கீற்றில் தேட...

Bhavani Raman (2012), Document Raj : Writing and Scribes in Early Colonial South India. Permanent Black.

கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசியல் மேலாதிக்கம் வாளால் முன்கொண்டு செல்லப்பட்டு, கணக்கர்களுடைய கணக்குப் பேரேட்டுப் புத்தக முதுகுத் தண்டுகளின் மேல் கட்டப்பட்டு, கடிதத் தொடர்புகளால் ஒன்றிணைக்கப்பட்டது ஆகும். - பவானி ராமன்

document raj18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் ஒரு வணிக நிறுவனமாக உருப்பெற்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் செயலபடத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குள்ளேயே இந்திய அரசியலில் மெல்ல நுழையலாயிற்று. ஒரு கட்டத்தில் கம்பெனி அரசு என்று அழைக்கும் அளவுக்கு ஓர் அரசை உருவாக்கியது (தமிழ்நாட்டில் கும்பனி அல்லது கும்பேனி அரசு எனப்பட்டது).

இந்தியாவில் ஆங்கிலேயர் மேற்கொண்ட செயல்பாடுகளை அழித்தல்பணி, ஆக்கப்பணி என்று இரண்டாகப் பகுத்து விமர்சிக்கும் கார்ல் மார்க்ஸ் இந்தியாவில் ஆ.கி.கம்பெனியின் நிர்வாக முறை குறித்தும் விமர்சித்துள்ளார். இதை இலண்டனில் இருந்தே தொடங்குகிறார்.

லீடன்ஹால் என்ற பெயரில் இலண்டனில் தெரு ஒன்றுண்டு. இத்தெருவில்தான் ஆ.கி.கம்பெனியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்தியா வுடனான வாணிபம் என்பது, இந்தியாவின் மீதான அரசியல் ஆதிக்கம் என மாற்றம் பெறத் தொடங்கியதும், லீடன்ஹால் அலுவலகம்தான் இந்தியாவின் நிர்வாகத் தலைமையிடமாகச் செயல்பட்டது. ஆ.கி.கம்பெனியின் இயக்குநர்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களாயினர்.

இதன் அடுத்த கட்டமாக இங்கிலாந்து பாராளு மன்றம், ஆ.கி. கம்பெனியின் பின்னால் இருந்து கொண்டு ஆளலாயிற்று. 1857 சிப்பாய் எழுச்சியின் விளைவாய் 1858 இல் வெளிப்படையாகத் தன் காலனிய நாடாக அறிவித்தது.

இவ்வரலாற்று நிகழ்வுகளைக் குறித்த தம் அவதானிப்புகளை Òநியூயார்க் டெய்லி டிரிபியூன்Ó என்ற இதழில் மார்க்சும் ஏங்கல்சும் கட்டுரைகளாகப் பதிவு செய்து வந்தனர். இப்பதிவுகளில் கம்பெனியின் நிர்வாகச் செயல்பாடும் இடம்பெற்றன. வியாபார நிறுவனமாக மட்டுமே கம்பெனி செயல்பட்டபோது அதன் தலைமை அலுவலகத்தில் செயல்பட்ட எழுத்தர்கள் (குமஸ்தாக்கள்) அதன் நிர்வாக எந்திரத்தின் தவிர்க்க இயலாத உறுப்பாகச் செயல்பட்டார்கள். வாணிபம் தொடர்பான ஆவணங் களை உருவாக்கிப் பராமரித்தனர். கடிதப் போக்கு வரத்துகளை நடத்தினர். இதன் அடிப்படையில் எழுத்தர்களும் ஆவணங்களும் கம்பெனியின் நிர்வாகச் சக்கரத்தின் கடையாணியாக விளங்கினர்.

