மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகவும் முதற்காப்பியமான சிலப்பதிகாரத்தோடு இணைந்த இரட்டைக்காப்பியமாகவும் அழைக்கப்படுகிறது. இக்காப்பியம் அதன் பதிகத்தாலும் அதற்குப் பிந்தைய நூல்களுள் அதனைப் பற்றி வரும் குறிப்புகளாலும் ‘மணிமேகலைத் துறவு’ என்று அறியப்படுகிறது. சிலம்பும் மேகலையும் வடமொழிப் பெருங்காப்பிய இலக்கணங்களுக்குள் அடங்காதனவாகவும் பத்துப்பாட்டின் தொடர்ச்சியில் வளர்ந்த தொடர்நிலைச் செய்யுட்களாகவும் விளங்குகின்றன. சிலப்பதிகாரத்திற்குள் சமயங்களின் மோதல்கள் இருந்தாலும் அது சமயக்காப்பியம் என்று அழைக்கப்படவில்லை. ஆனால், மணிமேகலை வெளிப்படையாகத் தன்னை ஒரு பௌத்த சமயக் காப்பியமாக அறிவித்துக் கொண்டுள்ளது. அதனால்தான் காப்பியத்தின் பெயரிலேயே ‘துறவு’ என்பது இடம்பெற்றுள்ளது. காப்பியம் அல்லது தொடர்நிலைச்செய்யுள் என்னும் இலக்கிய வகை நீண்ட விவரணைத் தன்மை கொண்ட ஓர் எடுத்துரைப்புப் பனுவல் (Narrative text), தன்னுணர்ச்சிப்பா (Lyric) X எடுத்துரைப்பியல்பா (Narrative) என்கிற கவிதையின் வகைமை சார்ந்த வேறுபாடுகளுக்கு அப்பால் இன்று எடுத்துரைப்பியல் (Narratology) என்பது தனிவொரு திறனாய்வுக் கொள்கையாக வளர்ச்சியடைந்துள்ளது. இது கதைமைப் பண்பு கொண்ட பனுவல்களின் எடுத்துரைப்புக் கட்டமைப்பினையும் நோக்குநிலையினையும் ஆராய்வதாக உள்ளது. இது அமைப்பியலில் இருந்து கிளைத்த ஒரு தனிக்கொள்கையாக விளங்குகிறது.

விளாதிமீர் பிராப்பும் ருசிய உருவவியலாளர்களும் அவர்களுக்குப் பின்னால் வந்த அமைப்பியலாளர்களும் எடுத்துரைப்பியலைக் கொள்கையாக்கம் செய்துள்ளனர். எடுத்துரைப்பியல் கொள்கை (Narratology) ஒரு இலக்கியப் பனுவலின் புறக்கட்டமைப்பினையும் அழகியல் விவரணைகளையும் ஆராய்வதோடு அல்லாமல் அதற்குள் தொழிற்படும் அரசியலையும் ஆராய்கிறது. எடுத்துரைப்பியலின் அரசியல் (Politics of Narration), ஒரு பனுவலுக்குள் செயல்படும் சமூகம், பண்பாடு, சமயம் சார்ந்த அதிகார அரசியலையும் ஆதிக்கப் பண்பாட்டுக் கருத்தியல் மற்றமைப் (other) பண்பாட்டுக் கருத்தியல்களை எதிர்கொள்ளும் விதத்தினையும், இடையீடு செய்யும் விதத்தினையும் ஆராய்கிறது. ஒவ்வோர் எடுத்துரைப்புப் பனுவலும் அரசியல் அடையாளம், நோக்குநிலை, கருத்தியல் ஆகியவற்றை வடிவமைப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எடுத்துரைப்பு வடிவங்கள் மனிதசிந்தனையை ஆராய்வதற்கான கருவியாகவும் விளங்குகின்றன. இக்கருத்துநிலைகளின் அடிப்படையில் மணிமேகலைக் காப்பியத்தின் எடுத்துரைப்பியலில் தொழிற்படும் கருத்தியல் (Ideology), நோக்குநிலை (Perspective), அரசியல் அடையாளம் ஆகியவற்றை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

manimekalai 433எடுத்துரைப்பியல் கருத்தாக்கத்தின் முதன்மை முக்கூறுகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுவர்.

1.நிகழ்வுகள், கதைமாந்தர்கள் மற்றும் பின்னணி.

இக்கூறானது எடுத்துரைப்புக்குள் பொதிந்துள்ள எல்லா நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாகவும் அந்நிகழ்வுகளுக்குள் செயல்படும் முதன்மை ஆட்டக்காரர்களைக் கொண்டதாகவும் அமைகிறது. நிகழ்வுகளும் மாந்தர்களும் நிலவியல், சமூக நிறுவனவெளிக்குள் தகவமைப்பு செய்யப்பட்டுள்ளதை இது கவனப்படுத்துகிறது.

2. நிகழ்வுகளின் தொடர் ஒழுங்கு (Events in Sequence)

3. காரண காரியத் தன்மை (Causuarity) (ஷால்.ஆர்.ஷென் ஹாவ்: 2006: 251)

எடுத்துரைப்பியலின் இம்முக்கூறுகளும் புனைவோடும் யதார்த்தத்தோடும் உறவுகொண்டுள்ளன. இம்முக்கூறுகளின் வாயிலாகவே ஒரு பனுவலுக்குள் தொழிற்படும் அரசியல் அடையாளத்தை, நோக்குநிலையை, கருத்தியலைக் கண்டறிய முடியும்.

மணிமேகலை ஒரு குறிப்பிட்ட சமூக, வரலாற்று, அரசியல் பண்பாட்டுப் பின்புலத்தில் தோன்றிய பனுவல் என்றாலும் அஃது அடிப்படையில் ஒரு புனைவிலக்கியம். சீத்தலைச் சாத்தனார் தனது கால சமூக, சமய, அரசியல், பண்பாட்டு யதார்த்தங்களைப் புனைவின் மூலம் எடுத்துரைப்புப் பனுவலாக மாற்றியுள்ளார். சாத்தனார் வாழ்ந்தகாலத்தில் (கி.பி.4 நூ.ஆ) தமிழகத்தில் பேரரசுகள் எதுவும் உருவாகவில்லை. பல்லவர்களின் எழுச்சியும், களப்பிரர்களின் ஊடாட்டமும் அரசியலில் மேலோங்கி இருந்தன. சமண, பௌத்த அவைதீக சமயங்கள் தமிழகத்தில் உச்சம் பெற்றிருந்தன. வைதீகம் தன் நுழைவிற்காகக் காத்திருந்தது. சாத்தனாரின் காலம், சமய - அரசியல் நிலைமைகள் மாற்றம் கொள்ளும் ஒரு மாற்றிடைக்காலம். இம்மாற்றிடைக்காலத்தில் பௌத்த சமயத்தின் அரசியலைச் சாத்தனார் தன் புனைவின் மொழியில் கட்டமைத்துள்ளார். சாத்தனார் தமது பௌத்த சுயத்தைக் கட்டமைக்கும்போது பிற சமயங்களின் யதார்த்தத்தையும் அவற்றுக்குரிய பிரதிநிதித்துவத்தையும் மறுக்காது வெளிப்படுத்தியுள்ளார். பிற சமயங்களின் இருப்பையும் இயங்கியலையும் நிகழ்வுகளின்வழிப் புனைவாக்கம் செய்யும்போது தமது பௌத்த சமய நோக்குநிலையைத் தவறவிடாது கூர்மையாகப் பதிவு செய்துள்ளார். மணிமேகலைக் காப்பியத்தில் பிற சமயங்களின் கருத்தியல்கள் பகைமை அரசியலாகக் கட்டமைக்கப்படாமல் அவற்றின் கருத்துநிலைகளோடு பௌத்தம் உரையாடி, விவாதித்து வெற்றி பெறுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. கருத்தியல் விவாதங்களெல்லாம் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம், மதுரை, காஞ்சி என்னும் தமிழ் நிலப்பரப்புக்குள்ளும் சோழ மன்னர்களின் ஆட்சிக்குக் கீழும் நிகழ்வனவாகவே புனைவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

