இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான தோழர் தா. பாண்டியன் அவர்களின் ‘பெரியார் எனும் இயக்கம்’ என்ற நூல் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகள் மீதும் அவரின் தொண்டின் மீதும் ஆழ்ந்தகன்ற கருத்துச் செலுத்தி எழுதப்பட்ட சிறு நூலாகும். பெரியாரின் சமூகச் சீர்திருத்தம், பெண்விடுதலை, சுயமரியாதை இயக்கம், பார்ப்பனிய சாதி மேலாண்மை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிப் போராட்டம் குறித்த செய்திகளைத் தோழர் தா.பா. அவர்கள் சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார். 

செய்திகள் கோவையாக இல்லாமல், மனதில் தோன்றியதை உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார்.  இந்த நூலை emotional outburst of thoughts on Periyar என்று குறிப்பிடலாம்.  மேலும் பெரியாரின் சிந்தனையின் நீட்சியாகப் பின்வந்த திராவிட இயக்கங்கள் சார்ந்த அரசுகள் பெரியாரின் சிந்தனைகளோடு அரண்பட்டதையும் முரண்பட்டதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

periyar book pandiyan 450தந்தை பெரியாரின் அரசியல் கள நுழைவு என்பது 1915க்குப் பின்பு எனத் தெரியவருகின்றது.  பொதுவாக இவ்வாண்டு முதல்தான் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் பலர் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தனர்.  வெள்ளையர் ஏகாதிபத்தியத்தின் இந்தக் காலக்கட்டத்தில் பிராமணிய மேலாண்மை, பிற சமூகத்தினரைத் தாழ்ந்த நிலையில் வைத்திருப்பதைக் கண்டு தந்தை பெரியார், அத்தகைய சமூக முரண்பாட்டைக் கண்டறிந்து அதனைப் போக்க நினைத்தார் என்னும் செய்தியைத் தோழர் தா.பா. அவர்கள் முதல் கட்டுரையில் விளக்கியுள்ளார்.

நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அவர் பங்கு கொண்டு காந்தியாரின் கொள்கைகளை ஏற்று மதுவிலக்குக் கொள்கையில் முன்னின்றார்.  தன் தோட்டத்துத் தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார் என்ற செய்தியோடு, பேராயக்கட்சியில் பார்ப்பனர் ஆதிக்கத்தை அறிந்து சமுதாயத்தில் சமத்துவமின்றி முரண்பட்டுக்கிடப்பதை நீக்கப் பெரியார் முனைந்தார் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.  அக்காலத்தில் பார்ப்பன எதிர்ப்பு என்பது பெரியார் வலிந்து புகுத்திய பண்பாட்டுப் போராட்டமன்று, அவருக்கு முன்பே அத்தகைய சிந்தனைப் போக்கு இருந்தது என்பதை வரலாற்றுப் பார்வையோடு இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரியார் செய்த தொண்டுகள் விரிவாகவே பேசப்படுகின்றன.  குழந்தைப் பருவ மண எதிர்ப்பு, சீர்திருத்த மண ஆதரவு, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களுக்குச் சமவுரிமை, விதவைத் திருமண ஏற்பு, மூடப்பழக்க எதிர்ப்பு போன்ற தளங்களில் பெரியாரின் சிந்தனையும் தொண்டும் விளக்கப்படுகின்றன.  பெரியாரின் சிந்தனைகளைப் பெண்கள் சமுதாயம் ஏற்றுச் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து செயலாற்றியதை எடுத்துக் கூறியுள்ளார்.

1938இல் பெண்கள் மாநாட்டில் பெரியார் என்று அழைக்கப்பட்ட வரலாற்றுச் செய்தியை ஒரு தாய், தன் மகனுக்குச் சூட்டிய பெயரெனக் குறிப்பிட்டுள்ளார்.  தீண்டாமை ஒழிப்பு சாதிப்பட்டங்களை நீக்குதல், சமயக் குறியீடுகளை ஏற்காமை போன்ற சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பெரியார், தீர்மானங்களின் வாயிலாகவும் பரப்புரையின் வாயிலாகவும் பொதுமக்களின் சிந்தனைக்கு எடுத்துச் சென்றார்.  பெரியார் சிந்தனையாளர் மட்டுமல்லர்.  பிறரைச் சிந்திக்க வைத்த சிந்தனையாளர் என்று தோழர் தா.பா. அவர்கள் புகழாரம் சூட்டுகின்றார்.

