இது அறிவியல் நூற்றாண்டு, அண்மைக் காலத்தில் அறிவியல் பல துறைகளிலும் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.  அறிவியல் துறையிலும், தொழில்நுட்பத் துறையிலும் வளர்ச்சி பெற்ற நாடுகள் தான் இன்றைய மனித சமுதாயத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் வலிமையைப் பெற்றுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். உலக நாடுகளோடு இணைந்து நமது நாடும் வளர்ச்சியை வல்லமையைப் பெற வேண்டுமானால் நாமும் இந்த அறிவியல் ஆற்றலைப் பெறவேண்டும். அறிவியல் ஆற்றலும் அறிவியல் கல்வியும் பெற மக்களின் முதல் தேவை மனதின் உந்து சக்திதான்.  இச்சக்தியை அளிப்பதில் மொழிக்கு முக்கிய பங்கு உண்டு.

“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே

முன்தோன்றிய மூத்த குடியினரின்”

தமிழ் மொழிக்கு - வளர்ந்து வரும் அறிவியலுக்கு ஈடு கொடுத்து அதற்கான சொற்களை தானே உருவாக்கிக் கொடுக்கும் தன்மையும், சிறப்பும் நம் மொழிக்கு உண்டு.  ஏனெனில் தமிழ் தொன்மை வாய்ந்த மொழி.

தமிழில் இலக்கிய இலக்கணங்களின் பெருமை யையும், சிறப்பையும் உலகம் அறியும்.  ஆயிரம் ஆயிரம், ஆண்டுகளாக சீரோடும், சிறப்போடும் வழக்கில் இருந்துவரும் நமது தாய் மொழிக்கு அறிவியல் செய்திகளை தமிழில் தரும் வல்லமை உண்டு. நமது முன்னோர்கள் தமிழில் இலக்கியம் அல்லாத மற்ற துறைகளான மருத்துவம், அறிவியல், வானியல் ஆகியவை அனைத்தையும் கவிதைகளில் ஆக்கி வைத்தார்கள்.

சங்கப் புலவர்கள் பாடலாக இருந்தாலும், சித்தர் பாடலாக இருந்தாலும், புலிப்பாணி மருத்துவ நூலாக இருந்தாலும், அகத்தியர் நாடி சோதிடமாக இருந்தாலும் அவை கவிதை உருவில் தான் இயற்றப்பட்டன. இந்த கவிதை நூல்கள் அனைத்திலும் இன்றைய அறிவியல் கருத்துகளுக்கு சமமான சொற்கள் ஏராளமாக இருக்கின்றன. எந்தக் கல்வியும் தாய் மொழி வாயிலாக கற்றால் தான் அக்கல்வி சிறப்பு பெறும்.

மொழியானது சமுதாயத்தின் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்று வளர்ச்சி அடைந்து வருகின்றது.  சமுதாயத்தில் உள்ள எந்த ஒரு மனிதனும் தன் குழந்தைப் பருவம்தொட்டு தன் தாய்மொழியில் சிந்திக்கிறான்.  அந்தச் சமுதாயத்துடன் தொடர்பு கொள்கிறான்.  அவனது செய்தித் தொடர்பு அனைத்துமே தாய்மொழி வழியே அமைந்து விடுகிறது.  இதுதான் இயல்பானது; எளிதானது; சிறந்தது.

“தாய்மொழியில் அறிவியலைப் படிக்கும் பொழுது அந் நாட்டுப் பொருளாதாரமும் பகுத்தறிவும் பண்பாடும் முன்னேறும்” என்ற பெர்ட் ரான்ட் ரசலின் கருத்தும், கருதத்தக்கது.  தாய் மொழி வழி அறிவியல் கற்பிக்கப்படின் அறிவியல் கல்விக்கும், சமூகத்திற்கும் ஓர் நெருங்கிய தொடர்பு ஏற்படும். 

