பழனி தொடங்கி செங்கோட்டை வரை இருக்கும் மேற்கு மலைத்தொடர்களில் பளியர், மூப்பர், முதுவான், காணிக்காரர், மன்னான், ஊராளி, மலைக்குறவர், மலைப்புலையர், மலை வேடர், குன்னுவர், மன்னாடி எனப் பல்வேறு பழங்குடிகள் வாழ்கின்றனர். இவர்களில் ‘பளியர்கள்’ பிரதான பழங்குடிகளாகத் தென்மாவட்டங்களில் விரவிக் காணப்படுகின்றனர். ‘பளியர்கள்’ குறித்து வந்த நாவல், சிறுகதைகள் குறைவு என்றாலும் சில படைப்புகள்(கானகன், தாவரங்களின் உரையாடல்) இவர்களின் வாழ்வியலை நுட்பமாகப் பதிவு செய்துள்ளன. பளியர்களின் வாழ்வியலைப் பேசும் லஷ்மி சரவணக்குமாரின் ‘கானகன்’ நாவலை, இனவரைவியல் பின்புலத்தில் வாசிக்க முற்படுகிறது இக்கட்டுரை.
லஷ்மி சரவணகுமாரின் கானகன் நாவலில் பளியர்கள்
இளம் படைப்பாளியான லஷ்மி சரவண குமாரின் மூன்றாவது நாவல் கானகன். வேட்டைக்காரன் ஒருவன் தாய்ப்புலியை வேட்டையாடிக் கொல்வதில் தொடங்கும் நாவல், குட்டிப்புலி பழிக்குப்பழியாக அதே, வேட்டைக்காரனைக் கொல்வதில் நாவல் முடிகிறது. புலி என்பது ‘பளிச்சியம்மனின்’ ஆன்மா. பளிச்சி, தாய்ப் புலியைக் கொன்ற தங்கப்பனைக் குட்டிப்புலி வடிவில் வந்து கொல்லும் எனும் பளியர்களின் நம்பிக்கைதான் நாவலின் ‘கரு’. முதலாளிகளுக்காக மலைவாழ்ப் பழங்குடிகள் காட்டிலிருந்து வெளியேற்றப்படுவது, மலைசார் பண்பாட்டியலை விட்டு நிலத்திற்கு வர மறுக்கும் பளியர்களின் நெருக்கடிகள் நாவலின் இன்னொரு பரிமாணம். தங்கப்பன் எனும் வேட்டைக்காரனின் சாகசங்களும் வீழ்ச்சியும் நாவலின் மையஓட்டம். தங்கப்பன் ஒரு கருமாண்டி. “காட்டை நன்கு தெரிந்து வைத்திருப்பவனை கருமாண்டி என்பார்கள்“(கானகன்,ப.25). அவனுக்கு மாரி, சகாயராணி, செல்லாயி என மூன்று மனைவிகள்.