மனிதர்கள்- தேவர்கள்- தெய்வங்கள்- பூதங்கள்

காப்பியத்தின் இயங்குவெளியில் (நிலம், காலம்) கதைமாந்தர்களின் பண்புருவாக்கமும் செயல்பாடுகளும் முதன்மையானவை. உலகக் காப்பியங்களில் வீரமிக்க ஆடவர்களே கதைத்தலைவர்களாகப் போற்றப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாட்டார் தொன்மக் கதைகளும் தமிழ்க்காப்பியங்களும் இதற்கு விதிவிலக்கு. சிலம்பு, மேகலை, குண்டலகேசி, நீலகேசி ஆகிய தமிழ்க்காப்பியங்களில் வீரமிக்க ஆடவர்கள், கடவுளர்களுக்குப் பதிலாக பெண் கதைமாந்தர்கள் தலைமைத்துவம் பெறுகின்றனர். காப்பியக்களத்தில் பெண்களே முதன்மை ஆட்டக்காரர்களாக விளங்குகின்றனர். மணிமேகலைக் காப்பியவெளியில் மணிமேகலை, சுதமதி, மாதவி, சித்ராபதி, வயந்தமாலை, இராசமாதேவி, காயசண்டிகை, ஆதிரை, சம்பாபதி, சிந்தாதேவி, சாலி, கோதமை, மருதி, விசாகை, தீவதிலகை, மணிமேகலா தெய்வம் ஆகிய பெண் கதைமாந்தர்களும் அறவணவடிகள், ஆபுத்திரன், உதயகுமரன், காஞ்சனன், எட்டி குமரன், சாதுவன், மாருதிவேகன், தருமதத்தன், ககந்தன், சதுக்கபூதம், துவந்திகன் எனும் கந்திற்பாவை ஆகிய ஆண் கதைமாந்தர்களும் இயங்குகின்றனர். ஆயினும் மணிமேகலை, சுதமதி, உதயகுமரன், இராசமாதேவி, அறவணவடிகள், மணிமேகலா தெய்வம் ஆகியோரே இக்காப்பியத்தின் முதன்மை ஆட்டக்காரர்கள். மணிமேகலைக் காப்பியத்தின் இயங்குதளத்தில் மனிதர்களோடு தேவர்களும் தெய்வங்களும் பூதங்களும் உறவாடுகின்றனர்; ஊடாட்டம் செய்கின்றனர். மணிமேகலா என்கிற கடல்தெய்வம், பூம்புகாரில் உள்ள சம்பாபதி, மதுரைநகரில் உள்ள சிந்தாதேவி, துவந்திகன் எனும் கந்திற்பாவை ஆகிய தெய்வங்களும் காஞ்சனன், காயசண்டிகை, மாருதிவேகன் என்கிற விஞ்சையர்குல தேவகணத்தாரும் நாளங்காடிப்பூதம், சதுக்கப்பூதம் என்கிற பூத கணங்களும் சக்கரவாளக் கோட்டத்தருகேயுள்ள சுடுகாட்டில் பிணங்களைத் தின்னும் பேய்மகளும்(பிரேதர்) மணிமேகலைக் காப்பியத்தில் உலா வருகின்றனர்.

மனித வாழ்க்கைக்குள் பூதம், தெய்வம், தேவர், பிரேதர் ஆகியோரை சீத்தலைச் சாத்தனார் இடையீடும் ஊடாட்டமும் செய்வித்ததற்கான காரணம் யாதெனின் நரகர், பிரேதர்(பேய்கள்), விலங்கு, மனிதர், அசுரர்(பிரமர்), தேவர் என்கிற புத்தசமயக்கருத்தியலான உயிர்களின் பிறப்புச்சுழற்சியை - பிறவிக்காட்சியை - வாசகர்களுக்கு எடுத்துரைக்கும் சமயநோக்குநிலைதான். மறுபிறவி உண்டு என்கிற புத்தசமயக்கருத்தியலை எடுத்துரைப்பதற்காகவே மணிமேகலை மணிபல்லவத்தீவில் ஆபுத்திரனின் மறுபிறப்பாளனான புண்ணியராசனைச் சந்திப்பதாகக் காட்டுகின்றார். அத்துடன் கொலை முதலான பத்துவகைக் குற்றங்களை நீக்கினால் நற்பிறவி கிட்டுமென்று ஆபுத்திரனுக்கு மணிமேகலை பிறப்புச் சுழற்சியை அறிவுறுத்துகிறாள்.

“விலங்கு நரகரும் பேய்களுமாக்கும்

கலங்கஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்

தேவரு மக்களும் பிரமருமாகுதீர்” (25: 41-43)

மானுடக் கதைமாந்தர்களின் படைப்பில் அரசர்- அந்தணர்- வணிகர் வர்க்கத்தின் அதிகார மோதலை, விளையாட்டைச் சீத்தலைச் சாத்தனார் சித்திரிக்கின்றார். வைதீக மதமான பிராமண மதத்தின் பாதுகாவலர்களான பார்ப்பனர்களைச் சாதியத்திற்கு எதிரான புத்தமதத்தைத் தழுவியவர்களாகச் சீத்தலைச் சாத்தனார் சித்திரிக்கின்றார். இதன்மூலம் பார்ப்பன அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது; கீழடக்கப்பட்டுள்ளது. மணிமேகலைக்குச் சேவகம் புரியும் சுதமதி கணவனால் கைவிடப்பட்ட பார்ப்பனப்பெண். சிலம்பில் கண்ணகிக்குத் தோழியாக வரும் தேவந்தியும் பார்ப்பன மகளே. சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையில் பார்வையற்ற பார்ப்பனனின் மனைவியான கோதமையின் கதை விவரிக்கப்பட்டுள்ளது. ‘தேவர் வரம் தருவர் என்று நான்மறை கூறும். எனவே இறந்த என்மகனின் உயிரை மீட்டுத்தா’ என்று கூறிய கோதமைக்கு சம்பாபதி ‘வினைவழி இறப்பு நிகழும் உயிர் வேறு பிறப்பெடுக்கும்’ என்கிற பௌத்த உண்மையை எடுத்துக்கூறுகிறாள். அமுதசுரபியைப் பெற்று பசிப்பிணிபோக்கும் ஆபுத்திரன் சாலி என்கிற பார்ப்பனப்பெண்ணுக்குப் பிறந்து, பசுவினால் பாலூட்டப்பட்டு இளம்பூதி என்கிற பார்ப்பனரால் வளர்க்கப்படுகின்றான். பார்ப்பனர்கள் யாகத்தில் பலியிடுவதற்காக வைத்திருந்த பசுவைத்திருடிச் சென்று பசுவைக் காப்பாற்றுகிறான். உண்மையறிந்து அவனை ‘அருமறை அறியாச் சிறியோனே, பசுவிற்குப் பிறந்தவனே’ எனப் பார்ப்பனர்கள் இழித்துப் பேசும்போது பசுவுக்கும் மானுக்கும் புலிக்கும் நரிக்கும் பிறந்த முனிவர்களைப் பட்டியலிட்டு சாதிய ஏற்றத் தாழ்வைக் கவிழ்க்கிறான். பிறப்பினடிப்படையில் வேறுபாடில்லை என்கிறான்.

“ஆன்மகன் அசலன் ; மான்மகன் சிருங்கி

புலமகன் விருஞ்சிரைப் புரையோர் போதிலும்

நரிமகன் அல்லனோ கேசகம்பாளன்

ஈங்கிவர் நுங்குலத்து இருடிகளென்று

வீங்குயர் பெருஞ்சிற ப்புரைத்தலும் உண்டால்” (13:63 -67)

பார்ப்பன வர்க்கத்திற்கான எதிரியை அதன் சொந்த சமூகத்திலிருந்தே சீத்தலைச் சாத்தனார் உருவாக்கியுள்ளார். புத்தமதம் வணிகர்கள் ஆதரவுபெற்ற மதம் என்பதால் மணிமேகலையில் அமுதசுரபியில் பிச்சையிட்ட ஆதிரையின் கணவனான சாதுவன், விசாகையின் கணவனான தருமதத்தன் ஆகிய வணிகர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் கிளைக்கதைகளாக விரித்துப் பேசப்பட்டுள்ளன. அதேபோல் 25ஆவது காதையில் ஆபுத்திரனை மணிபல்லவத்தீவில் அறியாது விட்டுச்சென்ற ஒன்பது வணிகச் செட்டிகள் திரும்ப மணிபல்லவத்தீவு வந்து ஆபுத்திரன் இறந்தது அறிந்து தாமும் உண்ணாதிருந்து தமது உயிரினை நீத்தனர். அவர்களது உடலெழும்புகள் இது என்று மணிமேகலை காட்டுகின்றாள். இந்நிகழ்வின் மூலம் வணிகச்செட்டிகளின் நேர்மையும் பெருமையும் பேசப்பட்டுள்ளது. அரசர்கள் ஆளும் வர்க்கத்தினராக இருந்தாலும் அரசியல் பிழைத்தால் தண்டனைக்குரியவர்கள் என்ற சிலம்பின் கருத்தியல் மணிமேகலையிலும் தொடர்கிறது. காவிரிப்பூம்பட்டினத்தை ஆண்ட ககந்தன் தனது மூத்தபுதல்வன் விசாகை என்னும் வணிகப்பெண்ணை காமவயப்பட்டு தீங்கிழைத்தமைக்காக வாளால் வெட்டிக் கொல்கிறான். அதேபோன்று இளைய புதல்வனையும் மருதி என்கிற பார்ப்பனமகளைத் தீண்ட முயற்சித்தமைக்காக வாளால் வெட்டிக் கொல்கிறான். அறத்தின் முன்னர் அனைவரும் சமம் என்கிற நீதி வைதீகத்தின் வருணநீதி முறைமைக்கு எதிராக இங்கு முன்வைக்கப்படுகிறது.

