பாக்தாத் நகரில் கிபி எட்டாவது நூற்றாண்டில் கலீபின் தர்பாரைப் பற்றியது அறிவு இல்லம் என்கிற தலைப்பு கொண்ட இந்த நூல். அதன் இரண்டாவது தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லை. அராபியர்கள் எவ்வாறு மேலை நாகரிகத்தில் மாற்றம் ஏற்படுத்தினார்கள் என்பதும் இந்த நூலில் விளக்கப்படுகிறது. கிபி.6முதல் 11வது நூற்றாண்டு வரையிலான காலம் சில அறிஞர் களால் ‘இருண்டகாலம்’ என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. ஏனெனில் அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் பேரரசோ மாமன்னரோ யாரும் கிடையாது. ஐரோப்பா முழுவதும் சிறிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன.

the house of wisdomஉலகம் பற்றிய நமது பார்வை, வரலாறு, தத்துவ ஞானம் போன்ற பல அறிவுசார் புரிதல்களும் பெரும் பாலும் ஐரோப்பியர்களின் புரிதலை ஒட்டியே இருந்து வந்துள்ளது. சமீப காலங்களில் இவ்விஷயத்தில் அமெரிக்காவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வருகிறோம். ஐரோப்பியர்களின் பார்வை - மற்றும் புரிதல் என்ன வெனில் ஏசு கிறிஸ்துவின் காலத்திற்கு முந்தைய சில நூற்றாண்டுகள் கிரேக்க நாகரிகம் - அதன் விஞ்ஞானம் - மற்றும் தத்துவ ஞானத்தின் பொற்காலமாகத் திகழ்ந்தது. கிறிஸ்துவ சகாப்தம் தொடங்கி - 15,16வது நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி மற்றும் மதங்களில் (குறிப்பாக கிறிஸ்தவ மதத்தில்) ஏற்பட்ட மாற்றங்கள் ((Renaissance and Reformation) காரணமாக புதியதோர் சகாப்தம் உருவாகியது. பலவிதமான முன்னேற்றங்களுக்கும் கிரேக்கர்களின் நூல்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது. முஸ்லீம்களின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டது. இந்த நூலின் ஆசிரியர் தனது முன்னுரையில் எச்சரிக்கையுடன் இஸ்லாமிய கலாச்சாரம் - இஸ்லாமிய விஞ்ஞானம் போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து அராபிய விஞ்ஞானம் என்கிற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஏனெனில் இக்கால கட்டத்தில் - கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கி 14-15வது நூற்றாண்டு வரை - நிகழ்ந்த கலாச்சார - அறிவியல் மாற்றங்களில் அராபியர் - முஸ்லீம்கள் தவிர, பார்சிகள், ஜோரோவாஸ்ட்ரியர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், கிரேக்கர்கள், சிரியன் கிறிஸ்தவர்கள், துருக்கியர்கள், குர்ட் மக்கள் - மற்றும் பலர் பங்காற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் அறிவியல் இறைமைஇயல் மற்றும் தத்துவ ஞானம் போன்ற துறைகளில் பங்காற்றியுள்ளனர்.

ஆனாலும் இப்பணிகள் அனைத்துமே அரபி மொழியில் பெரும்பாலும் அராபிய மன்னர்களின் ஆட்சியில் குறிப்பாக டமாஸ்கஸ் மற்றும் பாக்தாத் நகரங்களில் அப்பாஸித் கலீப்களின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் அராபியமொழி உலகமொழியாகத் திகழ்ந்தது. உலகின் அனைத்து நாடுகளின் பேரறிஞர்களும் அராபிய மொழியில் புலமை பெற்றிருந்தார்கள்.

12வது நூற்றாண்டில் ஐரோப்பாவின் நிலைமை:

நான்காம் நூற்றாண்டில் தொடங்கி ஜெர்மானி யர்கள் தொடர்ந்து மேற்கு ஐரோப்பாவில் ரோம் ஆத்மராஜ்யத்தின் மீது போர் தொடுத்து வந்ததன் விளைவாக கல்விக்கூடங்களும் அறிவை வளர்க்கும் அமைப்புகளும் காணாமல் போய்விட்டன. ஐரோப் பாவின் கிழக்குப் பகுதிகள் அடுத்த மூன்று நூற்றாண்டு களில் (12-15வது) முஸ்லீம்கள் ஆதிக்கத்தில் வந்ததன் காரணமாக அத்திசையிலிருந்தும் ஐரோப்பியர்களுக்கு தொடர்பற்றுப் போய் விட்டது. அக்காலகட்டத்தில் கான் ஸ்டான்டிநோபிள் நகரில் (இன்றைய இஸ்தான்புல் - துருக்கி) வசித்து வந்த கிறிஸ்தவர்களுக்கு கிரேக்க அறிவியல் தத்துவஞானம் பற்றித் தெரிந்திருந்தது - ஆனால் அது ஐரோப்பா சென்றடைய வாய்ப்பு இல்லாமல் போனது. பண்டைய கிரேக்க இலக்கிய மற்றும் தத்துவஞானத்தின் மேன்மை பற்றிய ஞானம் காணாமல் போய்விட்டது. போர்களில் ஏற்பட்ட அழிவு மற்றும் புதிய தலைமுறை அறிஞர்களின் - அறியாமை - குறிப்பாக கிரேக்க மொழிப்பயிற்சி இல்லாமல் போனது. ரோம சாம்ராஜ்யத்தில் பிரபுக் களுக்கு கிரேக்க மொழியில் புலமை இருந்ததன் காரண மாக கிரேக்க அறிஞர்களின் நூல்களைப் பயின்றிருந்தனர். அவர்களுக்கு இலத்தின் மொழிபெயர்ப்பின் அவசியம் ஏற்படவில்லை. பிளாட்டோ அரிஸ்டாட்டிலின் தத்துவ ஞான நூல்களையும் ஆர்க்கிமிடீஸின் அறிவியல் நூல்களையும் கிரேக்க மொழியில் அவர்கள் பயின்று வந்தனர். ரோம சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்த போது ஐரோப்பியர்களுக்கு - கிரேக்க மொழியும் - அதன் கலாச்சாரமும் காணாமலேயே போய்விட்டன.

ஐரோப்பாவில் அராபிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கம்

இந்த நூலின் ஆசிரியர் கூறுவது என்னவெனில், “அராபிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஐரோப் பாவில் 12 மற்றும் 13வது நூற்றாண்டுகளில் வேரூன்றத் தொடங்கியது. இவ்விஷயத்தில் முன்னோடியாகத் திகழ்ந்த அடிலாண்ட் அவர்களும் அவரைப் பின் பற்றியவர்களும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருந்த ஐரோப்பிய நாடுகளை அதே துறைகளில் மாபெரும் சக்தி வாய்ந்ததாக ((Super Power) மாற்றினர்”. நாம் கண்டிராத - சில அராபியரால் நம்பப் படும் கற்ப - அமுதம் (Elixir)) - அராபியர்களால் வர்ணிக்கப்படும் அல் இக்ஸிர் தடவிய மாத்திரத்தில் - தாமிரம் துத்தநாகம் போன்ற உலோகங்கள் தங்கமாக மாறிவிடும் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தின் பிடியிலிருந்த ஐரோப்பாவில் அராபிய அறிவில் - தொழில்நுட்பத்தின் தாக்கம் அப்படிப்பட்ட மாற்றத்தைத் தான் கொண்டுவந்தது. பல நூற்றாண்டுகளில் முதன் முறையாக ஐரோப்பியர்களின் கண்கள் திறந்தன - உலகை அவர்கள் பார்க்கத் தொடங்கினர். நேரத்தைக் கணக்கிடும் திறனைக் கூடக் காணாமல் போக்கி விட்டிருந்த ஐரோப்பியர்கள் அத்திறமையை மறுபடி பெற்றனர். நேரம் மற்றும் நாட்காட்டி (காலண்டர்) இல்லாமல் அறிவியல் அடிப்படையில் சமுதாயத்தை சீரமைப்பது நடவாத காரியம். அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் தொழில்கள் நிறுவுவதற்கும் நேரம் அளவு மற்றும் நாள்காட்டி காலண்டர் அத்தியா வசியமானது.

அராபிய அறிவியலும் தொழில்நுட்பமும் கிறிஸ்தவர் களின் உலகத்தை அறியாமை எனும் இருளிலிருந்து விடுவித்து ‘மேலை நாடுகள்’ என்கிற வார்த்தைக்கு அடிகோலியது.

அறிவு இல்லம்:

இந்த நூலின் மூன்றாவது அத்தியாயம் ‘அறிவு இல்லம்’ என்கிற தலைப்பைக் கொண்டது. இதுவே இந்தத நூலின் மையக் கருத்தையும் உள்ளடக்கியதும் ஆகும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள படி 8வது நூற்றாண்டில் பாக்தாத் நகரை ஆண்ட அப்பாஸிட் கலீஃப் ஆட்சியைப் பற்றியது. முஸ்லீம் களின் ஆதிக்கமும் சாம்ராஜ்யமும் பெரியதோர் நிலப்பரப்பில் வரலாறு மற்றும் நாகரிகங்களை ஒன்றிணைத்தன. பல நூற்றாண்டுகளாக அரசியல் காரணங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அறிவுசார் மரபுகளுக்கு மறுவாழ்வு கொடுத்து அவற்றை ஒருங் கிணைத்தன. கிரேக்கர்களது அறிவு, தத்துவ ஞானம் மற்றும் அறிவியல் மரபுகள், பிறகு அலெக்ஸாணட்ரி யாவில் தோன்றிய அறிவு-மலர்ச்சி, சுமேரியா பாரசீகம் மற்றும் இந்தியாவின் அறிவுத்திறன் - எல்லாமே ஒருங்கிணைக்கப்பட்டன. முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், ஜோரோவாஸ்திரியர்கள், நட்சத்திரங்களை வழிபடும் சாபியர்கள் மற்றும் பேகன்கள் அனைவரும் ஒன்றுகூடி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் இருந்த ஸ்பெயின் நாட்டிலும் அமய்யத் இளவரசனை அப்த் அல் ரஹ்மானின் ஆட்சியில் இதுபோன்ற அறிவுசார் மரபுகள் வேரூன்றின. பிறிதோர் காலத்தில் இலத்தீன் மொழி வல்லுனர்களுக்கு விலைமதிப்பற்ற பொக்கி ஷங்கள் அராபியர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றன.

சைனாவிலிருந்து காகிதம் அறிமுகம் செய்யப்பட்டது

சைனாவின் அற்புதமான தொழில்நுட்பமாக காகிதம் தயாரித்தல் அப்பாஸித் தர்பாரை வந்தடைந்து அறிவுசார் மரபுகளுக்கும் முன்னேற்றத்திற்கும் மேலும் ஊக்கம் அளித்தது. கிபி 751ம் ஆண்டில் சைனாவில் டாங் பரம்பரையின் ஆதிக்கத்தில் இருந்த துருக்கிய - மேற்கு சைனாவுடன் நிகழ்ந்த போரில் வெற்றி பெற்ற முஸ்லீம்கள் அங்கிருந்து காகிதம் தயாரிப்பில் கைதேர்ந்த ஒரு நபரை அடிமையாக சமார்கந்திற்குக் கொண்டு வந்தனர். அங்குதான் முதன்முதலாகப் பெருமளவில் காகிதம் தயாரிக்கப்பட்டது. பலவிதமான தகவல் களையும், அறிவியல் ஞானத்தையும், அரசாங்கத்தின் வரிவசூல் ஆவணங்களையும், கவிதைகளையும் பஞ்சாங்கங்களையும் குறைந்த செலவில் சிறந்த முறையில் தயாரிப்பதற்கு காகிதம் ஒரு அற்புதமான சாதனமாக அமைந்தது. காகிதத் தயாரிப்பில் இப்போது சமார்க்கந்த் முன்னோடியாகவும் முதன்மையாகவும் திகழ்ந்தது, பிறகு சிரியா ஏமன், வடக்கு ஆப்பிரிக்கா, ஸ்பெயின் நாட்டின் ஜட்டிவாநகர் போன்ற இடங்களில் பளபளக்கும் காகிதங்கள் கூடத் தயாராகின. பாக்தாத் நகரின் வரலாற்றில் கிபி795வது ஆண்டில் பெரியதோர் காகிதத் தொழிற்சாலையைப் பற்றிய குறிப்பு உள்ளது. கடைத்தெருவில் கூட எழுதும் பொருள் விற்பனைக் கடைகளில் காகிதம் விற்கப்பட்டது.

காகிதத் தயாரிப்பு காரணமாக முதன்முதலாக நூல்களை (புத்தகங்களை) உருவாக்கும் மரபும் பாக்தாத் நகரில் தோன்றியது. இலக்கியமும் இலக்கிய மேதை களும் முஸ்லீம் சமுதாயத்தில் எப்போதுமே போற்றப் பட்டு வந்தனர். இப்போது புத்தகக் கடைகள் அங்கு தோன்றத் துவங்கின. புத்தகங்களைப் பிரதி எடுத்து எழுதுதல், பைண்டிங் செய்வது, புத்தகத் தயாரிப்பு எல்லாமே வளர்ந்தன. ஆராய்ச்சி மற்றும் மொழி பெயர்ப்பும் வளர்ந்தன. அழகாக எழுதுபவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். சிறப்பாக நகல் எடுப்பவர்கள் ஆசிரியர்களாகவும் எழுத்தாளர்களாகவும் உருவெடுத்தனர்.

நூலாசிரியர்களுக்கும் நூல்களுக்கும் கிடைத்த ஆதரவு காரணமாக நூலகங்கள் உருவாகின. இவற்றில் பொதுமக்கள் அமர்ந்து படிப்பதற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நூல்கள் பிரதி எடுப்பதற்கும் வசதி - காகிதம் - எழுதுகோல், மை எல்லாமே கிடைத்தன. ரசாயனம், மருத்துவம் மற்றும் இதர அறிவியல் துறைகள் சார்ந்த நூல்கள் கிரேக்கர் - மற்றும் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்டவைகளை உள்ளடக்கிய பெரியதோர் அராபிய நூலகம் டமாஸ்கஸ் நகரில் உமய்யாத் காலத்தில் நிறுவப்பட்டது.

