2017 : பேராசிரியர் நாவா நூற்றாண்டு

பேராசிரியர் நாவா தமிழ் நாட்டார் வழக்காற்றியலின் தந்தை என மதிக்கப்படுகிறார். இந்திய அளவில் நாட்டார் வழக்காற்றியல் செழித்து வளர்ந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ் நிலப்பரப்பு இன்றுவரை உள்ளது. தமிழில் மானுடவியலின் முதற்புள்ளிகளை இட்டதிலும் அவருக்கு முக்கியப் பங்குண்டு. நாட்டுப்புறவியலும் மானுடவியலும் தமிழில் பண்பாட்டுக் கற்கை மற்றும் ஆய்வுகளின் மிகப்பெரும் தூண்டுதல்களாக அமைந்தன. தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் “லோகாயதம்” நூலில் சார்வாகம், சாங்கியம், தாந்திரிகம் போன்ற தத்துவங்களும் பண்டைய இந்தியாவின் மானுடவியல் நிலைப்பாடுகளும் அருகருகே கொண்டு வரப்பட்டு தத்துவங்களின் பண்பாட்டுப் பின்புலம் எடுத்துக்காட்டப்பட்டது. தமிழில் லோகாயதம் நூலின் முறையியலை, அதாவது பண்பாட்டை அறிந்து கொள்ளலை மையமாகக் கொள்ளும் முறையியலைப் பேராசிரியர் நாவா பயன்படுத்துவார். பண்டைத் தமிழிலக்கியங்களின் ஊடே, நாட்டார் வழக்காறுகளின் ஊடே பயணித்து, தமிழ்ப் பண்பாட்டின் அடி நாதங்களை உருவப்படுத்தி, வடிவமைத்துத் தந்தவர் பேராசிரியர் நாவா.

na vanamamalaiஇவ்வாறு பண்பாட்டு ஆய்வுகளை, பண்பாட்டுத் தளத்திலிருந்து இலக்கிய விமர்சனத்தை நாவா ஒரு குழுவாக முன்னெடுத்தார். நெல்லை ஆய்வுக் குழுவும் “ஆராய்ச்சி” பத்திரிகையும் அவரது சாதனைகளின் முதன்மையான மைல் கற்கள். ஒரு குழுவாகத் தொழில்படும்போது ஆய்வாளர்களின் படைப்பாற்றல் பல மடங்கு அதிகமாக வெளிப்படுகிறது என்பதைச் சாத்தியப்படுத்திய சந்தர்ப்பமாக நெல்லை ஆய்வுக்குழு அமைந்தது. ஆய்வுச் செயல்பாடுகளை ஓர் இயக்கமாக்க முடியுமா? பேராசிரியர் நாவா அதனைச் செய்து காட்டினார்.

அவரது அரசியலில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. கட்சிக் கல்வியின் உயர்ந்த பட்ச அளவுகோல்களைத் தமிழிலும் அகில இந்திய அளவிலும் உருவாக்கிக் காட்டியவர் அவர். மார்க்சிய சிந்தனையின் அடிப்படை நூல்களை எளிய மொழியில் தமிழ் எடுத்துக்காட்டுகளுடன் எழுதித் தந்தவர் அவர்.

பகுத்தறிவும் பண்பாடும்

பேராசிரியர் காத்திரமாகச் செயல்பட்ட காலங்களில், தமிழ் நிலத்தின் கருத்தியல் போக்குகள் சிக்கலானவை. பகுத்தறிவு வழியாகப் பண்பாட்டை விமர்சிக்கும் பெரியாரின் அரசியலும், பண்பாட்டு பெருமிதங்களின் மோதல் அரசியலான கலாசார அரசியல் மூலமாகத் தமிழ் பெருமிதத்தைக் கட்டமைத்த அண்ணாவின் அரசியலும் இணைந்தும் விலகியும் சென்றன. திராவிட இயக்கம் தமிழின் கலாசார அரசியலில் ஏறுமுகம் காட்டி ஆட்சிப் பொறுப்பையும் அக்காலத்தில் சாதித்தது.