பளிச்சி செல்லாயிக்கும் அவளது முன்னாள் கணவன் பளியன் சடையனுக்கும் பிறந்தவன் வாசி. தங்கப்பனைத் தந்தையாகக் கருதி வாழ வேண்டிய நிர்பந்தம் வாசிக்கு; அவன் தந்தையின் மீது கொள்ளும் முரண், விலக்கம் இன்னொரு இழை. வாசி, தங்கப்பனை அப்பனென்று சொல்லமுடியாது(கானகன், ப.74)என்கிறான். வாசி, வனத்தின் எச்சம். பளியக்குடியின் வாரிசு. காட்டைக் காப்பாற்ற வந்த பழங்குடியின் வருங்காலத் தலைவன். தங்கப்பன் காட்டை அழிக்க வந்தவன். இருவருக்குமான முரண், மோதல் ஒரு கட்டத்தில் கதையின் மையமாகிவிடுகிறது. பளியன் வாசி, செய்யும் சாதுர்யத்தால்/உதவியால் தனது தாயைக் கொன்றவனை (தங்கப்பனை) அதன் வாரிசான குட்டிப்புலி வேட்டையாடுகிறது. முன்னர் குறிப்பிட்டது மாதிரி ‘புலி பாட்டா, பழி எடுக்கும்’ (மேலது, ப.76) என்ற பளியர்களின் நம்பிக்கை நாவலில் நிறைவேறுகிறது. வனஅதிகாரிகள், நிலக்கிழார்கள், ஜமீன், வேட்டைக்காரர்கள் என ஆளும் சக்திகளால் உருவாக்கப்பட்ட தங்கப்பனை யாரும் எதுவும் செய்ய முடியாதபோது பளியன் வாசியும் பளியர்களின் குடிச்சாமியின் வடிவான பாட்டாவும்(புலி) தங்கப்பனை வேட்டையாடுகின்றனர். தங்கப்பன் கொடுத்த துப்பாக்கியை “ஆற்றில் வீசி எறிந்த வாசி, பரணிலிருந்து இறங்கி முழுமையானதொரு பளியனாய்க் குடியை நோக்கி நடக்க" (ப.264) நாவல் முடிகிறது. வாசிப் பளியனின் வெற்றி என்பது வனம், பறவைகள், விலங்குகள், பழங்குடிகள் ஆகியோரின் வெற்றியாக நாவல் கதையாடலைக் கட்டமைக்கிறது.
தங்கப்பனின் மூன்று மனைவிகளுக்கிடையே நடக்கும் பிணைப்பும் மனத்தாங்கல்களும் கதையில் சிறப்பாக வந்துள்ளன. நாவலின் பல பகுதிகளைப் பெண்களே நகர்த்துகிறார்கள். சகாயராணி அன்சாரியுடனான காதலைச் சொல்லும்போது செல்லாயி அவளை ஆற்றுப்படுத்துவதும், மாரியோடு தங்கப்பன் உறவு கொள்வதைப் பிற பெண்கள் அவளின் உரிமை என அங்கீகரிப்பதும் பழங்குடிப் பெண்களின் தாய்வழிச் சமூகப் பண்புகளைக் காட்டுகின்றன. பெண்களின் சுதந்திரம் குறிப்பாகப் பளியர் பெண்களின் தனித்துவம் நாவலின் பலம். “பளியக்குடி பொம்பளைகள்தான் காட்டின் ஜீவன். எத்தனை பதட்டத்திலும் செய்ய வேண்டிய காரியங்களை கவனமாக செய்கிறார்கள்“(ப.39)என்கிறது நாவல். மலைவாழ் மக்களின் கட்டற்ற காதலை நாவல் எடுத்துரைத்துள்ளது. ஜமின்தாரின் மனைவிக்கும் வாசிக்குமான கூடல்(ப.122), சகாயராணிக்கும் அன்சாரிக்குமான காதல் உறவு(ப.223), செல்லாயி தனது கணவன் சடையனை விலக்கித் தங்கப்பனோடு இணைவது, கட்டையன், குயிலம்மா காதல், தங்கப்பன் இடுகாட்டில் வாழும் பெண்ணிடம்(சுப்பு) காதல் கொள்வது என நாவல் குறிஞ்சித்திணைக்கான உரிப்பொருளை மீட்டெடுத்துள்ளது. மலை வாழ்க் குடிகளின் கூடல் இயல்பானது, இயற்கைப் புணர்ச்சியில் அமைவது என்பதை நாவல் பல இடங்களில் பதிவு செய்துள்ளது. அங்கு கட்டுப்பாடுகள், வரையறைகள் இயல்பாக மீறப்படுகின்றன.
நான்கு பெரும்பொழுதுகள் அடிப்படையில் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கதை பனிக்காலத்தில் தொடங்கி, இளவேனில், கோடைக்காலம் என நகர்ந்து பெருமழைக்காலத்தில் முடிகிறது. இறந்துபோன பளியர்களின் ஆவி மரங்களில் வாழும். அதனாலே பளியர்கள் மரங்களை அழிப்பதில்லை. காய்ந்த பகுதிகளை வெட்ட மட்டுமே செய்கிறார்கள். பளியர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகள் நாவலில் பேசப்படுகின்றன. சிறுத்தை அடித்து காயப்பட்ட, தங்கப்பனுக்கு காட்டின் மூலிகைகளைக் கொண்டே ‘பூசணி’ காயத்தைப் போக்கிவிடுகிறார்(ப.217).
