெற்றிருந்தது. தமிழாசிரியர் என்றால் மேடையில் பேசுவர், கவிதை எழுதுவர் என்ற புரிதல் கொண்ட அந்த இளைஞனுக்குள் மீண்டும் குழப்பம் உருவாயிற்று. இது என்ன தமிழ் மாணவர்களை ஆங்கில நூல் வாசிக்கச்சொல்வது என்ற வினாவும் எழுந்தது. இவற்றுக்கான விடை வாயில்கள் திறக்கப்பெற்றன நண்பர்கள்வழி.

பாதையாகும் பாறைகள் என்றொரு புத்தகம். அதில், ஓர் ஏழையின் பணக்காரப் பயணம் என்றொரு கட்டுரை. இதனை வாசித்தபோது அவரது நடை உடை பாவனைகளுக்கான, செயல் திட்டங்களுக்கான பின்புலத்தை அறிய முடிந்தது அந்த இளைஞனால். மேலும், ஒற்றைக் காசு இல்லாதவரும் தம் அறிவார்ந்த கடும் உழைப்பால் அயல் நாட்டு அறிஞரின் இரத்தினக் கம்பள வரவேற்பைப் பெற இயலும் என்ற தெளிவையும் தந்தது. அவன் மெல்லமெல்ல மற்றொரு உலகிற்குப் பயணிக்கத் தொடங்கினான்.

பண்பாட்டுப் படையெடுப்புகள், அற்றைநாட் காதலும் வீரமும், பாம்பு வழிபாடு, மரவழிபாடு என அவர்தம் நூல்கள் ஒவ்வொன்றாக அந்த இளைஞனுக்கு அறிமுகமாயின. வாசிக்கின்றான் புரியவில்லை. ஆனால் வாசிக்காமல் இருக்கவும் முடியவில்லை. அவர்தம் வகுப்பறைச் சொற்கள், ஊக்கமொழிகள் அவனை விரட்டுகின்றன;  விழிக்க வைக்கின்றன; தூங்கவிடவில்லை. காலை 8 முதல் இரவு 8 வரை துறையில் இருத்தல், படித்தல், விடுமுறை நாட்களை வேலை நாட்களாக்கிக் கொள்ளுதல் எனும் அவர்தம் வாழ்வியல் முறைகள் அவனுள் மெல்லமெல்லக் கரையத் தொடங்கின. ஆப்பிரிக்க - தமிழ்ச்சமூகங்களுக்கிடையிலான உறவைக் கண்டறிந்தவர் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் மானுடவியல் நோக்கில் ஆராய்ந்தவர். சமண அறிஞர் தமிழ்ப்பணியைக் கவனப்படுத்தியவர். நாட்டுப்புறவியல், அறிவியல் தமிழ்த் துறைகளில் நூல்களை வெளியிட்டுத் தொடங்கியவர் என்ற அவர்தம் அறிவார்ந்த முயற்சிகள் எல்லாம் மெல்லமெல்ல அந்த இளஞனுக்குள் கால்கொள்ளத் தொடங்கின. இவற்றால் அவனையும் அறியாமல் அவன் மனத்துள் புதிய கடவுள் தன்மை ஒன்று உருவாகிவருவதை உணர முடிந்தது. அதன் உடன் நிகழ்வாக அவனுள் விழுதுவிட்டு இருந்த மரபுசார் கடவுள் தன்மையின் வேர் செல்லரிக்கத் தொடங்கிற்று. இது பிற்காலத்தில் தமிழ் வழி திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்திற்று.

அவரிடம் பேச வேண்டும், நெருங்கிப் பழக வேண்டும் என்று விரும்பிற்று இளைஞனின் மனம்.  ஆனால் அவர்தம் கம்பீரமும், வகுப்பறை இல்லாச் சூழலில் அவரது மௌன மொழியும் அவனை அவரிடம் இருந்து விலக்கியே வைத்தன. காலம் உருண்டோடிற்று. மொழி கற்பித்தல், ஆய்வுக் கொத்து எனும் நூல்கள் அவனுக்குக் கிடைத்தன. இரண்டிலும் அவர் பதிவிட்டிருந்த கருத்துகள் அவர் எதிர்கொண்ட பச்சையப்பன், இலயோலா கல்லூரிப் பணிக்காலச் சூழலை அறிய வைத்தன. கிருத்துவ நிறுவனம் அரசு ஊதியத்துடன் கூடுதல் ஊதியம் அளித்து அவரை அரவணைத்துக்கொண்ட பாங்கு இளைஞனுக்குள் கிளச்சியை உருவாக்கிற்று. சமயங்களைவிடச் சான்றோர் அணுகுமுறைகளே முதன்மை என்ற தெளிவை அவனுள் எழுப்பிற்று.

