tribalpeople 600வானில் பறந்த மனிதனை நிலத்தில் காலூன்றச் செய்திருக்கிறது இயற்கை. நாகரிகம், பண்பாடு, தொழில்நுட்பம், வளர்ச்சி ஆகிய பதங்கள் இன்று நிறமிழந்து நிற்கின்றன. இயற்கையை அறியவும், உணரவும், உயிர்ப்பிக்கவுமான முயற்சிகள் மேலெழுகின்றன. மனிதன் தான் பூசிய அரிதாரங்களை இழந்து பிறந்த மேனியாக நிற்கிறான். இத்தருணத்தில் மனித இனத்தின் ஆதிகுடிகள் குறித்தக் கவனமும் அக்கறையும் பொதுநலச் சமூகத்தின் தேவையாக இருக்கிறது.

இந்தியா போன்ற தொன்மையும் நிலவியல் விரிவும் கொண்ட நாடுகளில் பழங்குடிகள் எண்ணிக்கையிலும் வகைமையிலும் அதிகமாக இருப்பது இயல்பு. பழங்குடிச் சமூகம் பற்றிய இருவிதக் கண்ணோட்டங்கள் பொதுப்புத்தியில் உள்ளன. ஒன்று அவர்கள் வனவாசிகள். நாகரிகமற்றவர்கள். அவர்களை நாகரீகப்படுத்தவேண்டும் (ஒடுக்கப்பட்ட மக்கள் சுத்தமற்றவர்கள். தினமும் குளிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வது மாதிரி). மற்றொன்று பழங்குடிகளின் வாழ்வு மேலானது. அவர்கள் மாதிரி பொதுச்சமூக மனிதர்கள் வாழ வேண்டும் என்பது. இந்த இரண்டு நிலையும் யதார்த்தமில்லை. ‘பழங்குடிகள் நம்மைப் போன்ற சகமனிதர்கள் தான்’ என்கிற உணர்வைப் பெறுவது ஒன்றே அவர்களைப் புரிந்து கொள்ள உதவும்.

பெரும்பகுதி காடுகளிலும் சிறுபகுதி மலைகளிலும் வாழ்ந்த மக்கள் சமவெளி நோக்கி தள்ளப்படுவதில் தொடங்குகிறது இவர்களின் வீழ்ச்சி. அதே போல சமவெளி மனிதர்கள் (சாமான்யர் அல்லர்) இவர்களின் வாழிடங்களையும், வனங்களையும் தமதாக்கிக் கொண்டதில் தொடர்கிறது இவர்களது அவலம். வன இலாகா தொடங்கி கார்ப்பரேட்டுகள் சாமியார்கள் வரை எளிய பலிகொள்ளல் பழங்குடி மக்களைத்தான்.

‘நினைவில் காடுள்ள மிருகம்’ என்பார் கவிஞர் சச்சிதானந்தன். அப்படி நினைவில் காடுள்ள மனிதர்கள் தான் பழங்குடிகள். ஆனால் சரணாலயங்கள் என்றும், சூழல் காப்பு என்றும் இன்று மனிதர்களற்ற ‘காப்புக்காடுகளை’ உருவாக்குகிறார்கள். தன் நிலம், சூழல், வாழிடம், தொழில், வாழ்க்கைமுறை ஆகியவற்றிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்படும் இம்மனிதர்கள் குறித்த சக மனித அக்கறை இன்றையத் தேவையாகிறது. ‘பழங்குடி மக்களைப் பற்றிய ஆராய்ச்சி அலுவல்களில் ஈடுபட்டிருந்தவர்களை ஏதோ ஒரு வியாதியைக் குணப்படுத்தும் வைத்தியர்கள் என்று கூட சிலர் நினைக்கிறார்கள்’ என்பார் வெரியர் எல்வின். அவர் தன் அனுபவத்திலிருந்து இந்த வார்த்தைகளைச் சொன்னார். இன்றும் அதே நிலைதான்.

பழங்குடிகளைப் பற்றி அயல் நாட்டினர் பலரும் முதலில் ஆய்வுகளில் ஈடுபட்டனர். மொழியியல், சமூகவியல் சார்ந்து பல ஆய்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து மானிடவியல், நாட்டுப்புறவியல், இனவரைவியல், பழங்குடியியல் சார்ந்த ஆய்வுகள் வளர்ந்து வருகின்றன. ஆதிச் சமூகம் குறித்த அறிதல்களுக்கு பழங்குடிகள் பற்றிய ஆய்வுகள் பெரிதும் துணை நிற்கும். பழங்குடி ஆய்வுகள் வழி காட்டுயிர்கள், நாட்டுப்புற மருத்துவம், வனம்படுபொருள்கள், கலைகள், வழக்காறுகள், சடங்குகள் உள்ளிட்டப் பலவற்றையும் அறியலாம். அவரவர் தேவைக்கேற்ப ஆய்வுகள் அமையும்.