பூசணி தோப்படியானாக இருந்து பளியர்குடிக்கு வழிகாட்டியாகச் செயல்படுகிறார். குலத்திற்கு ஆபத்து வரும்போது குடிச்சாமியான பளிச்சி இறங்குவாள் என்பது பளியர்களின் நம்பிக்கை. நாவலில் மாதையன் மனைவி வேம்புவிற்கு பளிச்சி இறங்கிக் காட்டைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தைக் குறியாகச் சொல்கிறாள்(ப.71). ‘புலிக்கு வாய் கட்டுதல், புலியாக மாறுதல்’ என்பது பல்வேறு பழங்குடிகளிடம் காணப்படும் காப்புப் பண்பாடு. அதாவது புலி வரும் நான்கு திசைகளிலும் நரியின் வாலைக்கட்டினால் புலி விலகிவிடும், இதைப் புலியைக் கட்டுதல் என்பர். பழங்குடிகளில் ஒருவர் புலியாகவே மாறி ஆடு, மாடுகளை அடித்து, உண்பார். அதைச் சக பழங்குடிகள் பார்த்து உறுதிப்படுத்துவர். பின்பு அவரே புலியாக மாறிவிடுவதாக நம்புகின்றனர். காட்டில் வாழும் புலி அவருக்குக் கட்டுப்படும். இது பழங்குடிகளின் நம்பிக்கை என்கிறார் அமித்குமார் நாக்(தமிழகப் பழங்குடிகள்,ப.119). பூசணி பளியர் குடியிருப்புகளுக்குள் புலி, யானை வராமல் காப்புக் கட்டுகிறார். கானகன் நாவலில் பளியன் வாசியைப் புலி முகர்ந்து பார்த்து, அவனை அங்கீகரிக்கும் இடம் உண்டு. வாசி சொல்வதைக் குட்டிப்புலி கேட்கும் இடமும் உண்டு. ஆகப் பழங்குடிகளின் இனவரைவியல் கூறுகளை நாவல் பயன்படுத்தியிருக்கிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மெட்டு, போடி அகமலை, வருசநாடு ஆகிய பகுதிகளில் வாழும் பளியர்களின் வாழ்வியலைக் களமாக நாவல் வரித்துக்கொண்டுள்ளது. மொக்கநிலைப் பளியக்குடிதான் அகமலை வட்டத்தில் பெரிய பளியக்குடி(ப.32) எனும் காட்டுப் பளியர்கள், புதர்ப் பளியர்கள் என்ற இரு புலத்தாரையும் இணைத்துக்கொண்டு கதைக் கட்டமைப்பை நிகழ்த்தியுள்ளார் ஆசிரியர். பளியர்களின் மலைவாழ்க்கை, குடிசை வீடுகள், பெண்களின் தனித்துவம், குடிகளின் தொடர்ச்சி, பழங்குடிகளின் வேட்டை நுட்பங்கள் என நாவல் இனவரைவியல் தன்மையில் அமைந்துள்ளது. மலைவாழ்ப் பளியர்களின் உணவிற்கான வேட்டை தடைசெய்யப்பட்டு, நிலவாழ்க் குடிகளுக்கான சாகச வேட்டைக்கு, நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதை நாவல் விமர்சித்துள்ளது.