வாணிபத்தையடுத்து ஆட்சியாளர்களாக கம்பெனி மாறிய போதும் இக்கடையாணிகள்தான் அரசு நிர்வாகத்தின் முக்கிய உறுப்பாகத் தொடர்ந்தனர். 13,68,113 சதுரமைல் நிலப்பரப்பில் வாழும் 15,60,00,000 இந்தியமக்களை ஆளுவதில் இக்கடையாணிகளின் பங்களிப்பு குறித்து மார்க்ஸ் சில பதிவுகளைச் செய்துள்ளார். 'அடங்காப்பிடாரிகளான குமஸ்தாக்கள்' என்றழைக்கும் மார்க்ஸ், 'லீடன்ஹாலில்' இருந்து செயல்பட்ட இவர்கள், எழுதிக் குவிக்கும் ஓர் எந்திரமாக இந்திய அரசாங்கத்தை மாற்றிவிட்டனர் என்கிறார்.

இவ்எழுத்தர்களுக்காக இந்திய மக்கள் ஆண்டுதோறும் 1,60,000 பவுன்ட் செலவு செய்வதாகவும் கணக் கிட்டுள்ளார்.

இந்திய நிர்வாகத்தில் ஆங்கிலேயர் அறிமுகப் படுத்திய வருவாய்த்துறை, கச்சேரி, நிதி அதலாத் ஆகியவற்றில் மார்க்ஸ் குறிப்பிடும் எழுத்தாவணங்கள் முக்கிய பங்கு வகித்தன. இதன் அடிப்படையில் ஆ.கி.கம்பெனி காலத்தை மையமாகக் கொண்ட இந்நூல் Òஆவண அரசாங்கம்Ó என்ற பெயரைத் தாங்கியுள்ளது. இந்நூலின் ஆசிரியர் பவானி இராமன் கனடாவிலுள்ள டெரோண்டா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் இணைப்பேராசிரியராக உள்ளார்

நூலின் செய்தி

இந்நூலின் உள்ளடக்கத்தைப் பின்வருமாறு பகுத்துக்கொள்ளலாம்

1) கச்சேரி

2) கச்சேரி ஊழியர்கள்

3) கச்சேரித் தமிழ்

4) எழுத்துப் பயிற்சி

5) ஆவண அரசு

இப்பகுப்பானது இந்நூலைக் குறித்த முழுமையான அறிமுகம் என்று கூற இயலாது. இருப்பினும் இந்நூலின் மையச் செய்தியைப் புரிந்துகொள்ள இது உதவும்.

கச்சேரி

இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை ஆ.கி.கம்பெனி கைப்பற்றிய பின்னர், அதன் ஊழியர்கள் இந்தியாவின் ஆட்சியாளர்கள் போலாயினர். இவர்களுள் எழுத்தர் களின் பங்களிப்பு அதிக அளவில் இருந்தது. இவ் எழுத்தர்களை Ôஎழுத்து மேசையின் உயிரினங்களும் சலுகைகளின் பிறப்பிடமும்Õ என்று குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ், ‘எழுதப்பட்டதோ மிகுதி, நிறைவேற்றப் பட்டதோ குறைவுÕ என்று இவர்களின் பணியை மதிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மன்னர் ஆட்சிக்கால நிர்வாக அமைப்பிற்கு மாற்றாகப் புதிய நிர்வாக அமைப்பை அறிமுகம் செய்தனர். என்றாலும் அவர்களது வருகைக்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்களான முகலாயப் பேரரசின் ஆட்சியில் வழக்கில் இருந்த அதிகாரப் பதவிகளும் தொடர்ந்தன. இதனால் பாரசீக மொழியின் தாக்கம் புதிய அதிகார மையங்களில் இருந்தது. அலுவலகங்களின் பெயர்கள் பாரசீக மொழியிலேயே அமைந்தன.

இவ்வாறு பாரசீக மொழியில் அழைக்கப்பட்ட ஓர் அலுவலகமே கச்சேரி ஆகும். ஆங்கிலேயர் அமைத்த மாவட்ட நிர்வாகம் ஹ¨சூர் கச்சேரி எனப்பட்டது. இதன் நிர்வாகம் ஆங்கிலேயர் ஒருவரின் பொறுப்பில் இருந்தது. ஆவண அறை, வருவாய்த்துறை என்பன இதில் செயல்பட்டன. 1802இல் சுயேச்சை அமைப்பாகக் கச்சேரி உருவானது. ரயத்துவாரி முறை அறிமுகமான பின்னர் நீதிவழங்கும் அதிகாரமும் இந்நிர்வாக அதிகாரியிடமே வழங்கப்பட்டது.

