பாரதி என்ற தாய்ப்பாலைக் குடித்த ஞானச் செறுக்கர் ஜெயகாந்தன். அத்துடன் பொது வுடைமை இயக்கத்தைச் சார்ந்த ஜீவா, ஆர்.கே. கண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், கே.பாலதண்டா யுதம் ஆகிய நால்வரையும் தனது மார்க்சிய குரு மார்களாகக் கொண்டவர் ஜெயகாந்தன். இவர் களால் தட்டிக் கொடுக்கப்பட்டு வளர்ந்தவர். நிகரற்ற அவரது பேராளுமையில் பிறந்ததுதான் அவரின் கம்பீரம், அவர் மீசையை முறுக்குவதோ, அவரது விரிந்த தலைமுடியோ அவரது கம்பீரத்தின் அடையாளமல்ல!

jayakanthan 402

அவரது உற்ற நண்பர் கே.எஸ். கூறுவதைப் போல அவரது அறிவு ஞானமே அவரது அறிவு கம்பீரத்திற்குக் காரணம். நான் முதன் முதலில் அவரைச் சந்தித்தது திருவல்லிக்கேணி ஒய்.ஆர்.கே. சர்மா வீட்டு மொட்டை மாடியில்தான். புகை நடுவே நடுநாயகனாக வீற்றிருந்த ஜெயகாந்தனிடம் ‘முத்துக்களும் கிளிஞ்சல்களும்’என்ற எனது நூலுக்கு முன்னுரை எழுதக் கேட்டுக் கொண் டேன். அவ்வாறே சில நாட்களுக்குள் அவரது முன்னுரை அந்த நூலுக்கு எழுதி அனுப்பியிருந் தார். அதற்குப் பிறகு எண்ணற்ற முறைகளில் அவருடன் உரையாடியுள்ளேன். ஏராளமான நிகழ்ச்சிகளில் அவருடன் பங்கு கொண்டுள்ளேன்.

அருடைய எழுத்தைப் போல, பேச்சைப் போல அவர் தனது நண்பர் குழாமுடன் நடத்திய உரையாடல்கள் அற்புதமானவை. கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீசைப் போல, ஆங்கில இலக்கிய மேதை சாமுவேல் ஜான்சனைப் போல புதிய புதிய சிந்தனைக் கீற்றுக்களை, தத்துவ முத்துக்களை வெளிப்படுத்துவார். “பேசப்பேசத் தான் என்னையே எனக்குப் புரிகிறது”என்பார். தனது படைப்பாளு மையை தனது பேச்சின் மூலமாக உருவாக்கிக் கொண்டார்.

தமிழ் இலக்கியத்தில், பாரதியின் எழுத்துக்கள் மீது, அபாரமான அபிமானம் கொண்டிருந்தார். அவரைக் கவர்ந்த மற்றொரு மாகவிஞன் கம்பன்.

“சக்கரத்தை யெடுப்பதொரு கணம்

தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்

இக்கணத்தில் இடைக்கணமொன் றுண்டோ?

இதனுள்ளே பகை மாய்த்திட வல்லான்காண்!”

“வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே

வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்”

என்ற பாரதியின் ‘கண்ணன் - என் அரசன்’என்ற பாடலில் வரும் வரிகளை உரக்கப் பாடுவார் ஜே.கே.

“எனது எழுத்து ஒரு தனிமனிதனின் எழுத் தல்ல. எனக்கு முன்னால் தொடங்கி, எனக்குப் பின்னாலும் தொடரும் ஒரு பெருங்காவியத்தின் இடைக்கால நாயகன் நான்”என்பார்.

“பின்னிலேன் முன்னிலேன் எந்தைப் பெருமானே

பொன்னிலே தோன்றியது

 ஓர் பொற்கலனே போல்கிறேன்”

என்ற கம்பனின் இரணியன் வதை படலத்தில் வருகின்ற வரிகளைப் போன்றதே ஜெயகாந்தனின் எழுத்தாளுமை.