பளியர்களின் வேட்டை என்பது உணவிற்காக நிகழ்த்தப்படுவது. அதற்கு எல்லை, கட்டுப்பாடு உண்டு. நிலக்குடிகளின் வேட்டை என்பது சாகசம் நிறைந்தது. வணிகத்திற்கானது. கட்டுப்பாடற்றது. பெரும் அழிவை அரங்கேற்றுவது. ஜமீன் தனது பெரும்படைபலத்துடன் காட்டிற்குள் செய்யும் வேட்டைகள் கொடூரமானவை(ப.106). தோப்படியான் பூசணி பெரும் வேட்டையைத் தடுத்துப் பார்க்கிறார். ‘எல்லா மிருகத்துக்கும் இனவிருத்தி ஆகுற நேரம், இப்ப வேட்டைக்குப் போறது சுத்தமா நல்லா இல்ல’(ப.115) என்கிறார். காட்டின் உபரியையே பளியர்கள் பயன்படுத்துவர். விலங்குகளை விரட்ட மலைக்குடி மேளம் அடிக்கிறது. (ப.251) ஆனால், நிலக்குடியினர் வெடியை வெடிக்கச் செய்கின்றனர். வேட்டைக்குக் கருமாண்டிகளே வழிகாட்டி என்பதால் முதலாளிகள் கருமாண்டிகளை அடுத்தடுத்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். தங்கப்பனின் தந்தை பெரிய கருமாண்டியின் மறைவிற்குப் பின், தங்கப்பனைச் சின்னக் கருமாண்டியாக உருவாக்குகிறார்கள். பிறகு வாசியைக் கருமாண்டியாக்கத் திட்டமிடுகிறார்கள். கருமாண்டிகளை வைத்தே வனத்தை அழிப்பதுதான் பெருங்குடிகளின் வாடிக்கை. ஆனால், வாசியை, சின்னக் கருமாண்டியாக ஜமீன் உருவாக்க முயற்சித்தாலும் அவன் அதை மறுத்து, தனது குலத்தைக் காக்கப் போராடுகிறான்.
வாசி, வேட்டைக்குத் தப்பிய மான்குட்டியை வளர்ப்பதிலிருந்து அவனிடம் மாற்றம் நடைபெறுகிறது. கட்டையனோடு கொண்ட நட்பு, பாட்டா பூசணியின் அறிவுரை ஆகியவற்றின் மூலம் தன்னைக் காட்டாளனாக மீட்டுக்கொள்கிறான். வாசி, கருமாண்டி இல்லை, அவன் ஒரு பளியன் என்பதை, வனமும் மானின் மரணமும் அவனுக்கு உணர்த்துகின்றன. பூசணிக்குப் பிறகு ‘தோப்படியானாக’ வாசி வருவான் என்று பளியக்குடி, நம்புகிறது. பூசணியால் உருவாக்கப்பட்டவன் வாசி. தன்னுடைய ‘பாட்டா’ தலைமையைப் பெற்றுக்கொள்ளும் தகுதி வாசிக்கு மட்டுமே உண்டு என நம்புகிறார், பூசணி. வாசியின் தந்தை சடையன் விலங்குகளோடு விலங்காகவே மாறிவிடுகிறான். அவன் விலங்கின் மொழியைக் கற்றுக்கொள்கிறான். அவனது பேச்சை விலங்குகள் கேட்கின்றன. பளியர் குடியைத் தாக்க வரும் யானைக் கூட்டத்தை பெருங்களிறின் மீதேறி அடக்குகிறான். குடிகள் அனைத்தும் தரையில் விழுந்து அவனையும் பெருங்களிறையும் வணங்குகின்றன(ப.253). சடையன் கண்களால் தன்னுடைய மகன் வாசியிடம் வனத்தைக் காக்கக் கட்டளையிட்டு மறைகிறான்.