இது அந்நாட்டு மக்களின் வாழ்க்கையைச் செம்மையாக்க உதவும் என்பதில் ஐயமில்லை.  அறிவியல் வளர்ச்சியுற்ற நாடுகள் எல்லாம் தத்தம் நாட்டு மக்களுக்கு அவரவர்

தம் தாய்மொழியில் தான் அறிவியலை விவரித்துச் சொல்கின்றன.  எடுத்துக்காட்டாக, ஜப்பானில் ஜப்பானிய மொழியே பயிற்சி மொழி.  ஆங்கிலம் விருப்பப் பாடமாக உயர்நிலைப் பள்ளிகளிலும், கட்டாயப் பாடமாகக் கல்லூரிகளிலும் மொழிப் பயிற்சிக்காகக் கற்பிக்கப்படுகிறது.  ஜப்பானிய மொழியிலேயே உயர்தர அறிவியல் கற்பிக்கப்படுகிறது.  ரஷ்யாவிலும் பல மொழி பேசும் மக்கள் உள்ளார்கள்.  அவரவர் பேசும் மொழிகளே கல்லூரிகளில் பயிற்சி மொழியாக உள்ளன. 

மொழிப் பயிற்சிக்காக

ரஷ்ய மொழியையும்,

வேறோர் ஐரோப்பிய மொழியையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.  சுவீடனில் சுவீடிஸ் மொழியே பயிற்சிமொழி.  ஜெர்மனியிலும் ஜெர்மனியே பயிற்றுமொழி.

இதைக் கண்ணுறும் பொழுது அறிவியல் வளர்ச்சியுள்ள நாடுகளெல்லாம் தத்தம் நாட்டு மக்களுக்கு அவர்தம் தாய்மொழியில் தான் அறிவியலை விவரித்துச் சொல்கின்றன என்பது புலப்படுகிறது.  எனவே நமது வாழ்வு உயர வளர் தமிழில் அறிவியல் கற்க வேண்டும் என்று கருதுவதில் தவறில்லை.

அறிவியல் கருத்துக்களை தமிழில் எழுத வேண்டும்

என்ற எண்ணம் சென்ற நூற்றாண்டில் தான் தோன்றியது.

அதே காலத்தில் தமிழிலும் அறிவியல் நூல்களும் வெளிவந்தன.  அப்போதுதான் புதிய அறிவியல் சொற்களைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டது.

இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வட மொழியை நன்கு அறிந்தவர்கள் தான் அறிவியலை மொழியாக்கம் செய்தபோது ஆங்கில மொழிச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் அதாவது Human Anatomy - என்பதை மனுஷ அங்காதிபாதம் எனவும் ஊhநஅளைவசல - யை கெமிஸ்தம் எனவும் மொழிபெயர்த்தனர்.

ஆயினும் தமிழாய்ந்த தமிழ் பெருமக்கள் அறிவியலை தமிழில் கொண்டுவர முடியும் என்பதை உணர்த்தும் வகையில் வடமொழிச் சொற் களையும், ஆங்கிலத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அற்புதமான தமிழ் சொற்களை உண்டாக்கித் தந்துள்ளார்கள்.  மனுஷ அங்காதிபாதம் இன்று உடற்கூற்றியலாகவும், Chemistry - வேதியியலாகவும் மொழிபெயர்க்கப்பட்டு வழக்கத்தில் உள்ளது.  இதன் காரணமாக பல அறிவியல் நூல்கள் தமிழில் வெளிவந்த வண்ணமாக உள்ளன.

மருத்துவ இயலை தமிழால் கூற இயலுமா என்ற ஐயப்பாடு ஒரு சாராரிடையே உள்ளது.  இது தேவையற்றது. ஏனென்றால் மருத்துவச் சொற்களை உருவாக்க தமிழால் முடியும்.  நமது தமிழ் இலக்கியத்தால் முடியும். 

தமிழ் இலக்கியமே ஆழமான சுரங்கம்.  சுரங்கத்தைத் தோண்டினால் தான் நமக்கு பொன்னும், மணியும் கிடைக்கும். தமிழ் இலக்கிய சுரங்கத்தில் வள்ளுவர் பெருமானின் திருக்குறள் தனிச்சிறப்புப் பெற்றது.  திருக்குறள் பொன்னையும் - மணியையும் அள்ளி அள்ளித் தரும் அற்புதச் சுரங்கம்.  திருவள்ளுவர் ஒரு தலைசிறந்த மருத்துவ அறிஞர்.