சுயமரியாதை, நாத்திகம், பகுத்தறிவு, தமிழ் மொழி, கலை இலக்கியம், பண்பாடு, வெகுமக்கள் அரசியல் என்ற பல முகங்களை திராவிட இயக்கம் கொண் டிருந்தது. தந்தை பெரியார் ஒரு புறம் சுயமரியாதை, நாத்திகம், பகுத்தறிவு ஆகியவற்றில் முனைப்புக் காட்ட, அடுத்து வந்த தலைமுறையினர் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினர். பெரியார் அறிவுபூர்வமான அணுகுமுறைக்கு அதிகம் அழுத்தம் கொடுப்பது போலவும் இரண்டாம் தலை முறையினர் உணர்ச்சிவசப்பட்ட தமிழ்ப் பெருமிதம், இலக்கியப் பொற்காலம் ஆகியவற்றைப் பற்றி நிற்பது போலவும் ஒரு தோற்றம் கிடைத்தது.

தமிழ்ப் பண்பாட்டில், மரபில் ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்று பெரியாருக்கு எதுவும் படவில்லை என்றே சொல்லிவிடலாம். இலக்கியம், மொழி, மரபுகள் எல்லாம் சாதி காப்பாற்றுகின்றவை, பெண் அடிமைத் தனத்தைப் போற்றுகின்றவை என்று பெரியார் விமர்சித்தார். தமிழ் இலக்கிய மரபில் பெரியார் ஏற்றுக் கொண்ட திருக்குறளைக் கூட, அவரால் முழுமையாக வரித்துக்கொள்ள முடியவில்லை. தமிழ்ப் புலவர்களை மரபு பேணுபவர்கள், பகுத்தறிவு இல்லாதவர்கள், நியூசென்ஸ் என்றார் பெரியார். இதன் உச்சம்தான், சாதி காப்பாற்று மொழி நம் மொழி என்ற விமர்சனத்தின் தொடர்ச்சியாக, தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி என விமர்சித்தார். மரபைக் கடுமையான விமர்சனத் திற்குள்ளாக்கும் ஒரு புலவர் வட்டத்தை பெரியார் எதிர்நோக்கினார். அதற்காகப் பகுத்தறிவு தமிழ்ப் புலவர்கள் மாநாடு என்றெல்லாம் அவர் நடத்தினார்.

ஆனால் பிந்தைய தலைமுறையினர் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திறக்குறள் என்பன போன்ற தேர்ந்தெடுத்த இலக்கியப் பிரதிகளைக் கொண்டு தமிழ்ப் பெருமிதத்தைக் கட்டமைத்தனர். அவர்கள் கட்டமைத்த பண்பாட்டு பெருமிதத்தினுள் சாதிப் படிநிலையை எதிர்க்கும் தீவிரம் இல்லை, பெண் அடிமைத்தனங்களை அழிக்க வேண்டும் என்ற வேகம் இல்லை. தமிழர் அல்லது திராவிடர் X ஆரியர் என்ற பண்பாட்டு மோதல் வழியாக தமிழ்ப் பழைமை வசதியான இடத்தைப் பெற்றுக் கொண்டது. அவர்கள் மென்மையாகத் தமிழ்ப் பழைமையை அரவணைத்துக் கொண்டனர். மரபான தமிழ்ப் புலவர்கள் தமிழ்ப் பெருமிதப் பண்பாட்டு மேலங்கியை அணிந்து புதிய வகையினராகக் காட்சி அளித்தனர்.

