வட்டார எழுத்துக்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்தபோதுதான் நவீன இலக்கியம் ஜனநாயகப்படுத்தப்பட்டது என்று கருதுகிறேன். அந்தந்த பகுதி சார்ந்த மொழிகளில் புனைகதைகள் எழுதப்படும்போது, மொழியுடன் அம்மண்ணின் பண்பாட்டு விழுமியங்களும் பரவலாக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்ப் புனைகதை வரலாற்றைத் திறந்து பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியே வட்டார இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்துவதை அறிய முடிகிறது. குறிப்பாகத் தென் தமிழகத்தின் நெல்லை, கரிசல் பகுதிகளில் இருதுதான் வட்டார இலக்கியம் அதிக அளவில் எழுதப்படுவதாக அறிகிறேன். புதுமைப்பித்தனும் கி.ராஜநாராயணனுமே இதற்கு முன்விதைகள். ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறை வெளியிடும் மாணவர்களின் தேர்ச்சி விகிதப் பட்டியலில் வட தமிழகம் பின்தங்கி இருப்பதைப் பார்க்கலாம். இலக்கியத்தில்கூட இந்நிலை இருப்பதாகவே உணர்கிறேன். குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் இலக்கிய வறட்சி அதிகம். இப்பகுதிகளில் இருந்து நிறைய எழுத்தாளர்கள் உருவாகவேண்டும். இம்மண்ணின் மொழியை, இம்மக்களின் வாழ்க்கையைக் குறைந்தபட்சம் தமிழ்நிலமெங்கும் தூவும் படைப்புகள் அதிகமும் வெளிவர வேண்டும்.

kavipithan novel‘நீவாநதி’, ‘மடவளி’ நாவலைத் தொடர்ந்து வெளிவந்துள்ள கவிப்பித்தனின் மூன்றாவது நாவல் ‘ஈமம்’. வட ஆர்க்காட்டின் நிலமொழிதான் இவரது அடையாளம். இப்பகுதியின் மக்கள் மொழியைப் புனைவில் இவரளவிற்குப் பிறர் பயன்படுத்தவில்லை என்பது என் அவதானிப்பு. அவ்வகையில் கவிப்பித்தன் பாராட்டுக்குரியவர். மகேந்திரன் என்ற ஒரு மனிதனின் நிஜ உலகையும் அவன் பிணமாகி உயிர்த்தெழுந்ததற்குப் பின்புள்ள புனைவு உலகையும் கவிப்பித்தன் நாவலாக்கியுள்ளார். இச்சமூகம், மகேந்திரனின் இருப்பை நிஜ உலகத்தில் இயல்பானதாகவும் புனைவு உலகத்தில் அமானுஷ்யமானதாகவும் எடுத்துக்கொள்கிறது. புனைவு உலகில் அவன் மனுதனுக்குரிய தன்மைகளுடன் இருந்தாலும் சமூகத்தின் கூட்டு நனவு மனம் அவனை சக மனிதனாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இத்தகைய சமூகத்தின் பிளவுபட்ட நாக்கை ‘ஈமம்’ சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இதனைப் புனைவாக்கிய விதத்தில் கவிப்பித்தன் இன்னும் கூடுதல் சிரத்தை எடுத்திருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். முதலில் இதனை யதார்த்த நாவலாக வாசிப்போம்.

மகேந்திரனின் அத்தை மகள்தான் சுசீலா. இருவரின் அப்பாக்களுக்கும் இடையிலான மனக்கசப்பு அவர்கள் திருமணத்திற்குத் தடையாக இருக்கிறது. எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால் எதனால் அவர்களுக்கிடையே பிரச்சனை வந்தது என்பது குறித்து நாவல் எதுவும் பேசவில்லை. புதியதாகக் கிடைத்த அரசுப் பணிகூட மகேந்திரனின் தந்தைக்குத் ‘தான்’ எனும் ஆணவத்தை அளித்திருக்கலாம். ஆக, பெற்றோர்களின் அகங்காரம் தங்கள் பிள்ளைகளை எப்படிப் பாதிக்கிறது என்ற நோக்கில்தான் நாவல் தொடக்கத்தில் பயணிக்கிறது. நாவலின் தொடக்கம், பிணம் அறுப்பவனின் உளவியல் பிரச்சனையைப் புனைவு விரிவாக ஆராயப்போகிறது என்ற புரிதலையும்கூட ஏற்படுத்துகிறது. இந்தக் களம்கூட தமிழ் நாவல் வளத்துக்குப் புதியதுதான். பாதிக்கு மேல்தான் நாவல், தலைப்புக்கான கதைக்குள் நுழைகிறது.