திருவள்ளுவர் தலைசிறந்த மருத்துவ அறிஞர் என்பதற்கு அவர் செய்த மருந்து அதிகாரம் ஒன்று போதுமே! நோயைப் போக்க முக்கியமானது நோயிற்கான காரணத்தை அகற்றுவது ““To treat a disease fundamentaly remove the etiology” என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள்.  இந்த Etiology - என்பதற்கு என்ன தமிழ்ச் சொல் என்றால்,

“நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்ற குறளில் வரும் “நோய்நாடி” என்ற சொல்லே பொருத்தமான சொல்.  திருக்குறள் ஒரு அறிவியல் கடல்.  இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு, வயிற்றுப்புண், தலைவலி போன்ற நோய்களுக்கான

மூல காரணம் பெருமளவில் உள்ளத்தைச் சார்ந்ததே ஆகும்.  இதனைத் தவிர்க்க வள்ளுவர் கூறும் மருத்துவம் ‘எச்சரிக்கையாய் இரு’ என்பதுதான்.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்”

இது நோய் வராமல் காக்கும் தடுப்பு முறை.  கோபம் கொள்ளாதே - இரத்தக் கொதிப்பு வராது.  அளவறிந்துண் - உடல் பருமனாகி கொலஸ்டிரால் அதிகமாகி மாரடைப்பு போன்ற பல நோய்கள் வராது.  மாறுபாடு இல்லாது உண்டி மறுத்துண், அழற்சி என்ற ஒவ்வாமையை ஓடவைக்கலாம்.  இதுதான் தமிழரின் வள்ளுவ மருத்துவம்.

குறளில் மருந்தைப் பற்றி நேரிடையாக எங்கும் கூறவில்லை.  ஆனால்.  யாக்கைக்கு - உடம்புக்கு என்று குறிப்பிட்டு ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு’ என்கிறார்.

குறளைப் போலவே நிகண்டு, பதினெண் கீழ்க்கணக்கு, போன்ற நூல்களிலும் பல மருத்துவச் செய்திகள் அறியவருகின்றன.  கம்பராமாயணத்தில் உடலில் ஏற்பட்ட சீழ்க்கட்டிக்கான அறுவை மருத்துவம் எவ்வாறு இருந்தது என்பதை

“உடலிடைத் தோன்றிற்று ஒன்றை

அறுத்துஅதன் உதிரம் ஊற்றிச்

சுடலுறச் சுட்டு வேறோர்

மருந்தினால் துயரம் தீர்வீர்”

எனவரும் இப்பாடலில் சீழ்க்கட்டிக்கான அறுவை மருத்துவம் நான்கு நிலைகளில் நடைபெற்றதாகக் கூறப்படுவதைக் காணலாம்.

கட்டியை அறுத்தல், கெட்ட குருதியையும் சீழையும், அகற்றல், கட்டி தோன்றிய பகுதியைச் சுடுதல் - மருந்திடல் என்பன.  இதேபோல் சும்பருக்கு முன் ஆழ்வார் பாடல்களும்

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன்”

என்று இதே அறுவை மருத்துவச் சிகிச்சைக் கருத்தைத் தெளிவுறுத்துகிறது.

பெரிய புராணத்தில் Transplatation Surgery மாற்று உறுப்பு மருத்துவம், கல்வி அறிவில்லாத வேடன் கண்ணப்பன் காளத்தி நாதனான இறைவனின் கண்ணிலிருந்து குருதி கண்டு பதறி மூலிகை மருத்துவங்களையெல்லாம் முறையே செய்த பின்னும் குருதியொழுக்கு நில்லாமையால் வேறு என்ன செய்யலாம் என்றெண்ணியபோது

“உற்றநோய் தீர்ப்பது ஊறுக்கு

ஊனெறும் உணரமுன் கண்டார்”

எனவும் அம்முறையிலேயே

தன் கண்ணைப் பறித்து இறைவனின் கண்ணில் அப்பிக் குருதியொழுக்கை நிறுத்தினாரெனவும் பெரியபுராணத்தில் காண முடிகிறது.  இவைகளெல்லாம் தமிழ் இலக்கியம் தந்த மருத்துவக் குறிப்புகள். 