ரயத்துவாரி முறையின் அறிமுகமானது பல புதிய நிர்வாகப் பணிகளை கச்சேரி நிர்வாகத்திற்குள் கொண்டு வந்தது. நவீன நிலஅளவுமுறையால் நிலங்கள் அளக்கப் பட்டதுடன் தரம் பிரிக்கப்பட்டன. தரிசுநில எல்லை வரையறுக்கப்பட்டது. குடியானவனின் நிலம் குறித்த பதிவேடுகள் கச்சேரியில் பராமரிக்கப்பட்டன. நிலவரியை வாங்கும் அமைப்பாகவும் கச்சேரி செயல்பட்டது. வருவாய்த்துறை, நீதித்துறை, காவல்துறை என்பன வற்றுடன் இணைந்து நின்ற கச்சேரி அமைப்பானது வலிமை வாய்ந்த அதிகார அமைப்பாகக் காட்சி யளித்தது.

இந்தப் புதிய அதிகார நிறுவனத்தை மக்கள் எதன் பொருட்டெல்லாம் அணுகினார்கள் என்பது குறித்த செய்தியை அன்றைய மும்பை மாநிலத்தில் இருந்து வெளியான மாத இதழ் ஒன்று (Asiatic Society Monthly Miscellany-Jan-June 1829 ) வெளியிட்டுள்ளது. மனுக் கொடுப்பதற்காக, பல்வேறு வாழ்க்கைத் தரத்தில் உள்ள மக்கள் மும்பை மாநிலத்தின் இரத்தினகிரிக் கச்சேரியில் கூடுவதாகக் குறிப்பிடும் இவ் இதழ், அம்மனுக்கள் சிலவற்றில் இடம் பெற்றிருந்த செய்திகளையும் வெளிப்படுத்தியுள்ளது. அவை வருமாறு :

1) வயதான ஏழைக் குடியானவர் ஒருவர் கிணறு ஒன்றிலுள்ள பிசாசை விரட்ட உத்திரவிட வேண்டியமை!

2) தன் உடைமைகளைக் கவர்ந்து கொண்ட துடன், தன்னை அடித்து, வீட்டை விட்டுத் தன் மகன் துரத்திவிட்டதாக வயதான பிராமணர் ஒருவரின் முறையீடு.

3) குற்றவியல் நடுவரை, விஷ்ணுவின் அவதாரம் என்று அழைத்து, அந்நடுவரின் வடிவில் விஷ்ணு காட்சியளித்து, தன் இளைய மகனுக்கு பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கும்படி கூறியதாக எழுதப்பட்ட மனு.

4) ஆங்கிலக் கனவான் ஒருவரின் குதிரையைப் பராமரிக்கும் வேலையைச் செய்தவரை அவரது சாதியினர் சாதிவிலக்கம் செய்து விட்டனர். மீண்டும் சாதியில் சேர்க்கவேண்டு மானால் அனைவருக்கும் விருந்து வைக்க வேண்டும் என்றனர். அப்படி விருந்து வைத்தால் தன் பொருளாதார நிலை அழிந்து விடும் என்று கூறும் மனு.

கச்சேரி ஊழியர்கள்

மக்கள் தம் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் இடமாகக் கச்சேரியைக் கருதி வந்துள்ளதை மேற்கூறிய மனுக்கள் வெளிப்படுத்துகின்றன. அத்துடன் மக்களின் சமூகவாழ்வில் இன்றியமையாத உறுப்பாக அது விளங்கியுள்ளதையும் உணரமுடிகிறது. ஆயினும் ஆ.கி.கம்பெனியைப் பொறுத்தளவில் நிலவரியை, குடியானவர்களிடமிருந்து பெற்றுத் தருதலும் உரிமையியல் குற்றவியல் சார்ந்த வழக்குகளை விசாரித்து நீதி வழங்கலும் கச்சேரியின் முக்கிய பணிகளாய்க் கருதப்பட்டன. இதன் பொருட்டு கச்சேரியில் நியமிக்கப்பட்ட ஊழியர்களில் உயர்நிலை அதிகாரிகளாக ஆங்கிலேயர்கள் இருந்தனர். அவர் களுக்கு உதவி புரியும் இடைநிலை அதிகாரிகளாகவும் எழுத்தர்களாகவும் இந்தியர்கள் இருந்தனர்.

மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாள ராகவும் மொழிபெயர்ப்பாளராகவும், ‘சிரஸ்தார்’ என்ற பதவி வகித்தவர் செயல்பட்டார். மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, அதற்குத் தீர்வு காணும் அலுவலகமாக கச்சேரி விளங்கியதால் ஆவணப் பரிமாற்றமும் ஆவணப் பாதுகாப்பும் கச்சேரியின் முக்கிய செயல்பாடுகளாயின. இப்பணிகளை எல்லாம் அன்றாடம் மேற்பார்வையிடுவது சிரஸ்தாரின் பணியாகும். இப்பதவியில் இந்தியர்களே இருந்தனர். இவர்கள் தெக்கணி பிராமணர் அல்லது நியோகி வகுப்பினராக இருந்தனர். கலெக்டருக்கென்று தனி மொழிபெயர்ப்பாளர் இருந்த போதிலும் அய்ரோப்பிய அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பாளராக சிரஸ்தார்களே செயல்பட்டனர்.

பணம் தொடர்பான ஆவணங்களைப் பராமரிப்பதில் காசாளர் ஒருவர் சிரஸ்தாருக்கு உதவியாய் இருந்தார். இப்பதவி வகிப்பவர்கள் பெரும்பாலும் நிலவுடைமை யாளர்களாகவோ, வணிகர்களாகவோ, சிரஸ்தாரின் நெருங்கிய உறவினராகவோ இருப்பர். காசாளருக்கு உதவியாக ஷெராப் என்ற பதவி இருந்தது. தமிழில் சராப்பு என்றழைத்தனர். பணப் பரிவர்த்தனையை அறியும் வாய்ப்புப் பெற்ற வணிக குடும்பத்தைச் சேர்ந்தவராகவே இவர் இருப்பார்.

இவர்களை அடுத்து கணக்கர்களும் எழுத்தர்களும் இருந்தனர். ஆங்கிலம் எழுதுவோர் ரைட்டர் எனப் பட்டனர். பாரசீகம், மோடி எழுதுவோர் முன்ஷி, குமாஸ்தா, முத்தா சாதி என்றும், தமிழ் எழுதுவோர் சம்பிரிதி, கணக்குப்பிள்ளை என்றும், தெலுங்கு எழுது வோர் இராயசம் என்றும் அழைக்கப்பட்டனர். இவர் களுள் ரைட்டர்களுக்கே நல்ல ஊதியம் வழங்கப் பட்டது. இவர்கள் இந்திய போர்ச்சுக்கீசிய கலப்பினத்த வராகவோ வேளாளர்களாகவோ இருந்தனர்.

இவர்களுக்கு அடுத்த நிலையில் ஊதியம் பெறுபவர்களாக பிராமணர்களான மோடி எழுத்தர்கள் இருந்தனர். கணக்குகளை மேற்பார்வையிடுவதும் மனுக்களைப் படித்து முடிவெடுப்பதும் இவர்களின் பணியாகும்.

குறைந்த ஊதியம் பெறும் எழுத்தர்களாகத் தமிழ் தெலுங்கு மொழி எழுத்தர்கள் இருந்தனர். கிராமக் கணக்கர் குடும்பம் அல்லது சிறு நிலவுடைமையாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் தாம் பணிபுரியும் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் இவர்கள் இருந்தனர்.

