இந்த ஆண்டின் பாரதி விழா மக்கள் கவிஞர்கள் தினமாக . . .
இந்த ஆண்டு பாரதி விழா மக்கள் கவிஞர்கள் தினமாக 21.9.2010 அன்று சிவகாசி ராவுத்தர் பெரியாண்டவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அன்று காலை 11 மணிக்குத் துவங்கிய கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வரதராஜ் தலைமை ஏற்றார். கூட்டத்தில் மாற்றுக் கருத்து ஆசிரியர் தோழர் த.சிவக்குமார், பேராசிரியர் அருணாச்சலம், இலக்கு இளைஞர் மன்றத் தலைவர் தோழர் சுரேஷ், ஆசிரியர் திரு.சாமி, தோழர் பாரதி மற்றும் கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்ம்ன்(CWP) மாநில அமைப்பாளர் தோழர் ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினர். இக்கூட்டம் மாணவ மாணவியர் மற்றும் பொது மக்களிடையே பாரதி மற்றும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் குறித்துப் பல்வேறு தலைப்புகளின் கீழ் கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்ற பின்னர் அதன் இறுதிக் கட்டமாக நடைபெற்றது.
தலைமை ஏற்று நடத்திய தோழர் வரதராஜ் அவர்களின் சிறிய துவக்க உரைக்குப் பின்பு தோழர் சிவக்குமார் தனது கருத்துரையை வழங்கினார். மக்கள் கவிஞர்கள் தினம் என்று பாரதி விழாவை அனுஷ்டிப்பதன் காரணத்தை முதலில் அவர்விளக்கினார். பாரதி காலகட்டத்தின் தொடக்கம் முதல்தான் தமிழ் இலக்கியம் மக்கள் இலக்கியமாக மலரத் தொடங்கியது. 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியத்தில் ஆரம்ப கட்டத்தில் சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை மையமாக வைத்து பாடிய பாணர்கள் இருந்தனர். அதன் பின்னர் குறுநில மன்னர்களின் ஆட்சி அழிந்து சேர, சோழ, பாண்டியரின் ஆட்சி உருவான போது தங்களுடைய வாழ்க்கையை மன்னர்களின் தயவில் நடத்த வேண்டிய நிலை புலவர்களுக்கு ஏற்பட்டது. அதனால் இச்சகம் பாடும் போக்கு தலை தூக்கியது. அதன்பின்னர் மறுமலர்ச்சியுகம் தோன்றும் வரை அப்போக்கு தொடர்ந்தது.
இச்சகம் பாடும் போக்கை ஒழித்தவர்
அதன் பின்னர் மறுமலர்ச்சி யுகத்தின் தமிழ் இலக்கிய வெளிப்பாடாக முகிழ்த்த பாரதியுடன் அந்த இச்சகம் பாடும் போக்கு முடிவுக்கு வந்தது. மக்களுக்காக இலக்கியம் படைத்த பாரதி போன்றவர்களை முன்பு போல் ஆதரிக்க மன்னர்களும் இல்லை; அவர் போன்றவர்கள் யாருக்காக எழுதினார்களோ அந்த மக்களும் அவர்களை ஆதரித்துப் பராமரிக்க முன்வரவில்லை. எனவே பாரதி போன்றவர்கள் சொல்லொண்ணாத் துன்பங்களைத் தங்களது வாழ்க்கையில் அனுபவித்தனர். பாரதி அவர் நடத்திய இதழில் இலக்கியவாதிகளை மக்கள் ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதன் காரணம் அதுதான். கற்றவர் மத்தியில் மட்டும் பெரிதும் செல்வதற்கான வாய்ப்பினைக் கொண்டிருந்த பாரதி தொடங்கி வைத்த போக்கை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அதன் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றார். படிக்காத பாமரரும் லயித்துப் பாடும் அளவிற்கு அவருடைய கருத்தாழமிக்கத் திரைப்படப் பாடல்கள் இருந்தன. மருதகாசி, உடுமலை நாராயண கவி போன்றவர்களும் அந்தப் போக்கை முன்னெடுத்துச் சென்றனர்.