பெரியார் ஒரு நவீனவாதியாகவும் பிந்திய தலைமுறையினர் பண்பாட்டுரீதியாக பழமையை நோக்கியவர்களாகவும் கூட காட்சியளித்தனர். தமிழ் நவீனம், தமிழ்ப் பண்பாடு ஆகியவை இக்காலத்தில் பலவகையான விவாதங்களைச் சந்தித்தன எனலாம். பகுத்தறிவு, பண்பாடு ஆகியவை இக்காலத்திய இரண்டு முக்கிய விவாதப் புள்ளிகள் எனலாம்.

பேராசிரியர் நாவா என்ற பண்பாட்டு அறிவியலாளர்

பண்பாடு, அறிவு என்ற இரண்டு விரிந்த பரப்பு களுக்கு இடையிலான ஓர் ஒடுகலான பாதையில் பேராசிரியர் நாவா பயணம் செய்தார். மார்க்சிய மொழியில், இரண்டு பெரும் பரப்புகளை இணைவிக்கும் அது ஓர் இயங்கியல் பாதை. அன்றைய காலத்தில் மரபான அல்லது நவீனமான என்று கருதப்பட்ட தமிழ்ப் புலமை வட்டங்களிலிருந்து நாவா விலகிப் பயணித்தார்.

முதலாளிய நவீன யுகத்தில் அறிவின், கலாசார அரசியலின் சாத்தியப்பாடுகள் முரண்பாடானவை. அறிவு முதலாளியத்தில் அதன் இயங்கியல்தன்மையை இழந்து செயல்படுகிறது. அறிவு, முதலாளிய யுகத்தில் ஒரு தொழில்நுட்பவாதமாகச் சுருங்கிப் போய்விடுகிறது. ஒற்றைப்படையான தொழில்நுட்பவாதம் இந்தியா போன்ற நாட்டில் மிகக் கொடூரமாக விவசாய வாழ் வையும் விவசாயப் பண்பாட்டையும் அழித்தொழிக்க முனைகிறது. சமீப காலங்களில் அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலைகள் அதனையே குறிக் கின்றன. நவீன தொழில்நுட்பவாதம் வளர்ச்சி குறித்த பொய்யான கருதுகோள்களை மனிதர்களுக்குள் திணிக்கிறது. முதலாளிய யுகத்தில் அறிவுவாதம் மானுட விடுதலையைவிட சுய ஆதாயங்களையும் அதிகார வேட்கையையும் சார்ந்தே தொழில்படுகிறது.

அதுபோலவே முதலாளியப் பண்பாட்டு அரசியலும் மேட்டுக்குடி மரபுகளை ஒருபுறமும் வணிக மதிப்புகளை மற்றொரு புறமும் சகல மக்கட் தொகுதி யினருக்கும் உரியவையாகப் பெருக்கிக் காட்டுகிறது. விமர்சனமற்ற பழமைவாதம் என அது குறுகி, பாசிசத்தை - அதாவது அரசு கொடுங்கோன்மையை நோக்கி நடைபோடும் வாய்ப்புமுண்டு. அண்மைக் காலத்தில் இந்துத்துவா சாகசங்கள் இந்தக் கதையை நமக்கு நன்றாகவே உணர்த்துகின்றன.

மேற்குறித்த எல்லாச் சிக்கல்களையும் நவீன தமிழ்ப் பண்பாட்டு விவாதங்கள் கொஞ்சமாகவோ அதிக மாகவோ எதிர்கொண்டன. மேற்குறித்த சூழல்களில் பேராசிரியர் நாவா, மரபான அல்லது நவீனமான தமிழ்ப் புலமை வட்டங்களிலிருந்து விலகி, ஒரு பண்பாட்டு அறிவியலாளராகச் செயல்பட்டார். அவர் பண்பாடு குறித்த ஒரு தேடுதலை, ஓர் அறிதலை முன்னிலைப் படுத்தினார். அவரது “ஆராய்ச்சி” எனும் முனைப்பு இதனையே எடுத்துக்காட்டுகிறது. மார்க்சியம் என்பது அவருக்கு வழிகாட்டி, அது அவரது தொடர்ந்த ஆய்வுகளுக்கான தொடக்கம்.

