பேராசிரியர் செ.வை.சண்முகனார் இயற்கை எய்தினார் என்ற செய்தி 27 -1- 22 அன்று காலையில் அறிந்து பெரும் அதிர்ச்சியுற்றேன். முதல் நாள் இரவு சுமார் 10 மணியளவில் லேசாக நெஞ்சுவலி என்று படுத்திருக்கிறார். சற்று நேரத்துக்கெல்லாம் உயிர் பிரிந்திருக்கிறது. வாழ்வின் பெரும் பகுதியைத் தமிழ் இலக்கண ஆய்வில் செலவிட்டவர். 35 நூல்களையும் 200க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர். செம்மொழித் தமிழின் மிக உயரிய தொல்காப்பிய விருதினைக் குடியரசு தலைவரிடமிருந்து பெற்றவர். 90 வயது முடிந்து 91 ஆம் அகவையில் அடியெடுத்து வைத்த நிலையிலும் சுறுசுறுப்பாக இருந்தார். எவ்வித நோய்நொடியோ இல்லை. முதல்நாள் பலரோடும் கல்வி சார்ந்து அலைபேசியில் பேசியிருக்கிறார். கடைசி வாரத்தில் கால்டுவெல் குறித்து சொற்பொழிவு ஆற்றினார்.

se vai shanmuganarஅவரது வாழ்வும் வளர்ச்சியும் ஓர் சிறிய கிராமத்திலிருந்து தொடங்கியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரத்தில் 1932ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிக்கல்வி உடையார்பாளையத்திலும் ஜெயங்கொண்டத்திலும் அமைந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் முதுகலையும் எம்.லிட்டும் பெற்றார். அங்கேதான் அவர் பணி செய்தார். விரிவுரையாளராக, பேராசிரியராக மொழியியல் உயராய்வு மையத்தின் இயக்குநராகவும் இருந்து ஓய்வு பெற்றார். பல நூல்களை வெளியிட்டதும் அங்குதான். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தன்னை வளர்த்தெடுத்த ஞானத்தாய் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டு நூல் ஒன்றைக் காணிக்கையாக்கியுள்ளார்.

இலக்கண ஆய்வு:

பேராசிரியரது ஆய்வின் பெரும்பகுதி இலக்கண ஆய்வாகவே அமைந்தது. பழந்தமிழ் இலக்கணங்கள் முதல் பாதிரிமார் எழுதிய இலக்கணங்கள் வரை எல்லாவற்றையும் நுட்பமாக அணுகி ஆராய்ந்தார். அவரது இலக்கண ஆய்வு 1958இல் தொடங்கியது. தெ.பொ.மீயிடம் எம்.லிட் ஆய்வுக்குப் பதிவு செய்தபோது, 'நச்சினார்கினியனாரின் எழுத்ததிகார உரை மட்டும் ஆய்வு செய்தால் போதுமானது' என்று கூறி தலைப்பு கொடுத்தாராம். அதுவே பின்னாளில் Naccinarkiniyars Conception of Phonology-என்று நூலாக வெளிவந்தது.

பின்னர் கல்வெட்டுத் தமிழில் முனைவர் பட்ட ஆய்வு பேராசிரியர் அகத்தியலிங்கனாரின் வழிகாட்டுதலில். அதுவும் நூலாக வந்தது.

இலண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கையெழுத்துப் பிரதியாக இருந்த 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுவாமிநாதம் என்னும் இலக்கணத்தை உரையெழுதிப் பதிப்பித்தார். இதுவும் 1975-இல் நூலாக வெளிவந்தது. சுவாமிநாதம் விருத்தியுரையையும் திருவனந்தபுரம் கீழைச்சுவடி நூலகத்திலிருந்து பெற்றுப் பதிப்பித்தார். தெ.பொ.மீ ஏற்றி வைத்த இலக்கண ஆய்வு எழுத்திலக்கணக் கோட்பாடாக, தொடர், சொல்லிலக்கணக் கோட்பாடாக (நான்கு தொகுதிகள்) பொருளிலக்கணக் கோட்பாடாக (மூன்று தொகுதிகள்) நூல்கள் வெளிவந்துள்ளன. இலக்கண ஆய்வு என்ற தமது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலில் வீரசோழியம், நேமிநாதம், இலக்கணக்கொத்து அவற்றின் சிறப்பு குறித்தும் வன்மை, மென்மை குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