மேலும் மேலும் காலம் உருண்டோட அவருடன் பயணிக்கும் அரிய வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அவருடன் பழக எவை எல்லாம் தடையாக அமைந்தனவோ, அவற்றின் மாற்று வடிவங்களான காக்கி வேட்டி, எளிமை, அன்பு மொழி, அக்கறை உணர்வு அவர்தம் அடிப்படைகளாக அமைந்துள்ளதை அவன் காலப்போக்கில் கண்டு கொண்டான். தவறுகளைக் குத்திக்காட்டாத அவர்தம் இயல்பு அவனை வெகுவாகக் கவர்ந்தது. கடனில் வீழ்ந்து கிடந்த இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தை மீட்டெடுத்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றபோது மூத்த அறிஞர் களோடு அவர் மேற்கொண்ட தொடர்பு, மன்றத்தில் நிதி சேர்ந்ததும் உழைப்பவர் மன்றத்தில் புறக்கணிக்கப் பெற்றபோது ஆர் அமைப்பை உருவாக்கியது, திருவள்ளுவம் நூல் தொடர்பான சர்ச்சையை அறமுறையில் எதிர்கொண்டது எனப் பலவற்றை  அருகிருந்து கண்ட அவ்விளைஞனின் மனவெளி அதிகரித்தது; நீரே நெருப்பானாலும் நிமிர்ந்து நிற்றல் வேண்டும் என்ற அவர்தம் நாட்குறிப்புமொழி அவனுக்கு நாள் வேதமாயிற்று.

துணைவேந்தர் பணிக்காலத்தில் மனோ கல்லூரிகள், சமுதாயக் கல்லூரிகள், சிறைக் கைதிகளுக்குத் தனிக் கல்வி வசதி, பல்கலைக்கழகம் பெரிய அளவில் புத்தகக் கண்காட்சி நடத்தியது, கல்லூரி ஆசிரியர்களையும் ஆய்வரங்குகளில் பங்கேற்க ஆய்வரங்கம் அமைத்தது என அவர்தம் செயல்திட்டம் அமைந்தபோதும் அவர்க்குக் கடும் எதிர்ப்பும் இருந்தது. ஆனால் எதிர்க்கப் பெற்றவை சில ஆண்டு காலத்தில் அங்கீகரிக்கப் பெற்றதையும் அந்த இளைஞன் ஒருங்கே கண்டான். மனோ கல்லூரிகள் அன்று எதிர்க்கப் பெற்றன. பின்னர்ப் பெரு வரவேற்பைப் பெற்றுள்ளன.

புதுவைத் தமிழ்த்துறையில் சிலர் சில காரணங்களுக்காக அவரை எதிர்த்தனர் அன்று. இன்று அதே தமிழ்த்துறை அறிவரங்கம் நூல்வழி அங்கீகரித்துப் போற்றுகின்றது. இவை நிர்வாகம் என்பது சமகாலத் தேவைக்கு மட்டுமன்று; தொலை நோக்குப் பார்வையுடன் கூடியது. பொருள் ஈட்டுவது மட்டுமன்று; கடைநிலை மனிதனையும் கவனத்தில் கொண்டது என்ற புரிதலையும் இளைஞனுக்குள் உருவாக்கின. அவர் மாணாக்கப் பருவத்தில் இந்தி எதிர்ப்பில் தீவிரமாகப் பணியாற்றியதன் கனல், துணைவேந்தர் பணிக்காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக அறிக்கையும், கட்டுரையும் எழுத வைத்தது.

விருப்ப ஓய்வுக்குப் பின்னர் எழுத்துப்பணி செயல் திட்டமாக அற இலக்கியக்களஞ்சிய உருவாக்கமும், தமிழ் மக்கள் வரலாற்றுத் தொகுதிகளை வெளியிடுதலும்  அமைந்தன. பள்ளிப் பருவம் முதல் நூலகத்திற்குச் சென்று வாசிக்கத் தொடங்கியவர்; சுமார் ஒரு இலட்சம் நூல்களுக்குமேல் வாசித்தவர், விலை கொடுத்து வாங்கி வாசித்த நூல்கள் 15 ஆயிரத்தைக் கனடா நாட்டு நூலகத்திற்கு அளித்தவர், 50 ஆண்டு கால எல்லையில் 114 நூல்களை எழுதியவர் என்பன எல்லாம் இன்று சரித்திரம் ஆகிவிட்டன.

கடைக் கோடி கிராமத்தில் சிறு தேநீர்க் கடை வியாபாரியின் எட்டாவது மகனாகப் பிறந்து, சென்னைப் பெரு நகரத்தில் வாசிக்க வாங்க, சிந்திக்க வாங்க என்று கூவிக்கூவி அழைத்து, அறிஞர்களை அழைத்து விருது வழங்கிச் சிறப்பித்து வாழ்ந்தவரின்  இறுதிப் பயணமும் மாணவர்-நண்பர்-உறவினர் எனும் நேர் கோட்டிலேயே அமைந்தது. ஆம், அவர் நல்ல ஆசிரியர்களால் உருவாக்கப்பெற்ற நல்ல மாணவர். நல்ல மாணவர்களை உருவாக்கிய நல்ல ஆசிரியர். வரலாற்றை முயன்று படித்தவர், தமிழ் மக்கள் வரலாற்றை எழுதியவர், இன்று வரலாறாகிவிட்டார் க.ப.அறவாணன் (1941 - 2018).

Pin It