இத்தகைய விசாலமான, விரிந்த பார்வையில் தான் அவருடைய ‘பாரீசுக்குப் போ’நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. பாரீசிலிருந்து திரும்பி யுள்ள சாரங்கன் மேற்கத்தியப் பண்பாட்டையும் அவரது தந்தை இறுக்கமான இந்தியப் பண் பாட்டையும் பற்றி நிற்க, இருவருக்கிடையேயான உரையாடலை, இரண்டு பண்பாடுகளின் மோத லாகச் சித்தரிக்கிறார். இரண்டையும் நிராகரிக் காமல் இரண்டிலும் உள்ள நல்ல அம்சங்களை உள்வாங்கியவர்களாக நாம் இருக்க வேண்டு மென்பதே அவருடைய பார்வை.

பெண்கள் பற்றி எழுதும் போது ஜெயகாந்தன் ஒரு தாயாக மாறிவிடுவார். பெண்களுக்கு ஒரு வகை புனிதத்தைக் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களை இழிவுபடுத்துவதை அவரது பாத்தி ரங்கள் மூலம் சாடுவார். கம்சலை, அகிலா போன்ற பாத்திரப்படைப்புகள் மூலம் தனது பெண்ணுரிமை சார்ந்த கருத்துக்களைப் பேசுவார்.

“இழிவான உண்மையைவிட, என்னுடைய உன்னதமான பொய் மேலானது”என்று அவரது கதாபாத்திரம் முழங்கும். ‘யுகசக்தி’யில் வரும் கௌரி பாட்டியின் மூலம் பழைய பண்பாடுகளை மதிப்பதோடு, புதிய பண்பாடுகளுக்கு வரவேற்புக் கூறுவார். கோவில், சேரி இரண்டிலும் புனிதம் உண்டு. ‘கற்பு’என்பதை பெண்களின் சுயநிர்ணய உரிமை என்பார் ஜெயகாந்தன், சுந்தர காண் டத்தில் பெண்ணியத்தின் குரலாக ஒலிப்பார்.

தமிழ்நாட்டின் பெருமை பற்றி அவரைப் போல சிறப்பாக எடுத்துக் கூறியவர்கள் இருக்க முடியாது. “ராமாயணத்தை, கம்பனைப் போல் படைத்தவர்கள் உண்டா? சிகாகோவிற்கு விவே கானந்தரை அனுப்பியது நமது தமிழ்நாடுதானே. அன்னியனை எதிர்த்து கப்பலோட்டியது டாடாவா. நமது வ.உ.சி.தானே. பாரிஸ்டர் காந்தியை சாமானிய இந்தியனாக அரையாடை உடுக்கச் செய்தது நமது மதுரைதானே”என்று தமிழ் நாட்டின், தமிழின் பெருமையை சிலாகித்துச் சொல்வார் ஜெயகாந்தன்.

ரஷ்யாவுக்கு சென்றிருந்தபோது அங்கே தன்னுடன் தமிழில் உரையாடக்கூட ஆளில்லை என்ற போது, தங்கியிருந்த அறையின் குளிய லறையில் கண்ணாடி முன் நின்றுகொண்டு தமிழில் பேசி, தனது தமிழ்ப்பசியை ஆற்றிக் கொண்டதாகக் கூறினார் ஜே.கே.

அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட வில்லை என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். அவருக்கு அப்படி அரசு மரியாதை செய்யாம லிருப்பதே அவருக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். அப்படி அரசு மரியாதை செலுத்தப் பட்டிருந்தால், ஜெயகாந்தனின் சாம்பல் அணுக்கள் கூட அதை, நிராகரித்திருக்கும். ஜேகேவின் எழுத்து தான் அவரது ஆன்மா. அது அமரத்துவம் வாய்ந்தது. அது என்றும் தமிழ் நெஞ்சங்களில் வீற்றிருக்கும்.

(கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெற்ற ஜெயகாந்தன் நினைவஞ்சலியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியனின் உரை.)

நன்றி: ஜனசக்தி

Pin It