bhaghtsing 450முனைவர் அ. பகத்சிங் மானிடவியல் துறையில் பயின்று ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மானிடவியல் வெளிச்சத்தில் பழங்குடிகளை அணுகும் திறனாளர். கல்வி,ஆய்வு என்பனவற்றுக்கு மேலாக, பழங்குடிகள் வாழ்வு, சிக்கல்கள், எதிர்காலம் குறித்த அக்கறை உடையவர். தமிழ்நாடு அரசு அட்டவணைப்படுத்தி உள்ள 36 வகையானப் பழங்குடி மக்கள் இனங்களுள் 13 இனங்களை அறிமுகம் செய்யும் விதமான ‘வாழும் மூதாதையர்கள்- தமிழகப் பழங்குடி மக்கள்’ எனும் நூலை எழுதியுள்ளார். இது காடு, உயிர் ஆகிய இதழ்களில் தொடராக வெளிவந்தது. உயிர்பதிப்பகம் பல வண்ணப் படங்களுடன் திரவக்காகிதத்தில் மிக நேர்த்தியாக இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

“பகத்சிங்கின் இந்த நூல் தமிழகப்பழங் குடியியலில் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல தடங்களுக்கு வழிகோலுகின்றது” என மானிடவியல் அறிஞர் ஆ. செல்ல பெருமாள் முன்னுரையில் கூறுகிறார்.

“ஒரு சமூகத்தை இனவரைவியல் அடிப்படையில் அறிவதன் நோக்கமானது அவர்களின் தனித் தன்மைகளைக் காட்சிப்பொருளாக மாற்றுவதன்று. இனக்குழுக்களின் தனித் தன்மைகளை அறிந்து அவர்களின் வளர்ச்சிக்குப் பங்காற்றுவதே” என்கிறார் நாட்டாரியல் அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன். இந்த நோக்கை

அ.பகத்சிங்கின் நூல் பெருமளவு நிறைவு செய்கிறது.

மனிதச் சமூகப் படிநிலை வளர்ச்சி நிலைகளை அறிந்திட பழங்குடிகளிடமிருந்துதான் கற்கத் தொடங்க வேண்டும். குடிமைச் சமூக உருவாக்கத்தை இந்நூலின் பல இடங்களில் காணமுடியும். தனிமனிதன், குழு, கூட்டம் என அமைப்பாகும் போது தானே சுயாதீனமாக உருவாக்கிக் கொள்ளும் நடத்தைகளே பின்னர் சமூக விதிகளாக, சட்டங்களாக உருமாறும். இந்நூலில் பல பழங்குடி இனங்களின் சமூகக் கட்டமைப்பு, நியதிகள், நீதிமுறை, தண்டனைமுறைகள், ஒழுகலாறுகள் இடம் பெறுகின்றன. இவர்கள் பொதுச் சமூகத்தின், அரசதிகாரத்தின் விதிகளுக்கு மாறாக, இயல்பாக பலவற்றை உருவாக்கிப் பின்பற்றி வாழ்வது இந்நூல் வழி பதிவாகி உள்ளது.

“பழங்குடிகளைப் பொருத்தவரையில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தைப்போல் வளர்ச்சிப்பாதைக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்” என்பார் மானிடவியல் அறிஞர் பக்தவச்சலபாரதி. இந்தப் பணியை இந்நூல் செய்யும் எனலாம். பழங்குடிமக்களின் வாழ்வியல் எல்லை மிகச் சுருக்கமானது. வாழும் இடம், அதற்குப் பட்டா, செய்யத் தொழில், சாதிச்சான்றிதழ்... இந்த வாழ்வாதாரம் நோக்கியே அவர்களின் எண்ணமும் செயல்பாடும் அமையக் காணலாம்.

பெரும்பான்மை எண்ணிக்கையிலும், தொன்மையிலும், தனித்தன்மையிலும் தமிழ்நாட்டில் வாழும் பதிமூன்று பழங்குடிகள் பற்றி இந்நூல் அறியத்தருகிறது. இப்பழங்குடி மக்களின் தொன்மம், வரலாறு, வாழிடம், பரவல், தொழில், கடவுள், சமூக அமைப்பு, வழக்காறுகள், கலைகள், கைவினைகள், மருத்துவம், சடங்குகள், பிறப்பண்பாட்டுக் கூறுகள்... என மிக இயல்பாகவும் நுட்பமாகவும் அ. பகத்சிங் வரைந்துள்ளார். எழுத்தாவணங்கள், ஆய்வுரைகள், கள ஆய்வு வழியே இவை சாத்தியமாகி உள்ளன. இவை பழங்குடிகளின் வாழ்வுக் கொடைகள். இவர்களுக்கு பதிலீடு எப்படிச் செய்வது? ஆய்வாளர் இம்மக்களின் வலிகளையும், தீராக் கோரிக்கைகளையும் கவலையோடு பதிவு செய்கிறார். இவற்றுக்காக அரசைக் கைகாட்டி ஓய்ந்து விடவில்லை. மக்கள் திரட்சி வாயிலாக வெற்றியின் ஜன்னல்களைத் திறந்து காட்டுகிறார். இதை வாசிக்கும் சமவெளி மனிதர்கள் பழங்குடிகளை கற்பதன் அரிச்சுவடியாக இந்நூலைக் கொள்ள முடியும்.

