book hiku”கண்ணில் தெரியும் கடவுள்” நூலைச் சமீபவத்தில் நண்பர் மு.தனஞ்செழியன் கொடுத்துப் படிக்கச் சொன்னார். ஹைக்கூக்களின் கவிதைத் தொகுப்பு அது. கொஞ்ச நேரத்தில் படித்து விடலாம் என்று படிக்க ஆரம்பித்தேன். நூலை வைக்க முடியவில்லை.

ஆழமும், அகலமுமான பரப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது நூல். சமகாலப் பிரச்சனைகள் மனதை வாட்டியது. மீள முடியாத வேதனையில் என் மனப் போராட்டங்கள் நீண்டு கொண்டிருந்தன. இது போதாதா, என் எழுது கோல்களுக்கு. கண்ணில் தெரிந்த கடவுளைத் தடவித் தடவி வார்த்தைகள் ஆக்கினேன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறம் கிளையின் வெளியீடாக வந்திருக்கும் ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு இது.

கொரோனாக் கால நெருக்கடியில் பிறந்த கவிதைகள் இவை. மனதை நெருடுகிற காட்சிகளின் படிமங்கள் இவை. ரத்தம் உறைய வைக்கிற வார்த்தைகளின் வெளிப்பாடுகள் இவை.

சீக்கு வந்த கோழிக் குஞ்சுகளின் கண்மூடிய தூக்கம் அல்ல இவை.

தன் குஞ்சை தூக்க வருகிற கருடனை சிறகு விரித்து குரல் தெறிக்க கத்தி ஓட ஓட விரட்டுகிற தாய்க் கோழியின் பரவசம் இவை.

இந்நூலிலுள்ள, கவிதையைப் படித்தால் சுளீர் என்று ஓரிடத்தில் சுடுகிறது.. எங்கிருந்தோ வந்து கண்ணில் விழுந்த தூசி போல் நெருடுகிறது..

எவ்விதப் பாதிப்பையும் படிப்பவர் மனதில் ஒரு கவிதை ஏற்படுத்தவில்லை என்றால், அக்கவிதை தோற்றுப் போய் விடுகிறது. உள்ளே புகுந்து வெவ்வேறு தூண்டுதல்களை ஏற்படுத்தி அகலாது நிலைத்து நிற்குமானால் அக்கவிதை ஜெயித்து விடுகிறது. அதுவே உன்னதமான கவிதை ஆகிறது. காலம் கடந்தும் நிலைக்கிறது. அவ்வகையில், இந்நூல் கவிதைகளில் பல, பல்வேறு உரசல்களை மனதிற்குள் உண்டாக்கி உயர்ந்து நிற்கின்றன.

”உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூ'விற்கு யாரையும் மயக்கக் கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய 3 அடி வடிவம், அழகான படிமங்களால், அழகான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை பிரபஞ்சத்தின் அந்தரங்கங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும்.

அதன் தத்துவப் பார்வை, சுண்டக் காய்ச்சிய அதன் இறுகிய மொழி நடை எல்லாவற்றையும் விட அதன் எளிமை, இவையெல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்” என்று ஜப்பானிய ஹைக்கூ, தமிழில் நிகழ்த்தும் தன்மையைத் திருமதி லீலாவதி அழகாகக் கூறுவார்.

எழுபத்தைந்து (75) கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கி இந்நூல் இக்காலகட்டத்தின் காலக் கண்ணாடியாக விளங்குகிறது. நடப்பியலின் எதார்த்தத்தைக் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் காட்டாமல் அப்படியே வார்த்தைகளில் கொட்டித் தீர்த்து இருக்கிறார்கள்.

சமுதாயத்தின் மேல் பயம் இல்லை. வீரமோடு தம்தம் கருத்தினை விளக்கி விளாசித் தள்ளி இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு தீப்பந்தம் இருக்கிறது. உலகைக் கூட, அது சுட்டெரித்து விடும் தன்மையது. இன்று நடந்து கொண்டிருக்கும் அரசியலின் இழிநிலையைப் பா.செந்தில் தமது கவிதையில் கூறும்பொழுது,

காசு வாங்காமல்
வாக்களித்தேன்…
விரலில் கறை.

என்கிறார். காசு வாங்கிக் கொண்டு ஓட்டு அளிக்கும் முறை, அரசியல்வாதிகளின் நாடகங்கள், ஓட்டு வாங்கியமைக்குப் பிறகு மக்கள் ஏமாற்றப்படல் என இருக்கும் இந்நிலை உண்மையான ஜனநாயகவாதிக்கு ஏமாற்றமே அளிக்கிறது. எனவே, என் கைகளில் மை வைத்தது கறையாக இருக்கிறது என்று கவிஞர் வருத்தப்படுகிறார்.

