தனக்குள் பிரபஞ்சத்தையும் அதனுள் தன்னையும் உள்ளடக்கி இரண்டறக் கலந்த அத்வைத தத்துவ வாதியான பாரதியை அடையாளப்படுத்தும் முயற்சி யாகவே அமைந்துள்ளது ‘பாரதி என்றொரு மானுடன்.’
மருத்துவத்துறையில் வல்லுனராக விளங்கும் டாக்டர். ஜே.ஜி. சண்முகநாதன் தன் உள்ளார்ந்த ஆர்வத்தால் மாமனிதனான பாரதியை இனம் கண்டு அடையாளப்படுத்தும் ஓர் அரிய முயற்சியாக உள்ளது இந்த நூல்.
தனது கருத்துக்களுக்கும், வாழ்க்கைக்கும் எவ்வித முரணும் இல்லாமல் வாழ்ந்து வரலாற்றில் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட மகாகவியின் உயிர்த் துடிப்பை உணர்ந்து, அதைக் குறித்த உள்ளார்ந்த தனது மதிப்பீடுகளை இந்த நூலில் திறனாய்வாளர் முன்வைத்திருப்பது வியப்பைத் தருகிறது. இவருடைய இலக்கிய ஆர்வத்தைப் புரிந்து கொண்டு மகிழாமல் இருக்க முடிய வில்லை. வாழ்வியல் சார்ந்த இலக்கியம் எங்கும், எவரிடமும் இயல்பாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு வெளிப் படையான ஓர் எடுத்துக்காட்டு இந்த ஆய்வு நூல். ஆய்வு நூல் என்றாலும் வாசிப்புக்கு எளிமை யாகவும், வசதியாகவும் உள்ளது.
“பாரதியின் வாழ்வும் மனிதநேயமும்” என்ற முதலாவது இயலில் மகாகவியின் உள்முகத் தோற்றத்தை அவருடைய வெளிப்படையான வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்தே இனம் கண்டு அடையாளப்படுத்துகிறார். மகாகவி பாரதியின் தனித்தன்மை தமிழ் இலக்கியத்தில் எந்த வகை யான அடிப்படைகளில் வெளிப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறார்.
திருவாவடுதுறை சந்நிதானம் மகாகவி பாரதியின் கவிதையால் ஈர்க்கப்பட்டவர். அதனால், அவரை எப்படியும் திருவாவடுதுறைக்கு அழைத்து வந்து சிறப்பிக்க வேண்டும் என்கின்ற தனது விருப்பத்தை ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாவிடம் தெரிவித்தார். ஆதீனக் கவிஞராக இருக்க பாரதியார் சம்மதித்தால் அதைவிட மகிழ்ச்சியான செய்தி தமக்குக் கிடை யாது என்றும் கூறியிருக்கிறார்.
அதன்பின், உ.வே.சா, பாரதியாரைத் தொடர்பு கொண்டு திருவாவடுதுறை சந்நிதானத்தின் விருப் பத்தைத் தெரிவித்திருக்கிறார். பாரதியார் எதுவும் சொல்லவில்லையாம். பலமுறை திருவாவடுதுறை ஆதீனம் முயற்சி செய்தும், பாரதி ஏதாவது சாக்குப் போக்கு சொல்லித் தட்டிக் கழித்திருக் கிறார்.
கடைசியில், பாரதியின் நண்பரான பண்டிதர் நாராயண அய்யங்கார் என்பவர், “திருவாவடு துறை ஆதீனத்தின் விருப்பத்தை நீங்கள் ஏன் தட்டிக் கழிக்கிறீர்கள்?” என்று பாரதியிடம் நேரிடை யாகவே கேட்டுவிட்டாராம். அதற்குப் பாரதியார் தெரிவித்த பதில் அவரைத் திடுக்கிட வைத்தது. “திருவாவடுதுறை ஆதீனத்தால் கௌரவிக்கப் படுவது என்பது சாதாரண விஷயமல்ல! இலக்கண இலக்கியங்களில் நன்கு தேர்வு பெற்ற அறிஞர்கள் கௌரவிக்கப்படும் தமிழ் ஆலயம் தான் அந்தச் சந்நிதானம். அந்த அளவுக்கு எனக்குத் தேர்ச்சி கிடையாது. நான் அதற்கு லாயக்கானவன் அல்ல” என்பது பாரதியின் பதில்.
