அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பில் வெளியான 'அரசமைப்புக் கருத்துநிலை' என்ற பொருண்மைக்கான (தொகுதிகள் 37-39) அறிமுகக் கட்டுரை
அண்ணல் அம்பேத்கரின் சிந்தனையில், இந்தியக் குடியரசின் எதிர்கால அரசமைப்பு பற்றிய கருத்துநிலைகள் உருப்பெற்றமை பற்றிய தொகுப்பாக அமைகிறது, ‘அரசமைப்புக் கருத்துநிலை’ என்ற தலைப்பு. அரசியலில் தலைவர்களின் பங்களிப்பு, போர்-அமைதிவாதம், சொத்துடைமை, மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கம், சுதேச சமஸ்தானங்ககளைளைப் பற்றிய சிக்கல்கள், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது, கூட்டாட்சி - மாநில உரிமைகள் எனப் பல்வேறு பொருண்மைகள் இதில் இடம்பெறுகின்றன.
இரண்டாம் உலகப் போர் (1939-1945) நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், இந்தியாவில் ஆட்சி செய்துகொண்டிருந்த பிரித்தானிய அரசுக்கு நெருக்கடிகள் உருவாகத் தொடங்கின. அவர்கள் ஆட்சி செய்த காலனிய நாடுகள் பலவும் பிரித்தானியர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதற்காகப் போராட்டங்களை நடத்தின. பிரித்தானியர்களுக்கு உலக அளவில் நெருக்கடிகள் உருவாயின. ஆட்சி செய்யும் நாடுகளில் உருவான நெருக்கடிகளை எதிர்கொள்வது அவர்களுக்கு எளிதாக இல்லை. எனவே ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் மனநிலை 1942 முதல் அவர்களுக்குப் படிப்படியாக உருப்பெற்றுவிட்டது. இதன் விளைவாக, 1947இல் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்தனர். இங்குள்ள அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர். இவ்வகையில், இந்தியாவில் இந்திய தேசியக் காங்கிரஸ் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது.
இந்தச் சூழலில், இந்தியாவிலிருந்த புலமைத்துவ அறிஞர்கள் ஆட்சி அதிகார மாற்றத்தை நோக்கி, பல்வேறு கருத்துநிலைகளை முன்வைக்கத் தொடங்கினர். இவ்வகையான உரையாடலை 1939ஆம் ஆண்டு தொடங்கி 1948 வரை அண்ணல் அம்பேத்கர் தொடர்ந்து நிகழ்த்தினார். இவற்றை ‘அரசமைப்புக் கருத்துநிலை’ எனும் பொருண்மையில் மூன்று தொகுதிகளாக (37, 38, 39) தொகுத்துப் பதிப்பித்துள்ளோம். இவற்றில் பேசப்படும் செய்திகளைப் பொருண்மை மற்றும் கால ஒழுங்கில் தொகுத்துப் பேசும் முறையில் இக்கட்டுரை அமைந்துள்ளது. நமது வசதிக்காகக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்ள முடியும்.
- போர் - செயல் முனைப்பு - சொத்துடைமையைப் பற்றி பெர்ட்ரண்ட் ஆர்தர் வில்லியம் இரஸ்ஸல் (1872-1970) எழுதிய நூலை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை பற்றிய குறிப்பை நூல் மதிப்புரையாக அம்பேத்கர் செய்துள்ளார். அது குறித்துப் பேசுவது அவசியம்.
- பொதுவெளியில் செயல்பட்ட பல்வேறு ஆளுமைகளை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? வீர வழிபாடு நிகழ்த்தும் போக்கை எவ்வாறு மதிப்பீடு செய்வது? பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை வாழ்ந்த மகாதேவ் கோவிந்த் இரானடே (1842-1901), மகாத்மா காந்தி (1869-1948) முகம்மது அலி ஜின்னா (1876-1948) முதலிய ஆளுமைகளைத் தனது கண்ணோட்டத்தில் அம்பேத்கர் மதிப்பீடு செய்துள்ளார். அத்தன்மைகளைக் குறித்த உரையாடலை நிகழ்த்த வேண்டும்.
- இந்தியாவில் பல்வேறு வகுப்பினர் வாழ்கின்றனர். பிரித்தானியர்களிடமிருந்து இந்தியா ஆட்சி அதிகாரத்தைப் பெறும்போது, அரசமைப்புச் சட்டத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும், அதிலுள்ள சிக்கல் எத்தகையது என்பதைக் குறித்தும் அம்பேத்கர் பேசியுள்ளார். இதனை ஆவணப்படுத்தும் தேவையுண்டு.
- இந்தியாவில் ஆட்சி அதிகாரம் கைமாறி, இங்கு பேசப்படும் மொழிகள் சார்ந்து, மாநிலங்களாகப் பிரிக்கும் சூழல் உருவாகும்போது, முன்னரே உள்ள மாகாணங்களை எப்படிப் பிரிப்பது? குறிப்பாக, மராட்டிய மாகாணத்தைப் பிரிப்பதில் உருவாகும் சிக்கல் குறித்தும் அம்பேத்கர் பேசியுள்ளார்.
- கூட்டாட்சித் தத்துவம் எவ்வகையில் இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது; அதன் நன்மை – தீமைகள் எவையெவை? என்பது குறித்த உரையாடலையும் அம்பேத்கர் நிகழ்த்தியுள்ளார். அது குறித்தும் பேசுவது அவசியம்.
- பிரித்தானியர் ஆட்சி அதிகாரத்திலிருந்து விடுபடும்போது, சிறுபான்மையினர், குறிப்பாக பட்டியல் சாதி மக்களின் நலன்களைப் பாதுகாப்பது எத்தகையது என்றும் அம்பேத்கர் பேசியுள்ளார். இது குறித்துப் பதிவு செய்வதும் அவசியம்.
முதல் உலகப் போர் (1916-1919) நடந்து கொண்டிருந்தபோது இரஸ்ஸல் போரின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ‘சமூக மறுசீரமைப்புக் கோட்பாடுகள்’ எனும் நூலை எழுதினார். 1918இல் அம்பேத்கர் இந்நூலுக்கான மதிப்புரையை ஜர்னல் ஆஃப் இண்டியன் எகனாமிக் சொசைட்டி எனும் இதழில் எழுதினார்.
‘நடத்தைசார் உளவியல்’, ‘அமைதிவாதத் தத்துவம்’, ‘வேதனைப் பொருளாதாரம்’ முதலிய பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இரஸ்ஸலின் நூலை அம்பேத்கர் மதிப்பீடு செய்கிறார். போர் பற்றியப் புரிதலை மேற்குறித்த கோட்பாடுகளின் வழி அறியமுடிகிறது.
“திரு இரஸ்ஸல் போரை எதிர்ப்பவர். ஆனால், அவர் அமைதிவாதி இல்லையென்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். ஏனெனில், அவரைப் பொறுத்தவரை செயல், வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது; அமைதிவாதம் என்பது மரணத்தின் மறுபெயரே. பேராசிரியர் டிவேயின் சொற்களில், அவர் ‘வன்முறையான வலிமைக்கு’ மட்டுமே எதிரானவர். ஆனால், ‘ஆற்றலாகச் செயல்படும் வலிமையை’ அவர் முழுமையாக ஆதரித்தார்” (தொ. 37: பக். 15).
போர் என்பது மேலை நாட்டினரின் தீவிர உலகியல் வாழ்வின் விளைவு. தாங்கள் அதிலிருந்து விடுபட்டவர்களென்று கீழை நாட்டவர்கள் தம்மைத் தாமே போற்றிக் கொள்வதைப் பற்றி பகுப்பாய்வு செய்கிறார் அம்பேத்கர். இன்றளவும் உலகில் எஞ்சியுள்ள பழைமைச் சிறப்புள்ள நாடாக இந்தியா நிலைத்திருப்பதற்குக் காரணம் அதுதான் என்ற கருத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.
