ஜெயகாந்தனுடைய பிரபலத்துவம் பதினாறு வயதினிலேயே எழுதத் தொடங்கித் தன்னை விரைவில் ஒரு எழுத்தாளராக நியமித்துக் கொண்டு விட்ட அறுபதுகளின் ஆரம்பத்திலேயே தொடங்கி விட்டது. விரைவிலேயே ஒரு ‘ஒளிவட்டம்’அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டது. 1984-இல் அவருடைய எழுதுகோல்கள், ஓய்வுக்காகத் துயில் கொண்டுவிட்ட காலப்பகுதி வரை யுகத்தின் நாயகனாய் இடையீடுகளின்றித் திகழ்ந்தார். ஒரு கால் நூற்றாண்டுக் காலம் ஓயாமல் எழுதியவர்; அவர் எழுதிய காலப்பகுதியில் அவரினும் அதிக மாக எழுதியவர் இல்லை என்று சொல்லுமள விற்கு நிறையவே எழுதியவர். தன்னுடைய யுகத்தில் பல பிரமிப்புகளையும் ஈர்ப்புக்களையும் எழுத்துக்களையும் முன்னால் விட்டு அவற்றின் பின்னால் கம்பீரமாய் நடந்துபோனார். பல சமயங்களில் அவர், முன்னால் நடந்தார்; அவர் பின்னாலேயே அவருடைய எழுத்துக்களும் ஆளு மையும் அவற்றின் எதிர்பார்ப்புகளும் ரசனை களும் நடந்துபோயின. எப்படியானாலும் தன்னுடைய எழுத்துக்களைத் தமிழின் பெருமிதமாக அவர் தந்துவிட்டுப் போயிருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்புள்ளி யாகிவிட்ட மகாகவி பாரதியும் அவர் பின்னால் வந்த பாரதிதாசனும் புதுமைப்பித்தனும் தொடர்ந்து வந்த நவீன எழுத்தாளர்களும் ‘ராஜபாட்டையை’விரித்துச் சென்றிருக்கிறார்கள். சோதனைகளும் சாதனைகளும் செய்திருக்கிறார்கள். உரைநடையும் உரைநடையில் கதை சொல்லுதலும், பரிசோதனை களுக்கும் நானாவித முயற்சிகளுக்கும் உட்பட்டு வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. கல்விக் கூடங்கள், ஊடகங்கள், பத்திரிகைகள் பரவிப் பெருகிக் கொண்டிருந்தன. தேவைகளும் போட்டி களும் வளர்ந்துவந்த ஒரு காலப்பகுதியில் ஜெய காந்தன் ‘பட்டணப் பிரவேசம்’பண்ணுகிறார். தனியாளுமையுடனும், வித்தியாசமான போக்கு களுடனும் அதிர்வலைகளை உருவாக்கும் திறத் துடனும் ஜெயகாந்தன், தமிழ்ப் புனைகதை வுலகத்தில், யாருடைய கேள்விகளுக்கும் அப்பாற் பட்டு, ஒரு தனியிடத்தைத் தனக்கென உருவாக்கிக் கொண்டார். பெருந்திரளான வாசகர் கூட்டத்தி னிடையே கம்பீரமான ஒரு பீடத்தில் அவர் அமர்ந்துகொண்டார்.

சரியாகச் சொல்லப்போனால் ஜெயகாந்தன், ஒரு யுகசந்தி, கவுரிப்பாட்டியாக நின்று இந்த உலகத்தின் பத்தாம் பசலித்தனங்களையும், பம்மாத்துக்களையும் மூர்க்கமாகத் தாக்கியவர். புதிய சமூகமதிப்புக்களை முன்னிறுத்தி, முன் கொண்டு சென்றவர். இந்த யுகசந்தி அவருடைய ஆரம்பகாலச் (1963) சிறுகதை. ஆனால் அதுதான் அவருடைய எழுத்துலகின் மையம்; அவருடைய பண்பாட்டு நிலைப்பாடுகளின் மையம். அவருடைய எழுத்துக்களில் கருத்துக்களோ, கதைகளோ, தேக்கம் இன்றி, ஒரு இயக்கப் போக்குடன் நகர் வதற்கு முக்கியமான காரணம், சமூக மதிப்பு களிலுள்ள முரண்பாடுகளை மோதவிட்டு இறுதியில் குறிப்பிட்டதொரு நிலைப்பாட்டை முன்னிறுத்துவது தான்.

அது ஒரு பிராமணக் குடும்பம். அதன் சில பண்பாட்டுக் கூறுகளையும் மாறிவரும் சமூக மதிப்புக்களையும், இந்தக்கதை, எடுத்துரைப்புச் செய்கிறது. குடும்பம் எனும் நிறுவனம் சிதைவு படாமல், அதற்குள்ளிருந்தே அதனை இடித் துரைப்புச் செய்கிற சாதுரியத்தோடு கூடிய ஒருகதை. இந்தக் குடும்பத்தில் மூன்று தலைமுறை களுக்கிடையே நிகழும் முரண்பாடுகளையும் மோதல்களையும் யதார்த்தத்தோடு இந்தச் சிறு கதை சித்திரிக்கிறது. யுகசந்தி, அவருடைய புனை கதை உலகத்தையும் சிந்தனை உலகத்தையும் இயக்குகிற ஒரு சக்தி. அவர் எப்போதும் பாதிக்கப் பட்டோர் பக்கம் நிற்கும் கவுரிப்பாட்டியாக நின்றே இந்த உலகத்தை அணுகுகிறார்; இந்த உலகத் தோடு பேசுகிறார். எல்லாம் யுகங்களின் உரை யாடல்கள்தான்.

சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை என்று பல துறைகளிலும் இயங்கிய ஜெயகாந்தன், இந்த எல்லாத் துறைகளிலுமே சாதனை படைத்திருக் கிறார். இவர் எழுதிய சிறுகதைகள், ஏறத்தாழ 130; குறுநாவல்கள் 34; நாவல்கள் 14; கட்டுரைத் தொகுப்புகள் 22. (இந்த எண்ணிக்கை, சற்று முன்பின் இருக்கலாம்). ‘சிறுகதை மன்னன்’என்று பல சமயங்களில் அழைக்கப்பட்டவர் ஜெய காந்தன். ஏனெனில், சிறுகதைகளில் இவருடைய சாதனை மிகவும் குறிப்பிடத்தக்கது. கதை சொல்லுவதிலுள்ள தேர்ச்சியோடு கூட, வித்தி யாசங்கள், எதிர்பாராத சுழற்சிகள், அதிரடியான தலைப்புக்கள், அதிர்ச்சியூட்டும் தனிமனித சமூக நியதிகள், கேள்விக்குட்படுத்தும் சமூக மதிப்புக்கள் இவை அவருடைய இலக்கணத்தை மீறியவை.

குறுநாவல் என்ற ஒரு புதிய வடிவத்தைப் பிறப் பித்தவை. அதுபோல், குறுநாவல்கள் என்று அறியப் படுபவை பல நாவல் என்ற வடிவத்தோடு கூடி யவை. ஜெயகாந்தன் எழுத்துக்கள், வடிவத்திலும் சரி குணத்திலும் சரி, கட்டுக்குள் அடங்காமல் திமிறிப் போகின்றன. அதனாலேயே வாசகர் மத்தியில் ரசனையின் அளவைகளை, அவை மடை திறந்து விடுகின்றன. மேலும், சிறுகதைகளும் குறுநாவல்களும் எல்லாம் அல்ல என்றாலும், அவற்றுள் பல சங்கிலித் தொடர்கள் போல், ஒன்றோடு ஒன்று தொடர்ந்து பட்டு அமைந் துள்ளன. ஒன்றன் வளர்ச்சியாக- அதன் வேறொரு முனையைக் காட்டுவதாக- இவை பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பத்திரிகைத் தேவைகள் பெருகுகின்ற போதும், நிறைய நிறைய எழுதுகின்றபோதும், இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. தொடக்கத்தில் சமரன், சரஸ்வதி, சாந்தி முதலிய சிறு பத்திரிகைகளில் எழுதினாலும் பெரும் பாலும் அவர் ஆனந்த விகடன், தினமணி, கதிர் முதலிய வணிக - வெகுதிரள் பத்திரிகைகளிலே எழுதியவர்தான். இந்தப் பத்திரிகைகளின் பதிப்பு மற்றும் பகிர்மான வசதிகளும், பரவலான மற்றும் நிரந்தரமான வாசகர் தளமும் இவருக்குச் சில வசதிகளை ஏற்படுத்தித் தந்தன. இந்த வாசகர் கூட்டத்தைப் பெருக்கிக் கொண்டார் ஜெயகாந்தன். இவருடைய வாசகர்களில் பெரும்பான்மையோர், மத்தியதர, உயர் மத்தியதர வர்க்கத்தினர், பிரா மணர்கள்; பெரும்பாலும் பெண்கள்; குடும்பம் எனும் அமைப்புக்குள்ளிருந்து அதனைச் சிறிதும் மீறாமல்- அப்படியே மீறினாலும் வெளியே தெரி யாமல் - பொதுவான சமூக விழுமியங்களை எதிர் கொண்டவர்கள். அறிவுத்தாகம் கொண்டவர்கள். பாதிப்புக்குள்ளாகா அதிர்ச்சிகளையும் சலனங் களையும் விரும்பியேற்பவர்கள். மேலும், முற் போக்கு, இடதுசாரி மனப்பான்மை கொண்ட வாசகர்களின் பெருக்கமும் செயல்பாடுகளும் ஜெயகாந்தனுக்கு அனுசரணையாக நின்றன. ஏதாவது ஒரு வகையில் ஜெயகாந்தன் எல்லோர் மத்தியிலும் உள்ளே நுழைந்தார். அவர்களுடைய ரசனைகளையும் அபிப்பிராயங்களையும் வெகு வாகப் பாதித்தார்.