அன்சாரி, தமீம், இஸ்மாயில் ஆகியோர் மலைக் காட்டில் மாட்டுக்கிடை போட்டு வாழும் இடையர். இவர்களது வாழ்க்கை நாவலில் யதார்த்தமாக இடம்பெற்றுள்ளது. இஸ்லாமியர்களுக்கும் பழங்குடிகளுக்குமான உறவு நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்சாரி, தன்னை விட வயதில் மூத்த பளிச்சி சகாயராணியைத் திருமணம் செய்து கொள்கிறான். திண்டுக்கல் சிறுமலைப் பளியர்கள் இஸ்லாமியர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதை கள ஆய்வில் அறிந்து கொள்ள முடிந்தது. போடி குரங்கணி, அகமலை வாழ் பளியர்களுக்கும் போடி வாழ் இஸ்லாமியர்களுக்கும் நல்ல உறவு உண்டு. எஸ். செந்தில்குமாரின் ‘கழுதைப்பாதை’ நாவல் இதனைப் பதிவு செய்துள்ளது. சிறுமலை, அடுக்கம், திருவில்லிபுத்தூர் பளியர்கள் உள்ளுர் நகரவாசிகளிடம் தொடர்புகொண்டு தங்கள் தொழிலை விஸ்தரித்துக் கொண்டு வாழ்கின்றனர். பக்தவத்சல பாரதி, ‘பழங்குடியினர் சமவெளியில் வாழும் மையநீரோட்ட மக்களோடு ஒரு தொடர்ச்சியைக் (tribe-peasant continuum) கொண்டுள்ளனர்’ என்பது (பண்பாட்டு உரையாடல், ப.108) இங்கு கவனிக்கத்தக்கது.
நாவலில் வரும் பூசணி, தங்கப்பன் இருவரும் கொடுவிலார்பட்டி குடிகளுடன் கொள்ளும் நட்பு இயங்கியல் தன்மையுடையது. தனது மனைவி சகாயராணி, அன்சாரியின் பரணில் இருப்பதைப் பார்த்து தங்கப்பன் மகிழ்சியடைகிறான். தனது வீழ்ச்சியிலிருந்து அவள் பாதுகாப்பாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டது அவனுக்கு ஒரு வகையில் ஏற்புடையதே. அதுவும் இஸ்லாமியரின் உறவு பழங்குடிகளுக்குப் பாதுகாப்பான ஒன்றுதான். சமூக மாற்றத்தையும் மற்றமையுடனான (others) நட்பையும் பழங்குடிகள் எப்போதும் விரும்புகிறார்கள். பளியர் செயல்பாட்டாளர் மல்லிகா கல்வி, வீடு, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு என்பவை பிற சமூகங்களுக்குக் கிடைப்பது போன்று எங்களுக்கும் வழங்க வேண்டும் என்கிறார் (பார்க்க - https://www.youtube.com/watch?v=U9vWvX6D8fI). அது உரிமை அடிப்படையில் மட்டுமல்ல மாற்றத்தின் பேரிலும் அமைவது. ஆனால், மையநீரோட்ட மக்களாகத் தங்களை வலிந்து மாற்றுவதையே மறுக்கிறார்கள் பழங்குடிகள். பளியர்களைச் சந்தித்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது எனும் நாவலாசிரியரின் கூற்று (முன்னுரையில் ஆசிரியர்) நாவலிற்கு நம்பகத்தன்மையைத் தந்துள்ளது.
பளியர்களின் நம்பிக்கைகளான பளிச்சி வழிபாடு, பிரசவத்திற்கு மருத்துவச்சி வைத்துக் கொள்ளும் பழக்கமின்மை, அதிகாலையில் குழந்தைப் பிறப்பை விரும்புவது(வனம் உயிர்ப்புடன் இருக்கும் நேரம்) தேனும் தினை மாவும் பிரதான உணவாக இருப்பது(ப.137) புலியை, வேங்கை மரத்தை வழிபடுவது, பறவை, மரம், விலங்குகளோடு யதார்த்தமாகப் பேசிக் கொள்வது (சடையன்), கோடையில் வரும் சித்ரா பௌர்ணமியில் நடக்கும் பளிச்சி வழிபாடு(ப.168), இனப்பெருக்க காலத்தில் விலங்குகளை வேட்டையாடுவதில்லை ; தீப்பெட்டியை மலைக்குக் கொண்டு செல்வதில்லை; தன்னைப் பார்க்க வந்த மருமகளுக்குத் தங்கப்பன், யானைத் தந்தத்தைப் பரிசாகக் கொடுப்பது(கானகன்,ப.248)எனப் பளியர்களின் பண்பாட்டியல் கூறுகள் நாவலில் இயல்பாக இடம்பெற்றுள்ளன. வேங்கை மரத்தையும் புலியையும் பளியர்குடிகள் வழிபடுவது சங்க காலப் பண்பாட்டின் தொடர்ச்சி எனலாம்.