இவர்களைத் தவிர, செய்தி கொண்டுசெல்வோர், விளக்கு ஏற்றுபவர், தாள்களை அடுக்கித் தைத்து வைப்போர், எழுதப் பயன்படுத்தும் மசி(மை) செய்வோர், காவலாளிகள் என்போரும் மாவட்டக் கச்சேரியில் பணியாற்றினர். கச்சேரி நிர்வாகத்திற்கு உளவு சொல்லவும் சிலர் இருந்தனர். போலி ஆவணம், மொட்டைக் கடிதம், கள்ள சாட்சி குறித்த செய்திகள் இவர்கள் வாயிலாக கச்சேரி நிர்வாகிகளைச் சென்றடைந்தன. கச்சேரிப் பணியில் இவர்கள் சேர இது உதவியது.

மாவட்டக் கச்சேரியை அடுத்த அதிகார மையமாக, தாலுகா அலுவலகம் அமைந்தது. இதனை நிர்வகிக்கும் அதிகாரி தாசில்தார் எனப்பட்டார். இவருக்கும் கச்சேரி உதவியாளர்கள் இருந்தனர். பயிர்ச்சாகுபடி, வரிவாங்கல், வழக்குகளைத் தீர்த்துவைத்தல் என்பனவற்றில் இவரது பங்களிப்பு முக்கியமானது என்று மன்றோ குறிப்பிட்டு உள்ளார். இவ் அலுவலகமானது ஆதிக்க சாதிக்கும் காலனிய ஆட்சிக்கும் இடையிலான பிணைப்பை வெளிப்படுத்தி நின்றது.

பெரும்பாலும் தாசில்தார்கள் வைணவப் பிராமணர்களாகவே இருந்தனர். மாவட்டக் கலெக்டர் தான் இவர்களை நியமித்தார். எழுத்தாவணங்கள், கணக்குகள் தொடர்பான பணிகளுடன் மட்டுமின்றி ஆயுதங்களைப் பயன்படுத்தித் தண்டிக்கும் உரிமையும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதன்பொருட்டு சவுக்கு, கைக்கிட்டி என்ற இரு கருவிகளை இவர்கள் வைத்திருந்தனர். வரி செலுத்தத் தவறியோரை சவுக்கால் அடித்தும் மணிக்கட்டைக் கைக்கிட்டியால் நெறித்தும் தண்டித்தனர்.

அவரிடம் பணிபுரிவோர் அவரைக் காண வரும் போது சாதியத் தாழ்ச்சியின் அடையாளமாகத் தம் கைகளால் தம் வாயைப் பொத்திக் கொண்டு, தலை தாழ்த்தி நின்று Òசித்தம்Ó என்று கூறுவர். ஆ.கி.கம்பெனியின் அதிகார மையத்தில் அவருக்கிருந்த செல்வாக்கினால் பொதுமக்கள் மத்தியில் Òதாசில்தார் கும்மிÓ என்ற சிற்றிலக்கியம் உருவாகியுள்ளது. இந்நூலில் சீனி அய்யங்கார் என்ற பெயருடைய தாசில்தார் இடம் பெற்றுள்ளார்.

கிராம அளவில் கணக்கன் அல்லது கர்ணம் கிராமத்தின் நிலங்கள் வரிவருவாய் தொடர்பான ஆவணங்களைப் பராமரித்து வந்தார். இது பரம்பரை அடிப்படையிலான பதவியாக இருந்தது. பெரும்பாலும் மேட்டிமை சாதியினரே இப்பதவியில் நியமிக்கப் பட்டனர். காவல் பணியை தலையாரி என்பவர் கவனித்து வந்தார். பாசன வாய்க்கால்களையும் நிலம் அளக்கப் பயன்படுத்தும் சங்கிலி என்ற அளவு கருவியையும் பராமரிக்கும் ஊழியர்கள் இருவரும் உண்டு.

கச்சேரி ஊழியர்களில் பிராமணர்களும் சாதியப் படிநிலையில் இவர்களை அடுத்து இருந்த வேளாளர் களும் அதிக அளவில் இடம்பெற்றிருந்தனர். கர்ணம் பதவிக்கு அடுத்து இருந்த பதவிகளில் பிற்படுத்தப் பட்டோரும் தலித்களும் இடம்பெற்றிருந்தனர். இதனால், கச்சேரிப் பணியில் சிரஸ்தார், தாசில்தார் பதவியில் இருந்தோர் தம் உறவினர்களை, கச்சேரிப் பணியில் எளிதாக நுழைத்துக் கொண்டனர்.

