கவி. கா.மு. ஷெரீப் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரம் என்னும் சின்னஞ் சிறிய ஊரில் காதர்ஷா, இபுராஹிம் பாத்தும்மாள் இணையருக்கு 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் படித்திருந்த போதும் வறுமை காரணமாகக் கா.மு.ஷெரீப் பள்ளி சென்று படிக்கும் வாய்ப்பினைப் பெறவில்லை. தந்தையாரிடமும் மற்றோரிடமும் தாமாக முயன்று கல்வி கற்றுக் கவிதை படைக்கும் ஆற்றல் பெற்றார். அரசியலிலும் ஆன்மீகத்திலும் சமூகப் பிரக்ஞையிலும் சிறந்து விளங்கிய கவிஞர் கவிதை மட்டுமன்றி சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, சிற்றிலக்கியம், கடிதம், திரையிசைப்பாடல்கள், காவியம், பத்திரிக்கைத் தலையங்கம், இதழியல் பணி, இலக்கிய உரை நூல்கள், வானொலி உரைகள், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு தளங்களில் தமது பங்களிப்பைத் தமிழ் இலக்கியத்திற்குச் செலுத்தியுள்ளார். தமிழக வரலாற்றிலும் தமிழ்ச் சமூக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் என்றென்றும் நின்று நிலைக்கும் ஆற்றல் வாய்ந்தவரான கவி கா.மு.ஷெரீப் சாதி, இன, மதம் கடந்து எல்லோராலும் நேசிக்கப்படக் கூடியவர். சமய நல்லிணக்க உணர்வுடையவர்; எல்லாச் சமய இலக்கியங்களையும் நூல்களையும் நுணுகி நுணுகிப் பயின்றவர்.

ka mu sherifதேசத் தொண்டர், தமிழ்ப் பற்றாளர், இந்தி எதிர்ப்புத் தீரர், எல்லை மீட்புப் போராளி, சிறந்த இலக்கியவாதி, நேர்த்திமிகு அரசியல்வாதி, நாடு போற்றும் நல்ல சொற்பொழிவாளர், தத்துவ வித்தகர், தேர்ந்த திறனாய்வாளர், நேர்த்திமிகு திரைப்படப் பாடலாசிரியர், நாடறிந்த கவிஞர், அறிஞர் வியக்கும் உரையாசிரியர், சிறந்த பதிப்பாளர், சமூகச் சீர்திருத்தம் விரும்பும் இதழாளர், எல்லோரும் அறிந்த மூத்த கவிஞர் எனத் திகழும் கவி. கா.மு.ஷெரீப் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மாமனிதர். பன்முக ஆளுமையுடைய அவர், புதிய தமிழகம் அமைப்பதற்காக அரும்பாடுபட்டவர். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. கூட அவருக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது. அவரோடு நெருங்கியிருந்து பணியாற்றிய ம.பொ.சியே தம் நூலில் கவிஞர் குறித்துச் சரிவரக் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘கவி கா.மு. ஷெரீப் கவிதைகள்’ எனும் நூலில் கவிஞர் தம்மைப் பற்றியும் தமக்கு முந்தைய கவிஞர்கள் பற்றியும் புதிய தமிழகம் குறித்தும் நன்றியுணர்வோடும் பொறுப்போடும் பதிவு செய்கிறார்.