அறிவை அதன் தொழில்நுட்பவாதப் பண்பிலிருந்து விடுவித்து அதனைப் பண்பாட்டில் வேர்கொள்ளும் அறிவாக (Cultural Reason) ஆக்கும் முனைப்பு பேராசிரியரிடம் இருந்தது. எந்திரகதியிலான நவீன மயமாக்கலிலிருந்து விலகிய பண்பாட்டு அறிவை அவர் தேடினார். அவர் தேடிய பண்பாட்டு அறிவு (நவீனத்துவ) மேட்டுக்குடி அழகியல் சார்ந்ததுமல்ல, மாறாக அது பெரும்பாலும் உழைக்கும் விவசாய மக்களைக் கொண்ட நாட்டுப்புறப் பண்பாடு சார்ந்தது. வால்டர் பெஞ்சமின் குறிப்பிட்டது போல “பண்பாடு என்பது சாதாரணமானது”. அது அபூர்வமானதோ அதிசயமானதோ அல்ல. அது சமூகமாற்றத்தைக் குறித்து நிற்பதும் கூட (Emancipatory Reason).

நாட்டார் வழக்காற்றியலின் அரசியல்  

பலதுறை ஆய்வுகளை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வது பேராசிரியர் நாவாவின் வேலைத்திட்டங்களில் ஒன்றாக இருந்தது. ஆய்வுக் குழு என்ற வடிவமே அந்த நோக்கத்தைச் செயல்படுத்துவதுதான். பலதுறை வல்லுனர்களைக் கண்டறிந்து, பயிற்றுவித்து, ஒருங் கிணைக்கும் மாபெரும் பணியை அவரால் செய்ய முடிந்தது. இருப்பினும், அவரது நாட்டார் வழக்காற்றியல் குறித்த தேர்வு குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் நாவா ஏன் நாட்டார் வழக்காற்றியல் என்ற துறையைத் தேர்ந்தார்?

மானுட வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான உழைக்கும் மக்கட் தொகுதியினரின் மிக நீண்ட கால அனுபவங்கள் நாட்டுப்புற வழக்காறுகளில்தான் எஞ்சி நிற்கின்றன. உழைக்கும் மக்களின் சந்தோசங்களும் சங்கடங்களும், வெற்றிகளும் தோல்விகளும், எல்லாம் பதுங்கிக்கிடக்கும் இடம் அந்த நாட்டுப்புறப் பண்பாடே. பேராசிரியர் தொட்டு நின்ற நாட்டுப்புறப் பண்பாட்டைப் பின்பற்றி நாம் வெகுதூரம் செல்ல முடியும். ஏற்கனவே சொல்லியது போல அது விவசாயிகளுடையது. வயல் கரைகளில் அவர்களைக் காணமுடியும். அது பழங்குடி மக்களுடையது. கானகங்களில், கடற்கரைகளில் அவ்வகை மக்களைக் காணமுடியும். அது நகர்ப்புற எளிய உழைப்பாளி மக்களுடைய தன்னிச்சையான பண்பாடு. நாட்டுப்புற மக்களின் பண்பாடு இயற்கையோடு இயைந்தது.

வாழ்வின் ஏராளமான சோகங்களையும் ஏக்கங் களையும் அப்பண்பாடு தன்னில் தேக்கிவைத்திருக்கும். இன்னும் பல கட்டுப்பாடற்ற கனவுகளையும் வெளியில் சொல்லாத நினைவுகளையும் அது சுமந்து நிற்கும். ஆம், இந்தக் கனவுகளில் தெய்வங்களுக்கு இடமுண்டு. தெய்வங்கள் அந்த மனிதர்களின் விடுதலைக்கு நெருக்கமாக நிற்பார்கள். அவை பண்பாட்டுச் சுரங்கங்கள். மானுடச் சோகங்களில் நனைந்த அழகியல் அவற்றினுடையது.