இதை அன்றி தமிழ் மருத்துவம் செய்தவர்களும் தேக தத்துவநூல், நோயைப் பற்றிய நூல், நோய் அணுகாவிதி, இரண மருத்துவம், உணவுப் பொருள் மருத்துவநூல், விஷங்களை நீக்கும் நஞ்சு நூல், ஞானசரநூல், ஜோதிடம் முதலிய நூல்களை எழுதி மாணவர்களுக்கு 12 ஆண்டுகள் பாடம் சொல்லித்தந்து பிறகே மருத்துவம் புரிய அனுமதித்தனர்.

இவ்வாறு படித்த தமிழ் மருத்துவர்கள் நோயாளரை சோதித்தறியும் பொழுது நோய் வந்ததற்குக் காரணத்தைக் காண்பார்கள்.  பல தரப்பட்ட மக்களுக்கு அவர்தம் நிலத்தியல்பு.  உணவு, கல்வி, அறிவு, செய்தொழில் ஆகியவற்றைக் கவனித்து அறிந்த பிறகு,

“நாடியால் முன்னோர் சொன்ன நல்லொலி பரிசத் தாலும்

நீடிய விழியி னாலும் நின்றநாக் குறிப்பி னாலும்

வாடிய மேனியாலும் மலமொடு நீரினாலும்

சூடிய வியாதி தன்னைச் சுகமுடன் அறிந்து பாரோ”

என்றபடி கைநாடி, குரலொலி, உடற்குடறியத் தொடுதல், கண், நாக்கு உடம்பின் நிறம், நீர், மலம் இந்த எட்டு விதச் சோதனைகளையும் செய்த பின்பே மருந்து கொடுக்கப்பட்டது. 

இத் தமிழ்வழி மருத்துவம் பதினெண்கீழ்க்கணக்கிலும் அதிக அளவில் நிகண்டுகளின் வாயிலாகவும் அறியப் படுகிறது.  இம்முறையும் இன்றுவரை பலரால் கையாளப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே!

அலோபதி என்ற ஆங்கில மருத்துவம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்திற்கு வந்ததாகும்.  இந்த மருத்துவ இயலைப் பற்றிய நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன.  ஆகவே அவை அனைத்தும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டன. ஆனால், ஐரோப்பிய மருத்துவத்தைத் தமிழில் கற்றுத்தர இயலும் என உறுதியாகக் கருதிச் செயற்படுத்தி முதன்

முதல் வழிகாட்டியவர்.  டாக்டர் ஃபிஷ்கீரின் என்ற அமெரிக்க மருத்துவர் தான்.  இவர் 1847-இல் இலங்கை வந்தார்.  மருத்துவத் தொழிலில் ஈடுபட்டதோடு ஈழ நாட்டார்க்கு ஆங்கில மருத்துவம் கற்பிக்கும் பணியையும் மேற்கொண்டார்.  33 பேருக்கு தமிழ்வழி மருத்துவம் கற்பித்தார்.  மாணவர்களுக்குத் தேவையானவை என்று தாம் கருதிய சில மருத்துவ நூல்களைத் தம் மாணவர்கள் உதவியுடன் மொழிபெயர்த்தார். இவரால் வெளியிடப்பட்ட நூல்களின் மொத்தப் பக்கங்கள் 4500 ஆகும்.

இவரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்

1. இரண வைத்தியம் (Surgery)

2. வைத்தியாகரம் (Physicians Vade Mecum)

3. மனுஷங்காதிபாதம் (Human Anatomy)

4. கெமிஸ்தம் (Chemistry)

5. வைத்தியம் ((Practical Medicine)

6. மனிஷ சுகரணம் ((Human Physiology)

7. இந்து பதார்த்த சாரம் ((Warmings Pharmacopia of India) ஆகியவைகளாகும்.