பெரியார் அவர்கள் 1920 இல் பேராயக் கட்சியில் சேர்ந்து பேராயக் கட்சியின் மாநிலத் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.  பின்னர், பேராயக் கட்சியினர் வகுப்பு வாரி உரிமை வழங்க மறுத்ததன் காரணமாக 1925இல் அக்கட்சியிலிருந்து விலகிக் கொண்டார். பேராயக் கட்சியில் இருந்தபோது நீதிக்கட்சியினர், பிராமணர் அல்லாதாரின் நலன்கள் குறித்த விஷயங்களில் கருத்தைச் செலுத்தி வந்தார்.  பின்னர் நீதிக்கட்சியை ஆதரித்தும் வெள்ளையர் ஆட்சியை எதிர்க்கும் போக்கைக் கைவிட்டும் தன் நிலைப்பாட்டை வைத்துக் கொண்டார்.  இதற்குக் காரணம், அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துக்காட்டி அவர் எவ்விதம் பிராமணர்களின் சாதி வேற்றுமையால் துன்பமடைந்தார், அந்தக் காரணங்களே தந்தை பெரியாரையும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்க நோக்கமாயிற்று என்று ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்களின் பேச்சு ஒவ்வொருவிதமாக இருக்கும்.  பெரியாரின் பேச்சும் எழுத்தும் அவரின் இதயமொழி என்கின்றார்.  அலங்காரப் பேச்சில்லை, குழந்தைகளிடம் ஒரு குடும்பத் தலைவர் பேசுவது போன்ற பேச்சு என்கின்றார்.  நாத்திகம் குறித்துக் குறிப்பிடுகையில் பெரியாரின் கடவுள் மறுப்பும் சமயச் சடங்குகளின் மறுப்பும் மக்களிடையே மிக அரிதாகவே காணப்படுகின்றன.  திராவிடர் கழகத்தினரும் பொதுவுடைமைவாதிகளும் இவற்றைப் பின்பற்றுவதாகக் குறிப்பிடுகின்றார்.

பெரியாரின் சிந்தனைகளில் இருந்து திராவிட, இயக்கங்கள் பின்னாளில் விலகிச் சென்றதை அண்ணாவின் ஆட்சி முதல் அம்மையாரின் ஆட்சி வரை விளக்கிப் “பல பத்தாண்டுகளாக நடத்தப்பட்ட பகுத்தறிவு இயக்கத்தின் முக்கியக் கூறு தகர்க்கப்பட்டது” என்று வியக்கின்றார்.  அதே நேரத்தில் அண்ணா அவர்கள், சீர்திருத்தத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றியதை நினைவுகூர்கின்றார்.

அம்மையார் ஆட்சிக்காலத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததை தா.பா. அவர்கள் குறித்துள்ளார்.  பேராசிரியர் முனைவர். இராசதுரையவர்கள் இது பற்றி “மாண்புமிகு கி. வீரமணியவர்கள் இந்திய அரசியல் சட்டம் 31 (சி) பிரிவின் கீழ் மாநில அரசே தனிச்சட்டம் இயற்றிக் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறலாம் என்று கூறி அதற்கான மாதிரிச் சட்ட வடிவத்தையும் அம்மையாரிடம் அளித்தார்” என்று தன் நூலில் குறித்துள்ளார்.  69 விழுக்காடு பெற்றதில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கும் பங்குண்டு.

பெரியார் அவர்கள் தலித்தின மக்களின் நலன்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று சிலர் பேசுவதையும் எழுதுவதையும் தோழர் தா.பா. அவர்கள் மறுத்துரைக்கின்றார்.  இந்நிலையில் பெரியார், அவர்களுக்குப் பாடுபடவில்லை எனச் சிலர் சொல்வது சரியில்லை எனக் கருதுகின்றார்.  ஒடுக்கப்பட்ட மக்களின் மொத்த நலன் என்பதே பெரியாரின் சிந்தனையாக இருந்தது.  அதற்குள் ஓர் உள்வட்டம் என்பது தேவையற்றது என்பது பெரியாரின் கருத்து.  நீதிக்கட்சி தலித் மக்களுக்குச் செய்யும் நலன்களைப் பெரியார் பாராட்டி வந்தார்.  1930இல் வகுப்புவாரி உரிமை பெற்றதற்குப் பெரியாரே முழுமுதற் காரணம்.

1924இல் வைக்கம் போராட்டத்திற்கு பெரியார் தலித் மக்கள் மீது கொண்ட பற்றே காரணம்.  சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினை, 1936இல் திருவிதாங்கூர் கோயில் தலித் மக்களுக்குத் திறந்து விடப்பட்டது ஆகியவை பெரியாரின் தலித் மக்களுக்கான உண்மைத் தொண்டைப் பறைசாற்றுகின்றன.  அவர் இல்லை எனில் நம் நிலை தாழ்ந்தே இருந்திருக்கும்.

தந்தை பெரியார் அடித்தள மக்களுக்காகப் போராடிய வரலாற்று நாயகன்.  அவரின் பன்முக ஆளுமையை தா.பா. அவர்கள் நன்கு இனங்காட்டி உள்ளார்.  வகுப்புவாதச் சக்திகளை விரட்டியடிக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்பது அவரின் வேண்டுகோள்.  இந்தக் கட்டுரைக்கு அழகிய அணிந்துரை வழங்கியவர் குறளறிஞர் பா. வீரமணி அவர்கள்.  அவர்களின் அணிந்துரையே ஓர் அற்புதத் திறனாய்வு.  எந்த நிலையிலும் தந்தை பெரியார் தமிழினத்தின் விடிவெள்ளி. அவரின் சிந்தனைகளும் சீர்திருத்தக் கொள்கைகளும் தமிழ்ச் சமுதாயத்தை மட்டுமின்றிச் சிந்திக்கின்றவர்கள் எவரையும் வாழவைக்கும்.

Pin It