“நிலைத்திருப்பதில் பல முறைமைகள் உண்டு. அவை அனைத்துமே சம அளவு போற்றக்கூடியவை இல்லை. எடுத்துக்காட்டாக, சரியான நேரத்தில் பின்வாங்கும் திறன் பலவீனமான இனங்களுக்குக் கூட உயிர்வாழ உதவும். அதேபோல, தேவைப்படும் நேரத்தில் அடிமையாய் அடிபணிந்து, பதுங்கி வாழ்வதும் கூட பிழைத்திருப்பதற்கான அதே அளவு திறனைக் கொண்டிருக்கலாம். எனவே, ஒரு நாட்டு மக்கள் காலங்காலமாகப் பிழைத்திருக்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் மேம்பட்டு வளர்ந்து வந்திருக்கிறார்கள் என்று கருத முடியாது. ஆனால், வழக்கமாக அவ்வாறே கருதப்படுகிறது. எனவே, பிழைத்திருத்தல் முதன்மையானது இல்லை; வாழ்வின் தன்மைதான், பிழைத்திருக்கும் தளம்தான் முதன்மையானது.
இரஸ்ஸலின் இந்திய வாசகர்கள் தாங்கள் பிழைத்திருப்பதன் தன்மையை ஆராய்ந்தால், பிழைத்திருப்பதாலேயே மனநிறைவு பெறாமல் இருந்தால், வாழ்க்கையின் விழுமியங்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் தேவையை உணர்வார்கள்” (தொ. 37: பக். 19-20).
இரஸ்ஸலின் சமூக மறுசீரமைப்பு குறித்த நூலின் மதிப்புரையைக் கீழ்க்காணும் வகையில் அம்பேத்கர் முடிக்கிறார்.
“எதிர்காலத்தில் சமூகத்தை மறுசீரமைப்பதற்கான அடித்தளத்தை இடுவதற்கான செய்திகள் இதில் நிறைய இருக்கின்றன. சமூக வாழ்க்கைக்கு மனநிலை அடிப்படையை வலியுறுத்திய முழுப்பெருமையும் திரு இரஸ்ஸலையே சேரும். சமூக மறுசீரமைப்பானது சமூகத்துடன் தனிநபருக்குள்ள உறவைச் சரியாகப் புரிந்துகொள்வதைச் சார்ந்துள்ளது. இந்தச் சிக்கல் நீண்டகாலமாகவே பல சமூகவியலாளர்களுக்கு ஒரு புதிராக இருந்து வந்திருக்கிறது. இந்த உறவு பற்றிய
திரு இரஸ்ஸலின் கண்ணோட்டமான மன உந்துதலிலிருந்து நிறுவனம் என்பது மிகவும் உண்மையானது என்பதில் ஐயமில்லை.” (தொ.37.ப.30)
உடைமைகளின் விளைவுகளைப் பற்றிய இத்தகையவொரு சிக்கலுக்கான தீர்வைப் பின்வருமாறு கூறுகிறார், அம்பேத்கர்:
“பொது முயற்சியின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட எதையும், கூட்டுப் பயன்பாட்டுக்காக இருக்கும் எதையும் தனதாக்கிக்கொள்ளும் உரிமையை யாரும் முன்வைக்க முடியாது. பொது முயற்சியின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக பழங்குடி மக்களின் கூட்டு வேட்டையைக் கூறலாம். கூட்டுப் பயன்பாட்டுக்காக இருப்பதற்கு ஒரு குடும்பத்திலுள்ள நிலைமையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். எவ்வாறு பொது நினைவுச் சின்னங்கள்மீது எவரும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாதோ அவ்வாறே வீட்டில் மேசை மீதுள்ள பொருள்கள் மீதும் அலங்காரப் பொருள்கள் மீதும் எவரும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாது. அவை யாவும் குடும்பத்துக்குரியவை. அதேநேரம், குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் தாம் அணிந்துகொள்வதற்குத் தனிப்பட்ட உரிமையுடன் ஆடைகளை வைத்துக்கொள்வதற்கு உரிமை உண்டு. அவை தனிநபர்களுடையவை” (தொ. 37: பக். 29).
இந்தியச் சமூகத்தை மேம்பட்டு வளரச் செய்வதற்குத் தேவையான தத்துவம், கூட்டுப் பயன்பாடு-தனிப்பட்ட உரிமை முதலிய கருத்துநிலைகளை அம்பேத்கர் இதில் வளர்த்தெடுக்கிறார்.
- ••
நீதிபதி மகாதேவ் கோவிந்த் இரானடே நினைவாக நிகழ்த்திய உரையில், அம்பேத்கர் இந்திய அரசியலில் செயல்பட்ட மகாத்மா ஜோதிராவ் பூலே (1827-1890), பால கங்காதர திலகர் (1856-1920), மகாத்மா காந்தி (1869-1948), முகமது அலி ஜின்னா (1876-1948) முதலியோருடன் இரானடே (1842-1901) அவர்களின் அரசியல் செயல்பாட்டை ஒப்பிட்டு உரையாற்றினார். அந்த உரையின் அச்சு வடிவமே இரானடே பற்றி தொகுதி 37 இல் உள்ள கட்டுரை. இதில் வரலாற்றில் தனிமனிதர்களின் பங்களிப்பு, வீர வழிபாடு என்பதன் சமூகப் பின்புலங்கள், அரசியல் சீர்திருத்தமா? சமூகச் சீர்திருத்தமா? எனும் உரையாடல் முதலிய பல பொருண்மைகள் குறித்து உரையாடுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரானடேயின் வாழ்க்கையை, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அரசியல் செயல்பாட்டாளர்களோடு ஒப்பிட்டுப் பேசும் இவ்வுரை பல்வேறு அரசியல் புரிதல்களை நமக்குத் தருகிறது.
இரானடே பற்றிய இவ்வுரையை வெளியிடும்போது அம்பேத்கர் முகவுரையில் பதிவுசெய்திருக்கும் செய்தி, அவரது நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
“இந்திய அரசியலில் திரு காந்தியும் திரு ஜின்னாவும் ஏற்படுத்தியுள்ள குளறுபடியை நான் குறைகூறுகிறேன். அதற்காகத்தான் நான் கண்டிக்கப்படுகிறேன். அவர்களிடம் வெறுப்பையும் மதிப்புக் குறைவையும் காட்டுகிறேன் என்று குற்றம் சாட்டப்படுகிறேன். நான் ஒரு திறனாய்வாளராக இருந்திருக்கிறேன்; இனிமேலும், அவ்வாறாகவே தொடர்வேன். இதுவே, இக்குற்றச்சாட்டுக்கு நான் அளிக்கவேண்டிய பதில். நான் குற்றம் செய்வதாகவும் இருக்கலாம். ஆனால், பிறரிடமிருந்து வழிகாட்டுதலையும் ஆற்றுப்படுத்தலையும் ஏற்பதை விட அல்லது நிலைமை சீர்கேடடைவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதைவிடக் குற்றம் செய்வது மேல். இவ்வாறு எப்போதும் கருதுபவன் நான்” (தொ. 37: ப. 37).