கணவன் மனைவிக்கு இடையிலான சாதாரண பிரச்சனைக்காக விஷம் குடிக்கிறான் மகேந்திரன். இது தெரிந்த சுசீலா, ஆறுமாதக் குழந்தையைக்கூட பொருட்படுத்தாது தூக்கு மாட்டிக் கொண்டு அவனுக்கு முன்பே இறந்துபோகிறாள். மகேந்திரனின் நாடித்துடிப்பைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். உடற்கூராய்வில் உயிருடன் இருப்பதைக் கண்டறிகின்றனர். இவனைப் பற்றிய தகவல் ஊர் முழுக்கப் பரவுகிறது. சுசீலாவின் இறப்பைக் கேள்விப்பட்டு ஓடிவந்த அவள் அம்மா ஆட்டோ மோதி இறந்து விடுகிறாள். அவள் அப்பாவுக்குப் புத்திப் பிசகி விடுகிறது. அடுத்தடுத்து நிகழும் துர்சம்பவங்கள் திட்டமிட்டுப் புனைவாக்கப்பட்டவை போன்று தோன்றுகிறது. ஓர் அசல் யதார்த்த நாவல் இந்த இடத்தில் தடம் மாறிவிடுகிறது.

மலம் மிதக்கும் கால்வாய் ஓரத்தில்கூட அவனையும் அவன் குழந்தையையும் வாழவிடாத சமூகத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியை நாவல் ஏற்படுத்துகிறது. ஏனெனில், இந்தச் சமூகம் ஒரு மனிதனை இவ்வளவு வன்மத்துடன் நடத்துகிறதா என்று ஆச்சரியப்படும் விதத்தில்தான் மகேந்திரனின் வாழ்க்கை அமைகிறது. அவனைப் பிணம் என்று ஊர் ஒதுக்கலாம்; அம்மாவும் அப்பாவும்கூட அவனைப் பார்த்து பயந்து ஓடுகிறார்கள். நாவலின் பிற்பகுதியில் இடம்பெறும் மாசானம் என்ற கதாபாத்திரமாவது சுடுகாடுவரை சென்று பிழைக்கிறான். அவனை ஊருக்குள் சேர்ப்பதில் மூடநம்பிக்கைகள் குறுக்கிடலாம். ஆனால் மகேந்திரனின் பிரச்சனை அவ்வாறானதில்லை. இறந்துவிட்டான் என்று மருத்துவரால் தவறாகக் கணிக்கப்பட்டவன். மனைவி இறந்த செய்தி கேட்டு மூர்ச்சையில் கிடந்தவனைப் பிணம் என்று எப்படிச் சொல்ல முடியும். சுடுகாடு சென்ற பிணம்தான் திரும்பக் கூடாது என்று சொல்லுவார்கள். இதனை மகேந்திரனுக்கு எப்படிப் பொருத்த முடியும். நடைமுறை யதார்த்தங்கள் புனைவில் வலிமையாகக் கட்டமைக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. நாவலில் ஒரு கதாபாத்திரத்திற்கு அடுத்தடுத்து நிகழும் தொடர் துயரங்களும் தொடர் மகிழ்ச்சிகளும் வெகுசன எழுத்தின் சாயை. அந்தச் சாயை மகேந்திரனின்மீதும் படிந்துள்ளது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொண்ட மகேந்திரன் - சுசீலா இணைக்கு இருந்த போராட்ட குணம்கூட, சமூகமே ஒதுக்கி அவமானப்படுத்திய பிற்கால மகேந்திரனுக்கு இல்லாமல் போனது. ஒரு புழுவைப் போன்ற வாழ்க்கையைத்தான் அவன் வாழ்கிறான். அவனிடமிருந்து இந்த நாவலை வாசிக்கும் வாசகன் பெற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? அவனுடைய குழந்தையைப் பொறுப்பாகக் காப்பாற்றக்கூட வக்கற்றவனாக இருக்கிறான். கிடைக்கும் பணத்தையெல்லாம் குடித்தே அழிக்கிறான். குழந்தைக்குப் பால் வாங்குவது குறித்தும் இவனுக்கு குவார்ட்டர் வாங்குவது குறித்தும் தொடர்ந்து சலிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார் புனைவாசிரியர் பசியால் அவனது கட்டை விரலைச் சப்பும் குழந்தைக்கு, பிணத்திற்கு ஊற்றும் பாலைக் குடிக்க கொடுக்கிறான். அந்தக் குழந்தையை நினைத்து, புனைவை வாசிப்பவர்கள் பரிதாபப்படவேண்டும் என்ற நோக்கமும் புனைவாசிரியருக்கு இருந்திருக்க வேண்டும்.