கண்ணகி, சேர நாட்டின் அடர் வனத்தில் தெய்வமானதைக் கண்டறிந்து உயிர்ப்பித்தவர்கள் பளியர்களே. பேரியாற்றங்கரையில் அடிகளாருக்கும் சாத்தனாருக்கும் கண்ணகியின் கதையைச் சொன்னவர்கள் பழங்குடிகளே என்கிறது சிலப்பதிகாரம். கண்ணகியைத் தெய்வமாக முதலில் வணங்கி கோவிலைப் பாதுகாத்தவர்களும் பளியர்களே என்பது வரலாறு. நாவல் வட்டார வரலாற்றை கவனத்தில் கொண்டுள்ளது. நாவலாக்கம் வட்டாரச் சூழல்களை மையப்படுத்தியுள்ளது. “தவளை நாட்டு பளியக்குடியின் கட்டுப்பாட்டிலிருக்கும் முப்பது பளியக்குடிக்கும் குலசாமி கோயில், கம்பத்திற்கு மேலாக காட்டிற்குள்ளிருக்கிறது, பளிச்சியின் வீடு. கண்ணகியை வணங்க வரும் அத்தனை பேரும் பளிச்சியைத் தாண்டித்தான் போக வேண்டும். எங்கும் ஆதரவின்றி திக்கற்றுப் போனவளை வனமகள் பளிச்சி அரவணைத்துக் கொண்டாளென பளியர்களின் கதைகள் சொல்கின்றன"(ப.33).
துப்பாக்கி ஒரு வனத்தையே அழிக்கும் ஆயுதமாக இருக்கிறது. தங்கப்பன் துப்பாக்கியைத் தன் உடலின் ஒரு பகுதியாகவே நினைக்கிறான். சுப்புவிடம் துப்பாக்கியைக் கொடுத்து அதை இயக்குவதைக் கற்றுக்கொடுக்கும்போது அவளோடு இணைகிறான். “என் உடம்புல ஒரு பாதி துப்பாக்கி" (ப.68)என்கிறான். எளிய குடிகளிடம் ஆயுதம் ஏற்படுத்தும் பதற்றம் கடுமையானது. செல்லாயி, வில், அம்பு வைத்த வேட்டைதான் நம் பளியருடையது என்கிறாள். ஆனால், ஜமீன், முதலாளிகள், வேட்டையின் ஆயுதமாகத் துப்பாக்கியைப் பயன்படுத்துகின்றனர். துப்பாக்கிகள் பளியர்களை மலையிலிருந்து வெளியேற்றுகின்றன. மாதையன் மனைவி வேம்பு சாமியாடும்போது ஊரைப் பார்த்து மண்ணை வாரித் தூற்றுவது(ப.72) பொருள் பொதிந்த ஒன்று. பளியர்களும் காடும் ஒன்றை மற்றொன்று சார்ந்திருக்கின்றனர். “பளியனும் இந்த வனமும் தனிஉலகம். இரண்டில் ஒன்று பிரிந்தால் இன்னொன்று வெகு காலத்திற்கு ஜீவித்திருக்காது”(கானகன், ப.72) என்கிறார் பூசணி. “மலைமக்களின் பாதுகாப்பில் காடுகள் இருந்தபோது அவை அழிக்கப்படவில்லை. குறிப்பாக வனச் சட்டத்திற்குப் பிறகுதான் ஜவ்வாது மலையில் இருந்த 90% சந்தனமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன" என்கின்றன ஆய்வுகள் (பக்தவத்சலபாரதி, மலைவாசம், ப.83). தோப்படியான் பூசணி “காட்டில் எல்லாம் இடம் மாறும், துரத்தப்படும், அல்லது கொல்லப்படும்“(ப.74)எனச் சொல்வது வெற்று வார்த்தைகள் அல்ல.
