சில ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சி ஆனைமலை மது இராமகிருஷ்ணன் அவர்களின் இயற்கை வேளாண்மை பண்ணைக்கு பசுமை விகடன் பத்திரிகை சார்பாகச் சென்றேன். ஒரு நாள் விவசாயி என்ற நிகழ்ச்சியைப் பசுமை விகடன் இதழ் நடத்தியது. விவசாயம் சாராத மற்றவர்கள் விவசாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு நாள் முகாமாக அந்தப் பண்ணையில் சிறு வேலைகள் செய்யவும், வேளாண்மை குறித்து அறிந்து கொள்ளவும் அந்த முகாம் உதவியது.. அப்போது மது இராமகிருஷ்ணன் அவர்கள் அங்குள்ள அபூர்வமான பல மரங்களை பற்றிச் சொன்னார் அந்தத் தாக்கத்தால் "அழிந்து வரும் மரங்கள்" என்ற தலைப்பில் நான் ஒரு புத்தகம் எழுதினேன். அதற்கு அவருடைய தகவல்கள் பெரிதும் உதவியாக இருந்தன. மரங்களைப் பற்றிச் சரியாக உணர்ந்து கொள்ளும் விதமாய்ப் பலவற்றை விளக்கினார். உதாரணம் மதிய உணவு திருவோட்டில் வழங்கினார். வழக்கமான தட்டு இல்லாமல் திருவோடு. திருவோடு மரம் பற்றி விளக்கினார்.farm tourசமீபத்தில் திருப்பூர் ஊத்துக்குளி இயல்வாகை அமைப்பு சத்தியமங்கலம் திருமூர்த்தி தோட்டத்திற்குச் செல்ல அழைப்பு விடுத்தது. இது வேளாண்மைச் சுற்றுலாவா என்று ஒரு தகவல் கேட்டேன்.. ஆமாம் என்று இயல்வாகை அசோக் தகவல் தந்திருந்தார். அந்த ஒரு நாள் பயணத்தில் பள்ளி குழந்தைகள் பாதிக்கு மேல் இடம்பெற்றிருந்தார்கள். நெல் எங்கே விளைகிறது என்று ஒரு பள்ளி மாணவர்களிடம் கேட்டபோது மரத்தில் என்றான். எந்த மரம் என்று காட்டச் சொன்னேன். திகைத்தான். பால் எங்கிருந்து வருகிறது என்றால், முதலில் பாக்கெட் என்றும் பிறகு மிஷின் என்றும் கூறினான். இந்தப் பள்ளி குழந்தைகளுக்கு அரிசி எங்கிருந்து வருகிறது, பால் எங்கிருந்து வருகிறது, காய்கறிகள் எங்கே விளைகிறது என்பதுகூடத் தெரியவில்லை. அவர்களுக்குப் பாடத்தில் வெறுமனே இவற்றைச் சொல்லிக் கொண்டிருப்பதை விட வேளாண்மை சார்ந்த சுற்றுலாக்கள் அழைத்துச் செல்வது அந்த விஷயங்களை மனதில் சரியாகப் பதிய வைக்கும். இந்த வகை வேளாண்மைச் சுற்றுலா அண்மைக் காலத்தில் மாணவர்களிடம் பிரபலமாகி வருகிற, அண்மை ஆண்டுகளில் தமிழகத்தில் அங்கங்கே பேசப்பட்ட விஷயங்களாக இவை இருக்கின்றன.

ஆனால் இத்தாலிதான் இதற்கு ஆரம்ப நாடாக இருக்கிறது.. அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வேளாண்மைச் சுற்றுலா என்பது மிகவும் பிரபல்யமாக இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் 50 பில்லியன் டாலர் வருமானம் தரக்கூடியதாக வேளாண்மைச் சுற்றுலா இருந்தது. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்காக வருவாய் பெருக்கிக் கொள்ளும் என்று சொல்கிறார்கள்.

விவசாயிகளின் வேலை முறைகள், பயிரிடும் தன்மை, அங்குள்ள தட்பவெப்ப நிலை, மண் வகை, போடும் பயிரின் வகை போன்றவற்றால் தீர்மானிக்கப்படுகிறது, இவற்றையெல்லாம் பார்ப்பதைத் தவிர அந்த பொருட்களை விலை கொடுத்து வாங்குவதற்கான தளமாகவும் அது அமைகிறது.