ஜெயகாந்தனைச் சூழ்ந்து கிடந்த- அல்லது அவர் உருவாக்கிக் கொண்ட ரசனை எப்படியாகப் பட்டது? விரிந்துகிடந்த - வளர்ந்துவந்த - பத்திரிகைத்தளம், புதுமைப்பித்தனும் மற்றவர் களும் பரிசோதனைகள் செய்து தேர்ந்து கொடுத்த ஒரு புதிய இலக்கியச் சூழல். இவையன்றியும், திடீர் திடீரென அவர் விடுத்த பிரகடனங்கள்- நான் கம்யூனிஸ்டாக வளர்க்கப்பட்டவன்; நான் ஒரு காந்தியவாதி; பெரியாரியத்தை, அல்லது திராவிடர் இயக்கத்தை மறுப்பவன், நான் யாருக்கும் தாலி கட்டிக் கொண்டவன் அல்ல; நான் விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவன்; நான் சுதந்திரமானவன்; நான் ஆன்மீகவாதி என்று மாறிமாறிச் சொல்லிக் கொண்டதோடு இந்தியாவிற்குப் பிராமணத்துவ சனாதானமும், பிராமணத்துவ தருமமுமே ஏற் புடையது- என்றும் இப்படிப் பல கருத்துக்களை, அப்போதைய நியாயங்களாக அவர் முழங்கி வந்தார். ஒரு இரண்டாம் தட்டு அரசியல்வாதியை விட மேடைகளில் அவர் முழங்கி வந்தார். ஒரு இரண்டாம் தட்டு அரசியல்வாதியைவிட மேடை களில் அதிகமாகப் பேசினார். ஓங்கியும் உரத்தும் முழங்கியும் சிம்மக்குரலோனாக வலம் வந்தார். சக எழுத்தாளர்களோடும், தனக்கு நெருக்கமான ரசிகர்களோடும், சிறுதொழிலதிபர்களோடும், அரசியல்வாதிகளோடும் நெருங்கியும் விலகியும் தொடர்புகள் கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்த ஒரு ஜனரஞ்சகமான கம்பீரம், அவருடைய தனிப் பட்ட ஆளுமையையும் படைப்பு ஆளுமையையும் அலங்காரமானதொரு பீடத்திலமர்த்தியது. ஜெய காந்தன் என்ற பிம்பமும் ரசனைச் சூழலும் இப்படி, வடிவமைந்தன.

ஜெயகாந்தனின் எழுத்துக்களில் பிறருடைய எழுத்துக்களின் சாயல்களையோ நேரடித் தாக்கங் களையோ பார்க்க முடியாது. நடையில் மட்டு மல்ல கதையிலும் காட்சிகளிலும் அப்படித்தான். ‘சுயம்’என்பது ஜெயகாந்தனிடம் இயல்பாகப் படிந்திருந்தது. அதற்காகப் பிற அறிஞர்களின், சிந்தனையாளர்களின் கருத்தியல்கள், கோட் பாடுகள் முதலியன இடம்பெறவில்லை எனச் சொல்லவரவில்லை. ஜெயகாந்தனின் கல்விக் கூடத்து வாழ்க்கை மிகக் குறுகியதாக இருக்கலாம்; ஆனால் அவர் எழுத்தாளராகப் பலருடைய கவனத்தைப் பெறுகின்ற காலப் பகுதியில் நிறையப் படித்திருக்கிறார்; படித்தது பற்றி யோசித்திருக் கிறார். யோசிப்பு, அவருடைய உயிர்ப்பு. நவீன ஓவியங்கள், நவீன இசை வடிவங்கள் பற்றி நிறையவே அறிந்தவர், அவர் சிக்மண்ட் பிராய்டு, நீட்ஃசே, மார்க்ஸ், மாக்சிம் கார்க்கி, சங்கரருடைய அத்வைதம், பலவகையான புராணங்கள் முதலிய வற்றை விசாலமாக வாசித்திருக்கிறார். அவருடைய எழுத்துக்களிலே - படைப்புக்களின் ஊடே பரவிப் போகும் சொல்லாடல்களிலே - இது, வெவ்வேறு வகையிலே பிரதிபலிக்கிறது. சில போது - சில போது என்ன - பலபோது - கருத்தியல்களையும் தத்துவ விசாரங்களையும் வைத்து, அவற்றிற் காகவே கதைகள் எழுதியிருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் காணலாம்.