இதே காலகட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் நிறைந்த ஐரோப்பிய நாடுகளில் பதப்படுத்தப்பட்ட பிராணிகளின் (ஆடு, மாடு போன்ற) தோல்கள்தான் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

பாக்தாத் நகரம்

பல்வேறு தொழில்கள், உள்நாட்டு வெளிநாட்டு வியாபாரம், அறிவுசார் மற்றும் அறிவியல் சார் சாதனைகளில் உலகின் தலைசிறந்த நகரமாக பாக்தாத் நகரத்தை கிரேக்கர்கள் உருவாக்கி இருந்தனர். கைதேர்ந்த தொழில் வல்லுநர்கள் வியாபாரிகள் மற்றும் சாதாரண மனிதர்கள் எல்லோருமே நகரின் கனவான்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாக்தாத் நகருக்கு வந்தவண்ணம் இருந்தனர். டைக்ரிஸ் நதிக்கரை ஓரமாக வியாபித்திருந்த பாக்தாத் நகரில் கற்பனைக்கெட்டாத அளவில் செல்வம் கொழித்தது - கூடவே அதன் பொருளாதாரம் மற்றும் ராணுவபலமும் ஓங்கியிருந்தன. சிரியா நாட்டின் கண்ணாடி சாமான்கள், இந்தியாவின் சாயங்களும் நறுமணப் பொருட்களும் சைனா மற்றும் பாரசீகத்திலிருந்து விலையுயர்ந்த பட்டு மற்றும் சில பொருள்களும், ஆப்பிரிக்காவிலிருந்து தங்கமும், மத்திய ஆசியா பகுதிகளிலிருந்து அடிமை களும் பாக்தாத் நகரச் சந்தைகளுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் செல்வத்தை வாரி வழங்கின.

பாக்தாதின் கலீஃபாக விளங்கிய அல்மன்சூரது காலத்திற்கு நூறாண்டுகளுக்குப் பின்பு அந்நகரில் நிலவிய அமைதி மற்றும் செழிப்பு பற்றி அல்-யாக்கூபி என்ற பெயர் கொண்ட வரலாற்று ஆசிரியர் கூறுவார். “பாக்தாத் நகரம் இராக் நாட்டின் இதயமாகத் திகழ்கிறது. அதற்கு இணையான மற்றொரு நகரம் கீழை நாடுகளிலோ மேலை நாடுகளிலோ கிடையாது. அதன் விஸ்தீரணம், அதன் முக்கியத்துவம், செழிப்பு ஏராள மான நீர் வசதி மற்றும் அதன் சீதோஷ்ண நிலை ஈடு இணையற்றது”.

அப்பாஸிட் தர்பாருக்கு ஹிந்து அறிஞர்களின் விஜயம்

பாக்தாத் நகரை நிறுவிய அல்மன்சூர் மிகவும் நம்பிக்கையுடன் வானியல் மற்றும் கணிதத்தில் சிறந்த வல்லுநர்களைத் தேடிக் கொண்டு வரும்படி ஒரு தூதரை இந்தியாவின் புனித நகராகிய அரிம் நகருக்கு அனுப்பி வைத்தார்.

கிபி 771ம் ஆண்டில் இந்திய அறிவியல் வல்லுநர்களின் விஜயம் அராபிய சரித்திரத்தில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. ஏழாவது நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் அறிஞராகத் திகழ்ந்த பிரம்மகுப்தரின் சித்தாந்தங்களை இந்தியப் பேரறிஞர்கள் பாக்தாத் நகருக்குக் கொண்டு வந்தனர். 10வது நூற்றாண்டில் உலகின் பல நாடுகளுக்குப் பயணித்திருந்த புவியியல் அறிஞரான அல்மசூதி கூறுவார், இந்திய அறிஞர்கள் கொண்டுவந்த ஆவணங்கள் வானியல், கணிதம் மற்றும் ஏனைய அறிவியல் துறைகளில் ஹிந்துக்களின் ஒட்டுமொத்த ஞானமும் அடங்கி இருந்தன”.

இந்திய வானியல் அறிவு வெற்றிடத்தில் வேரூன்றவில்லை. அக்காலகட்டத்தில் போதுமான அறிவியல் அறிவும் பரம்பரை ஞானமும் இருந்த சூழலில்தான் இந்திய வானியல் அங்கு வேரூன்றியது. கணிதத்தில் இந்திய முன்னேற்றத்தின் அடையாளமாகத் திகழ்ந்த பதின்முறை பின்னம் (டெசிமல் சிஸ்டம்) - ஒன்பது எண்களும் ஒரு சைபரும் கூடிய கணிதமுறை - உலகனைத்திலும் இன்றளவிலும் பின்பற்றப்படும் முறை - சித்தாத்தங்களுடன் பாக்தாத்திற்கு வந்தது - அல்லது அதனைத் தொடர்ந்து வந்தது. இந்திய அறிவியல் ஞானம் அரேபியாவுக்கு வந்தடைந்த அடுத்த சில பத்தாண்டுகளில், பதின்முறை பின்னமும் அங்கு வேரூன்றியது.