முதலில் தமிழ்நாட்டின் பெரும் பழங்குடிப் பிரிவான ‘இருளர்கள்’ குறித்து எழுதி உள்ளார். இருளர்களின் தலைவனான கோவனின் புதூரே கோயம்புத்தூர் என்பார் கமில்சுவலபில். மலையிலும் சமவெளியிலும்; வாழிடங்களைப் பொருத்து இருபெரும் பிரிவுகளாக இவர்கள் அறியப்படுகின்றனர். வேட்டையும், வில்லும்தான் இவர்களின் ஆதி வாழ்வு. எனவே‘வில்லியர்’ என அழைக்கப்பட்டனர். பின்னர் காட்டெரிப்பு வேளாண்மையிலும் வளம்படு பொருள்களைச் சேகரித்து விற்பதிலும் ஈடுபடுகின்றனர். என்றாலும், இருளர்கள் என்றாலே நினைவுக்கு வருவது அவர்களின் அடையாளமாக மாறிப்போனது பாம்புபிடித்தல். செங்கல்பட்டு போன்ற வட மாவட்டங்களில் பாம்பு விஷம் தயாரிக்கும் மையமும், பாம்புப் பண்ணைகளும் இவர்களை மையப்படுத்தி உருவாகி உள்ளன. இருளர்களின் இசையும், இலக்கியமும், வழக்காறுகளும் தனித்தன்மை வாய்ந்தவை. இருளர்களின் சமூக வாழ்வில் அவர்களின் பாலினச் சமத்துவம் குறிப்பிடத்தக்கது.

“பெண்கள் சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பங்கேற்கின்றனர். திருமணம் நிச்சயித்தபின் ஒரு வருடத்திற்கு மணமாகாமலேயே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வார்கள். பின் இவர்களுள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றால் திருமணம் நிகழும். இருவருக்கும் ஒத்துவராத சூழலில் வேறு இணையை ஏற்கும் உரிமை இருவருக்கும் உண்டு” (பக். 15) என இருளர்களின் தனிச்சிறப்புகள் சுட்டப்படுகின்றன.

மேற்குத் தொடர்ச்சிமலையின் ஆனைமலையில் வாழும் பழங்குடிகளான ‘காடர்கள்’ குறித்து அடுத்து பதிவு செய்துள்ளார். காட்டில் வாழ்பவர் எனத் தம்பெயரிலேயே அடையாளத்தைச் சுமக்கும் இவர்கள் தமிழக ஆதிப் பழங்குடிகளில் ஒரு வகையினர். வேட்டையாடி வாழ்ந்த இவர்கள் அது தடைசெய்யப்பட்டவுடன் தேன் எடுத்து விற்று வாழ்கின்றனர். மூங்கிலால் ஆன பொருட்கள் இவர்களின் கைத்திறனைப் பறைசாற்றும். “தேன் சேகரிக்கப் பெரும்பாலும் இரவு நேரங்களில் செல்கின்றனர். தேன் எடுப்பதற்குச் சுமார் 10 கிலோமீட்டர் வரைப் பயணித்துச் சுமார் 80 முதல் 100 அடி உயரத்தில் உள்ள தேன்கூடுகளை மிக நேர்த்தியாகச் சேகரிக்கின்றனர். பாறைகளிலோ, உயரமான மரங்களிலோ உள்ள தேனை எடுக்க ஏறும்போது கயிற்றை மனைவியோ, மைத்துனனோ பிடித்துக்கொள்கின்றனர். சகோதரியின் கணவனைக் காப்பாற்ற வேண்டிய கடமை மைத்துனனுடையது என்பதே அதன் பொருள்” (பக். 29). இது வாழ்வியல் மரபாக அமைகிறது. “பொதுவில் குழந்தைப் பிறப்பு என்பது ஊருக்குப் பொதுவில் உள்ள ‘எட்டாலபதி’ என்ற தனித்தக் குடிலில் நடைபெறுகிறது. குழந்தை பிறந்த பத்து நாட்கள் அக்குடிலில் வைத்திருந்த பின்புதான் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்” (பக். 33). இது வாழ்க்கை வட்டச்சடங்காக அமைகிறது.

