thur bookஅகிலா கிருஷ்ணமூர்த்தியின் ‘தூர்’ என்னும் சிறுகதைத் தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். வாசிப்பு அனுபவத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே பெண் உணர்வு பற்றியவைதான். கவித்துவமான சொற்கள், சொற்றொடர்கள், பத்திகள் என ஒவ்வொரு கதையும் கவித்துவமாகவே அமைந்திருக்கிறது.

நாவல் என்பது நாடகமும் கவிதையுமாகப் பின்னிப்பிணைந்த ஒரு சமூகக் கட்டுமானம் என்பார்கள். இந்தச் சொற்றொடருக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது அகிலாவின் இந்தக் கதைகள்.

மாமியார் மருமகள் பிரச்சினை, கணவனின் அத்துமீறல்கள், மருமகள் விருப்பங்களால் குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகள் முதல், குடும்பத்தைப் பிளவுபடுத்தும் நெருக்கடிகள்வரை பல பிரச்சினைகள் இங்கே பதிவாகியுள்ளன.

‘பழையவீடு’ ஒரு அருமையான கதை. பழையவீடு என்பது பழைய சுவர்கள், குழந்தைகளின் பழைய கிறுக்கல்கள், அடையாளங்கள் கொண்டது. அந்தவீடு இடிபட்டுப் புதுவீடாக மாறும்போது பழைய அடையாளங்கள் தொலைந்துபோகின்றன. இந்தப் பழைய அடையாளங்களைத் தேடுபவருக்கு புதுவீடு எல்லாம் இழந்து பாழ்பட்டு நிற்பதுபோல்தான் தோன்றும்.

வீட்டுக்காரி வினோதா தன் தோழிக்குத் தன் புதுவீட்டைச் சுற்றிக் காட்டுகிறார். போர்டிகோ, சிட் அவுட், மெகா - ஹால், மாஸ்டர் பெட்ரூம்ஸ், அட்டேச்டு வெஸ்டனைஸ்டு பாத்ரூம்ஸ், மாடுலர் கிச்சன், இங்கதான் டிஷ் வாஷர், இங்கபாரு ஹைபை வாஷிங் மிசின் எல்லாம் இருக்கு என்கிறாள்.

இவை எல்லாம் இருந்தாலும் ஏதோ இழந்திட்ட மாதிரி இருக்கு என அவள் உணருகிறாள். தியானம், யோகான்னு செஞ்சுதான் பார்க்குறேன். இரவு நேரங்கள்ல தூக்கம் வரமாட்டேங்குது. பழைய வீட்ல இருந்த மனநிம்மதி இல்லை என்று ஆதங்கப்படுகிறாள் வீட்டுக்காரி. இம்மாதிரியான ஆழமான உளவியல் உணர்வு பழையவீட்டில் பதிவாகி இருக்கிறது.

“பறத்தலின் சப்தம்' என்ற ஒரு அருமையான கதை. பெற்றோரின் மருத்துவக் கனவுக்காகக் குழந்தைகளை அவர்கள் படுத்தும்பாடு இங்கே வாசகரின் மனதை அதிரவைக்கும் வண்ணம் பதிவாகியுள்ளது. பெற்றோர் கொடுக்கும் தொந்தரவு தாங்காமல் குழந்தை, நாம வேற வீட்ல பொறந்திருக்கலாமோ என்று சிந்திக்கும் அவலநிலை ஏற்படுகிறது.