இப்படிப்பட்ட நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்த பாரதி தன்னுடைய படைப்புக்களின் வழியாகத் தமிழ் இலக்கியத்திற்கு மாறுபட்ட வகையில் ஒரு தனித்தன்மையை உருவாக்கினார்.
தமிழறிஞர்களிடமும், பண்டிதர்களிடமும், புலவர்களிடமும் மட்டுமே இருந்து வந்த தமிழ் இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றி அதைப் பரவலாக்கிய பங்களிப்பு பாரதிக்கு உரியது என்பது வரலாறு
மரபு வழிப்பட்ட தமிழிசை தவிர கும்மி, தெம்மாங்கு காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, கிளிக் கண்ணி, பள்ளுப்பாட்டு, பண்டாரப்பாட்டு, நாடோடிப் பாட்டுக்கள் அனைத்தையும் கற்றுணர்ந்த வல்லவராக இருந்ததால் பாரதி மக்கள் இலக்கி யத்தைத் தனித்தன்மையுடன் உருவாக்கித் திசை மாற்றம் செய்ய முடிந்தது.
பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் பாரதி யார் பின்வருமாறு கூறுகிறார்:
‘எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், அவற்றினுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனா கிறான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்தல் வேண்டும்’
“கவிதை மக்களின் மொழியில், மக்களுக்கு விளங்கும் சொற்களைக் கொண்டு மக்களைப்பற்றி எழுதப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர் பாரதி.” இப்படி பாரதியின் மொழியைப் பற்றிய கருத்தை அவருடைய சொற்களின் வாயிலாகவே விளக்குகிறார்.
பாரதி தன்னுடைய கதைகளிலும், கட்டுரை களிலும் இந்த முறையையே பின்பற்றினார். அதன் விளைவாகத் தமிழ் உரைநடை இலக்கியம் வளம் பெற்றுப் புதுமையுடன் விளங்கியது.
பாரதியின் உலகக் கண்ணோட்டத்தையும், வாழ்க்கை குறித்த புரிதல்களையும், வாழும் நெறி முறைகளையும் மதிப்பீடுகளையும் அவருடைய கவிதை, கட்டுரை, கதைகளிலிருந்து எடுத்துக் காட்டி அவருடைய மனிதத் தத்துவக் கோட்பாடு களை ஆய்வாளர் நிறுவுகிறார். அவருடைய தனிப் பண்புகளையும், ஆளுமைகளையும், தனித்துவத் தையும் அவருடன் நெருங்கி வாழ்ந்தவர்களின் கருத்துக்களின் வாயிலாக அடையாளம் காண் கிறார். அதனால், அவரைப் பற்றிய ஊகங்களுக்கு இடமில்லை.
மனைவி செல்லம்மா, மகள் தங்கம்மாள், சகுந்தலா ஆகியோரின் அனுபவங்களிலிருந்தும், கருத்துக்களிலிருந்தும் பாரதியின் உள், வெளித் தோற்றங்களையும், ஈடுபாடுகளையும், நடைமுறைச் செயல்களையும் இனம் கண்டு வரையறை செய் கிறார்.
அதைப் போலவே அவருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த சமகால அறிஞர்களையும், அரசியல்வாதிகளையும், சமூகநலத் தொண்டர் களையும் குறிப்பிட்டு அவர்களுடைய கருத்துக் களின் வாயிலாக பாரதியின் தனித்தன்மையை அடையாளப்படுத்துகிறார்.
அவர்களில் ச. சோமசுந்தர பாரதி, ரா. கனக லிங்கம், குவளைக் கண்ணன், மண்டபம் ஸ்ரீநிவாசாச் சாரியார், சுதேசமித்திரன் பத்திராதிபர் ஜி. சுப்பிர மணிய ஐயர், நாகசாமி, வ. ராமசாமி, வ.வே.சு. ஐயர், வ.உ.சி, கிருஷ்ணசாமி ஐயர், உ.வே. சாமிநாத ஐயர் போன்றவர்களின் கருத்துக்களிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் பாரதியின் உன்னதமான தன்மைகளை இனம் கண்டு அடையாளப்படுத்து கிறார்.
‘மானுடம்’ என்ற ஓர் உன்னதமான கருத் தாக்கம் எப்படியெல்லாம் பாரதியின் கவிதை, கதை, கட்டுரைகளில் வெளிப்படுகின்றன என்பதை அவருடைய படைப்புக்களிலிருந்து சான்று காட்டி விளக்குகிறார்.
தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் என்ற பிரிவின் கீழ் பாரதி வாழ்க்கையின் அவலங்களை வகைப்படுத்துகிறார். சாதி வேறுபாடு, பெண்ணடிமை, மக்களில் உயர்வு தாழ்வு பேதம், கல்வியறிவின்மை, வறுமை போன்ற வற்றிற்கு எதிராகக் குரல் எழுப்பும் பாரதியை அடையாளப்படுத்துகிறார். “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனியுண்டோ?” “மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?” என்று உலகமக்களைப் பார்த்துக் கவிஞர் பாரதி கேட்கிறார். பிறர் துயர் தீர்த்தலில் ஆழ்ந்த கவனம் செலுத்தும் பாரதியை அறிமுகப் படுத்துகிறார் ஆய்வாளர். பிறர் நலம் வேண்டுதல் குறித்துத் தனது கவிதைகளின் வாயிலாக அறை கூவல் விடுக்கும் பாரதியையும் ஆய்வாளர் தெளிவாகக் காட்டுகிறார்.
பாரதியின் மனதில் தேசியத் தாக்கம் நிறைந்து அன்னையைப் போற்றுதலைப் போல ஆவேசத் துடன் நாட்டைப் போற்றுவதை அவரின் கவிதைகள் புலப்படுத்துவதை தகுந்த சான்றுகளுடன் விளக்கு கிறார்.
வியக்கத்தகுந்த பாரதியின் கதைகளில் உள்ளார்ந்து நிறைந்து பரவிக்கிடக்கும் மானிடம் பற்றிய உணர்வுகளையும் குறிப்பிட்டுக்காட்டு கிறார். விதவை மறுமணம், மறுவாழ்வு போன்ற பெண் விடுதலைக் கோட்பாடுகளை முன்வைத்து மானுடத்தை பாரதி விளக்குவதையும் ஆய்வில் காணமுடிகிறது.
பாரதியின் சமுதாயச் சிந்தனை, கல்விச் சீர்திருத்தம் போன்றவற்றையும் இந்த நூலின் வாயிலாகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
பாரதிக்குள் நிறைந்து பரவிக்கிடந்த ஆழமான, நுட்பமான, துல்லியமான இசையுணர்வையும் அவருடைய கவிதைகளின் வாயிலாக எடுத்துக் காட்டுகிறார் ஆய்வாளர். காணும் பொருளி லெல்லாம், கேட்கும் ஒலியிலெல்லாம் இசையைக் கண்டுணர்ந்து பரவசப்பட்டு மனம் பூரிக்க கவிதை களாக வடிவப்படுத்திய பாரதியையும் இவர் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.
தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் வாழ்க்கைக்கும் புதிய பொருள்கண்டு புதிய தமிழில் தனது பங்களிப்பை மானுட உயர்வுக்குச் செலுத்திய பாரதியை ஆய்வாளர் தகுந்த எடுத்துக்காட்டுகளோடு இனம் காண்கிறார்.
மகாத்மா காந்திக்கும், பாரதிக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் காணப்பட்ட வேறு பாட்டையும் இவர் கணக்கில் எடுத்துக் கொண்டு தனது தரப்பில் உறுதியாக நின்றதையும் காட்டு கிறார்.
ஆகவே, பாரதியாரின் பன்முகத்தன்மைகளை ஒருங்கிணைத்து அவருக்கு ஒரு முழுமையான அடையாளத்தை இந்தச் சிறிய நூலில் ஆய்வாளர் நிறுவியுள்ளார்.
தமிழுணர்வுள்ள ஒவ்வொருவரும் இந்த நூலைப் படித்துவிட்டு பாரதியின் படைப்புக் களின் ஊடாகப் பயணம் செய்யலாம். அல்லது பாரதியின் படைப்புக்களைப் படித்துவிட்டும் இந்த நூலின் வழியாகப் பயணம் செய்யலாம்.
வாசிப்புக்கு எளிமையாகவும், துல்லியமாகவும் வார்க்கப்பட்ட மொழியில் வடிவம் பெற்றிருக்கிறது இந்தச் சிறிய நூலான “பாரதி என்றொரு மானுடன்.”
பாரதி என்றொரு மானுடன்
டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098.
தொலைபேசி எண்: 044 - 26359906
` 140/-