அடுத்து, அகத்திய மலைக் ‘காணிகள்’ பற்றி விவரிக்கிறார்கள். வேட்டை, வேளாண்மை, வனம்படு பொருள்கள் சேகரிப்பு போன்றவற்றைச் செய்யும் இவர்கள் பெரும்பாலும் நாடோடிகளாக வாழ்கின்றனர். சமூகக்குழுவின் தலைவர் மூட்டுக்காணி என்றும் உதவியாளர் விளிகாணி என்றும் அழைக்கப்படுகின்றனர். திருமணம், கருவுறுதல், பிள்ளைப்பேறு போன்ற வாழ்க்கை வட்டச்சடங்குகள் இவர்களிடம் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. காணிகள் கைவினைக் கலைத்தொழில்களில் வல்லவர்கள். “மாவு இடிப்பதற்கான மரத்தினாலான உரல், மூங்கிலிலான குவளை, மூங்கில் குற்றிகள், பெட்டி, பாய், முறம், கூடை, மீன் பிடிக்கும் கூண்டு என உபகரணங்களை வனத்தில் இருந்து கிடைக்கும் மூங்கில், பனை மற்றும் பிற மரங்களில் இருந்து தயாரிக்கின்றனர்.” (பக். 39) என இவர்களின் கைவினைக் கலைத்திறன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காணிகளை உலக அரங்கில் வெளிச்சப்படுத்தியது வனத்தாவரங்கள், மூலிகைகள் வழி அவர்களின் மரபு மருத்துவமும், மருந்தும்தான். சர்க்கரை நோயைத் தடுக்கும் ‘ஆரோக்கியப்பச்சை’ யை காப்புரிமை பெற்று அதில் காணிகளின் பெயரையும் பதிவு செய்த நீண்ட நெடிய போராட்ட வரலாற்றைப் பதிவு செய்கிறது நூல். இதன் வழி பழங்குடிகளின் மரபறிவு, தொழில்நுட்பம், மருத்துவ ஆற்றல் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. காணிகாரர்களின் இசைக்கருவியான கொக்கரை தனித்துவச் சிறப்பு கொண்டது.

அடுத்து தமிழ்நாட்டின் ஆறு தொல்குடிகளுள் ஒன்றான ‘காட்டு நாயக்கர்’ பற்றி அமைகின்றது. இவர்களை காடுகளின் நாயகன் என்கின்றனர். நிலமற்ற சமூகமான இவர்கள் வேட்டையாடுதல், மீன்பிடித்தல், பறவைகளைப் பிடித்தல் ஆகிய பாரம்பரியத் தொழில்களைச் செய்கின்றனர். வேட்டையாடுதல் தடையான பின்னர் வனம்படு பொருள்களைச் சேகரித்து, சிறிய அளவு வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். மருத்துவ அறிவு இவர்களிடம் அதிகம். கைவினைக் கலைஞர்களாகவும் உள்ளனர்.

நீலகிரி ‘கோத்தர்கள்’ பழங்குடி இசைக்கும், நடனத்துக்கும் பெயர் பெற்றவர்கள். தொன்மை மிகுந்த இவர்களின் பெயரே ‘மலை மக்கள்’ (கோ- மலை, தர்- மக்கள்) எனச் சிறப்புப் பெறுகிறது. கோத்தர்கள் பற்றி பல ஆய்வுகளும் நூல்களும் வெளிவந்துள்ளன. இவர்கள் திருமணம், மறுமணம், விதவை மணம் ஆகியவற்றில் முன்னோடியாக உள்ளனர். ‘கூட்டு’ என அழைக்கப்படும் நாட்டார் நிர்வாகமுறை மரபுவழி சனநாயக அமைப்பாக உள்ளது. கைவினைப் பொருள்கள் செய்வதில் வல்லவர்கள். இவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் தனித்துவமானவை.

மாண்டல்பாம் என்ற ஆங்கிலேயரின் ஆய்விலிருந்து ஒரு நிகழ்வினை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். கோத்தர்களின் குடியிருப்புப் பகுதியில் குடியேறிய ஆங்கிலேயர் ஒருவர் அவர்களுக்கு கழிவறைகள் கட்டித்தர, அவர்கள் (கோத்தர்) இதை ஏற்காது ஊரையே காலி செய்துள்ளனர்.

“ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே இரண்டு கழிவறைகள் அமைக்கப்பட்டன. இந்தப் புதிய வழக்கத்தை விரும்பாத கோத்தர்கள், கிராமத்தலைவர்கள் முன்னிலையில் இது குறித்து முடிவெடுக்கத் தங்கள் குல தெய்வத்திடம் குறி கேட்டனர். குடியிருப்பிற்குள் கழிப்பறை அமைந்ததால் கிராமத்தின் புனிதம் கெட்டுத் தெய்வக் குத்தமானதாக ஒரு பெண்மீது சாமியிறங்கி வாக்குச் சொன்னது. எனவே சாமி குத்தத்திற்குப் பயந்து அவர்கள் அந்தக் கிராமத்தை அப்படியே விட்டுவிட்டுப் புதிய பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். புதிய வாழ்விடம் தேடுவதில் பூசாரிகளுக்கு இடையில் முரண்வர கிராமமே இரண்டாகப் பிரிந்ததாக மாண்டல்பாம் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்” (பக். 69). இந்நிகழ்வு கோத்தர்களுக்கு மட்டுமல்ல ஏனைய பழங்குடிச் சமூகங்களும் தம் வாழ்வை, பண்பாட்டை, மரபைப் பேணிக்காப்பதையே சுட்டுகிறது.