இதைத் தொடர்ந்து இலங்கையிலேயே மருத்துவர் சின்னத்தம்பி மகப்பேறு மருத்துவம், உற்றொழியியல், அறுவை மருத்துவம் ஆகிய நூல்களை 1969லிருந்து 1980 வரை தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து 1909-இல் அலோபதி மருத்துவம் பற்றிய புத்தகம் மைசூர் அரண்மனை மருத்துவர் திரு. ஜெகன்நாதன் நாயுடு அவர்களால் 500 பக்கங்கள் எழுதப்பட்டு சென்னையில் அச்சிடப் பட்டுள்ளது.  இதில் மருத்துவம் பற்றிய அனைத்து விவரமும் காணப்படுகிறது.  இதன் பின்னர் “தமிழ் மெட்டிரியா மெடிக்கா” என்ற நூல் 1911-இல் திரு. வி.என். ஈஸ்வரம்பிள்ளையால் நான்கு பகுதிகளாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

பின்னர் 1924-இல் டாக்டர் எ.சி. செல்மன் என்பவர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை “புதிய ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும்” என்ற தலைப்பில் டாக்டர் நெல்சன் தமிழாக்கம் செய்தார். 

இந்நூல் பூனாவில் உள்ள ஓரியன்டல் வாட்ச்மேன் என்ற பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.  அதன் பிறகு, 15 ஆண்டு இடைவெளி விட்டு “வீட்டு வைத்தியம்” என்ற புத்தகம் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனால் எழுதப்பட்டு கலைமகள் காரியாலயத்தால் வெளியிடப்பட்டது.

1967க்குப் பிறகு இதுபோன்ற புத்தகங்களைத் தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை காந்தி நினைவுநிதி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், வானதி பதிப்பகம், தமிழக அரசாங்க சுகாதாரத் துறை, போன்றவை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. 

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், மருத்துவப் பாடத்திட்டத்தின் கீழ் எழுதப்பட்ட 14 மருத்துவ நூல்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.  இச் செயற்பாடு தமிழால் மருத்துவத்தை எழுதுவது கடினம் என்று சொல்வதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது.  மேலும், கலைக்களஞ்சியங்களின் வாயிலாகவும், அறிக அறிவியல், கலைக்கதிர், ஹெல்த் விஞ்ஞானச் சுடன், உங்கள் உடல்நலம், நல்வழி, ராணி இதழ்கள் மூலமும் தினமணி, தினகரன் போன்ற சில நாளேடுகள் வழியாகவும் பல ஆண்டுகளாகப் பல மருத்துவக்கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது நாமறிந்த உண்மை.

இப்படி இருந்தும், அறிவியலை, அதிலும் குறிப்பாக, மருத்துவத்தைத் தமிழில் எழுத முடியுமா என்பதற்கு இன்றும், நாளையும் கேட்கப் படும் முதற்கேள்வி தகுந்த கலைச்சொற்கள் உண்டா என்பதே ஆகும்.  உண்மையில் ஆங்கிலத்தில் படிக்கப்படும் மருத்துவ நூல்களில் பெரும்பாலான சொற்கள் கிரீக்கும், இலத்தீனும் ஆகும்.

இக் கலைச்சொல்லாக்கம் ஆரம்ப நிலையில் எல்லா மொழிகளும் அனுபவித்த பிறப்பு வேதனைக் கோளாறுகளைப் போல தமிழ்மொழியும் அனுபவித்து வருகிறது.  இது தூய தமிழில் ஒரே விதமாக ஒரு சொல்லையே எல்லோரும் எல்லா நூல்களிலும் பயன்படுத்தும் முறை மேற்கொள்ள வேண்டும் எனும் வாதம்.  இதற்கு அனுசரணையாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அறிஞர்களுடைய ஒத்துழைப்புடன் கலைச் சொற்களை வெளியிடுவது.  இந்த முறையை இஸ்ரேல் பின்பற்றி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. 

அங்கே அறிஞர், பொதுமக்களுடைய ஒத்துழைப்புடன் ஒரு பிறமொழிச் சொல்லுக்கு ஹீப்ரு மொழியில் நேர்ச்சொல் எது என்று செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, எழுத்து மூலம் வினவுகின்றனர்.  அறிஞர்களும் இந் நற்பணிக்கு முதலிடம் கொடுத்துத் தமது கருத்தைத் தெரிவிக்கின்றனர்.  ஒரு சொல்லுக்கு சில நேர்ச் சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் பொதுமக்களிடம் அந்தச் சொற்களை வாக்கிய அமைப்பில் பயன்படுத்தி அவர்களுடைய எண்ணம்யாது என அறிகிறார்கள்.  இதற்கு, வானொலி, செய்தித்தாள் முதலிய மக்கள் தொடர்பு சாதனங்கள் துணைசெய்கின்றன. 