எல்லா வகையான எழுதப்பட்ட இலக்கியங் களோடும் எழுதப்படாத இந்த நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுகளுக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. எல்லா விதமான சமய நம்பிக்கைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் நாட்டுப்புற சமயங்களோடு தொடர்பு உண்டு. “முதலில் சொல் பிறந்தது”, “முதலில் ஒலி (சப்தம்) பிறந்தது” என்ற புனித வரியை எல்லாச் சமயங்களும் சொல்லியிருக்கின்றன. வாய்மொழி இலக்கியம் தான் எல்லாவற்றிற்கும் முந்தியது என்பது குறித்த ஒப்புதல் வாக்குமூலம் இது. பிறந்த குழந்தையை முதல் மாதங்களில் கவனித்திருக்கிறீர்களா? அதன் அசைவுகள் ஒலி சார்ந்தே அமைந்திருக்கும்.

 நாட்டார் வழக்காற்றியலுக்கு அரசியல் உண்டா? நாட்டுப்புறவியல் பல நாடுகளில் காத்திரமான அரசியல் சக்தியாகப் பரிணமித்திருக்கிறது. நாடு, தேசம் என்ற ஒருமை உணர்வு உருவாகாத நாடுகளில் தேசியப் பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைப்பதற்கு, ஓர் அடையாளத்தை உருவாக்க அது உதவி இருக்கிறது.

தமிழ்ச் சூழல்களில் நாட்டுப்புறவியல் என்ற ஒரு துறையே உருவாகாத நாட்களில் பண்டிதர் அயோத்தி தாசர் நாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகளை தனது பூர்வ பௌத்த விடுதலை அரசியலுக்குப் பயன்படுத்தி யிருக்கிறார். தலித் அரசியல் இயக்கங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாட்டுப்புறப் பண்பாடு, வாய் மொழி வரலாறு ஆகியவற்றை அரசியல் இயக்கு சக்தியாகப் பயன்படுத்தியுள்ளன. நாட்டுப்புறக் கலைவடிவங்கள் மிக அதிகமாக அரசியல் இயக்கங்களில் பங்கேற்றுள்ளன. இந்துத்துவத்தை எதிர்கொள்ளுவதில் நாட்டுப்புறச் சமயங்களின் பன்மீய வடிவங்கள் பலமான சக்திகளாகச் செயல்பட முடியும். பேராசிரியர் சிவசுப்பிரமணியன் அவர்களின் “பிள்ளையார் அரசியல்” நூல் அப்படி ஒரு பாத்திரத்தை ஏற்றுச் செயல்பட்டதை நாம் அறிவோம். நாட்டுப்புறப் பண்பாடு வழங்கும் வரலாற்று வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாய்மொழி வரலாறு (Oral History), அடித்தள மக்கள் வரலாறு (Subaltern Studies) போன்ற கற்கை மற்றும் ஆய்வுப் பிரிவுகள் தோன்றியதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

பல்வேறு காலக்கட்டங்களில் தன்மீது தொடுக்கப் பட்ட பொருளாதார மற்றும் பண்பாட்டு தாக்குதல் களை எதிர்த்து நின்று, தன்னைத் தக்கவைத்துக்கொண்ட தாங்கு சக்தி நாட்டுப்புறப் பண்பாடுகளுக்கு உண்டு. ராமன் ஆண்டாலும் சரி, ராவணன் ஆண்டாலும் சரி, அது குறித்து அக்கறைப்படாமல், தன்னைச் சுயமாக நிர்ணயித்துக் கொள்ளும் சுயாட்சிப் பண்பு நாட்டுப் புறப் பண்பாடுகளுக்கு உண்டு என பல அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். நீதி, நியாயம், அறம் குறித்த அழுத்தமான பார்வைகளை நாட்டுப்புறப் பண்பாடுகள் வெளிப்படுத்தியுள்ள சந்தர்ப்பங்களையும் அவர்கள் எடுதுக்காட்டுகின்றனர். இருப்பினும் நமது சூழல்களில் இன்னும் நாட்டுப்புறவியலின் எல்லா அரசியல் வாய்ப்புகளும் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது.