நீலகிரியில் வாழும் மற்றுமொரு தொல்குடி ‘குறும்பர்கள் (அ) குறும்பாஸ்’ ஆவர். குறும்பர் என்ற பெயரில் பல குழுக்கள் இங்கு வாழ்கின்றனர். பாலுக் குறும்பா, ஆலுக் குறும்பா, பெட்ட குறும்பா, ஜேணுக் குறும்பா, ஊராளி குறும்பா, பனிய குறும்பா, முள்ளுக் குறும்பா, நேயக் குறும்பா, குறும்பா ஒக்கலியான், அண்டக் குறும்பா, நாயாக் குறும்பா என பல இனங்களாக உள்ளனர். இவர்களில் ஆலு, பாலு, முள்ளு, ஜேணு, ஊராளி ஆகிய ஐந்து பிரிவினர் நீலகிரியில் வாழ்கின்றனர்.

சமூக அமைப்பு, சடங்குகள், நம்பிக்கைகள், நிர்வாகமுறை, வழிபாடு ஆகியவற்றில் தனித்தன்மையுடன் இவர்கள் திகழ்கிறார்கள். பழங்குடி மக்களில் குறும்பர்கள் தங்கள் பண்பாட்டை மீட்டெடுக்க ‘நாட்டுஹப்பா’ எனும் விருந்தோம்பல் நிகழ்வினை நடத்துகிறார்கள்.

“முன்பு தங்கள் விருந்தினர்களை உபசரிக்கும் சடங்கான நாட்டுஹப்பாவைத் தற்போது, இனமக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவும், தங்கள் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் இயக்கமாகவும் முன்னெடுத்துள்ளனர். தங்களின் மரபான ஆடலும், பாடலும், இசைக்கருவிகள் இசைக்க தங்கள் மருத்துவ அறிவு குறித்த பதிவுகளுடன், பாரம்பரிய சிறுதானிய உணவுடன் அனைவருக்கும் விருந்து படைக்கின்றனர் (பக். 83).

அடுத்து,‘குறுமன்கள்’. இவர்கள் ஆங்கிலேயர் வரவால் குறுமன்ஸ் ஆனார்கள். குறும்பாடு மேய்ப்பவர்களே குறுமன்கள். ஆடுமேய்த்தலால் இவர்கள் அரை நாடோடிகளாக உள்ளனர். வாழ்க்கை முறையிலும், வழிபாட்டிலும், சடங்குகளிலும் தனித்தன்மைமிக்கவர்கள். இவர்களின் குல தெய்வக் கோயில் ‘காட்டுக்கோயில்’. இவர்கள் சடங்கில் ‘காய் போடுதல்’ முக்கியமானது.

“தலையில் தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்துவதைக் காய் போடுதல் என்கின்றனர். பதினெட்டு வயது நிரம்பிய எந்தப் பாலினத்தவரும் காய் போடலாம். அருள் வந்தவர்கள் தாங்களாகவே வந்து மண்டியிட்டுத் தலைமீது உடைக்க உடன்படுகின்றனர். புதிதாக ஒருவர் காய் போட வேண்டுமானால் வழிபாட்டுப் பூசையுடன் சிறிய கலயத்தில் நீரிட்டு அதனை வாழையிலையில் பச்சரிசி, உப்பு பரப்பி அதன்மீது வைத்துவிடுவர். இதன்பின் உச்ச நிகழ்வான காய் போடுதலுக்கு கசம்மாவுடன் வீரபத்திரனையும் வணங்கிக் கொள்வர். சங்கம குலத்தவர்கள் மட்டுமே காய் உடைக்க வேண்டும். வெளியில் இருந்து பார்ப்பதற்கு மூர்க்கமான வழிபாடாகவே இது வெளிப்படுகிறது. ஆனால், காய் உடைப்பவர்கள் அனுபவம் வாய்ந்த பூசாரிகள் என்பதால், காயமோ, வலியோ பெரிதாகத் தெரியாத வகையில் பக்குவமாக உடைப்பார்கள் என்று கோவில் பூசாரியும் மக்களும் தெரிவிக்கின்றனர்” (பக். 95).

காலில் சலங்கைக்கட்டி கையில் வாளேந்தி வீரபத்திரசாமியின் வரலாறு சொல்லி ஆடும் குறும்பர்களின் ‘சேவையாட்டம்’ பழங்குடிக் கலைகளுள் சிறப்பிடம் பெறுகிறது. இவர்களுக்கு தங்கள் இன அடையாளம் பேணுவதும், அரசு சலுகைகள் பெற சாதிச்சான்றிதழ் பெறுவதும் பெரும் சிக்கலாக உள்ளது. “அரசால் தொடர்ந்து நிராகரிக்கப்படும் நாங்கள் குறுமன்ஸ் இல்லை என்றால், அரசு பட்டியலில் குறிப்பிட்டுள்ள குறுமன்ஸ் யார் என்பதை அதிகாரிகளால் அடையாளம் காட்ட முடியுமா?” (பக். 97) என்ற குரலின் ஆதங்கம் நியாயமானது.

