கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

perunchithiranar 411முள்மயிர் மூடிய முக்காட்டுத் தலையும்,
கொள்கோல் கமண்டலம் கொண்ட கைகளும்
நீறு மண்டிய நெற்றியும், பார்ப்பனத்
தூரு மண்டிய உள்ளமும் கொண்டு-
கரவுச் சிரிப்பொடு காவி உடையில்
துறவியாய் உலாவரும் பார்ப்பனத் தொழும்பு-
காஞ்சி காம கோடி மடத்தின் மூஞ்சி ஒன்று-
சின்ன பெரியவாள் என்னும் பெயருடன், இந்தியா வெங்கும்
மன்னிய சிற்றூர் பேரூர் எல்லாம்
கால்நடைச் செலவாய்ப் பாதயாத் திரை யாய்-
நீள்நடை யிட்டே ஆரிய நியம த்தை
நாள் தொறும் பரப்பிடும் நாடகம் அறிவோம் !

அந்த மூஞ்சி தான், அண்மையில்-துணிந்து-
வெந்ததும் வேகா ததுமாய்ஒர்-கருத்தைத்-
திருவாய் மலர்ந்து-திக்கி யுள்ளது!
பெரியார் அண்ணா ஆகியோர் நம்மிடம்
மூச்சுக் காற்றாய் முழங்கிச் சென்ற
பேச்சுகள் எழுத்துகள் நச்சு விதைகளாய் !
நாட்டில் அந்த நச்சுகள் பரவிக்
கேட்டைத் தந்தவாம் ! கெடுத்துவிட் டனவாம் !
சின்ன பெரியவாள் சிந்திய முத்து, இது !
பொன்னால் பொறித்த வேதப் பொழிவிது !
கேட்டுக் கொண்டுதான் உள்ளோம் ! கேட்ட்தும்
மாட்டிக் கொண்டு மடிந்திட வில்லை !

அல்லது, அத்தகு அன்புரை கூறிய
நல்ல பிறவி யின் நாக்கை அறுத்துத்
தங்கத் தட்டால் உறைசெய்து மாட்டிப்
பொங்கு பூசைகள் புகைத்திட வில்லை.
ஏன்தான் பிறந்தோம்? எதற்கு வாழ்கிறோம்?
வீணான பிறவிநாம்! விழல்களாய் இருக்கிறோம்!
கருகிப்போய்க் கிடந்தஇந் நாட்டிடை வந்தே
உருகி உருகி உயிரைத் தேய்த்தே
ஒளியைப் பரப்பிய ஊழியத் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்
பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால்-
ஊசிய கருத்தை உரைத்த புராணங்கள்,
வேத அழுக்குகள், பொய்ம்மை விளக்கங்கள்-
ஊதை உளுத்தைகள் நச்சிலா உரைகளா?

ஆரிய மாயையில் அழுந்திக் கிடந்த
வீரியம் குறைந்த திரவிடர் விலாவில்
செந்தமிழ் மறத்தைப் பாய்ச்சிட இராப்பகல்
அந்தமிழ் பேசிய-எழுதிய-அண்ணா
பரப்பிய கருத்துகள் நச்சுகள் என்றால்-
சுரப்புடைப் பார்ப்பனர் சொன்னவை எல்லாம்
நச்சிலா உரைகளா? நன்மைதந் தவையா?
கச்சி உருவம் கதைத்தது சரியா?
என்னஇக் கொடுமை? என்னஇக் கூற்று?
சின்ன பெரியவாள் செருக்குதான் என்ன?

சேற்றில் புழுக்களாய்-சிற்றுயிர் இனங்களாய்-
மாற்றிட இயலா மந்தை ஆடுகளாய்-
வழிவழிப் பார்ப்பனர் வந்து புகுத்திய
இழிவினை உணரா இழிபிற விகளாய்
ஆரியக் கொடுநச் சரவம் கொத்திச்
சீரிய மொழியையும், சிறந்தல் லறிவையும்,
ஆயிரம் ஆயிரம் அறிவுநூல் தொகையையும்,
ஏயுநல் லிலக்கிய இலக்கண இயல்பையும்,
நாகரி கத்தையும் நல்லபண் பாட்டையும்,
ஆகிய அரசையும் ஆட்சி நலத்தையும்,

ஒருங்கே அழித்துக் கொண்டஓர் இனத்தைப்
பெருங்கொள் கையினால் பிழைக்க வைத்த-
தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை,
மண்மானங் காத்த மாபெரும் மீட்பனை,
அரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய
பெரியார் என்னும் பெரும்பே ராசானை-
இழிப்புரை சொல்வதா? சொல்லியிங் கிருப்பதா?
பழிப்புரை வந்துநம் செவிகளிற் பாய்வதா?
நச்சு விதைகளா, நயந்து அவர் சொன்னவை?
பச்சிலை மருந்தன்றோ, எமக்கவர் பகர்ந்தவை?
பார்ப்பனப் பதடிகள் எம்மைப் படுத்திய
ஆர்ப்பொலி அடங்கியது அவரினால் அன்றோ?

ஆரியக் குறும்பர்கள் ஆக்கிய கொடுமையின்
வேரினைத் தீய்த்தது அவர்வினை யன்றோ?
மக்களுள் மக்களை வேறுபிரித்துத்
தக்க அவர் அறிவுக் கண்களை அடைத்து
மடமைச் சகதியில்-மடிமை இருளினுள்-
கடமை தவிர்த்த கரவுச் சேற்றினுள்
புதைத்த பார்ப்பனர் புன்மையைத் தடுத்துச்
சிதைத்தவர் அல்லரோ ஈரோட்டுச் செம்மல்?