அதில் இலக்கணக் கல்வி, பாடத்திட்டம், நோக்கு இலக்கணம் குறித்தும் விளக்கியுள்ளார். அவர் எழுதிய இலக்கண உருவாக்கம் என்ற நூலுக்குத் தமிழக அரசின் பரிசும் கிடைத்தது. இந்நூல் பற்றி பேரா. இ.அண்ணாமலை பின்வருமாறு அறிமுகம் செய்கிறார் : "ஒரு சமூகத்தின் கலாச்சாரம் வெவ்வேறு காலகட்டங்களில் புதிய படைப்புகளைத் தருகிறது.அது கலாச்சாரப் படைப்புகள் எனக் கூறப்படும் இசையாகவோ இலக்கியமாகவோ இலக்கணமாகவோ இருக்கலாம். இலக்கியப் படைப்புக்கு ஆதாரமாக இருக்கும் கலாச்சாரத்தை இலக்கியக் கலாச்சாரம் என்கிறார்கள். இது இலக்கியம் காட்டும் கலாச்சாரம் பற்றியது. இலக்கணப்படைப்பையும் இந்த நோக்கில் பார்க்கலாம். இந்த நோக்கைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி எழுதப்பட்டது தான் இலக்கண உருவாக்கம் என்னும் இந்த நூல்". கால்டுவெல், பெஸ்கி, ஜி யு.போப் முதலிய பாதிரியார்கள் தமிழைப் புதிய கோணத்தில் பார்த்தவர்கள். ஏனெனில் தமிழ் அவர்கட்கு இரண்டாவது மொழி. தமிழ் வினைகளை மெல்வினை ‘வல்வினை என்று வகைப் படுத்திய பெருமை அவர்களைச் சாரும். செ.வை.ச. வீரமாமுனிவரின் இலக்கணப்பணி குறித்தும் நூல் எழுதினார். இலக்கணமும் சமூகமும், இலக்கணமும் மொழி உணர்ச்சியும் போன்ற புதிய கோணங்களில் அவரது இலக்கண ஆய்வுகள் நடைபெற்றன.

திராவிட மொழிகள் ஆய்வு

70களில் பல்கலைக்கழகத் தமிழ், மொழியியல் முதுகலைப் பாடத்திட்டத்தில் திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம் ஒரு தாள் இடம் பெற்றிருந்தது. அதற்கு மூன்று பாடநூல்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று செ.வை.ச எழுதிய திராவிட மொழிகள் பெயர்கள் (Dravidian Nouns) என்பதாகும். இந்நூல் எங்களுக்குப் பாட நூலாக ( 75-77-இல்) அமைந்தது. திராவிட ஒப்பிலக்கணக் கல்விக்கு இது ஒரு முக்கியமான நூல் என்று பி.எஸ். சுப்பிரமணியம் கூறுவார். திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம் தொடர்பாக இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பல இன்னும் நூலாக உருவாக்கம் செய்யப்படவில்லை. மலையாள மொழியின் முதல் இலக்கண நூலான லீலா திலகம் குறித்து ஆய்வு நூல் எழுதினார். கேளரபாணினியம் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதினார்.

லீலா திலகம் என இவர் எழுதிய ஆய்வுநூல் மலையாள மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. பேராசிரியரின் மாணவரான பேரா. வேணுகோபால பணிக்கர் இதற்கு உதவினார். அவரது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணப் புலமையைப் பிற கட்டுரைகளிலும் காணமுடியும்.