அரசு நூல் நிலையம் நிறுவப்பட்டது

பாக்தாத் நகரில் குவிந்த பாரசிக, சமஸ்கிருத மற்றும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்த அரிய நூல்களை மொழிபெயர்ப்பதற்காகவும், நகல் எடுப் பதற்கும் நூல்களைப் பாதுகாத்து வைப்பதற்குமான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கலீஃப் அல்மன்சூர் அரசு நூலகம் ஒன்றை நிறுவியது. இது முன்னமே சில பாரசீகப் பேரரசர்கள் நிறுவிய நூலகங்கள் போன்றே அமைந்தது. நூலகப்பணியில் ஈடுபட்டிருந்த சிறியதோர் படை அளவிலான பேரறிஞர்களுக்குப் பணி செய் வதற்குப் போதுமான இடவசதி, நிர்வாக உதவி, பொருள் உதவி எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவே பேயட்-அல்-ஹிக்மா அல்லது அறிவு இல்லத்தின் துவக்கமாகும். இதில் ஆரம்பகால அப்பாஸிட் கலீபு களின் அறிவுப்பசி மற்றும் பேரார்வத்தையும் அதுவே அரசாங்கத்தின் கொள்கையாக மாறியதின் காரணமாகும். அடுத்த சில ஆண்டுகளில் அறிவு இல்லத்தில் ஓர் மொழிபெயர்ப்பு அலுவலகம், பெரும் நூலகம் மற்றும் ஏராளமான நூல்களின் காப்பகம் - ஆகியன செயல்படத் தொடங்கின. உலகின் பல பகுதிகளிலிருந்தும் பெரிய படிப்பாளிகளும் பேரறிஞர்களும் அங்கு கூடி வந்தனர். காலப்போக்கில் அராபியர்களுக்குக் கிடைத்துள்ள அறிவுப் பொக்கிஷத்தைக் கட்டிக்காப்பதுதான் அறிவு இல்லத்தின் முக்கியப் பணியாக இருந்தது. அராபியர் களும் அந்த இல்லத்தை புத்தகங்களின் காப்பகம் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக அறிவின் காப்பகம் என்றே குறிப்பிடத் தொடங்கினர். கலீஃப் அமைத்திருந்த வானிலை ஆய்வுக்கூடத்தில் அறிவியல் இல்லத்திலிருந்த வல்லுநர்கள்தான் பணியாற்றி மேற்பார்வையும் செய்தனர். மேலும் பல ஆராய்ச்சிகளையும் மேற் கொண்டனர். அப்பாஸ் காலத்து இலக்கியப் படைப்பிலும் அறிவு இல்லம் முக்கியப் பங்காற்றியது.

அடுத்த 150 ஆண்டுகளில் அராபியர்கள் அறிவியல் மற்றும் தத்துவஞானம் சார்ந்த அனைத்து கிரேக்க நூல்களையும் அராபிய மொழியில் மொழி பெயர்த்துவிட்டனர். அறிவியல் துறையில் உலக மொழியாக கிரேக்கத்திற்கு பதிலாக அராபிய மொழி விளங்கியது. ஒன்பதாவது நூற்றாண்டின் துவக்கத்தில் மேல்படிப்பு முக்கியத்துவம் பெற்று எல்லா முஸ்லீம் நாடுகளிலுமே பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகள் செயலாற்றத் தொடங்கின.

அறிவியல் மற்றும் தத்துவஞானத்திற்கான இந்த மரபு வளர்ச்சியுற்ற காலத்தில் மேன்மேலும் புதிய - மற்றும் தரமான மொழிபெயர்ப்புக்கான தேவை ஏற்பட்டது. மேலை நாட்டு அறிஞர்கள் குறிப்பிடுவது போல கிரேக்க மொழிபெயர்ப்பு காரணமாக அராபிய அறிவியல் வளர்ந்து அவர்கள் மீண்டும் கிரேக்க நூல்களை நாடிச் செல்லவில்லை. மாறாக கிரேக்க அறிவியல் ஞானம் மறுபரிசீலனை செய்யப்பட்டு, குறைகள் சரிசெய்யப்பட்டு மேம்பாடுறும் விதத்திலும் மாற்றியமைக்கும் விதத்திலும் அராபிய அறிஞர்கள் பணியாற்றினர். இந்தப் பாதையில் அறிவியல் துறை களில் புதிய பயன்பாட்டுச் சொற்கள் (Terminology)) கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விஷயத்தில் அராபிய மொழி ஏற்றதோர் மொழியாகவும் விளங்கியது. அல்கஹால் அலெம்பிக், அல்க்கெமி போன்ற அராபியச் சொற்கள், வார்த்தைத் தொகுப்பின் (Terminology)) ஆரம்பத்திலிருந்தே துவங்கி - இன்றும் மேலை நாட்டு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜாதகங்கள் - ஜோதிடமும் வானியலும்:

மத்திய காலம் முழுவதுமே (9 முதல் 15-16 நூற்றாண்டு வரையிலான காலம்) அரசர்கள், இளவரசர்கள், கலீபுகள், சுல்தான்கள், - கிறிஸ்தவர் - மற்றும் முஸ்லீம்கள் - எல்லோருமே தங்களது ஜாதகபலனகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி ஜோதிடர்களை அணுகி வந்தனர். ஜோதிடர் களும் வானியல் பற்றிய நூல்களையும் கோள்களின் போக்கினையும் ஆராய்ந்து அவர்களை நாடி வந்தவர் களுக்குப் பலன்களைக் கூறிவந்தனர். சில ஜோதிடர்கள் மன்னர்களுக்கும் சுல்தான்களுக்கும் மருத்துவர்களாகவும் ஆலோசகர்களாகவும் அறிவியல் பற்றி விளக்கம் தருபவர்களாகவும் விளங்கினர்.

ஜோதிட இயலும் சிறந்த அறிவியலும் ஒருங் கிணைந்த சூழல் அராபிய அறிவுத்திறன் மேம் பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் பேருதவியாக இருந்தது. பாக்தாத் நகரின் தலைசிறந்த ஜோதிடர்கள் முக்கியமான அறிவியல் நூல்களின் மொழிபெயர்ப் பாளர்களாகவும், அறிவியல் பத்திரிகைகளின் ஆசிரியர் களாகவும் விளங்கினர்.

இஸ்லாமும் தனிநபர் சுகாதாரமும்

இஸ்லாம் எப்போதுமே தனிநபர் சுத்தம் - சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. தினசரி 5 முறைத் தொழுகைக்கு முன்பாக கைகால் களையும் முகத்தையும் கழுவுவதற்கு முஸ்லீம்கள் தவறுவதில்லை. மத்திய கால மசூதிகளிலும் ஏனைய பொதுமக்கள் செல்லும் கட்டிடங்களிலும் முன்னேற்ற மான தொழில்நுட்பத்துடன் கூடிய தண்ணீர் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இத்துறையில் அராபியப் பொறியாளர்கள் சிறந்து விளங்கினர். இந்த முன்னேறிய தொழில்நுட்பங்களுக்கு உதாரணமாக இரட்டை சிலிண்டருடன் அமைந்த பம்புகள். இவற்றில் தண்ணீரை இழுக்கும் கிராங்க் ஷாப்ட் - பிறகு வெளியேற்றும் அமைப்பு இருந்தது. இது போன்ற பம்புகள் ஐரோப்பிய நாடுகளில் 14வது நூற்றாண்டில் தான் அறிமுகமாகின. 1206ம் ஆண்டில் அராபிய நாடுகளில் தலைசிறந்த பொறியாளராக விளங்கிய இபன்-அல்-ரஜ்ஜாஜ் தண்ணீரால் இயங்கும் கடிகாரங்கள், மெழுகுவத்தி ஸ்டாண்டுடன் இணைந்த கடிகாரங்கள், மதுபானங்களை ஊற்றுவதற்கும் விசேஷமான குழாய்கள் அந்த போத்தல்கள் பற்றி எல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

சாலைகள் பற்றிய நூலும் உலக வரைபடமும்

‘சாலைகளும் சாம்ராஜ்யங்களும்’ என்கிற தலைப்பில் ஒரு நூல் பாரசீக நாட்டிலிருந்து வெளி யாகியது. இந்த நூலில் பாரசீகத்திலிருந்து ஓமன், ஏமன், பாஹ்ரெயின், அப்பாலிருந்த கம்போடியா மலாய தீபகற்பம் - அதற்கு அப்பால் சீனநாட்டின் துறை முகமான காண்டனுக்குச் செல்வதற்கான கடல் பாதைகள் பற்றிய விபரம் தரப்பட்டிருந்தது.

1497ம் ஆண்டில் போர்த்துகீஸ் கப்பல் தலைவரான வாஸ்கோடகாமாவுக்கு இந்த நூலிலிருந்த வரைபடங் களும் ஒரு முஸ்லீம் மாலுமியும் நன்னம்பிக்கை முனையிலிருந்து இந்தியா வந்தடைவதற்கு உதவி செய்திருக்கக்கூடும். (பிறகு வந்த தகவல்கள் - இக் கூற்றினை உறுதிப்படுத்தியுள்ளன).