கஞ்சாத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லவேண்டிய பளியர்களின் அடையாள நெருக்கடிகளையும் நாவல் பதிவு செய்துள்ளது. தேன் எடுத்து உண்பதும் அவற்றை விற்பனை செய்வதும் அவர்களின் உணவு அடையாளம். “மரப்பொந்து ஒன்றில் தேன் கூட்டினைக் காண நேர்ந்தால் அது இவர்களுக்குச் சிறந்த சுவை விருந்தாகும். புகையூட்டித் தேனீக்களை ஓட்டிய உடனே அவர்கள் வெறி கொண்டவர்களாகத் தேன் கூட்டினைப் பறித்து அவ்விடத்திலேயே மெழுகு முதலியவற்றோடு கூட விழுங்கத் தொடங்குவர்” (ப.60) என்கிறது நாவல். நாவலின் பிற்பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் தங்கப்பன் தேன் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்கிறான். பணப்பயிர்களில் போடப்படும் நச்சுக்கொல்லியால் தேனீக்கள் இடம் பெயர்கின்றன. பளியர்களின் தேனெடுக்கும் தொழில் இன்று கேள்விக்குறியாகி வருகிறது. வேர்கள், கொட்டைகள், மரப்பிசின், மூலிகை போன்றவற்றை எடுத்துக் குறைந்த விலையில் விற்பனை செய்து வாழும் இனக்குழு, கஞ்சாத் தோட்டங்களில் வாழும் நிர்பந்தம். போடி அகமலை, அண்ணா நகர் போன்ற இடங்களுக்கு பெரியகுளத்திலிருந்து தார்ச்சாலை போடப்பட்ட பிறகு நகர மக்கள் அதிகமாக வரத்தொடங்கியுள்ளனர். பளியர்கள் இரண்டாம் நிலையினராக மாறி வருகின்றனர். போடி அகமலைப் பகுதிகளில் பணப்பயிர்களான காபி, மிளகு, போடப்பட்டதால் பளியர்கள் சுமை கூலிகளாக மாறிப்போனதை போடி அகமலை வாழ் சுப்ரமணி (59) நம்மிடம் பகிர்ந்து கொண்டார். மலைவாழ் இனக்குழு கொஞ்சம் கொஞ்சமாகத் தனது மலை வாழ் உரிமையை இழக்கும் அபாயத்தை நாவல் காட்டுகிறது. நிர்வாகங்கள் நிலத்தில் ஒதுக்கிய காலனியில், பளியர்குடிகள் வாழ இயலவில்லை. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்களுக்குப் புதிய குடியிருப்புகள் அந்நியமாக இருக்கிறது. பூசணி வனஅதிகாரியிடம் “ இந்தக் காடுதாங்க எங்க ஆசான், இங்க படிக்க முடியாததையா ஊர் உலகம் எங்களுக்குச் சொல்லிக் குடுத்துடப் போகுது?" என்கிறார்.
தாங்கள் வாழும் பாறைப் புடவுகளில் பல்வேறு தாவரங்களைச் சுதைமண்ணுடன் கலந்து பாறை ஓவியங்களாக வரைந்து வைப்பது பளியர், குறும்பர்களின் வழக்கம். குயிலம்மா விரும்புவது தன்னை அல்ல வாசியைத்தான் என்பதை அறிந்த கட்டையன் பொடவுக்குள் சென்று ‘தனக்கேயான தன்விருப்பங்களையெல்லாம் பொடவின் உள்பக்கமாய்ச் சித்திரங்களாய்த் தீட்டி வைத்திருக்கிறான். பொடவு இருட்டில் உட்கார்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தான்’(ப.230). “மழை வரும்போது பொடவுக்கு ஓடுவதும் மழை இல்லாத நாட்களில் குடிசையில் படுத்துக் கொள்வதுமாய் அவர்களின் இரவுகள் கழிந்து கொண்டிருந்தன“(ப.67) எனும் நாவல் பகுதிகள் பளியர்களுக்கும் பொடவிற்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பைக் காட்டுகின்றன.