இக்கால எழுத்து வழக்கு:

இக்கால எழுத்து வழக்கு குறித்தும் அதைத் தரப்படுத்துவது குறித்தும் புதுமையான கட்டுரைகள் சில எழுதியுள்ளார். மொழி மாறும் தன்மை கொண்டது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பான்மையோர் பயன்படுத்தும் புதிய தமிழ் வழக்குகளைப் பழைய இலக்கண விதிகளைக் காட்டித் தவறென்று கூறுதல் பொருந்தாது என்று கருத்துரைப்பார். இக்கால எழுத்து வழக்குக்கு நோக்கு இலக்கணம் தயாரிக்கும் முயற்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் (அப்போது

பேரா.கி. கருணாகரன் துணைவேந்தர்) ஈடுபட்டது. அதனைப் பேராசிரியர் அகத்தியலிங்கனார், செ.வை.ச, பொற்கோ வரவேற்றனர்.

புதிய துறைகளில் தமிழைப் பயன்படுத்துவோர்க்கு ஏற்படும் மயக்கங்களைத் தீர்த்துவைக்க நோக்கு இலக்கணம் பயன்படும் என்று செ.வை.ச எழுதுவார். அந்தப் பணி நிறைவேறாமல் போயிற்று.

தற்போதைய துணைவேந்தர் அதனைத் தொடர்ந்தால் எழுத்தாளர் யாவர்க்கும் பயன்படும். பேராசிரியர் செ.வை.சண்முகனாரின் கனவு மெய்ப்படும். மேலும் "தாளடி, குறுவை, சம்பா முதலிய சொற்கள் ஆங்கிலத் தினசரிகளிலும் கையாளப்படுகின்றன. இவைகளைப் பிற மொழிகளிலும் கையாளும்படிச் செய்யவேண்டும். பிற மாநிலச் சட்டமன்றங்கள் இன்று தனித்தனிப் பெயரை உடையனவாக உள்ளன.

விதான் சவுதா-கர்நாடக சட்டமன்றம்' ஞாய சபா- கேரள சட்டமன்றம்' மந்திராலயா- மகாராஷ்டிரா சட்டமன்றம்' அப்படியே தமிழிலும் ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குரிய சிறப்புப் பெயராக வழங்க வேண்டும்" என்பது செ.வை.சவின் விருப்பம்.

எழுத்துச் சீர்திருத்தம்:

பேராசிரியர் செ.வை.சண்முகம் இங்கிலாந்தில் ரெடிங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார் என்பதை மேலே குறிப்பிட்டோம். பின்னர் மூன்று ஆண்டுகள் இந்தோனேஷிய பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக நடுவணரசின் கலாச்சார நிறுவனத்தின் சார்பில் பணிசெய்தார். இந்தோனேஷிய ஆய்வுகள் என்ற ஆங்கில நூல் இதன் பயனாக வந்தது. எழுத்துச் சீர்திருத்தம் குறித்து நூலெழுதவும் இந்தோனேசிய அனுபவம் உதவிற்று. "பாஷா மலேஷியாவும் இந்தோனேஷிய மொழியும் வேறுவேறு மொழிகள் அல்ல. அடிப்படையில் இரண்டும் ஒரே மொழிதான். இந்தோனேசியா சுதந்திரம் அடைந்து தனி நாடான பின்னர் தேசிய உணர்ச்சியினால் அந்நாட்டு மொழிக்கு பாஷா இந்தோனேசியா என்று 'ஞானஸ்நானம்' செய்து வைத்தார்கள்" என்று பேராசிரியர் நகைச்சுவையாக எழுதுவார். இந்தோனேசியாவில் ஐந்து முறை எழுத்துத் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாம். மக்களின் பயன்பாட்டின் அடிப்படையிலும் பாடப் பொருள் அடிப்படையிலும் பிறமொழிச் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று குறிப்பிடுகிறார். அறிவியல் தமிழாக்கம் என்ற நூல் தமிழில் அறிவியல் நூல்களை எழுதும் போது ஏற்படும் மயக்கங்களைத் தீர்த்துவைக்கிறது.

மொழியியல் இலக்கியத் திறனாய்வு:

பேராசிரியர் தமது பணி ஓய்வுக்குப்பின் மொழியியல் தொடர்பான இலக்கியத் திறனாய்வில் ஆர்வம் காட்டினார். தமிழிலக்கியங்களை மொழியியல் கொள்கை கொண்டு பகுத்தாய்ந்து வரி வரியாக விவரித்தார். கவிதைக் கட்டமைப்பு (Pattern), விகாரம் (Deviation) ஆகிய இரு கொள்கைகளையும் அடியொற்றித் தமிழ்க் கவிதைகளை ஆராய்ந்தார். சங்ககாலச் செய்யுள் முதல் தற்காலக் கவிதைகள் வரை அனைத்துப் பாடல்களையும் திறனாய்வு செய்தார்.