ஜெயகாந்தனுடைய பெரும்பாலான கதைகளினூடே பின்னிக்கிடக்கும் அவருடைய சொல் லாடல்களும் விவாதங்களும் (discourse) அவருடைய படைப்புமொழியின் தனித்திறனும் வெற்றியும் ஆகும். ஆசிரியர் கூற்றுக்களாகவும் பாத்திரங் களின் உரையாடல்களாகவும் அசைபோடுதல் களாகவும் வரும் இந்தச் சொல்லாடல்கள், அவருடைய சிந்தனைப் பரப்பைக் காட்டுவன. இவை தத்துவ விசாரணைகளோடு இருக்கலாம்; பண்பாட்டு விவரங்களாக இருக்கலாம்; அரசியல் விவகாரங்களாக இருக்கலாம்; உணர்ச்சிகளை அறிவு என்பதன் பக்கமாய்த் திருப்பி விடப் பயன் படுவனவாக இருக்கலாம்; அவருடைய சார்பு நிலைகளை வெளிப்படுத்துவனவாக இருக்கலாம். சமரசங்கள், நியாயப்படுத்தல்கள், சுய விமர் சனங்கள் முதலியனவாக இருக்கலாம். ஆனால் அதேபோது முரண்களும் வகைமாதிரிகளும் கொண்ட பாத்திரங்களின் ஆளுமை, விளக்கம், வளர்ச்சி முதலியனவும், நிகழ்ச்சிகளின் பொது நியாயங்கள் முதலியனவும் அவற்றில் சூழ்ந்து பின்னிக்கிடக்கின்றன. இந்தச் சொல்லாடல் பரப்புக்கள், கதைகளினூடே குறுக்கிடுகின்றன என்று சொல்லுவதை விட (பல இடங்களில் அப்படி நடக்கின்றது என்பதும் உண்மைதான்.) இவைதான் கதையின் போக்குகளையும் சுவாரசியங் களையும் மறுவாசிப்புக்குரிய வெளிகளையும் தீர்மானிக்கின்றன என்று சொல்ல வேண்டும். இவைதான், இவருடைய படைப்புமொழியின் அதிகாரமையங்கள்; இவருடைய புனைகதை களின் அடையாளங்கள். இது ஒரு படைப்பு முறைமை. வேறுயாரிடமும் அதிகமாக இல்லாத ஒரு தனிப்பாணி. இதனை வேறு யாரும் பின்பற்ற முயன்றாலும், முடியாது என்று சொல்லவைக்கும் பனுவல்களின் களியாட்டம் இது. இது ஒரு விசேடமான ‘இலக்கிய வகைமை’ ((literary type) என்பதாக அறியப்பட வேண்டும். இவருடைய வாசகர்களுக்குத் தெரியும் - இது, ஜெயகாந்தனின் தனிப்பாணி- தனிப்பாதை என்று; ஜெயகாந்தனுடைய வாசகர்கள், இதற்குப் பழக்கப்பட்டவர்கள்; இதனை மோகிப்பவர்கள். ஆனால், இதெல்லாம் (அல்லது இது போன்றவை மட்டுமே) புனைகதைப் படைப்பினை முழுதாக்கிவிடாது; அர்த்தப்படுத்தி விடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கதை சொல்லி என்ற முறையில், ‘தனித்த பாதை’என்பது ஒருபக்கம் இருக்கட்டும். கதையின் கருவறைக்குள் சுழன்று கொண்டிருக்கும் உயிர்ப்பின் ஆற்றல், கதையின் காரணனாகிய கதை சொல்லியின் மரபணுவைக் காட்டுவதல்லவா? ஜெயகாந்தன் விடுக்கும் செய்தி என்ன? யாருக்கானது? எதற் கானது? அவருடைய நிலைப்பாடு என்ன? வாசகனை என்னவாக யாராக ஆக்க விரும்பு கிறார்? கேள்விகள் எப்போதும் அந்தரத்தில் நிற்பதில்லை.

குடும்பம் என்பது நிரந்தரமான- பாரம் பரியமான - ஒரு நிறுவனம். அதனை கட்டிக்காக்க வேண்டும். இது ஒன்று, அடுத்து ஒருத்திக்கு ஒருவன் என்ற கற்பொழுக்கத்தைப் பேணுவது. அடுத்த முக்கியத்துவம் பிராமணியத்தைக் காப்பது; பிராமணர்கள் மற்றும் உயர்சாதி- மத்திய தர வர்க்கத்தாரின் பிறழ்வுகளைச் சரிக்கட்டிக் கொள்வது; மற்றும், முரண்பாடுகளையும் மோதல்களையும் பாரம்பரியத்துக்குள்ளிருந்துகொண்டே சமரசப் படுத்திக் கொள்ளுதலும் இவற்றின் எல்லைக்குள் இருந்துகொண்டே மனிதநேயத்தையும் புனிதங் களையும் கட்டமைத்துக் கொள்ளுதலும் முதலி யவை இவர் முன்னிறுத்தும் முக்கியமான நிலைப் பாடுகளாகும். இயங்குநிலை கொண்டு சமூகம் என்ற நிலையினை விடுத்து தனிமனிதன், தனிமனித சுதந்திரம் என்பவற்றை மையமாகக் கொள்வது என்பது ஜெயகாந்தனின் நிலைப்பாடாக ஆகியது. மேலும், பிளவுபட்ட ஆளுமை அவருடைய கருத் தமைவுகளில் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. மாறிவரும் சமூகநிலைகளையும் முரண்பாடு களையும் அவற்றின் காரணங்களையும் கேள்விக் குட்படுத்திக் கவிழ்ப்புச் செய்வதிலும் அவற்றைப் புத்தாக்கம் செய்வதிலும் ஜெயகாந்தன் அக்கறை கொள்வதில்லை. வித்தியாசங்கள் தமக்குள் மோதிக்கொள்கின்றன என்பது போல் காட்டிக் கதைகளுக்குள் விவாதங்களையும் சொல்லாடல் களையும் கனபரிமாணங்களோடு நிகழ்த்தி, எல்லா வற்றையும் பாதுகாத்துக்கொள்ளக், கூடுகளைக் கட்டும் படைப்பாக்கத்திறன் ஜெயகாந்தன் நிலை; திறன்.