ஒரே தரமாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கலைச் சொற்கள் அங்கே பயனாகின்றன.

கீழை நாடாகிய ஜப்பானில் ஆசிரியர்கள் தாமே கலைச்சொற்களை உருவாக்கி, பிற்சேர்க்கையாக மூலமொழிச் சொற்களையும், பெயர்ப்பு மொழிக் கலைச் சொற்களையும் கொடுக்கின்றனர்.  மாநாடுகளில் கூடும் போது ஒரு சொல்லுக்குப் பல ஜப்பானிய ஆக்கங்கள் இருக்குமாயின் ஒருமைப்படுத்த முயல்கின்றனர். 

இம்முயற்சியில் பலர் ஒத்துழைக்கின்றனர்.  சிலர் ஒத்துழைக்காது தமது கலைச் சொல்லே சிறந்தது என்று பிடிவாதம் பிடிப்பதும் உண்டு.  அவ்வாறு சிக்கல் ஏற்படும் போது நாளாவட்டத்தில் மாணவர்களும், பொது மக்களும் எந்தச் சொல்லைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.  இஸ்ரேல் நாட்டிலும், ஜப்பான் நாட்டிலும் இம் முறை இன்றும் வெற்றிகரமாகச் செயற்படுவதற்குக் காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்பு, அறிஞர்களின் மெய்மறந்த ஈடுபாடு நிறுவனத் தீர்ப்பிற்கு மதிப்பு ஆகியவையாகும்.

சமுதாயத்தின் தேவைக்கேற்ப மொழியில் புதிய சொற்கள் தோன்றுகின்றன.  தமிழ்மொழி அமைப்பை உணர்ந்த மொழியியல் அறிஞர்களும் பிற துறை அறிஞர்களுடன் இணைந்து செயல்பட்டால் தமிழ்க் கலைச்சொல்லாக்கப் பணி வெற்றி பெறும்.  சிறப்புப் பெயர்கள், குறியீடுகள், சமன்பாடுகள், வாய்ப்பாடுகள், அனைத்துலகச் சொற்கள் ஆகியவற்றை அப்படியே எடுத்தாளுவது பொருந்தும்.  கலைச்சொல்லாக்கச் சிக்கல்களை ஆய்ந்து தீர்வு காண அனைத்துத் துறை அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு தேவை.  இதனுடன் கணிப்பொறியும் பேருதவி செய்யும்.

நல்ல பல கலைச்சொற்களை அறிய ஆங்கிலம் - தமிழ் அகராதி ஒன்று சுமார் 1200 பக்கங்களில் சென்னை பல்கலைக்கழகத்தால் 1963-இல் வெளியிடப்பட்டது.  தமிழ்ப் பல்கலைக்கழகம் 50,000க்கு மேற்பட்ட மருத்துவக் கலைச் சொற்கள் அடங்கிய அகராதி ஒன்றை வெளியிட உள்ளது.  இதுபோல் தனியார் துறையினராலும் மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன.  மேலும் தற்போது புதிய புதிய கலைச் சொல்லாக்க முறைகளைக் கையாண்டு புதிய புதிய சொற்கள் தமிழில் வந்த வண்ண மாகவே உள்ளன.  (எ.கா) பெப்டிக் அல்சர் என்ற சொல்லுக்கு குடற்புண், வயிற்றுப்புண், இரைப்பைப் புண் என்ற சொற்கள் தமிழாகத் தரப்படுகின்றன.