அடுத்து ‘மலையாளிகள்’. கிழக்குத் தொடர்ச்சி மலையின் பச்சைமலை, கல்வராயன், சேர்வராயன், ஜவ்வாது மலை ஆகிய இடங்களில் இவர்கள் பரவி வாழ்கின்றனர். தமிழகத்தின் மொத்தப் பழங்குடிகளின் எண்ணிக்கையில் பாதி அளவு இவர்கள் உள்ளனர். ‘வெள்ளாள விவசாயிகள்’ ஆன இவர்கள் தங்களை வெள்ளாளக்கவுண்டர், காராளர் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் தங்கள் சமூகப்பிரிவுகளை குலம், வீடு என அழைக்கின்றனர். வாழ்க்கை வட்டச் சடங்குகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றில் தனித்தன்மையுடன் விளங்குகின்றனர்.

அடிப்படையில் சிறு நிலவுடைமையாளர்களாக விளங்கும் மலையாளிகள் சிறுதானியங்களையே உணவாக உட்கொண்டனர். தற்போது அரிசிக்கு மாறி உள்ளனர். சமூக நிர்வாக அமைப்பு இறுக்கமாக உள்ளது. பட்டக்காரன், நாட்டார், காரியக்காரர், ஊர்க்கவுண்டர், கங்காணி, மூப்பன் எனப் பல நிர்வாகப் பொறுப்புகள் இவர்களிடம் உண்டு.

பல சடங்குகள் இவர்களிடம் உண்டு. “ஏற்காடு பகுதியில் வாழும் மலையாளிகளின் ‘நரிக்கட்டுச்சடங்கு’ சிறப்பானது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாகக் கரிநாள் அன்று நரியைப் பிடித்து வந்து வழிபாட்டுச்சடங்கை நடத்துகின்றனர். இப்பகுதியின் வாழப்பாடி, கொட்டவாடி, சின்னமநாயக்கன், படையாச்சியூர், ரெங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் அச்சடங்கு நடைபெற்று வருகிறது. காட்டுக்குள் சென்று நரியைப் பிடித்து ஊர்முழுக்க ஊர்வலமாகக் கொண்டு சென்று வழிபடுவார்கள். வழிபாட்டிற்குப் பின் மீண்டும் காட்டிலேயே விட்டுவிடுகின்றனர்” (பக். 106).

மலையாளிகள் பற்றிய அண்மைக்கால வரலாற்றில் ‘வாச்சாந்தி வன்கொடுமை’ மாறாதவடு. பழங்குடி மக்களை, குறிப்பாகப் பெண்களைப் பொதுச் சமூகம் எப்படி அணுகுகிறது என்பதற்கான மோசமான தடயம் இது.

அடுத்து பாண்டிய நாட்டு ‘முதுவர்கள்’ பற்றிய விவரங்கள். ஆனைமலை மற்றும் தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். சமவெளியில் இருந்து இடம் பெயர்ந்து மலைப் பகுதியில் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டவர்கள் இவர்கள். “பொன்நிற சருமம், பொலிவான முகம், பெண்களின் தனித்துவமான புடவை அணியும்முறை, ஆண்களின் தலைப்பாகை ஆகியவை தனித்த அடையாளங்கள்... முதுவர் ஆண்கள் குடுமியும், உருமாலையும், காதில் கடுக்கனும் அணிந்திருப்பார்கள். கொண்டை கட்டுவது முதிர்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுவதால், சிறுமிகள் கொண்டை கட்டுவதில்லை. பருவம் வந்த பிறகே கொண்டை கட்டுகின்றனர். அதற்காக எடுக்கப்படும் விழாவில் ‘கொண்டைப்பாட்டுப்’ பாடுகின்றனர்.” (பக். 113)

பாண்டியப் பேரரசோடு தொடர் புடையவர்களாக இவர்களை ஆவணங்கள் காட்டுகின்றன. வேட்டையாடுதல், சிறுவிவசாயம், வனம்படு பொருள் சேகரிப்பு ஆகியன இவர்களின் தொழில்கள். இடப்பெயர்வு வேளாண்மையால் நாடோடிகளாக வாழ்ந்ததால் இவர்கள் நிலமற்றவர்களாகவே உள்ளனர். இவர்களின் வீட்டுக்கூரை ஈத்தை மரங்களால் ஆனது. சமூக அமைப்பு, சடங்குகள் இவர்களுக்கென தனியே வைத்துள்ளனர். இவர்களின் திருமணச் சடங்கு வித்தியாசமானது. திருமணம் ஒரு நிகழ்த்துதல் (றிமீக்ஷீயீஷீக்ஷீனீவீஸீரீ) போலவே நடைபெறுகிறது. “மணமகன் தன் பெற்றோரோடு மணமகளின் கிராமத்திற்கு வருகிறார் என்ற செய்தியை அறிந்த மணமகள் வீட்டார் காட்டில் சென்று பதுங்கிக் கொள்கின்றனர். முதுவர்களின் நம்பிக்கையின்படி மணமகன், மணமகளைத்தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களுக்குள் அவளைத் தேடிப்பிடிக்க வேண்டும். அதுவரை இவர்களின் உணவுத் தேவையை மணமகனின் நண்பர்கள் பார்த்துக் கொள்கின்றனர். மணமகளைக் கண்டவுடன் அவள் தோளில் புடவையும், தலைமுடியில் சீப்பையும் அணிவிக்கிறார். இருவரும் அன்று முழுவதும் தனிமையில் வனத்தில் கழிக்கின்றனர். மணமகளைக் காட்டில் தேடும்போது மணமகன் வீட்டார் ஒரு பாடலைப் பாடுகின்றனர். அதே பாடலைக் கண்டுபிடித்தபிறகு மணமகள் வீட்டார் திருமணத்தின் போது தொடர்ந்து பாடுகின்றனர்” (பக். 122).