அந்தப் போக்கு தற்போது மாறி மீண்டும் ஆட்சியாளர்களுக்கு இச்சகம் பாடும் இழிந்த போக்கு தலை தூக்கியுள்ளது. இந்தப் போக்கின் பாதிப்பிலிருந்து தமிழ் இலக்கியத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க இதுபோன்ற மக்கள் கவிஞர்களின் பாடல்களை மக்கள் முன் எடுத்துச் செல்வது அவசியம்; அதற்கு இதுபோன்ற விழாக்கள் அவசியம். அந்த அடிப்படையில் தான் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கருத்துக்களை முன்வைத்து தோழர் த.சிவக்குமார் தனது உரையினை நிறைவு செய்தார்.
அடுத்து உரையாற்றிய ஆசிரியர் சாமி அவர்கள் மாணவர்களிடையே கவிதை, கட்டுரை எழுதும் திறனை வளர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. வருந்தத் தகுந்த விதத்தில் ஆசிரியர்கள் அந்தப் பங்கினைச் சரிவர ஆற்றுவதில்லை. இருந்த போதிலும் மாணவர்களின் கற்பனை வளமும், ஆற்றலும் இங்கு போட்டிக்கு வந்த கவிதை கட்டுரைகளில் நன்கு வெளிவந்துள்ளது. பாரதியும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் பல்வேறு வாழ்க்கை இன்னல்களை எதிர் கொண்டே தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டனர் என்ற கருத்துக்களைத் தனது உரையில் முன்வைத்தார்.
கலை கலைக்காகவா மக்களுக்காகவா
அடுத்து உரையாற்றிய பேராசிரியர் அருணாசலம் அவர்கள் தனது உரை முழுவதிலும் ஆங்காங்கே மக்கள் கவிஞர்கள் இயற்றிய பல்வேறு பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என்ற இருவேறு கருத்துக்களை முன்வைத்து கலை மக்களுக்காகவே என்ற கருத்தே சரியானது என்பதை நிறுவினார்.
உழைப்பாளி மக்கள், இளைஞர்கள் என சமூகத்தின் முக்கியமான பகுதியினரைப் பாரதியும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் தங்களது பாடல் வரிகளில் எவ்வாறு உயர்த்திப் பிடித்தனர் என்பதை விளக்கிப் பேசினார். தனிநபர் துதியினை அடிப்படையாகக் கொண்ட எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைச்சோம் என்பன போன்ற பாடல்கள் மக்கள் கவிஞர்கள் உயர்த்திப் பிடித்த ஜனநாயகக் கருத்துக்களிலிருந்து எவ்வளவு தூரம் சமூகத்தை விலக்கிக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளன என்பதை வேதனை ததும்ப விளக்கினார். சமூகத் தாக்கமுள்ள மக்கள் கவிஞர்களின் பாடல்களை மக்கள் மனதில் நிலை நிறுத்தும் வண்ணம் கொண்டு வருவதோடு அந்தப் பாதையில் கவிதைகளைப் புனையும் கட்டுரைகள் வரையும் சமூக சிந்தையும் துடிப்புமுள்ள புதிய தலைமுறை இலக்கிய வாதிகளை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த விழாவில் பரிசு பெறுவோரின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெண் பிள்ளைகளாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடிய வியமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
பேரன்பும் பெருங்கோபமும்
கவிதைப் போட்டியில் பரிசு பெற்றவரும், ஆனைக்கூட்டம் இலக்கு இளைஞர் மன்ற அமைப்பாளருமான சுரேஷ் தனது உரையில் பாரதி சமூகத்தின் மீது கொண்டிருந்தது சாதாரண அன்பல்ல; பேரன்பு; அவர் வேடிக்கை மனிதர்கள் போல் வீழ்ந்துபடவில்லை என்பதற்கு சரியான எடுத்துக் காட்டு இன்றும் இதுபோன்ற விழாக்கள் நடத்தி அவரை நாம் நினைவு கூர்கிறோமே அதுதான்; உண்மையான சமூகமாற்றப் பணியில் ஈடுபடுபவர்கள் மனதில் நீக்கமற நிறைந்துள்ளது பேரன்பும் சமூக அவலங்களின் மீதான பெரும் கோபமுமே என்ற கருத்தினை முன்வைத்து அவரது உரையினை நிறைவு செய்தார்.