அம்பேத்கர் இரானடேவின் பணி குறித்த விமர்சனங்களை உள்வாங்கி, அவரைக் குறித்தப் பதிவை செய்கிறார். காந்தி, ஜின்னா போன்றவர்களின் செயல்களை விமர்சனம் செய்யும்போது, இரானடே, பூலே முதலியோரின் செயல்களை ஒப்பிட்டுக் காட்டுகிறார். இதனை ‘வெறுப்பு’ என்று கருதுவதை மறுக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியச் சமூகத்தில் ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவதில் மாமனிதராக இரானடே செயல்பட்டிருக்கிறார் என்பது அம்பேத்கரின் கணிப்பு. வரலாற்றில் நிகழும் மாற்றங்களுக்கிடையே உள்ள தொடர்பை, பல்வேறு அறிஞர்களின் கோட்பாடுகளை மேற்கோள் காட்டி, இரானடேவை மாமனிதர் என்று மதிப்பிடும்முன், மாமனிதர் என்பதற்கான வரையறைகளை அம்பேத்கர் பதிவு செய்கிறார். அப்பகுதி பின்வருமாறு அமைகிறது:
“வெறும் உயர்நிலை மனிதருக்கு இருப்பதை விட கூடுதலாக ஒன்று மாமனிதரிடம் இருக்கவேண்டும். அது எது? தத்துவ அறிஞர்கள் மாமனிதருக்கு வழங்கியுள்ள வரைவிலக்கணம் என்பது இங்குதான் முதன்மை பெறுகிறது. மாமனிதர் சமூக நலனுக்கான இயக்கத்தால் உந்தப் பெற வேண்டும். சமூகத்தைத் தூய்மையாக்க சாட்டையாகவும் துப்புரவாளனாகவும் அவர் செயல்பட வேண்டும். இப்பண்புகளே மாமனிதரை உயர்நிலை மனிதரிடமிருந்து பிரித்துக் காட்டுகின்றன. அவரை மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரியவராக ஆக்குகின்றன” (தொ. 37: பக். 49).
அம்பேத்கர் மனிதன், உயர்நிலை மனிதன், மாமனிதன் என அரசியல் செயல்பாட்டாளர்களை வகைப்படுத்துகிறார். இதற்கான வரையறைகளை முன்வைக்கிறார். அந்த வரையறைகளின் அடிப்படையில் இரானடே எவ்வாறு மாமனிதராகச் செயல்பட்டிருக்கிறார் என்ற பதிவைச் செய்துள்ளார். இரானடே அவர்களின் நாணயம், அறிவுத்திறன், தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் பணியாற்றியது இன்னபிற தொடர்பான விவரணங்களைப் பட்டியலிடுகிறார். அந்தத் தன்மையைச் சார்ந்து இரானடேவை மாமனிதர் என்கிறார்.
இந்து சமூக அமைப்பென்பது பழமைவாதம் மிக்கது; சமூகச் செயல்பாடுகளை அரசியல் நோக்கில் அறிந்துகொள்ள மறுப்பது, சமூகச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாதது; இந்து மதம் மக்களுக்கான செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டாதது; மனுதர்மத்தை முன்னிறுத்துவது என்ற பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கும் அம்பேத்கர், இந்தக் கூறுகளில் இரானடே எப்படியெல்லாம் வேறுபட்டுச் செயல்பட்டார் என்பதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம், பல்வேறு அறிஞர்களின் மேற்கோளை முன்னிறுத்திப் பதிவு செய்கிறார்.
அம்பேத்கர் இரானடேவைப் புரிந்துகொள்ள சமூகச் சீர்த்திருத்தமா? அரசியல் சீர்திருத்தமா? என்ற கோட்பாட்டை முன்னிலைப்படுத்திப் பேசுகிறார். இந்த இரண்டு நிலைகளில் இரானடே எவ்வாறு சமூகச் சீர்திருத்தத்தை முதன்மைப்படுத்தினார் என்பதை விரிவாகப் பேசுகிறார். இந்திய அரசியலில், பத்தொன்பதாம் நூற்றாண்டில், பூலேவும் இரானடேவும் முன்னெடுத்த சமூகச் சீர்திருத்தங்கள், பின்னர் வந்த அரசியல் சீர்திருத்தம் பேசுபவர்களால் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பது குறித்த உரையாடலை விரிவாக நிகழ்த்தியுள்ளார். அரசியல் சீர்திருத்தவாதிகளாக காந்தி, ஜின்னா முதலியோரை அம்பேத்கர் மதிப்பிடுகிறார்; அதே நேரத்தில், இரானடே செய்த சமூகச் சீர்திருத்தங்களை பின்னர் வந்த அரசியல் சீர்திருத்தவாதிகள் பெரிதும் முன்னெடுக்கவில்லை என்பது அம்பேத்கரின் கணிப்பாக இருக்கிறது.
குழந்தைத் திருமணம், கைம்பெண் மறுமணம், கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கும் சுதந்திரம், பெண்களுக்குச் சொத்துரிமை, பெண் கல்வி முதலிய திட்டங்களில் இரானடே செயல்பட்டு வெற்றி பெற்றதை அம்பேத்கர் கவனப்படுத்துகிறார். இவ்வகையான சமூகச் சீர்திருத்தத்தை அரசியல் சீர்திருத்தம் பேசுபவர்கள் (காந்தி, ஜின்னா) பெரிதும் கவனத்தில் கொள்ளவில்லையென்பது அம்பேத்கரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஜோதிபா பூலே முன்னெடுத்த சமூகச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக இரானடே இருந்தார். இந்தியச் சமூகத்தில் பின்வந்த அரசியல் சீர்திருத்தவாதிகள் இரானடேவின் சமூகச் சீர்திருத்தத்தை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். மாறாக, இவர்கள் மதவாதிகளாகவே செயல்பட்டு, இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் தலைவர்களாகவே அறியப்பட்டனர். காந்தி, ஜின்னா முதலிய இருவரின் செயல்களை, இரானடேவின் செயல்களோடு ஒப்பிட்டுப் பேசுவதன் மூலம்தான் சமூகச் சீர்திருத்தவாதிகள், அரசியல் சீர்திருத்தவாதிகள் எனும் பிரிவை முன்வைக்கிறார். அரசியல் சீர்திருத்தவாதிகள், வீர வழிபாட்டுக்கு உரியவர்களாகக் கட்டமைக்கப்பட்டார்கள்; மக்களின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முதலிய பண்புகளை முன்னெடுக்கும் மனிதர்களாகச் செயல்படவில்லை என்பது அம்பேத்கரின் கணிப்பு. இந்த உரையாடலில் இரானடே குறித்த மதிப்பீட்டை அம்பேத்கர் பின்கண்டவாறு பதிவு செய்கிறார்.
“தான் ஒரு பகுத்தறிவுவாதி என்பதால், தம் கருத்துகளை அறிவு-அனுபவ அடிப்படையில் ஆராய்வதற்கு ஆயத்தமாக இருந்தார். அவரது மேன்மை இயல்பானது. மேடைப் பாங்கோ கற்பிதமான விந்தைப் போக்கோ செய்தித்தாள்களின் துணையாதரவோ அவருக்குத் தேவையாக இருக்கவில்லை. நான் சொன்னது போல, இரானடே முதன்மையாக ஒரு சமூகச் சீர்திருத்தக்காரர் ஆவார். அரசியலை வைத்து வணிகம் செய்வது என்கிற பொருளில் அவர் அரசியல்வாதியல்லர். ஆயினும், இந்திய அரசியல் முன்னேற்றத்தில் அவர் முக்கியப் பங்கு கொண்டார். அரசியல்வாதிகள் சிலருக்கு ஆசிரியராகச் செயல்பட்டார்; அவர்கள் வியக்கத்தக்க வெற்றிகள் பெற்றனர்; தம் அறிவாற்றலால் திகைக்கச் செய்தனர். சிலருக்கு அவர் வழிகாட்டி; அனைவருக்கும் அவர் சிந்தனையாளர்” (தொ. 37: பக். 77-78).
அண்ணலின் இரானடேவைப் பற்றிய இப்பதிவு அரசமைப்பின் உருவாக்கம் தொடர்பான புதிய வெளிச்சமாக அமைகிறது.