குறள் வாசிப்பு

கவிதைக் கட்டமைப்பு

குயில்பாட்டுத் திறன்

அழகின் சிரிப்பு

இலக்கியமும் மொழிஅமைப்பும்

முதலிய நூல்களை எழுதியுள்ளார். செய்யுள் பொருள் அறிவதில் (interpretation)) விட்டிசை, வகையுளி, அசைச்சொற்களின் இன்றியமையாமை ஆகியவற்றை வலியுறுத்துவார். தொடரன், கருத்தன் போன்றவற்றின் பங்கையும் சுட்டிக் காட்டுவார். இந்நூல்கள் தமிழ் பயிலும் மாணவர்கள் படித்துப் பயன்பெற வேண்டியவை.

எனது வழிகாட்டி

என் ஆராய்ச்சியின் முதல் மேற்பார்வையாளரான டாக்டர் குமாரசாமி ராஜா அல்ஜீரியா கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழகத்துக்கு அயற்பணியில் சென்றபோது பேராசிரியர் செ.வை.ச. அவர்களிடம் ஆய்வை மாற்றி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது நடந்தது 1979 -இல்.பேரா.எஸ்.வி.எஸ் அப்பொழுதுதான் ஜகார்த்தா பல்கலையிலிருந்து அயற்பணி முடித்து திரும்பி இருந்தார். மூன்று ஆண்டுகளில் ஆய்வை முடிக்க உற்ற துணையாக இருந்தார்.

வாரம் இருமுறை சந்திப்பேன். துறை நூலகத்தில் அமர்ந்தபடி ஆய்வுக்கு வேண்டிய தரவுகளைச் சேகரித்தல், வகைசெய்தல், இயல்கள் உருவாக்கம், திருத்தம் செய்தல், இறுதி அறிக்கை தயாரித்தல் என்ற நிலையில் ஆய்வு முன்னேறியது. 1983 ஏப்ரல் மாதத்தில் ஆய்வேடு அளிக்கும் வரை எல்லா உதவிகளையும் செய்தார். 80-களில் இருந்து தொடர்ந்த ஆசிரியர் - மாணவர் உறவு இறுதிவரை நிலைத்திருந்தது.நூல் எழுது! என்று பார்க்கிறபோதும் தொலைபேசியில் பேசுகிறபோதும் வலியுறுத்துவார். ஆய்வு மாணவர்கள் எல்லாரிடமும் இதனை வலியுறுத்துவார். 2008 இல் அவரது ஆய்வு மாணவர்கள் சேர்ந்து பவள விழா ஏற்பாடு செய்து பவள விழா மலர் கொண்டு வந்தோம். அவருடைய மாணவர்கள் அமெரிக்கா, பாரீஸ், இந்தியாவில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்தனர். தற்போதும் பணியாற்றுகின்றனர். பேரா.அகத்தியலிங்கனாரின் கீழ் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அவரை மிகவும் நேசித்தார். ஆய்வில் தோன்றும் சந்தேகங்களை அவரிடம் கேட்டறிந்தார்.

"பேராசிரியரின் பெயரைச் சொல்லும் போது சேவை சண்முகம் என்றுதான் ஒலிக்கும். ஆம் அவர் தமிழுக்குச் சேவை செய்வதில் முன்னணியில் நிற்பவர். எழுத்துக்குள் ஊடுருவி அறிவுப் பொருளை அள்ளி வழங்கிக் கொண்டிருப்பவர்" என்பார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்.

பேராசிரியர் செ.வை.சண்முகனார் தன் எழுத்தில் தன்னை மறைத்துக் கொண்டார். அவர் எழுத்தின் வழி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவர் பயன்படுத்திய எழுதுகோல்களும் நூல்களும்தான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன.

- ஆ.கார்த்திகேயன்

Pin It