நிகழ்வுகளின் தெரிவும் தொடரொழுங்கும்

காப்பியம் பல்வேறு நிகழ்வுகளைத் தொகுத்தும் தொடர்புபடுத்தியும் தருவதற்கான நீண்ட விவரணைத்தன்மை கொண்ட ஓர் இலக்கியவகை. இளங்கோவடிகளுக்கும் சீத்தலைச்சாத்தனாருக்கும் முன்னர் காப்பியம் என்ற வகையில் இன்னின்ன நிகழ்வுகளை இப்படித்தான் பாடவேண்டுமென்று பெருங்காப்பிய இலக்கண விதிகள்- கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. எனவே தமிழ்த் தொடர்நிலைச் செய்யுள் மரபில் எழுதப்பட்ட அக்காப்பியப் புலவர்களுக்கு காப்பிய நிகழ்வுகளைத் தெரிவுசெய்வதிலும் அதை ஒழுங்கமைப்புச் செய்வதிலும் படைப்புச் சுதந்திரம் இருந்திருக்கின்றது. ஆனால், ஒரு பனுவலுக்குள் வரும் நிகழ்வுகளைத் தெரிவு செய்வதற்குப் பின்னாலும் படைப்பாளியின் நோக்குநிலை (Perspective) இருக்கிறது. அந்நோக்குநிலை உறுதியாக ஓர் அரசியல் சார்புநிலை கொண்டது. இனி மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார் தெரிவுசெய்துள்ள - ஒழுங்கமைவு செய்துள்ள நிகழ்வுகளுக்குப் பின்னாலுள்ள சமய அரசியலைக் காண்போம்.

மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் முதல் நிகழ்வு இந்திரவிழா. கொண்டாட்டத்துடன் தொடங்கும் இந்நிகழ்வு - குறிப்பொருள் - மனிதர்களும் தேவகணங்களும் தெய்வங்களும் சந்திக்கின்ற ஒரு விரிந்த களத்தைச் சமைக்கின்றது. நீண்ட விவரணைகளுக்கு இடமளிக்கக்கூடிய ‘விழா’ எனும் குறிப்பொருளுக்குள் பல துணைமைக் குறிப்பொருள்கள் - துணை நிகழ்வுகள் - இடம்பெற்றுள்ளன. சிலம்பில் இரண்டு காதைகளில் விவரிக்கப்பட்ட இந்திரவிழா நிகழ்வுகள் மணிமேகலையில் விழாவறைக்காதை, ஊரலர் உரைத்த காதை, மலர்வனம் புக்க காதை, பளிக்கறை புக்க காதை, மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை என ஐந்து காதைகள் வரை நீள்கிறது. இந்திரவிழாக் கொண்டாட்டம், முரசறைதல், வீடுகள்- வீதிகள் அலங்கரிப்பு, பல்வகை கோயில்வழிபாடுகள், உரைநிகழ்வுகள் என்று சிலப்பதிகாரப் பாணியிலேயே மணிமேகலையிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்திரவிழாவில் மணிமேகலை கூத்து நிகழ்த்தாமையால் ஊரில் அலர் எழுகிறது. காப்பியப் பனுவலின் கதைப்பின்னலுக்குள் சிக்கல் கட்டமைக்கப்படுகின்றது. கோவலன் - கண்ணகியின் இறப்புச் செய்தியையறிந்த மணிமேகலையின் கண்களில் பெருகிய கண்ணீர் அவள் தொடுத்த மாலையைக் களங்கப்படுத்துகிறது. இதனால் மாதவி மணிமேகலையை ‘நிகர்மலர்களை நீயே கொணர்வாய்’ என்கிறாள். அப்போது சுதமதி புகார் நகரத்திலுள்ள பூங்காக்களையும் அங்கிருக்கும் ஆபத்துகளையும் எடுத்துரைத்து புத்தபகவானின் ஆணையில் பன்மரம் பூக்கும் உவவனம்தான் மலர்கொய்யப் பொருத்தமானது என்று கூறுகிறாள். உவவனம் நோக்கி மணிமேகலையும் சுதமதியும் மணித்தேர் வீதியில் செல்கையில் பல காட்சிகளைச் சீத்தலைச்சாத்தனார் காட்டுகின்றார்; கட்டமைக்கின்றார்.

முதல் காட்சியில் அருகன் கோட்டத்து வாழும் சமணமுனிவனிடம் தெருவில் செல்லும் குடிகாரன் ஒருவன் வம்பிழுப்பதாகக் காட்டுகின்றார். சமணமுனியைச் சாத்தனார் இப்படி வருணிக்கின்றார்: ‘நாணத்தையும் ஆடையையும் நீத்தவன், கண்ணாற் காணவியலாத சிற்றுயிர்க்கும் இரக்கம் காட்டிவருந்துபவன், உண்ணா நோன்பிருப்பவன், யானையைப் போல் புழுதி படிந்தவன்’ இவ்வருணனையில் ஒரு பகடி இருக்கிறது. அத்தோடு அக்குடிகாரன் ‘அழுக்கு நிறைந்த உன் உடலில் புகுந்த உயிர் காற்றுப்புகாத அறையில் துன்புறுவோர் போல் வருந்துகிறது. அவ்வருத்தம் போக்க இம்மைக்கும் மறுமைக்குமான இறுதி இன்பத்தை அளிக்கும் தன்மையை உனக்கு அளிக்கிறேன். ‘தென்னையில் விளைந்த பூங்கள்ளில் கொலை இல்லையே’ என வினவுகிறான். இக்காட்சியில் சாத்தனார், தம் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் பௌத்த‘சுய’த்திற்கு எதிரான ‘மற்றமை’யாக சமணம் இருந்தது என்கிற யதார்த்தத்தைக் காட்டுவதோடு நில்லாமல் சமணத்தைப் பகடிசெய்து அதனை வம்புக்கு இழுக்கிறார்; சீண்டுகிறார். விழவு ஆற்றுப்படுத்தப்பட்ட பெருவீதியில் சந்தனமும் திருநீறும் பூசிய பித்தன் ஒருவன் விழுந்து அழுது சுழன்று அரற்றும் காட்சி, பேடியின் கூத்து, மாடமாளிகைகளில் வரையப்பட்ட கண்கவர் ஓவியங்கள், விளையாடும் சிறுவர்கள் ஆகிய காட்சிகளுக்கு இடையில் இப்படி ஒரு காட்சியை சாத்தனார் வைத்துள்ளார். இவற்றைத் தொடர்ந்து உவவனத்தின் இயற்கை எழில் சுதமதியின் நோக்குநிலையில் விவரிக்கப்படுகின்றது.

மணிமேகலையும் சுதமதியும் உவவனத்தில் இருக்கையில் காவிரிப்பூம்பட்டின நகரவீதிகளில் புயற்காற்றில் சுழன்றாடும் மரக்கலம் போல் காலவேகம் எனும் பட்டத்து யானை மதம்பிடித்து சுற்றித் திரிகிறது. நீலநிற மலைபோல் சுற்றித்திரியும் அந்த யானையின் மதத்தை அடக்கி ‘கடக்களிறடக்கிய’ மறவனாக உதயகுமரன் வீதியில் உலா வருகிறான். மணிமேகலைமீது மையல் கொண்ட அவன் அவளைத்தேடி உவவனம் வருகிறான். சுதமதி மணிமேகலையைப் பளிக்கறையில் ஒளிக்கிறாள். சுதமதியிடம் உதயகுமரன் ‘வித்தியாதரனால் சமணப்பள்ளியில் கைவிடப்பட்ட நீ இங்கு மணிமேகலையோடு ஏன் வந்தாய்’ என வினவ அவள் தனக்கு முன்னர் நேர்ந்த நிகழ்வொன்றை விவரிக்கிறாள்.அந்நிகழ்வில் சமணம் மீண்டும் எதிர்நிலைப்படுத்தப்படுகின்றது. பின்னோக்காக அந்நிகழ்வு இப்படி எடுத்துரைக்கப்படுகின்றது: ‘இரந்துண்ணும் பார்ப்பனனாகிய என் தந்தையை ஒருநாள் மாடுகுத்தி வயிற்றைக் கிழிக்க, அவன் குடலைக் கையிலேந்தி, நான் இருந்த இடம் வந்து ‘சமணீர்காள் உம் சரண்’ என்று கூற சமணர் வெகுண்டு என்னையும் வெளியேற்றினர். வீதியில் நாங்கள் புலம்பித் தவித்தபோது ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியவனாகிய சங்க தருமன் எனும் புத்தமுனி எம்மை ஆதரித்து எம் இடர்நீக்கி, புத்த முனிவர்கள் வாழும் பள்ளியில் அடைக்கலப்படுத்தினான்’. இங்கும் சமணம் இரக்கமற்றது, பாதுகாப்பற்றது; புத்தம் அரவணைத்து ஆதரிப்பது என்கிற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இப்பின்னோக்கு நிகழ்வைக் கட்டமைப்பதன் மூலம் சமணம் மீண்டும் வம்பிழுக்கப்படுகிறது. சமணத்தைப் போன்று ஆபுத்திரன் கதை நிகழ்வு மூலம் வைதீக பார்ப்பன மதத்தைக் கேள்விக்குட்படுத்தி கவிழ்த்தமை முன்னர் விளக்கப்பட்டது.

