jayakanthan 3501972-இல் தாமரையில் வெளிவந்த ‘ஊற்றில் மலர்ந்தது’என்னும் என் குறுநாவலை ஒரு இலக்கியக் கூட்டத்தில் கடுமையாகச் சாடியிருந்தார் ஜெயகாந்தன். அவருடைய சாடலுக்கு எதிர் வினையாக மதுரை நகர் கலை இலக்கியப் பெருமன்ற வட்டத்திலிருந்து தோழர் சந்திரபோஸ் காட்டமான மறுப்பு தாமரையில் எழுதியிருந்தார். அப்படிதான் ஜெயகாந்தனும் நானும் உறவுகொள்ளத் தொடங்கினோம்.

ஆனால் அதற்கு முன் 1960-லிருந்தே நான் ஜெயகாந்தனின் தீவிர ரசிகன். ஆனந்த விகடனில் வெளிவந்த அவருடைய எந்த கதையையும் நான் வாசிக் காமல் விட்டுவைத்ததில்லை. அவருடைய கிட்டத் தட்ட கடைசிக் கதையான “அந்தரங்கம் புனிதமானது”கதையையும் நான் வாசித்திருக்கிறேன். வாசித்தது மட்டுமல்ல, அந்தக் கதைகளில் மயங்கிக் கரைந்திருக் கிறேன். மற்றபடி அவருடைய நாவல்கள் அத்தனையும் வாசித்திருக்கிறேன். அவற்றில் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

அவரை முதன்முதலில் நான் சந்தித்தது பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் எட்டயபுரம் பாரதி விழா மேடையில் தான். என்னைவிட ஆறுவயது மூத்தவர். அடேயப்பா! அடர்ந்த சுருள்சுருளான கிரீடத்தைச் சிலுப்பிக் கொண்டு, அகன்ற நெற்றியும் பெரிய மீசையுமாக, அந்தக் கட்டம் போட்ட சட்டை அணிந்த குட்டையான மனிதர் மேடையில் பேசவா செய்தார்? பாரதியாய்ப் பொங்கி வழிந்தார். அவருடைய ஒவ்வொரு அசைவையும் வியப்போடு கவனித்துக் கொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல, அங்கே கூடியிருந்த திரளான மக்களும் அப்படிதான் மயங்கிப் போயிருந்தார்கள். அக்காலத்தில் ஜெயகாந்தன் ஒரு பிரபல திரைப்படக் கதாநாயகன் போலத் தமிழ் இளைஞர்களை வசீகரித்தார்.

அதன் பிறகு எத்தனையோ மேடைகளில் இருவரும் சந்தித்திருக்கிறோம். இஸ்கஸ் மேடை, கலை இலக்கியப் பெருமன்ற மேடை, அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக மேடை, எல்லா மேடை களிலும் பாரதியாகவே ஆவேசப்படுவார் ஜெயகாந்தன். என் தலைமையில் 1985-இல் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைபெற்ற அணு ஆயுத எதிர்ப்பு, மனித ஒற்றுமைச் சமாதான ஊர்வலத்தினர் இடை யிடையே பல இடங்களில் நடத்திய பொதுக் கூட்டங்கள் பலவற்றில் உரையாற்றினார் ஜெயகாந்தன்.

1986 என்று நினைக்கிறேன். இராஜராஜன் விருது ஜெயகாந்தன் பெற்றதற்கான பாராட்டு விழா. மதுரைத் தோழர்கள் அதைச் சிறப்பாக நடத்தினார்கள். பாராட்டுரை வழங்கும் ஒருவராக நானும் அழைக்கப் பட்டிருந்தேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் வேலை செய்து கொண்டிருந்த நான் அடித்துப் பிடித்து மதுரை வந்துசேர ரொம்ப நேரமாயிற்று. வழிநெடுக ஜெயகாந்தன் கதையுலகத்தில் மிதந்துகொண்டே வந்த என்னை, மண்டபத்துக்கு வந்ததும் அப்படியே மேடை ஏற்றி மைக் முன் நிறுத்திவிட்டார்கள் தோழர்கள். என்ன பேசினேன் என்று இப்போது நினைவில்லை. என்ன பேசியிருப் பேன்? ஜெயகாந்தனை ரசித்து உள்வாங்கிய என் பரவச உணர்வைக் கொட்டியிருப்பேன்.