தமிழ் நிலத்தின் ஆதிகுடிகளுள் ஒரு வகையினர் ‘பளியர்’. வனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். மலையடி- நீர் நிலைகளின் அருகே குடியிருப்புகளை அமைத்து வாழ்பவர்கள். மதுரையைச் சுற்றிய மலை, காடுகளில் வாழ்கின்றனர். அன்றாட வாழ்வியல் தேவைகளைத் தவிர எதையும் உபரியாக சேமித்துப் பழகாத பொதுமைக்குடிகள். சமூக அமைப்பு, வழிபாடு, சடங்குகள் ஆகியன இவர்களுக்கும் தனித்துவமானவை. வனப்பளியர், தெய்வப்பளியர் என இருவகையினர் உண்டு. தேன் எடுத்தல், தாவரங்களின் வேர், தண்டு, இலை, காய், பூ, கனி ஆகியவற்றிலிருந்து மருந்து தயாரிக்கும் நுட்பம் அறிந்தவர்கள். இயற்கையில் வாழும் வன உயிரிகளையும், வனத் தாவரங்களையும் நன்கு அறிந்தவர்கள். இதுவே இவர்களின் பலமாகவும், பலவீனமாகவும் அமைந்துவிட்டது. வேட்டையாடுபவர்கள் இவர்களைப் பயன்படுத்தினர். மருந்து, மருத்துவ முறைகளைச் சமவெளியினர் இவர்கள் வழியே அறிந்து சந்தைப்படுத்தினர். வனத்தில் வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்ந்த பளியர்கள் வனச்சுருக்கத்தால் வாழ்க்கைச் சுருங்கி அரசு ஒதுக்கிய குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டுத் தொன்மைப் பழங்குடிகளுள் ‘பணியர்’ தனித்தன்மையினர். மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் இவர்கள் தமிழகத்தின் நீலகிரி, பந்தலூர், கூடலூர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். மலையாளத்தில் பணியர் என்றால் வேலையாள் என்று பொருள். பணியர், பணிக்கர், பணிக்காரர் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர். காலனிய ஆட்சிக்காலத்தில் நீலகிரிப் பகுதிகளில் பணியர் பண்ணை அடிமைகளாக இருந்துள்ளனர். நிலங்கள் கைமாறும் போது இவர்களும் விற்கப்பட்டுள்ள விவரம் ஆவணங்களில் பதிவாகி உள்ளது.

பண்பாட்டுக் கூறுகளில் அவர்கள் பல சிறப்புத் தன்மையினைக் கொண்டுள்ளார்கள். வாழ்க்கை, தொழில், பொருளாதார நிலை சார்ந்தே சடங்குகள் நிகழ்கின்றன. இவர்களின் சமூகக் கட்டமைப்பு இறுக்கமானது. இவர்களின் பஞ்சாயத்து அமைப்பு ‘கொட்டாணி’. இவர்களின் தலைவர் ‘மூப்பர்’. சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட தண்டனை முறைகளும் உண்டு.

மேற்கு மலைத் தொடரில் வாழும் தொன்மைப் பழங்குடிகள் ‘தோடர்கள்’. தமிழகத்தின் அனைத்துப் பழங்குடிகளிடமிருந்தும் வேறுபட்டவர்கள். இவர்களின் தோற்றம், உடை, சடங்குகள், வழிபாடு, ஆயர்தொழில், எருமை பலியிடல், திருமணம் ஆகியவை பிற சமூகங்களை ஈர்க்கும் தன்மையன. இவர்களின் குடியிருப்புக் கிராமம் ‘மந்து’. இவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலம் ‘ஒத்தைக்கல் மந்து’. அதுவே ஆங்கிலத்தில் உதகமண்ட். தோடநாடு என்றும் உதகமண்டலம் அழைக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

எருமைகளுடன் குடிபெயர்வது இவர்களின் வழக்கம். தோடர்கள் ஆயர் தொழிலில் ஈடுபடுவதால் இவர்களுக்கு பால் கோயில் (Dairy temple)  உண்டு. இவர்களின் திருமணம் முறையுள்ள இருவரிடையே குழந்தைப்பருவத்தில் (2,3 வயது) நிச்சயிக்கப்படுகிறது. இது‘கல்கோத்’. பெண் பருவம் எய்தியதும் இணைந்து வாழ்வது ‘குவுசெட்த்’. அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தவரான தோடர்கள் இறப்புச் சடங்கில் எருமைகளைப் பலியிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தோடர்களின் ‘பூத்தையல் கலை’ சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.