கற்பு என்பது ஒரு நல்ல உதாரணம். எத்தனை கோணங்கள்! எத்தனை விளக்கங்கள். ‘கற்பு என்று சொல்லவந்தார்- அதனை இருவருக்கும் பொதுவில் வைப்போம்.’ சரி! ஜெயகாந்தன் கதைகளில், எப்படி அது சொல்லப்பட்டிருக் கிறது? ஜெயகாந்தன் பெண்மையைப் போற்றியவர் தான். முக்கியமாக விலைமகள், பாதுகாப்பற்ற பெண் முதலியவர்கள் மேல் செயல்பாட்டோடு கூடிய இரக்கம் ஜெயகாந்தனுடைய படைப்புக் களில் உண்டு. ஆனால், பெண் என்பவள் குடும்ப அமைப்புக்குள் பேசப்படும் தருமத்திற்குக் கட்டுப் பட்டவள் என்பது அவருடைய கருத்தமைவு. ‘ஒருத்திக்கு ஒருவன்’ - ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி அல்ல - என்பது நீதியாக, அதுதான் இயல்பு என்பது போன்ற தோற்றத்துடன் பல கதைகளில் சித்திரிக்கப்படுகிறது; வர்ணஜாலம் காட்டுகிறது. ‘குடும்பம்’எனும் நிறுவனம் சிதைந்துவிடாமல், ஆணின் மரியாதையும் தகுதியும் தகர்ந்துவிடாமல் இருப்பதற்கே இப்படி வித்தைகள் நிகழ்த்தப்படு கின்றன.

அக்கினிப்பிரவேசம் (1967) வந்தது. அவருடைய வாசகர்கள் பலரை அது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு பணக்கார வழிப்போக்கன் செய்த திருவிளை யாடல், இளம் பிராமணப்பெண் ஒருத்தியின் கன்னிமையையும் கற்பையும் கேள்விக்குறியாக்கி விட்டது. மூன்றாம் பேருக்குத் தெரியாமல், தலையில் தண்ணீர்விட்டு அணைத்துவிடுகிறார்கள். அதனோடு கதைமுடிந்தால், அது வேறு. ஆனால் விமர்சனங்களை மறுப்பதாகத் திரும்பத் திரும்பக் கூறும் ஜெயகாந்தன், அவருடைய வாசகர்களின் எதிர்வினைகளுக்கு ஆட்பட்டு அதன் தொடர்ச்சி யாக ஒரு நாவலே எழுதிவிடுகிறார். வாசகர்களின் எதிர்வினைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் கட்டுப்படுபவர் தான் அவர்.

“சில நேரங்களில் சில மனிதர்கள்” (1969-70) எனும் இந்த நாவல், அக்கினிப் பிரவேசம் வெளி வருகிறபோதே தீர்மானிக்கப்பட்டது போல் சொல்லப்படுகிறது. சிறுகதைத்தொகுதிக்கு முன்னுரை எழுதும்போது சொல்லுகிறார்: “அவளை அழைத்துக் கொண்டுபோய் அவனிடம் சேர்த்துவிடுவது எனது காரியமென்று நான் நினைக்கவில்லை. அவளை விரும்பினால் இன் னொரு கதையில் செய்யட்டுமே.”

பொதுவாக, ஜெயகாந்தன் இது போன்று, தான் படைத்த பாத்திரத்திற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பது போலவே பேசுவார். பாத்திரங்களுக்குத் தனியே சுதந்திரம் உண்டு என்றும் சொல்லுவார். இது அவருடைய பாணி; ஒரு தந்திரஉத்தி. போகட்டும். அக்கினிப் பிரவே சத்தில் பெயர் சூட்டப்படாமல், இந்த நாவலிலே ‘கங்கா’என்று பெயர்சூட்டிக்கொள்ளும் இந்தப் பெண் என்ன செய்கிறாள்? கற்பழித்தவனைக் கற்புக்கொடுத்தவனாகக் கருதியோ என்னவோ, அவனைத் தேடிப்போகிறாள்; கண்டுபிடிக்கிறாள். பிரபு ஒரு துக்கிரி, பொறுப்பற்றவன், குடிகாரன். ஆனால் பணக்காரன். குடும்பத்தலைவன்; மனைவியும் மகளும் இருக்கிறார்கள். அவனிடம் பாலியல் முறையிலோ, வந்துசேர்ந்தஉரிமை என்ற பெயரிலோ பாதுகாப்புத்தேடுகிறாளா? இல்லை. உடல்வேறு; மனம்வேறு; மனம், பெண்மனம்; மரபு ரீதியான பெண்மனம்; ஒருத்திக்கு ஒருவன் தான்! எல்லாம் முடிந்துவிட்டது. அவனுடைய குடும்பத்தோடு அவள் தன்னை அடையாளம் காண்கிறாள்; தன்னை அர்ப்பணிக்கிறாள். அதன் மூலம் அவள் என்ன காணுகிறாள்? ஆண்மகனுக்குள்- அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும்- பெண், அடக்கம். தேவையானால், கேள்விகேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால், ‘புருஷம்’என்பதற்குள் இவள், ஒடுக்கம். பதி-பசு-பாசம் என்ற நிலைப்பாடா, இது? ஆனால் குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும். ஆண்மகன் காப்பாற்றப் படவேண்டும். இது, இந்த நாவலின் நாடித்துடிப்பு. இதில் மட்டுமல்ல, அவருடைய படைப்புலகில் பிரதானமாகக் காணப்படும் பாரம்பரிய விழுமியம், இது. புறனடையாக இருப்பவை, “பௌருஷம்”மற்றும் “ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்”என்ற இரண்டு கதைகள். பௌருஷத்தில் மனைவியை விபச்சாரத்துக்கு அனுப்ப முயலுகிறான் பணத் தாசை பிடித்த கணவன். அவனோடு போராடி, அவனை விட்டுவிலகுகிறாள், மனைவி. அடுத்த கதையில் ஒப்பனைப்பிரியனான கணவன், இன் னொரு பெண்ணோடு உறவு கொண்டு அவளைக் கர்ப்பமாக்கிவிடுகிறான். இரு குழந்தைகளோடு கூடிய மனைவி, “போடா”என்று அவனைத்தூக்கி யெறிந்து விட்டு விலகுகிறாள்.