அழுத்தமான ஒரு நம்பிக்கை எனக்கு உண்டு. கவிதையில் பாரதி எட்டிய உச்சத்தைச் சிறுகதையில் ஜெயகாந்தன் தொட்டார் என்பது அந்த நம்பிக்கை. தமிழகக் கவிஞர்கள், அறிஞர்கள் பற்றிச் சொல்லும்போது பாரதியை மட்டும் அவன் இவன் என்று ஒருமையில் சொல்லும் வழக்கம் எப்படியோ என்னைத் தொற்றிக் கொண்டிருந்தது. பாரதி நிகரற்றவன் என்ற பேருணர்வு அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அத்தகைய பேருணர்வில் அன்று ஜெயகாந்தனையும் அவன் இவன் என்று ஒருமையில் குறிப்பிட்டுப் பேசிவிட்டேன். என்னை அறியாமல் பொங்கிய பரவச வார்த்தைகள் அவை.

ஏற்புரை சொல்லும்போது நான் அவரை ஒருமையில் பேசியதைக் குறிப்பிட்ட ஜெயகாந்தன் இப்படிச் சொன்னார். “பொன்னீலன் தன் உரையில் என்னை அவன் இவன் என ஒருமையில் குறிப்பிட்டார். என்மீது அவர் கொண்டுள்ள அளவில்லாப் பிரியத்தின் காரணமாகத்தான் அப்படிக் குறிப்பிட்டிருப்பார் என்று நம்புகிறேன்.” சொல்லிவிட்டுத் தனக்கே உரிய பெருந்தன்மையோடு சிரித்தார் அந்த மேதை.

1980 - களில் கலை இலக்கியப் பெருமன்றச் செயல்பாடுகளில் சற்றுத் தொய்வு ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்தில் மூத்த தோழர் ஆர்.கே. கண்ணன் அதன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு கருத்தை முன் வைத்தார். ‘நமக்கு இந்திய அளவில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம் என்ற பேரமைப்பு இருக்க, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்ற தனி அமைப்பு தேவையில்லை. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற அமைப்பைக் கலைத்துவிட்டு, எல்லாரும் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம் அமைப்பின் தமிழ்நாடு கிளை உறுப்பினராகி, அந்த அமைப்பை வளர்க்க வேண்டும்’என்றார். அன்று அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக இருந்த

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் பீஷ்ம சகானி இதற்காக ஜெயகாந்தன் வழியாகவும், ஆர்.கே. கண்ணன் வழியாகவும் கடுமையாக முயன்றுகொண்டிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பீஷ்ம சகானி பக்கம் சாய்வதைப்போல் தெரிந்தது.

என்னைப் போன்ற சிலருக்கு இந்தச் சாய்வு வருத்தத்தைத் தந்தது. கடுமையாக வாதிட்டோம். “அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத் தையும், இப்டா அமைப்பையும் நன்கு அறிந்தவர் ஜீவா. அதன் மாநாடுகளில் அவர் நிச்சயம் கலந்திருப்பார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநாடு பலவற்றில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத் தலைவர்கள் கலந்து சிறப்புரையாற்றி யிருக்கிறார்கள். அவர்கள் அங்கீகாரத்துடன் தான் ஜீவா இப்டாவையும் முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத் தையும் இணைத்துத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கினார் என்பது ஆழ்ந்த பொருளுடையது. கலையும் இலக்கியமும் இணைந்த ஒரு பேரமைப்பாக, புதிய மனிதரை உருவாக்கும் ஒரு பண்பாட்டுப் பட்டறையாகக் கலை இலக்கியப் பெருமன்றத்தை ஜீவா கனவு கண்டார். முதல் மாநாட்டில் அந்தக் கனவைத் தெளிவுபடுத்தியும் காட்டினார். அந்த அமைப்பையே இருபதாண்டு களுக்குப் பின் கலைத்துவிட்டு, அகில இந்திய அமைப்பின் கிளையாக மாறுவது சரியல்ல. நம் மொழியும், பண்பாடும் குறுகிவிடும் என்றோம்.