“அன்பெனப்படுவது' என்னும் கதையில், பெண்ணின் சுதந்திர உணர்வு முக்கியமாகப் பேசப்படுகிறது. என் படிப்பை, உணவை, தூக்கத்தை நானல்லவோ தீர்மானிக்கணும் என்று யோசிக்கும் குழந்தை போலத்தான் இன்றைய பெரும்பாலான தமிழ்நாட்டுக் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு சாதனைக்காகப் பிறந்தது. அந்த ஆற்றல் குழந்தையின் கருவிலேயே அமைந்துள்ளது. அந்தக் குழந்தையின் சாதனையைக் கண்டுணர்ந்து, அதற்குத் தக்கவாறு அந்தக் குழந்தையை வளர்ப்பதுதான் பெற்றோரின் கடமை. ஆசிரியர்களின் கடமையும் அதுவே. சாதிக்க உலகில் ஆயிரம் வழிகள் உண்டு. டாக்டர் மட்டும்தான் உச்சமா? என்று எண்ண வைக்கின்ற அருமைக்கதை.

‘நிலாவாசம்’ இந்தத் தொகுப்பின் உச்சக்கதை. மூளையிலும் நுரையீரலிலும் புற்றுநோய் பரவிய அம்மா, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அவர் மறைந்தபோது அவர் மகள் வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்க்கிறார். நிலவொளியில் வானம் நிரம்பி இருக்கிறது. அம்மா மா.மா.. கண்களை மூடி மனது உருகுகிறாள் மகள். கமகம என வானம் முழுக்க மணத்தது அம்மாவின் வாசம். நான் பெரும் வாசிப்பாளன் அல்ல. வாசித்த அளவில் இந்தக் கதைக்கு நிகரான கதை வேறு இல்லை என்று உணர்கிறேன்.

“ஃபாரின் அப்பாÕ இன்னும் ஒரு அருமையான கதை. சுசீந்திரன் பல பொய்களைச் சொல்லி மனைவியை அட்டையாய் உறிஞ்சுகிறவன். இந்த அநியாயத்திற்கு முடிவு என்ன? விவாகரத்தே முடிவு. தன் கதையில் இதை மிக நுட்பமான பார்வையில் வெளிப்படுத்துகிறார் அகிலா. அதிலும் குழந்தையின் பார்வையில் வெளிப்படுத்துவது அபாரம்.

“ கடத்துபவன் கடவுள் கனவாலும் நினைவாலும் பிசையப்பட்ட அருமைக் கதை. ரயில் நிலையம், கடுமையான மழை, அந்த மழையில் ஒரு இளைஞன் நனைந்துகொண்டே எகிறிக் குதிக்கிறான், குதித்து ஆடுகிறான்.

ஆற்று நீரை முத்தமிடும் நாணல்போல இடுப்பை இடமும் வலமுமாக வளைக்கிறான். எதையோ யோசித்து முணுமுணுத்தபடி தன் ஆட்டத்தில் தீவிரமாக ஈடுபடுகிறான். ஜீன்ஸ் பேண்ட்டும், டி சர்ட்டும் கிழிந்து தொங்க, நீண்ட

தலைமயிரை ஒரு ரப்பர்பேண்ட் கட்டி இறுக்க முடியாமல் தவிக்க மழைக்குப் போட்டி போட்டுப் பாடி ஆடிக் கொண்டிருக்கிறான் அவன். ‘தக்க...ஜம்’ எனக் குதித்து ஓரடி எடுத்து வைத்தான் இளைஞன். நெறுக்கிய அவன் புருவங்கள் மேலேறின தாஞ்தைஞ்தக திமிதாஞ் ஜதிக்கு ஏற்ப காற்றும் கேசமும் பிணைந்து உன்மத்தம் ஏறி அவன் ஆடிய வேகத்தில் விரிசடை மூர்த்தியாகக் காட்சியளிக்கிறான் அவன்.

அண்மையில் நான் வாசித்த சிறந்த கதை இது. கதை சொல்லும் திறமை அகிலாவிடம் நிரம்ப இருக்கிறது. அவர் கதைகள் கவித்துவமானவை. ஆழமானவை. நுட்பமானவை. உளவியல் உணர்வுகள் இழையோடுபவை. ரொம்பவும் யோசிக்க வைப்பவை.

- பொன்னீலன்

Pin It