அறிவியல்பூர்வ அம்சங்கள்
மாற்றுக் கருத்து வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் பாரதி இந்தக் கூட்டம் ஒரு வகையில் பெரிதும் சிறப்புடையது; அதாவது வழக்கமாகத் தொலைக்காட்சி முன் அமர்ந்து தங்களது நேரத்தை வீணாகச் செலவிடும் மக்களில் ஒரு பகுதியினரைத் தொலைக்காட்சிச் சபலத்திலிருந்து விடுவித்து இக் கூட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். பாரதியும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் அவர்களது கவிதைகளில் அறிவியல்பூர்வ அம்சங்கள் பலவற்றை வெளிப்படுத்தினர்; அத்தகைய அறிவியல்பூர்வ அம்சங்கள் திருக்குறளில் இருப்பதால் தான் அது இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலை பெற்று நிற்கிறது. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற குறள் விஞ்ஞானபூர்வ பார்வை எது என்பதை ரத்தினச் சுருக்கமாக வெளிப்படுத்துகிறது. உண்மை என்பது நடந்ததை நடந்தபடி உப்புச்சப்பின்றிக் கூறிக் கொண்டிருப்பதல்ல. உண்மை நடைமுறை சாத்தியமுள்ளதாக ஆக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தான் வள்ளுவர் கூறினார் “பொய்மையும் வாய்மையுடைத்து புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்று; இதுபோன்ற விழாக்கள் திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களிலும் மக்கள் கவிஞர்களது கவிதைகளிலும் கோடிட்டுக் காட்டப்படும் அறிவியல்பூர்வ வியங்களை மக்களிடையே கொண்டு செல்லப் பயன்பட வேண்டும் என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியில் உரையாற்றிய தோழர் ஆனந்தனது உரையின் சாராம்சம்:
இந்தக் கூட்டம் மூன்று வித்தியாசமான தன்மைகளைக் கொண்டது. ஒன்று இது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரங்கம் ராவுத்தர் பெரியாண்டவர் என்று இஸ்லாமிய ஹிந்து மத ஒருமைப் பாட்டினை வலியுறுத்தும் அரங்கமாக இருப்பது. இரண்டு இலக்கியத்தோடு நேரடியாகத் தொடர்புடைய பலரைக் கொண்டு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி என்ற இலக்கியத்தோடு நேரடித் தொடர்பில்லாத அமைப்பு இக்கூட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது. மூன்றாவதாக பொதுவுடைமை அரசியல் ஊழியனாகவும் தொழிற்சங்கப் பணியினை மேற்கொள்பவனாகவும் இருக்கும் நான் இந்த இலக்கியக் கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற அழைக்கப் பட்டிருப்பது.
மார்க்ஸ் எங்கெல்ஸின் இலக்கியத் தொடர்புகள்
பொதுவுடைமைக் கருத்தினைச் சார்ந்திருப்பவர்களுக்கு இலக்கியங்கள் பாலான தொடர்பு எப்போதும் இருந்து வந்தேயுள்ளது. மாமேதை மார்க்ஸ் பல்வேறு இலக்கியங்களைக் குறிப்பாக கதே, ஷேக்ஸ்பியர் போன்றவர்களின் எழுத்துக்களை நன்கு படித்து அவற்றை நேர்த்தியாக விமர்சனம் செய்தவராக இருந்தார். அதைப்போல் எங்கெல்ஸ் இத்தாலிய இளங்கவிஞன் தாந்தேயின் தெய்வீக இன்பவியல் என்ற கவிதை நூலை அணு அணுவாக ரசித்துப் பாராட்டினார். அந்த அடிப்படையில் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் எனக்கும் இலக்கியம் குறித்துப் பேச அருகதையும் உரிமையும் உண்டு.
தாக்குதல் வருகிறது எழுச்சி ஏற்படவில்லை
இன்று நாம் வாழும் சமூகத்தில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்றுவரை உலக நாடுகள் அனைத்தையும் ஒரு கடுமையான உற்பத்தித் தேக்க நெருக்கடி ஆட்டிப்படைத்துக் கொண்டுள்ளது. அதனால் வேலைகளையும் வீடுகளையும் லட்சக் கணக்கான மேலைநாட்டு மக்கள் இழந்துள்ளனர். விற்காததை எல்லாம் விற்று வெளி நாடுகளில் வேலைக்கு அனுப்பப்பட்ட நமது பிள்ளைகள் லட்சக் கணக்கில் இந்த நெருக்கடி காரணமாக நம் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வட்டாரத்தின் சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஈவிரக்கமின்றிச் சுரண்டப் படுகின்றனர். இத்தனை கொடுமைகள் நிலவியும் கூட இந்தச் சமுதாயத்தை மாற்றுவதற்குத் தேவையான மக்கள் எழுச்சி ஏற்படவில்லை. இது சமூகமாற்றச் சிந்தனைகளைக் கொண்டுள்ள என்னைப் போன்றவர்களுக்கு மிகப் பெரும் ஆதங்கமாக உள்ளது.