நாவலைத் தற்போது புனைவாக வாசிப்போம். நாவல் ஒரு சுதந்திரமான இலக்கிய வடிவம். வாசகர், தான் வாசிக்கும் நாவல் உருவாக்கியிருக்கும் உலகத்துக்குள் நின்று அதனுடன் ஊடாட வேண்டும். நாவலாசிரியரை வெளியேற்றிவிட்டு அவனது பிரதியை வாசிக்கும்போது அந்நாவலின் எல்லை கட்டுப்பாடற்றதாக இருப்பதை அவதானிக்கலாம். மாறாக, பிரதிக்கும் அதன் ஆசிரியனுக்கும் தொடர் கண்ணிகளை உருவாக்கிக்கொண்டே வாசிக்கும்போது புனைவின் எல்லை வாசகரின் பார்வை தூரத்துக்கு உட்பட்டே இயங்குவதையும் உணரலாம். இயல்புவாதத்துக்கு அப்பாற்பட்டு ‘ஈமம்’ நாவலைப் புனைவாக மட்டுமே அணுகும்போது அது தரும் வெளிச்சத்தில் மனிதத்திரளின் மேன்மைகள் நொறுங்கி வீழ்வதை வாசகர்கள் உணரலாம்.

‘ஈமம்’ நாவலின் கதைநாயகன் மகேந்திரன். அவன் தனிநபர் இல்லை; இச்சமூகத்திரட்சியின் ஓர் உதிரி. அவன் இச்சமூகம் வழங்கிய அறிவுக்கு உட்பட்டே சிந்திக்கிறான்; செயல்படுகிறான். மகேந்திரனது ஒட்டுமொத்த நகர்வுகளும் இச்சமூகத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதனுக்கும் அவன் இயங்கும் சமூகத்திற்குமான உறவுகளும், ஒரு பிணத்திற்கும் அதன் மதிப்பீடுகள் செயல்படும் சமூகத்திற்குமான உறவுகளும் வெவ்வேறு இழைகளால் பின்னப்பட்டவை. இப்புனைவின் முதல் பகுதி, மனிதன் - சமூகம் - உறவு என்ற புள்ளியிலும் இரண்டாம் பகுதி, பிணம் - சமூகம் - உறவு என்ற புள்ளியிலும் இயங்குகிறது.

மகேந்திரன் மனிதனாக இருந்தபொழுது குடும்பம் - காதல் - உறவுகளுக்குள் எழும் தன்முனைப்பு - அகங்காரம் - சூழ்ச்சி - வீழ்ச்சி எனத் தொடர்ந்து, இறுதியில் அவனது தற்கொலையில் முடிகிறது. மகேந்திரன் பிணவறையிலிருந்து உயிர்த்தெழுகிறான். சிந்தனையால் ஒருங்கிணைக்கப்பட்ட இச்சமூகம் அவனைத் தற்போது பிணம் என்றே கருதுகிறது. அவனை அனைவருமே அவ்வாறு கருதுவதற்கு அந்த ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனைதான் காரணமாகவும் இருக்கிறது. வாடகைக்குக் குடியிருந்த வீட்டிலிருந்து கைக்குழந்தையுடன் விரட்டப்படுகிறான். நண்பர்கள் அவனைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில், அடைக்கலம் தேடிவந்த சொந்த வீட்டிலிருந்தே வெளியேற்றப்படுகிறான். அவனுக்கு வேலை கொடுக்கவும் பொதுவிடங்களில் ஒதுங்கிக்கொள்ளவும்கூட இச்சமூகம் மறுக்கிறது. ஏற்கனவே பொதுப்புத்தியில் பதிவாகியிருக்கும் பிணம் குறித்த எதிர் மதிப்பீடுகளும் கூட்டுச் சிந்தனையும்தான் மகேந்திரன் மீதான அச்சத்திற்குக் காரணம். இதனை அருவருப்பின் ஒரு மாற்று வடிவம் என்றுகூடச் சொல்லலாம். ஒரு பிணத்திற்கு இச்சமூகம் என்ன மாதிரியான மதிப்பீட்டை வழங்குகிறது என்பதைத் தன்னிலையில் மனிதனாகவும் முன்னிலையில் பிணமாகவும் உள்ள மகேந்திரனே காண்கிறான். தாயும் மகனைப் புறக்கணிக்கும் மனநிலையைப் பிணம் குறித்த தொல்மதிப்பீடுகள் வழங்கியிருக்கின்றன.