ஐரோப்பியாவில் பல பெரிய கட்டடங்கள் கட்டுவதற்கான கலையில் அராபியாவின் தாக்கம்

ஐரோப்பிய நாடுகளில் கட்டப்பட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சற்றுக்கூராக அமைக்கப் பட்டுள்ள வளைவுகள் அராபியர்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்பட்டவை. மிகவும் உயரமான கோபுரங்களும், பெரும் ஜன்னல்களும் உயரமான சுவர்களும் அராபியர் களின் தாக்கம் காரணமாகவே தோன்றின. வளைவுகள் ((Arches)) சற்றுக் கூர்மையாக அமைந்ததால், அவற்றைப் பெரிதாக அமைத்து இரண்டு தூண்களுக்கிடையே இருந்த இடைவெளியை அதிகரிக்க முடிந்தது - கூடவே கட்டடத்தின் வலு எவ்விதத்திலும் குறையாமல் அமைக்க முடிந்தது.

கோப்பர்நிக்கஸின் வருகை:

இந்த நூலாசிரியரின் கூற்றின்படி ஐரோப்பிய அறிஞரான அடிலார்டின் அராபிய அறிவியல் நூல்களின் மொழிபெயர்ப்பு ஐரோப்பிய நாடுகளில் பெரியதோர் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நூற்றாண்டுகளாக அராபியர்கள் அறிவியல் கணிதம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருந்த பட்டியல்கள் விண்மீன் - விண் கோள்களின் வரைபடங்கள் வாயிலாக ஐரோப்பிய அறிஞர்கள் கற்பனை செய்திராத தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தன. இந்த நூல்கள் தரும் தகவல்களைப் புரிந்து கொள்வதற்கு ஐரோப்பிய அறிஞர்களுக்குப் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. இந்தப் புரிதலின் இறுதிக்கட்டம்தான் 16வது நூற்றாண்டில் கோப்பர்நிக்கஸின் புரட்சிகரமான வானியல் கோட்பாடு - அதாவது அன்றைய காலம் வரை மக்கள் நம்பிவந்த வானியல் அறிவு - பூமி உலகின் மையம் - சூரியனும் ஏனைய கோள்களும் பூமியைச் சுற்றி வருவது - தவறு என்றும், சூரியன்தான் மையம் என்றும் பூமி உள்பட பல்வேறு கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன - என்பதை அராபிய விஞ்ஞானிகளின் சாதனைகளுக்கு சமமானதாகக் கருதலாம். கோப்பர் நிக்கஸ் கூட அராபிய அறிஞர்களின் நூல்களின் வழிகாட்டுதல் இன்றி தனது சாதனையை நிகழ்த்தி இருக்க முடியாது.

மேலை நாடுகளின் பேரறிவு படைத்த தத்துவஞானிகள்:

இது இந்த நூலின் 7வது அத்தியாயத்தின் தலைப்பு. முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் இருந்த ஸ்பெயின் அல்லது வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்த மேலை நாட்டவருக்கு அரியதோர் பொக்கிஷமே - சமுதாய, கலாச்சார மற்றும் அறிவுசார் துறைகளின் உச்சகட்டமாக இருந்த பொக்கிஷம் காத்திருந்தது, இந்த சாதனைக்குக் காரணமாக விளங்கியவர் ஸ்பெயின் பகுதியின் முதல் பேரரசரான அப்பத்-அல்-ரஹ்மான். இவர் 10வது உமய்யத் காலிஃபின் பேரர் - அங்கு அகதியாகக் குடியேறியவர்.

அடுத்த நான்கு நூற்றாண்டுகளில் - 12 முதல் 15வது நூற்றாண்டு வரையிலான காலத்தில் - பல புதிய கண்டுபிடிப்புகள் இந்தியா, பாரசீகம் மற்றும் இராக் நாடுகளிலிருந்து - மேற்கு நோக்கி - எகிப்து நாட்டின் வழியாக மகரிப் என்றழைக்கப்பட்ட பகுதிக்கு - இன்றைய அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் டுனீஷியா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் கிறிஸ்தவ ஐரோப்பாவின் எல்லையில் அமைந்திருந்தத அல் ஆண்ட்லாஸ் பகுதிக்கும் பயணம் செய்தன. உதாரணத்திற்கு, ஏமன் நாட்டு அராபியர்கள் வடக்கு ஆப்பிரிக்க மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நீர்ப்பாசன தொழில்நுட்பங்களையும், நீர்நிர்வாகம், புதிய பயிர்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் முகமான நிலப்பயன்பாடு - முதலியவற்றை அறிமுகம் செய்து வைத்தனர்.