மேலோங்கியிருந்த நம்பிக்கை ஆனால் இதைப் போன்றதொரு நிலை கடந்த காலத்தில் நிலவவில்லை. அப்போது “கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி எடுக்கிற அவசியம் இருக்காது, இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால் ஒதுக்கிற வேலையும் இருக்காது; பதுக்கிற வேலையும் இருக்காது” என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பொதுவுடமை சமூகத்தின் வரவு குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் பரவசமாகப் பாடினார்.
ஆசிய நாடுகளின் எழுச்சி என்ற தனது நூலில் மாமேதை லெனினும் இத்தகைய நம்பிக்கையை வெளியிட்டார். ஆசியாவின் பல நாடுகள் முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பைத் தற்போது அவை உள்ள நிலவுடமை நிலையிலிருந்து கட்டாயம் அனுபவித்துக் கடந்த பின்னர் தான் சோசலிசத்தை நோக்கிச் செல்ல முடியும் என்ற நிலை உருவாகாது என்று நம்பினார். ஏனெனில் அதற்குள் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் அனைத்தும் சோசலிச மயமாகிவிடும் என்று அவர் நினைத்தார். அவரது அந்த நம்பிக்கை தவறானதல்ல. அன்றிருந்த நிலை அதுதான்.
ஆனால் அதன் பின்னர் பொதுவுடமை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள் லெனினைப் போல் முனைப்புடன் இல்லாததால் அதனை முதலாளித்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. குறிப்பிடத்தக்க அளவு காலம் சமூக எழுச்சி எதுவுமின்றி சலனமில்லாத சூழலை முதலாளித்துவத்தால் உருவாக்கிப் பராமரிக்க முடிந்தது. அதனால் அவர்களது அத்தகைய நம்பிக்கைகள் இன்று வீணாகிப் போனது போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது. மக்களின் மனங்களில் எந்தவொரு தாக்குதலும் அதற்கான எதிர் விளைவை ஏற்படுத்தும் என்ற விதி செயல்பட விடாமல் செய்யப் பட்டுள்ளது . அதற்கான காரணம் என்ன?
தனிநபர்வாதக் கலாச்சாரம்
நம் மக்களிடையே ஒரு மோசமான தனிநபர்வாதக் கலாச்சாரம் நிலவச் செய்யப்பட்டுள்ளதே அதற்கான காரணம். அந்தக் கலாச்சாரம் மக்களிடையே நின்று நிலவுவதற்கு நமது இலக்கியங்களும் ஒரு மிக முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன.
திரைப்பட நடிகர் கமலஹாசன் மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் ஏற்பாடு செய்த ஒரு விழாவில் உண்ணும் உணவில், பருகும் பானத்தில் ஆயிரம் சுத்தம் பார்க்கும் நாம், பார்க்கும் திரைப்படங்களில் மட்டும் அழுகல் தன்மை வாய்ந்த திரைப் படங்களை அடையாளம் காண்பதுமில்லை; அதனை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை; அவற்றைப் பார்க்கிறோம், அதன்மூலம் நமது தனிநபர் கலாச்சாரமும் ஒழுக்கமும் பாழ்பட அனுமதிக்கிறோம் என்று மிகச் சரியாகக் கூறினார். நமது இளைஞர் சமூகம் முழுவதுமே இப்படிப்பட்ட தனிநபர்வாதக் கலாச்சாரச் சீரழிவுப் பாதையில் சென்று கொண்டுள்ளது.
பாரதி ஜனநாயக மற்றும் மனிதாபிமானக் கருத்துக்கள் சமூகத்தில் தோன்றி வளர தனது இலக்கியங்கள் மூலம் பாடுபட்டான். ஆனாலும் கூடப் பாரதியின் கருத்துக்கள் மட்டுமே இன்றுள்ள சமூகப் பிரச்னைகளின் தீர்வுக்கு வழிகாட்டக் கூடியவை என்று கூற முடியாது. பாரதியிடமிருந்த ஆன்மீக வாதம் அவரிடமிருந்ததொரு போதாமை. மேலும் பாட்டாளி வர்க்கம் சமூக ரீதியாக ஆற்றவிருக்கும் பங்கினை அத்தனை தூரம் அவர் உயர்த்திப் பிடிக்கவில்லை.