***
பிரித்தானியர்கள் ஆட்சி அதிகாரத்தை இந்தியர்களிடம் கொடுக்கும் சூழல் உருவானபோது, இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படைகளை 1940கள் முதலே அம்பேத்கர் பேசத் தொடங்கினார். 1946இல் அரசமைப்பு அவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1947இல் அம்பேத்கர் தலைமையில் ‘அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு’ அமைக்கப்பட்டது. 1945-1948 காலங்களில் அரசியல் சட்ட வரைவு பற்றிய சிந்தனைகளில் தொடர்ந்து செயல்பட்டார். 1945இல் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய பட்டியல் வகுப்பினர் மாநாட்டில், பல்வேறு வகுப்பினர் வாழும் இந்தியாவில், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து உரையாற்றினார். அதன் அச்சு வடிவமே தொகுதி 37இல் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த உரையில், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான பொதுவான கோட்பாடுகள்; அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு; அந்தச் சட்டத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும்; இதற்குத் தேவையான புதிய அணுகுமுறை எது? முதலிய பல தன்மைகள் குறித்து விரிவாகப் பேசுகிறார். இந்தப் பின்புலத்தில், பல்வேறு வகுப்பு மக்களுக்கான நேர்மையான பங்களிப்பை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்க வேண்டுமன்றும் அம்பேத்கர் கருதினார்.
வகுப்புச் சிக்கல் உருவாவது தவிர்க்கப்பட இயலாதவொன்று என்று கருதிய அம்பேத்கர் அதற்கானத் தீர்வுகளை முன்வைத்தார். ஒவ்வொரு வகுப்பினருக்கும் சட்டமியற்றும் அவையில் சார்பாண்மை வழங்குதல், நிருவாகத்தில் பங்களித்தல், அரசுப் பணிகளில் சார்பாண்மை வழங்குதல் முதலியன குறித்து புள்ளிவிவரங்களுடன் அம்பேத்கர் பேசுகிறார்.
இந்தியாவில் வாழும் பல்வேறு வகுப்பினரிடையே உள்ள முதன்மையான சிக்கல் பெரும்பான்மை வகுப்பு, சிறுபான்மை வகுப்பு என்பதாகும். பெரும்பான்மை வகுப்பின் ஆதிக்கம் சட்ட உருவாக்க வரையறைகளில் இடம்பெறுமெனில், அத்தன்மை சிறுபான்மை மக்களைப் புறக்கணிப்பதாக அமையும். இச்சிக்கலைத் தீர்ப்பதற்கான அடிப்படைக் கோட்பாடுகளாக அம்பேத்கர் செய்யும் பரிந்துரைகள் பின்வரும் வகையில் அமைகின்றன:
“1. பெரும்பான்மை ஆட்சி, கோட்பாட்டு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று; நடைமுறையில் நியாயமற்றது. பெரும்பான்மைச் சமூகத்திற்கு ஓரளவு பெரும்பான்மைச் சார்பாண்மை கொடுக்கப்படலாம். ஆனால், அறுதிப் பெரும்பான்மையை அது கோர முடியாது.
2. ஒப்பீட்டு அடிப்படையில் ஓரளவு பெரும்பான்மைச் சார்பாண்மையானது சட்டமியற்றும் அவையில் கொடுக்கப்படும்போது, அதன் எண்ணிக்கை சிறிய சிறுபான்மை வகுப்பினரின் உதவியுடன் தனது ஆட்சி அமைப்பதைச் சாத்தியமாக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது.
3. அவையில் இடப்பங்கீடு செய்கையில், பெரும்பான்மை வகுப்பும் ஒரு பெரிய சிறுபான்மை வகுப்பும் இணைந்து, மற்ற சிறுபான்மை வகுப்புகளின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கூட்டணி அமைய முடியாதவாறு இருத்தல் வேண்டும்.
4. அனைத்துச் சிறுபான்மை வகுப்பினரும் இணைந்து பெரும்பான்மையைச் சார்ந்திராமல் அவர்களே ஆட்சி அமைக்க முடியுமென்ற அடிப்படையில் இடங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
5. பெரும்பான்மையிடமிருந்து எடுக்கப்பட்ட உபரி இடங்களின் எண்ணிக்கை சிறுபான்மை வகுப்புகளிடையே பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு பங்கிட்டு வழங்கும்போது, சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ள பெரிய சிறுபான்மைக்கு இடங்களைக் குறைந்த எண்ணிக்கையில் ஒதுக்க வேண்டும். சமூக நிலைகளில் தாழ்ந்துள்ள சிறிய சிறுபான்மை வகுப்பினருக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும். இவ்வாறு, நேர்மாறான விகிதத்தில் பங்கீடு செய்ய வேண்டும்” (தொ. 37: பக். 135-136).
இந்தியச் சமூகத்தில் சாதிய அடையாளத்துடன் கூடிய சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள்; மத அடையாளத்துடன் கூடிய சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் என்று இருப்பதைக் கணக்கில்கொண்டு செயல்பட்டார், அம்பேத்கர். சிறுபான்மை மக்கள் சாதிய அடிப்படையிலும் மத அடிப்படையிலும் வாழ்ந்தாலும், அவர்களின் சமூக மதிப்பீடு மற்றும் பொருளாதாரப் பின்புலம் முதலியவற்றைக் கணக்கில் கொண்டு செயல்படுவதை வலியுறுத்தினார். குறிப்பாக, பட்டியல் சாதி மக்கள் சிறுபான்மையினர் என்பதோடு, அவர்களின் சமூக மதிப்பீடென்பது மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும் கவனப்படுத்தினார். இதனை அடிப்படையாகக் கொண்டு சட்ட உருவாக்கம் நிகழ வேண்டும் என்பதில் அம்பேத்கர் உறுதியாகச் செயல்பட்டார்.
- ••
இந்தியா பிரித்தானியர் ஆட்சி அதிகாரத்திலிருந்து விடுபட்ட பின்னர், மொழி மற்றும் நிலஅமைப்பைச் சார்ந்திருந்த இந்தியா பல்வேறு மாநிலங்களாக கட்டமைக்கப்பட வேண்டிய தேவை உருவானது. இந்தப் பின்புலத்தில் அம்பேத்கர் 1948-1955 இடைப்பட்ட காலங்களில் மாநிலங்கள் உருவாக்கச் சிக்கல்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். நிலப்பரப்பு, மொழி, தேசிய இனங்கள், பொருளாதாரப் பண்பாட்டுப் பின்புலங்கள் முதலியவற்றைக் கணக்கில் கொண்டு மாநிலங்கள் உருவாக்கப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை உரையாடலுக்குட்படுத்தினார். குறிப்பாக, சாதி மற்றும் மொழி சார்ந்த பல்வேறு தன்மைகளை ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தார்.
மொழிவாரி மாகாணங்கள் உருவாக்கப்படுவதிலுள்ள சிக்கல்களைப் பின்வருமாறு பதிவு செய்கிறார் அம்பேத்கர்:
“தம்முடைய இனம், மொழி, இலக்கியம் முதலியவற்றில் பெருமை கொள்ளும் எத்தனை குழுக்கள் உள்ளனவோ அத்தனை தேசங்கள் உருவாவதற்கு மொழிவாரி மாகாணங்கள் பாதை அமைக்கும். மத்தியச் சட்டமியற்றும் அவை தேசங்களின் கழகம்போல ஆகிவிடும். எனவே, தமது பண்பாட்டில், தமது நலன்களில் தாங்கள் தனி வேறானவை என்ற உள்ளுணர்வு பொங்கி வழியும். தனித்தனியான, இறுகி உறுதிப்பட்டுள்ள தேசியங்களின் கூட்டாக மத்திய ஆட்சிப் பிரிவு ஆகிவிடும். அரசியல் அடிப்படையில் கீழ்ப்படியாத மனப்போக்கை - அதாவது, பெரும்பான்மைக்குக் கட்டுப்பட்டு நடக்க மறுத்தல், வெளிநடப்புச் செய்தல் போன்ற மனப்போக்கை அவை வளர்க்கக்கூடும். இத்தகைய மனப்பாங்கு வளர்ச்சியடையாது என்று ஒரேயடியாகப் புறக்கணிப்பதற்கில்லை. இத்தகைய மனப்பான்மை பெருகி வளர்ந்தால், வெகு எளிதில் மத்திய அரசாங்கம் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்” (தொ. 38: பக். 14-15).