 “என் காலத்தில் வாழ்ந்த பிரபலமான கவிஞர்கள், என்னினும் மூத்தவர்கள் எழுவர். இவர்களில், சதாவதானி கா.ப.செய்குத்தம்பிப் பாவலர் அவதானத்தில் சிறந்தவர். திருவையாறு கா. அப்துல் கபூர் சித்திரக் கவிகளின் மூலம் பிரபலமானவர். எஞ்சியவர்களான பாரதிதாசனார், நாமக்கல்லார், தேசிக விநாயகம் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், ச.து.சு. யோகி ஆகிய ஐவரும் பொதுவான தமிழ்க் கவிஞர்கள். இவர்களையும் பகுத்துப் பார்க்கின்; புரட்சிக் கவி பாரதிதாசனார் சமுதாயச் சீர்திருத்தம், சமதர்மச் சமுதாயம், தமிழ் எனும் மூன்று பகுதிகளைப் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் வேகமாகவும் எழுதியவராகின்றார். நாமக்கல் கவிஞர், தேசிய - காந்தியக் கவிஞர். தேசிக விநாயகம் பிள்ளை, பிள்ளைப் பாடல்களாலும் பொதுப் பாடல்களாலும் பிரபலமானவர். சுத்தானந்தபாரதி, பாரதமாதா, பக்தி இசைப் பாடல்கள் மூலம் நாடறிந்த கவிஞர். நல்ல பல உரைநடை நூலாசிரியர். ச.து.சு. யோகியார், தேசியக் கவியே யாயினும் மேரி மக்தலேனா, அகல்யா, உமர்க்கய்யாம் போன்றோரைப் பாடியதன் மூலமாகவும் தமிழ்க் குமரிப் பாடல் தொகுப்பு நூல் மூலமாகப் பிரபலமாகத் திகழ்ந்து பின்னர் மக்களை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தவர். நான் இவர்கட்குப் பின்னால் வந்தவன். இவர்களுடன் பழகியவன். இவர்கள் பாடல்களைப் பயின்றவன்” என்று குறிப்பிடும் கவிஞர், “எனக்கென எஞ்சி நின்றது--, புதிய தமிழக அமைப்பின் போர்க் களப் பாடல்கள் எனக் கணிப்பது பொருத்தமாகலாம். ஆம் என்னளவிற்கு, ‘புதிய தமிழகம்’ அமைப்பின் ‘களப் பாடல்’களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்பது மிகையன்று” என்றும் குறிப்பிடுகிறார்.

“புதிய தமிழகம் என்பது ஒரு நாடாக 1957க்கு முன்பு இருந்ததில்லை. புதிய தமிழகம்; தட்சிணராச்சியத்தை வென்று, திராவிடத்தைக் கடந்து, டில்லியைப் பணிய வைத்து அமைந்த ஒன்றாகும். மட்டுமன்றி, நான்கு இளைஞர்களைக் களப்பலி யீந்து, பல்லாயிரம் தமிழர்களைச் சிறைக்குள் தள்ளி, குருதிச் சேற்றில் குளித்துப் பெற்றதாகும். இத்தகு புதிய தமிழக அமைப்பிற்குக் களப் பாடல்களைப் பாடித் தமிழக மக்களைத் தட்டி எழுப்புகின்ற பேற்றினை மிகைத்த அளவில் எனக்கே அளித்தான் இறைவன். இதனால் நானடைந்த பலன் என்ன என்று கணக்குப் பார்ப்பது தவறு” என்கிறார்.

“அடிமை இந்தியாவில் பிறந்த நான், நானும் சேர்ந்து பாடுபட்டுப் பெற்ற சுதந்திர இந்தியாவில் வாழ்கிறேன்! அஃதே ஒப்ப, நான் தளபதியாக நின்று, களம் பாடுகின்ற கவிஞனாகவும் ஆகி, போரிட்டுப் பெற்ற புதிய தமிழகத்தில் வாழ்கிறேன் என்பது என்னை மகிழ்வுற்றிடச் செய்வதாகும். ஆளுவது என் வேலை அல்ல. அரிய பாரதம் விடுதலை பெற்றிடவும், அதிலே இணைந்து திகழ்கின்ற புதிய தமிழகம் தோன்றிடவும் உழைத்தவர்களில் ஒருவன் நான் என்பதை வரலாறு எழுதுவோர் மறைத்துவிட முடியாது! இது ஒன்றே போதும் நிலையான பேறு பெற்றிட! பதவியா வேண்டும்? புதிய தமிழகக் களப்பாட்டுப் பாடியது எனது தனித்தன்மை” என்று தம் தனித்தன்மையையும் இதில் கவிஞர் எடுத்துரைக்கிறார்.