இந்தியச் சூழல்களில், நாட்டுப்புறப் பண்பாடுகளின் மிகப்பெரும் சவாலாக சாதி அமைப்பு அமைந்துள்ளது. இது இந்திய கிராமப்புற உழுகுடிகளிடமிருந்து பிரித்து அறிய முடியாத அமைப்பாகக் கருதப்படுகிறது. மார்க்சிய முதலாசிரியர்களில் ஒருவரான ஏங்கெல்ஸ் மத்தியகால கிறிஸ்தவ சமுதாயத்தினுள் தொழில்பட்ட, மதப் பக்தியில் முழ்கி இருந்ததாகக் கருதப்பட்ட விவசாயக் குழுக்களின் மத எதிர்ப்பு செயல்பாடுகளை “ஜெர்மனியில் விவசாய யுத்தங்கள்” என்ற நூலில் வரிசைப்படுத்துவார். அப்படி, பேராசிரியர் நாவாவும் சாதி மீறிய போராட்டக் கூறுகளை நாட்டுப்புறப் பண்பாட்டு வரலாற்றில் சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. அக்கூறுகள் பற்றி அவர் மிகுந்த அக்கறையுடன், அதே வேளையில் கவனமுடன் ஆய்வுகளைச் செய்துள்ளார். விரிந்த களத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். நாட்டுப்புறப் பண்பாட்டினுள்ளும் வரலாற்றினுள்ளும் மறைந் திருக்கும் போராட்ட மரபுகளை வெளிக்கொணர வேண்டும் என்ற வேலைத்திட்டம் பேராசிரியரின் நோக்கமாகவும் இருந்திருக்க வேண்டும்.

இந்த வகையில், நவீனத்தின் அறிவுவாதத்தில் கரைந்து விடாமலும், கலாசார அரசியலின் பழைமை வாதத்தில் புதைந்துபோய் விடாமலும், தம் சொந்த பண்பாட்டு வேரில் ஊன்றி நிற்கும் புதிய வகை புலமை வட்டத்தை நாவா உருவாக்கினார். அந்த வட்டத்திற்குத் தேவையான அறிவுக் கருவிகளை உருவாக்குவதில் முன் நின்று உழைத்தார். நெல்லை ஆய்வுக்குழுவின் மூலமும் ஆராய்ச்சி ஆய்வு இதழின் மூலமும் புதிய அறிவாளிக் குழுவைப் பிறப்பித்தார். அக்குழுவே இன்று தமிழியல் புலத்தைப் பண்பாட்டு அறிதல் புலமாக உருப்படுத்தியுள்ளது.

இந்திய நிலத்தில், கலாசார அரசியலின் முகம் இந்துத்துவா பாசிசக் கொடுங்கோன்மை அலையாக மேலோங்கி வீசுகிறது. அந்தச் சூறைக்காற்று சகல வற்றையும் தன்னுள் விழுங்கும் பொறியாகப் பண்பாட்டுப் பெருமிதம் என்னும் வாயை அகலத் திறக்கிறது. இந்தச் சூழலில், நாவாவின் நூற்றாண்டை நினைவுகூர்தல், சொந்தப் பண்பாட்டு வேர்களை அறிதல் என்னும் அவரின் வேலைத்திட்டத்தைப் பரந்த களங்களில் முன்கொண்டு விரிக்கும் கடமையை இன்னும் அதிக கனத்துடன் புதிய தமிழ்ப் புலமை வட்டத்தின் மீது சுமத்துகிறது.

Pin It