தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்று தூத்துக்குடி இன மாவட்டம். இது தன் பெயருக்கு ஏற்றார்ப் போன்று தூத்துக்குடி என்ற துறைமுக நகரை மாவட்டத்தின் தலைநகரமாகக் கொண்டுள்ளது. இந்நகரம் தொன்மையான வரலாற்றுச் சிறப்பைக் கொண்டது, இம் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள ஆதிச்சநல்லூர், கொற்கை. காயல் போன்று தொல்லியல் சான்றுகள் இதுவரை கிட்டவில்லை. ஆயினும் கடல்வாணிபம் நிகழ்ந்த ஒரு நகரம் என்பதன் அடிப்படையில் அயல்நாட்டவரின் எழுத்துப் பதிவுகள் நமக்குக் கிடைத்துள்ளன. அத்துடன் ஐரோப்பியர்களான கிறித்தவ சமயப் பணியாளர்களின் எழுத்துப் பதிவுகளும் முக்கியமானவை.

அகஸ்டஸ் சீசர் என்ற ரோம்நாட்டு மன்னன் தன் நாடு வாணிபத் தொடர்புகொண்டிருந்த ஊர்களின் பெயர்களை எழுத்துவடிவில் பொறித்து ரோம் நகரின் சதுக்கம் ஒன்றில் நிறுவும்படிக் கட்டளை இட்டிருந்தான். இது பியூட்டிங்கர் அட்டவணை என்று வரலாற்றறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது. இதில் சோல்சியஸ் இண்டோரம் என்று குறிப்பிடப் பட்டுள்ள துறைமுக நகரம் தூத்துக்குடி ஆகும். தாலமி தமது நூலில் குறித்துள்ள சோசிகுரி என்ற ஊர் தூத்துக்குடி என்ற கருத்தும் உண்டு.

endhaiyum thayum magizhndhu kulaviதமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் இடம் பெற்றுள்ள இராமேஸ்வரம் தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலான கடற்கரையானது முத்துக்குளித்துறை என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் இயங்கிய சிறிய துறைமுகங்களுக்கு இடையில் செயல்பட்ட ஒரு பெரிய துறைமுக நகரமாகத் தூத்துக்குடி விளங்கியது. கடல் வாணிபத்துடன் முத்துக் குளித்தலும் இங்கு நடந்தது.

கடல்வாணிபம் நிகழும் நகரங்கள் காலனிய வாதிகளின் ஆதிக்கத்திற்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம். இதன் அடிப்படையில் தூத்துக்குடியின் வரலாறு என்பது வாணிப வரலாறாக மட்டுமின்றி ஐரோப்பியக் காலனியவாதிகளின் ஆக்கிரமிப்பு வரலாறாகவும் விளங்கியது.பதினாறாவது நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் பதினேழாவது நூற்றாண்டில் டச் நாட்டினர், பின்னர் ஆங்கிலேயர் என மூன்று காலனிய ஆட்சியாளர்களை எதிர் கொண்ட நகரம் தூத்துக்குடி.

இந் நகரின் வரலாறை நமக்கு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கமாகும்.நாற்பத்தியெட்டு இயல்களைக் கொண்ட இந்த நூல் சமூகவியல் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. நூலில் இடம் பெற்றுள்ள “எங்களுரை” “முன்னுரை” என்ற இரண்டும் வழக்கமாக வரலாற்று நூலாசிரியர்கள் இத் தலைப்புகளில் வெளிப்படுத்தும் செய்திகளில் இருந்து வேறுபாடான முறையில் அமைந்துள்ளன. "வரலாறு என்பது ஒரு சமூகத்தில் நடந்த நிகழ்வுகளைக் காலவரிசைப்படித் தொகுத்துக் கூறுவது" என்ற மரபு சார்ந்த சிந்தனைப் போக்கில் இருந்து விலகி நின்று வரலாற்றை எழுதியுள்ளனர். நம்மில் பலர் மேலெழுந்தவாறு அறிந்திருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த உண்மைகள், அகண்டபாரதச் சிந்தனை, கலாசார தேசியம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பன குறித்த செய்திகள் இவற்றில் இடம் பெற்றுள்ளன. நூலின் முன்னுரையின்பக்கம்:17) தொடக்கத்தில் "மறப்பது மனிதனின் இயால்பு; நினைவுபடுத்துவது வரலாற்றின் கடமை’, என்றார் ஆங்கில வரலாற்றியலார் எரிக் ஹாப்ஸ்பாம்.

கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை இணைக்கும் பணியே வரலாற்றின் பிரதான நோக்கமாகும். நிகழ்காலத்தினைக் கட்டமைக்கவும் எதிர்காலத்தைத் திசைவழியே செலுத்துவதற்கும் கடந்தகால வரலாற்று உணர்வும் புரிதலுமே சரியான வழியாகும். பழம்பெருமை பேசுவது மட்டும் வரலாற்றுப் புரிதலில்லை. வரலாற்றுப் பாதையால் நாம் சந்தித்த சவால்களை, அவற்றை நாம் எதிர்கொண்ட விதம், நாம் இழைத்த தவறுகள், அவற்றால் அடைந்த பின்னடைவுகள், அவற்றின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு உணர்த்தும் படிப்பினைகள், கற்பிதங்கள், வழிகாட்டுதல்கள் ஆகியவையே வரலாற்றின் அதிமுக்கியப் பணிகளாகும். இப்படிப்பினைகளை வளமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான வலிமையையும் ஆற்றலையும் ஒரு சமூகத்திற்குக் கற்றுத் தருகின்றன." என்று குறிப்பிட்டுள்ளமை இவர்களது வரலாற்று நோக்கை நாம் அறியச் செய்கின்றன. இன்று பொதுவெளியில் முன்வைக்கப்படும் சூழலியல் கருத்துக்கள் எப்படி ஒரு நகரின் வரலாற்றோடு இணைந்து வருகிறது என்பதை அழுத்தமாக இந்நூலில் வாசிக்க முடிகிறது. சில் ஆண்டுகளுக்கு முன்னர் ஊடகங்களின் துணையால் செய்திகளாக அறிந்து கொண்டவை இன்று வரலாற்றுப் பதிவகளாகிவிட்டன. இந்நிகழ்வின் தொடக்க கால வரலாறு தொடங்கி தூத்துக்குடி நகரம் இந்தியாவின் இரண்டாவது ஜாலியன் வாலாபாக்காக மாற்றப்பட்டது வரை ஒரு கோர்வையான வரலாறு அறிமுகம் ஆகியுள்ளது.

கொற்கையில் தொடங்கும் இயல் பண்டையப் பெருமிதத்தைப் பேசுகிறது என்றால் இப் பகுதியின் கடல் வாணிப ஆளுமைகளான பரதவர்கள் மரக்காயர்கள் என்ற இரு சமூகத்தினரையும், இவரகளுள் பரதவர்கள் கத்தோலிக்கரகளாக மாறியதையும், போரச்சுக்கீசியர், டச் நாட்டினர், ஆங்கிலேயர்கள் என ஐரோப்பியக் காலனிய வாதிகள் ஆதிக்கம் செலுத்த வந்ததையும் அடுத்தடுத்த இயலகள் அறிமுகம் செய்கின்றன.

வாணிப நகராக விளங்கி வந்த தூத்துக்குடி ஆங்கில ஆட்சியில் தொழில்நகராகிறது. சுதேசி இயக்கம் இங்கு பரவுகிறது.இதில் ஆலைத் தொழிலாள்களும் இணைகிறாரகள்.வ,.உ.சி, சுப்பிரமணிய சிவா, ஆகிய இருவரின் வழிகாட்டுதலில் ஆங்கிலேய்களுக்கு உரிமையான நூற்பாலையில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளுகிறார்கள்.

நாடு விடுதலை பெறுகிறது.நாட்டின் வளங்கள் யாருக்கோ உரிமையாக்கப் படுகின்றன. சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்ப புறக்கணிப்புக்கு ஆளாகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிலை கொள்கிறது. (இதன் உற்பத்திச் செயல்பாடு விரிவாக இந்நூலில் வரிக்கப்பட்டுள்ளது.).

இதன் பின்னர் தூத்துக்குடி வரலாறு என்ற மையச் செய்தியில் இருந்து சற்று விலகி சூழல் சீர்கேடு, கார்பரேட்டு நிறுவனங்களின் செயல்பாடு, மனித உரிமை மீறல் என்ற பொதுச் செய்திகளை நூல் தெளிவாக நாம் அறியச் செய்து. இறுதியாக வாசக்களுக்கு "நிலமும், நீரும், காற்றும், மண்ணும், கடலும், மலையும் நம் உரிமைச் சொத்து. அவற்றைப் பாதுகாத்து, மேம்படுத்தி எதிர்காலத் தலைமுறையினரிடம் ‘ஒப்படைக்கும் தலையாய பொறுப்பு’ நம்முடையது. அதற்கான முயற்சி தமிழகத்தின் தென்கோடியில் துவங்கிவிட்டது. ஓய்வற்ற கண்காணித்தலே ஜனநாயகத்தின் விலை. விழித்திருப்போம். உரிமைகளைக் காப்போம்." என்ற வேண்டுகோளுடன் நூல் முடிவடைகிறது.(பக்கம்:363) வரலாறு, பொருளாதார அரசியல், சூழலியல், மனித உரிமை எனப் பல்வேறு அறிவுத்துறைகளின் சங்கமமாக இந்நூல் விளங்குவது குறிப்பிடத் தக்கது..

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி...

தூத்துக்குடி - ஓர் சமகால வரலாற்றுப் பதிவு...

முனைவர் ம.சாலமன் பெர்னாட்ஷா

பேராசிரியர் பொ.முத்துக்குமரன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

சென்னை - 50 | விலை: ரூ.365/-

மாணிக்கம்

Pin It