பளிக்கறை புக்க காதையிலும் அதனைத் தொடர்ந்து வரும் காதைகளிலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகள் மணிமேகலைக்கு நுகர்வு,உணர்வு, பிறப்பு, பிணி, மூப்பு, சாவு, அவலம், அரற்று, கவலை, கையறு என்கிற துக்கம் எனும் நோய்க்கான குறிகளையும் (துக்க உற்பத்தி) அதற்கான காரணங்களையும் (பேதமை, செய்கை, அவா, பற்றுக்கருமம்) காட்டி அவளைத் ‘துக்கநிவாரணம்’ எனும் பற்றற்ற நிலைக்கும் பவத்திறத்தை அறுக்கும் நோன்புநிலைக்கும் கொண்டு செல்கின்றன. இந்திரவிழாவைப் பின்புலமாகக் கொண்டு அமைந்துள்ள முதல் ஐந்து காதைகளும் வாழ்வின் கொண்டாட்டத்தை, இனிமையை, மையப்படுத்திய நிகழ்வுகளால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. ஆறாவது காதையான சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில் இடம்பெறும் நிகழ்வுகளின் தெரிவில் ஒரு மடைமாற்றத்தன்மை காணப்படுகிறது.

கொண்டாட்டங்களுக்கும் களிப்பிற்கும் மாறான ஓர் உலகம் அங்குச் சித்திரிக்கப்படுகிறது. அவலத்திற்கு உரிய சுடுகாட்டு வருணனை, அக்காதையை ஆக்கிரமித்துள்ளது. பிணங்களைச் சுடுவதற்கும் இடுவதற்கும் உரிய அக்காடு அச்சந்தரத்தக்க காட்சிப்படிமங்களுடன் வருணிக்கப்படுகிறது. பெரிய பலிபீடமும் நவகண்டத்தால் வெட்டப்பட்ட தலைகள் தொங்கும் நெடுமரக்கிளைகளையுடைய மரங்களும் கொண்ட கொற்றவை கோட்டம், பிணங்களில் இருந்து பற்றிப்படர்ந்து கொடிபோல் மேலெழும் தீக்கொழுந்து, நிணத்தோடு இறைச்சிகளை உண்டு மகிழும் பறவைகள், பிணந்தின்னும் மாக்கள், நெருப்பிட்ட கொள்ளிச்சட்டி, பாடை, அறுத்தெறிந்த மாலைகள், உடைக்கப்பட்ட கொள்ளிக்குடங்கள், சிதறிக் கிடக்கும் வாய்க்கரிசி, கொளுந்து விட்டெறியும் சடலங்கள், புழுப்பிடித்துக் கிடக்கும் பிண்டம், செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட பாதத்தைக் கவ்விச் செல்லும் நரி, மேகலை நீங்கிய அல்குலைக் குடைந்துண்ணும் கழுகு, காப்பணிந்த கையைக் கவ்வித்திரியும் நாய், இளவனமுலையைக் கவர்ந்து செல்லும் பருந்து, முகில், கயல், முகிலம், முருங்கை மலர், முத்து என வருணிக்கப்பட்ட பரந்த கூந்தலையுடைய பெண்ணுடலைப் பிய்த்துண்ணும் பேய் என்று உலகின் இன்னாத பக்கம் காட்டப்படுகிறது. சாப்பறையின் முழக்கமும், மாந்தரின் அழுகுரலும், நரியின் கூக்குரலும், ஆந்தைகளின் அலறலும், கோட்டானின் குரலும், நம் காதுகளில் ரீங்கரிக்கும்படி வருணிக்கப்படுகின்றன. இளமையும் அழகும் கொண்டதாக வருணிக்கப்படும் மனிதவுடல் இங்கு எள்ளி நகையாடப்படுகிறது, அவல முடிவைக் கொண்டதாகக் காட்டப்படுகிறது. இக்காட்சி காப்பியத்தில் வரும் மணிமேகலைக்கு மட்டுமல்லாமல், பனுவலை வாசிப்போருக்கும், மனிதவாழ்வின் அபத்தத்தை உணர்த்தி சுய உணர்தலுக்கு வழிவகுக்கிறது.

 ஏழாவது காதை முதல் தொடர்ந்து காப்பியத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் யாவும் உலகப்பற்றறுத்து பிறவிக்காட்சியை உணரச்செய்து பிறப்பறுக்கும் துறவை நோக்கி மணிமேகலையைத் துரத்தியடிக்கின்றன. மணிமேகலையைத் துறவை நோக்கி வழிநடத்தும் வாயில்களாக வானுறை தெய்வம் மணிமேகலையும் புத்த தருமம் உணர்ந்த அறவண அடிகளும் அமைகின்றனர். இவ்வாயில்களோடு புத்தரின் பாதங்கள் பொறிக்கப்பட்ட பாதபீடிகையும் மணிமேகலையை வழிநடத்திச் செல்கின்றன. கதைநிகழ்வுகள் யாவும் புத்தசமயத்தோடு நேரடித்தொடர்புடைய இம்மூவரின் நோக்குநிலையிலேயே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. முன்னரே குறிப்பிட்டது போல, காப்பிய நிகழ்வுகள் யாவும் பௌத்த சமயத் தத்துவத்தில் முன்மொழியப்பட்ட நான்கு உண்மைகளான துக்கம், துக்கஉற்பத்தி, துக்க நிவாரணம், துக்கநிவாரண மார்க்கம் ஆகியவற்றைப் போதிக்கும் வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வுகளை உபதேசமயமாக்கல்

பொதுவாகக் காப்பியங்களில் இடம்பெறும் கதைநிகழ்வுகள் யாவும் பெரிதும் காப்பியப்புலவனின் எல்லாம் அறிந்த இறை நோக்குநிலையில் படர்க்கைக் கூற்றில் விவரணை செய்யப்படும். சிலவிடத்துப் பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று உரையாடும் பகுதி புலவனால் விவரிக்கப்படும். காப்பியப்புலவர் கதைசொல்லியாகவும் வாசகர் கதை கேட்குநராகவும் இருப்பர். ஆனால், மணிமேகலையில் முதல் நான்கு காதைகளுக்குப் பின்னர் வரும் நிகழ்வுகள் ஒருவர் உரைக்க இன்னொருவர் கேட்கும்படியாக கேட்டலும் கிளத்தலுமான சொல்லாடல் (Discourse) தன்மையில் எடுத்துரைப்புச் செய்யப்பட்டுள்ளன. சுதமதி, மணிமேகலை, உதயகுமரன், மாதவி, ஆபுத்திரன் ஆகியோரின் முற்பிறப்புகள் கந்திற்பாவை, மணிமேகலா தெய்வம், அறவணவடிகள், சாதுவன் ஆகியோரால் உரைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஐந்தாம்காதைக்குப் பின்னர் சாத்தனாரால் விவரிக்கப்படும் நிகழ்வுகள் பெரிதும் அறம் உரைத்தலாக அமைந்துள்ளன. புத்த அறத்தை, தத்துவத்தை, உரைப்பதற்காகவே மணிமேகலா தெய்வம், அறவணவடிகள், கந்திற்பாவை, மணிமேகலை ஆகிய கதைமாந்தர்களையும் காப்பிய நிகழ்வுகளையும் சாத்தனார் கட்டமைத்துள்ளனர்.