குடியானவர்களின் அன்றாட வாழ்வில் அடிக்கடிச் சந்திக்கும் அதிகாரியாகக் கர்ணம் விளங்கினார். பெரும்பாலும் வேளாளர் சாதியைச் சேர்ந்தவ்ர்களே இப்பதவியில் இருந்ததால் அவர்களது பதவியையும் சாதியையும் இணைத்து “கணக்குப்பிள்ளை” என்றழைக்கும் வழக்கமும் உருவாகி இருந்தது. ஆங்கில அரசின் ஆவணங்களில் கணக்கர் பதவி வகித்தோர் குறித்த எதிர்மறையான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. குடியானவர்களிடமிருந்து வரி வாங்கி அதை அரசுக்குச் செலுத்தும் பணியில் இருக்கும் இவர் கணக்குகளையும் ரசீதுகளையும் பராமரித்து அரசுக்கு பணத்தைச் செலுத்துவதாக, மசூலிப்பட்டினம் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பின் இறுதியில் அரசு, குடியானவர் என்ற இரு தரப்பையும் கர்ணம் ஏமாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார்.

“ ஊர்க் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்”, “கணக்கன் காலால் போட்ட முடிச்சை, கலெக்டர் கையால் அவிழ்க்க முடியாது” என்று மக்களிடையே கணக்கனைக் குறித்த பழமொழிகள் வழக்கில் இருந்துள்ளன.

கச்சேரி ஆவணங்கள்

ஆட்சிப்பொறுப்பை நிலைநிறுத்திக் கொண்ட ஆ.கி.கம்பெனி தன்னுடைய தொடக்க காலப் பணியாக நில அளவீட்டுப் பணியை மேற்கொண்டது. நிலங்கள் ஆங்கில நிலஅளவை முறையில் துல்லியமாக அளக்கப்பட்டு, அவற்றின் பரப்பளவும் தரமும் பதிவு செய்யப்பட்டன. அரசுக்குரிய புறம்போக்கு நிலங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய நிலங்கள் என்பன எல்லாம் தனியாகக் குறிப்பிடப்பட்டன. இவை தவிர மானியமாக விடப்பட்ட நிலங்களும் தனியாகப் பதிவு செய்யப்பட்டன. விளைநிலங்களுக்கு விதிக்கப்பட்ட வரி அளவும் செலுத்தப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கேடுகளும் பராமரிக்கப்பட்டன. தொடக்கத்தில் இவையெல்லாம் தமிழகத்தின் பழைய மரபு சார்ந்து ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டன. இவற்றை யெல்லாம் கீழ்நிலைப் பதவியான கணக்கர் பதவி வகித்தவர்களே பராமரித்து வந்தனர். கச்சேரியிலிருந்த குமாஸ்தாக்கள் இக்கணக்குகளை ஆராய்ந்து, அவை தொடர்பான செய்திகளை ஆராய்ந்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சென்னையிலிருந்த வருவாய்க் கழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட ஆவணங்களைப் பராமரிப்பதும் அவற்றை முறையாக அட்டவணைப் படுத்தி பயன்படுத்துவதும் கடினமான பணியாக இருந்தது. இதனால் வட ஆற்காடு மாவட்டக் கச்சேரியில் தலைமைக் கணக்கராக இருந்த ஜெயராம் செட்டி என்பவரது ஆலோசனையை ஏற்று ஓலைச்சுவடிக்கு மாற்றாகத் தாளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

புதிதாக உருவாக்கப்பட்ட அதிகார மையமான கச்சேரி ஓலைக்கும் எழுத்தாணிக்கும் விடை கொடுத்து விட்டு, தாளையும் பேனாவையும் பயன்படுத்தத் தொடங்கியதானது, ஆவணப் பயன்பாட்டில் நிகழ்ந்த குறிப்பிடத் தகுந்த மாற்றமாக அமைந்தது.