ஆனால் அவருக்குப் பின் வந்த மக்கள் கவிஞர் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று ரீதியான பங்கினை உணர்ந்து உயர்த்திப் பிடித்தார். ஆனால் பாரதி போல் சமூகத்தின் பல துறைகள் குறித்த கருத்துக்களை பட்டுக்கோட்டை தனது பாடல்கள் மூலம் கொண்டு வரவில்லை. அவ்வாறு அவர் கொண்டு வராமல் போனதற்கு அவர் மிகக் குறைந்த வயதில் மறைந்ததும் ஒரு காரணம். அவரது காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த மருதகாசி போன்றவர்களும் மனிதாபிமானக் கருத்தை உயர்த்திப் பிடித்தனர்.
மனிதனை விட்டு மறைந்து கொண்டிருக்கும் மனிதம்
சுரண்டலை அடிப்படையாகவும் பண வழிபாட்டை நாடித் துடிப்பாகவும் கொண்டுள்ள இந்தச் சமூகத்தில் மனிதன் மனிதனாக வாழ முடிவதில்லை. அதனைப் பிரதிபலிக்கும் விதத்தில் தான் ஏனோ மனிதன் பிறந்து விட்டான் என்ற பாடலை மருதகாசி பாடினார். அது போன்ற சமூகத் தாக்கமுள்ள பாடல்கள் திரைப் படங்களில் வருவது குறைந்து அப்பட்டமான தனிநபர் வாதப் போக்குகளைப் பிரதிபலிக்கும் பாடல்களும், கவிதைகளும் திரையுலகை முழுமையாகத் தற்போது ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.
எந்திரங்களாக்கப்படும் அவலம்
இன்றைய இந்த அமைப்பில் மொழி அழிந்து கொண்டுள்ளது. அதிகபட்ச லாப நோக்குடன் உற்பத்தியை நடத்துபவர்களுக்கு விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் முழுமையான வளர்ச்சி இலக்கு அல்ல. மாறாக அவற்றைக் கையாள்பவர்களை எவ்வளவு தூரம் எந்திர கதியில் செயல்பட வைத்து அதிக லாபம் ஈட்டலாம் என்பதே அவர்களின் குறிக்கோள். அந்த அடிப்படையில் எந்திரங்களாக ஆகிவரும் மனிதர்கள் பயன்படுத்தும் மொழி கூட இப்பின்னணியில் சங்கேதத் தன்மை வாய்ந்ததாக ஆகி வருகிறது. செல் போன்களில் தற்போதைய படித்த இளைஞர்கள் பயன்படுத்தும் மொழியே இதற்கு எடுத்துக் காட்டு. எனவே மொழியையும் இலக்கியத்தையும் காப்பாற்றுவதற்காகவும் கூட நாம் போராடியாக வேண்டும்.
இத்தகைய ஜனநாயகத் தன்மையற்ற பாசிஸப் போக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நமது கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்த பாரதியும், மக்கள் கவிஞர்களும் தங்களது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் முன்வைத்த சமூகத் தன்மை வாய்ந்த கருத்துக்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும். தனிநபர் வாதக் கலாச்சாரத்தைத் தூக்கியயறிந்து விட்டு கூட்டுவாதக் கலாச்சாரம் கைக் கொள்ளப்படுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு இது போன்ற விழாக்கள் பேருதவி செய்யும் என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
உரை வீச்சுக்களும் அதன்பின் பரிசு வழங்கல்களும் என்ற விதத்தில் தொய்வேதுமின்றி இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றது. பேசியவர்கள் அனைவரும் தங்களுக்கென ஒரு பொருளை மையமாக எடுத்துக் கொண்டு அந்த அடிப்படையில் தங்களது கருத்துக்களை முன் வைத்தது சிறப்பாக இருந்தது. கூட்டத்தில் தொழிலாளர், பெற்றோர், மாணவர், இலக்கிய வாதிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலாளர் தலைவர்கள் என சமூகத்தின் அனைத்து முக்கிய பிரிவினரிடமிருந்தும் பலர் வந்து கலந்து கொண்டனர்.