மகேந்திரனை மனிதனாக இச்சமூகம் கருதியபொழுதும் புறக்கணிப்புகளை எதிர்கொண்டான். இரு குடும்பங்களின் எதிர்ப்புகளுக்கிடையே அத்தை மகளான சுசீலாவைத் திருமணம் செய்தபோது, அந்தப் புறக்கணிப்பு அவ்விரு குடும்பங்களின் மோதலாக மட்டுமே சுருங்கி விடுகிறது. சுசீலா வேறொரு சாதியைச் சார்ந்தவளாக இருந்திருந்தால் அந்தப் பிரச்சனை அவ்விரு சாதிகளின் பிரச்சனையாக வெளிப்பட்டிருக்கும். சமூகத்தைப் பொறுத்தவரை மகேந்திரன் தற்போது பிணம். இது ஒட்டுமொத்தச் சமூக அமைப்பின் பிரச்சனையாகப் பொதுமைப் படுத்தப்படுகிறது. இதில் மகேந்திரனின் குடும்பம் எந்தப் பக்கம் நிற்கும் என்ற கேள்விக்கு இடமே இல்லை. சமூகத்திரளின் ஓர் அங்கமாக இருக்கும் அவனது குடும்பம், சமூக ஒழுங்கை மீறமுடியாத சூழலில், சமூகத்தின் பொதுப்புத்தி மனநிலைக்குத் தங்களை ஒப்புக்கொடுத்ததுதான் சரி. இவ்விடத்தில் அம்மா - அன்பு - குடும்பம் ஆகிய புனித பிம்பங்களின்மீது கட்டப்பட்டிருக்கும் தொன்ம மதிப்பீடுகள் வலுவிழந்து போகின்றன. சடங்குகளால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இச்சமூகத்திற்கு மகேந்திரன் என்ற தனிநபர் முக்கியம் அன்று. அதனால் அம்மாகூட மகனைப் புறக்கணிப்பாளா என்ற கேள்வி அடிபட்டுப் போகிறது.

தர்க்கத்தின் எல்லைகளைத் தகர்க்கும் ஆற்றல் புனைவுக்கு எப்போதும் உண்டு. அறிவு சூன்யத்தை அடையும் இடமும் அதுதான். சிந்திக்கும் ஆற்றல் பெற்ற ஒருவர்கூட மகேந்திரனை மனிதனாகக் கருதவில்லை. அவனைப் புழுக்கள் நெளியும் சாக்கடையின் ஓரத்தில் வசிக்கக்கூட அனுமதிக்கவில்லை என்ற இடத்தில் இவ்வாக்கம் புனைவுத் தன்மைக்குள் ஆழ்ந்து விடுகிறது. ‘காக்கை குருவி எங்கள் சாதி, நீள் / கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்ற பாடல்கூட புனைவின் இன்னொரு முகம்தான். அறிவுக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டுதான் இந்நாவலின் இரண்டாம் பகுதியை அணுக வேண்டும்.