இவ்வகையில் மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது என்பது, நிருவாக உறவுகளைப் பேண முடியாத நிலையை ஏற்படுத்தும். அலுவல் மொழியாக ஒவ்வொரு மாநில மொழியும் இருக்க வேண்டும் என்பதும் சாத்தியமற்றது என அம்பேத்கர் பதிவு செய்கிறார். அப்படியானால், அம்பேத்கர் மொழிவாரி மாநில உருவாக்கத்திற்கு எதிராகவே இருக்கிறாரென்று கூறுவதற்கில்லை. இவ்வகையான சிக்கல்கள் உருவாகும் என்று எச்சரிக்கிறார். இந்தச் சிக்கல் நடைமுறையில் இருப்பதை நாம் இன்றும் காண்கிறோம். எதிர்நிலையில் மொழிவாரி மாநிலச் சிக்கல்களைப் பேசிய அம்பேத்கர், மொழிவாரி மாநிலங்கள் உருவாவதன் நன்மைகள் குறித்தும் பேசியுள்ளார்:
“மொழிவாரி மாகாண அமைப்பில் என்னை மிகவும் வலுவாகக் கவர்ந்திழுக்கும் ஒரு முதன்மையான நன்மை உள்ளது. பன்மொழி மாகாணங்களைக் காட்டிலும் மொழிவாரி மாகாணங்கள் சனநாயகத்தை மேலும் சிறப்பாகச் செயலாற்றச் செய்யமுடியும் என்பதே, அது. சனநாயகத்துக்குத் தேவையானதை - அதாவது, சமூக ஒருபடித்தன்மையை, மொழிவாரி மாகாணம் உருவாக்குகிறது. தங்களது பொதுவான தோற்றுவாய் பற்றிய நம்பிக்கை, பொது மொழியையும் இலக்கியத்தையும் பெற்றிருத்தல், வரலாற்றுப் பொது மரபுகளைப் பெற்றிருக்கும் பெருமை, சமூகப் பழக்கவழக்கங்களில் பொது உணர்வு முதலியவற்றைத்தான் மக்களின் ஒருபடித்தன்மை சார்ந்திருக்கிறது. இந்தக் கருதுகோளை எந்தச் சமூகவியல் மாணவரும் மறுக்க முடியாது” (தொ. 38: பக். 16).
அம்பேத்கர் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கத்தின் தீமைகள், நன்மைகள் இரண்டையும் ஒரு சமூக வரலாற்று ஆய்வறிஞர் என்ற நிலையில் பதிவு செய்கிறார். 1948-1955 காலங்களில் இருந்த இந்தியச் சூழல் சார்ந்து, இரண்டு வகையான பார்வைகளும் அவரிடம் இருந்ததைக் காண்கிறோம். இன்றைய சூழலில், அம்பேத்கர் தீமையான விளைவுகள் என்று பதிவு செய்தவை, பெரிதும் பொருளற்றவையாகவே காணப்படுகின்றன. அவர் பதிவு செய்த நன்மைகள் என்பவை, இன்று மேலும் வளர்ச்சி பெற்று, புதிய சனநாயகத்தை வளர்த்தெடுத்திருக்கின்றன என்றே கருதமுடியும். இதனால் மாநில உரிமைகள் குறித்து இன்று விரிவாகப் பேசப்படுகிறது. தேசியக் கட்சிகளின் செல்வாக்கு் குறைந்து மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு் கூடியிருப்பதைக் காண முடிகிறது.
அம்பேத்கர் மேலே குறிப்பிட்ட மொழிவாரி மாநில உருவாக்கத்தில், அவரது மாநிலமான மராட்டியம் குறித்து விரிவான ஆய்வைச் செய்துள்ளார். மராட்டியத்தில் கூட்டமைப்பு முறைகள் எவ்வாறு செயல்படுகின்றன; அதன் விளைவுகள் எவை என்பதை விரிவான புள்ளிவிவரங்கள், நிலப்படங்கள் வழி பதிவு செய்கிறார். அந்த நிலப் பகுதியிலுள்ள பல்வேறு மொழி பேசும் மக்களை உள்ளடக்கிய மாநிலத்தை உருவாக்க வேண்டியதன் பல பரிமாணங்களைத் தெளிவுபடுத்துகின்றார்.
பிரித்தானியர்கள் காலத்தில் கல்கத்தா (இப்போது கொல்கத்தா), பம்பாய் (இப்போது மும்பை), மதராஸ் (இப்போது சென்னை) முதலிய மூன்று பெருநகரங்கள் உருப்பெற்றிருந்தன. இந்நகரங்களில் பம்பாய் மற்றும் மதராஸ், தனிமாநிலங்களாக உருப்பெறும் காலங்களில், இந்நகரங்களைத் தனியாகப் பிரித்துப் பேசும் சூழல் உருவானது. இந்த வகையில் பம்பாய் நகரை மட்டும் தனிமாநிலமாகக் கருத வேண்டும். அது குஜராத்திகளுக்குச் சொந்தமானது (சென்னை ஆந்திரர்களுக்குச் சொந்தமானது என்ற வாதம்) என்ற முறையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த உரையாடலின் பல்வேறு விவரணங்களை விரிவாக அம்பேத்கர் பதிவு செய்கிறார். பம்பாயைப் பற்றிய இந்த உரையாடலை வரலாற்றுப் பின்புலம், புவியியல் கூறுகள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கிறார்.