அவர்தம் முயற்சியை அடியொற்றி நடந்து
தவறிலாத் தமிழர் ஆளுமை தழைத்திட
உழைத்தவர் அல்லரோ அண்ணா உயர்மகன்?
இழைத்தஇவ் விருவரும் உரைத்தவை நஞ்சா?

இப்படி இங்கோர் எருமை சொன்னால்
எப்படித் தமிழர் இதனைப் பொறுப்பது?

வீரப் பன்கள் வேண்டு மானால்
மாறப்பன் களாகி மண்ணைக் கவ்வலாம்!

யாரப்பன் என்று தெரியாதா பிறர்க்கு?
சேரப்பன் ஒருவன், சினையப்பன் ஒருவனா?

பாரப்பா தமிழா பார்ப்பனன் மொழிவதை?
வீரப்பர் போனால் விறலப்பர் இல்லையா?
வேதாஅ கமங்கள்-விரிந்தபு ராணங்கள்-
சூதுஇதி காசங்கள்-சூழ்ச்சிசெய் மனுக்கள்-
இன்றைக்குப் பார்ப்பனன் எழுதும் இழிவுகள்-
என்றிவை யாவுமே இனியவை ஆகுமா?
பெரியார் அண்ணா வாய்களில் பிறந்தவை
உரிய மக்களுக் குதவிட வில்லையா?

தமிழர்க்கு அறிவைத் தந்திட வில்லையா?
தமிழர்க்குத் தன்மானம் ஊட்டிட வில்லையா?

தமிழின் உணர்வைத் தட்டி யெழுப்பி
அமிழாத இனநலம் ஆக்கிட வில்லையா?

ஆரியர் செய்த அழிம்புகள் யாவையும்
கூரிய உரகளால் கொன்றிட வில்லையா?

பார்ப்பனச் சூழ்ச்சியைப் பகுத்துக் காட்டி
ஆர்புற் றெழும் உணர் வளித்திட வில்லையா?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுக ளாக
நாயினுங் கேடாய் நந்தமிழ்ப் பேரினம்
நலிக்கப் பட்டும் நசுக்கப் பட்டும்
மெலிக்கப் பட்டும் மேலே றாமால்
கிடந்த கீழ்மையைக் களைந்து காட்டி
அடர்ந்தவர் எழுந்திட அளிதர வில்லையா?

பெரியார் உரைகளும் பெறற்கருந் தொண்டும்
உரிய பொழுதில் உதவிட விலையெனில்
தமிழினம் விழித்திடும் தகைவுநேர்ந் திருக்குமா?
ஆரியச் சேற்றினுள் அழுந்தித் தமிழன்
வீரியம் குன்றி மூச்சு விளர்ந்து
புதைக்கப் பட்டுப் போயிருக் கானா?
சிதைக்கப் பட்டிருக் காதா அவன் இனம்?
இவையெலாம் நேர்ந்திட வில்லையே என்ற
நகையுறு ஏக்க நலிவினால் அன்றோ
காஞ்சிச் சின்னவாள் கதைத்துத் திரிகிறார்?
பூஞ்சையாய்ப் போன புல்லுரை புகல்கிறார்?

பெரியார் ஊன்றிய நச்சு விதைகளால்
அரிய விளைவே அற்றுப் போகி
நாடே கெட்டு விட்டதாய் நவில்கிறார் !
நாடென்ன இவரது பாட்டனின் ஈட்டமா?
நாடு கெட்டால் நமக்கிது தகாதென
ஓடிட வேண்டுவ தன்றோ உயர்ந்தது !

நாடு கெட்டதா? பார்ப்பனர் நாட்டிய
கேடு கெட்டதா ? எஃது இங்குக் கெட்டது?
ஆரியக் கொட்டங்கள் ஆட்டங் கண்டு, அதன்
பூரியச் செயல்கள் புதைக்கப் பட்டன !

பார்ப்பனப் பூசல்கள் இனிநட வாவெனும்
போர்ப்பண் இங்கே எழுச்சி கொண்டது !
தமிழினம் மீண்டும் பெரியார் தொண்டினால்
இமைவிழி திறந்து எழுந்து கொண்டது !

அந்த எரிச்சலால் ஆரியத் தலைவர்
நொந்து சாகிறார்; நொட்டணை சொல்கிறார்.

பெரியார் விதைத்தது நச்சாம்! காஞ்சிப்
பெரியவர் விதைப்பது மருந்து விதைகளாம் !

ஏமாற்றிக் கொண்டே இருந்திட லாமெனத்
தாமாற்றும் பொய்யையும் புளுகையும் மேலும்
தொடர்ந்து வருகிறார் சின்ன பெரியவாள் !
அடர்ந்து வருமோர் ஆக்கம் அறிகிலார் !

அவருக் கிதன்வழி அறைந்திடு கின்றோம் !
தவறு நடந்தது தனிவர லாறு!
செய்த தவற்றையே மேலும் செய்திட
பொய்செய் பார்ப்பனர் எண்ணுதல் புரையே !

இனநலத் தீங்கை இற்றைத் தமிழர்
உணர்ந்து கொண்டனர்! உறக்கம் கலைந்தனர் !

இன்னும் அவரை இன்னலில் ஆழ்த்திட
எண்ணும் நினைவைப் பார்ப்பனர் எண்ணினால்
அவர்க்கது சாக்காட்டுத் தீமையை அளித்திடும் !
எவர்க்கும் எங்கும் தீங்கினை எண்ணியே
பழக்கப் பட்ட பார்ப்பன இனத்தினர்
வழக்கத்தை மாற்றி வாழ்வகை காணுக !
நெருப்புத் தமிழர் நிலையறிந்து
இருப்பதற் கேனும் இனிநலம் கருதுக !

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

(கனிச்சாறு இரண்டாம் தொகுதி, பாடல் எண்.118, ப.எண்.180)