கச்சேரித் தமிழ்

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே நீண்ட எழுத்து மொழி பாரம்பரியம் கொண்ட மொழியாகத் தமிழ் விளங்கியது. ஆங்கிலேயர் வருகையின் போதும் வந்த பின்னரும் கல்வி கற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனங்கள், தமிழகத்தில் நிலைபெற்றிருந்தன. நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் இப்பள்ளிகள் செயல்பட்டு வந்தன. கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் வீட்டுத் திண்ணையிலும் பொது இடங்களின் திண்ணை களிலும் இப்பள்ளிகள் செயல்பட்டு வந்தமையால் திண்ணைப்பள்ளிக்கூடம் என்று இவை அழைக்கப் பட்டன. தமிழ் மொழியை எழுதப் படிக்கவும் அடிப்படை கணக்குகளைச் செய்யவும் இங்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன. மணலில் எழுதிப் பழகிய பின்னர் சிலேட்டிலும் எழுதிப் பழகும் முறை வழக்கில் இருந்தது. மனப்பாடம் செய்தலும் கல்வியின் முக்கிய அங்கமாக விளங்கியது.

இம்மனனக் கல்வி முறையில் நீதி நூல்களையும் இலக்கண நூல்களையும் மனப்பாடம் செய்து கற்று வந்தோர்களே கச்சேரி ஊழியர்களாக நியமனம் செய்யப் பட்டார்கள். இவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நூல்களெல்லாம் செய்யுள் வடிவிலும் நூற்பா வடிவிலும் இருந்தமையால், உரைநடையில் இவர்கள் பெற்றிருந்த பயிற்சி மிகவும் குறைவாகவே இருந்தது.

கச்சேரிக்கு மனு கொடுக்க வருவோர் தம் பிரச்சனைகளை, உரைநடையில்தான் எழுதிக் கொண்டு வருவர். இவ் உரைநடை அவர்கள் வாழும் வட்டாரம், அவர்களது சாதி சார்ந்த பேச்சு மொழியிலேயே அமைந் திருக்கும். எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியாத நிலையிலேயே கச்சேரி ஊழியர்கள் பலர் இருந்தனர். இத்தகைய சூழலில் கச்சேரிக்குக் கொடுக்கும் மனுக்கள், அதன் மீது போடப்படும் உத்தரவுகள் என்பன எல்லாம் வழக்கமான எழுத்து மொழியிலிருந்து விலகிநிற்க வேண்டிய கட்டாயம் உருவானது. இதன் அடிப்படையில் கச்சேரி ஆவணங்களை மையமாகக் கொண்டு, ஒரு புதிய உரைநடை வடிவம் உருவானது. இவ்உரைநடையானது கல்விக்கூடம், வேறு பொது வெளிகள் சாராது கச்சேரி என்ற எல்லைக்குள்ளேயே வழங்கலாயிற்று. இது வழங்கும் இடத்தின் அடிப்படையில் இது கச்சேரித் தமிழ் எனப்பட்டது.

தமிழ் இலக்கியங்களை முறையாகக் கற்று உணர்ந் தோரும் மேட்டிமை மனப்பான்மை கொண்டோரும் கச்சேரித் தமிழ் என்பதைப் பண்டைய உரையாசிரியர் களைப் போன்று ‘இழிசினர்’ வழக்கு என்றே கருதினர். இதனால், அவர்களைப் பொறுத்த அளவில் கச்சேரித் தமிழ் என்பது தரம் குன்றிய தமிழாகப் பட்டது. ரேனிஷ் ஐயர் என்ற சீர்திருத்தச் சபைக் குரு விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அடித்தளக் கிறித்தவர் களுக்கும் அது எளிதாகப் புரிய வேண்டும் என்ற நோக்கில் அவர் பேச்சு வழக்குச் சொற்களைப் பயன் படுத்தி இருந்தார். மேட்டுக்குடி தன்மை குடி கொண்டிருந்த தஞ்சை வேதநாயக சாஸ்திரியாருக்கு இம்மொழிபெயர்ப்பில் உடன்பாடில்லை. தனது கண்டனத்தை அவர் எழுத்து வடிவில் வெளிப்படுத்தும் போது, ரேனிஷ் ஐயர் பயன்படுத்திய தமிழை கச்சேரித் தமிழ் என்று குறிப்பிட்டார்.