 புதிய தமிழகம் அமைப்பதற்கான போராட்டங்களில் ஈடுபட்ட கவி.கா.மு. ஷெரீப் பல போராட்டங்களைத் தாமே தளபதியாக இருந்து முன் நின்று நடத்தினார். அத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டு செயலாற்றிய தொண்டர்களுக்கு உற்சாக உணர்வு ஏற்படும் வகையில் களப்பாட்டுப் பாடினார். அப்பாடல்களுள் கிடைத்தவற்றை மட்டும் தொகுத்து நூலாக்கினார். அந்த நூலிலும், “இப்போரட்டங்களில் என் பங்கும் குறைந்ததன்று. திங்கள் இருமுறை ஏடுகள் இரண்டும், கிழமை ஏடு ஒன்றுமாக மூன்று ஏடுகளை நடத்தினேன். தமிழகமெங்கும் சுற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றினேன். பொதுச் செயலாளனாகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டது மட்டுமன்றி, பல போரட்டங்களையும் முன்னின்று நடத்தினேன்; சிறைப் பறவையுமானேன்” என்று தம் பணிகளைக் குறிப்பிடும் கவிஞர் இந்த இடத்திலும் ‘நானும் தலைவர் ம.பொ.சி. அவர்களும் இணைந்து செயல்பட்டது. சமயம் கடந்த இனவழி ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டு” என்பதாலும் கவிஞர் ம.பொ.சியைக் குறிப்பிடத் தவறவில்லை என்பது தெளிவாகிறது.

இப்படிப் பல நிலைகளில் அரசியல், சமூகச் சீர்திருத்த ஈடுபாடுடைய கவிஞரைச் சரியான நேரத்தில் சரியான சூழலில் உடனிருந்தோரே அங்கீகரிக்கவில்லை. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் சுயமரியாதைச் சிந்தனையால் ஈர்க்கப்பட்டு அரசியலையும் பொதுவாழ்வையும் விரும்பியேற்று வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த கவிஞர் தமிழ் இலக்கியத்தின் பல பரிமாணங்களிலும் பல்வேறு இலக்கிய நூல்களைப் படைத்த நிலையில் காலச்சூழல் காரணமாக மனம் வருந்தினார். அத்தகைய காலத்தில்தான் கவிஞரின் பார்வை இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளுக்குள் வருகிறது. தம்முடைய ஒட்டுமொத்தப் படைப்புகளுள் குறிப்பிடத்தக்க அளவில் இஸலாமிய இலக்கியப் படைப்புகளிலும் தம் பங்களிப்பைச் செய்துள்ளார். ‘இஸ்லாமியர்களும் கவிஞரின் படைப்புகளைப் படித்து அவரைப் போற்றினார்களோ’ என்பதும் ஐயத்திற்குரியதாகவே உள்ளது.

தம் வாழ்நாட்களின் இறுதிக் காலகட்டத்தில் இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளுள் தம் பார்வையைச் செலுத்திய கவிஞரின் இறையருள் வேட்டல் (1978), ஆன்ம கீதம் (1984), நபியே எங்கள் நாயகமே (1972) ஆகியன அவரின் இஸ்லாமியக் கவிதைப் படைப்புகள்.

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா? (1985), பொது சிவில் சட்டம் பொருந்துமா? (1989), பத்ர் போரின் பின் விளைவுகள் (1991), சிந்திக்க, தெளிவு பெற (1993), தமிழரசில் முஸ்லீம்கள், முஸ்லீம் லீக்தேவை தானா? ஆகியன இஸ்லாம் குறித்தும் இஸ்லாமிய மக்கள் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் கவிஞரால் எழுதப்பட்ட கட்டுரைப் படைப்புகள். இவை இன்றைக்கும் பொருந்தும் நூல்களாகவும் தேவையான நூல்களாகவும் இருப்பது வியப்பிற்குரியதாக இருக்கிறது.

ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழும் (1979) நாகூர்ப் போற்றிச் சதகமும் கவிஞரின் இஸ்லாமியச் சிற்றிலக்கியங்கள். நீங்களும் பாடலாம் இஸ்லாமிய இசைப்பாடல் எனும் நூல் இஸ்லாமிய இசைப்பாடல் படைப்பது பற்றியது. இஸ்லாமிய இசைப்பாடல் பல அடங்கியது. பல்கீசு நாச்சியார் காவியம் (1991) எனும் நூல் கவிஞரின் இஸ்லாமியக் காவியப் படைப்பாகும். நபி தம் பேரர் ஹஸன் ஹுஸைன் (ரலி) வரலாறு, வள்ளல் சீதக்காதி வரலாறு ஆகியன இஸ்லாமியப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றினை இயம்பும் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள். ‘கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடு’ எனும் நூல் மலேசியா வாழ் இஸ்லாமியர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை எடுத்தியம்பும் அற்புதமான பயண இலக்கிய நூலாகும். ‘சீறாப்புராணச் சொற்பொழிவு’ என்னும் நூல் புதுவை வானொலியில் 31 நாட்கள் சீறாப்புராணத்தை எல்லோரும் விளங்கிக் கொள்ளும் வகையில் எளிய நடையில் ஆற்றப்பட்ட சீறாப்புராண அறிமுக உரையாகும்.