காரசாரமான விவாதங்களுக்குப் பின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தனியாக இயங்கட்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. அகில இந்திய முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ்நாடு கிளையாகக் கலை இலக்கியப் பெருமன்றத்தை இணைத்துக் கொள்ள நாங்கள் ஒப்புக் கொண்டோம். அதன்படி நான் பொறுப்பிலிருந்த காலங்களில் இணைப்புக் கட்டணமும் கட்டி வந்தோம்.

மிக விரைவிலேயே, ஜெயகாந்தன், எந்த இடத்தில் என்பது நினைவில்லை, அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தமிழ்நாடு கிளையை அமைத்து, அதன் முதல் மாநாட்டையும் கூட்டினார். அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி ஜெயகாந்தன் என்னையும் அழைத்தார். மாநாட்டின் தொடக்கமாக ஒரு ஊர்வலம். நடிகர் ராஜேஷ், நான், இன்னும் பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டோம். ஊர்வலத்தில் ஜெயகாந்தன் கலந்து கொள்ளவில்லை. ஊர்வலம் பல தெருக்கள் வழியே சுற்றி மாநாட்டு மேடைக்கு வந்தது.

மாநாட்டில் ஜெயகாந்தன் தொடக்க உரை ஆற்றினார். பாரதியை மையமாக வைத்து அவர் ஆற்றிய உரை எல்லாரையும் கிறங்கவைத்தது. ஆயினும் அதன்பின் அந்த அமைப்பு பரந்த அளவில் செயல் படவில்லை. சில இடங்களில் சில கூட்டங்கள் நடந்தன. கலை இலக்கியப் பெருமன்ற மாநாடு களுக்கும், விழாக்களுக்கும் நாம் அழைத்தபோதெல்லாம் வந்து பெருமைப்படுத்தினார் ஜெயகாந்தன்.

கோவை குண்டு வெடிப்புக்குப் பின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவையில் நடத்திய மாநாடு பெரும் எழுச்சியை நமக்குத் தந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி ஜெயகாந்தனை அழைப்பதற்காக அவர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சென்னைக்கு செல்கிற காலங்களிளெல்லாம் அவரைச் சந்திப்பதற்காகத் தவறாமல் அவர் இல்லத்துக்கு நான் போவது உண்டு.

மாலை வேளையில் பெரும்பாலும் அவர் தன் சத்சங்கத்தினரோடுதான் இருப்பார். ஆச்சரியமாக இருக்கும். கைரிக்ஷ£ இழுப்பவரும் அங்கே நாற்காலியில் இருப்பார். மிகப்பெரிய அரசு அதிகாரியும் அங்கே அவர் பக்கத்தில் இருப்பார். கோடீஸ்வரரும் அங்கே இருப்பார். அன்றாடங்காய்ச்சியும் இருப்பார். சமத்துவம் உலாவும் இடமென்றால் நிஜத்தில் அதுதான்.

அவரை மாநாட்டுக்கு அழைக்கப் போயிருந்த நேரம் அவர் சற்று விரக்தியாகப் பேசினார். ‘நான் எழுத வேண்டியதையெல்லாம் எப்பவோ எழுதிவிட்டேன். அவைகளை மக்கள் படிக்கட்டும். புதிதாக என்ன பேசப் பேகிறேன்’என்றார். அவர் கேட்டது சாதாரண முறையில்தான். ஆனால் அந்தக் கேள்வி என் மனதின் இண்டு இடுக்குகளிளெல்லாம் எதிரொலித்தது. ட்ரிடில், தாம்பத்தியம், ராஜா வருவார், பிணக்கு என எத்தனை எத்தனை தினுசுகளில் எத்தனை எத்தனை ருசிகளில் வாழ்க்கையின் அபூர்வமான காட்சிகளை நிரந்தரப் படுத்தியிருக்கிறார் இந்த மாமனிதர். அக்கினிப் பிரவேசத்திற்கும், யுக சந்திக்கும் நிகராகத் தமிழில் எந்தக் கதையைச் சொல்ல முடியும்?