மணிமேகலைக் காப்பியத்தில் பாத்திரங்களுக்கு இடையில் இடம்பெறும் உரையாடல்கள் இருவரது பேச்சாக இல்லாமல் ஒருவரது உபதேசமொழியாகவே அமைந்துள்ளன. உரைக்குநர் அல்லது மொழிபவரின் உபதேச மொழிகளை - அற உரைகளைக் கேட்குநர் எவ்வித எதிர்வினையும் இல்லாமல் அடிபணிந்து ஏற்றுக் கொள்பவர்களாக சம்மதம் தெரிவிப்பவர்களாகப் படைக்கப்பட்டுள்ளார். உரைக்குநருக்கும் கேட்குநருக்கும் இடையிலான சொல்லாடல் உரைக்குநரின் நோக்குநிலையில் ஒருவழித்தன்மையினதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. உரைக்குநர் கேட்குநரைச் ‘சுதமதி கேளாய், கேளாய் இளங்கொடி மாதே, மாதேவி கேளாய், இன்னும் கேளாய், மறவாதிது கேள்’ என காப்பிய மாந்தர்களைக் கேட்கச் சொல்லி உரைப்பதாக மணிமேகலைக் காப்பியம் நெடுகிலும் பௌத்தசமய அறங்கள், பௌத்தசமயத் தத்துவங்கள் எடுத்துரைப்புச் செய்யப்பட்டுள்ளன.

25ஆவது காதையான ‘ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை’ தருமசாவகனின் அறவுரையை புண்ணியராசன்(ஆபுத்திரன்) கேட்கின்ற காட்சியோடு தொடங்குகிறது. இவ்வாறு சீத்தலைச் சாத்தனார் காப்பிய நிகழ்வுகளை உபதேசமயமாக்கியுள்ளார். இதற்குக் காரணம் புத்தசமயத்தில் சமயப்போதனை அல்லது உபதேசம் முக்கிய இடம் பெறுகிறது. புத்தர் ஞானம் பெற்றபிறகு தான் கண்டறிந்த உண்மையைத் தனது சீடர்களுக்குப் போதிக்கிறார். அவர் சாரநாத் எனும் இடத்தில் முதலில் போதித்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் உபதேசம் செய்கிற காட்சியைப் புத்தசமயக்கலை சிலையாக வைத்துள்ளது. புத்தசமயத் துறவிகளும் புத்தசமயக் கருத்துகளைப் பெரிதும் உபதேசங்கள் வாயிலாகவே மக்களிடம் பரப்புரை செய்துள்ளனர். புத்தசமயத் தத்துவங்களும் புத்தஜாதகக் கதைகளும் நெடுங்காலமாக வாய்மொழியாகவே பரப்பப்பட்டுள்ளன. புத்தத்தில் சமய அறிவு என்பது பயிலுவதை விட உபதேசங்கள் வழியே பெறப்பட்டுள்ளன. புத்தசமயத் தத்துவத்தைப் (தருமம்) போதிப்பது (தம்மதேசனா) உயர்தொண்டாகக் கருதப்பட்டது .

மணிமேகலையில் இடம்பெறும் உபதேசமொழிகள் வாயிலாக பௌத்த சமயத்தின் அறுவகைப் பிறப்பு(விலங்கு,பேய்,நரகர்,தேவர், மக்கள்,பிரமர்), ஐம்பெருங் குற்றங்கள் (காமம், கொலை, கள், பொய், களவு), உயிர்களின் பன்னிரு நிதானங்கள்(பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு முதலியன) ஆகிய புத்தசமயக் கருத்தியல்களோடு புத்தசமயத்தின் தருக்கவாதமும் (அளவைமுறை) காப்பிய மாந்தர்கள்வழி அறவுரைகளாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு யாக்கை நிலையாமையும் உண்டி கொடுக்கும் உயர் அறமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உபதேச மொழிகள் ‘அறம்’, ‘தருமம்’ எனவும் சுட்டப்படுகின்றன.

சுதமதி உதயகுமரனுக்கு உபதேசித்தது, சம்பாபதி தெய்வம் கோதமை எனும் பார்ப்பனிக்கு உபதேசித்தது, மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு உபதேசித்தது, தீவதிலகை மணிமேகலைக்கு உபதேசித்தது, சாதுவன் நாகர்தலைவன் குருமகனுக்கு உபதேசித்தது, மணிமேகலை உதயகுமரனுக்கு உபதேசித்தது, விசாகதத்தை தருமதத்தருக்கு உரைத்தது, வாசந்தவை இராசமாதேவிக்கு உரைப்பது, மணிமேகலை இராசமாதேவிக்கு உரைத்தது, அறவணஅடிகள் இராசமாதேவிக்கு உபதேசித்தது, தருமசாவகன் புண்ணியராசனுக்கு உபதேசித்தது, அறவணவடிகள் மணிமேகலைக்கு உபதேசித்தது என மணிமேகலைக் காப்பியத்தில் பன்னிரெண்டு உபதேச மொழிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, உபதேசித்தல் மணிமேகலையில் திரும்பத் திரும்பத் தொடர்ந்து மறித்துவரும் பொருட்கூறாக - வினையலகாக இடம்பெற்றுள்ளது. இவ்வுபதேசங்கள் வாயிலாக காப்பிய மாந்தர்கள் ஞானம் பெறுகின்றனர். பாத்திரங்கள் தம்முற்பிறப்பை - பிறவித்தொடர்ச்சியை - உணர்தல் ஞானத்தின் திறவுகோலாகக் காட்டப்படுகிறது. சுதமதி, மணிமேகலை, மாதவி, புண்ணியராசன் ஆகியோர் தம்முற்பிறப்பை உணர்ந்தாலும் மணிமேகலை ஒருத்தியே பூரணஞானம் பெறுகின்றாள்.

சுதமதி, உதயகுமரனுக்கு யாக்கை நிலையற்றது, வினைக்கு(கருமம்) விளைநிலமாக இருப்பது, குற்றங்களுக்குக் கொள்கலமாக இருப்பது, கவலை, அவலம், முதலியன நீங்கா உள்ளத்தைத் தன்னிடம் உடையது என்கிற பௌத்த சமய உண்மையை உணர்த்துகிறாள்.

வினையின் வந்தது;வினைக்குவிளைவு ஆயது;

புனைவன நீங்கின், புலால்புறத் திடுவது;

மூத்து விளிவு உடையது; தீப்பிணி இருக்கை,

பற்றின் பற்றிடம்;குற்றக் கொள்களம்;

புற்றடங்கு அரவிற் செற்றிச் சேக்கை

அவலம்,கவலை, கையாறு,அழுங்கல்,

தவலா உள்ளம் தன்பால் உடையது;

மக்கள் யாக்கைஞ்.   (4:113-120)

சம்பாபதி தெய்வம் மகனை இழந்த கோதமை என்னும் பார்ப்பனிக்குப் போன உயிர் திரும்பி வராது, அது வினைப்பயன் அடிப்படையில் பிறப்பெய்தும் என்றுரைப்பதோடு நான்மறை அந்தணர்நூல் உரைக்கும் ‘தேவர்வரம் தருவர்’ எனும் கோதமையின் நம்பிக்கையை தெய்வகணங்களையும் அரூப உரூப பிரமர்களையும் அழைத்துப் பொய்யென நிரூபிக்கிறாள். வணிகர்களோடு பொருளீட்டச் சென்ற சாதுவன் நடுக்கடலில் மரக்கலம் சிதைய, மரத்துண்டைப்பற்றி நக்கசாரணர் நாகர் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். அங்கு நாகர் தலைவனான குருமகனைச் சந்தித்து அவன் மொழியில் உரையாடி அவனுக்கு அறம் உரைக்கிறான். மயக்கும் கள்ளையும் மனிதர்களையும் உண்ணும் குருமகனுக்குக் கள்ளுண்ணாமையையும், கொல்லாமையையும், பிறப்புண்மையையும் வினைப்பயன் அடிப்படையில் நல்லுலகம், அருநரகம் மனிதர்கள் அடைவர் ஆகிய சமய உண்மைகளையும் எடுத்துரைக்கின்றான்.

“மயக்கும் கள்ளும், மன்உயிர் கோறலும்

கயக்குஅறு மாக்கள் கடிந்தனர் கேளாய்

பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும்,

உறங்கலும், விழித்தலும், போன்றது உண்மையின்,

நல்அறம் செய்வோர் நல்உலகு அடைதலும்,

அல்அறம் செய்வோர் அருநரகு அடைதலும்ஞ்” (15:84-89)

இவ்வறவுரையைக் கேட்ட நாகர் தலைவன் உடம்பைவிட்டு உயிர் எவ்வாறு போகும் எனச் சினத்துடன் கேட்க அதற்குச் சாதுவன் “உடம்பு இங்கிருக்க உயிர் பல காதங்கள் கடந்து செல்வதை நீ கனவில் காண முடியும்” என்று பதிலுரைத்து அவனை ஏற்கச் செய்கிறான்.