கவிஞரின் இஸ்லாம் சார்ந்த எல்லாப் படைப்புகளுக்கும் மணி மகுடமாகத் திகழ்வது சீறாப்புராண உரையாகும். சீறாப்புராணத்திற்கு கவி கா.மு.ஷெரீப் உரை எழுதத் தொடங்கும் போது அவருக்கு முதுமை வந்துவிட்ட படியால் தம் வாழ் நாட்களுக்குள் எழுதி முடித்துவிட இயலாமல் போனால் என்ன செய்வது எனக் கருதி எல்லாக் காண்டத்தையும் தொட்டுவிட நினைத்து விலாதத்துக் காண்டத்தில் முதல் ஐந்து படலத்திற்கும் நுபுவ்வத்துக் காண்டம் முழுமைக்கும் கிசுறத்துக் காண்டத்தில் முதல் இருபத்தேழு படலத்திற்கும் உரை எழுதியுள்ளார்.

விலாதத்துக் காண்டத்திலுள்ள 290 பாடலுக்கும் நுபுவத்துக் காண்டத்திலுள்ள 1105 பாடலுக்கும் எனச் சீறாப்புராணத்திலுள்ள 5028 பாடல்களில் 3077 பாடல்களுக்குக் கவி கா.மு. ஷெரீப் உரை செய்துள்ளார். கவிஞர் மறைந்த நிலையில் எஞ்சிய 1951 பாடல்களுக்கு மு. அப்துல் கறீம் உரை எழுதி நிறைவு செய்துள்ளார். சீறாவிலுள்ள 92 படலங்களுள் 53 படலங்களுக்குக் கவி கா.மு. ஷெரீபும் எஞ்சிய 39 படலங்களுக்கு மு. அப்துல் கறீமும் உரை எழுதியுள்ளனர். கவிஞரின் சீறாப்புராண உரை சீறாப்புராணத்தை ஆர்வத்தோடு படிக்கத் தொடங்குவோருக்கு அணி விளக்காக அமைந்துள்ளது.

‘இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’ (1988) எனும் நூல் இஸ்லாம் சுட்டும் ஜீவகாருண்யத்தையும் நபிகள் நாயகம் எந்த அளவிற்கு ஜீவகாருண்யத்தை வலியுறுத்தினார்கள் என்பதையும் எடுத்துரைக்கிறது. இறைவனுக்காக வாழ்வது எப்படி? (1989) எனும் நூல் இறைவனுக்கு உகந்த வாழ்வு என்பது எது என்பதையும் எடுத்துரைக்கிறது.

தம் வாழ்நாட்களின் நடுப்பகுதி வரை பொதுவான பல்வேறு தளங்களில் இயங்கிய கவி கா.மு. ஷெரீப் பன்முக ஆற்றல் வாய்ந்தவர். பின்னாளில் அவர் இஸ்லாமிய சமய நெறி கூறும் வாழ்விலே தம் கவனத்தைப் பெரிதாகச் செலுத்தியதன் விளைவாக இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளைப் படைத்தார். காலம் அவரை பறித்துக் கொண்ட காரணத்தால் அவர் செய்து கொண்டிருந்த பணிகளை நிறைவு செய்யாமலும் செய்ய நினைத்திருந்த பணிகளையும் படைப்புகளையும் செய்யாமலும் மறைந்துவிட்டார். இன்னும் அவர் வாழ்ந்திருந்தால் இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடத்தக்க தம் பங்களிப்பைச் செலுத்தியிருப்பார் என்பது திண்ணம். இருந்தபோதும் அவர் படைத்துள்ள இஸ்லாமிய நூல்களை நுணுகி ஆய்ந்தால் தங்கச் சுரங்கம் போல் இஸ்லாமிய மார்க்கக் கருத்துமணிகளும் சாதி, மத, இன, மொழி கடந்து எல்லோரும் ஏற்றுப் போற்றும் அரிய பொதுவான கருத்துமணிகளும் நிறைந்து காணப்படுவதை வெளிக்கொணர முடியும்.

பேராசிரியர் உ.அலிபாவா

Pin It