எழுத்துப் பயிற்சி

ஆனால் கச்சேரித் தமிழில் ஒரு புதிய பயன்பாடு மறைந்திருந்ததை அவர் காணத் தவறிவிட்டார். தமிழ்க் கல்வியானது மனப்பாடக் கல்வி என்ற நிலையிலிருந்து விடுபட இது உதவியது. படித்த பாடத்தை மனனம் செய்து அப்படியே திரும்பக் கூறும், ஒப்பிக்கும் முறையிலிருந்து கூறக்கூறக் கேட்டு எழுதும் முறையை அறிமுகப்படுத்தியது. அன்றாட வாழ்க்கைப் பயன் பாட்டிற்கு உதவும் வகையில் தமிழ் உரைநடையை மாற்றி அமைத்தது. இதன் துணை படைப்பு போன்று ஆங்கில மொழியைக் கற்றுக் கொடுக்கும் முறையில் பள்ளிகளில் அறிமுகம் ஆனது. கச்சேரிப் பணியில் நுழை வதற்கான தகுதியைப் புதிய கல்வி முறை வழங்கியது.

நூல் உணர்த்தும் செய்தி

இச்செய்திகளைத் தவிர, போலி ஆவணம் உருவாக்கல், இதைத் தவிர்க்கும் முறையாக, அறிசான்று முறையை உருவாக்குதல், திண்ணைப் பள்ளிக்கூட முறைக்கு மாற்றான பள்ளிகளை உருவாக்குவதில் சீர்திருத்த கிறித்தவசபைப் பங்களிப்பு தொடர்பான செய்திகளும் விரிவாக இடம்பெற்று உள்ளன. அதே நேரத்தில் கிறித்தவத்தைப் பரப்ப சீர்திருத்த கிறித்தவ சபையினர், தாம் உருவாக்கிய உபதேசியர்கள் ஆங்கில கல்வியைப் பெறுவதை விரும்பவில்லை. அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டால் அதிக ஊதியம் பெறும் கச்சேரிப் பணிக்கு சென்று விடுவார்கள் என்று அஞ்சினர்.

ஆவணக் காப்பகத் தரவுகளை பிற மூல நூல்களில் காணப்படும் செய்திகளையும் ஆசிரியர் நன்கு பயன் படுத்தியுள்ளார். ஆயினும், காலனிய காலத்திற்கு முந்தைய ஆவணப்படுத்தும் முறையை, கவனத்தில் கொள்ள ஆசிரியர் தவறி விட்டார். இடைக்காலத் தமிழகத்தில் ஓலை ஆவணங்களை மையமாகக் கொண்டு ‘ஓலை நாயகம்’, ‘திருமந்திர ஓலைவாரியன்' என்ற பதவிகள் இருந்துள்ளன. ஓலையின் இறுதியில் அதை எழுதியவன் யார் என்று குறிப்பிடும் வழக்கமும் அறி சான்று வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது. 'புரவுவரித் திணைக்களம்' என்ற பெயரில் வருவாய்க் கணக்குத் துறை செயல்பட்டுள்ளது. ஆவண அரசாங்கம் என்பது நமக்கு முற்றிலும் புதிய முறை என்ற ஐரோப்பிய இன மையவாதச் சிந்தனைக்கு, அவரை அறியாமலேயே மென்மையாக ஆட்பட்டுள்ளார்.

குறைந்த எண்ணிக்கைக் கொண்ட ஆங்கிலேயர்கள் அதிக எண்ணிக்கையிலான நம்மை ஆளுவதற்கு நம்மிட மிருந்தே, பணியாளர்களைத் தேர்வு செய்து பயன்படுத்தியமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் பொருட்டு, காலனிய நவீனத்துவம் இந்திய மொழிகளை ஒரு கருவியாகப் பயன்படுத்திய உண்மையையும் அறியச் செய்துள்ளார்.