‘சோளகர்’, சத்தியமங்கலம் பகுதியில் வாழ்பவர்கள். சோலைகளை ஆள்பவரே சோளகர். செளிகர், பெள்ளீர், சூருள், தென்னீர், ஆலர் ஆகிய ஐந்து குலங்கள் இவர்களுக்குள் உண்டு. எண்ணிக்கையில் குறைவான (பழங்குடிகளுள் 1 %) இவர்கள் குடும்பம், வழிபாடு, உணவு, சடங்குகள் ஆகியவற்றில் தனித்து விளங்குகின்றனர். பாரம்பரிய மருத்துவ அறிவுமிக்க இவர்கள் பல நோய்களுக்கு மருந்தும், மருத்துவமும் அளிக்கின்றனர். வேட்டை, உணவு சேகரிப்பு நிலையிலிருந்து விவசாயப் பயிரிடுதல் நிலைக்கு மாறி உள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சோளகர்களே. அதே போல சாதிச்சான்றிதழ் பெறுவதிலும் சிக்கல் நிகழ்கிறது. “ஊராளி” இனத்தவருக்கும் இவர்களுக்கும் அடையாளச் சிக்கல் தொடர்கிறது.

இவர்களின் வாழ்வில் வில்-அம்பு சடங்கு முக்கியமானது. “பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்தில் முழுநிலவு தினத்தில் இது நடத்தப்படுகிறது. பெண்ணின் கருவில் உள்ள சிசுவிற்கு ஒரு ஆண் சமூகரீதியாகத் தந்தைமுறை அங்கீகாரம் கோருவதே இந்தச் சடங்கின் முக்கியத்துவம் ஆகும். இச்சடங்கு நிகழ்ந்த பிறகு அப் பெண் அந்த ஆணோடு தொடர்ந்து வாழ்ந்து பெற்றெடுக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் அவனே தந்தையாகக் கருதப்படுவான். மாறாக அந்தப் பெண் வேறு ஒரு ஆணோடு வாழ முற்படும்போது குழந்தைகள் அவளோடு செல்வதில்லை. மாறாகத் தந்தைவழிக் (Patriclan)  குலத்தின் வாரிசாகவே கருதப்படும். அவள் வேறொரு ஆணுடன் சேர்ந்து வாழும்போது ஏற்படும் கர்ப்பத்திற்கு வில்-அம்பு சடங்கு மீண்டும் நிகழ்த்தப்பட்டுக் கருவில் உள்ள குழந்தைக்கு உரிய ஆண் தந்தை உரிமை கோரவேண்டும்” (பக். 159). இவர்கள் பல ஆண்தார முறையைப் பின்பற்றுகின்றனர்.

தமிழகப் பழங்குடி மக்களில் பதிமூன்று வகையினர் குறித்த அறிமுகத்தை இந்நூல் தருகிறது. பழங்குடிகளின் தோற்றம், வாழ்வு, இருத்தல், பண்பாட்டுக்கூறுகள், சிக்கல்கள் குறித்து நூலாசிரியர் சுவையாகவும், கவனமாகவும் கருத்துக்களைத் தந்துள்ளார். அவர்கள் யாரோ அல்லர். வாழும் (நம்) மூதாதையர்கள் என்பதன் வழி பழங்குடி மக்கள் குறித்த அக்கறை வெளிப்படுகிறது. அவர்களின் வாழ்க்கையைக் காட்சிப் பொருளாக்கிவிடாமல், கரிசனத்துடன் பொதுச் சமூகத்தின் கண்ணோட்டத்தைக் கோரி நிற்கிறது நூல்.

பழங்குடிகளின் வாழ்க்கை முறைமை என்பது பன்மைத்துவப் பண்பாட்டின் அடித்தளம். “இங்கு யாரும் பழங்குடிகளை நாகரிக மனிதர்களாக மாற்றும் ‘பாவைக் கூத்து’ நடத்த வேண்டாம். அந்தக் கவர்ச்சிப் பொம்மைகளை ஆட்டுவிக்கும் ‘கார்பரேட்’ கரங்களை நாம் அறிவோம். இந்த அரசியலைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளப் பழங்குடிகளின் வாழ்வியலைக் கற்கவேண்டும். அதற்கு அ.பகத்சிங் எழுதியுள்ள ‘வாழும் மூதாதையர்’ துணையாக நிற்கும்” என்ற எழுத்தாளர் நக்கீரன் வார்த்தைகளை வழிமொழியலாம்.

வாழும் மூதாதையர்கள் (தமிழகப் பழங்குடி மக்கள்) 

அ.பகத்சிங் / விலை: ரூ.600/-, உயிர்பதிப்பகம் / தொலைபேசி: 9092901393, 9841204400)

Pin It