பம்பாய் நகரில் அன்று பெரிய வணிகர்களாகவும் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாகவும் குஜராத்திகள் இருந்தனர். பம்பாய் நகரின் தொல்குடிகள் குஜராத்திகள் என்று பேசப்பட்டது. குஜராத்திகளின் வணிகமையம், குஜராத்திகளுக்கு உரிய நகரம் பம்பாய் என்று முன்வைக்கப்பட்டது. இவ்வாறான பல்வேறு நிலைகள் குறித்து அம்பேத்கர் விரிவான உரையாடலை நிகழ்த்தினார். பம்பாய் நகரத்தில் வாழும் மக்களின் சாதி தொடர்பான இருப்புநிலை எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றியும் பேசுகிறார். கல்கத்தாவின் சூழலோடு பம்பாயின் சூழலை இணைத்துப் பேசுகிறார். இவ்வகையான உரையாடலின் இறுதியாக சமநிலையான வாழ்முறையை நோக்கி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்று வாதிடுகிறார். சிறுபான்மை வகுப்பினரை அடக்கி ஆளும் வடிவில் மாநிலங்கள் உருப்பெறக் கூடாது என்றும் பேசியுள்ளார். மொழிவாரி மாநில அமைப்பு குறித்த அம்பேத்கரின் பதிவு பின்வருமாறு அமைகிறது:
“மொழிவாரி மாநிலங்களை அமைப்பது தேவையென்பதில் ஐயமில்லை. இன்றியமையாதது என்பதிலும் ஐயமில்லை. ஆனால், எத்தகைய அடாவடித்தனத்தாலும் இதனை முடிவு செய்ய முடியாது. அதேபோல் கட்சி நலனுக்கு ஆதரவான முறையிலும் இதற்குத் தீர்வு கண்டுவிடக் கூடாது. முற்றிலும் நுண்ணறிவான முறையில்தான் இதற்குத் தீர்வுகாண வேண்டும். இவ்வாறுதான் நான் செய்துள்ளேன்; ” (தொ. 38: பக். 81)
இவ்வகையில் மொழி அடிப்படைவாதம் முன்னிலை பெறாமலும் மாநில உருவாக்கம் நிகழவேண்டும் என்று வாதிட்டார் அம்பேத்கர். தொடக்கத்தில் ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்பதை விமர்சனமாக அணுகிய அம்பேத்கர் பின்னர் பல்வேறு உலக நாடுகளை எடுத்துக்காட்டி, மொழி சார்ந்த மாநில உருவாக்கத்தை ஏற்றுக்கொள்கிறார். அவ்வாறு மொழிவாரி மாநில உருவாக்கத்திலுள்ள நடைமுறைத் தன்மைகள், பெரும்பான்மை-சிறுபான்மைச் சிக்கல்கள், அதில் அரசியல் பெரும்பான்மை, வகுப்புப் பெரும்பான்மை முதலியவை குறித்த கூர்மையான விளக்கத்தையும் தருகிறார். அப்பகுதி பின்வருமாறு அமைகிறது:
“ அரசியல் பெரும்பான்மை என்பது அதன் வர்க்க இயைபில் மாறக்கூடியது. அரசியல் பெரும்பான்மை, வளர்ச்சியால் வருவது; வகுப்புப் பெரும்பான்மை பிறப்பால் வருவது. அரசியல் பெரும்பான்மையின் கதவு எப்போதும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. வகுப்புப் பெரும்பான்மையின் கதவு எப்போதும் மூடியே வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பெரும்பான்மையின் அரசியலை ஆக்கவோ அழிக்கவோ அனைவருக்கும் உரிமை உண்டு. ஒரு வகுப்புப் பெரும்பான்மையின் அரசியல் அந்த வகுப்பில் பிறந்த அதன் உறுப்பினர்களாலேயே உருவாக்கப்படுகிறது” (தொ. 38: பக். 144).
பிரித்தானியர்களின் ஆட்சி அதிகாரத்திலிருந்து விடுபட்ட இந்தியர் முன்னிருந்த பெரும் சிக்கல் என்பது எவ்வகையான அரசியல் கருத்துநிலையை உருவாக்கிச் சட்டமாக வடிவமைப்பது, நூற்றுக்கணக்கான மொழிகள் புழங்கும் தேசத்தில் மொழி சார்ந்த அடையாளத்தை எவ்வாறு முன்னெடுப்பது, சிறுபான்மை – பெரும்பான்மையாக உள்ள வகுப்புச் சிக்கலை எதிர்கொள்வது எவ்வாறு? என்ற உரையாடல்கள் மாநிலங்கள் உருவாக்கங்கள் நிகழ்ந்தபோது முன்னெழுந்தது. மிகவும் சிக்கலாக அமைந்த இதனை அம்பேத்கர் எவ்வாறு எதிர்கொண்டார்? தனது சொந்த மாநிலத்தின் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியா முழுவதும் மாநிலங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை எவ்வாறெல்லாம் முன்வைத்தார் என்பதை நாம் மேற்குறித்த உரையாடல்களின் வழி அறியமுடிகிறது.
- ••
1919ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு மாண்டேகு – செம்ஸ்ஃபோர்டு திட்டத்தின் மூலம் இந்தியாவில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியது. வட்டார அளவில் உருவாகியிருந்த கட்சிகளும் இந்தியா முழுவதும் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியும் இரட்டையாட்சி முறையில் பங்கேற்கும் வாய்ப்பு உருவானது. இவ்வகையான ஆட்சிமுறை சார்ந்து 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தை உருவாக்கியது. வட்டமேசை மாநாடுகளின் தொடர்ச்சியாக இதனைக் கருதலாம். 1930களின் இறுதியில் காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்கு மிகுதியானது. பல இடங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவானது. இந்தப் பின்னணியில்தான் அண்ணல் அம்பேத்கர், 1939இல் ‘கோகலே அரசியல் பொருளாதாரக் கழகம்’ ஏற்பாடு செய்திருந்த உரையில், இந்தியாவில் கூட்டாட்சி குறித்த உரையை நிகழ்த்தினார். அதன் அச்சு வடிவமாக, கூட்டாட்சியா – சுதந்திரமா? எனும் நூல் உருவானது. இதில் அம்பேத்கர் இந்தியாவின் கூட்டாட்சி முறையின் பல்வேறு பரிமாணங்களை விரிவாக முன்வைக்கிறார். இந்தியச் சூழலில் கூட்டாட்சி பற்றிய அம்பேத்கரின் பதிவு பின்வருமாறு அமைகிறது:
“கூட்டாட்சியைப் பொறுத்தவரை, இந்தியப் பொதுமக்களில் பெரும்பாலானோர் ஒரு பனிமூட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஒரு கூட்டாட்சி வரப்போகிறது. கூட்டாட்சி என்றாலே தீங்கானது, மோசமானது என்பதற்கு மேல், இந்தக் கூட்டாட்சியின் தன்மை என்னவென்பதைப் பற்றிப் பொதுமக்களுக்குத் தெளிவானதொரு கருத்து கிடையாது. எனவே, அது குறித்த ஓர் அறிவார்ந்த கருத்தினை அவர்களால் பெற முடியவில்லை. கூட்டாட்சிக் கட்டமைப்பு குறித்த ஓர் உருவரையும் அந்த அமைப்பு பற்றிய சிறியதொரு திறனாய்வும் அடங்கிய ஒரு வெளியீடு பொதுமக்களுக்குத் தேவையாகும்” (தொ.39.பக்.12).
அம்பேத்கர் மேலே கூறியுள்ள அடிப்படையில் இந்தியாவில் கூட்டாட்சி குறித்த விரிவான உரையாடலை மேற்கொண்டிருக்கிறார். அந்த உரையாடல் பிரித்தானிய அரசு 1935 இல் உருவாக்கியுள்ள ‘இந்திய அரசாங்கச் சட்டம்’ எனும் வரையறைகள் சார்ந்து நிகழ்த்தப் பெறுகிறது.
இந்தியாவில் சமஸ்தானங்களின் ஆட்சி பல இடங்களில் நிகழ்கிறது. மாகாணங்கள் என்ற அடிப்படையிலும் ஆட்சி நிகழ்த்துகின்றனர். இந்த ஆட்சிகளின் மேல் மதிப்பீட்டாளராக பிரித்தானிய அரசின் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். இதில் பிரித்தானியர் x இந்தியர் என்ற இரட்டையாட்சி ஒருபுறம்; சமஸ்தானங்கள் x இந்திய ஆட்சியாளர்கள் என்று இன்னொரு புறமும் இருப்பதைக் காண்கிறோம். இவ்வகையான இரட்டையாட்சி முறைகளைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் உரையாடுகிறார் அம்பேத்கர். இதில் ஆட்சி செய்யும் பரப்புகள், ஆட்சியாளர்களுக்குள்ள அதிகாரங்கள், ஆட்சி செய்பவருக்கும் மக்களுக்குமுள்ள உரிமைகள் முதலியவை குறித்துப் பேசுகிறார்.