அப்படித்தான் அன்று முகாமினுடைய இறுதியில் திருமூர்த்தி தோட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கற்றாழை" சோப்பு, அரப்பு, வெவ்வேறு வகையான எண்ணெய்கள், மஞ்சள் பொடிகள் போன்றவற்றை விலைக்கு வாங்கினோம்.

சத்தியமங்கலத்தில் திருமூர்த்தி என்பவர் இயற்கை வேளாண்மை முறையில் விவசாயம் செய்தவர். விவசாயி என்பவன் கஷ்டப்பட பிறந்தவன் அல்ல. விவசாயம் மூலம் இலாபம் சம்பாதிக்க முடியும், விவசாயப் பயிரை மதிப்பீட்டு இலாப விஷயமாக மாற்ற முடியும் என்று காட்டியவர். சமீபத்தில் 47 வயதில் இதய நோயின் காரணமாக இறந்து விட்டார். அவரின் தோட்டத்தில் அவரின் மனைவியின் பராமரிப்பில் இயற்கை விவசாயமும் பல பொருட்களில் தயாரிப்பும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த மாதிரி வேளாண்மைச் சுற்றுலா தளங்களில் நாம் அபூர்வமாய் நினைக்கிற இளநீரைச் சாதாரணமாகக் குடிக்கலாம்.. பல வகைகளில் பழங்கள், சாதாரணமாக கிடைக்கிற பப்பாளி, வாழை போன்றவற்றைப் பறித்துச் சாப்பிடலாம்.. கொய்யா பலாப்பழம் உட்பட பல கண்ணில் படுபவற்றைப் பறித்தும் சாப்பிடலாம். இதுவே வெளிநாடாக இருந்தால் திராட்சை பயிரிடும் முறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு ஒயின் தயாரிப்பதில்கூட ஈடுபடலாம். இந்தப் பண்ணைத் தளத்தில் குதிரை சவாரி, பண்ணை குளத்தில் மீன் பிடிப்பு போன்றவற்றில் கூட ஈடுபடலாம், பொழுது போக்கு அம்சங்களை இந்தப் பயணத்தில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்,

அப்படித்தான் திருமூர்த்தி தோட்டத்தில் மாற்றுக்களம் அமைப்பைச் சேர்ந்த பிரபாகர் குழந்தைகளுக்கான விளையாட்டுகளை நிகழ்த்திக் காட்டினார் இரண்டு வகை விளையாட்டுகள். அங்கே கிடைக்கும் பொருட்களைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள் குழந்தைகள் பக்கத்துக் கிராமங்களுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். திருமூர்த்தி தோட்டத்திற்கு அருகாமையில் கொடிவேரி என்ற அணையும் நீர்வீழ்ச்சியும் இருக்கிறது. அங்கு நீராடுவது கூட இந்த பயணத்தின் இன்னொரு பகுதியாகக் கொண்டிருக்கலாம். விவசாயம் நட்டத்தில் நடக்கிறது. விவசாயிகள் வறுமையில் இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி மதிப்பீட்டு முறையில் விவசாயம் இலாபகரமாக இருக்கிறது. அங்கு இருக்கிற பொருட்களை அவர்களாக விளைவிப்பது என்பது இலாபகரமாக இருக்கிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் வியாபாரம் என்பது சுலபமாக இருக்கிறது. இலாபமாக இருக்கிறது என்பதை விவரித்தார்கள்.

திருமூர்த்தி தோட்டத்தில் விளைகிற மஞ்சளில் உற்பத்தியின் அளவு என்பது ஆசேரியமாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் தங்கமும் மஞ்சளும் ஒரே விலையில் இருந்திருக்கிறது. மஞ்சளில் பல வகை இருக்கிறது அவற்றை எடுத்து வேக வைத்து உலர்த்திச் சுத்தம் செய்து அரைத்து பலவகை மஞ்சள் தூள்களை உருவாக்குகிறார்கள், சாப்பாட்டிற்கானது, உடம்பில் பூசுவதற்கானது என்று.. மருத்துவக் குணங்களுக்காக மஞ்சள் என்பதும் முக்கியமாக இருக்கிறது. வாழை மற்றும் மஞ்சள் பயிரிடுதல் போன்றவற்றில் பல நுணுக்கமான அணுகு முறைகளை அந்த விவசாயிகள் சொன்னார்கள். கொடும் வெயில் நேரத்தில் அந்த விவசாய பூமியில் வெவ்வேறு மரங்கள் தந்த குளுமையை மறக்க இயலாது..

முன்பாக தேவராஜன் இதைப் பற்றி விரிவாக இப்படிச் சொன்னார்.

வேளாண் சுற்றுலா என்பது சுற்றுலாப் பயணிகளை அல்லது பார்வையாளர்களை ஒரு பண்ணைக்குக் கொண்டுவரும் ஒரு செயலாகும். எளிமையான வார்த்தைகளில். சுற்றுலாப் பயணிகள் அல்லது பார்வையாளர்கள் வந்து விவசாயத்தைத் தனிப்பட்ட மற்றும் பிரத்தியேகமான முறையில் அனுபவிக்க இது ஒரு வாய்ப்பாகும். பல ஆண்டுகளாக, இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் கூட, வேளாண் கிராமப்புறச் சுற்றுலாவின் கருத்து அதன் எண்ணற்ற நன்மைகளால் செழித்து வளர்ந்துள்ளது. இந்த இயற்கைச் செயல்பாடு பண்ணையின் உரிமையாளருக்குப் பயனளிப்பது மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை அன்னையை வாழவும் பாதுகாக்கவும் வாய்ப்பளிக்கிறது.

நகரவாசிகளின் அன்றாட வாழ்க்கை சலிப்பானது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான நடைமுறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயத்தில், புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது உங்கள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும் மற்றும் உங்கள் அன்றாட வழக்கத்திலிருந்து உங்கள் மனதை விலக்கி வைக்கும். தவிர, தோட்டக்கலை மற்றும் விவசாயம் போன்ற நடவடிக்கைகள் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இயற்கையே நம்மை குணப்படுத்துகிறது மற்றும் பல்வேறு காரணங்களால், இயற்கை அழிந்து வருகிறது. அதைக் கவனிப்பது நமது பொறுப்பு. பண்ணை உரிமையாளர்களால் நிலங்கள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுவதால், அதன் பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்தி, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாக்கப்படுவதால், இயற்கையைப் பாதுகாக்க வேளாண் சுற்றுலா உதவுகிறது.

இந்தப் பண்ணைகளில் பெரும்பாலானவை நகரின் புறநகரில் அமைந்துள்ளன. வேறு சொற்களில் கூறுவதானால், அவர்கள் வீட் டிலிருந் து இரண் டு ம ணி" நர தூரத்தில் இருக்கிறார்கள். பலர் நீண்ட விடுமுறையில் குறுகிய விவசாயப் பயணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு இதுவே காரணம். அத்தகைய இடங்களுக்குப் பயணம் செய்வது மிகவும் வசதியானது, வார இறுதியில் கூட நீங்கள் விவசாயப் பயணத்தைத் திட்டமிடலாம்.

இதையெல்லாம் கேட்டபடி பண்ணையில் கடும் வெயிலைச் சகித்துக் கொண்டு மரநிழல்களைத்தேடி அலைந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

இதைப் போன்ற இடங்களில் மாதிரித் தோட்டம் அமைப்பது, அங்கு வருகை புரிவது, ஏதாவது வேலை செய்து புதிய பதிகங்களை நடுவது என்பது முக்கியமானது என்றார். அப்படி மாதிரித் தோட்டமும் தாங்கள் பதிகம் செய்த பயிர்கள் பின்னால் எப்படி உள்ளன என்று கண்டு கொள்ள அடிக்கடி வந்து போகிற உபாயம் கூட வரலாம்.

விவசாயப் பொருள்கள் நமக்கு எப்படிக் கிடைக்கின்றன, நம் தட்டில் உள்ள உணவு எப்படி, எவ்வாறு உருவாகிறது என்று குழந்தைகள் மட்டுமல்ல வளர்ந்தவர்களும் தெரிந்து கொள்ள இது போன்ற வேளாண்மைச் சுற்றுலாக்கள் பயன்படும். இந்த வகைச் சுற்றுலாக்கள் தவிர்க்க முடியாததாக வருங்காலத் தலைமுறைக்கு ஆகிவிடும். காரணம் நகர வாழ்க்கையும் தனிமைப்படுத்தப்பட்ட சூழலும் விவசாயி பற்றி அறிந்திராதவர்களுக்கும் புத்துணர்வு ஊட்டும். எனவ

வேளாண்மை விவசாயச் சுற்றுலா என்பது விரைவில் வளர்ந்த ஒரு துறையாகிவிடும். சாதாரண விவசாய மக்களின் உழைப்பை அங்கீகாரம் செய்யும் ஒரு விஷயமாகவும் மாறிவிடும்.

- சுப்ரபாரதிமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.