‘பிறந்தோர் இறத்தலும், இறந்தோர் பிறத்தலும்’ எனும் புத்தசமய உண்மையைச் சம்பாபதியும், சாதுவனும் பிறர்க்குரைத்தது போல மணிமேகலையும் உதயகுமரனுக்கு உபதேசிக்கிறாள். ஊரார் பழிச்சொல்லால் தன்னைப்பிரிந்து சென்ற அத்தைமகன் தருமதத்தன் மீண்டும் வந்தபோது விசாகை அவனுக்கு ‘இளமையும், யாக்கையும் செல்வமும் நிலையானதல்ல, அறம்தான் உயிர்க்குத் துணையாகும் என அறம் உரைக்கிறாள்.

“இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா

வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா;

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்;

மிக்க அறமே விழுத்துணை ஆவது;

தானம் செய்..”            (21:135-139)

உதயகுமரனின் தாயான இராசமாதேவி வாசந்தவை, மணிமேகலை, அறவணவடிகள் ஆகிய மூவரிடம் உபதேசம் பெறுவதாகச் சாத்தனார் காட்டுகிறார். உதயகுமரனின் மறைவிற்காக வருந்திக் கொண்டிருந்த இராசமாதேவியிடம் அரசன் கிள்ளிவளவன் வேண்டுதலால் வாசந்தவை எனும் மூதாட்டி “உன்மகன் அரசமரபிற்கேற்ப தன்மண் காக்கும்போதோ பிறர்மண் கவரும்போதோ உயிர் நீக்கவில்லை. உன்மகன் இறந்ததன் காரணத்தைச் சொல்வதற்கு நா எழவில்லை, அது நாணத்திற்குரியது. எனவே, அரசர்முன் உன் துன்பத்தைக் காட்டாதே” என அரச அறத்தை எடுத்துரைக்கிறாள். இவ்வறிவுரை காரணமாக இராசமாதேவி பிக்குணி கோலத்து மணிமேகலை பின்சென்ற உதயகுமரன் “அறிவு திரிந்தோன், அரசியல்தான் இலன்” என்று கூறுகிறாள். இவ்வாறு தன் தவறை உணர்ந்த இராசமாதேவி மணிமேகலையிடம் “பொன்னேர் அனையாய், பொறுக்க” என்று மன்னிப்புக் கேட்டு வணங்கியபோது, மணிமேகலை அவளுக்கு உயிரின் பிறப்புச்சுழற்சியை, வினைத்தொடர்ச்சியை எடுத்துரைக்கின்றாள். இராசமாதேவியை நோக்கி “நீ எதற்கு அழுதாய்?” என தருக்கபூர்வமாக வினவுகிறாள்.

“உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?

உடற்கு அழுதனையேல், உன் மகன் - தன்னை

எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?

உயிர்க்கு அழுதனையேல், உயிர்புகும் புக்கில்

செயப்பாட்டு வினையால் தெரிந்துஉணர்வு - அரியது;

அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின், ஆய்-தொடி!

எவ்வுயிர்க்காயினும் இரங்கல் வேண்டும்’’ (23:72-78)

சென்ற பிறவியில், உதயகுமரன் இராகுலன் என்னும் பெயரில் எனக்குக் கணவனாய் இருந்து நாகம் தீண்டி உயிர்போனபோது நீ எங்கிருந்து அவனுக்கு அழுதாய்? இப்போது இவன் உடலுக்கு நீ அழுதாய் என்றால், உடலை இடுகாட்டில் இட்டது நீங்கள்தானே? உயிருக்கு அழுதால், உயிர் சென்று சேரும் இடத்தை உன்னால் உணர முடியுமா?

நீ அவ்வுயிர்மீது அன்புடையவள் என்றால் எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்து என்கிறாள். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்பது புத்த மதத்தின் அடிப்படைக்கோட்பாடு ஆகும்.

தொடர்ந்து இராசமாதேவிக்கு புத்தசமயத்தில் ஐம்பெருங்குற்றங்களாக விலக்கப்பட்டுள்ள காமம், கொலை, கள், பொய், களவு ஆகியவற்றின் தீமைகளைக் அறவணவடிகள் காருகமடந்தை என்பாளை அவள் புதல்வனே புணர்ந்தது, சூலுற்ற மானைக்கொன்ற வேடன் தாய்மானின் கண்ணீரைக் கண்டு தன்னுயிரைத் துறந்தது ஆகிய கதைகள் மூலம் விளக்குகிறார். இந்த ஐம்பெருங்குற்றங்களைக் கேட்டறிந்த இராசமாதேவி பின்னர் சித்ராபதி மணிமேகலையைத் தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லும்போது ‘உன்னுடைய பரத்தமை வாழ்க்கை ஐம்பெருங்குற்றங்களும் நிறைந்தது’ என்று கூறி நிராகரிக்கிறாள்.

“கள்ளும், பொய்யும் காமமும், கொலையும்

உள்ளக் களவும், என்று உரவோர் துறந்தவை

தலைமையாக் கொண்டநின் தலைமைஇல் வாழ்க்கை” (23:78-80)

இவ்வாறு சித்ராபதியோடு இராசமாதேவி பேசிக்கொண்டிருந்தபோது அறவணவடிகள் மாதவி, சுதமதியோடு அங்கு வந்து சேர்கிறார். அவருக்கு இராசமாதேவி ஆசனம் வழங்கி பாதங்களைக் கழுவிப்பணிந்த பின்னர், அறவணவடிகள் ‘தேவி கேளாய்’ என்று கூறி, ‘உலகத்தில் பிறந்தவர்கள், வயது மூத்தார்கள், பிணிநோய் உற்றார்கள் இறந்தார்கள் என்பது இயல்புதானே’ என்று கூறி உயிர்களின் பன்னிரெண்டு இயல்பு என்னும் நிதானங்களை (பேதமை,செய்கை, உணர்வு, வாயில், ஊறு முதலியன) விளக்குகிறார். அத்துடன் மூவகை உலகையும் அவற்றில் வாழும் அறுவகை உயிர்களையும் (மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய்) குறித்த புத்தசமயக் கருத்தியலை எடுத்துரைக்கிறார். அறவணவடிகளைப் போன்று தருமசாவகன் சாவகநாட்டரசன் புண்ணியராசனுக்கு உயிர்களின் பன்னிரு நிதானங்களையும் அவற்றின் தோற்றத்தையும் கூறுகிறார். இவற்றைத் தொடர்ந்து மணிமேகலை வைதீகம், உலகாயதம், பௌத்தம், சாங்கியம், வைசேடிகம், மீமாஞ்சகம், பிரம்மவாதம், ஆசீவகம், சமணம் ஆகிய சமயக் கணக்கர்களுடைய அளவைவாதக் கருத்தியல்களை உபதேசமாகவே கேட்டறிகிறாள். இவ்வுபதேசங்கள் இடம்பெற்றுள்ள சமயக்கணக்கர் தம்திறம் கேட்ட காதையில் லோகாயதம், உலகாயதம், பௌத்தம், சாங்கியம், மீமாஞ்சகம் ஆகிய ஆறு தத்துவங்கள் மட்டுமே சமயங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இச்சமயங்களுக்கான ஆசிரியர்களும் முறையே பிரகஸ்பதி, சினேந்திரன் என்னும் புத்தன், கபிலன், அக்கபானு, கணாதன், சைமினி ஆகியோர் சுட்டப்படுகின்றனர்.

சைவம், பிரம்மவாதம், வைணவம், வேதவாதம், ஆசீவகம், நிகண்டவாதம் என்னும் சமணம் ஆகியனவெல்லாம் வெறும் விவாதத்திற்குரிய தத்துவங்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன. அவை சமயமாக அடையாளப்படுத்தப்படவில்லை. எனவே, இவையாவும் மணிமேகலை காலகட்டத்தில் சமயநிறுவனமாக உருப்பெறவில்லை; மேற்குறிப்பிட்ட அறுவகைச் சமயங்களுள் பௌத்தம் அல்லாத பிறசமயங்களுக்குள் இவை அடக்கப்பட்டுள்ளன. மேலும், வைதீகம், சைவம், பிரம்மம், வைணவம், வேதவாதம், ஆசீவகம், நிகண்டவாதம், சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் என்னும் லோகாயதம் ஆகிய தத்துவங்களின் அளவைவாதத்தைக் கேட்டறிந்த மணிமேகலை பூதவாதத் தத்துவத்தை மட்டுமே மறுக்கிறாள். பூதவாதி மறுபிறப்பில்லை மற்றும் அனுமான அளவைவாதத்தை ஏற்கமுடியாது என்று கூறியதைச் சான்றுகளுடன் மணிமேகலை மறுக்கிறாள். இதன்மூலம், பிற்காலச்சமய வரலாற்றில் சாங்கியம், வைதீகத்திற்குப் ‘பிரதான மல்லனாக’ இருந்ததுபோல மணிமேகலை காலகட்டத்தில் தத்துவத்தளத்தில் பௌத்தத்திற்குப் பூதவாதம் ‘பிரதான மல்லனாக’ இருந்திருக்கிறது. மணிமேகலைக் காப்பியத்தில் காணப்படும் எடுத்துரைப்பின் அரசியலில் சமயஅரசியல் மேலோங்கி நிற்கிறது. சாத்தனார் மணிமேகலையைப் பௌத்த சமய அரசியல் சார்புடையதாக - புத்தசமயக் காப்பியமாகக் கட்டமைத்துள்ளார். மணிமேகலை காலத்தில் தத்துவத்தளத்தில் பூதவாதமும், நடைமுறை வாழ்வில் சமணமும் பௌத்தத்திற்கு எதிரானதாக இருந்துள்ளன.