பணக்கட்டுகள், டிராக்டர், ரேடியோ என்பன பளியர் குடிகளுக்குள் நுழைகின்றன. தினைஅரிசி மறைந்து காய்கறி உணவாக மாறுகிறது. மலையாளிகளும் தேனி முதலாளிகளும் கஞ்சாப் பயிரிட்டு வனத்தை வணிகமாக மாற்றுகின்றனர். ஜீப்கள் செல்வதற்கு ஏற்ப சாலை வசதிகள் செய்யப்படுகின்றன. மலைவாழ் நல அமைப்பு, மருத்துவ முகாம் எனத் தொண்டு நிறுவனங்கள் செய்யும் அரசியலில் பளியர்களின் வாழ்வில் நிலக் குடிகள் தங்களின் தொழில்சார்ப் பண்பாட்டியலைத் திணிக்கின்றனர். ஆகக் கானகன், பளியர்கள் நடைமுறையில் படும் அவலங்களை வீழ்ச்சிகளாகக் காட்டி, அவர்களின் கடந்த கால வாழ்வை உன்னதமாக விஸ்தரித்துப் பேசுகிறது. காணாமல் போகும் ஜமின்தார், குற்ற உணர்விற்கு உள்ளாகும் தங்கப்பன், புலியால் தனது உயிர் போவதைத் தங்கப்பன் ஏற்றுக்கொள்வது என அநீதியின் வீழ்ச்சிகளைக் காட்டியிருப்பது நாவலின் பலம்.
போடி மெட்டு, அகமலை, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் வாழ்ந்துவரும் பளியர்களின் நாற்பது ஆண்டு வரலாற்றில் நடந்த அகப்புற மாற்றங்களை நாவல் கவனத்தில் கொண்டுள்ளது. பழங்குடிகள் கூட்டு வாழ்வியல் சிதைக்கப்பட்டு ‘தனிநபர் நிலைக்கு’ தள்ளப்பட்டுக்கொண்டிருப்பதை வாசி, சடையன் எனும் கதை மாந்தர்கள் வழி நாவல் நிகழ்த்தியுள்ளது சிறப்பு. பூசணி முன்வைத்த பாதீடு, கூட்டுவாழ்க்கை, சமத்துவம் வாசியால் தொடரலாம்.
பளியர்களின் மொழி நாவலில் கைகூடவில்லை. தேனி வட்டாரப் பிரமலைக் கள்ளர்கள் மொழியே (சூதானமா, பெரியாம்பிள, இருக்காப்ள) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உரையாடல் குறைவு. பெண்களுக்கிடையேயான உரையாடல் கூடிவந்திருந்தாலும் இனவரைவியல் உரையாடல் தனித்து அமைந்து நிகழ்த்துதல் பனுவலாக நாவல் மாறவில்லை. பளியர்களுக்கும் பிற பழங்குடிகளான ஊராளி, புலையர், மண்ணாடி, முதுவான், போன்றவர்களுக்குமான தொடர்புகள் நாவலில் பேசப்படவில்லை. பழங்குடிகளிடையேயான பண்பாட்டிடைத் தொடர்பு முதன்மையானது, நாவல் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இவற்றை நாவலின் பின்னடைவுகளாகக் கருதமுடியும்.
பளியர்களின் வாழிடம், உணவுப் பண்பாடு, வழிபாட்டு முறைகள், சடங்குகள், உறவுநிலைகள், தொன்மங்கள், இடப்பெயர்ச்சிக் கதைகள், பழமொழிகள், அடையாள நெருக்கடிகள் எனப் பளியர்களின் வாழ்வியலை முதன்மையானதாகக் கொண்டு கானகன் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
பயன்பட்ட பிரதிகள்
லஷ்மி சரவணகுமார், 2016, கானகன், மலைச்சொல் பதிப்பகம், ஊட்டி - 643 001.
பக்தவத்சல பாரதி, 2017, தமிழகப் பழங்குடிகள், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி - 621 310.
2017, பண்பாட்டு உரையாடல், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி - 621 310.
2019, மலைவாசம், பாரதி புத்தகாலயம், சென்னை - 600 018.
- ந.இரத்தினக்குமார், உதவிப் பேராசிரியர், மதுரைக்கல்லூரி, மதுரை.