ஆனால் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில், மனைவி பற்றிய சித்திரம் கவனப்படும் படியாக இல்லை. பிரபுவுக்கு ஒருமகள் உண்டு. மஞ்சு என்றுபெயர். அவளை ஒரு லட்சியப் பெண்ணாக உருவாக்குகின்றார். கருத்தியல் ரீதியான உருவாக்கம்தான். கங்காவுக்கு இவள் மாற்று; ஒரு பதிலி (alterego) கங்கா-மஞ்சு-பிரபு. இப்படி ஒரு வாய்பாடு. அவரவர், அவரவர் சுதந்திரத்தோடு, குணத்தோடு, அர்ப்பணிப்போடு அப்படியே இருந்துகொள்கிறார்கள். இது வாசகர் களுக்குக் குறிப்பாக, ஆண்வாசகர்களுக்குப் பிடித்த மான உலகமாகிவிடுகிறது. சரி, கங்கா அப்படியே இருந்துவிடுகிறாளா? அவளுக்குத் தத்துவரீதியான- ஆன்மீகரீதியான- ஒரு விடுதலையைத் தேடித் தர விரும்புகிறார். குப்பைகளும் பிணங்களும் மிதந் தாலும் கங்கை புனிதமானது அல்லவா? கங்கையை நோக்கிப் போகிறாளாம். அவளுடைய இறுதி வாழ்வு புண்ணியத்தைத் தேடிப்போகிறது. விமோச் சனத்துக்கும் பிராயச்சித்தத்துக்கும் தேவைப்படும் படியாக, அவள் அப்படி என்ன தப்பு செய்தாள்? என்ன பாவம் செய்தாள்? வெங்கு மாமாவின் பாலியல் வக்கிரங்களுக்குள்ளிருந்து அதற் கெதிராக எழுச்சி பெறத் தெரியாத, அறிவாளி யான அந்தக் கங்கா, எதற்காகக் கங்கையில் விடுதலை தேடுகிறாள்?

தி.ஜானகிராமன், இவருக்குப் பத்து ஆண்டு களுக்கு முன்னர் படைத்தது ‘அம்மா வந்தாள், நாவல். இதனைப் பதிலிபண்ண முயலுகிறார் ஜெயகாந்தன். ஆனால் அம்மா வந்தாளில் அலங் காரத்தம்மாளின் சூழல்களும், உணர்வுகளும், தேடல்களும் எதிர்பார்ப்புகளும் குற்றவுணர்வுகளும், ஆழமானவை; மிகவும் இயல்பானவை; வன்மம் கொண்டவை. அவள் சிட்டுக்குருவியென, இந்தச் சூழல்களிலிருந்து விட்டு விடுதலை பெறத் துடிப் பதும், கங்கையைத் தேடிப்புறப்படுவதும் அவளுடைய பின்னணியில் மிகவும் யதார்த்தமானவை; இயல் பானவை. சொற்களையோ, சூழல்களையோ விரயம் செய்யாமல் உணர்வுகளைக் காவிய மாக்குவது என்பது வேறு; யாந்தீரிகமாகவும் அறிவார்த்தமாகவும் ஒரு கருத்தியலை நாவலாக்க முயலுவது என்பது வேறு. ‘கங்கா எங்கே போகிறாள்’, அறிவின் தேடலில் அயர்ந்துபோய் கேள்வியாகவே நின்று, இறுதிவரை தனது உயிர்ப் பாற்றலை உள்வாங்க முடியாமல், தன்னை இழந்து போய் விடுகிறது. பெரும்பாலான இத்தகைய கருத்தமைவு நாவல்களின் கதி இதுதான். ‘பாரிசுக்குப் போ’இப்படித்தான், தனிமனித சுதந்திரத்தை முன்னிலைப்படுத்தி விவாதத்தையும் சொல்லாடலையும் கொண்டு, நிகழ்வுகளைப் பின்னப்போய்க், கதைமை எழுந்திருக்க முடியாமல் திணறுகிறது.

ஜெயகாந்தன் அளவிற்குச் சொல்லாடல் களையும் விவாதங்களையும் கதைப்பின்னலின் பகுதிகளாக ஆக்கியவர்கள் இல்லை. சொல் லாடல்கள் உயிரோட்டமானவை; அதில் சந்தேக மில்லை. ஆயினும் பொதுவாகவே, நிகழ்வுகளையும் நிஜங்களையும், உணர்வுகளாகவும் அனுபவங் களாகவும் ஆக்காமல், காட்சிகளையும் செய்தி களையும் உண்மையின் வடிவங்களாய் தோய்க் காமல், சொல்லாடல்களையும் விவாதங்களையும் நம்பிப் படைப்புமொழியை உருவாக்கவோ முன் கொண்டுபோகவோ முடியாது. நோக்கமும் அதன் திசையும் மாறிவிடும். ஜெயகாந்தனுக்கு அவருடைய ஆரம்பகாலத்தில் பிடித்தமானதாக அல்லது பழக்கமானதாக இருந்தது, பொது வுடைமை என்ற கொள்கை; கம்யூன் என்று சொல்லப்படும் ஒரு கூட்டுவாழ்க்கை. இதெல்லாம் அவர் சிறுவனாக இருந்தபோது. அதற்காக அதிலே தோய்ந்த ஒரு பயிற்சியும் மனதிலாக்கிக் கொண்ட ஈடுபாடும் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பல ஆண்டுகள் கடந்து, அதன் உச்சமாக ‘நக்சலைட்’எனும் கருத் தமைவைக் கதைக் களன் ஆக்குகிறார். ஆனால், அதில் போதிய அறிவோ, அது பற்றிய உணர்வோ, விசுவாசமோ இல்லாதபோது, தண்ணீருக்குள் விழுந்த தீப்பந்தம் போல் அடையாளம் இழந்து நமத்துப் போய்விடுகிறது. ஆயுதபூஜை, ஊருக்கு நூறுபேர், எங்கெங்கு காணினும்... முதலியவை இப்படி ஆகிவிட்டவை தான். இதுபோல் தான், அவருடைய நெஞ்சுக்கு நீதி சொல்லும் ஆன்மீக வாதம், நாவல்களாகிறபோதும் நடக்கிறது. ஆனால் ஆன்மீகவாதம் என்பது இந்துத்துவத்துக்குள்ளும் பிராமணத்துவத்துக்குள்ளும் சிறைப்பட்டுக் கிடப் பதல்ல.

ஆனால், பிராமணத்துவ மொழியை ஆன்மீக மொழியாகப் புனிதப்படுத்த முயலுவதும் படைப்பு மொழியை அதற்காக அர்ப்பணிப்பதும், சமய அதிகாரமாகக் காட்சி தந்துவிட்டு மருட்சியோடும் மிரட்சியோடும் அயர்ந்து நின்றுவிடும். அவருடைய இறுதிப்படைப்புகளாக கருதப்படக் கூடிய மகா யக்ஞம், கழுத்தில் விழுந்த மாலை, ஜயஜய சங்கர முதலியவை இத்தகையவை. இவை, ஜெயகாந்தனின் ஆளுமை குறித்த வெவ்வேறு விவாதங்களை எழுப்பு பவை என்பது ஒரு பக்கம் இருக்கப், படைப்பின் நோக்கத்தையும் சக்தியையும் இவை விரயமாக்கி விடுகின்றன.

பிராமணப்புனிதம், ஜெயகாந்தனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சங்கதி. அவருடைய கதைகள் இதனைச் சொல்லுகின்றன. ஏற்கெனவே இதனை நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இந்த வகையில், ‘பாவம் இவள் ஒரு பாப்பாத்தி’ (1979) அவருடைய சமூக நிலைப்பாட்டை அறியச் செய்வதில் முக்கிய இடம்பெறுகிற ஒரு குறுநாவல். இந்தத் தலைப்பே நமக்கு ஒரு முன் நிபந்தனையைத் தருகிறது. ‘இவள் மேல் இரக்கப்படு, பாப்பாத்தி என்பதால் இவனுக்குத் தொல்லைகள் நிகழ்த்திவிட்டன. பாப்பாத்தி, தப்புச் செய்யமாட்டாள்...’ என்று முன்னறிவிப்புச் செய்யும் ஒரு மொழி இது. இந்தக் கதை, மாக்சிம் கார்க்கியின் புகழ்பெற்ற புரட்சிப்படைப்பாகிய ‘தாய்’என்பதன் தழுவல்; அதன் பதிலி. ‘பாவம் இவள் ஒரு பாப்பாத்தி’யை வாசித்தவுடன், நமக்குத் தோன்றுவது, ‘பாவம் நிலோவ்னா,’ ‘பாவம் கார்க்கி’என்பது தான். தன்னுடைய எழுத்தின் மூலம் ஜெயகாந்தன், வருணாசிரம சாதி- தரும அடையாளத்தை முன்னிலைப்படுத்து வதோடு பெரியாரியக்கமும், மண்டல்குழு அறிக் கையின்படிச் சட்டமாக்கப்பட்ட சமூகநியாயமும் தாக்கப்படுகின்றன. அதற்கென்றே எழுதப்பட்ட தாக இந்தக் குறுநாவல் அமைகிறது.