இதில் வழக்கில் உள்ள வயிற்றுப் புண் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.  இந்நோயை கண்டுபிடிக்க உதவும் கருவியான ((O esophago Gastro Duodeno Endoscope) என்பதற்கு இரைப்பை அகநோக்கி என்று பொதுவாகக் கூறப்படுகிறது.  அதே நோய்க்கு செய்யப்படும் அறுவைக்கு Gastro- Jejuno Anastomosis என்ற அறுவை சிகிச்சைக்கு இரைப்பை இடைச் சிறு குடல்- இணைப்பு என்று கலைச் சொல்லாக்கப் பட்டு பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 

இதை நோக்கும் பொழுது புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும் புதிய புதிய சொற்கள் உருவாகி வருகின்றன என்பது தெளிவாகும். அடுத்து ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதினால் மேலை நாட்டினருக்குப் புரியாது.

நம் கண்டுபிடிப்புகளை எப்படி அவர்கள் புரிந்து கொள்ள முடியும் என்பது ஆங்கிலம் தெரிந்த அனைவராலும் கேட்கப்படும் ஒரு கேள்வியாகும்.  உலகில் அறிவியல் ஆய்வுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் வெளிவருவதில்லை. 

சுமார் 50 விழுக்காடு ஆங்கிலத்திலும் மீதி 50 விழுக்காட்டில் சுமார் 20 விழுக்காடு ரஷ்ய மொழிகளிலும் வெளி வருகின்றன.  இம்மொழியிலிருந்து வெளிவரும் ஆய்வுக் கட்டுரைகளைப் பார்க்கும் பொழுது இச் சிக்கல் மிக எளிதாகத் தீர்க்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது.  கட்டுரை ஆரம்பத்தில் கட்டுரையாளர்களின் விபரம், கட்டுரைச் சுருக்கம், ஆய்வு நடைபெற்ற ஆராய்ச்சி நிலையம், நாடு ஆகியவற்றுடன் நூலடைவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. 

கட்டுரை மட்டும் தாய்மொழியில் எழுதப்பட்டுள்ளது. (எ.கா) ஜப்பான் மொழியில் வெளிவரும் ஜப்பான் முடநீக்கியல் கழகச் சஞ்சிகை.  ஜப்பான் மொழியில் எழுதப்பட்ட கட்டுரையில் மூலப் பகுதிகளில் இடை இடையே சில சொற்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.  இதைக் கண்ணுறும் பொழுது இரண்டு மொழிகளில் எழுதும் நிலையில் ஆரம்பத்தில் தமிழில் ஆய்வுக் கட்டுரைகளையோ, புத்தகங்களையோ எழுதுவதில் தடையேதும் இல்லை என்று தெளிவாகப் புலப்படுகிறது.

இவற்றை ஆய்வுறும் பொழுது மருத்துவத்தில் தமிழ்ப் பயன்பாட்டைப் பெருக்குகின்ற இந்நிலையில் “தாய் மொழியிலும் விஞ்ஞானக் கலைகள் கற்பிக்கப்படும் காலமே தமிழ்நாட்டின் பொற்காலம்” என அறிஞர்கள் கண்ட கனவு நினைவாகி வர ஆரம்பித்துள்ளது புலப்படும்.

இந்த நிலையில், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் அன்றி நான்காம் தமிழாம் அறிவியல் தமிழின் உதவியால் மருத்துவ இயல் தழைத்தோங்கும்.  அறிவியல் மொழி வளர்ந்து அதன் பயன் பெருகும் பொழுது, மருத்துவத்தில் மொழி பெயர்ப்பு என்பது போய் சுய படைப்புகள் தாமே பெருகும். மேலும் உடல் நலம் பற்றிய செய்திகளைப் பொதுமக்களிடையே பரப்புவதற்கும், பொது மக்கள் தாமும் படித்தறிவதற்கும் தாய்மொழி தான் துணைநிற்கும். 

நோய் குறைந்தால் ஒவ்வொரு குடும்பமும் நோய்களுக்காகச் செய்யும் செலவு குறையும்.  உடல்நலத்துக்காக அரசாங்கம் செய்யும் மருத்துவச் செலவும் நல்ல பலனைத் தரும்.  நாட்டின் பலமுனை வளர்ச்சிக்கு குறிப்பாக உடல் நலம், நாட்டின் வளம் மற்றும் மொழி வளர்ச்சிக்கும் தமிழ்வழி மருத்துவம் உதவும்.