காவல்துறையில் நடக்கும் சில அக்கிரமங்கள், சாதாரண மனிதனை நிலைகுலைய வைக்கிறது. தூத்துக்குடியில் தற்போது நடந்த தந்தை, மகன் கொலை வழக்கு, காவல்துறை மீதான கேள்விக் கணைகளைத் தொடுக்கப் பலருக்குக் காரணமாய் அமைந்தது. அதைக் கவிதையாகத் தருவதற்கு முயற்சி செய்து கூறும்பொழுது,

ஆணவ வெறியர்கள்.
ரத்த லத்தியில் எழுதவில்லை…
காவல்துறை உங்கள் நண்பன்.

எனக் கவிதா பிருந்தா கூறுகிறார்.

தமிழகத்தை உலுக்கிய மாபாதகச் செயல் அல்லவா அது? கவிஞர் எதற்கும் பயமில்லாது தமது கருத்தை தமது கவிதையில் பதிவு செய்துள்ளார். இது, தமிழக வரலாற்றில், கவிதை வரலாற்றில் அழிக்க முடியாத சுவடாகி இருக்கிறது. ஒரு நிகழ்வும், அது பார்வையாளன் உள்ளத்தில் ஏற்படுத்திய வடுவும், ஒரு சேர நிகழ்வையும் ஏற்படுத்திய சலனத்தையும் படமாக்கி தந்திருக்கிறது. இதேபோல் இன்னொரு கவிதையில், காவல்துறையின் மாண்பைக் கவிஞர் மு தனஞ்செழியன் கூறும்பொழுது,

காவலரைக் கடித்த
கொசுவும்...
அடிபட்டே செத்தது

என்கின்றார் காவலரைக் கடித்த சிறு உயிரினம் கொசு. அதுகூட கடித்துவிட்டு சும்மா போய் விட முடியாது. கொசு தானே என்று கூட காவலர்கள் விட்டுவிட மாட்டார்கள் என்ற எண்ணத்தைக் கவிஞர் தம் கவிதையில் பதிவு செய்துள்ளார்.

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணம் ஒன்றையே கருதுகோளாகக் கொண்டிருக்கிறார்கள். நோயாளிகளிடம் பரிவோடு நடந்து கொள்வதில்லை. மருத்துவரும், மருத்துவ வசதிகளும், பணம் இருப்பவர்களுக்கே எனும் எண்ணம் பொதுவாக இன்று பொதுவெளியில் அனைவராலும் பேசப்படுகின்றன. அதனை,

இனிப்பு மருந்து தான்.
கசக்க வைக்கிறது…
மருந்தின் விலை.      (ந ஜெகதீசன்)

மருந்துக் கம்பெனிகளால்
சாகா வரம் பெற்றன…
நோய்கள்.                    (பூ முருகவேள்)

நடந்து சென்றவர்
நடைப்பிணமாய் திரும்பினார்
தீவிர சிகிச்சை.             ( பா கெஜலட்சுமி)

இன்னும் இதுபோன்ற கவிதைகள் சமதளமற்ற நிலையைத் தோலுரித்துக் காட்டுகின்றன. உயிரை நேசிக்க வேண்டிய மருத்துவமனைகள் பணம் கொழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆக மாறிக் கொண்டிருக்கிறது என்ற வேதனை கவிஞர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதுவே படைப்பாகவும் வெளிவந்திருக்கிறது.

சாதீயத் தீண்டாமை குறித்த ஹைக்கூக் கவிதைகள் அதிகம் காணப் படுகின்றன. அறிவியலில்..சமூகம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும், ஜாதியின் கொடூர நாக்குகள் இன்னும் விஷத்தைக் கக்கிக் கொண்டு தானிருக்கின்றன.

நவீன கவிதைப்புரட்சியில் புதுக்கவிதைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அக்கவிதைப் புரட்சியில், அதன் பாடுபொருளான சமூகக் குறைகளும் ஒரு முக்கியக் கருதுகோளை அமைந்திருக்கின்றன என்பதை அறிகிறோம். கவிஞர் மு.தனஞ்செழியனின் ஒரு கவிதை சாதீயத்தீண்டாமையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறன அவ்வாறான ஒரு கவிதை,

இறந்த சடலங்களிலும்
ஜாதி பார்க்கின்றன
மனித பிணங்கள்.

என்பதாகும். மனிதன் பிணமாக அர்த்தமற்ற வெற்று வாழ்க்கை வாழ்கின்றான் என விரக்தியாய் சாடுகின்றார்.

இத்தொகுப்பில், கொரோனாத் தொற்றுநோய் ஊரடங்கின் போது, பாதிக்கப் பட்ட வாழ்வாதாரங்கள் குறித்த அவலங்களை, பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்த சிறு, சிறு தொழில்கள் செய்தவர்களின் மன வேதனையை அதிகமாகக் கவிதையாக்கித் தந்துள்ளனர்.

பசி, வறுமை, இயலாமை, இழப்பு, சமூக அவலங்கள், அரசியல் பித்தலாட்டம், மருத்துவமனை அநீதிகள், அழகியல் எனக் காட்சிகள் விரிய கருத்தாக்க வெளிப்பாடுகள் கவிஞர்களின் கைகளில் வெளிப்பட்டுள்ளன.

கவிதைத் தொகுப்பில், மிகத் தரமான கவிதைகளை மட்டுமே தேர்வு செய்து வெளியிட்டு இருக்கின்றனர். மு.தனஞ்செழியன் எனும் கவிஞர் 15 கவிதைகளை எழுதியுள்ளார். சிறந்த பொருளாளுமை மிக்க கவிதைகளாக அவைகள் விளங்குகின்றன. குறிப்பாக,

கட்டில் கால்கள்
இழுத்துப் போயின வங்கிக்கு…
முதியோர் உதவித் தொகைக்காக.

என்னும் கவிதையைக் கூறலாம்.

இன்னும் வாகன வசதியும், மருத்துவ வசதியும், குடிநீர் வசதியும், கல்வி வசதியும் இல்லாத கிராமங்கள் இந்தியாவில் எத்தனை? எத்தனை?

பசியால் உயிரிழந்த தாய், அதுகூடத் தெரியாமல் பிஞ்சுக் குழந்தை தாயிடம் விளையாடிக் கொண்டு இருந்த காட்சிகளைத் தினசரியில் பார்த்த பொழுது, இரத்தக்கண்ணீர் வடித்தார்கள் மக்கள். இந்தச் சோகமான காட்சியை,

அசையாத அம்மாவின் இமைகளை
விளையாட்டாய் மூடின.
பிஞ்சு விரல்கள்.

என்கிறார் கவிஞர் மு தனஞ்செழியன். அரசியல் இன்று எவ்வளவு மலிந்து செய்யப்படுகிறது கட்சிகளால் என்பதைக் கண்டு வெறுக்கும் கவிதைகள் காணப்படுகின்றன. அதேபோல, கவிஞர் மு தனஞ்செழியன் கூறும் பொழுது,

பொதுக்கூட்டம் முடிவதற்கு உள்ளேயே
முடிந்து போய்விட்டது
பிரியாணி

என்கின்றார். பிரியாணியைக் காட்டிக் கூட்டம் கூட்டும் அரசியல்வாதிகளின் தன்மை, பிரியாணிக்காக அலையும் மக்கள். யாரைத் திருத்துவது? கவிஞரின் கோபம் கவிதையில் வெளிப்படுகிறது.

போர்க்களக் காட்சியைப் பாடுவதைச் சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையாகப் ”புறத்திணைப் பாடல்கள்” எனும் வகையில் அதிகம் காண்கின்றோம். சிற்றிலக்கியங்களில் பரணி பாடுதல் எனும் வகையில் நிறைய இலக்கியங்கள் பாடியுள்ளமையை அறிகிறோம்

தற்காலத்தில் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் நடக்கும் பல்வேறு விதமான சமூகப் போர்களைப் பதிவு செய்வது போல இந்நூல் காணப்படுகிறது.

அழகியல் கவிதைகள் குறைவாகவும், சமூகப் பிரச்சனைகள் பெரும் பான்மையாகவும் கவிஞர்களின் படைப்பில் வெளிப்பட்டுள்ளன.

குறிப்பாய், கவிதைகள் காலத்தின் தெறிப்புகள். கண்ணில் தெரியும் கடவுள் பசித்த பொழுது உணவு தந்தவன் என்றாலும், இங்கு சமூகத்தில் நடப்பவை கண்டு, கடவுள் நிசமாகவே இரத்தக் கண்ணீர் வடிப்பார்.

- பாரதிசந்திரன்

Pin It