கதையினூடே, வழக்கம்போல் ஜெயகாந்தன் ஒரு சொல்லாடல் நிகழ்த்துவார். அவற்றுள் இரண்டு இடங்கள் முக்கியமானவை. “ஏகச் சந்தடியும் இரைச்சலும் உள்ள இந்தச் சூழ்நிலை யிலும் குப்பையும் புழுதியும் நிறைந்த இந்தத் தெருவோர ஜீவிதத்திலும், பாப்பாத்தியம்மாள், மிகுந்த ஆசாரத்தோடும் மடியோடும் இந்த மனிதர் களிடமிருந்து விலகித் தனித்து, புனிதமாய்க் காணப்படுவாள். தோற்றப் பொலிவில் அங்குள்ள ஏழைத் தொழிலாளராகக் கிழவிபோல அவள் இருந்தாலும் அந்த எளிமையிலும் அவளது உயர் வான தோரணை, பேச்சு, பழக்கவழக்கங்கள், பக்தி சிரத்தை, பரிவுகாட்டும் பண்பு இவையெல்லாம் அவளது பிறந்த குலத்தையே அவளது பெயராக்கிப் பாப்பாத்தியம்மாள் என்று எல்லோரையும் அழைக்க வைத்தன போலும்.” (பக்கம் 12) இன் னொரு இடம்; ‘உயர்ந்த ஜாதிக்குப் புகழ்ச்சி தவிர வேறு என்ன கிடைக்கும்? அதன் விளைவால் பலரின் பொறாமை கிடைக்கும். அவர்கள் உயர் கிறார்களோ இல்லையோ, உயர்ந்தவர்களோடு மற்றவர்கள் போட்டியிடுவதால், தகுதியிருந்தும் உயர்ந்தவர்களுக்கு நிராகரிப்பே கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு சமூக நிராகரிப்பு போலப் பரந்தாமனுக்குப் பல உத்தியோகங்கள் எல்லாத் தகுதியும் இருந்த உயர்ந்த ஜாதிக்காரர்களின் ‘கோட்டா’தீர்ந்துபோனபடியினால் கிடைக் காமல் போயிற்று’. (பக். 22)

இவை இரண்டும் அவருடைய சமூக நிலைப் பாட்டின் அடையாளங்கள். இரண்டாவது மேற் கோள் சட்டரீதியாக வந்த சமூக நியாயத்தை குரோதத்துடன் தாக்குகின்றது - கோட்டா முறையைத் தாக்குகிறது. இதிலே, குறிப்பிடத்தக்க ஒன்று - இங்கே பிராமணர் என்ற சொல் இல்லை; மாறாக உயர்ந்தோர் - உயர்ந்த ஜாதி என்ற ‘பொதுவான’சொல் ஒருமுறை அல்ல - ஐந்து முறைகள் இடம் பெறுகிறது. இந்த நிலைப்பாடு, பிராமணச் சார்பானது மட்டுமல்ல. உயர்சாதிக் காரர்கள் என சொல்லப்படுவோர் சார்பானது. அதாவது இவருடைய ஜாதியையும் பிராமணர் களையும் உள்ளிட்ட ஒரு சார்பு நிலை இது. இந்தச் சார்புநிலையோடு கூடவும் தாழ்த்தப்பட்டவர்கள், ஹரிஜனங்களை அவர் நேசிக்காமலில்லை. ஆனால், அது சிறுபான்மை. மேலும் இத்தகையவர்கள், பெரும்பாலும் அமாசிக்கிழவன் போல் அல்லது ஆதியைப் போல் பிராமணர்களை நேசிப்பவர்கள்; அவர்களுக்கு உதவி செய்பவர்கள். அதே போது, இந்த ஹரிஜனங்கள், அடித்தளமக்கள் - கூலிகள் - பாமரர்கள், ‘சினிமாவுக்குப் போன சித்தாளு” (1972) நாவலில் அவர்களுக்குக் கல்வியறிவு தரப் படவில்லை. குடியிருப்பு முதலிய வசதிகள் இல்லை என்ற ஆற்றாமையோ கோபமோ இல்லாமல் மோசமான ரசனையோடு என்னமாகப் பகடி செய்யப்படுகிறார்கள்!... அவர்கள், மு. கருணாநிதி உள்ளிட்ட திராவிடர் இயக்கக் கட்சிக்கு ‘வாக்கு வங்கிகளாக இருந்தார்கள் என்பது தான் குற்றமா? கருணாநிதி மீதும் எம்.ஜி.ஆர். மீதும் இருந்த கோபம் தான், சித்தாளுகள்மேல்- அடித்தள மக்கள் மேல் இருந்த கோபத்திற்குக் காரணமா? ஆனால் ஜெயகாந்தனின் கோபம், வரலாற்றின் கோபம் அல்லவே.

ஜெயகாந்தனுடைய படைப்புக்கள் பல பரிமாணங்கள் கொண்டவை. ஒவ்வொரு படைப்புக்கும் கீழே பிரம்மோபதேசங்கள் செய்யப் படுகின்றன. நிற்காத காலங்களில் நீண்ட பயணத்தில் உபதேசங்கள், ஆடும் நாற்காலிகளில் ஆடிக்கொண் டிருந்தாலும், நாலுபேருக்குள் அடங்கிவிடாத சமூகம் என்றும் சுயதரிசனத்தை வேண்டியே நிற்கின்றது. அவருடைய படைப்புக்கள் அவருடைய தரிசனங்கள். அவை சொல்கின்ற செய்திகளும், சொல்லாமல் போன செய்திகளும் வரலாற்றின் மவுன சாட்சியங்களாய் நிற்கின்றன. அவற்றின் தேவைகளும், தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் பொருத்தப்பாடுகளும் வரலாற்றின் வலிமையான கரங்களின்பிடியில் பொதிந்து கிடக்கின்றன. இன்று என்பது, நாளை என்பதற்கு வித்து.

Pin It