பாரதியின் கவிதைக் குறிக்கோள் விடுதலை. விடுதலைபெற வேண்டுமென அவர் அன்று எண்ணிய எல்லாவற்றையும் பாரதி தன் பாடலில் சொன்னார். நாட்டு விடுதலை முதன்மைப்பட்டிருந்த காலம் ஆதலால், பாரதி நாட்டு விடுதலையில் அதிகம் ஈடுபாடு காட்டினார். ஜெயகாந்தன் காலம் நாடு விடுதலை பெற்றுவிட்ட காலம். அவர் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் பெண் விடுதலையில் அர்ப்பணித்தார். அவர் சொல்லுவது சரிதான். தான் சொல்ல விரும்பிய வற்றையெல்லாம் அவர் தன் படைப்புகளில் தந்து விட்டார்தான்.

சரி, வந்த காரியம் மறந்துவிடக் கூடாது என்று என் அழைப்பை அவரிடம் நினைவுபடுத்தினேன். மகிழ்ச்சியோடு கோவை வந்தார். அவரால் முன்போல ஆர்பாட்டமாகப் பேச அன்று இயலவில்லை. ஆனால் அவர் பேசியதை மக்கள் மந்திரம் போல் பருகினார்கள். அதுதான் அவர் கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டு மேடையில் கடைசியாகப் பேசியது. கோவைத் தோழர்கள் அவருக்கு ஒரு அருமையான வெள்ளி நினைவுப்பரிசளித்துச் சிறப்பித்தனர்.

சென்னையில் நடந்த தேசிய புத்தக நிறுவன [NBT] ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் ஜெயகாந்தனும் அழைக்கப்பட்டு, வந்திருந்தார். அனைத்திந்தியத் தலைவரும், செயலாளரும் முதியவர்கள், புதியவர்கள். ஆலோசனைக் கூட்டம் முடியும் வரை ஜெயகாந்தனால் உட்கார்ந்திருக்க இயலவில்லை போல. எழுந்து அமைதியாக வெளியேறினார். அவரை அப்போதுதான் தலைவர் கவனித்தார். போகிறவர் யார் என்றார்? ஜெயகாந்தன் என்றோம். அவ்வளவுதான், எழுந்து குடுகுடுவென ஓடி, லிப்ட் வாசலில் நின்ற அவரை வழி மறித்து, நலம் விசாரித்தார் தலைவர். மற்ற வட மாநிலத்தவர்களும் ஓரிருவரும் எழுந்து ஓடினார்கள். அகில இந்திய அளவில் அவருக்கு இருந்த பெரும் அங்கீகாரத்தின் சாட்சியாக அக்காட்சி அமைந்தது.

உண்மைதான், தமிழில் எழுதும் சிறந்த இந்திய எழுத்தாளராக ஜெயகாந்தன் அங்கீகரிக்கப்பட்டார். இத்தகைய உயர் அங்கீகாரம் தமிழில் அவர் காலத்தில் வேறு எவரும் பெறவில்லை. கேரளத்திலும் டில்லியிலும் ஒரிரு முறை அவருடன் நான் விழாக்களுக்குப் போயிருக்கிறேன். அவருடைய தீவிர வாசகர்கள், ரசிகர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள் என்பதை நேரில் கண்டு வியந்திருக்கிறேன்.

தமிழில் அவர் காலத்தில் அவர் எட்டிய உச்சங்களை வேறு எவரும் எட்டவில்லை. அவருடைய சிறுகதைகளும் குறும்படைப்புகளும் பாரதி கவிதைகள் போல சங்கப் பாடல்கள் போல என்றென்றும் நிலைத்து நிற்கும்.

Pin It