இரட்டையாட்சியைப் பொறுத்தவரை, சட்டமியற்றும் அவை, ஆட்சி செய்வோர் பிரிவு, நீதித்துறை முதலியவை செயல்படுகின்றன. இவ்வகையான செயல்பாடுகள் எவ்வகையான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துகின்றன என்பதைப் பற்றி அம்பேத்கர் உரையாடுகிறார். கூட்டாட்சியின் சட்டமியற்றும் அதிகாரங்களின் மூலம் ‘கூட்டாட்சிப் பட்டியல்’, ‘மாகாணப் பட்டியல்’, ‘பொதுப் பட்டியல்’ என்ற மூன்று பட்டியல்களைச் சார்ந்துதான் அதிகாரங்கள் வரையறுக்கப்படுகின்றன. யார் யாருக்கு எவ்வகையான அதிகாரங்கள் உள்ளனவென்பதும் வரையறுக்கப்பட்டிருப்பதை அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார்.
கூட்டாட்சியின் தன்மை என்பது அடிப்படையில் ஒன்றியமாக அமைகிறது. இந்த ஒன்றியங்களின் செயல்பாடுகளைச் சார்ந்து அம்பேத்கர் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. இன்றும் அவை உயிர்ப்புடன் இருப்பதாகக் கருதலாம். அவை வருமாறு:
“1. இந்தக் கூட்டாட்சி ஒரு நிரந்தர ஒன்றியமா?
2. கூட்டாட்சி அரசாங்கத்துடன் அதன் அலகுகளின் உறவு முறை என்ன?
3. அலகுகளுக்கிடையேயான உறவுமுறை என்ன?
4. இந்த அலகுகளின் கீழுள்ள மக்களிடையேயான உறவு முறை என்ன?” (தொ. 39: பக். 47)
இன்றைய சூழலிலும் மத்தியில் நடைபெறும் ஆட்சி ஒன்றியங்களின் கூட்டிணைவு என்றே கருதுகின்றனர். அதில் மேற்குறித்த கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடையாக, கூட்டாட்சித் தத்துவத்தின் பல பரிமாணங்கள் அம்பேத்கரால் உரையாடலுக்குட்படுவதைக் காண்கிறோம். சட்டமியற்றுதல் / நிருவாக முறைகள் / நிதித் தொடர்புகள் முதலிய பல கூறுகளில் மேற்குறித்த தன்மை சார்ந்து அம்பேத்கர் பேசுகிறார். தொடர்ந்து கூட்டாட்சியின் நன்மைகள், தீமைகள் குறித்தும் அம்பேத்கர் பேசுகிறார். நன்மைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்கிறார்:
ஒருமைப்பாட்டைக் கட்டமைக்க கூட்டாட்சி உதவும்; எதேச்சதிகார ஆட்சி முறைமை என்பது தவிர்க்கப்பட்டு, சனநாயகத் தன்மை உருப்பெறும்; சமூகத்தில் வாழும் அனைவருக்கும் ஒரு வகையான பொறுப்புத் தன்மை உருப்பெறும். அந்தப் பொறுப்புத் தன்மை பற்றி அம்பேத்கர் செய்துள்ள பதிவு:
“கூட்டாட்சித் திட்டத்தில் கூறப்படும் பொறுப்புமுறை, 1919 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி கொண்டுவரப்பட்ட இரட்டை ஆட்சிமுறையைப் போல உள்ளதென்று நான் கூறியிருந்தேன். ஆயினும், இந்த இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் கூட்டாட்சித் திட்டத்தில் இரட்டை ஆட்சிமுறையைவிடக் குறைவான பொறுப்பே அளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இரட்டை ஆட்சிமுறையில் இல்லாத இரு கூறுகள் கூட்டாட்சித் திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளன; இரட்டை ஆட்சிமுறையில் இருந்த ஒரு பிரிவுக் கூறு கூட்டாட்சித் திட்டத்தில் இல்லை. இவ்வாறு புதிதாகச் சேர்க்கப்பட்ட இரு கூறுகளும், முன்பு இருந்து இப்போது இல்லாமல் போயிருக்கும் இரு கூறுகளும் என்ற நிலையில் கூட்டாட்சித் திட்டத்தின் இரட்டை ஆட்சி, மாகாணங்களின் இரட்டை ஆட்சியைவிட மோசமாகியிருக்கிறது” (தொ. 39: பக். 95).
இவ்வகையில் கூட்டாட்சித் திட்டத்தின் பொறுப்பு குறித்து அம்பேத்கர் பேசுகிறார். கூட்டாட்சித் திட்டத்தின் நல்விளைவுகளைப் பற்றிப் பேசிய அம்பேத்கர், கூட்டாட்சியை முழுமையாகப் புரிந்துகொள்ள அதன் மறுபக்கத்தையும் பேசுகிறார். அத்தன்மை கொடிய தீமையாக அமைவதைச் சுட்டிக்காட்டுகிறார்.
கூட்டாட்சித் திட்டத்தில் சுதந்திரம், குடியுரிமை, சனநாயக நடைமுறை சார்ந்த தேர்தல்கள் இடம்பெற வேண்டும். மாகாணங்களுக்கும் சமஸ்தானங்களுக்கும் கூட்டாட்சியில் சமமான முறையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு இல்லையெனில், கூட்டாட்சி என்பது இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைத்து, பிரிவினைப் போக்குகளுக்கு வழிவகுக்கும் என்றும் அம்பேத்கர் எச்சரிக்கை விடுக்கிறார்.
கூட்டாட்சித் திட்டத்தின் அழிவு என்பது சமஸ்தானங்களின் நடைமுறைகளால் கட்டமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறெனில், சமஸ்தானங்களை என்ன செய்யவேண்டும், சமஸ்தானங்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து அம்பேத்கர் பதிவு வருமாறு:
“இந்திய சமஸ்தானங்களைச் சீரமைப்பு செய்வது அரசியல் சிக்கல் அல்ல; இது முற்றிலும் நிருவாகம் தொடர்பான சிக்கல் என்பதே என் கருத்து. இது தவிர்க்கப்பட முடியாத சிக்கலும்கூட. இதை எதிர்கொண்டு சீரமைக்காமல் இருப்பது சமஸ்தானங்களின் கோடிக்கணக்கான மக்களைத் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையில் பாதுகாப்பற்ற நிலையில் உழன்றுகொண்டிருக்க விடுவதாகும். நான் சொல்லும் வழி ஒன்றும் புரட்சிகரமானது அல்ல. ஒரு சமஸ்தான மன்னருக்கு ஓய்வூதியம் கொடுத்து நீக்கிவிட்டு, அவரது சமஸ்தானப் பகுதியை எடுத்துக்கொள்வது முற்றிலும் சட்டப்படியான செயலே. நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுச் செயல்களுக்காகத் தனியார் உரிமைகளையும் உடைமைகளையும் அரசாங்கம் எடுத்துக்கொள்வது நமக்குத் தெரிந்ததே” (தொ. 39: பக். 129).
1948இல் சர்தார் வல்லபாய் படேல் (1875-1950) சமஸ்தானங்களை இணைப்பதற்கு மேற்கொண்ட செயல், 1972இல் இந்திராகாந்தி அம்மையார் (1917-1984) கொண்டு வந்த மன்னர் மானியம் ஒழிப்பு முதலிய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பான கருத்துருக்களை அம்பேத்கர் 1939இல் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். இந்தியாவிலுள்ள நிலைமைகள் குறித்த துல்லியமான கணிப்புகளை அம்பேத்கர் செய்திருப்பதை அவரது பதிவுகளில் காண முடிகிறது.
சமஸ்தானங்கள் இல்லாத கூட்டாட்சியை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அம்பேத்கர் விரிவாகப் பேசியுள்ளார். சமஸ்தானங்களைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ந்து வரும் பரிணாமக் கருத்து மரபுகளை முன்னெடுத்து சமஸ்தானங்கள் இல்லாத கூட்டாட்சியை இந்தியா உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார். இத்தன்மை பிற்காலங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் முன்னெடுப்பால் நடைமுறைப்படுத்தப்பட்டதைக் காண்கிறோம்.