இறுதிக்காதையில் அறவணவடிகள் புத்தசமய அளவைவாதத்தை மணிமேகலைக்கு உபதேசிக்கிறார். அத்துடன் மணிமேகலைக்குப் பௌத்தசமயத் தத்துவத்தின் பன்னிரு நிதானம் என்னும் சார்புநிலையை அடுத்து வீடுபேறு அடைவதற்கான நான்கு உயர்ந்த உண்மைகளான நோய்(துக்கம்), காரணம்(துக்க உற்பத்தி), நோய் நீங்கும் வாய்( துக்க நிவாரணம்), நோய் நீங்கும்வழி (துக்கநிவாரண மார்க்கம்) ஆகியவற்றை உபதேசங்களாக விரித்துரைக்கிறார். இவையாவும் விநயபிடகத்தின் மகாவக்கம் என்னும் பிரிவில் முதல் காண்டத்தில் இடம்பெற்றுள்ளதாக மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார் (1957:ப.13). இவ்வாறு, ஆறாவது காதையில் தொடங்கும் உபதேசம் எனும் பொருட்கூறு இறுதிக்காதையான முப்பதாவது காதைவரை தொடர்ந்து வருகிறது.

புத்தத்தைத் தமிழ்மயப்படுத்தல்

சிலப்பதிகாரத்தைப் போன்றே மணிமேகலையிலும் மதுரை, புகார் நகரங்கள் கதைநிகழ் களங்களாகச் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றோடு தமிழ் நகரங்களான காஞ்சி , வஞ்சியின் சமூக, சமயப்பண்பாட்டு வெளிகள் சிறப்பிடம் பெறுகின்றன. சீத்தலைச் சாத்தனார் மதுரையில் வாழ்ந்த கூலவாணிகன் என்பதால் மதுரை நகரைப் பல இடங்களில் சிறப்பித்துச் சொல்கிறார். ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை வழங்கியது மதுரையில் வீற்றிருந்த சிந்தாதேவி தெய்வம் என்று சாத்தனார் கூறுகிறார். ஆபுத்திரன் மன்னுயிர்களின் பசிப்பிணியை முதலில் போக்கிய நகரம் மதுரை நகரமே. ஆபுத்திரன் சிந்தாதேவியை ‘தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்’ (25:139) என்கிறான். மணிமேகலைக் காப்பியத்தில் சோழ மன்னர்களான தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், கிள்ளிவளவன், முதுமை எய்தி உரைமுடிவு காட்டிய கரிகால்சோழன், நெடுமுடி கிள்ளி ஆகியோரின் பெருமை பேசப்படுகின்றது. பாண்டிய நெடுஞ்செழியன் மறைவிற்குப் பின் அவள் மனைவி எரிபுகுந்த நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. ‘கொற்கையை ஆண்ட பொற்றேர் செழியனையும்’ (13:84) சாத்தனார் குறிப்பிடுகின்றார். அதேபோன்று சேர மன்னனான செங்குட்டுவனையும் அவனது வஞ்சி மாநகரையும்  வஞ்சிமாநகர்ப் புக்க காதையில் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.

“செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன்

பூத்த வஞ்சி பூவா வஞ்சியிற்“   (26 : 77-78)

மணிமேகலை புத்தசமயத் தத்துவத்தை - துறவின் மூலம் வீடுபேறு அடைதலை - எடுத்துரைப்பதற்காக எழுதப்பட்ட பனுவல் என்றாலும் புத்தசமயத்தைத் தமிழ்ப்பண்பாட்டோடு இணக்கம் செய்விப்பதுதான் சாத்தனாரின் அடிப்படை நோக்கமாக இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே புத்தசமயத் தத்துவத்தின் கலைச்சொற்கள் யாவற்றையும் தமிழாக்கம் செய்து பயன்படுத்தியுள்ளார்.

“அவிஜ்ஜா பச்சயா ஸங்க்காரா

ஸங்க்கார பச்சயா விஞ்ஞானம்

விஞ்ஞான பச்சயா நாமரூபம்

நாமரூ பச்சயா ஸனாயதனம்

ஸளாயதன பச்சயா பஸ்ஸோ

பஸ்ஸ பச்சயா தண்ஹா

தண்ஹா பச்சயா உபாதானம்

உபாதான பச்சயா பவோ

பவ பச்சயா ஜாதி

ஜாதி பச்சயா ஜராமரணம்

ஸோக பரிதேவ துக்க தோமஸ் ஸ§பாயாஸா                            ஸம்பவந்தி”

இத்திரிபிடக வாக்கியத்தையே

“பேதமை சார்வாச் செய்கை யாகும்

செய்கை சார்வா உணர்ச்சி யாகும்

உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்

வாயில் சார்வா ஊறா கும்மே..” (30:104-108)

என்பதாகச் சொல்லுக்குச்சொல் சாத்தனார் மொழிபெயர்த்துள்ளதாக மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார். (1957:ப.14).

பௌத்தசமயத் தத்துவம் மணிமேகலையில் ஊடிழைப்பாவாகக் காப்பியம் முழுவதும் இடம்பெற்றாலும் காப்பியத்தலைவி மணிமேகலையின் சமுதாயக் கடமையாக பசிப்பிணி நீக்குவது அமைகிறது. அதுவே, காப்பியத்தின் பாவிகமாகவும் அமைந்து விடுகிறது.

‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” (11:95-96)

இப்பாவிகத்தின் கருத்தியல் பின்வரும் சங்கப் புறப்பாடலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

“நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே” (புறம்.18)

இப்பாடலில் இடம்பெறும் ‘உணவின் பிண்டம்’ எனும் தொடர் சாத்தனாரால் அவ்வாறே பின்வருமாறு எடுத்தாளப்பட்டுள்ளது.

“மக்கள் யாக்கை யுணவின் பிண்டம்

இப்பெரு மந்திர மிரும்பசி யறுக்குமென்” (9:90-91)

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் என்பது பௌத்த சமயக் கோட்பாடாக இருந்தாலும் அதனைப் பசியைப் போக்குதல் எனும் மனித உயிரின் மீதான அன்பாக சாத்தனார் மாற்றியுள்ளார். இதனைச் சங்ககால சமூக மதிப்பிலிருந்தும் திருக்குறளின் கருத்தியலிலிருந்தும் உட்செறித்துள்ளார். வள்ளுவர் பசி எனும் தீப்பிணி பற்றியும் உறுபசி பற்றியும் அற்றார் அழிபசி தீர்த்தலைப் பற்றியும் திருக்குறளில் விரிவாகப் பேசியுள்ளார். சங்ககால இனக்குழுச் சமூக மதிப்பான ‘பாத்தூண்’ சங்க இலக்கியங்களிலும் திருக்குறளிலும் போற்றப்பட்டுள்ளது. இதனைச் சாத்தனார் தனது காப்பியத்திலும் மீட்டுருவாக்கம் செய்துள்ளார். இதன்மூலம் பௌத்தத்திற்கு ஒரு தமிழ்முகம் கொடுக்கிறார்.