மகேந்திரனின் முற்பகுதி வாழ்க்கை, இரண்டாம் பகுதிக்கான ஓர் அடித்தளம்தான். மகேந்திரன் கதாபாத்திரத்தினூடே சமூகத்தின் நிறுவனப்படுத்தப்பட்ட இன்னொரு முகத்தைப் புனைவு காட்டுகிறது. இதனை அவனே அறிவதுதான் சிறப்பு. ஏனெனில், வாசகர் இதில் மகேந்திரனின் வாழ்க்கையைத்தான் வாசிக்கிறார். மேலும், வாசகர் தன்னைச் சமூகத்தின் பிரதிநிதியாகக் கருதும்போது புனைவு யதார்த்தத்தை உள்ளடக்கிச் செல்வதாகவும், அவரே தன்னைச் சமூகத்தின் கூட்டு நினைவிலிருந்து விடுவித்துக்கொண்டு வாசிக்கும்போது யதார்த்தத்தைப் புனைவு கட்டுடைத்துச் செல்வதாகவும் உணர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புராணீகச் சடங்குகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு பாவனைச் சமூகத்திரட்சியின்மீது எறியப்பட்ட கல் புனைவின் இரண்டாம் பகுதி. ஒரு குழந்தையின் துயரைப் பகிரக்கூட இச்சமூகத்தின் உணர்வுகள் கிளர்ந்தெழாது என்பதற்கு மகேந்திரனின் குழந்தை கதாபாத்திரமே சான்று. பிணத்தின் மீதுள்ள அருவருப்பு அந்தக் குழந்தையின் மீதும் படர்கிறது.

மகேந்திரனின் இரண்டாம்கட்ட வாழ்க்கையை வெறும் புனைவு என்று கடந்து செல்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு நல்ல புனைவு தன் இறுதிக் கட்டத்தில் வாசகரின் நம்பிக்கைக்குரிய நிஜ உலகத்தைத் தொட முயல வேண்டும்; வெறும் நிழலாக மட்டுமே தோன்றி மறைந்துவிடக் கூடாது. ‘ஈமம்’ இறுதியில் நிஜத்துடன் ஒன்றி விடுகிறது. மகேந்திரனுக்கு அரசு வேலை கிடைக்கிறது; மறுமணம் செய்துகொள்கிறான். இவ்விரண்டு நிகழ்வுகளும் அவனை மீண்டும் சமூகத்திரளுக்குள் அணுக்கமாக்குகிறது. பிணம் என்ற பிம்பம் எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதற்கான வாய்ப்பைப் புனைவு திறந்து விடுகிறது. இரவில் கண்ட கனவிலிருந்து விழிப்பு நிலையை அடையும் மனநிலையை இந்நாவலை வாசிக்கும் வாசகர் இறுதியில் பெறுகிறார். அந்தக் கனவு உருவாக்கிய அதிர்வுதான் நாவல்.

இறுதியாக, வடிவம் பற்றிய பிரக்ஞையற்று எழுதியிருப்பது புனைவுக்குப் பலவீனத்தின் சாயலை ஏற்படுத்தி விடுகிறது. வாசகருக்குரிய வெளியைப் புனைவாசிரியரே நிரப்பி விடுகிறார். இதனால் நாவல் வெகுசன வாசிப்பிற்கு நகர்ந்து விடுகிறது. ஒரு மனிதன் பிணத்தின் மதிப்பீட்டைப் பெறும்போது அவன் அடையும் உளவியல் பிரச்சனைகள் குறித்து விரிவாக எழுதியிருந்தால், நாவல் வேறொரு உச்சத்தைத் தொட்டிருக்கும். இதுவொரு பரிந்துரைதான். ஏனெனில் நவீன இலக்கியத்தில் ‘வடிவம்’ என்பது நவீன சிந்தனையை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. நாவலாசிரியர் இதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நாவல் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதும் சேர்ந்தாற்போல இரண்டு பக்கங்களைத் திருப்பினாலும் நாவலில் திருப்பங்கள் ஏதும் இல்லாதிருப்பதும் வாசிப்பில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு காத்திரமான புனைவு, வாசகரின் அரசியல், இலக்கிய அனுபவத்திற்கேற்ப தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கும். மாறாக அனைவருக்கும் ஒரே வாசிப்பை நல்கும் பிரதி உள்ளீடுகளற்று தட்டையாகிவிடும் பிரச்சனையும் இருக்கிறது. பிணமான மகேந்திரனை இச்சமூகம் புறக்கணிப்பதற்குப் பின்பும் வலிமையான உளவியல் பிரச்சனைகள் உள்ளன. அவனுக்குக் கொடுத்த கவனத்தை அவனைப் புறக்கணித்த சமூகத்திற்கும் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில், வாசிப்பவரின் எதிர்பார்ப்பும் நாவலெனும் வடிவத்தைப் போன்று கட்டற்றது.

ஈமம் | கவிப்பித்தன்

நூல்வனம், சென்னை.

விலை - ரூ.440/- 

- சுப்பிரமணி இரமேஷ்

Pin It