கூட்டாட்சி முறையின் முடிவுரைப் பகுதியில் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரானடேயின் அரசியல் செயல்பாடுகளோடு காந்தியின் செயல்களை ஒப்பிட்டுப் பேசுகிறார், அம்பேத்கர். காந்தி கால அரசியல்வாதிகள் இரானடே போல் இல்லையென்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். மேதகு காந்தியாரைப் பற்றி அம்பேத்கர் பதிவு பின்வருமாறு:
“இந்த காந்தி காலம் இந்தியாவின் இருண்டகாலம் என்பதில் எனக்கு ஐயமில்லை. மக்கள் தங்கள் இலட்சியங்களை வருங்காலத்தில் காண்பதற்குப் பதிலாகப் பழைமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் காலம் இது. மக்கள் சொந்தமாகச் சிந்தனை செய்வதை நிறுத்திவிட்ட காலம் இது. சிந்தனை செய்வதை நிறுத்தி விட்டதைப் போலவே அவர்கள் படிப்பதையும் வாழ்க்கையின் உண்மைகளை ஆராய்வதையும் நிறுத்திவிட்டார்கள்.” (தொ. 39: பக்.155)
இவ்வகையில் இந்தியாவில் உருவான இரட்டையாட்சி, கூட்டாட்சி முதலிய தன்மைகளைத் தமது கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளார். உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளின் ஆட்சிமுறைமைகளையும் இந்தியாவின் ஆட்சிமுறை மற்றும் ஆட்சியாளர்கள் குறித்தும் விரிவான பதிவை 1939இல் செய்திருக்கிறார். அவை பிற்காலத்தில் நிதர்சனமான உண்மை நிகழ்வுகளாகியிருப்பதைக் காணமுடிகிறது.
- ••
பிரித்தானியர் ஆட்சி அதிகாரத்திலிருந்து விடுபட்ட இந்தியா, ஓர் அரசமைப்பு வாயிலாக இந்தியாவை ஆட்சி செய்யும் நிலை 1948இல் உருவானது. இதன் விளைவாக, இந்திய அரசமைப்பு உருவானது. அதன் முகப்புரை நம்முடைய அரசமைப்புப் பேரவையில், ‘1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்’ என்ற பதிவு உள்ளது. இவ்வகையான பதிவு உருப்பெறுவதற்கு முன்னோடியாகப் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் அம்பேத்கர் நேரடியாகப் பங்கு பெற்றார். அந்தப் பின்புலத்தில், மாநிலங்கள் உருப்பெறும்போது, சிறுபான்மையினர் எவ்விதம் நடத்தப் பெற வேண்டும் என்பதற்கான வரைவை (articles) அம்பேத்கர் உருவாக்கினார். இந்த வரைவு அகில இந்தியப் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் சார்பாக, பட்டியல் சாதியினரின் நலன்களுக்கான பாதுகாப்பு சார்ந்தும் அரசமைப்புப் பேரவைக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வகையான முறையில் பின்னர் எழுதப்பட்டதோ அந்த முறையை 1947இல் அம்பேத்கர் பின்பற்றி இந்த வரைவை உருவாக்கியுள்ளார்.
இந்த வரைவில் குடிமக்களின் உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் பட்டியல் சாதியினரின் உரிமைகள் குறித்த கருத்துகளைப் பதிவு செய்தார். பட்டியல் சாதி மக்களை சிறுபான்மையினர் என்ற பிரிவில் சேர்க்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. இதனை மறுத்து, பட்டியல் சாதி மக்கள் சிறுபான்மையினர் என்ற கருத்துநிலையை அம்பேத்கர் முன்வைத்துள்ளார்.
இந்த வரைவில் ஒரு முகப்புரை (Preamble) இடம்பெற்றுள்ளது. இந்திய மாநிலங்கள் உருவாக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டியவை தொடர்பான வரைவுகளை அம்பேத்கர் வகுத்தளித்துள்ளார்.
இந்திய ஒன்றியத்திற்குள் இந்தியாவிலுள்ள சமஸ்தானங்களை இணைப்பது தொடர்பான விரிவான உரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்த வரைவுகளை உருவாக்கித் தந்துள்ளார். அடிப்படை உரிமைகள் தாக்குதலுக்குள்ளாகும்போது எவ்வகையான தீர்வுகளை முன்வைப்பது என்பது குறித்த வரைவுகள் உள்ளன. உரிமைகள் மீதான தாக்குதல்களான, நிருவாகக் கொடுமை, சமத்துவமின்மை, பாகுபாடு, பொருளாதாரச் சுரண்டல் முதலியவற்றை எதிர்கொள்ள வேண்டிய வரைவுகளை அம்பேத்கர் இதில் உருவாக்கித் தந்துள்ளார்.
மாநிலங்கள் உருவான பின்பு சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்குரிய பல பிரிவுக் கூறுகளை வரைவுகளாகச் செய்துள்ளார். வகுப்புவாத ஆட்சிப் பிரிவுக்கு எதிரான பாதுகாப்பு, சமூக மற்றும் அதிகார கொடுங்கோன்மைக்கு எதிரான பாதுகாப்பு, சமூகப் புறக்கணிப்பிலிருந்து பாதுகாப்பு முதலிய பல கூறுகள் இந்த வரைவில் இடம்பெற்றுள்ளன.
பட்டியல் சாதியினருக்கான பாதுகாப்புகள் குறித்த விரிவான வரைவை அம்பேத்கர் உருவாக்கியுள்ளார்.
சட்டமியற்றும் அவைகளில் சார்பாண்மை உரிமை, நிருவாகத்தில் சார்பாண்மை உரிமை, அரசுப் பணித்துறைகளில் சார்பாண்மை உரிமை முதலியவற்றை பட்டியல் சாதி மக்களுக்கு எவ்விதம் வழங்க வேண்டும் என்ற வரைவை உருவாக்கியுள்ளார். பட்டியல் சாதி மக்களுக்கான சிறப்புக் கூறுகளாக, உயர்கல்விக்கான ஏற்பாடுகள், புதிய குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் முதலியவற்றை விரிவாக வழங்கியுள்ளார்.
இந்தியச் சமஸ்தானங்களில் வாழும் பட்டியல் சாதி மக்களுக்கான பாதுகாப்பு குறித்தும் வரைவை உருவாக்கியுள்ளார். மேற்குறித்த அனைத்து வரைவுகளுக்கு விரிவான விளக்கக் குறிப்புகளையும் புள்ளிவிவரப் பட்டியல்களையும் பல்வேறு அட்டவணைகளாக அம்பேத்கர் கொடுத்துள்ளார்.
இவ்வகையில், 1947இல் ஆட்சி அதிகாரம் மாற்றம் பெற்று, 1948இல் ஆட்சி அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் அரசமைப்புச் சட்ட விதிகளை உருவாக்கத் தொடங்கினர். 1949இல் சட்டப்படியாக அறிவித்தனர். இந்த நடைமுறையில், 1947இலேயே சிறுபான்மை மக்கள் என்ற பிரிவில் பட்டியல் சாதி மக்களையும் இணைத்து அம்பேத்கர் உருவாக்கியுள்ள வரைவுகள், பின்னர் எவ்வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன, பின்னர் நடைமுறையில் எவ்வாறு உள்ளன என்பது குறித்த ஆய்வை மேற்கொள்வது மிகவும் அவசியமான பணியாகும். அது நிகழ்த்தப் பெற்றிருப்பதாகக் கருத முடியவில்லை. அதனை நிகழ்த்தும் தேவை இப்போது நம்முன் உள்ளது.
- வீ.அரசு, முதன்மைப் பதிப்பாசிரியர், அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு.