தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மதுரை மாவட்ட அமைப்பு சார்பில் கடந்த சனிக்கிழமை மாலை மதுரை, மணியம்மை மழலையர் பள்ளியில் வரலாற்று ஆய்வரங்கம் நடந்தது. மன்றத்தின் மதுரை மாவட்டத் துணைத் தலைவர் கவிஞர் ஜி. மஞ்சுளா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பேரா. பா. ஆனந்த குமார் வரவேற்புரை நல்கினார். மதுரை அமெரிக்கன் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் செ. போத்திரெட்டி ‘இந்திய விடுதலைப் போரில் புரட்சியாளர்களின் பங்கு’ என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் வங்காளம் இந்திய விடுதலைக்கு முன்னோடியாக இருந்தது. காந்தி - இர்வின் ஒப்பந்தத்தில் காந்திஜி கையெழுத்திட்டதால்தான் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் கொல்லப்பட்டனர். இந்தியர் பத்திரிகையையோ அச்சுக் கூடத்தையோ நடத்த முடியாச்சூழலில் முதன்முதலில் ஆங்கிலேயர், பாதிரிமார் அல்லாத இந்தியர் ஒருவர் இராசாராம் மோகன்ராய் மட்டுமே பத்திரிகை தொடங்கினார். ஜி. சுப்பிரமணிய ஐயர் அதன்பிறகு ‘இந்தியா’வைத் தொடங்கினார். மகாகவி பாரதியாருக்கு மொழிபெயர்க்கும் பணி அங்கே வழங்கப்பட்டது. மகாகவி வங்கத்தின் பேச்சாளர், சமூகப் புரட்சியாளர் ‘பிபின் சந்திரபாலை’ அழைத்து திருவல்லிக்கேணிக் கடற்கரையில் பேச வைத்தார். கேரளம் போன்ற பிற மாநிலங்களில் காங்கிரஸ் தேசிய இயக்கத்திற்குள் சோஷலிஸ இயக்கம் செல்வாக்குப் பெற்றது போல் தமிழகத்தில் செல்வாக்குப் பெறவில்லை. இந்திய விடுதலை வேள்வியில் இடதுசாரிகளின் பங்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு செய்திகளைக் கூறினார். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.

மாவட்டத்தலைவர் செல்லா, வருகின்ற டிசம்பர் மாதம் பாரதி விழாவும், ஜனவரி மாதம் ஈழத்து இலக்கியப் பதிவுகள் பற்றிய கருத்தரங்கமும், பிப்ரவரி மாதம் பேரா. தி.சு. நடராசனின் அமெரிக்கப் பயணம்பற்றிய கூட்டமும் நடைபெறப் போவதாகக் குறிப்பிட்டார். மாவட்டத் துணைச் செயலாளர் கவிஞர் அழகு பாரதி நன்றி நவின்றார்

பா. ஆனந்தகுமார்,
மாவட்டச் செயலாளர்

Pin It