மயிலை சீனி வேங்கடசாமி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியோர் குறிப்பிடுவதுபோல சாத்தனார் தேரவாத (ஹீனயான) பௌத்தமதக் கருத்தாக்கங்களை மணிமேகலைக் காப்பியத்தில் விரித்துப் பேசியுள்ளார். ஆயினும் காப்பியப் புனைவில் மகாயான பௌத்தம் ஏற்றுக் கொண்ட பல்வேறு தெய்வங்கள், தெய்வங்களின் மந்திர சக்தியும் சாகசங்களும் விதந்து பேசப்பட்டுள்ளன. இவை காப்பியப் புனைவிற்கு அடிப்படையான இயற்கை இறந்த நிகழ்ச்சிகளைக் கட்டமைப்பதற்கு சீத்தலைச்சாத்தனாருக்கு உதவி புரிந்திருக்கின்றன. மணிமேகலையில் இடம்பெறும் துடிதலோகம், எண்ணில் புத்தர்கள், புத்த விகாரைகள், புத்தரின் பாதம் பொறித்த வணங்குதற்குரிய பாதபீடிகை, புத்தனைத் தாங்கும் ஆசனமான பிறப்புணர்த்தும் தருமபீடிகை வழிபாடு, தெய்வக்கிளவி உரைக்கும் கந்திற்பாவை ஆகியவற்றை மகாயான பௌத்தக் கருத்தியலாக எடுத்துக்கொள்ளாமல் பௌத்தம் தமிழ்மயப்படுத்தப்பட்டிருப்பதன் அடையாளமாகக் கருதலாம். ஒரு சமயம் வேறொரு நிலத்தில் பரவும்போது அது அங்கிருக்கிற பூர்விக நாட்டார் சமயக்கூறுகளை உள்வாங்கி வளர்ச்சியடையும். அத்தகைய உள்வாங்கல் தமிழகத்தில் பௌத்தத்திற்கும் நேர்ந்திருக்கிறது. மணிமேகலையில் இடம்பெறும் பௌத்த சமயப் பெண் தெய்வங்களான மணிமேகலா தெய்வம், சம்பாபதி, சிந்தாதேவி, மதுராபதி ஆகிய பெண் தெய்வங்களுள் மணிமேகலா தெய்வம் தவிர ஏனைய தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் புத்த ஜாதகக் கதைகளில் இல்லை. தமிழகத்தில் தாய்த்தெய்வ மரபு பெருவழக்காக இருந்தமையின் அடிப்படையிலேயே தமிழக புத்த சமயத்திலும் பெண் தெய்வங்கள் செல்வாக்குப் பெற்றுள்ளன. ஆகவே, மணிமேகலைக் காப்பியத்தில் மகாயான பௌத்தம் சார்ந்ததாகக் கருதப்படும் சமயக்கூறுகளை மக்கள் பௌத்த சமயக் கூறுகளாகவே கருத வேண்டும். இவ்வாறு காப்பியம் முழுவதும் தமிழ் நிலம், மூவேந்தர்கள், தமிழர்களின் சமுதாய மதிப்புகள், பண்பாட்டு மதிப்புகள் ஆகியவற்றை பெறச் செய்து ‘தமிழ்’ ஓர்மையை வாசகர்களுக்குத் தக்கவைக்கிறார்.

சங்க இலக்கியத்தின் எடுத்துரைப்பியல் மரபு

மணிமேகலைக் காப்பியப் புனைவில் சங்க இலக்கியத்தின் எடுத்துரைப்பியல் மரபை அதில் இடம்பெறும் சொற்றொடர்களிலும் விவரணை முறைகளிலும் காண முடிகின்றது. சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ‘ஆலமர் செல்வன்’ (சிறு : 97, கலி : 81,83) என்ற தொடர் மணிமேகலையில் முருகனுக்கு எடுக்கும் விழாவினைக் குறிக்கின்றபோது பயன்படுத்தப்பட்டுள்ளது. “ஆலமர் செல்வன் கால்கோள்” (3:144). இதேபோன்று உதயகுமரனின் தோற்றத்தைத் தமிழ்க்கடவுளான முருகனாகவே காட்டுகிறார்.

‘கார்அலர் கடம்பன் அல்லன் என்பது

ஆரங் கண்ணியின், சாற்றினன் வருவோன்” (4:48-49)

என்று உதயகுமரனின் வருகையைக் காவலன் ஒருவன் அறிவிக்கின்றான். மேலும், சுதமதி உதயகுமரனை முருகனாகவே வருணிக்கிறாள்.

“குருகுபெயர்க் குன்றம் குன்றோன் அன்னநின்

முருகச்செவ்வி முகந்துஞ்.”      (5:13-14)

இதேபோன்று சங்க இலக்கியத்தில் பெண்களின் கூந்தலைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ‘நன்னெடுங் கூந்தல்’ என்ற தொடர் மணிமேகலையில் வாசந்தவை எனும் மூதாட்டியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“நல்நெடுங் கூந்தல் நரைமூதாட்டி” (23 : 2)

இதேபோன்று சங்க இலக்கியத்தில் இடம்பெறும் நன்னுதல் என்ற தொடரும் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது. (21:181) சங்க இலக்கியப் பத்துப்பாட்டுகள் உலகம் எனும் பொருள்கொண்ட சொல்லுடனேயே தொடங்குகின்றன. அதே போன்று மணிமேகலையின் முதலாவது காதையும் “உலகம் திரியா, ஓங்குஉயர் விழுச்சீர்” (1:1) எனும் தொடரோடேயே தொடங்குகின்றது.

கபிலர் குறிஞ்சிப்பாட்டின் ஓரிடத்தில் 99 மலர்களை வரிசையாக நிரல்படுத்தி அடுக்கியதைப்போல சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் உவவனம் எனும் மலர்வனத்தை விவரிக்கும் இடத்தில் 25 மரங்களின் மலர்களை நான்கு நான்காக அடுக்கிச் சொல்கிறார்.

“குரவமும், மரவமும், குருந்தும் கொன்றையும்,

திலகமும், வகுளமும், செங்கோல் வெட்சியும்,

நரந்தமும், நாகமும், பரந்துஅலர் புன்னையும்,

பிடவமும், தளவமும், முட முள் தாழையும்,

குடசமும், வெதிரமும், கொழுங்கால் அசோகமும்,

செருந்தியும், வேங்கையும், பெருஞ்சண் பகமும்,

எரிமலர் இலவமும் - விரிமலர் பரப்பி,”             (3:160-167)

இவற்றோடு சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இறந்தவர்களை வாளால் அடையாளப்படுத்தி புதைக்கும் வீரயுக மரபும் (குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடல் - புறம்.74) மணிமேகலையில் அரசமரபாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

“தருப்பையில் கிடத்தி, வாளில் போழ்ந்து

செருப்புகல் மன்னர் செல்வழிச் செல்க என” 23 :13- 14)

சங்க இலக்கியத்தைப்போலவே திருக்குறளில் இடம்பெறும் குறட்பாக்களையும் சொல்லாட்சிகளையும் சாத்தனார் பயன்படுத்துகிறார்.

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு” (குறள்.339)

எனும் குறள்

“பிறந்தோர் இறத்தலும், இறந்தோர் பிறத்தலும்

அறந்தரு சால்பும் மறம்தரு துன்பமும்” (21 : 19-20)

எனும் வரிகளில் எடுத்தாளப்பட்டுள்ளது.

மேலும், பிறர் நெஞ்சத்தில் புகுந்ததற்காக வருந்தும் பார்ப்பனி மருதிக்கு, சதுக்கபூதம் நீ கணவனைத் தொழாமல் பிற கடவுள்களை வணங்கியதாலும் விழாக்களை விரும்பியதாலும் இவ்வாறு நேர்ந்ததெனக் கூறும்போது பொய்யாமொழிப் புலவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்.

“தெய்வம் தொழாஅள், கொழுநன் - தொழுதுஎழுவாள்;

பெய்யெனப் பெய்யும் பெருமழை” என்ற

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!”  (22: 59-61)

இதேபோன்று திருக்குறளில் இடம்பெறும் வானவர் உலகத்தைக் குறிக்கும் “புத்தேள் உலகு” (குறள்: 213, 234, 290) எனும் தொடர் மணிமேகலையிலும் (22:137) இடம்பெறுகிறது. ஆகவே மணிமேகலைக் காப்பியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம் என அறுபடாமல் தொடரும் தமிழ் இலக்கியக் கண்ணிகளின் மரபுத்தொடர்ச்சியில் ஒரு கண்ணியாக இடம்பெற்றுள்ளது.

துணைநூற்பட்டியல்

1.          உ,வே.சா., (ப.ஆ), மணிமேகலை, டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, எட்டாம் பதிப்பு, 2008.

2.          வேங்கடசாமி, மயிலை சீனி., பௌத்தமும் தமிழும், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மூன்றாம் பதிப்பு,1957.

3.          SHAUL R. SHENHAV, “Political Narratives and Political Reality”, International Political Review(2006), Vol 27, No.3, pp 245 -262

(இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 28-10-2023 அன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் "மணிமேகலையும் பண்பாட்டுக் கோலங்களும்" எனும் பொருளில் நடத்திய ஆய்வரங்கு 2023இல் நிகழ்த்திய தொடக்கவுரையின் கட்டுரை வடிவம்)

- பா.ஆனந்தகுமார், பேராசிரியர், காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காந்திகிராமம்.

Pin It