வெள்ளக்கதவு ((Floodgate)) (அஜதொ) பாசன வாய்க்கால் (அஸீக்வியா) தண்ணீர் சக்கரம் ((Waterwhee (நோரியா) தண்ணீர் எந்திரம் ((Water Mil (அக்ரியா) போன்ற பல்வேறு ஐரோப்பிய மொழிச் சொற்கள் அராபியச் சொற்களிலிருந்து தோன்றியவைதான்.

கான்ஸ்டாண்டிநோபிள் நகரம்

அந்தக் காலத்திய குறிப்புகளிலிருந்து தெரிய வருவது என்னவெனில் கலீபுகள் அங்கு பெரியதோர் நூலகத்தை அமைத்திருந்தனர். அதன் நூல்களின் பட்டியல் 44 பெரிய சிட்டைகளில் அமைந்திருந்தது. ஏறக்குறைய ஐந்து லட்சம் புத்தகங்கள் அந்த நூலகத்தில் இருந்தன. ஒரு முறை அதன் கவிதை நூல்களை மட்டும் புதியதோர் பெரிய கட்டடத்திற்கு மாற்றம் செய்வதற்கு ஐந்து நாட்கள் தேவைப்பட்டன. தெருவிளக்குகள், சமதரையுடன் அமைந்திருந்த சாலைகள் பல்வேறு வசதிகள் ஏராளமாக இருந்தன. லண்டன் நகரில் தெரு விளக்குகள் அறிமுகப்படுத்துவதற்கு 700 ஆண்டுகள் முன்னதாகவே கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் தெரு விளக்குகள் இருந்தன. மசூதிகளில் இருந்த அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கண்புரையை (Catract) மீன் எலும்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கூர்மையான ஆயுதங்கள் மூலம் அகற்றி மக்களுக்குப் பார்வை அளித்து வந்தனர்.

ஐரோப்பிய நிலவரம் - நேர்எதிரான சூழல்:

அறிவின் மீது ஆர்வமும் கலாச்சார முன்னேற்றங் களும் அராபிய உலகில் நிகழ்ந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பியர்கள் இந்தப் பசுமைப் புரட்சியில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. முஸ்லீம் களுக்கு எதிராக பதினொன்று - பனிரண்டாம் நூற்றாண்டுகளில் வெற்றி கண்ட ஐரோப்பியர்கள் - ஸ்பெயின் சிசிலி போன்ற பகுதிகளில் கூட அராபியர்கள் நிகழ்த்தி இருந்த புதிய தொழில்நுட்பங்கள் குறிப்பாக விவசாயம் - நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் - ஏற்படுத்தி இருந்த முன்னேற்றங்கள் ஐரோப்பியர்களின் ஆட்சியில் காணாமல் போய்விட்டன. முஸ்லீம் பகுதி களுக்கு விவசாயம் செய்ய வந்த கிறிஸ்தவ விவசாயி களால் அராபியர்களின் தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஐரோப்பியர்களின் நில நிர்வாகம் பண்ணையார்களின் ஆதிக்கத்தில் இருந்தது. பண்ணையார்கள் தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டவில்லை. பெரும்பாலான முஸ்லீம்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறிய போது நீர்ப்பாசன முறைகளும் உணவு தானிய உற்பத்திக்கான தீவிர சாகுபடி முறைகளும் காணாமல் போய்விட்டன.

முடிவாக:

துரதிர்ஷ்டவசமாக 21வது நூற்றாண்டில் பெரும் பாலான மக்களுக்கு குறிப்பாக மேலை நாட்டு மக்களுக்கு ‘முஸ்லீம்’ என்கிற வார்த்தையைக் கேட்டாலே அறி வியலுக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் எதிரியாகத் தோற்றமளிக்கும் அல்கொய்தாவும் முல்லாக்களும்

தான் நினைவுக்கு வருகின்றனர். மத்திய காலத்தில் ஐரோப்பாவில் நிலவிய அறியாமையையும் பிற்போக்குப் பாதையையும் நோக்கி முஸ்லீம்கள் செல்வது போல் தோன்றுகிறது. இன்றையச் சூழலில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு அறிவுசார்த்துறைகளில் - இவற்றை அராபியர்களிடம் கற்றுக்கொண்ட ஐரோப்பியர்கள் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளனர். அதே சமயம் அராபியர்கள் நேர் எதிரான இருண்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பது போல் தோன்றுகிறது.

மத்திய காலங்களில் அராபிய நாடுகளில் நிலவிய அறிவு - அறிவியல் சாதனைகளையும் மேற்கு ஐரோப்பி யாவின் மீது அதன் தாக்கம் பற்றியும் இந்த நூல் பல பயனுள்ள அரிய தகவல்களைத் தருகிறது. வாசகர்கள் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில்: ஜோனாதன் லயான்ஸ்

தமிழில்: எம்.ஆர்.ராஜகோபாலன்

Pin It